மோரியர் என்ற சொல் சங்க இலக்கியத்தில் சில இடங்களில் பயின்று வருகிறது. இச்சொல்லின் சமஸ்கிருத வடிவம் ‘மௌரிய' என்பதாகும். மௌரிய, மௌரிய அரசன் அசோகன் ஆகியவை வரலாற்று மாணவர்களுக்கு நன்கு தெரிந்த தொடர்கள். மோரியர் என்ற சொல் தெரியாது. இவ்வடிவம் வரும் பாடல் வரிகளைக் காண்போம். அகநானூற்றில் பாடல் 69-இல் மோரியர் என்ற சொல்லாட்சி வந்துள்ளது. இப்பாடலில் தலைவன் கடந்து சென்ற மலையைப்(வரை) பற்றிக் கூறுகையில், "விண்பொரு நெடுவரை இயல்தேர் மோரியர் / பொன்புனை திகிரி திரிதரக் குறைத்த/அறையிகந் தகன்றனர் ஆயினும்" என்று வருகிறது. மோரியர்களின் தேர் விண்ணைத் தொடும் அளவு நெடிதாக இருந்தது. அத்தேரின் உருளைகள் பொன்னால் அலங்கரிக்கப்பட்டு இருந்தன. அவை செல்லும் பொருட்டு மலையைக் குறைத்தனர். அத்தகைய மலையைத் தலைவன் கடந்து சென்றான்.

அகநானூற்றில் இன்னொரு பாடலில் கிட்டத்தட்ட இதே பொருளில் மோரியர் என்ற சொல்லாட்சி வந்துள்ளது. "முரண்மிகு வடுகர் முன்னுற மோரியர் / தென்றிசை மாதிரம் முன்னிய வரவிற்கு / விண்ணுற வோங்கிய பனியிருங் குன்றத்து / ஒண்கதிர்த் திகிரி யுருளிய குறைத்த" (அகம்-281) இங்கும் அதே கருத்து வலியுறுத்தப்படுகிறது. மற்றொரு பாடலிலும் (அகம்-251). மோரியர் பாறையைக் குடைந்து பாதையமைத்து தென்திசை நோக்கி வந்த செய்தி குறிப்பிடப்பட்டுள்ளது. "மாகெழுதானை வம்ப மோரியர் / புனைதேர் நேமி யுருளிய குறைத்த / இலங்கு வெள்ளருவிய அறை". இவை அகநானூற்றில் வரும் செய்திகள். புறநானூற்றில் கூட மோரியர் என்ற சொல் வந்துள்ளது.

மௌரிய என்ற சொல் பிராகிருத மொழியில் மோரிய என்றாகிறது. சமஸ்கிருத ஒளகாரம் பிராகிருத மொழியில் ஓகாரமாகத் திரியும். .இந்த இலக்கண விதிப்படியே மௌரிய என்பது மோரிய என்றாகிறது. இனி, ஒளகாரம் ஓகாரமாகத் திரிந்து வரும் வேறுசில தமிழ்ச் சொற்களைப் பார்ப்போம்.

கௌசிக > கோசிக

சிலம்பில் கோசிகன் என்ற கதைமாந்தர் வருகிறார். கோவலனும் கண்ணகியும் மதுரைக்குச் செல்லும் வழியில் கோசிகன் கோவலனைச் சந்திக்கிறான். மாதவி தந்த கடிதத்தைக் கோவலனிடம் கொடுக்கிறான். மாதவியின் நிலை குறித்தும், கோவலனின் பெற்றோரின் நிலை குறித்தும் உரைக்கிறான். இந்தச் சிறிய பங்குதான் கோசிகனுக்கு உள்ளது.

இங்கே கோசிகன் என்ற சொல் பிராகிருதத்திலிருந்து தமிழுக்கு வந்தது.கோசிகன் என்ற பாத்திரம் இராமாயணத்திலும் வருகிறது. இச்சொல்லிலும் ஒளகாரம் ஓகாரமானதைக் காணலாம்.இதுவும் பிராகிருதச் சொல்லே.

கௌதம் என்ற பெயர்ச்சொல்லும் ‘கோதம' என்று மாறுகிறது. கம்பராமாயணத்தில் "கோதமனை வேண்ட மற்று அவை தவிர்த்து" (அகலிகை-23-1) என்று வரும் இவ்வரியில் ஒளகாரம் ஓகாரமாகி கௌதம் என்பது கோதமன் என்றானது. பிராகிருத மொழியில் ‘கோயம என்ற வடிவம் கிடைக்கிறது. கௌசிக (கோசிக), கௌதம (கோயம) ஆகிய சொற்கள் சமணம், புத்தம், இந்து சமயங்களில் வழங்குவனவாகும். கௌசல்யா என்பதும் கோசலை என்று மாறுவதை நோக்குக.

மௌனம் > மோனம்

மோனம் என்ற சொல்லும் பிராகிருதச் சொல்லே. மௌனம் என்ற சொல் நாவடக்கம், பேச்சின்மை, யோகம் போன்ற பல பொருளில் வந்துள்ளது. சித்தர்கள் பாடல்களில் மோனம் என்ற சொல் அடிக்கடி பயன்படுத்தப்படுகிறது. "மோனம் என்பது ஞான வரம்பு" என்பது கொன்றை வேந்தன். மெய்ஞானத்தின் உச்சம் மௌனம் ஆகும். "மோனம் கைவந்தவர்க்கு சித்தியும் கைகூடும்" என்பர் திருமூலர். "மோனநிலையில் முத்தி உண்டாம் என்றே" என்று இடைக்காட்டுச் சித்தர் தெரிவிக்கிறார். சித்தர்கள் சமஸ்கிருத மூலச் சொல்லைத் தவிர்த்து பிராகிருத வடிவத்தைப் பயன்படுத்தினர்.

மோனமும் பிராகிருதச் சொல்லே. ஒளகாரம் ஓகாரமாவதை இங்கேயும் காணலாம்; யோகம் போன்ற புதிய பொருளிலும் இச்சொல்லைப் பயன்படுத்துகின்றனர்.

கௌபீன > கோவண

               கோவணம் என்ற தமிழ்ச்சொல் இடைக்காலத் தமிழில் மிகுதியாகக் கையாளப்பட்டது. பக்திப் பாடல்களில் சிவபெருமான் கோவணதாரியாக பல இடங்களில் சித்திரிக்கப்படுகிறார்

"கோணன் மாமதி சூடியோர் கோவணம் நாட்டில் வாழ்க்கை"

(அப்பர் தேவா.5.05.1) என்றும் "துன்னம்பெய் கோவணமாக் கொள்ளுமது என்னேடீ" (திருவா.திருச்சாழல்-2) என்றும் இடைக்கால தமிழில் கோவணம் என்ற சொல் வந்துள்ளது. திருமுறை இலக்கியத்தில் பலமுறை இச்சொல் பயன்படுத்தப்படுகிறது.

கோவணம் கோமணமாகவும் பேச்சுத் தமிழில் வழங்குகிறது. கோவணன்,கோவணவன் என்றெல்லாம் புதுப்பெயர்கள் சிவனைக் குறிக்க படைக்கப்பட்டன காண்க.

சௌமியா > சோமி

சௌமியா என்ற சொல் பிராகிருத விதிப்படி சோமி என்றானது. "சத்தியும் சோமியும் பார்மகளும்" (திருவா.திருப்பொற்சுண்ணம்) என்ற பாடல்வரியில் சௌமி > சோமி என்று மாறியது. சோமி என்றால் மென்மையான என்பது பொருள். நன்மை பயக்கக்கூடிய கடவுள் சோமி ஆகும்

ஒளஷதம் > ஓடதி

 ஒளஷதம் என்ற சொல் மருந்து என்று பொருள்படும். இச்சொல்லிலுள்ள ஒளகாரம் கெட்டு 'ஓடதி' என்று தமிழில் வழங்கியுள்ளது. (காண்க: கதிரைவேற்பிள்ளை அகராதி, பக் 1126). தற்காலத் தமிழில் ஒளடதம் என்றும் வழங்கப்படுகிறது. பாலியிலும் ஓஸத ‘மருந்து' ஓசதி 'மருந்து செடிகள்' என்றும் சொற்கள் வழங்குகின்றன.

பிராகிருத மொழியில் ‘ஓஸட' (osadha) என்று வழங்குகிறது. இங்கும் ஒளகாரம் ஓகாரமாவதைக் காண முடிகிறது.

கௌரி > கவுரி

கௌரி என்ற சொல் கவுரி என்று சிலம்பில் வருகிறது. இங்கு ஒளகாரம் ‘அவு’ என்றாகிறது. மேற்கண்ட சொற்களுக்கு மாறாக இம்மாற்றம் நிகழ்ந்துள்ளது.

சௌந்தர்ய > சுந்தர

சௌந்தர்ய என்ற சொல்லில் உள்ள ஒளகான் தமிழில் உகரமாக மாறி சுந்தர என்றானது. பிராகிருத மொழியிலும் சுந்தேர என்று மாறி ஒளகாரம் உகரமானதைக் காண முடிகிறது. "சுந்தரச் சுண்ணத் துகளடு அளைஇ / சிந்துபு பரிந்த செழும்பூ... சேக்கை" (சிலப்-அந்திமாலை:42). என்று வருகிறது. அழகான சுண்ணப் பொடியுடன் பூக்களும் சிந்திக் கிடந்த மலரணை என்ற சூழலில் சுந்தர என்ற சொல் பயன்படுத்தப்படுகிறது. பிற்காலத்தில் அதிக அளவில் பயன்படுத்தப் படுகிறது. சவுந்தர என்ற சொல்லும் காணப்படுகிறது. இங்கு சௌ என்பது ‘அவு' மாற்றம் அடைந்தது. கௌரி என்ற சொல் கவுரி என்றானதைப் போல. ஒளகாரம் பழந்தமிழில் ஒரு சில சொற்களில் மட்டுமே வந்துள்ளது. பிராகிருத மொழியில் சமஸ்கிருத ஒளகாரம் ஓவாகவும், அவு என்றும், உவாகவும் மாற்றம் அடைகிறது. வரருசியின் பிராகிருத இலக்கணத்தில் இதற்கான விதிகள் உள்ளன.

- ஆ.கார்த்திகேயன்

Pin It