1850-களிலேயே சிறுவர் தொழிலாளர் முறையை உடனடியாகத் தடைசெய்யவேண்டுமெனக் கண்டனக் குரல் எழுப்பினர் மார்க்சும் டிக்கன்சும். ஆனால் இன்றைக்கும் உலகமயமாக்கலின் விளைவாக வேலையின்மை அதிகரிக்கையில், மீண்டும் சிறுவர் உழைப்பு நிலைக்கு ஐரோப்பா திரும்புகிறது. இத்தகைய செயல்களின் விளைவைத் தெளிவாகச் சித்திரித்த நாவலாசிரியர் சார்லஸ் டிக்கன்ஸ் பிறந்து 200 ஆண்டுகளுக்குப் பின்னரும், சிறுவர் உழைப்பு என்பது இப்பொழுது ஐரோப்பா முழுவதும் முகங்கொடுக்கும் பிரச்சினை ஆகிவிட்டது. இது ஐரோப்பாவின் ஒருமித்த அரசியல் நிலை குறித்த பேரழிவு தரும் குற்றத்தன்மை ஆகும்; இலக்கிய ஆசானின் படைப்புகளுக்கு அழிவில்லை. அவ்விதம் மறையாத காவியங்களை உருவாக்கியவர்களில் ஒருவர் சார்லஸ் டிக்கன்ஸ். இன்றைக்கு இருநூறாவது பிறந்த நாள் விழா கொண்டாடும் வேளையில் ஆண்டுகள் ஆகிவிட்டாலும் அவரது எழுத்துகளின் தாக்கத்தை இன்றும் உணர முடியும். சார்லஸ் டிக்கன்ஸின் இருநூறாவது ஆண்டு பிறந்த நாள் விழாவை முன்னிட்டு, இலண்டனின் பல இடங்களில் அவரது படைப்புகள், வாழ்க்கையைப் பற்றிய கண் காட்சிகள் நடக்கின்றன. சார்லஸ் விக்டோரியா காலத்தைச் சேர்ந்த மிகவும் புகழ்பெற்ற ஆங்கிலப் புதின எழுத்தாளர்களில் ஒருவரும், தீவிரமான சமூகப் பரப்புரையாளரும் ஆவார். அவர் மிகவும் வறியவராக வாழ்க்கையைத் தொடங்கியவர். அது அவரது எழுத்துக்களிலும் எதிரொலித்தது.

மார்க்சும் டிக்கன்சும் ஒரே நேரத்தில் ஒரே நகரில் இலண்டன் மாநகரில் ஒரே விஷயத்தை (முதலாளித்துவத்தின் கொடூர சுரண்டலை)க் குறித்து விமர்சனப் பூர்வ இலக்கியம் படைத்துள்ளனர். அப்போதிருந்த பழமைவாத சூழ்நிலையிலும்கூட, டிக்கன்ஸினுடைய சமூகப் பார்வை ஆழமாக ஊடுருவி இருந்தது. இவரது டேவிட் காப்பர்ஃபீல்டு, ஆலிவர் ட்விஸ்ட், கிறிஸ்துமஸ் கீதம் போன்ற நாவல்கள் உலகப் புகழ் பெற்றவை. இலண்டன் மாநகர ஏழை ஜனங்களின் துன்பதுயரங்களை மட்டுமல்ல. முடை நாற்றமும் நோயும் முற்றிய ஜனங்களையும் சித்திரிக்கும் டிக்கன்ஸ் தொழில் வர்த்தகமே சமூகத்தின் ஏற்றத் தாழ்வுகளுக்குக் காரணம் எனச் சொல்கிறார். 1840-களில் மான்செஸ்டர், இலண்டன் தொழிற்சாலை களில் பதினான்குமணி நேரக் கட்டாய உழைப்பு, அதே சமயம் கிராமங்களிலிருந்து நகர்ப்புற ஆலை களை நோக்கிய பெரும் ஜனத்திரள் படையெடுப் பினால் வேலையில்லாத் திண்டாட்டம் பெருகியது. படுமோசமான, கொடூரமான பட்டறைகளிலும் வேலைசெய்ய வேண்டியிருந்தது. உலக வர்த்தகமும், முதலாளித்துவத்தின் கொடூர சுரண்டலுமே வேலை யில்லாத் திண்டாட்டத்துக்கும் பாட்டாளிகளின் ஏழ்மைக்கும் காரணமென்று மார்க்ஸ் கண்டறிந்தார்.

சமமற்ற தொழில்துறை அபிவிருத்திகளுக்கு மத்தியில், பிரிட்டன் “உலகின் உற்பத்திப் பட்டறை யாக” விளங்கியது. இந்தப் பரந்த விரிவாக்கம்... முன்னொருபோதும் இல்லாத வகையில் செல்வத்தைக் குவித்த விரிவாக்கம்.... புத்திஜீவித்தனத்திலும், கலாசார வாழ்க்கையிலும், மற்றும் ஒவ்வொரு சமூக அடுக்கிலும் அதன் பாதிப்பை எற்படுத்தியது. 1885-இல் ஏங்கெல்ஸ் இவ்வாறு குறிப்பிட்டார்:

“இங்கிலாந்தின் தொழில்துறை தனியுடைமைக் காலத்தின்போது, இங்கிலாந்து தொழிலாளர் வர்க்கம் அந்தத் தனியுடைமை நலன்களை, ஒரு குறிப்பிட்ட பரந்த அளவிற்குப் பகிர்ந்து கொண்டது. இந்த நலன்கள் அவர்கள் மத்தியில் மிகவும் ஏற்றத் தாழ்வுடன் பகிர்ந்து கொள்ளப்பட்டன. சலுகை பெற்ற சிறுபான்மை நிறைய ஒதுக்கிக் கொண்டது. ஆனால் பரந்த அளவிலான மக்களுக்கு, குறைந்த பட்சம், இப்படியும் அப்படியும் தற்காலிகமாக ஏதோ கொடுக்கப்பட்டது. ஓவினிசம் (Owenism) இறந்துவிட்டதில் இருந்து, இந்தக் காரணத்தினால் தான் இங்கிலாந்தில் சோசலிசம் இல்லாமல் போயிருக்கிறது.” ஏழ்மையும் வறுமையும் இங் கிலாந்தை ஆட்டிப் படைத்தது. பொருளாதார நெருக்கடிக்கு முதலாளித்துவமே காரணம் என ஏங்கல்ஸும் டிக்கன்ஸும் நம்பினர்.

*      “அனைத்துக் குழந்தைகளுக்கும் அரசாங்கப் பள்ளிக்கூடங்களில் இலவசக் கல்வித்திட்டம் அவசியம் அமல்படுத்தப்பட வேண்டும். தொழிற் சாலைகளில் குழந்தைத் தொழிலாளர் முறையை உடனடியாகத் தடை செய்யவேண்டும். கல்வியறிவு கொடுக்கப்படாத சிறுவரைவிட சமுதாயத்திற்கு நீண்டகால பிரயோஜனமாக இருப்பவர் கல்வி கற்ற சிறுவரே” என மார்க்சும், சிறுவர் தொழிலாளர் கொடூரத்தைக் கண்டித்து வீராவேசத்துடன் இலக் கியம் படைத்த டிக்கன்ஸும் முதலாளித்துவத்தை எதிர்த்தனர். முதலாளித்துவத்திற்கு எதிராக, தங்கு தடையற்ற உழைப்புச் சந்தைக்கு எதிராகப் போ ராடிய டிக்கன்ஸ், மனித உணர்வுகளை மதிக்கத் தெரியாத சுயநலமிகளுக்கெதிராகவும் தனிமனிதன் குறித்த சமூக அக்கறையுடனும் அந்நியமாதலுக் கெதிராகவும் போராடினார். உலகமெங்கும், இன்று ‘பேயரசு புரியும்’ ஏழ்மை, அதீத ஏற்றத் தாழ்வு, பேராசை முதலாளிகள், இலஞ்சலாவண்ய அரசியலர் பற்றிய பிரதிபலிப்புகளை அவருடைய நாவல்களில் அப்பட்டமாகக் காணலாம். பிரெஞ்சுப் புரட்சியின் பஞ்சை விவசாயிகள், அரசர்கள் மற்றும் ஐரோப்பிய பார்லிமெண்டு முன்பாகத் திரண் டெழுந்து நின்றதைப் போல் தொழிற்பட்டறை எசமானர் முன்பாக ஆலிவர் ட்விஸ்ட், சக சிறுவர் தொழிலாளர் படையுடன் கூடி நின்றான். ‘ஆலிவர் ட்விஸ்ட்’டில் ஒரு வரி, அந்த ஆத்திரத்தின் எதிரொலி.

“சீ! நாற்றமடிக்கும் ஏழ்மையின் போர்வை, குப்பை, கூளம், அழுகல், அசிங்கம், இவை தான் அந்த அழுக்குக் குட்டையில் மக்கிப்போன மட்டைகள்....”

சிறுவர் சிறுமியர் மீதான வக்கிரக்கொடுமைகள் குறித்து “டேவிட் காப்பர்பீல்டு”, “நிக்கலஸ் நிக்கல்பி” நாவல்களில் டிக்கன்ஸ், அவரது சமகால எழுத் தாளர் எவரும் தொடாத விஷயத்தை, மிகுந்த சமூக அக்கறையுடன் கடுமையாகக் கண்டித்து எழுதியுள்ளார். பிறக்கும் முன் அப்பாவையும், பிறந்த உடன் அம்மாவையும் இழந்துவிடுகிறான் ஆலிவர் ட்விஸ்ட். ஆதரவு அற்றவர்களின் இல்லத்தில் வளர்ந்த அவனை ஒரு கும்பல் திருடனாக்க முயற்சி செய்கிறது. ஆலிவர் அந்த முயற்சியில் பல இன்னல் களைச் சந்திக்கிறான். அவன் திருட்டுக் கும்பலிடம் இருந்து தப்பினானா? ஏன் அவனைத் திருடனாக்க முயல்கிறார்கள்? ஏகப்பட்ட சம்பவங்கள், சுவாரசிய மான திருப்பங்களுடன் விறுவிறுப்பாகச் செல்கிறது நாவல்.

*      டிக்கன்ஸினுடைய ‘கிறிஸ்துமஸ் கீதம்’ படைப்பையும் மார்க்ஸினுடைய ‘மூலதனம்’ படைப்பையும் ஒப்பிட்டுப் பார்த்தோமானால் இரண்டும் ஒரே விஷயத்தைத்தான் பேசுகின்றன என்பது புலப்படும். டிக்கன்ஸ் போன்ற விமர்சன யதார்த்தவாதிகள் உழைப்பாளர்கள்பால் அனு தாபத்தோடு எழுதியதும் உண்டு. அன்பு, சிரிப்பு, மகிழ்ச்சி, கொண்டாட்டம் எல்லாம் கலந்ததுதான் மனிதனின் வாழ்க்கை. இவை இல்லாமல் வாழ்ந்த ஒரு மனிதனின் கதைதான் கிறிஸ்துமஸ் கீதம். அன்பும் மகிழ்ச்சியும் தெரியாத, வெளிப்படுத்தாத இந்த மனிதர் எப்படி இயல்பான மனிதராக மாறு கிறார் என்பதைத்தான் அழகாகச் சொல்லியிருக் கிறார் சார்லஸ் டிக்கன்ஸ். தொழில்மயமாகும் ஐரோப்பாவின் தொழிலாளர் ஜனங்களின் துன்ப துயரங்களையும், வறுமையிலும் கடும் உழைப் பிலும் அவதியுறும் அவலங்களையும், ‘கஞ்சி குடிப் பதற்கிலார் அதன் காரணம் இதுவென்ற அறிவு மிலார்’ என்ற நிலையில் உழன்ற கலாசார உறுதி யிழந்து இறுதியாகி முட்டிமோதி தம்முள்ளும் இவ்வுலகத்தினின்றும் அந்நியமாகிப் போன அவல நிலையையும் இருவருமே சித்திரிக்கின்றனர். ஒருவர் உலகம் போற்றும் இலக்கியவாதி- கதை சொல்லிக் கலைஞன். இன்னொருவர், இதுமாதிரியான அந்நியமாதலில் உழல வைக்கும் ‘முதலாளித்துவக் கனவில்’ விழுந்த கீறல்களை சமூக பொருளாதாரக் காரணிகளோடு அறிவுபூர்வமாகத் தீட்டியவர். தொழில் வர்த்தகம் சுறுசுறுப்பாகி ஐம்பது வருங் களேயான உலக முதலாளித்துவத்தைக் குறித்து இருவரும் காத்திரமான விமர்சனங்களை வைத்தனர்.

*      1854-இல் நியூயார்க் டிரிபியூன் பத்திரிகையில் மார்க்ஸ் எழுதிய “ஆங்கில மத்தியதர வர்க்கம்” கட்டுரையில்: “இதுவரைக்குமுள்ள தொழில் அரசியல் வாதிகள், வெளியீட்டாளர்கள், ஒழுக்கசீலர்கள் ஆற்றிய மொத்த உரையைவிட விக்டோரிய இங் கிலாந்தின் டிக்கன்ஸ் உள்ளிட்ட நாவலாசிரியர்கள் உலகிற்குப் பகன்ற கூடுதல் அரசியல் மற்றும் சமூக உண்மைகள் யதார்த்தத்தை அப்பட்டமாகச் சித்திரிக் கின்றன” என்கிறார். சமூக நீதிக்காகப் போராடும் விக்டோரியன் வெகுஜன கோரிக்கைகளை- “இருண்ட வீடு” வறுமை (சார்லஸ் டிக்கன்ஸ் தாம் எழுதிய “பிளீக் ஹவுஸ்” (Bleak House) என்கிற நாவலில் இந்த மர்மத்தை முதன்முதலாக இலக்கியத்தில் பதிவு செய்தார்.) 1853, “லிட்டில் டோரிட்” 1857, “நமது சக நண்பன்” 1865, போன்ற நாவல்களில் மிக தத்ரூபமாக மனதைவிட்டு நீங்காத கதாபாத்திரங்கள் வாயிலாக முதலாளித்துவ சமூகத்திற்கு எதிரான புதிய சமூக நீதிகளையே டிக்கன்ஸ் வைத்தார்.

*      மார்க்ஸ் தம்வாழ்நாளில் வேகவேகமாக உயர்ந்து ஆகப்பெரும் விமர்சனப்பூர்வ துல்லிய மனிதனாக ஆகிவிட்டபோது டிக்கன்ஸ் தம்முடைய வாழ்நாள் முழுக்க சமூக யதார்த்த உண்மைகளை எழுச்சியுடன் எழுதிக்கொண்டேயிருந்தார். எந்த வரையறையும், புரட்சிகரத் திட்டமும் கொள்கையும் வடிவமைத்துக் கொள்ளாமல் வாழ்க்கை முழுக்கப் போராட்ட இலக்கியத்திலேயே புகழ்பெற்றார் டிக்கன்ஸ் என்று சொன்னால், முதலாளித்துவ சமுதாயத்தை ஒழித்துக்கட்டி சோசலிச சமுதாயத்தைக் கட்டியெழுப்ப வேண்டுமென்ற கொள்கையை முன்வைத்து மார்க்ஸ், ‘எந்திரமும் மனிதனும்’, ‘சக்தியும் சமூகமும்’, ‘இயற்கையும் கலாசாரமும்’, ‘கம்யூனிசமும் அடையாளமும்’, ‘ஜனநாயகத்தின் தலைவிதி’, ‘ஹெல்த்கேர்’... போன்ற நவீனத்துவத்தின் அனைத்து வரையறைகளையும் ‘மூலதனம்’ நூலில் சொன்னதெல்லாம் சரியாகவே உள்ளது.

*      டிக்கன்ஸினுடைய “தி பிக்விக் பேப்பர்ஸ்”, “ஆலிவர் ட்விஸ்ட்”, “கிறிஸ்துமஸ் கீதம்”, “படைப்புகள் கார்ல் மார்க்ஸ், ஏங்கல்ஸ், ஜார்ஜ் பெர்னார்டு ஷா போன்ற உலகமுழுக்கவுள்ள சோஸலிஸ்டுகள், அறிவாளிகள் பலராலும் விரும்பிப் படிக்கப்பட்டன. சமூகப் பிரச்சினைகளை துல்லியமாக முன்வைத்து டிக்கன்ஸ் செய்த ஆய்விலக்கியத்தைப் பலர் பாராட்டி யுள்ளனர். எந்திர கதியில் பாட்டாளியின் உழைப்பை உறிஞ்சும் முதலாளித்துவத்தின் எந்திரக் கருவிகள், தொழிற்பட்டறைகள் குறித்த கொள்கை, கோட் பாடுகள் மூலம் மார்க்ஸை நெருங்கி வருகிறார் என்று சொல்லலாம்.

*      “மார்க்ஸுக்கும் டிக்கன்ஸுக்குமான வித்தி யாசம் என்னவெனில் மார்க்ஸுக்குத் தெரியும் தாமொரு புரட்சிக்காரரென்று; ஆனால் டிக்கன்ஸுக்கு தம்மை அப்படி அழைக்கவென்ற நினைப்பே அற்றவர்” என்று ஜார்ஜ் பெர்னார்டு ஷா இரு வரையும் ஒப்பிட்டுச் சொன்னார்.

*      கடினமான உடல் உழைப்பு டிக்கன்சுக்கு வாழ்க் கையின் யதார்த்தத்தைக் காட்டியது. காலையிலிருந்து மாலை வரை அவர் எலிகள் நிறைந்த தொழிற் சாலையில் விடாது வேலை செய்யவேண்டி வந்தது. சின்னஞ் சிறிய நெஞ்சங்களில் காயங்களை ஏற்படுத்தும் அளவுக்கு அங்கு வாழ்க்கை சிரமமாக இருந்தது. அந்தப் பிஞ்சு வயதில் தான்பட்ட சிரமங்களை எண்ணி அவர் பின்னாளில் நிறைய எழுதினார். அங்கு நடந்த பல நிகழ்வுகள் அவருக்குப் பல காயங்களை ஏற்படுத்தின. குடும்ப ஏழ்மையின் காரணமாக, சிறுவயதில் குழந்தைத் தொழிலாளி யாக மாறிய ஒரு சிறுவன் படும் இன்னல்களைச் சித்திரிக்கிறது, அவரது புகழ்பெற்ற புதினமான ‘ஆலிவர் டிவிஸ்ட்’. இந்தப் புதினம் அவரது சொந்த அனுபவம் என்றே கூறலாம். அவர் சுட்டிக் காட்டிய குழந்தைத் தொழிலாளிகளின் தாள முடியாத துன்பங்களை நீக்குவதற்காக ஒரு தனி அமைச்சரே நியமிக்கப் பெற்றார். அதன் பிறகு தான் இங்கிலாந்தில் குழந்தைத் தொழிலாளி முறை ஒழிந்தது. தனது எழுத்தின் மூலம் அரசாங்கக் கொள்கையையே மாற்றியது படைப்பாளியின் பெரும் வெற்றி. “நல்லெண்ணமும் நற்சிந்தையுமுடை யோராலேயே முதலாளித்துவம் சீரும் சிறப்புமாகப் பணியாற்ற முடியும். அத்தகைய நல்லோரில் பெரும் பான்மையோர் மத்தியதர வர்க்கத்திலிருக்கின்றனர்” என்பது டிக்கன்ஸின் நம்பிக்கையாகும்.

*      டிக்கன்ஸ் எழுதிய பதினைந்து புதினங் களில் மிக முக்கியமான “இரு பெரும் நகரங்களின் கதை” (டேல் ஆஃப் டூ சிட்டீஸ்), கிறிஸ்துமஸ் கீதம் (கிறிஸ்துமஸ் கரோல்) மற்றும் பெரும் எதிர் பார்ப்பு (கிரேட் எக்ஸ்பக்டேஷன்) என்னும் புதினங்கள் மிகப் பிரபலமானவை.

1. “இரு பெரு நகரங்களின் கதை”யில் பிரஞ்சுப் புரட்சியின் காரணங்களையும் அதனால் ஏற்பட்ட விளைவுகளையும் காணலாம். (பாரிஸ், லண்டன்) பிரான்சின் லூயி பரம்பரை அரசர்களின் கொடுங் கோன்மையில் இருந்து அந்நாட்டை விடுவிக்கப் பிரெஞ்சுப் புரட்சி 1757-இல் நிகழ, அந்தக் கால கட்டத்தில் இலண்டனில் நடந்த சம்பவங்களையும் இணைத்து மிக அருமையாக எழுதப்பட்ட புதினம். கதை சொல்லப்பட்ட விதமும், அதில் வரும் கதா பாத்திரங்களின் குணங்களை விவரித்த விதமும் மிகவும் அருமையாக இருந்ததால், இந்தப் புதினம் பலராலும் பாராட்டப்பட்டது.

கார்லைல் வர்ணித்த பிரெஞ்சுப் புரட்சிக்கும் புரட்சியாளர்கள் குறித்த டிக்கன்ஸின் பார்வைக்கும் வித்தியாசமுள்ளது. பிரெஞ்சுப் புரட்சியின்போது நடந்த வன்முறையை டிக்கன்ஸ் ஏற்றுக்கொள்ள வில்லை. வன்முறையிலும் ஆயுதமேந்திய போராட்டத் திலும் நியாயமில்லையென வாதிட்டவர் டிக்கன்ஸ். 1850-களில் இங்கிலாந்திலும் பிரெஞ்சுப் புரட்சியைப் போன்றே ஆயுதமேந்திய புரட்சி உருவாகிவிட்டதைக் கண்ணுற்ற டிக்கன்ஸ் அதைத் தமது நாவலில் வேறுவிதமாகப் பதிவு செய்தார்.

2. டிக்கன்ஸின் கிறிஸ்துமஸ் கரோல் என்னும் புதினம் பலரின் பாராட்டையும் பெற்றது. இதில் எபநேசர் என்பவருக்குக் கிறிஸ்துமஸ் நாளில் ஜேக்கப் என்பவரின் வருகையால் ஏற்பட்ட மாற்றங்களைப் பற்றியும் மிக நுணுக்கமாகச் சொல்லியுள்ளார்.

3. டிக்கன்ஸ் ஒரு மார்க்சியர் என்றே உரிமை கொண்டாடும் ஜெஸ்டெர்டென் மற்றும் டி.ஏ. ஜேக்ஸன் (“சார்லஸ் டிக்கன்ஸ் என்ற தீவிர போராளியின் முன்னேற்றம்” (1930))

நூலாசிரியர்: டி.ஏ.ஜேக்ஸன்...பிரிட்டிஷ் கம்யூனிஸ்டு கட்சியின் மத்திய குழு உறுப்பினரான டி.ஏ.ஜேக்ஸன் “இயக்கவியல்- மார்க்சியத்தின் தர்க்கமும் அதன் விமர்சகர்களும்” என்ற நூலை எழுதியுள்ளார்.) போன்ற விமர்சகருக்கு எதிர்வினை யாக டிக்கன்ஸ் ஓர் உண்மையான கத்தோலிக்கர் என்று நாமமிட்டது திருச்சபையினர். ஆனால் இருவருமே “பாட்டாளி வர்க்கத்தின் வெற்றி வருகையைப் பறை சாற்றியவர் ஆசான் டிக்கன்ஸ்” என்றனர்.

4. பிப் என்னும் அநாதைச் சிறுவன் படும் வேதனைகளையும் அவனின் கற்பனைகளையும் எதிர்பார்ப்புகளையும் சார்லஸ் டிக்கன்ஸ் மிக அழகாகத் தனது புதினமான கிரேட் எக்ஸ்பெக் டேஷனில் சொல்லியுள்ளார். பிப் ஒரு குற்றவாளிக்குத் தரும் உணவு அவனை வாழ்நாள் எல்லாம் காப் பாற்றுகிறது. பசியும் உணவுமே உலகின் ஆதார அம்சங்கள். அதை டிக்கன்ஸ் தன்வாழ்வில் முழுமை யாக உணர்ந்திருக்கிறார். நாவல் முழுவதுமே பசி முக்கிய குறியீடாக வருகிறது. பிப்பை போன்ற சிறுவர்கள் உலகெங்கும் ஒன்று போலவே இருக் கிறார்கள். அவர்கள் டிக்கன்ஸின் நாவலில் வருவது போல உயரங்களை அடைகிறார்களா எனத் தெரி யாது. ஆனால் வயிற்றைக் காப்பாற்ற வேண்டி ஏதேதோ வேலைகளில் ஈடுபடுகிறார்கள். அவ மானத்தின் கசப்பைக் குடித்து வளர்கிறார்கள். டிக்கன்ஸ் குறைவான வார்த்தைகளில் ஒரு இடத்தை, கதாபாத்திரத்தை முழுமையாக, வலிமையாகச் சித்திரித்து விடுகிறார். எவ்வளவு உயர்வான எழுத்து நுட்பமது!

5. பத்தொன்பதாம் நூற்றாண்டு ஆங்கில நாவலாசிரியரான சார்லஸ் டிக்கன்ஸ் 1837 இல் எழுதிய “தி பிக்விக் பேப்பர்ஸ்” மிகவும் நகைச் சுவையான நாவல். திருவாளர் பிக்விக் என்பவரின் சாகசங்களை விரிவாகச் சொல்லும் நாவல் இது. இதுதவிர பரனபி ரட்ஸ், டோம்பியும் மகனும், ஹார்ட் டைம்ஸ், பிளிக் ஹவுஸ், போன்ற அவரின் எண்ணற்ற புதினங்களும் மிகவும் புகழ் பெற்றவை.

*      “பிக்விக் பேப்பர்ஸ்” என்ற பெயரில் 1837 ஆம் ஆண்டிலிருந்து 1839 ஆம் ஆண்டு வரை டிக்கன்ஸ் எழுதிய கட்டுரைகள் பத்திரிகைகளில் வெளிவந்தன. அவைதான் பின்னர் அவருக்குப் பெரும் புகழைத் தேடிக் கொடுத்தன. 1859-இல் “இரு நகரங்களின் கதை” என்ற நாவலை வெளியிட்டார். “ஆங்கில நிறுவனங்களை டிக்கன்ஸ் வீராவேசத்துடன் சாடி யுள்ள முறை இதுவரை யாராலும் அணுகமுடியாத கண்டன வேகம்.... ஆனால் எந்த நிறுவனத்தினரை இவ்வளவு கடுமையாகச் சாடினாரோ அவர்களே டிக்கன்ஸை முழுவதுமாக விழுங்கி அவரையே பெரும் நிறுவனமாக்கிவிட்டனர்” என்று ஜார்ஜ் ஆர்வல் கிண்டலாக முதலாளித்துவத்தைச் சாடு கிறார். மேலும் “பொய்நீதிநெறிமான். அரசதிகார அறவோர் கும்பலுக்கடியில் ஒரு நூறு டன் டைன மைட்டை வெடித்தார் மார்க்ஸ். அந்த மாபெரும் வெடிப்பு எதிரொலியில்தான் நாம் இன்னும் வாழ்ந்துகொண்டிருக்கிறோம், பேசிக்கொண்டிருக் கிறோம். ஆனால் ஏற்கெனவே வேறொரு மேலோர் கும்பல் இதைவிடக் கூடுதலான அணுகுண்டை, சந்திரனில் வைத்து மார்க்ஸை வெடிக்கச் சதித் திட்டம் தீட்டிவிட்டனர்” என்று எழுதினார். “ஆனாலும் மார்க்ஸைப்போல இன்னொரு மனிதன் இதைவிடக் கூடுதலான அணுகுண்டுகளுடன் அதி காரத்தைத் தகர்த்தெறியப் பூமியில் தோன்று வான்...

மையப்பிரச்சினையே அதிகாரத் துஷ்பிர யோகம் செய்வதைத் தடுத்து நிறுத்துவதெப்படி? என்பதுதான். அதற்கான தீர்வு எட்டப்படும் வரை புரட்சி தொடர்ந்து நடைபெறும்.”- ஜார்ஜ் ஆர்வல்.

*      லெனின் மரணப்படுக்கையில் கிடந்த போது தோழர் குரூப்ஸ்கயா டிக்கன்ஸின் “கிறிஸ்துமஸ் கீதம்” நாவலை வாசித்துக் காட்டினார். அதிலுள்ள பூர்ஷுவா சிந்தனையோட்டத்தைக் கேட்டு லெனி னுக்குத் தாங்க முடியவில்லை. முதலாளித்துவத்தின் கீழ் வேடிக்கையும் கேளிக்கையுமாக டிக்கன்ஸ் சித்திரிப்பதென்பது லெனினுக்குப் பிடிக்கவில்லை. ஆனால் ஜார்ஜ் ஆர்வெல்லுக்கு ஆண்டுக்கு ஒரு முறை வரும் கிறிஸ்துமஸ் பண்டிகையின்போது ஏழை ஜனங்கள் கொண்டாட்டமும் மகிழ்ச்சியு மாக இருப்பது சமூக யதார்த்தமாகப்பட்டது. இறுதியில் மகிழ்ச்சியும் கேளிக்கையும் அவர்களுக்கு முழுதாகக் கிடைக்கவில்லையென டிக்கன்ஸ் காட்டுகிறார்.

*      1847-இல் ரஷ்ய விமர்சகர் வி.ஜி. பெலின்ஸ்கி எழுதுகையில்: “எல்லாவிதக் கருத்துக்களையும் விட்டொழித்துவிட்டு நிஜ வாழ்க்கையில் பிரத் யேகமாக கலையின் அடித்தளத்தை உருவாக்கு வதன்” மூலமாக மட்டும்தான் ரஷ்ய இலக்கியத் திற்கான கோகொலின் பங்களிப்பை எட்ட முடியும் என்று குறிப்பிட்டார். இதைச் செய்யவேண்டு மானால், சராசரி மக்களை நுட்பமாக விளக்கிக் காட்ட, மக்கள் கூட்டத்தை, மக்கள் பெருந்திரளைப் பிரத்யேகமாக ஆய்வு செய்ய வேண்டிய தேவை இருக்கிறது. “கோகொலின் படைப்புகளுக்கு மற் றொரு வாக்கியமும் பொருத்தமாக இருக்கும் என்று அவர் குறிப்பிட்டார். “அதனது நம்பிக்கைக் குரிய எல்லாவிதத்திலும் யதார்த்தத்தை பிரதிநிதித் துவப்படுத்துவதாகக் கலை இருக்கிறது.”

*      டிக்கன்ஸின் உரைநடைத்திறன் இதுவரை யாருக்கும் வாய்த்ததில்லை எனலாம். அவரது வெற்றிக்கு மிக முக்கிய காரணம் திறமையான ஆளுமைகொண்ட பாத்திரங்களை உருவாக்கும் திறமை எனலாம். சமூகச் சீர்கேடுகளைக் களைய அவரைப் போல முயற்சி எடுத்தவர் யாருமில்லை எனலாம். அவரது எழுத்துக்கள் நாட்டில் பரவி யிருந்த அறக்கேட்டையும் குற்றப் பெருக்கையும் ஊழலையும் பெரும் சீற்றத்தோடு சாடின. கிரேட் எக்ஸ்பெக்டேஷன் (1860-1): மனித இயற்கை மற்றும் நம்பிக்கைகள் முதலாளித்துவ சமுதாயத்தின் மீதுள்ள வெறுப்பே அடிப்படை

*      திறனாய்வாளர்களான ஜார்ஜ் கிஸ்ஸிங், ஜி. கே. செஸ்ட்டர்ட்டன் ஆகியோர், டிக்கென் ஸினது உரைநடைத் திறன், தனித்துவமான, திறமை யான ஆளுமைகொண்ட பாத்திரங்களைத் தொடர்ச்சி யாக உருவாக்கும் திறமை, அவரது ஆற்றல்மிக்க சமூக உணர்வு என்பவற்றுக்குச் சான்றளித்துள்ளனர். ஆனால், சக எழுத்தாளர்களான, ஜார்ஜ் ஹென்றி லூயிஸ், ஹென்றி ஜேம்ஸ், வெர்ஜீனியா வூல்ப் ஆகியோர் உணர்ச்சிவசப்பட்ட தன்மை, நம்ப முடியாத நிகழ்வுகள், இயற்கைக்கு மாறான பாத்திரப் படைப்புக்கள் என்பவற்றுக்காக அவரது ஆக்கங்களைக் குறை கூறியுள்ளனர்.

*      ஷேக்ஸ்பியருக்கு அடுத்த இரண்டாவது உயர்ந்த நிலையை டிக்கென்ஸுக்குத் தந்திருக் கிறது. ஆங்கில இலக்கிய உலகம். எளியவர்களின் மற்றும் உழைக்கும் வர்க்கத்தின் துயரங்களை அவர் தத்ரூபமாக எடுத்துக் கூறுவதில் வல்லவர். அதனால்தான், தான் வாழ்ந்த காலத்தில் அனை வராலும் மிகவும் விரும்பப்பட்ட ஒரு நாவலாசிரி யராக விளங்கினார். அவருடைய புதினங்களினதும், சிறுகதைகளினதும் புகழ் காரணமாக அவை தொடர்ச்சியாக அச்சேறி வருகின்றன. டிக்கென்சின் பல புதினங்கள் தொடக்கத்தில் சஞ்சிகை போன்ற வற்றில் தொடராக வெளிவந்தவை. இது அக் காலத்தில் பெரிதும் விரும்பப்பட்ட ஒரு வடிவமாக இருந்தது. எனினும், அக்காலத்துத் தொடர்கதை எழுத்தாளர்கள் பலரைப்போல, டிக்கென்ஸ், வெளியிடத் தொடங்கு முன்னரே புதினம் முழு வதையும் எழுதி முடிப்பதில்லை. இவர், வெளி வரும் ஒழுங்கில் பகுதி பகுதியாகவே புதினங்களை எழுதினார். இந்த முறை, ஒவ்வொரு வெளியீட் டையும் வாசித்து முடித்ததும் அடுத்த வெளியீட்டை எதிர்பார்த்திருக்கும் ஆவலைத் தூண்டும் படி எழுத வசதியானது, குறிப்பிடத்தக்க படைப்புகள்.

Pin It