kannaki 600

ஒரு படைப்பாளரின் படைப்பு நோக்கம் எதுவாக இருந்தாலும், அவர் சமூகத்துக்கு நேர்மையானவராக இருந்தால், அவர் படைப்பில் அவருடைய காலச் சமூக நிலைமைகள் அவரை அறியாமலேயே பதிவாகிவிடும் என்பது ஒரு ஆழமான உண்மை. இந்த உண்மை இளங்கோவடிகளின் சிலப்பதிகாரத்திலும் நுட்பமாக வெளிப்பட்டிருப்பதைக் காணமுடியும்.

அறிஞர் ரா.பி.சேதுப்பிள்ளையின் காலக்கணக்கின்படிப் பார்த்தால், சிலப்பதிகாரம் எட்டாம் நுற்றாண்டைச் சார்ந்த காப்பியம். சோழ நாடு, பாண்டிய நாடு, சேர நாடு ஆகிய மூன்று நாடுகளுமே இந்தக் காப்பியத்தின் களங்கள். இந்த மூன்று நாடுகளின், நகர வாழ்வும் சிலப்பதிகாரத்தில் ஓரளவுக்கு விரிவாகவே பதிவாகியிருக்கின்றது.

இந்தப் பதிவுகளை உற்று நோக்கும்போது, இந்த மூன்று நாடுகளின் தலைநகரங்களிலும் வர்ணாசிரம நடைமுறை, அதாவது மனுதர்ம நடைமுறை அன்று வலுவாக ஆதிக்கம் செலுத்தியிருந்ததைக் காணமுடியும். வர்ண அடுக்குகளின் அடிப்படையில், நால்வகை வர்ணங்களின் தெருக்களும், நால்வகை பூதங்களும், நால்வகைத் தொழில்களும் காப்பியத்தில் தெளிவு படுத்தப்பட்டுள்ளன.

ஊர்ப்புறங்களிலோ, பண்டையத் தமிழர்களின் மரபு சார்ந்த நிலப்பிரிவுகளான குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை ஆகியவை இன்னும் பிடிப்பு விடாமல் வலுவாக இருந்ததைக் கவனிக்க முடிகிறது.

அதாவது, ஆட்சி அதிகாரத்தின் வழியே நகர்ப் புறங்களில் வர்ணாசிரம வடிவங்களின் பிடி இறுகி, அந்த இறுக்கமானது ஊர்ப்புறங்களுக்கு விரிவடையத் தொடங்கிய காலம் என்று சிலப்பதிகார காலத்தைச் சொல்லத் தோன்றுகிறது.

இக்காலம்தான் கண்ணகி கதை நிகழும் காலம். புகார் நகரத்தில் பிறந்து, வளர்ந்து, கோவலன் என்னும் பெருவணிகனுக்கு வாழ்க்கைப்பட்டு, அவனுக்கு மாதவி என்னும் கணிகையுடன் ஏற்பட்ட உறவால் செல்வமெல்லாம் இழந்து, புகாரில் வாழத்தகுதியற்று, ஒற்றைச் சிலம்பை விற்றுப் பிழைக்கலாம் என்னும் நம்பிக்கையில், தன் கணவனுக்கு ஒற்றைச் சிலம்பை விற்கக் கொடுத்து, அவனுடன் மதுரை வந்தாள் கண்ணகி.

மதுரையிலே பாண்டிய மன்னனின் சிலம்பைத் திருடிய ஒரு பொற்கொல்லன், தன் தவறைச் செய்தவன் ஒற்றைச் சிலம்பு விற்க வந்திருக்கும் கோவலனே என்று மன்னனுக்குப் பொய்யுரைத்தான். தேரா மன்னனோ, அந்தத் திருடனைக் கொன்று சிலம்பை மீட்டு வரச் சொல்லி ஆணை பிறப்பித்தான். அப்பாவிக் கோவலன் அநியாயமாகக் கொலை செய்யப்பட்டான்.

கோவலன் கொலையுண்ட செய்தி அறிந்த கண்ணகி அடங்காச் சினமுற்றுப் பாண்டிய மன்னனின் அவை சென்று, நீதி கேட்டுத் தன் காற்சிலம்பை உடைத்துத் தன் கணவன் கோவலன் குற்றமற்றவன் என நிறுவினாள்.

தன் குற்றத்தை உணர்ந்த பாண்டிய மன்னனும், அவனைத் தொடர்ந்து பாண்டிமாதேவியும் அப் பொழுதே அதிர்ச்சியால் இறந்துபோனார்கள். தன் கணவனைக் காப்பாற்றத் தவறிய மதுரை மூதூர்மீது கண்ணகி தன்னுடைய இடது முலையைத் திருகி எறிந்து, நகரையே தீக்கிரையாக்கினாள். அந்தக் கோபக் கொந்தளிப்பிலும் பார்ப்பனரையும், பெண்டிரையும், பசுக்களையும், மூத்தோர்களையும் காப்பாற்றும் வர்ணாசிரமக் கடமையிலிருந்து கண்ணகி தவற வில்லை. எரிந்து நீறானவர்கள் மற்ற சாதாரண மக்களே.

கோபம் தெளிந்த கண்ணகி சேரநாடு போய், மலை ஏறிக் கணவனோடு வானுலகம் சேர்கிறாள். சேர மன்னன் செங்குட்டுவன் கண்ணகிக்குச் சிலை எடுத்து விழா நடத்துகிறான்.

அந்தக் கண்ணகி விழாவில் கண்ணகியைச் சாந்தம் செய்வதற்காக ஆயிரம் பொற்கொல்லர்கள் பலியிடப் படுவதாக ஒரு கொடூரமான செய்தி வருகிறது. படிப்பவர் உள்ளத்தை நடுங்கவைக்கும் செய்தி. இச்செய்தி காட்டும் சமூக நிலை என்ன? ஆய்வு செய்யப்பட வேண்டிய ஒரு சிக்கலான இடம் இது.

கோவலன் கொலைக்கு முதற்காரணமானவன் பாண்டிய மன்னன். முறைப்படி கோவலனைத் தன் அவைக்கு அழைத்து, அவையோர் முன்னிலையில் விசாரணை செய்து, உண்மையைத் தெளிவுபடுத்தி, நேர்மையான தீர்ப்பு வழங்கியிருக்க வேண்டியது அவன் அரச கடமை. மனைவியின் ஊடலால் சமநிலை பிறழ்ந்திருந்த அவன் அவசரப்பட்டுவிட்டான். அந்த வாய்ப்பைப் பயன்படுத்திய இரண்டாம் குற்றவாளி தானே பொற்கொல்லன்? கண்ணகி கூட அந்தத் திருட்டுப் பொற்கொல்லனைத் தேடவில்லையே. அவனைக் கொல்லவில்லையே? பொற்கொல்லர் தெருவையும் அழிக்கவில்லையே? அப்படி எதுவும் செய்யவில்லையே அவள்? மதுரை நகரின் அப்பாவி மக்களையல்லவா நெருப்பிட்டு அழிக்கிறாள்.

கண்ணகிக்குப் பலியிட்டு அவளைச் சாந்தப்படுத்த வேண்டிய முதல் நபர் யார்? பொற்கொல்லர்களா? இந்தக் கேள்வி மனதைக் குடைகிறது.

பாண்டிய மன்னன் என் தந்தைதான். நான் அவன் மகள்எனப் பாண்டிய மன்னனைக் கண்ணகியே உறவு கொண்டாடிவிட்டதால் அவன் குற்றமற்றவன் ஆகிவிடுவானா?

தான் தப்பித்துக் கொள்வதற்காக இன்னொரு வனைப் பலி பீடத்துக்குத் தள்ளிவிட்ட பொற் கொல்லன், கண்ணகி முன்னால் முதற் குற்றவாளியாக ஆக்கப்பட்டிருந்தால் கூட அதில் நியாயம் இருக்கிறது என்று சொல்லலாம். அவனைப் பிடித்து வெட்டலாம். ஆயிரம் பொற்கொல்லரைப் பலியிட்டுக் கண்ணகியை சமாதானப்படுத்துகிறான் மன்னன்! ஒரு பொற் கொல்லனல்ல, இரு பொற்கொல்லனல்ல! ஆயிரம் பொற்கொல்லர்கள் கண்ணகிக்கு பலியிடப்பட்டதாகச் சிலப்பதிகாரம் சொல்லுகிறதே! ஆயிரம் என்பது அலகிலை என்பதேஎன்கிறதே மனோன்மணீயம்.

இதை விடவும் கொடுமையான இன்னொரு செய்தியைச் சிலம்புச்செல்வர் ம.பொ.சி. பதிவு செய்திருக்கிறார். அவர் செய்திப்படி, இன்னும் ஆயிரக்கணக்கான பொற்கொல்லர்களைப் பலியிட்டுக் கண்ணகி சாந்தப்படுத்தப்பட்டதாகப் புகழேந்திப் புலவர் குறிப்பிட்டிருப்பதாகவும், இந்தப் பலிகளைக் கண்டு மனம் இரங்கிய கண்ணகி, “எனக்கு இனி பொற்கொல்லர்களைப் பலியிட வேண்டாம். அதற்குப் பதிலாக எருமைக் கடாக்களைப் பலியிடுங்கள்”, என்று கேட்டுக் கொண்டதாகவும் சொல்கிறார்.

என்ன தெரிகிறது? தமிழ்நாட்டில் சிலப்பதிகார காலத்தில் கோவலன் கொலைக்கு ஒரு பொற்கொல்லன் காரணமாகியிருந்தான் என்ற சாக்குப்போக்கில், ஒரு பொற்கொல்லனல்ல, ஆயிரக்கணக்கான பொற் கொல்லர்கள் கொலை செய்யப்பட்டிருக்கிறார்களே, இந்தப் பாசிசப் படுகொலைக்கு அடிப்படையான காரணம் என்ன? என் கேள்வி இதுவே.

இந்த கேள்வியையே எழுப்ப முடியாதபடி சிலர் ஒரு பதில் சொல்லுகிறார்கள். அதாவது நடுகற் காதையே ஒரு பிற்சேர்க்கை என்பதே அது. ஆனாலும், பிற்சேர்க்கையாக ஏதோ ஒரு காலத்தில் அது சேர்க்கப் பட்டிருக்கிறதே! அதுவும் இப்படி ஒரு சமூகத்தின் கூட்டுப் படுகொலையாகச் சேர்க்கப்பட்டிருக்கிறதே! ஏன் அப்படிச் சேர்க்கப்பட்டது? அதை ஏன் அன்றைய அறிவு சமூகம் அங்கீகரித்தது? அது உண்மை என்பதால் தானே!

இந்தச் சாக்குப்போக்குப் பதில்களை ஒதுக்கித் தள்ளிவிட்டு, வரலாற்றின் வழி யோசிக்கத் தொடங் கினால், பல சந்தேகங்கள் கிளம்புகின்றன.

ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னே இந்தியா உலக அறிவியல் வளர்ச்சிச் சிகரங்களில் ஒன்றாக விளங்கியது. உலகப் பல்கலைக்கழகங்களில் பல இங்கு இருந்தன.

உலகம் போற்றும் மருத்துவர்கள், விஞ்ஞானிகள், தொழில்நுட்ப வல்லுனர்கள் இங்கும் இருந்திருக் கிறார்கள்.

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னே, தேரை வடிவமைத்தது இந்தியக் கம்மாள அறிவியல்.

சுஷருசாவை உருவாக்கியது இந்திய மருத்துவ அறிவியல்.

ஆரியபட்டரைத் தோற்றுவித்தது இந்தியக் கூட்டு அறிவியல்.

சுழியை கண்டறிந்தது இந்தியக் கணித அறிவியல்.

இன்னும் சொல்லிக்கொண்டே போகலாம்.

பெரும்பெரும் கப்பல்களை உருவாக்கிக் கடலாதிக்கம் செய்தது நம் தச்சர் அறிவியல் தான்.

மாராட்டிய மாநிலத்தில் அவ்ரங்கபாத் என்னும் இடத்தில் ஒரு கோட்டை இருக்கிறதாம். கோட்டையின் உச்சியில் நீரைச் சேகரிப்பதற்கான ஒரு பெருந்தொட்டி இருக்கிறதாம். அந்தத் தொட்டியிலிருந்து பாய்ந்து

வரும் நீர், கீழே ஒரு கல்சக்கரத்தில் மோதும்படி வடிவமைக்கப்பட்டிருக்கிறதாம். மோதிய வேகத்தில் சக்கரம் சுழலுமாம். இந்தச் சுழற்சியைக் கொண்டு பழங்காலத் தொழில்நுட்ப வல்லுநர்கள் மாவு அரைக்கும் கருவியை அமைத்திருந்தார்களாம். அவற்றில் மக்கள் மாவு அரைத்தார்களாம். கதையல்ல. இந்த அமைப்பை இன்னும் அந்த இடத்தில் பார்த்து வியக்கலாம்.

இப்படி எத்தனை எத்தனையோ பழங்கால இந்தியச் சாதனைகளைச் சொல்லமுடியும். இது சமணர் காலத்துச் சாதனை எனப்படுகிறது. அது ஏன் நவீன எந்திரவியலாக வளராமல் முடங்கி அழிந்தது? அல்லது முடக்கி அழிக்கப்பட்டது? இவ்வாறான இந்திய அறிவியல் சாதனைகள் எல்லாமே முடங்கிப் போயினவே, அது எப்படி?

ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் நம் முன்னோர்கள் ஓட்டிய தேர் இன்று என்ன ஆயிற்று? அது தொடர்ந்து சைக்கிளாக, காராக, ரயிலாக, விமானமாக, விண்கலமாக ஏன் வளர்ச்சியடைய வில்லை? இன்றும் ஏன் அது தேராகவே குறுகிக் கோவில் வாசல்களில் முடங்கிக் கிடக்கிறது? அதில் இன்று கடவுளோடு பயணிக்க உரிமை பெற்றவர் யார்?

கல்லணை கட்டிய நம் கல் தச்சர்களின் ஆற்றல் அதன் பிறகு வேறு எந்த அணையும் கட்டாமல், கோயில் கட்டுவதிலேயே முடக்கப்பட்டதே? அக்காலங்களில் அரைக் காட்டுமிராண்டிகளாகத் திரிந்த பல மேற்கத்திய இனங்கள் எப்படி இவற்றையெல்லாம் படைத்து வளர்ந்து முன்னேறினார்கள்? உலகையே வென்றார்கள்? பானை செய்ய ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்னேயே பழகிய நாம், அதன்பின் பாரல்கள், கொதிகலன்கள், பாய்லர்கள் ஏன் செய்யவில்லை?

திரைகடல் ஓடியும் திரவியம் தேடு என்பது முதுமொழி. ஏழு கடல்களிலும் கப்பல்விட்ட நாம் இன்று பிற நாடுகளிலிருந்து கப்பல் செய்யும் தொழில் நுட்பத்துக்குக் கை ஏந்துகிறோமே, எங்கே போயிற்று நம் கப்பல்கட்டும் தொழில்நுட்பம்? கடல் பயணம் எப்போது தீட்டாயிற்று? நம் அறுவைக்கத்தி என்று எப்படிச் சிரைப்புக்கத்தியாயிற்று? இப்படிக் கேட்டு கொண்டே போகலாம். உலகம் வியக்க நாம் சாதித்திருந்த அறிவியல் வளர்ச்சியானது இடைக்காலத்திலே படுபயங்கரமாக ஒடுக்கப்பட்டு, வீழ்ச்சியடைந்திருக் கிறதே, இதன் அடிப்படைக் காரணம் என்ன?

அந்தக் காலத்திலேயே பருத்தியைப் பஞ்சாக்க அரைமணை என்னும் கருவிகண்டு, அதை நூலாக்க ராட்டை என்னும் கருவிகண்டு, அதைத் துணியாக்கத் தறி என்னும் கருவி கண்ட நாம், ஏன் நெய்த்து எந்திரமும், நெசவுத் தொழிற்சாலையும் என முன் நோக்கி வளராமல் போனோம்? பழைய கருவி களெல்லாம் நம் பரண்களிலே முடங்கிக் கிடக் கின்றனவே, ஏன் முடங்கியது? யார் செய்த சதி? யோசிக்க வேண்டிய சிக்கல்.

பொற்கொல்லர்கள் என்னும் பஞ்சகர்மாளர்கள் யார்? வர்ண அடுக்குமுறை கொண்ட நம் நாட்டின் அறிவியல் வல்லுநர்களும், தொழில்நுட்ப வல்லுனர் களும் அல்லவா அவர்கள்! அனைத்தையும் ஆக்கிய பிரம்ம தேவர்கள் அல்லவா அவர்கள்! அந்த பிரம்மர்கள் தானே இம்மாதிரி இனப்படுகொலைக்கு ஆளாகியிருக் கின்றார்கள்? சாதாரணமான இனப்படுகொலையா இது? அறிவியல், தொழில்நுட்பம் ஆகியவற்றின் மொத்தப் படுகொலை அல்லவா இது! யார் இதைச் செய்யத்தூண்டியது? உணர்ச்சிகளையும் சாதி-மதச் சார்புகளையும் தள்ளி வைத்துவிட்டு, நாட்டுநலம் விரும்பும், அறிவாற்றலை விரும்பும் பொது மனிதராகச் சிந்தியுங்கள்!

தீட்டு என்னும் வர்ணாசிரமக் கொள்கை நம்மை வீழ்த்தியிருக்கிறது என்பது இன்னும் புரியவில்லையா?

இதன் ஒரு வெளிப்பாடாகத்தான் ஆயிரக் கணக்கான பொற்கொல்லர்கள் கொலை செய்யப் பட்டதைப் பார்க்க முடிகிறது. தமிழ்நாட்டில் மட்டும் இது நடந்திருக்கும் என்று தோன்றவில்லை. தக்க ஆய்வுகள் மேற்கொண்டால், இந்தியா முழுவதும் ஏதாவது ஒரு சாக்குப்போக்கில் இம்மாதிரிப் பொற் கொல்லர்கள் கொலை பல்லாயிரக்கணக்கில் நடத் திருக்க வேண்டுமென்றே தோன்றுகிறது. இதன் காரணம் என்ன?

உலகம் முழுவதும் அறிவியலும் சமயவியலும் ஒரு காலத்தில் மோதியதை வரலாற்றில் நாம் விரிவாகப் படிக்கிறோம்.

பண்டைய இந்தியாவிலும் அறிவு வகையிலான சிந்தனை, சமய வகையிலான சிந்தனை என்றும் இரண்டு பெரும் சிந்தனைப் போக்குகள் இருந்தன. அவை ஒன்றுடன் ஒன்று மோதின. தெற்கே அவை முட்டி மோதிக்கொண்டிருந்த காலமே சிலப்பதிகார காலம் என்று வரையறுக்க முடிகிறது.

அறிவு வகையிலான சிந்தனைப் போக்கானது வெளிமுகமான (புறவயமான) தேடுதல், ஆய்தல், புதியன படைத்தல், படைப்புகளின் வழியே வாழ்வுக்கும் சமூக வளர்ச்சிக்கும் துணை செய்தல், என வளர்கிறது. இது வளர்முகப் போக்கு.

சமய வகையிலான அல்லது நம்பிக்கை வகையிலான சிந்தனைப் போக்கானது உள் முகமான (அகவயமான) தேடுதல். நம்புதல், சடங்கு செய்தல், மந்திரங்கள் ஓதுதல், சம்பிரதாயங்கள் கைக்கொள்ளுதல் என விரிந்து, சமய ஆதிக்க அடுக்குகளுக்குள்ளே சமூகத்தை முடக்கி அமுக்குகிறது. வர்ண ஆதிக்கத்தினுள் அமுக்குதல் என்பது இந்தியாவுக்குரிய தனியான போக்கு.

இப்போக்குகள் ஒரு காலத்தில் உலகமெல்லாம் இருந்தன. சமய ஆதிக்கம் நிலவிய இடைக்காலம் வரை இந்தியாவைப் போல மேற்குலகிலும் சமயச் சிந்தனைப்போக்கு ஆதிக்கம் செலுத்தியது. அக்காலத்தில் அறிவியல் சிந்தனையாளர்கள் கொடுமைப்படுத்தப் பட்டதும், கொல்லப்பட்டதும், வாணலியில் வறுக்கப் பட்டதும், சிலுவையில் அறையப்பட்டதும் வரலாறு சொல்லும் கொடூரச் செய்திகள். ப்ரூனோ, நிக்கோலாய் காப்பர் நிக்கஸ், கலீலியோ எனப் பலரை வரலாறு எடுத்துக்காட்டுகளாகத் தருகிறது.

இந்தியாவிலும் இம்மாதிரிக் கொலைகளுக்கு வரலாற்றில் பஞ்சமே இல்லை. சார்வாகர்கள் எரிக்கப்பட்டது, சமணர்கள் கழுவேற்றப்பட்டது. ஏகலைவர்கள் கட்டைவிரல் வெட்டப்பட்டது... இன்னும் எத்தனை எத்தனையோ.

ஆனால், மேற்குலகில் சமய ஆதிக்கத்தை வெற்றி கொண்டு, அறிவியல் சுயமாக வளர்ந்து வலுப்பெற்றுப் படர்ந்துவிட்டது. சமயத்தினுள் மூழ்கிக் கிடக்கும் கிழக்குலகையும் இன்று அது விழுங்கிவிட்டது.

இந்தியாவிலோ, சமய ஆதிக்கத்துக்குள் அறிவியல் ஒடுங்கி, வலுவிழந்து கிடக்கிறதென்பது தெளிவாகத் தெரிகிறது. விளைவு, நம் இளைஞர்கள் வேலை தேடி நாடு நாடாக மேற்கு நோக்கி ஓடுகிறார்கள்.

இரண்டு சிந்தனைகளையும் இந்தியாவில் செயல் படுத்தியவர்கள் வலுவான சிந்தனையாளர்களே. இவற்றில் ஒரு சிந்தனை இன்னொன்றை நிராகரிக்கும் தன்மை கொண்டது. அறிவாற்றல் மேலோங்கும்போது, சமய ஆற்றல் அதற்கு அடங்குகிறது. சமய ஆற்றல் மேலோங்கும்போது, அறிவாற்றல் அதற்கு உட்படுகிறது. 

சமூக வாழ்வுக்கு இரண்டும் தேவை. இரண்டும் சமமாக உள்ள சமூகமே வளரும் சமூகம், வாழும் சமூகம்.

இங்கே, இடைக்காலத்தில் சமய நம்பிக்கை அடிப்படையிலான வர்ணாசிரமச் சிந்தனையானது அரசியல் அதிகாரத்தோடு கூட்டுச் சேர்ந்ததால் அறிவியல் சிந்தனை அதற்குப் பணி செய்யும் வகையில் முடக்கப்பட்டுவிட்டது.

இந்த முடக்குதல் ஒரு கட்டத்தில் முட்டி மோதி, வன்முறை வழியே வெடித்திருக்கிறது என்று தோன்று கிறது. சமணர்கள் ஆயிரக்கணக்கில் கழுவேற்றப் பட்டதை இந்தப் பார்வையில் விளக்க முடியும். சார்வாகர்கள் எரித்துக் கொல்லப்பட்டதையும் இந்தப் பார்வையில் விளக்கலாம். ஆயிரக்கணக்கில் பொற் கொல்லர்கள் கொலை செய்யப்பட்டதும் இதையே வெளிப்படுத்துகிறது என யூகிக்கிறேன்.

இந்தப் பெருந்தொகையிலான பொற்கொல்லர் கொலைகளால், இந்திய சமூகத்தில் இந்திய வகையிலான அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அறிஞர்கள் அழிக்கப் பட்டார்கள். அதனால் அறிவியல் வளர்ச்சி இடைக் காலத்தில் கிட்டத்தட்ட முடங்கியே போயிற்று. பல நூற்றாண்டுகள் அது முடங்கிப் போயிற்று.

மேற்கத்தியர் வருகையின் பின்தான், இங்கு அவர்களின் வழியே மேற்கத்திய அறிவியல் தொழில் நுட்பம் வேர்பிடிக்கத் தொடங்கியுள்ளது. இந்திய அறிவியல் தொழில் நுட்பத்தின் அழிவின்மீதுதான் அது கட்டப்பட்டது.

இன்றும் இந்திய வகையிலான அறிவியல் வளர்ச்சி எந்தத் துறையிலும் இல்லை. குடைகள் செய்வோம். உழுபடைகள் செய்வோம், காகிதம் செய்வோம், ஆயுதம் செய்வோம்,” என்று பாரதி ஏங்கும் அளவுக்குத்தான் நம் சொந்த அறிவியல் வறுமைப்பட்டுப் போயிருந்தது. காரணம் இந்தியவகைப்பட்ட அறிவியல் தொழில் நுட்பவியலாளர்களான விஸ்வகர்மாக்கள் இடைக் காலத்தில் வருணாசிரமச் சமயத்தால் ஒடுக்கி அழிக்கப் பட்டதே எனத் தெரிகிறது. 

விடுதலைக்குப்பின், இன்றும் இந்தியாவில் ஒட்டுவாரொட்டி அறிவியலே வளர்கிறது. இந்த வேரற்ற ஒட்டு அறிவியல் இங்கே படர்வதற்கு வசதியாக, நம் அறிவியலின் ஆதிவேர்கள் முற்றிலும் அழிக்கப் பட்டதால், எல்லா நிலையிலும் இந்தியா மேற் குலத்திடம் கையேந்தும் இரண்டாந்தர அறிவியல் தளத்திலேயே உள்ளது. இதனால்தான் நமக்கு உலக அளவில் அறிவியல் தொழில்நுட்ப அங்கீகாரம் எதுவும் இதுவரை கிடைக்கவில்லை. இந்தப் பரிதாப நிலைக்கான முதன்மைக் காரணம் இந்திய வகையிலான அறிவியல் தொழில் நுட்பவியலாளர்களான பொற் கொல்லர்கள் ஒடுக்கப்பட்டதே. இந்த ஒடுக்குமுறையின் ஒரு வலுவான அடையாளமே கண்ணகிக்கு ஆயிரக் கணக்கான பொற்கொல்லர்கள் பலியிடப்பட்ட செய்தி.

Pin It