தமிழ் உரைநடை வளர்ச்சி வரலாற்றின் ஒரு பகுதியாகவே தமிழ் நாவல் வரலாற்றினை நோக்கவியலும். நாவலுக்கு மட்டுமின்றி எல்லா இலக்கிய வகைமைகளுக்குமே நிரந்தர வரையறைகளை உருவாக்கிவிட முடியாது. காலம், சூழல், இடம் சார்ந்து மாறுபடத்தான் செய்யும். இருப்பினும் ஓர் உலகளாவிய இலக்கிய வடிவம் என்ற வகையில் சிலவற்றை ஏற்கத்தான் வேண்டும்.

‘நாவல் என்பது உரைநடையில் அமைந்த கதை. பாத்திரங்களும் நிகழ்ச்சிகளும் வாழ்க்கையைப் பிரதிபலிக்கும் வண்ணம் அமைந்திருக்கும்’ என்கிறது ஆக்ஸ்போர்டு அகராதி. ‘நாவல் என்பது நிலைத்து நிற்கக் கூடிய ஒரு கதை. வரலாற்று உண்மை அல்ல. ஆனால் வரலாற்று உண்மையாக இருக்கக்கூடும். இதன் நோக்கம், ஒரு சில காட்சிகள் மூலமும் உணர்வு பூர்வமான கதைப்போக்கு மூலமும் இயற்கையைப் பிரதிபலிப்பதன் மூலம் படிப்பவர்களை மகிழ்விப்பதும்தான்’ எனப் பொருள் சொன்னது என்சைக்கிளோப்பீடியா பிரிட்டானிக்கா.

“நாவல் ஒரு கலை, கைத்திறனுள்ள ஒரு தொழில். நாவலாசிரியன் ஒரு கலைஞன், கைவினைஞன். அவன் தன் பணியைக் கவனமாகச் செய்ய வேண்டியவன், தன் தொழிலுக்குரிய விதிகளை நன்கறிய வேண்டியவன். அவனுடைய நாவலில் நல்ல வேலைப்பாடு இருந்தால் மட்டும் போதாது. அவன் கவியையும் இசைவாணர்களையும் போலப் படைக்கும் திறன் வாய்ந்ததொரு கலைஞனாகவும் திகழவேண்டியவன்” என்பார் ப.கோதண்டராமன். (உலக நாவல் இலக்கியம், ப.6)

இந்தியாவில் காலனிய ஆட்சியின் உடன்விளைவுகளாகத் தோன்றிய அச்சியந்திர வரவு, ஆங்கிலக் கல்விமுறை, எழுத்தறிவு, நவீன வாழ்க்கை முறைமை ஆகியவற்றின் ஊடே முகிழ்த்ததொரு இலக்கிய வடிவமாக நாவல் அமைகிறது.

தமிழில் முதல் நாவல் (1879) தோன்றி நூற்றி நாற்பத்திரண்டு ஆண்டுகளைக் கடந்துவிட்டோம். உருவத்திலும் உள்ளடக்கத்திலும் தமிழ் நாவல் இலக்கியம் தன்னை நிலைப்படுத்திக் கொண்டு விளங்குகிறது. உலக, இந்திய நாவல் இலக்கிய வளர்ச்சிக்குச் சற்றும் குறையாத விதத்தில் தமிழ் நாவல் வளர்ச்சி நிலைப்பெற்று உள்ளது எனலாம்.

தமிழ் நாவல் வளர்ச்சி வரலாற்றை மூன்று கட்டங்களாகப் பகுப்பர் (இரா.காமராசு, தமிழ் நாவல் இலக்கியப் போக்குகள், பக். 7-8).

girl reading bookஒன்று - நாவல்கள் பெரிய அளவிலான வாசிப்புத் தளத்தை உருவாக்கின. பொழுதுபோக்கு என்ற அளவிலேனும் வெகுமக்களைக் குறிப்பாக பெண்களைச் சென்று சேர்ந்தன. படைப்பாளி, வாசகன் என்ற இருவேறு மனநிலைகளையும் கடந்து வாசிப்புப் பரவலாக்கம் அதில் நிகழ்ந்தேறியது.

இரண்டு - நாவல்களின் வழியே நிகழ்த்தப்பட்ட உரையாடல்கள் சமூக விமரிசனமாக முகிழ்த்தமை. விடுதலைப் போராட்டம் தொடங்கி பெண்விடுதலை, வர்க்க விடுதலை, வர்ண விடுதலை, பண்பாட்டு விடுதலை... எனச் சநாதனச் சமுதாயத்தை தோலுரித்துக் காட்டியதிலும் நாவல்களுக்குப் பெரும் பங்குண்டு.

மூன்று - மாற்றுக் கருத்தாக்கங்களை முன்வைத்து, மரபார்ந்த கெட்டித்தட்டிப்போனக் கற்பிதங்களை உடைத்து, தமிழ்ச் சமூகத்தை நவீனச் சமூகமாக மறுகட்டமைப்புச் செய்கிற பணியில் நாவல்களின் பங்கு முக்கியமானது.

தொடக்கத்தில் பொழுதுபோக்குக்காக வீட்டில் இருக்கும் பெண்கள் வாசிப்புக்காக நாவல்கள் எழுதப்பட்டன. பெரும்பாலும் பத்திரிகைகளில் தொடர்கதைகளாக அவை வெளிவந்தன. கூட்டுக்குடும்பம், நிலமானிய உறவுகள், திருமணம், குடும்பம், விழுமியங்கள் சார்ந்து நாவல்கள் எழுதப்பட்டன. தொடர்ந்து விடுதலைப் போராட்டம் கவனப்பட்டது. காந்தியச் சிந்தனைகள், திராவிட இயக்கச் சிந்தனைகள், மார்க்சியச் சிந்தனைகள் எனக் கொள்கைவழிப்பட்டும் நாவல்கள் எழுதப்பட்டன. மறுதலையில் நவீனத்துவப் பிரதிபலிப்பாக மனித அகத்தை முதன்மைப்படுத்தி அகவிடுதலை, மனித உறவுச் சிதைவுகள், கோபம், விரோதம், காமம், கொலை, தற்கொலை முதலான மனவெழுச்சிகள் இவ்வகை நாவல்களில் வெளிப்பட்டன.

நாவல்கள் ஓர் இலக்கிய வகை என்பதையும் மீறி சமூக இயக்கத்தில் அதன் தாக்குரவுகள் அதிகம் கவனப்படத் தொடங்கியது. எழுத்தாளனின் பார்வை, எழுத்துக்கும் எழுத்தாளனுக்குமான உறவுநிலை, வாசகனுக்கும் வாசிப்புக்குமான உறவுநிலை, எழுத்துக்கும் வாழ்க்கைக்கும், வாழ்க்கைக்கும் சமூகத்துக்குமான தொடர்புறவுகள் முக்கியத்துவப்பட்டன.

மானுடத்தின் செழுமைக்கு அந்த ஆசிரியரின் உலக நோக்கு எத்துனை உதவுகின்றது என்பதைக் காய்தல் உவத்தலின்றிப் பார்த்தல் நலம். மனித உறவுகள் வழியாக வரும் சிந்தனைகள், உணர்வுகள், உணர்ச்சிகள், நடத்தைகள் எந்த அளவுக்கு மனிதத்துவத்தின் இயல்புகளை அதன் வகை மாதிரிகள், அவற்றின் விகற்பங்கள் ஆகியனவற்றையும், மனிதத்துவத்தினதும், அது புலப்படும்-புலப்படா வாழ்க்கையினதும் உண்மைத் தன்மையை எவ்வாறு சித்தரிக்கின்றன என்பது எந்த இலக்கியத்துக்கும் பொதுவான உரைகல்லாக அமையும் என்பார் கா.சிவத்தம்பி (இலக்கியமும் கருத்துநிலையும், ப.146).

இப்படியான திசைவழியில் பயணித்த நாவலின் ஒன்னரை நூற்றாண்டு வரலாற்றின் சில தொடுகற்களை இனி காணலாம்.

முதல் நாவல்கள்

மாயூரம் வேதநாயகம் பிள்ளை எழுதிய பிரதாப முதலியார் சரித்திரம் (1879) தமிழின் முதல் நாவல் என இலக்கிய வரலாற்றில் குறிக்கப்பெறுகிறது. “தமிழில் இம்மாதிரியான உரைநடை நவீனம் பொது மக்களுக்கு இதுவரை அளிக்கப்படவில்லை. ஆகையால் இந்நூல் வாசகர்களுக்கு ரசமாகவும், போதனை நிறைந்ததாகவும் இருக்கலாம் எனப் பெருமை கொள்கிறேன். இம்மாதிரிப் புதிய முயற்சியில் ஏதாவது குற்றங்குறைகள் இருப்பின் பொருத்தருளுமாறு பொதுமக்களை வேண்டிக் கேட்டுக் கொள்கிறேன்” என முகவுரையில் கூறுகிறார். மேலும், "வேடிக்கையான சில உபகதைகளும் சேர்க்கப்பட்டுள்ளன. இறைவனிடத்தில் பக்தியும், சமூக வாழ்வுக்கு இன்றியமையாத கடமைகளும் வற்புறுத்தப்படுகின்றன" என்பார்.

ஆக, இரசனை, போதனை, கட்டுக்கதைகள், கடமை வலியுறுத்தல் - பொதுமக்களுக்கு. இவை இவரின் நோக்கமாகிறது. 350 பக்கங்கள் வாசிப்புச்சுவை அதிகம். அறிவுரைகளும் அறவுரைகளும் நிரம்ப, கற்பனை விஞ்சிய நிலை. பெண் உயர்வு கருத்தாக்கமும், சமூக ஒழுக்க, ஒழுங்குகளை வலியுறுத்தலும் - இவைகளுக்கு ஏற்ப பல கதைகளைக் கட்டுதலும் நாவலாகப் பின்னப்பட்டுள்ளது. இது புனைவியல் பண்பு நிறைந்தது. ரொமாண்டிக் எனும் கவர்ச்சிகரமான கற்பனைப் படைப்பாக்க முறையை தொடங்கி வைத்தவராக வேதநாயகரைச் சுட்டலாம். இன்றைய வெகுஜன எழுத்தாளர்கள் பலரும் இப்பாதையில் பயணிப்பதைக் காணலாம்.

அடுத்து, ராஜமய்யர் எழுதிய கமலாம்பாள் சரித்திரம் (1896). இது வாழ்ந்து கெட்ட ஒரு பிராமணக் குடும்பத்தின் கதை. சமூகக் கோபுர உச்சிக்கலசமாக இருந்த பிராமணர்கள் கால ஓட்டத்தில் சமூகமாறுதலில் தங்கள் அதிகாரங்களை இழக்கும்போது படும்பாட்டை நாவல் சித்திரிக்கிறது. வாழ்க்கைநிலை தலைகீழாகிறது. நாவலின் நாயகர் முத்துசாமி அய்யர் தடுமாறுகிறார். திண்டாடுகிறார். வாழ்க்கையை நகர்த்த வழி தெரியாமல் விழிபிதுங்கி நிற்கிறார். புதுமையை ஏற்க முடியாமலும், பழமையை மீட்க முடியாமலும் அத்வைதத்துக்குள்ளே மன ஓர்மை கொள்கிறார். இது நவீனத்துவப் பண்பு. ‘கமலாம்பாள் சரித்திரம் முற்பகுதி நாவல், பிற்பகுதி கனவு’ என்பார் புதுமைப்பித்தன். ‘ஜீவ பிரம்ம ஐக்கியம் வேதாந்தத்தில் அற்புதமாய் இருக்கலாம். அது கதையின் ரசனைச் சுவையைக் குறைக்கிறது’ என்பார் க.கைலாசபதி. ஆக, ராஜமய்யர் தமிழ் நவீனத்துவத்தின் முன்னோடி எனலாம். இவரை அடியொற்றி இன்றுவரை பல நாவல்கள் வெளிவந்து கொண்டு உள்ளன.

அடுத்து, மாதவையாவின் - பத்மாவதி சரித்திரம். இதுவும் பிராமண சமூகத்தை மையப்படுத்திய நாவல்தான். பிராமண சமூகத்தின் வீழ்ச்சி, அதற்கான காரணங்கள், பழையன கழிந்து புதியன புகுவதை ஏற்றல் ஆகியவற்றை நாவல் பதிவு செய்கிறது. வரலாற்று வளர்ச்சிக் கண்ணோட்டத்தில் சமூக இயங்குதலைக் காட்டும் முயற்சி மாதவையாவிடம் உள்ளது. நடப்பியல் எனும் யதார்த்தவாதப் பண்பின் ஊடாக இந்நாவலை அணுக முடியும். பிறந்த இயற்கையில் மிருக சுபாவமே மிகுந்துள்ள மனிதன், தாயிடத்தும், தந்தையிடத்தும், உடன் பிறந்தோரிடத்தும், சுற்றுமுள்ளோரிடத்தும், முன்னோரிடத்தும், முக்கியமாக ஆசிரியரிடத்தும் கிரகிக்கும் அறிவன்றோ அவனை மேம்படுத்திப் பெருமை சேர்க்கிறது என்று நாவலாசிரியர் ஓரிடத்தில் சுட்டுவது பொருத்தமானது. தமிழ் யதார்த்தவாதத்தின் தொடக்கப் புள்ளியாக மாதவையா அமைகிறார்.

வித்துவான் சேஷையங்கார் இயற்றிய ஆதியூர் அவதானி சரிதம் (1875). இது வேதநாயகருக்கு நான்கு ஆண்டுகளுக்கு முன்பே வெளியானதால் இதுவே தமிழின் முதல் நாவல் என்பாரும் உளர். ஆனால் இது செய்யுளில் அமைந்த ஒன்றாகையால் இதனை இலக்கிய வரலாற்றாளர் ஒத்துக்கொள்வதில்லை. சிறிய படைப்பில் பல துணைக்கதைகள் இடம் பெறுவதுடன் ஒரு பிராமணக் குடும்பத்தின் ஏற்றத்தாழ்வும் மாறுதலை ஒப்பும் மனநிலையும் படைத்துக்காட்டப்படுகின்றன. கலப்பு மணம், விதவா விவாகம் ஆகிய இரண்டும் 1875 காலக்கட்டப்படைப்பில் முன் வைக்கப்படுவதே இதன் தனிச்சிறப்பு. இவ்வகையில் இதுவே தமிழ்ச்சமூகத்தின் முதல் குரலாகப் பதிவாகியுள்ளது. ‘கைம்பெண் விவாகமிந்தக் காலத்திலுண்டாச்சு’ என்றும் ‘சாதிவிட்ட சாதி யென்று தள்ள வினிவாய்க்காது’ என்றும் இடம்பெறுகிறது. தமிழ்நாட்டின் ஒருபகுதி கிராமங்கள், பழக்கவழக்கங்கள், பாண்டிச்சேரி, செனைக்குச் செல்லும் வழி ஆகியன நாவலில் சித்திரிக்கப்படுகிறது. எனவே நாவலின் பண்புகள் செய்யுள் வடிவில் வெளிப்பட்டுள்ளது எனலாம். இதனை நாவலின் தொடக்க முயற்சி என்பது பொருந்தும்.

சித்திலெப்பை மரைக்கார் - அசன்பே சரித்திரம், (1885). இலங்கையின் முதல் தமிழ் நாவலாகவும் தமிழின் இரண்டாவது நாவலாகவும் அறியப்படும் இந்நாவல் ‘முஸ்லிம் நேசன்’ இதழில் தொடர்கதையாக வந்து பின்னர் நூலாக வெளிவந்தது. இது தமிழ் இஸ்லாமிய நாவல் என்பதைக் காட்டிலும் நவீனத்துவமும் இஸ்லாமும், மேற்குலகமும் இஸ்லாமும், கிறித்தவ வாழ்வும் இஸ்லாமிய வாழ்வும் என்பதாக அமைகிற நாவல். இதில் இஸ்லாமிய மார்க்கமும், ஒழுக்கமும் மேன்மையானவை என்கிற வகையில் படைக்கப்பட்டுள்ளது. மாறாக கிறித்தவம் போன்றவற்றை நிராகரிக்காமல், அதன் நேரியல்புகள் சுட்டப்பட்டுள்ளன. நவீன வாழ்வு, நவீனக் கல்வி, ஆங்கில அறிவு ஆகியவற்றை அரபு, தமிழ் மொழியோடும் வாழ்வோடும் கலக்கச் செய்யும் முயற்சியாகவே இது அமைகிறது.

விடுதலைப் போராட்டமும் காந்தியமும்

கா.சி.வேங்கடரமணி - முருகன் ஓர் உழவன் (1927). காவேரிப்பட்டணம் சித்தநாதையர் வேங்கடரமணி, தென்னாட்டுத்தாகூர் என்று போற்றப்படுபவர். காந்தியடிகளின் சீடரான இவர் முருகன் ஓர் உழவன் (1927) தேசபக்தன் கந்தன் (1932) ஆகிய நாவல்களை முதலில் ஆங்கிலத்திலேயே எழுதினார். முருகன் ஓர் உழவனை கிருஷ்ணகுமாரி என்பவர் தமிழில் மொழிபெயர்த்தார். தேசபக்தன் கந்தனை, கா.சி.வே.யே மொழிபெயர்த்தார். இவை வேளாண்குடிகளை அடியொற்றி எழுதப்பட்ட நாவல்கள். காந்தியத்தையும், மனித வாழ்வு பற்றிய தத்துவத் தேடலையும் முன்வைப்பவையாக இவரது நாவல்கள் அமைந்தன. தேசபக்தன் கந்தன் நாவலில், ஊர்ப்புற மக்களின் பிரதிநிதியாய் காட்டேரி தன் கூட்டாளி மூக்கனிடம் புலம்புகிறான்:

“நாம் நாளெல்லாம் பாடுபட்டு கள்ள குடிக்கக் காலணா சேக்கறது ஆண்டவனுக்கு வெளிச்சம். கள்ளவிட்டா வேறெ சொகமேதண்ணே நம்பளுக்கு? நம் போன்றவர்களுக்குப் பாலுண்டா? பழமுண்டா? நெய்யுண்டா தயிருண்டா? வீடுண்டா வாசலுண்டா? கட்டின பொஞ்சாதியும் பண்ணெப்பெண், பெத்த புள்ளேயும் பண்ணெ மாட்டுக்காரப்பயதானே? சேத்துலே, செகதிலே, கல்லுலே, முள்ளுலே, அலெஞ்சு திரிஞ்சு எப்பவும் பாடுபட்ற பொறப்பே நம் பொறப்பு. கள்ளெவிட்டா வேற சொகமேது நமக்கு”?.

இதுதான் அன்றைய தமிழ்ப்பெருங்குடி மக்களின் வாழ்க்கை. மிக இயல்பாகக் காட்சிப் படுத்திவிடுகிறார். அதே நேரத்தில் எத்திசையில் சென்றால் நாடு விடுதலையடைந்து மக்களுக்கு நற்கதி கிட்டும் என்பதை ரங்கன் ஐ.சி.எஸ் எனும் பாத்திரம் இப்படிக் கூறுகிறது:

“நமது நடவடிக்கை முறைகளை இந்த மாதிரியே பற்றவைத்துக் கொண்டிருந்தால் ஓட்டை அடைபடாது. உருக்கித்தான் வார்த்தாக வேண்டும். அதற்கு நெப்போலியனாவது, முஸோலினியாவது இச்சமயம் இந்தியாவுக்கு வேண்டும். இந்தக் கட்டிகள் மந்திரத்தால் தீரா ஆயுதம் போட்டுக் கீறி ஆற்ற வேண்டியதுதான். வேறு வழியில்லை. மந்திரத்தால் மாங்காய் விழுமோ? வீண் பிரயாசைதான். அருமையான நம் காலம் வீணாகிறதைத் தவிரப் பலனொன்றுமில்லை...”

நாவல் முழுக்க விவாதங்களாக அமைந்து பாத்திரங்களை நடத்திச் செல்கிறது.

விடுதலைப் போராட்டம், காந்தியச் சிந்தனைகளை அடிப்படையாகக் கொண்டு பல நாவல்கள் வெளிவந்தன. கல்கி, ர.சு.நல்லபெருமாள், நா.பார்த்தசாரதி, சி.சு.செல்லப்பா போன்றோரின் நாவல்கள் முக்கியமானவை.

சமூக விடுதலை

 நாட்டின் அரசியல் விடுதலையை அடுத்து மொழி சார்ந்த முன்னெடுப்பும், பகுத்தறிவு, சமூக நீதி, மூடநம்பிக்கை ஒழிப்பு, பெண்ணுரிமை ஆகியவற்றைப் படைப்புகளில் பரப்புரை செய்வதுமான ஒரு செல்நெறி உருவானது. தந்தை பெரியாரின் கருத்துக்களும், திராவிட இயக்கக் கருத்துகளும் இதற்குப் பின்புலமாக அமைந்தன.

அறிஞர் அண்ணா, கலைஞர் மு.கருணாநிதி, இராம.அரங்கண்ணல், தி.கோ.சீனிவாசன், எஸ்.எஸ்.தென்னரசு, ப.புகழேந்தி போன்றோரின் படைப்புகள் இவ்வகையில் அமையும். இவர்கள் மொழியை பிறமொழித் தாக்கத்தினின்று காத்து வளப்படுத்தவும் முயன்றனர் என்பது கருதத்தக்கது.

மூடநம்பிக்கையை ஒழித்துப் பகுத்தறிவை வளர்ப்பதும், சாதி சமயத்தை அகற்றி உயர்வு தாழ்வு அற்ற சமுதாயத்தை உருவாக்குவதும், தமிழரின் பழம் பெருமைகளைப் பாதுகாத்துப் போற்றுவதும் இவர்களின் படைப்பு நோக்கங்களாக அமைந்தன. கலைஞர் மு.கருணாநிதி தன்படைப்பு வளத்தால் வெகுமக்களிடம் சென்று சேர்ந்தார் எனலாம். “அடிதடிப் புரட்சி அல்ல, அடிமைப் புரட்சி, முதல்லே நம்ம வீட்டுப் பிள்ளைகளுக்கு அறிவுக்கண்ணைத் திறக்கணும். எல்லோரும் ஓர்குலம் அப்படின்னு பாடுகிற பாட்டைக் கேட்டுத் தலையை அசைச்சுக்கிட்டு இருந்தா மட்டும் போதாது. நமக்குள்ளே அந்த எண்ணம் வரணும், நமக்கு இருக்கிற தாழ்வு மனப்பான்மை ஒழியணும்” (ஒரே இரத்தம், மு.கருணாநிதி).

“ஒற்றுமை இன்மையால் உருப்படாமல் போன இனம் என்று உலகில் ஓர் இனம் உண்டென்றால் அது தமிழ் இனம் தான். எதிரிகள் கஷ்டப்பட்டு பிரித்து வைக்கத் தேவை இல்லாமலே தாங்களாகவே கசப்பு, பொறாமை, காழ்ப்பு இவற்றின் உச்சக்கட்டத்திற்குச் சென்று, பிரிந்து நிற்கும் இனமும் தமிழ் இனம்தான், அதன் விளைவுதான் இதோ உமது எதிரில் வீரபாண்டியன் கூண்டில் நிற்பதும், அதனை இத்தனை தமிழ்க்குறுநில மன்னர்கள் வேடிக்கை பார்த்துக்கொண்டு நிற்பதும்” (பாயும் புலி பண்டார வன்னியன்).

ஆடும் மாடும் போல ஆணும் பெண்ணும் வாழுகின்றனர். ஆடு புல்லைத்தான் தின்னும், மாடு புல்லையும் தின்னும், வைக்கோலையும் தின்னும். சமுதாயம் அனுமதிக்கும் ஆணோடு தான் வாழமுடிகிறது பெண்ணால். ஆனால் ஆண்... அது அனுமதிப்பவளோடும், அனுமதிக்காதவளோடும் வாழமுடியும்... (ஆடும் மாடும், டி.கே.சீனிவாசன்).

வர்க்கப் போராட்டம்

தொ.மு.சி.ரகுநாதன் - பஞ்சும் பசியும் (1953). இந்திய அரசியல் விடுதலைக்குப் பின்னர் சமூக விடுதலை, பொருளாதார விடுதலை ஆகியவற்றை முன்னிலைப்படுத்திய நாவல்கள் அதிக அளவில் வெளிவரத் தொடங்கின.

தமிழில் சோசலிச யதார்த்தவாதத்தை படைப்பாக்கத்தில் வெளிக்கொணர்ந்த ரகுநாதனின் ‘பஞ்சும் பசியும்’ முக்கியத் தெறிப்பு.

“சமுதாய இயக்க விதிகளையும் எதிர்காலச் சமுதாய வளர்ச்சியையும் நன்கு விளங்கிக்கொண்டு அவ்வுணர்வுடன் குறிப்பிடத்தக்க பாத்திரங்களை மெய்ம்மையுடன் சித்தரிப்பவனே யதார்த்தவாதி. இத்தகைய சிறப்புமிக்க யதார்த்த இலக்கிய நெறி தமிழ் நாவலுலகிற் பெருவழக்குப் பெற்றுள்ளதெனக் கூறமுடியாது. இந்த வகையில் தென்னகத்தில் ரகுநாதனுடைய ‘பஞ்சும் பசியும்’ ஒன்றுதான் விதந்து கூறத்தக்கது” (தமிழ் நாவல் இலக்கியம், க.கைலாசபதி).

ஆம் தனிமனித உணர்வுகளையும், குடும்பச் சிக்கல்களையும் பூதாகரமாகப் பெருக்கி, அவற்றையே வாழ்வின் முழுமையான உருவமாகக் காட்டும் நாவல்களே தமிழில் அநேகம். இப்படி, திசைமாறிப் போய்ப் பள்ளத்தில் விழ இருந்த தமிழ் நாவலைப் புதிய பாதைக்கு இட்டுச் சென்றது ‘பஞ்சும் பசியும்’.

வாழ்வின் மேடு பள்ளங்களை இட்டு நிரப்பும் தன்மையில் வர்க்கப் போராட்டத்தை வாழ்வியல் போராட்டமாக பல எழுத்தாளர்கள் முன் எடுத்தார்கள். விவசாயிகள், நெசவாளிகள், தொழிலாளர்கள் ஆகிய அனைத்து மக்களின் நலவாழ்வை நாவல்கள் பேசின. யதார்த்தவாத எழுத்து முறைமைக்கு புதுக் குருதி பாய்ச்சிய இந்த எழுத்தாளர்கள் தமிழ் நாவல் வளர்ச்சியில் பெரும்பங்கு வகிக்கிறார்கள்.

டி.செல்வராஜின் மலரும் சருகும், தேநீர், தோல், கு.சின்னப்பபாரதியின் சங்கம், சர்க்கரை, பொன்னீலனின் தேடல், கொள்ளைக்காரர்கள், கரிசல், தனுஷ்கோடி ராமசாமியின் தோழர், ஆர்.எஸ்.ஜேக்கப்பின் வாத்தியார் போன்ற நாவல்கள் வர்க்கப்போராட்டத்தின் பல்வேறு திசைகளைத் திறந்து காட்டின.

வட்டார வாழ்வியல்

ஒரே மொழி, ஒரே இனம், ஒரே நாடு, ஒரே கடவுள், ஒரே வாழ்க்கை... என்று எங்கும் எப்போதும் நிலைத்த ‘ஒரே ஒரு’ கருத்தாக்கம் இருந்தது இல்லை. பல பண்பாடுகள் நம் மண்ணின் மகத்துவம் அந்த வகையில், ஆர்.சண்முகசுந்தரம் - நாகம்மாள் (1942) தமிழின் முதல் கிராமத்து வாழ்வியலை முன்மொழிந்த நாவல். ‘கடந்த கால் நூற்றாண்டுக் காலத்திய தமிழ் நாவல்களில் ஒரு தலைசிறந்த படைப்பாக மதிக்கிறேன்’ என்பார் தி.க.சி. அறுவடை, சட்டி சுட்டது முதலிய நாவல்களிலும் கொங்கு வட்டார நிலவுடைமைப் பண்பாட்டை வட்டார மொழியில் வெளிப்படுத்தினார்.

அடுத்து, இந்த வட்டார மொழி இலக்கியத்தை வெகு மக்கள் தளத்தில் கொண்டு சேர்த்தவர் கி.ராஜநாராயணன். கோவில்பட்டி வட்டார கரிசல் மக்களையும், மொழியையும். பண்பாட்டையும் தன் எழுத்துக்களில் படைத்தளித்தார். கோபல்லகிராமம், கோபல்ல கிராம மக்கள், அந்தமான் நாயக்கர் முதலிய நாவல்கள் தமிழில் தனித்துவப்பாதை அமைத்தவை. தொடர்ந்து பலர் இத்தடத்தில் பயணித்தனர். ஹெப்சிபா ஜேசுதாசனின் புத்தம் வீடு, சு.சமுத்திரத்தின் நாவல்கள், நீல பத்மநாபனின் நாவல்கள், நாஞ்சில் நாடனின் நாவல்கள், பாரதி பாலனின் நாவல்கள்... என்று பலரைச் சுட்டலாம். சி.ஆர்.இரவீந்திரன் கொங்கு வட்டார மக்களைத் தம் படைப்புகளில் பதிவு செய்தவர்.

பெருமாள் முருகன் கொங்கு வட்டார விளிம்பு நிலை மக்களைப் படைப்பிலக்கியத்தில் படைத்தளித்து வருகிறார். வட தமிழ்நாட்டில் கண்மணி குணசேகரன் பெரும்பங்கு வகிக்கிறார்.

தொண்ணூறுகளின் பேரலை

உலக அரங்கிலும், இந்தியாவிலும் நிகழ்ந்த அரசியல் மாற்றங்கள் கலை இலக்கிய வெளிப்பாட்டிலும் தாக்கங்களை உருவாக்கின. சோவியத், கிழக்கு அய்ரோப்பிய நாடுகளில் சோசலிச அரசுகளின் சிதைவு, இந்தியாவில் ஒற்றைக் கட்சியாட்சிக்கு மாற்றாக மாநிலக்கட்சிகளின் எழுச்சி, மண்டல்குழு பரிந்துரைகள், அண்ணல் அம்பேத்கர் நூற்றாண்டு ஆகியவற்றின் பின்புலத்தில் தலித்தியம், பெண்ணியம் ஆகிய இருபெரும் படைப்பாக்கக் கொள்கைகள் உருவாயின. அதற்குமுன் மார்க்சிய, வர்க்கப்போராட்ட, சமூக மாற்றப் படைப்புகளில் வெளிப்பட்ட இக்கூறுகள் தனித்துவம் பெறத் தொடங்கின.

பாமாவின் கருக்கு, சங்கதி, சிவகாமியின் பழையன கழிதலும், ஆனந்தாயி, இமையத்தின் படைப்புகள், சோ.தர்மன், ஸ்ரீதரகணேசன் ஆகியோரின் படைப்புகள், இவைகளுக்கு முன்னோடியான பூமணியின் படைப்புகள் கவனிக்கத்தக்கன. இராஜம் கிருஷ்ணன் வர்க்கப் போராட்டத்தை முதன்மைப் படுத்தினாலும் அவரின் பெண்நிலைவாத நோக்கும் சிறப்புக்குரியது. திலகவதி, உமாமகேசுவரி, சு.தமிழ்ச்செல்வி போன்றோர் படைப்புகள் முக்கியத்துவம் வாய்ந்தவை. தன்வரலாற்றுப் புனைவுகள் தனித்துவமிக்கவை.

திணைகளின் எழுச்சி

புத்தாயிரத்தின் வருகை தமிழ்ப் படைப்புலகில் பல புதிய திறப்புகளைச் செய்தது எனலாம். அதில் முக்கியமானது தமிழனின் சங்ககால வாழ்முறை­யிலான திணைகளின் எழுச்சி மீண்டும் புத்துயிர்ப்பு பெற்றது எனலாம்.

கார்ப்பரேட் நுகர்வுக் கலாச்சாரச் சூழலில் பின்னைக் காலனியக் கூறாகிய அடையாள மீட்பு, பன்மைப் பண்பாடுகள், தம்மை எழுதுதல், விளிம்புகளின் தன்னுணர்வு ஆகிய பண்புகளின் கூட்டு மொத்தமாகவும் இதனைக் கொள்ளலாம்.

ச.பாலமுருகனின் ‘சோளகர் தொட்டி’ (2004). டி.செல்வராஜும், கு.சின்னப்பபாரதியும், கொ.மா.கோதண்டமும் அதுவரை காட்சிப்படுத்திய குறிஞ்சி, முல்லை மக்களின் வாழ்வியலை அடுத்தக் கட்டத்துக்கு நகர்த்திய படைப்பாக இது அமைந்தது. பழங்குடி மக்களான ‘சோளகர்’ வாழ்வு இன்றைய அரசதிகாரத்தால் எவ்வளவு வன்கொடுமைக்கு ஆளாகி சின்னாபின்னமாகிறது என்பதே நாவல்.

“கொம்பம்மாவின் குடிசையின் வாசலில் வெள்ளை நாகமரத்தின் ஒன்பது கவைக் குச்சிகளையும், ஒன்பது பச்சை மூங்கில்களையும் சேர்த்து ஆள் உயரத்தில் பந்தல் போடப்பட்டிருந்தது. அந்தப் பந்தலில் மேல்பரப்பு முழுவதும் நாகமரத்தின் இலைகளை நிரப்பி இருந்தார்கள். கரியன் புதுஆடை அணிந்திருந்தான். அவனது தலையைச் சுற்றிலும் மணம் பரப்பும் காட்டு மல்லிகையினை சரம் போலக் கட்டி, தோள்கள் வரை தொங்கவிட்டிருந்தார்கள். மணமகன் கரியன் மாப்பிள்ளையாகப் பெண்ணின் வீட்டிற்கு வரவேண்டி பீனாச்சியும் தப்பும் இசைக்கப்பட்டன”.

இப்படியான இயல் வாழ்வு, மனித உரிமைகள் பறிப்பாக மாறி கொடுமைகளாக, குரூரங்களாக, அநியாயங்களாக, அக்கிரமங்களாக, இம்சைகளாக, வன்முறைகளாக, சித்ரவதைகளாக மாறிய அவலத்தின் இலக்கிய சாட்சியமாக ‘சோளகர் தொட்டி’ அமைகிறது. ‘எங்களை வாழவிடுங்கள்’ என்ற ஆதிகுடிகளின் கூக்குரல் இது.

நெய்தல் வாழ்வு

ஜோ டி குரூஸின் - ஆழி சூல் உலகு (2004). அதுவரை ப.சிங்காரம், வண்ணநிலவன், வலம்புரி ஜான் போன்றவர்கள் கடல்வாழ்க்கையை எழுதியிருக்கிறார்கள். அவர்கள் கரையிலிருந்து கடலை நோக்கினர் என்றால் கடலுக்குள் இருந்து கரையைப் பார்த்தவராக ஜோ டி குரூஸ் மிளிர்கிறார். நெய்தல் வாழ்வை, கடலை, கடலோடிகளை, பரதவர்களை, தோணிகளை, புழங்கு பொருட்களை, கடல்வாழ்வை, கடலுயிரிகளை, கடல் பண்பாட்டை எழுத்தில் வார்த்தவராக குரூஸ் அடையாளப்படுகிறார்.

கொற்கை சமூக வரலாற்றைப் புனைவாக்கிய படைப்பு. இதில் தோணிகள், பாய்மரங்கள், மிதப்பான்கள், ராக்கைகள், சங்குகள், முத்துச்சிலாபம், கள், கருவாடு, பாடல்கள், வழக்காறுகள், கதைகள்... எனப் பலவும் இடம் பெறுகின்றன.

“இப்ப எவளுக்கும் ஆம்பள புள்ள பெற விருப்பமில்லை. பத்துப் பதினஞ்சி வயசு வர பொத்திப் பொத்தி வளத்திற்று தோணி, வலயும் போயிபோட்டு வேலையுமில்லாம அதுவ காடுமேடா சுத்தி எவனோ ஒருத்தர் நல்லாயிருக்க அடியாளாப் போயிருறான்வ. முன்னால கொமருவள வச்சிக்கிற்றுத்தாம் பயப்படுவாவ இப்ப பயக்கள வச்சிக்கிற்று பயப்புடுறாவ”. (கொற்கை, ப.105)

இதுதான் நெய்தலின் வீழ்ச்சி. கடல் சார்ந்த வாழ்வு காயடிக்கப்பட்ட, நவீன வாழ்வு அடியாட்களாக மாற்றிவிடுவதை நுட்பமாகச் சொல்லிவிடுகிறார்.

‘ஆழி சூழ் உலகு’ மூன்று தலைமுறை வாழ்வை விவரிக்கிறது. சங்க கால நெய்தல் திணைப் பாடல்கள் பொருத்தமாகச் சுட்டப்படுவது திணை வாழ்வின் ஏக்கமாக வெளிப்படுகிறது.

சுறா வேட்டை, கட்டுமரத்தைத் தூக்கும் பெரிய மீன், பரதவர்கள் கிறித்துவம் தழுவுதல், மாதாவையும், கன்னியாகுமாரி அம்மனையும் தரிசிக்கும் மக்கள், சாதிகள், வளர்ச்சிகள், மதங்கள், சாதியும் மதமும் சார்ந்த வாழ்க்கைமுறை, தரகு அரசியல், போலி முகங்கள், பாலியல் மீறல்கள், மனித உறவுகளின் நெகிழ்ச்சி... என விரிகிறது நாவல். கோத்ரா, “இந்த ஒலகத்துல எல்லாத்தயும்விட மிஞ்சின சக்தி தியாகத்துக்குத்தான் உண்டு. எல்லாரும் இந்த மாய உலகுல சேக்குறாம். நீ மறு உலகுல சேக்குற. ஆசீர்வாதமா இருப்ப...”

இந்தக் குரல்தான் குரூஸின் செய்தியாகிறது. கொந்தளிப்பு மிக்க நெய்தலை தன் கைகளுக்குள் அடக்கி காகிதத்தில் பந்தி வைத்து விடுகிறார். நெய்தலங்கானம் மீள் எழுச்சி கொள்கிறது.

மருதநில மகரந்தங்கள்

காவிரி பாயும் தஞ்சை மண்டலம் நஞ்சையும் புஞ்சையும் கொஞ்சி விளையாடியது. இசையும் கலையும் விளைந்தது. நெல்லோடு தமிழ் நவீனத்துவம் இலக்கியத்தில் கால்கொண்டதும் இங்கேதான்.

தஞ்சை என்றால் எழுத்தாளர்கள் வரிசை கட்டி நினைவுக்கு வருவார்கள். தி.ஜானகிராமன், க.நா.சு, எம்.வி.வெங்கட்ராம், கு.ப.ரா, ந.பிச்சமூர்த்தி, ப்ரகாஷ் என்ற வரிசை செவ்வியல் தன்மையை மீட்டி நின்றது. சா.கந்தசாமி, பாவை சந்திரன், சோலை. சுந்தரபெருமாள், சி.எம்.முத்து, பாட்டாளி, சு.தமிழ்ச்செல்வி, ச.சுபாஷ்சந்திரபோஸ், வாய்மை, நாதன், உத்தமசோழன், ஷக்தி, ஜி.கார்ல்மார்க்ஸ் என்று பெரிய எழுத்துப்பட்டாளம் இயங்கி வண்டல் மண்ணை, வேளாண் வாழ்வை, மருதத்திணையின் மென்மை, வன்மைகளைப் படைப்புகளில் வெளிப்படுத்தி வரக் காணலாம். பின்னைப் பட்டியல் மண்ணிலிருந்து கிளம்பிய மக்கள் மைய எழுத்து என்பது முக்கியம்.

வரலாற்றில் வாழ்தல்

கல்கி, சாண்டில்யன், கோவி.மணிசேகரன், விக்ரமன், பாலகுமாரன் போன்ற எழுத்து சாம்ராட்கள் இராஜா ராணிக் குதிரைகளில் ஏறி இலக்கியப் பரப்பில் வரலாற்றை நினைவூட்டினர்.

இதன் மறுதலையாக சமூக வரலாற்றை சமூக வளர்ச்சி நிலைமைகளுக்குள் வைத்து வரலாற்றை வாசித்து இலக்கியப் படைப்பாக்கத்தை உருவாக்கும் போக்கு முகிழ்த்தது.

அந்த வகையில் பிரபஞ்சன் முன்னோடி ஆகிறார். ‘மானுடம் வெல்லும்’ தொடங்கி வைத்த பாதையும் பயணமும் வரலாற்று, ஆவண நாவல்கள் தமிழில் எழுதப்பட காரணமாக அமைந்தது.

‘தமிழில் தக்க வரலாற்றுப் புதினம் தோன்றவில்லையே என்கிற வசை என்னால் ஒழிந்தது’ என்ற பிரபஞ்சனின் கூற்று மிகை அல்ல. “முறுக்கு மீசையும், வஜ்ரம் போல் மேனியும் கொண்ட இளவரசன், கச்சைக்குள் அடங்காப்பெரும் ஸ்தனங்களைக் கொண்ட மஞ்சளழகியைக் கட்டிலில் சேர்த்த வீர சாகசம், இந்த தமிழ் தேசத்தில் வரலாற்றுப் புதினம் என்ற பெயரால் அழைக்கப்படுவது, தமிழர்க்குத் தலைக்குனிவு தரும் செயலாகும்” என்று அவர் குறிப்பிடுவது தவறு இல்லை.

மானுடம் வெல்லும், மகாநதி ஆகிய அவரின் புதினங்கள், நெருக்கடி நிலைக்காலக்கட்ட அரசியல் வரலாற்றை ஆய்வு செய்யும் பொன்னீலனின் புதிய தரிசனங்கள், குரூஸின் நாவல்கள், தோப்பில் முகமது மீரானின் கடலோர கிராமத்தின் கதை மற்றும் நாவல்கள், தமிழ்மகனின் நாவல்கள், எஸ். இராமகிருஷ்ணன், ஜெயமோகனின் பல நாவல்கள், சு.வெங்கடேசனின் மதுரை நாயக்கர், கள்ளர் வரலாறு சார்ந்த காவல் கோட்டம், எம்.கோபாலகிருஷ்ணனின் மணல் கடிகை, முத்து நாகுவின் சுளுந்தீ... என்று வரலாற்று, ஆவண நாவல்கள் தொடர்ந்து வெளிவந்து கொண்டே உள்ளன.

வானவில் எழுத்து

இலக்கியக் கொள்கைகள் கோட்பாடுகள் பலவற்றின் வருகை படைப்புத் தளத்திலும் புதிய எழுத்து முறைமையை உருவாக்கிற்று எனலாம். பின்நவீனத்தும், பின்காலனியம், நான் லீனியர் எழுத்துக்கள், மாந்திரீக யதார்த்தவாதம் போன்றவற்றினைக் கருவிகளாக்கி எடுத்துரைப்பில் மட்டுமின்றி நாவல் பொருளிலும் பல்வேறு சோதனை- புதிய முயற்சிகள் வெளிப்பட்டுவரக் காணலாம்.

ஜெயமோகன், எஸ். இராமகிருஷ்ணன், கோணங்கி, தமிழவன், சாருநிவேதிதா, ரமேஷ் - பிரேம், எம்.ஜி.சுரேஷ், பா.வெங்கடேசன், ஜி.முருகன், யூமாவாசுகி, யுவன் சந்திரசேகர், சுரேஷ்குமார இந்திரஜித், கரிகாலன், ஜனகப்ரியா, சுதேசமித்திரன், எஸ்.செந்தில்குமார்... என்று அதிகம் பேர் நாளைய நாவல் செல்நெறிகளைத் தீர்மானிப்பவர்களாக அனுமானிக்கலாம்.

சல்மா, கீரனூர் ஜாகிர்ராஜா, மீரான்மைதீன், தீன் போன்ற இஸ்லாம் வட்டார வாழ்வையும் வலிகளையும் பண்பாட்டு முறைமைகளையும் அழகியலோடு படைப்பவர்கள்.

யதார்த்த வாழ்வின் பன்முனைகளை யதார்த்த எழுத்தின் பன்முகங்களோடு படைத்துவரும் பெருமாள் முருகன், நகர, பெருநகர, கார்ப்பரேட் வாழ்வைத் தொடர்ந்து எழுதிவரும் சுப்ரபாரதிமணியன், சமகால வரலாற்றை விவாதித்து யதார்த்த எழுத்தின் வீச்சை வெளிப்படுத்தும் முருகவேல், ச.பாலமுருகன் போன்றவர்கள் குறிப்பிடத்தக்க படைப்புகளை உருவாக்கி உள்ளனர்.

அதிகம் பெண் படைப்பாளிகள் நாவல் களத்தைக் கவனப்படுத்த முடியாத வாழ்க்கைச் சூழலில் இளைய தலைமுறையில் உமாமகேசுவரி, சல்மாவைத் தொடர்ந்து கலைச்செல்வி, புதிய மாதவி, ஜீவா, ஜெயந்தி கார்த்திக், அன்னி பாத்திமா, மலர்வதி போன்றோர் பெண்பாடுகளை மட்டுமின்றி ஒட்டுமொத்த வாழ்வு குறித்த விசாரணைகளையும் தன் நாவல்களில் முன்வைப்பது கவனிக்கத்தக்கது.

புலம்பெயர் வாழ்நிலை, அறிவியல் தொழில்நுட்ப பணிச்சூழல், இருபாலரும் பணிக்குச் செல்லும் நிலைமை, காதல் - காமம் - குடும்பம் - வாழ்க்கை பற்றிய இன்றைய தலைமுறையினரின் அவதானிப்புகள், நுகர்வுக் கலாச்சாரம், கார்ப்பரேட் வாழ்க்கை முறைகள் ஆகியவற்றின் நெருக்கடிகள் ஆகிய இன்றைய வாழ்வை எழுதும் இளம் எழுத்தாளர்கள் இவர்களில் பெரும்பாலோர் இணையத்தில் எழுதக்கூடியவர்கள். ஆர்.அபிலாஷ், சுனில் கிருஷ்ணன், எஸ்.செந்தில்குமார், ஜி.கார்ல்மார்க்ஸ், ஜீவகரிகாலன், லஷ்மி சரவணகுமார், ராம் தங்கம், ஜா.தீபா, சுஷீல்குமார், சரவண கார்த்திகேயன், ஜீ.சின்னப்பன், ராம் சந்தோஷ், அகரமுதல்வன், கோகுல் பிரசாத், காளி, சுரேஷ்பிரதீப், வேல்கண்ணன்... என்று ஒரு பட்டியலில் அடக்கமுடியாதபடிக்கு எழுதி வருகின்றனர்.

பல வண்ணங்கள், வடிவங்கள், சிந்தனை முறைகள், பலவித வாசக மட்டங்கள், வட்டாரங்கள் என்று விரியும் இந்த இளையவர்கள் நம்பிக்கை அளிக்கிறார்கள். விமரிசனத் தடிகளைப் போட்டுவிட்டு தோள் தொட்டு தட்டிக் கொடுக்கலாம். காலம் சலித்துக் கொள்ளப்படும்.

பாமாவின் கருக்கு, சங்கதி, அழகிய நாயகி அம்மாளின் கவலை, முத்துமீனாளின் முள், ராஜ்கவுதமனின் சிலுவைராஜ் சரித்திரம், கே.ஏ.குணசேகரனின் வடு போன்ற தன்வரலாற்றுப் புதினங்கள் தமிழில் தனித்தடம் பதித்தன.

மூன்றாம் பாலினமாக அறியப்படும் திருநங்கைகளின் வாழ்வியலைப் பேசிய சு.சமுத்திரத்தின் வாடாமல்லி, எஸ்.பாலபாரதியின் அவன், அவள், அது தொடங்கி, திருநங்கையரே எழுதிய லிவிங்ஸ்மைல் வித்யாவின் நான் வித்யா, ரேவதியின் வெள்ளை மொழி... என்று படைப்புகள் வந்த வண்ணம் உள்ளன.

தமிழின் நாவல் போக்குகள் தற்கால உலக அளவிலான கலை இலக்கிய வெளிப்பாட்டின் ஒரு பகுதியாகவே அமைகின்றது. பேசப்படாத பகுதியினர் தங்களைப் பேசத் தொடங்கியுள்ளனர். பின்காலனிய கூறாகிய பன்மைப் பண்பாடுகளின் எழுச்சியும், அடையாள மீட்பும் அழகிய கூறுகளுடன் மேலெழுந்து வருகின்றன. வர்க்கம், சாதி, பால், நிலம் சார்ந்த அதிகாரக்குவிப்புகளுக்கு எதிரான உரிமைக்கோரல்கள் படைப்புகளில் வெளிப்படுத்தப் படுகின்றன. எதார்த்த எழுத்தின் நெகிழ்ச்சியையும், நீட்சியையும் காணமுடிகிறது. கதையல்லாக் கதைகளும், இலக்கண வரையறைகள் தாண்டிய எழுத்து முயற்சிகளும், வண்ணமயக் கலவையாக அமையும் வடிவ ஓர்மையும் தமிழ் நாவலை ‘இன்றையத் தன்மைப்’படுத்துகின்றன. இளைய ஆண்கள், பெண்கள், திருநங்கையர் எழுத்து முன்வைப்புகள் நம்பிக்கை அளிக்கின்றன.

இவை கொள்கை, கோட்பாடுகள் வழி மதிப்பிடப்பெற்றவை அல்ல. சராசரி தமிழ் வாசக மனநிலையில் உருவானது இந்த ஆக்கம். யாரையும் சுட்டி, யாரையும் புறக்கணிக்கும் எண்ணமில்லை. வகைமாதிரிக்கு சிலர் பெயர்கள் சுட்டப்பட்டுள்ளன. நாவல்கள் குறித்த திறனாய்வுகள் தேக்க நிலையிலேயே இருப்பது குறையே..

- இரா.காமராசு, தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழக நாட்டுப்புறவியல் துறைத் தலைவர், தஞ்சாவூர்

Pin It