பொதுவுடைமை இயக்க மூத்த கவிஞர்களுள் கே.சி.எஸ். அருணாசலம் (1921-1999) குறிப்பிடத் தக்கவர். புதுக்கவிதையின் புது வெள்ளத்தில் மூழ்கித் திசைமாறிவிடாமலும், அதே சமயத்தில் மரபுச் சகதியில் மூழ்கி விடாமலும் கவிதையின் ஜீவனை வெளிப்படுத்திக் காட்டுபவர் கே.சி.எஸ். தன்னுடைய கவிதையை மனிதகுல தீயசக்திகளை அழிக்கும் போர்வாளாக கே.சி.எஸ். கருதினார்.

1937இல் கம்யூனிஸ்ட் தலைவர்களான பி.கே.ராம சாமி முயற்சியாலும், ஜீவானந்தம், பாலதண்டாயுதம் போன்றோரின் வழிகாட்டுதலாலும் பொள்ளாச்சியில் ‘தீவிர வாலிபர் சங்கம்’ உருவாயிற்று. இச்சங்கத்தின் உறுப்பினராக கே.சி.எஸ். இணைந்து தன் பொது வாழ்விற்கு அடியெடுத்து வைத்தார். இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் எஸ்.வி.காட்டே, கேரளத்தின் மிகப் பெரிய தத்துவ ஆசானாகப் போற்றப் பெற்ற தாமோதரன், என்.சி. சேகர், பி.ராமமூர்த்தி போன் றோர்களின் வகுப்புகள் தீவிர வாலிபர் சங்கத்தில் நடத்தப்பட்டன. இதில் கலந்து கொண்ட கே.சி.எஸ். குறுகிய நோக்கங்களுக்கு இடமில்லாமல் மனம் விசாலமடைந்து பேதங்கள் பற்றிய சிந்தனை மட்டு மல்லாமல் மக்களின் நலம், அவர்கள் அனுபவித்து வரும் கொடுமைகள் ஆகியவை பற்றிய மனிதநேயச் சிந்தனைகள் கவிஞர் மனதில் வளர்ந்தன.

கே.சி.எஸ். அருணாசலம் படைப்புகள்

கே.சி.எஸ். அருணாசலம் எழுதிய கவிதை களையும், சிறுகதைகளையும் மட்டுமே நூல்களாக அச்சேற்றியுள்ளார். நாடகத்தை நூலாக வெளியிட வில்லை என்பது ஓர் இழப்பே ஆகும். அவருடைய படைப்புகளில் கவிதைத் தொகுதிகள் இரண்டு

1. கவிதை என் கைவாள் (1965), 2. பாட்டு வராத குயில் (1985).

கவிதைகளில் ஆளுமை

பொதுவுடைமைக் கொள்கைகளில் அதிக ஈடு பாடு கொண்ட கே.சி.எஸ். தன்னுடைய படைப்புகளில் மக்களின் பொதுவான நன்மைக்கும், வளர்ச்சிக்கும் உரிய கருத்துக்களையே கருவாகக் கொண்டுள்ளார். தாய்மொழி மீது இயல்பாகவே மிக்கெழுந்த அன்பே கவிதை எழுதுவதற்குத் துணிச்சலைத் தந்ததாக இவர் ‘கவிதை என் கைவாள்’ என்ற நூலின் முன்னுரையில் கூறியுள்ளார். மேலும் இவர் ஜீவானந்தம் அவர் களோடு பழகிய நட்பும் அவருடைய தாக்கமும் நாவல், சிறுகதை, கவியரங்கக் கவிதைகளிலும், காவியம் படைப்பதிலும் அழுத்தமான தடம் பதித்தவரான தொ.மு.சி. ரகுநாதன் போன்றோரின் ஆளுமையும் இவரது படைப்புகளுக்கும் அடித் தளமாக அமைந்தன.

தலித்திய சிந்தனைகள்

பிறப்பால் எந்தவித உயர்வு தாழ்வும் அறியாத தமிழ் மக்களிடையே வடக்கேயிருந்து வந்த ஆரியம் வருணப் பாகுபாட்டைப் புகுத்தியது. தமிழகத்தில் தலையெடுத்து வந்த ஆதிக்க சக்திகள் குறுநில மன்னர்கள் மற்றும் குருமார்களுக்கு இவ்வருணப் பாகுபாடு ஏற்புடைய தத்துவமாக இருந்ததால் அவர்கள் ஆதரவுடன் வருணக் கோட்பாடு தமிழ்ச் சமூகத்தில் மெல்ல மெல்லப் பரவி வேர் கொண்டது.

வருணக் கோட்பாட்டின் வழி இறுகிய சாதி சமூகத்தில் படிநிலை ஏற்றத்தாழ்வுகளை உருவாக் கியது. இப்படி நிலைகளில் கடைநிலையாக ஒரு பகுதி மக்களைத் தனியே ஒதுக்கி வைத்து அவர்களைத் தீண்டத்தகாதோர் என ஆக்கியதே சாதியத்தின் மிகக் கோர வடிவமாகும். தீண்டாமை, சாதியத்தின் வெளிப்பாடு. பொதுவுடைமைக் கொள்கைகளுள் ஒன்று தீண்டாமை எதிர்ப்பு. சமத்துவத்தை விரும்பிய கே.சி.எஸ். சமுதாயம், முழுமையான சுதந்திரமான விடுதலை அடைய வேண்டுமெனில் தீண்டாமை இச்சமூகத்தை விட்டு அடியோடு அகலவேண்டு மெனத் தன் கவிதை வாயிலாகக் குரல் கொடுத்தார்.

சமூகத்தில் தீண்டாமை புரியும் சதிராட்டங் களைக் கண்டு உள்ளம் கொதித்தெழுந்த கே.சி.எஸ்.

“பேதங்கள் என்னும்

பேய்மாய வில்லை

சாதிப் பிசாசானது

சதிராட விட்டு

வேடிக்கை பார்க்கும்

வினைதீர வில்லை” (கவிதை என் கைவாள், ப.67)

என்று ‘பாரதிக்கு அழைப்பு’ என்ற தலைப்பில் சாதி பேதங்கள் களையப் பாடுபட்ட பாரதியை மீண்டும் பிறப்பெடுக்க வேண்டுகிறார். தீண்டாமைப் பேய்க்கு முடிவுகட்ட நினைத்த பாரதி அதற்கு ஏற்ற ஆக்கப் பணிகளைச் செய்தார். ஆனால் இன்றும் சமூகத்தில் தீண்டாமை மாறவில்லை என்பது வருத்தத்திற்குரியது.

கீழ்வெண்மணிக் கொடுமை

தாழ்த்தப்பட்டோருக்கான கொடுமைகள் சமூகத்தில் எங்கோ ஓர் மூலையில் அரங்கேறிக் கொண்டு தான் இருக்கிறது என்பதற்குச் சான்றாக கீழ்வெண்மணியில் சாதிவெறி பிடித்தவர்கள் தாழ்த்தப்பட்டவர்களைக் குடும்பம் குடும்பமாகக் குடிசையோடு எரித்த வரலாற்றுக் கறையைத் தன் கவிதையில் பதிவு செய்து தன் உணர்வை வெளிப் படுத்துகிறார்.

“கீழ்வெண் மணியின் அழுகுரலை

கேட்டிங் கழுதோர் எத்தனைபேர்

சேரிப்புறத்தே ஒதுக்குண்டு

சிறுமைச் சகதியில் உழல்கின்ற

ஆயிரம் ஆண்டு கொடுமையிதன்

ஆணிவேர் தன்னை அசைத்தாயோ” (பாட்டு வராத குயில், 46)

தீண்டாமைக் கொடுமைகள் களைய இச்சமூகம் சிந்தித்ததா என்றும் வெறிபிடித்த மனித விலங்கைத் தண்டித்ததா என்றும் மனித உள்ளங்களை நோக்கிக் கேள்விகளைத் தொடுக்கிறார். சேரிகள் இந்நாட்டின் அவமானச் சின்னங்கள், பாவத்தின் பட்டயங்கள், நம் பாரதத்தின் அவக்கேடு என்றும் உள்ளம் கொதிக்கிறார்.

ஊமைக்குயிலாய் கே.சி.எஸ்.

இச்சமூக அவலநிலையினால் தனக்குக் கவிதை எழுதத் தோணவில்லை என்றும், தான் ஊமைக் குயிலாய் இப்போது மாறிவிட்டேன் என்றும் கூறி, சமூக நடப்புகளை வெளிப்படுத்துகிறார்.

“சாதிவேறு பாடுகள்கூறி

சண்டை நடக்கிறது - உங்கள்

மண்டை உடைகிறது.

சமய ஞானிகள் பேரைச் சொல்லி

தலைகள் உருள்கிறது - நூறு

கொலைகள் விழுகிறது”

உண்ண உணவும், நீரும் தேடி அலைந்து வறுமைக்கு இடமாக மக்கள் வாழ்வு உள்ள நிலையில் வளமான எதிர்கால வாழ்வைப் பற்றி எண்ணாது மனித இனத்தை அழிக்கும் சாதி வெறி பிடித்து அதற்குத் துணைபோகும் மக்களின் அறிவு, மயக்க நிலையில் மூடிக் கிடக்கிறதே என்று எண்ணும்போது தனக்கு எவ்வாறு பாட்டு வரும் என்று கூறி, தான் ஊமைக்குயிலாய் மாறியதற்குக் காரணம் கூறுகிறார்.

சமூகத்தில் சாதி மதப் பாம்புகள்

மனித இனத்தால் கொடியதாக எண்ணப் படும் பாம்புகூட மனித இனத்தோடு ஒப்பிடும் போது தன் இனம் பெருமையுடையது என்று வாதிடுவதான காட்சியை கே.சி.எஸ். நம்முன் நிறுத்துகிறார்.

“அண்டி நெருங்காமல் அடைக்கும் தடையாகிக்

கண்ட விடமெல்லாம் கடித்துக் குடிகெடுக்கும்

சாதி மதப் பாம்பு தமிழ்க் கவிஞா உன்னுடைய

வீதியிலே நீ வாழும் வீட்டினிலே உள்ளதடா” (பாட்டு வராத குயில், 96)

என்கிறது பாம்பு. அதன் வாதத்திலும் உண்மை யுள்ளது. மனிதன் தன் தாழ்வுக்குக் காரணமான கூறுபாடுகளை ஒழிக்க வேண்டும். மானிடம் தலை நிமிர்ந்து நின்று வாழ வேண்டும். இந்தக் குறிக்கோளை அடையக் கவிதைகளைக் கருவியாக்குகிறார் கே.சி.எஸ்.

ஏழைகளின் விடியல்

கவிஞரது கவிதைக் கண்ணோட்டம் அவருடைய லட்சியம் என்ன என்பதைத் தெளிவுபடுத்துகிறது. இச்சமூகம் பல்வேறு அடிமைத் தளையிலிருந்து விடுதலை அடைய வேண்டும். யாருடைய வாழ்வு விடியல் அடைய வேண்டும் என்ற கேள்வி எழும் போது கவிஞர் தரும் விடை பின்வருமாறு அமைகிறது.

“குனிந்து வணங்கியவன்

கூனல் விழுந்தவன்

பணிந்து கைகட்டிப்

பயந்து நின்றவன்”

இவர்களுக்காகத்தான் கவிஞர்கள் கவிதை எழுத வேண்டுமென அறைகூவல் விடுக்கிறார். பணிந்து பயந்து நின்றவர்கள் தங்கள் வாழ்வின் விடியலைத் தாங்களே ஏற்படுத்த வேண்டுமென்று,

“நமக்குண்ணே ஒரு

பொழுது விடியணும் - அது

நம்மாலேதான் நடந்து முடியணும்

சூரியன் கழுத்தில் துண்டைப் போட்டு

சுண்டி யிழுக் கோணும்

சும்மா நின்னா புண்ணியம் இல்லை இதை

கண்டு நடக்கோணும்” (பாட்டு வராத குயில், 22)

தம்மை அடிமைப்படுத்தும் இனம் வலிமை யுடையதாய் இருந்தாலும் போராட்டக் குணத்தால் அவ்வினத்தை அடிதெரியாமல் தகர்க்க வேண்டும் எனத் தன்னை சோசலிசப் படைப்பாளியாக அடை யாளம் காட்டுகிறார்.

கவிஞன் என்பவன் தனித்து இருப்பவன் அல்லன். அவன் தன் விருப்பத்திற்காகவோ அல்லது பிறர் பொழுதைக் கழிப்பதற்காகவோ படைப்பைப் படைப்பது இல்லை. அவனுக்கென்று சமூக அக்கறை உண்டு. எல்லோரும் இன்புற்று வாழ வேண்டும், மக்கள் நல்வாழ்வு பெற வேண்டும், சமூக நிலைமைகள் கீழிருந்து உயர வேண்டும் என்ற நல்லெண்ணத்தைக் கொண்டிருப்பான். வருங்காலத்தில் நம்பிக்கை வைத்து தற்கால வாழ்வின் அவலங்களையும், சிறுமைகளையும், சீரழிவுகளையும், சிதைவுகளையும் சுட்டிக்காட்டுவதில் கருத்தாகக் கொண்டுள்ளவனே உண்மையான படைப்பாளி. இவர்களுடைய மனிதநேயமும், உயிர்களிடத்து இவர்கள் கொண்டுள்ள அன்பும் இவர்களது எழுத்துக்களில் ஒளிரும்.

அத்தகைய மனிதநேயக் கவிஞரான கே.சி.எஸ். சமூகத்தைப்பற்றி முழுமையாகச் சிந்தித்தும் அது எவ்வாறு நிகழ்காலத்தில் உள்ளது என்றும் அதைச் சிறந்த முறையில் மாற்றுவது குறித்தும் தன் கவிதையின் நோக்கமாகவும் கடமையாகவும் கொண்டார்.

Pin It