maruthudurai bookஅகதியாகும் கடவுள்

ச.மருதுதுரை

வெளியீடு:

அன்னம்

மனை எண் 1, நிர்மலா நகர்,

தஞ்சாவூர் - 613007.

தொலைபேசி எண்: 04362-239289

ரூ. 75.00

கவிதை வாசிப்போரின் எண்ணிக்கையை விடவும் கவிதை எழுதுவோரின் எண்ணிக்கை அதிகரித்துவிடவே கவிதைகள் மீதான ஈர்ப்பும் ரசனையும் வெகுவாகப் புறந்தள்ளப்பட்ட சமீப காலங்களில் அங்கொன்றும் இங்கொன்றுமாக அபூர்வமான சில கவிதை நூல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. அவ்விதத்தில் சமீபத்தில் ச.மருதுதுரை எழுதி அன்னம் வெளியீடாக வெளி வந்துள்ள ‘அகதியாகும் கடவுள்’ கவிதைத் தொகுப்பைச் சொல்லலாம்.

கவிஞர் ஏகமும் நிறைந்த வாழ்வுத்தளத்தி லிருந்து ஏதுமற்ற ஞானவெளியைக் கண்டடையும் இடைவெளியில் நின்று தவிக்கும் அல்லாட்டத்தைக் கண்ணுற முடிகிறது. யதார்த்தமானதொரு இருப்பி லிருந்து ஒரு பார்வையாளனாக புறவெளிக் காட்சி களைக் காண நேர்கிறபோது சகிக்கவும்முடியாமல் விலகவும் முடியாமல் அதேநேரத்தில் எதையேனும் நிகழ்த்தியாக வேண்டும் என்கிற உந்துதலில் கவிதைகளில் ஆசுவாசங் கொள்கிறார் கவிஞர்.

‘எத்தனை பயணங்கள்

எத்தனை மனிதர்கள்

என்னென்ன துயரங்கள்

எத்தனை மரணங்கள்

இல்லையே ஒரு சித்தார்த்தன்

எனக்குள்’

என்று அங்கலாய்க்கிறார்.

தொகுப்பின் முதற் கவிதையிலேயே கவிஞர் தன் இருப்பு குறித்த சித்திரத்தை எவ்வித மழுப்பலு மின்றி,

‘என்னுள் இருக்கும் பெரியாரும்

கவிஞருள் உறையும் கடவுளும்’

என்று மிகத் தெளிவாகச் சொல்லிவிடுகிறார்.

கடவுள் குறித்தக் கவிதைகள் சில எண்ணிக் கையில் இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ளன. ஒரு கவிதையில் கடவுள் மருத்துவராக வருகிறார். ‘கடவுளே வணக்கம்’ என்று சொல்கிற பகுத்தறி வாளரிடம் ‘என்னை நீங்கள் நம்புவதில்லை என்பதை எத்தனை நாகரீகமாய் சொல்கிறீர்கள்’ என்று இனிப்பான பதிலை உரைக்கிறார் கடவுள்.

இன்னொரு கவிதையில் கடவுள் குறித்த வியாக்கியானங்கள் விவாதங்கள் பதில்களுக் கிடையில் அவரவரது கோப்பைகளில் அவரவர் தேவைகளுக்கும் அளவுக்கும் தக்கதான கோப்பை களில் நிரம்பிக்கொள்கிறார் கடவுள். வெளியெங்கும் வியாபித்திருப்பதாகக் கருத்தாக்கம் கொண்ட கடவுளைக் கவிஞர் ஒரு சிறுகோப்பையில் நிரப்பி நம்முன் ஏந்திக்காட்டுகிறார்.

மற்றொரு கவிதையில் கடவுளின் உற்ற நண்பராய் பெரியார் காட்சி தருகிறார். பெரியாரைச் சந்தித்த கடவுள் ‘நான் இல்லை என்பதே சரி’ என்று சொல்லிவிட்டுச் செல்கிறார். விண்ணுலகில் கார்ல்மார்க்ஸை சந்தித்த பின்னர் இயேசுபிரான் ‘கடவுள் இருக்கிறாரா’ என்று கேட்டதான அய்ரோப்பிய கதையை நினைவூட்டும் கவிதையிது.

‘அகதிகளுக்கு இல்லையா கடவுள்’ என்ற வரி இலங்கையையும் சிரியாவையும் கண்முன் கொண்டு வந்து அடுத்தவிடம் நகரவிடாமல் அலைக்கழிக்கிறது. இவ்வரியோடு தொடர்புடைய ஆழ்சிந்தனைப் பார்வையிலேயே இத்தொகுப்புக்கான தலைப்பாக ‘அகதியாகும் கடவுள்’ என வைத்திருக்கக்கூடும்.

‘பாத்திரம் தேய்த்தலில்

பாத்திரமாகவே மாறிவிட்டவள்’

காலகாலமாக வீட்டுக்குள் முடங்கியிருக்கும் பெண்களின் இருப்பை அவள் எக்காலமாயினும் பாத்திரங்களுக்கிடையிலான மற்றொரு பாத்திரம் தான் எனும் கசப்பான நிஜத்தை .இக்கவிதை வலி மிகுந்த யதார்த்தத்தோடு பதிவு செய்கிறது.

கவிஞர் தன்னைப் பற்றிய சுயமதிப்பிடல் களை பல கவிதைகளில் செய்து பார்த்துள்ளார்.

‘புத்தனைத் தேடி

ஆசிரமம் ஆசிரமமாக

அலைந்தவனைக் கண்டு

சித்திரத்தில் இருந்த என் புத்தன்

சிரித்தபடி’

இன்னொரு கவிதையில்,

‘வாழ்ந்த வாழ்வின் பொருள் கேட்டு

சேர்த்த பொருட்களெல்லாம் எனைப் பார்த்து

சிரிக்காத மரணம்’

பரபரப்பு மிகுந்ததும் பெரும் நெருக்கடியும் சுமையானதுமான மருத்துவத்துறையில் உயர் பொறுப்பிலிருக்கும் மருத்துவர் இக்விதைகளைப் படைத்த கவிஞர் என்பது சற்று வியப்பான விசயம் தான். இக்கால மருத்துவர்களிடம் துளியளவும் காணப்படாத ஈரநெஞ்சமும் மனசாட்சியும் மனித நேயமும் இவரிடம் காணமுடிவதிலிருந்து தமிழ் கூறு நல்லுலகிற்கு ஒரு நல்ல கவிஞர் கிடைத் திருக்கிறார் என்பதோடு நல்லிதயங் கொண்ட மருத்துவர் ஒருவர் நம் காலத்தில் வாழ்கிறார் என்பதும் ஒரு நல்ல செய்தியாகும்.

‘நட்சத்திர மருத்துவமனைகளின் வெளி யேற்றங்களின்’ என்ற கவிதையில்

‘.................

கொழிக்குது ரொக்க ஆஸ்பத்திரி

அஞ்சித் திரியிற ஏழை உசுருக்கு

ஆறுதல் செய்வதற்குள்

தடுமாறித் தவிக்குது

தரும ஆஸ்பத்திரி.

பாரம் தாளாது

பந்தம் போதாது

கூனிக்குறுகிக் கெடக்குது தருமம்.

சொல்லுங்க ராசாக்களே

ரொம்ப படிச்சவங்க நீங்க

தருமம் இளைத்ததென்ன

தற்செயலா?’

ஏழைகள் சிகிச்சை செய்து உயிர் பிழைக்க வழியற்ற அவலத்தை நம் மருத்துவமனைகளின் லட்சணத்தை இந்தக்கவிதையில் படமாக்கியுள்ளார் கவிஞர்.

மரணத்தின் பொதுமையை உணர்த்திச் செல்லும் மரணங்களைக் கண்டு மனம் கசியும் கவிஞர் ‘மருத்துவமனைச் சுவர்கள் மனிதத் துயரங் களை அறிந்திருக்குமா’ என்று எழுப்பும் கேள்வியும் ‘கல்லாக இருப்பதாலேயே கல் என்று பொருளல்ல’ என்ற தத்துவப் பார்வையும் குறிப்பிடத்தக்க அம்சங் களாகும்.

என்னுள்ளே

சற்றே தயக்கத்துடனான

ஒரு மருத்துவன்.

அரைகுறை வாசகன்

நெடுநாட்களாய் ஓயாத விமர்சகன்

சமீப காலமாக ஒரு பார்வையாளன்

வெகு உன்னிப்பாய் உற்றுநோக்குகிறான்.

என்னவென்று கேட்டால்

இப்படி எதையேனும்

எழுதி வீசிவிட்டு செல்கிறான்.

எனும் வரிகளில் கவிஞர் தன்னைப் பற்றிய தன்னிலை விளக்கத்தையும் கவிதை குறித்த அப்பிராயத்தையும் கூறிச் செல்கிறார்.

‘நோய் கண்டு வந்தான்

வறுமை வாங்கித் திரும்பினான்

கையிலொரு ஃபைலோடு.

வறுமைக்குள் தள்ளப்பட்டது மறந்து

வறுமைக்குள் தள்ளிய

எங்கள் வல்லமையை வியந்து

வாயாரப் பேசிச் செல்கிறான்

ஒவ்வொருவராய்ப் பார்த்து.

நான் ஒரு வெற்றிபெற்ற

கார்ப்பரேட் டாக்டர்.’

இன்றைய மருத்துவமனைகளின் லட்சணங் களையும் சிகிச்சைக்கு வரும் நோயாளிகளின் கையறு நிலையை வசதியாகப் பயன்படுத்தித் திளைக்கும் இன்றைய வணிகமய மருத்துவர்களின் அப்பட்டமான சித்திரத்தை பொட்டிலடித்தாற் போல் உரைக்கும் இக்கவிதையொன்றே போது மானது மருத்துவரான இக்கவிஞரின் கவிமனத்தைப் புரிந்துகொள்ள.

அணிந்துரையில் வெ.இறையன்பு ஐ.ஏ.எஸ் அவர்கள் கூறியுள்ள மாதிரி ‘எழுதுவதைப்போல சிறு உதட்டுப் பிதுக்கலோடு மரணத்தைக் கடக்க நினைப்பவர் அல்லர் அவர்’ என்பது எத்தனை நிஜமானது என்பது தொகுப்பை வாசித்து நிறைக்கையில் நிரூபணமாகிறது. நல்லதொரு கவிதைத் தொகுப்பை வெளியிட்டுள்ள அன்னம் பதிப்பகம் பாராட்டுதலுக்குரியது.

Pin It