அண்மையில் வெளி வந்த ஒரு படைப்பிலக்கியத்தைப் படிக்கும் போது, ‘எட்டும் அறிவினில் ஆணுக்கிங்கே பெண் - இளைப்பில்லை காணென்று கும்மியடி’ என்னும் மகாகவியின் பாடல் அடிகளே நினைவிற்கு வந்தன.

neythalini book‘கழுதை தேய்ந்து கட்டெறும்பு ஆகியது’ என்றொரு சொலவச்சொல் இருக்கின்றது. இது கழுதையையும் கட்டெறும்பையும் ஒப்பிடவில்லை. பெருமை மிக்க ஒன்றாக இருந்தது இந்த அளவுக்குக் குறைந்துவிட்டதே என இயற்கை வளம், நாட்டின் நிலை, மக்களின் நிலை என எல்லாவற்றையும் குறிக்கும்.

சங்க காலத்தில் பல பெண்பாற் புலவர்கள் பாடிய பாடல்கள் காணப்படுகின்றன. இடைக்காலத்தில் பெண்கல்வி என்ன ஆனது என்றே தெரியவில்லை. அருமருந்து போல ஆண்டாளும் காரைக்கால் அம்மையாரும் மட்டும் தெரிகின்றனர்.

ஆண், பெண் என்னும் வேறுபாடு இல்லாமல் பெரும்பான்மையான உழைக்கும் மக்களுக்குக் கல்வி கற்கும் வாய்ப்பே மறுக்கப்பட்டன. இராமன் ஆண்டால் என்ன? இராவணன் ஆண்டால் என்ன? என்று உழைக்கும் மக்கள் தங்கள் கருமமே கண்ணாக இருந்த காலத்தில் நாட்டை ஆண்ட அந்நியர்கள் கல்வி கற்கவும் ஒரு வாய்ப்பைக் கொடுத்தார்கள். அதுவும் எல்லோருக்கும் கிடைத்தது என்று கூற முடியாது இருப்பினும் மக்களிடையே ஒரு விழிப்புணர்வைக் கொடுத்தது.

நாடு விடுதலை பெற்ற பிறகு கல்விக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது. தமிழகச் சூழலில் படிக்காத மேதை என்று போற்றப்படும் காமராசர் முதலமைச்சர் ஆனபிறகு பட்டி - தொட்டிகள் எங்கும் பள்ளிக்கூடங்கள் தோன்றின. கல்வி கற்போரின் எண்ணிக்கையும் வளர்ந்தது. தொடர்ந்து வந்த திராவிட ஆட்சிகளிலும் கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் பல்கிப் பெருகி உள்ளன.

அறுபது - எழுபது ஆண்டுகளுக்கு முன்னர்ப் பள்ளிக்கூடங்களில் படிக்கும் பெண் பிள்ளைகளை விரல் விட்டு எண்ணி விடலாம். தற்போது பள்ளிகள், கல்லூரிகள், பல்கலைக் கழகங்களில் மகளிரையே அதிகமாகப் பார்க்க முடிகின்றது. பெண் கல்வியை வற்புறுத்திய முற்போக்குச் சிந்தனையாளர்களின் முகங்களை எல்லாம் அவர்கள் முகங்களில் பார்க்க முடிகின்றது.

மகாகவியின் பாடல் அடிகள் நினைவுக்கு வந்தமை போன்று அந்தப் படைப்பிலக்கியத்தைப் படிக்கும்போது, ‘மூடத்தனத்தின் முடை நாற்றம் வீசுகின்ற - காடு மணக்கவரும் கற்பூரப் பெட்டகமே’ என்னும் பாவேந்தரின் பாடல் அடிகளும் நினைவிற்கு வந்தன.

‘இதுவும் கடந்து போகும்’ என்பது அந்தப் படைப்பிலக்கியத்தின் பெயர். கரோனாக் காலத்தில் அது பற்றி எழுதப்பட்ட படைப்பிலக்கியம். ஒரு புதினமும் ஆறு சிறுகதைகளும் நூலுள் அடங்கி உள்ளன. புதினம் அமெரிக்காவைக் கதைக் களமாகக் கொண்டுள்ளது. ஆறு சிறுகதைகளில் ஒன்று (மாற்றம்) நிறவெறியால் அமெரிக்காவில் நடந்த ஒரு கொடூரமான கொலை பற்றியது. மற்றைய சிறுகதைகளின் களம் இந்தியா, கரோனாவைப் பற்றியவை.

கரோனாத் தொற்றைப் பற்றி நிறையச் செய்திகள் ஊடகங்கள் வழி வந்து குவிந்து கொண்டிருக்கின்றன. கரோனாத் தொற்று முதல், இரண்டாம் அலைகள் வந்து ஓயப் போகும் நேரத்தில் மூன்றாவது அலையாகக் கரோனாவின் வளர்ச்சியாக ஓமைக்கிரான் பரவிக் கொண்டிருப்பதாகச் செய்திகள் வருகின்றன.

கரோனாவின் தாயகம் சீனா என்றால் ஓமைக்கிரானின் தாயகம் ஆப்பிரிக்கா என்கின்றார்கள். தகவல் தொடர்பு வளர்ந்த பிறகு உள்ளங்கையில் உலகம் என்று பெருமையாகப் பேசிக் கொள்கிறோம். இவ்வாறே இந்தக் கரோனாத் தொற்றின் உள்ளங்கையில் உலகம் மாட்டிக் கொண்டு விழி பிதுங்குவது நன்றாகத் தெரிகின்றது.

கரோனாத் தொற்றுப் பரவியபோது நாட்டுச் சாயம், மதச் சாயம் எல்லாம் பூசிக்கொண்டு நோயைத் தடுக்க முயலாமையைப் படைப்பாளர் நெய்தலினி வேறுபாடு காட்டாமல் வெளிப்படுத்துகின்றார். கரோனாத் தொற்றுத் தோன்றிய சீனாவில் அதன் பரவல் வெகுவாகத் தடுக்கப்பட்டுவிட்டது. அமெரிக்கா, இந்தியா போன்ற நாடுகளில் தும்பை விட்டு வாலைப் பிடித்த கதையாகக் கரோனாத் தொற்றுப் பரவியதைப் படைப்பாளர் மிகவும் நேர்த்தியாக விளக்குகின்றார்.

கணினிப் பொறியாளரான படைப்பாளர் நெய்தலினி தன் பணியோடு கரோனாப் பரவலையும் மக்கள், ஆளும் வர்க்கங்களின் மனநிலையையும் புதினத்திலும் சிறுகதைகளிலும் படிமமாகக் காட்சிப் படுத்துகின்றார். எந்த இடத்திலும் கரோனாவைப் பற்றி விளக்கும் போது விருப்பு, வெறுப்பின்றி எழுதுகின்றார். அவரைப் பற்றி அதிகம் தெரிய வாய்ப்பில்லை என்றாலும் அவருடைய எழுத்துகள் ஒரு முற்போக்குச் சிந்தனையாளர் என்பதைக் காட்டிக் கொடுக்கின்றன.

எவ்வளவுதான் உள்ளங்கையின் உலகமாக வளர்ச்சி அடைந்தாலும் அறிவியல் வளர்ச்சியால் அண்டங்களை அளந்தாலும் உடும்பைப் போல மானுடத்தைப் பற்றிக் கொண்டுள்ள நிறவெறி மத வெறி, சாதி வெறி, மொழி வெறி போன்றவை அவ்வளவு எளிதில் நீங்கக் கூடியவை அல்ல. எனவேதான் படைப்பாளர் நெய்தலினி ‘இதுவும் கடந்து போகும்’ என்னும் புதினத்தின் கதை மாந்தர்களைப் புதுமையாகப் படைத்துக் காட்டுகின்றார்.

கரோனாக் காலப் பணியாளர் சிலரைத் தவிர, மற்றைய கதை மாந்தர்கள் கரோனாத் தொற்றால் இறந்து போனவர்கள். படைப்பாளர் நெய்தலினி அவர்களை நேர்த்தியாக விளக்கிச் செல்வதைப் படிக்கும் போது பிணம் என்று எழுத எழுதுகோல் மறுக்கின்றது. வாழும்போது அவர்களிடம் சில குறைகள் இருந்தாலும் மரணம் அடைந்த பிறகு மனிதாபிமானத்தோடு சமுதாயத்தைப் பார்க்கின்றார்கள். வாழ்ந்த காலத்துப் பிற்போக்குத் தனங்களை எண்ணி வருத்தப்படுகின்றார்கள்.

உயிரோடு இருக்கும் போது அவர்களிடமிருந்து அவ்வளவு நகைச்சுவை வெளிப்பட்டிருக்காது. புதினம் முழுவதும் அவ்வளவு நகைச்சுவைகள் கொட்டிக் கிடக்கின்றன. அவ்வாறே அவர்களிடமிருந்து காய்தல், உவத்தல் இன்றிப் பொதுச் சிந்தனைகளும் வெளிப்படுகின்றன. வெறித்தனமான வலதுசாரிச் சிந்தனைகள் பெரும்பாலான உலக மக்களுக்கு உயிரோடு இருக்கும்போது விடுபட வாய்ப்பே இல்லை என்பதைப் படைப்பாளர் சொல்லாமல் சொல்லவில்லை; தெளிவாகவே சொல்கின்றார். கரோனா சமத்துவத்தை அமெரிக்கா போன்ற நாடுகளுக்கு மாபெரும் சவக்குழி வழியும் இந்தியாவுக்குக் கங்கை வழியும் காட்டிப் பாடம் எடுத்து விட்டது. இருந்தாலும் மானுடம் திருந்தப் போவதில்லை என்பதையே ‘இதுவும் கடந்து போகும்’ என்னும் புதினத்து வழியும் ‘மாற்றம்’ என்னும் சிறுகதை வழியும் படைப்பாளர் நெய்தலினி வெளிப்படுத்துகின்றார்.

புதினத்தின் தொடக்கத்தில் கரோனாவால் இறந்த ஜார்ஜ் என்னும் கருப்பினத்தவரும் லூசி என்னும் வெள்ளை இனப் பெண்ணும் பிணவறையில் பேசிக் கொள்கிறார்கள். அதாவது இறந்த அவர்களின் உடல்கள் முழுமையாக மூடப்பட்டு நிற வேறுபாடு காட்டப்படாமல் ஒன்றன் மேல் ஒன்றாக அடுக்கி வைக்கப்பட்டுள்ளன. ‘நீங்க white-ஆ’ எனக் கருப்பின ஜார்ஜ் கேட்க, ‘நாம எல்லோருமே இப்ப white-தான்' (ப.43) என லூசி சிரித்துக் கொண்டே கூறுகின்றார். சவப் பெட்டியில் அடைக்கப்பட்டு வெள்ளைத் துணியால் பெட்டி சுற்றப்பட்டுள்ளதை இப்படி நகைச் சுவையோடு லூசி குறிப்பிடுகின்றார்.

ஆண்களை விட மகளிர் சற்றுத் தூக்கலாக முற்போக்குச் சிந்தனை உள்ளவர்கள். நிறத்தாலும், இனத்தாலும் உயர்ந்தவர்களாகக் கருதப்படும் மகளிர் பலர் நிறத்தாலும், இனத்தாலும் இழிவாகக் கருதப்பட்ட ஆடவரை வாழ்க்கை இணையராக ஏற்றுக் கொண்டுள்ளார்கள். இப்படிப்பட்ட முற்போக்குச் சிந்தனையை ஆண்களிடம் அதிகமாகப் பார்க்க முடியாது. சான்றுக்குப் பூதக் கண்ணாடி கொண்டு தேட வேண்டியதில்லை. தற்போதைய அமெரிக்கத் துணை அதிபர் கமலா ஹாரிஸ் குடும்பமே சான்றாகும்.

இப்படிப்பட்ட முற்போக்குச் சிந்தனை லூசி என்னும் வெள்ளை இனப் பெண்ணிடமும் இருந்துள்ளது. கருப்பர் இன ஜார்ஜை இவர் விரும்பி உள்ளார். அவர் காதல் அந்த இளைஞருக்குத் தெரியாது. ஒருதலைக் காதலாகவே இருந்துள்ளது. இருவர் வாழ்க்கையும் வேறுவேறு திசையில் சென்றுவிட்டது. கரோனாத் தொற்று அவர்களின் உடலை ஒன்று சேர்த்துவிட்டது. ஜார்ஜின் கடந்த கால வாழ்க்கையை அறிந்த லூசி தன் ஒருதலைக் காதலரை நிஜ வாழ்வில் அறிந்து கொள்கிறார். வெளிக் காட்டிக் கொள்ளவில்லை. இருந்தாலும் இணைய முடியவில்லை. சவப் பெட்டியாக மறுபடியும் இணைந்து பிரிகின்றார்கள்.

படைப்பாளர் நெய்தலினி மிகவும் நேர்த்தியாகத் தன் முதல் படைப்பிலேயே கதையைச் செம்மையாக அமைத்துச் செல்கின்றார். கருப்பின ஜார்ஜ், வெள்ளை இன லூசி உரையாடல்வழிப் பல செய்திகளை அறிந்து கொள்ள முடிகின்றது. பிண அறையில் அடுக்கி வைக்கப்பட்டுள்ள சவப் பெட்டிகளைச் சவக் குழிக்கு ஏற்றிச் செல்லும் அடுக்கும் களப் பணியாளர்கள் உரையாடல் வழியும் கரோனாப் பாதிப்பு, மக்கள் நிலை, கரோனாவை ஆளும் வர்க்கம் எதிர் கொண்ட விதம் போன்ற பலவற்றையும் அறிந்து கொள்ள முடிகின்றது.

கரோனாத் தொற்றைக் கண்டறிவதிலும் குணப்படுத்துவதிலும் கூட இன - நிறப் பாகுபாட்டைக் காட்டியதையும் அதனால் தான் பிணவறைக்கு வந்ததையும் கருப்பின ஜார்ஜ் கூறும்போது எங்கும் இதே நிலைதானா என்று எண்ணத் தோன்றுகின்றது. ‘புதிய கரோனா வைரஸ் பாகுபாடு காட்டாது. ஆனால் பொது சுகாதாரத்தில் முன் வரிசையில் உள்ள மருத்துவர்கள், நோயைக் கையாள்வதில் இனப் பாகுபாட்டையும் வர்க்கப் பாகுபாட்டையும் காட்டுகின்றனர்’ (ப.46) இதற்காக வெள்ளை இன லூசி வருத்தப்படுகின்றார்.

சவப் பெட்டிகளைப் பிணவறையில் அடுக்கும் இருவரில் ஒருவர் அமெரிக்க அதிபருக்கு ஆதரவாகக் காணப்படுகின்றார். இன்னொருவர் கரோனாவை விரட்ட அதிபர் ட்ரம்ப் செய்யும் வேடிக்கைகளைக் குறிப்பிடுகின்றார். அதிபரும் அவர் ஆதரவாளரும் மூக்கையும் வாயையும் மூடவில்லை. உலகச் சுகாதார நிறுவனம் கூறும் வழிமுறைகளை அவர் பின்பற்றாததோடு Hydroxychloroquine  போட்டால் கரோனா வராது என்று பிரச்சாரம் செய்தார். இந்தியாவிலிருந்து கெடுபிடியாக மாத்திரைகளை வாங்கி அவையும் வீணாகப் போய் விட்டனவாம்.

புதினத்தில் இவற்றை எல்லாம் படிக்கும்போது நம் நாட்டிலும் அந்த நாட்டுக்கு எந்த விதத்திலும் குறைவில்லாமல், ஏன் சற்றுத் தூக்கலாகவே கரோனாவைத் துரத்தும் பணிகள் நடைபெற்றன. விளக்கேற்றுதல், கைத் தட்டுதல், கரோனாவே போய் விடு என்று வேள்வி இயற்றுதல், பசுவின் சிறுநீரைக் குடித்தல், சாணியை உடம்பில் தடவிக் கொள்ளுதல் போன்ற வைத்தியங்களும் செய்யப்பட்டன.

நல்லவேளை; மூன்று வேளாண் சட்டங்கள் போல இல்லாமல் உடனடியாக ஆளும் வர்க்கம் தன் மனதை மாற்றிக் கொண்டு அறிவியலையும் கொஞ்சம் கேட்டுக் கொண்டது. இல்லாவிட்டால் கங்கையில் பிணங்கள் மிதந்த நிலை மாறி, கங்கையே சவக் குழியாக மாறி இருக்கும். தில்லி முழுவதுமே மயானமாக மாறி இருக்கும்.

சமத்துவபுரம் என்பது போலச் சமத்துவ புதைகுழிக்கு எடுத்துச் செல்லுவதற்காக ஜார்ஜ், லூசி போன்றோர் அடைக்கப்பட்டுள்ள சவப்பெட்டிகளை எடுக்கப் பிணவறைக்கு அதிகாரிகள் வருகின்றார்கள். அவர்களின் உரையாடல் வழி வல்லரசு நாடாகக் கூறப்படும் அமெரிக்காவின் பல உண்மைத் தோற்றங்கள் வெளிப்படுகின்றன.

கரோனாத் தொற்று சீனாவின் வூஹான் என்னும் நகரிலிருந்து பரவியது உண்மைதான். அவர்கள் நோய் நாடி அதன் முதலையும் நாடி இறப்பு விகிதத்தைக் குறைத்து விட்டார்கள். ஓர் அதிகாரியின் பேச்சு அமெரிக்காவின் முகத்தைக் காட்டுகின்றது.

‘இந்த நோய் என்ன அமெரிக்காவுலையா மொதல்ல வந்திச்சி? சீனாவுலதான மொதல்ல வந்திச்சி. அங்க அந்த மக்கள் எவ்வளவு கஷ்டப்பட்டாங்கன்னு பாத்தோமில்ல. எத்தன போர் செத்துப் போனாங்க. நமக்கு முழுசா மூணு மாதம் இருந்துச்சே சார். நம்ம மக்களப் பாதுகாக்க நமக்குக் கிடச்ச கோல்டன் பீரியட். நம்ம அரசாங்கம் சரியாய்ப் பயன்படுத்தி இருந்தா இவ்வளவு பேர் செத்திருப்பாங்களா?’ நிக்கோலஸ்.

இந்தக் கருத்து அமெரிக்கா உட்பட இந்தியா போன்ற மற்ற நாடுகளுக்கும் பொருந்தும். இன்னொரு முக்கியமான செய்தி, இந்தியாவுக்கும் பொருந்துவதைப் படைப்பாளர் நெய்தலினி பதிவு செய்துள்ளார். இந்தியாவைச் சேர்ந்த சில பெரும்பான்மை உழைக்கும் மக்களால் தீண்டத்தகாதவர்கள் இந்தக் கரோனாத் தொற்றுக்காலத்தில் தங்கள் முன்னோர் கட்டிக் காத்த சமூக இடைவெளியைப் பெருமையாக பேசிக் கொண்டார்கள். அவர்கள் முகத்திரையைக் கிழிப்பது போல பின்வரும் உரையாடலைப் பதிவு செய்துள்ள ‘இதுவும் கடந்து போகும்’ என்னும் நூலின் படைப்பாளரைப் பாராட்ட வேண்டும்.

‘என்ன சார் நோய் பரவாமல் தடுக்கச் சமூக இடைவெளி தான் ஒரே வழின்னு சொல்றாங்க’ என்று சிரித்தார் தியோடர்.

‘தனிமனித இடைவெளின்னு சொல்லுங்க சார். அதுதான் கொரோனாவை பரவாமல் தடுக்கும். சமூக இடைவெளிதான் மனுஷனோட எல்லா கஷ்டங்களுக்கும் காரணம்’ நிக்கோலஸ் (ப.80).

உழுவோரையும் உழுவிப்போரையும் ஒன்றாக இணைப்பவர்களால் சமூக இடைவெளியையும் தனிமனித இடைவெளியையும் ஒன்றாக்கிப் பார்க்க அதிகச் சிக்கல் இருக்காது. சமூக இடைவெளி விரும்பிகள் தாமாக மண்ணில் உழைத்துப் பார்க்க வேண்டும்; நெய்து பார்க்க வேண்டும், சாலைகளையும் கழிவறைகளையும் சுத்தம் செய்து பார்க்க வேண்டும்.

சமநீதியுடன் வாழச் சமூக நீதி - சமூக நெருக்கம் வேண்டும். கரோனாக் கட்டுப்பாட்டுக்குத் தனிமனித இடைவெளி வேண்டும். மிகவும் திறமைசாலிகளாக நினைத்துச் சமூக இடைவெளியையும், தனிமனித இடைவெளியையும், ஒப்பிட்டவர்களையும் நினைக்கும்போது, ‘மோதி மிதித்து விடு பாப்பா-அவர்-முகத்தில் உமிழ்ந்து விடு பாப்பா’ என்னும் மகாகவியின் பாடல் அடிகளே நினைவிற்கு வந்தன.

இந்தியாவில் இருக்கும் வருணப் பாகுபாட்டையும் அமெரிக்காவில் இருக்கும் நிறவெறியையும் படைப்பாளர் நெய்தலினி ஒரே கல்லில் இரண்டு மாங்காயாக வீழ்த்துகின்றார்.

‘இதுவும் கடந்து போகும்’ என்னும் புதினத்தின் அடுத்த நிகழ்வு தொடர்கின்றது. நிஜ வாழ்க்கையில் இணைய முடியாத வெள்ளை இன லூசி, கருப்பின ஜார்ஜ் சவப்பெட்டிகள் பிரிக்கப்படுகின்றன. ஆதரவற்றோரை அடக்கம் செய்யும் மாபெரும் சவக்குழிக்கு ஜார்ஜின் சவப்பெட்டி எடுத்துச் செல்லப்படுகின்றது. அந்த இரு சவப் பெட்டிகளின் பிரிவு வேதனை புதினத்தைப் படிப்போரையும் மன வேதனைக்குள் ஆழ்த்தும்.

ஜார்ஜின் சவப்பெட்டி ஏற்றப்பட்ட வண்டியில் டியாகோ என்னும் ஆடவர் அடைக்கப்பட்ட சவப்பெட்டியும் ஹலிமா என்னும் பெண் அடைக்கப்பட்ட சவப்பெட்டியும் அடுக்கி வைக்கப்பட்டிருக்கின்றன. லூசியின் பிரிவை நினைத்து அழும் ஜார்ஜைக் கிண்டல் செய்கின்றார்கள்.

கொம்பு மாடு முட்டி நுடம் ஆனவர்களை விட மொட்டை மாடு முட்டி நுடம் ஆனவர்களே அதிகம் எனக் கிராமங்களில் பேசிக் கொள்வார்கள். அப்படித்தான் இந்தக் கரோனாத் தொற்றின் பாதிப்பும் உலகம் முழுவதிலும் நிகழ்ந்துள்ளது.

கூலி வேலை செய்து பிழைத்தவர்கள், சிறு - குறு தொழில் செய்தவர்கள் என எல்லா நிலையிலும் வாழ்ந்த மக்களின் பொருளாதாரத்தைக் கரோனா புரட்டிப் போட்டுச் சின்னா பின்னமாகச் சிதைத்துவிட்டது. ஆனால் கார்பரேட் நிறுவனங்களின் வருமானம், அரசாங்கத்தின் ஜிஎஸ்டி வரி மட்டும் பல மடங்கு உயர்ந்ததாம்! படைப்பாளரும் இந்நிலையைப் பதிவு செய்துள்ளார்.

தொடர் சிகிச்சையில் இருந்த டியாகோ பொது முடக்கத்தால் சிகிச்சை பெற முடியாமல் இறந்து விட்டார். எப்படி இறந்தாலும் அவரையும் கரோனா இறப்பாகவே கொள்ள வேண்டும் என ஹலிமா கிண்டல் செய்கிறார்.

இப்படி கதை பேசியபடியே எல்லாப் பேதங்களையும் மறக்கிறார்கள். ஏற்கனவே பத்து லட்சம் பேருக்கு மேல் அடக்கம் செய்யப்பட்ட இடத்தில் அடுக்கி வைக்கின்றார்கள்.

இப்படிப் புதினத்தை முடிக்கும் நெய்தலினி கரோனாக் காலக் கொடுமைகள் மட்டுமல்லாமல் பல கூத்துகளையும் எதார்த்தமாகப் பதிவு செய்துள்ளார். மேலும் ஆறு சிறுகதைகளும் பின்னிணைப்பாக இடம் பெற்றுள்ளன. பெரும்பாலானவை கரோனாக் கால இந்தியாவைப் பற்றியவை.

கரோனா பரவியபோது திடீரென்று பொது முடக்கம் அறிவிக்கப்பட்டதால் உழைக்கும் மக்கள் அடைந்த இன்னலுக்கு அளவே இல்லை. 1744 கிலோ மீட்டர் நடந்து தன் ஊரில் உயிர் நீத்த பெண்ணின் கதையைப் படித்தபோது உள்ளம் உறைந்துவிட்டது.

ஆக்சிஜன் சிலிண்டர் கிடைக்காமல் இறந்தவர்கள், கரோனாவால் இறந்து மயானத்தில் எரிக்க இடம் இல்லாமல் கங்கையில் தூக்கி வீசப்பட்ட பிணங்கள், ஆன்மீகத்திற்கும் அறிவியலுக்கும் நடந்த போட்டி எனக் கரோனாக் கால உலகைப் படைப்பாளர் நெய்தலினி தெளிவாகவே காட்சிப்படுத்தி உள்ளார். சவுத் விஷன் பதிப்பகம் (2021) வெளியிட்டுள்ளது. அனைவரும் படிக்க வேண்டிய நூல் ஒப்பிலக்கிய ஆய்வு போல இருவேறு நாடு, சமுதாயத்தை ஒப்பிட்டு அறிய உதவும் அருமையான படைப்பு.

இப்படைப்புத் தொகுப்பிலுள்ள ‘இதுவும் கடந்து போகும்’ என்னும் புதினமும் ஆறு சிறுகதைகளும் கரோனாவைப் பற்றியவையாக இருந்தாலும் படைப்பாளர் நெய்தலினி பல அறிந்து கொள்ள வேண்டிய செய்திகளையும் இயல்பாகவே பதிவு செய்துள்ளார்.

இந்தக் கரோனாத் தொற்றுப் பல எதார்த்த உலக நிலையையும் வெளிப்படுத்தி உள்ளது. பெரும்பாலும் உடல் உழைப்பு இல்லாமல் கண்டவற்றையும் உண்டு மருந்து மாத்திரைகளுடன் வாழ்ந்த அமெரிக்கர்களையும் ஐரோப்பியர்களையுமே அதிகமாகக் கொன்று குவித்துள்ளது.

‘எது எப்படி இருந்தாலும் இந்தக் கொரோனாத் தொற்று எல்லோருக்கும் பல படிப்பினைகள குடுத்திருக்கு. இராணுவத்துக்கே குடுக்குற முக்கியத்துவத்த விடப் பொது சுகாதாரத்துக்கு அதிக முக்கியத்துவம் குடுக்கணும்னு தலையில அடிச்சி சொல்லி இருக்கு’ (ப.134). படைப்பாளர் சொல்வது உண்மைதான். ஆனால் எல்லோருக்கும் படிப்பினை என்று சொல்ல முடியாது. இந்தக் கரோனாக் காலத்திலும் இராணுவத் தளவாடங்கள் வாங்க உலக நாடுகள் பல்லாயிரம் கோடிகளைச் செலவிட்டுள்ளன.

பின்னணிப் பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியன் போன்று நூற்றுக்கணக்கான இசைக் கலைஞர்கள் இந்தக் கரோனாத் தொற்றால் இறந்துள்ளார்கள். எல்லோரையும் விட மருத்துவம் பார்த்த மருத்துவர்கள், பணியாளர்களின் இறப்பு நெஞ்சை அதிகமாகக் கனக்க வைக்கின்றது.

இந்தக் கரோனாக் காலக் கொடுமைகளில் மிகவும் கொடியது ஜார்ஜ் பிளாய்டு என்னும் கருப்பினத் தோழரின் கொலை. ஆசிரியர் உரை (ப.16) புதினம் (பக்.142-143), சிறுகதை (பக்.167-174) எனப் பல இடங்களில் அந்தக் கொடூரக் கொலையை நெய்தலினி பதிவு செய்துள்ளார்.

‘பிளாய்ட்ட குப்புறப் படுக்கப் போட்டு, கழுத்தில முட்டியால அழுத்தி இருக்காரு Chauvin-னு ஒரு வெள்ளை இன அதிகாரி. பாவம், பிளாய்ட I can’t breathe; I can’t breathe-னு’ 20 தடவ சொல்லி இருக்காரு. ஒன்பது நிமிஷத்துக்கும் மேல அழுத்தினா என்னாகும்? பாவம், அந்த எடத்திலேயே பிளாய்ட் செத்துட்டாரு’ (ப.143).

வருணம், நிறம், சாதி, மதம், மொழி போன்றவையே இப்படிப்பட்ட வன்கொடுமைகளுக்குக் காரணமாக இருக்கின்றன. அண்மையில் ஜெய்பீம் என்னும் சூரியாவின் திரைப்படம் ஏற்படுத்திய அதிர்வலை நினைவுக்கு வருகின்றது. இதில் ஒரு கூத்து என்னவென்றால் படத்தை வரவேற்க வேண்டியவர்களே சாதி வெறி பிடித்துத் தூற்றுகின்றார்கள்.

ஒரு அநீதி நடந்தால் அது மானுடத்திற்கு எதிரானதா என்று பார்க்க வேண்டும். இடது சாரிச் சிந்தனை உள்ளவர்கள் தான் எதிர்க்க வேண்டும் என்பதில்லை. ஒரு ஆறுதல் தரும் செய்தி என்னவென்றால் Black lives Matter  எனப் பாதகை தாங்கிய பேரணியில் நிற வேறுபாடு இல்லாமல் மக்கள் கலந்து கொண்டுள்ளார்கள்.

இன்னொன்றையும் படைப்பாளர் நெய்தலினி பதிவு செய்துள்ளார். பெரும்பாலும் கருப்புப் பணம் வைத்திருப்பவர்கள், பொருளைப் பதுக்குபவர்கள், இயற்கை வளங்களைப் கொள்ளை அடிக்கும் பெரும் முதலாளிகள், வங்கிகளில் மோசடி செய்பவர்கள், கடத்தல்காரர்கள் எந்த வருணத்தவர், எந்த நிறத்தவர் என்பதைப் பட்டியலிட்டுப் பார்க்க வேண்டும். ஆனால் எல்லாவற்றுக்கும் Black என்பதே அடைமொழியாக வருகின்றது.

‘மனுஷங்களும் அவங்களோட உரிமைகள அரசியல் கட்சிங்ககிட்டையும் கட்சிகள பின்னால இருந்து இயக்குற பெரிய மொதலாளிங்ககிட்டையும் பறிகொடுத்துட்டு, வறுமையில் வாழுறாங்க.

Black mail, Black money, Black list, Black market. இதமாதிரி எல்லா சட்ட விரோதமான விஷயங்களையும் கருப்பு நிறத்தோட சேர்த்து அடையாளப் படுத்தினதோடப் பின்னணியும் இதுதா எமிலி’ (ப.169).

சநாதனத்தை விரும்பும் இந்தியாவில் வாழும் ஆரியரும் செவ்விந்தியரைக் கொன்று குவித்து அமெரிக்காவைக் கட்டமைத்து நிறவெறி கொண்டுள்ள இந்தோ - ஐரோப்பியரும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகளே - பங்காளிகளே - ஐரோப்பியர்களே. அவர்களிடம் வேறு எதை எதிர்பார்க்க முடியும்?

கல்வியும் வேலை வாய்ப்பும் மறுக்கப்பட்டால் எந்த நாட்டு மக்களையும் மூக்கணங்கயிறு குத்தி, காயடித்த காளையைப் போல ஒரு பூண்டில் கட்டிப் போடலாம். எத்தனை நாளாக இருந்தாலும் தன் வலிமை தெரியாமல் அந்தக் காளை அப்படியே நிற்கும். உலகக் குத்துச் சண்டை வீரர்

முகமது அலியின் மொழியை ஊடகவியலாளர் மருதன் பதிவு செய்துள்ளதை இந்த இடத்தில் குறிப்பிட வேண்டும்.

‘நீங்கள் எவ்வளவு உயரமாக வளர்ந்து நின்றாலும் எவ்வளவு பலமிக்கவராக இருந்தாலும் வீழ்ந்துதான் ஆக வேண்டும். ஏனென்றால் உங்கள் விளையாட்டு பிழையானது. சட்டத்துக்கு விரோதமானது. மனிதத் தன்மையற்றது, (இந்து - தமிழ், 22.12.2021, ப.9).

வருணம், நிற வேறுபாட்டைக் காட்டி விளிம்பு நிலையில் வீழ்த்தப்பட்ட மக்கள் போதைக்கும் பாலியல் வன்கொடுமைக்கும் உலகம் முழுவதிலும் உட்படுத்தப்படுகின்றார்கள். பதின்பருவத்தில் சிறுமிகள் கருவுறுகின்றார்கள். இப்படிப்பட்ட உலகம் முழுவதும் நடக்கக் கூடிய கொடுமைகளை எல்லாம் படைப்பாளர் நெய்தலினி புதினத்திலும் சிறுகதைகளிலும் ஆங்காங்கே சுட்டிக் காட்டுகின்றார்.

அமெரிக்க அதிபராக இருந்த டிரம்ப் கரோனாவுக்குச் சீனா வைரஸ் என்று பெயரை வைத்தது புதியதன்று. பதினான்காம் நூற்றாண்டில் பிளேக் நோய் பரவியபோது யூத மக்களால் ஏற்பட்டது என்று அவர்களைக் கொன்றதை படைப்பாளர் பதிவு செய்துள்ளார் (ப.31). இந்தியாவில் முதலலை பரவியபோது தப்லீத் ஜமாத் இயக்கத்தின் மீது பழியைப் போட்டார்கள். ஆனால் கங்கையில் பிணங்கள் மிகுந்தமைக்குக் கும்பமேளாவில் லட்சக் கணக்கானோர் கூடிய கூட்டமே காரணம் என்பதை மறந்து விடுகின்றார்கள்.

இதுவும் கடந்து போகும் என்னும் படைப்பு போலச் சில வெளிவந்துள்ளன. இன்னும் நிறைய படைப்புகளும் ஆய்வுகளும் விரைவில் வெளிவரும். கரோனாவால் உலகம் முழுவதிலும் மக்கள் பட்ட இன்னல்களை அறிந்து கொள்ளலாம்.

நூல் பற்றிப் பல சான்றோர்கள் கருத்துரை வழங்கி உள்ளார்கள். ச.தமிழ்ச்செல்வன் பொருள் பொதிந்த கருத்துகள் நிறைந்த அணிந்துரை அளித்துள்ளார். படைப்பாளரிடம் முதுமை தெரியாவிட்டாலும் படைப்பில் முதிர்ச்சி தெரிகின்றது.

தனக்கு முற்போக்குச் சிந்தனைகளை ஊட்டிய பொதுவுடைமையாளர்கள், இந்தியச் சாதி வெறியை ஒழிக்கப் போராடிய அண்ணல் அம்பேத்கர், ஆப்பிரிக்காவில் நிறவெறிக்கு எதிராகப் போராடிய நெல்சன் மண்டேலா, அமெரிக்காவில் போராடிய மார்ட்டின் லூதர்கிங் போன்றோரும் படைப்புகளில் இடம் பெறுகின்றார்கள்.

‘மொத்தமா மூணுபேர ஒருத்தர் மேல ஒருத்தரா சீட்டுக் கட்டு மாதிரி சேத்துப் படுக்க வச்சிருக்காங்க. இங்க வரதுக்கு முன்னாடி நீ தாழ்வு, நான் உயர்வுன்னு எத்தன மமதையா சுத்தி இருப்போம். மதம், நிறம், வர்க்கம், அழகுன்னு எத்தன விதமா பிரிஞ்சி வாழ்ந்திருப்போம்? இப்ப எங்க போச்சி அந்தத் திமிரெல்லாம்? இவ்வளவு தா சார் மனுஷனோட வாழ்க்க. உயிரோட இருக்குற வரைக்கும் இது புரியாம ஆடுறோம்’(ப.24).

எதார்த்தமான இந்த உரையாடல் கருத்தைப் படிக்கும்போது பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம் பாடல் அடிகளே நினைவிற்கு வந்தன. ‘சித்தர்களும் யோகிகளும் - சிந்தனையில் ஞானிகளும் - புத்தரோடு ஏசுவும் - உத்தமர் காந்தியும் - எத்தனையோ உண்மைகளை - எழுதி எழுதி வச்சாங்க - எல்லாந்தான் படிச்சீங்க - என்ன பண்ணிக் கிழிச்சீங்க?’

‘ஒரு நாள் என்னுடைய நான்கு சிறு குழந்தைகளும் தோலின் நிறத்தினால் அல்லாமல் அவர்களுடைய பண்பினால் மதிக்கப்படுகின்றன சமத்துவம் நிறைந்த நாட்டில் வாழ்வார்கள் என்று எனக்கொரு கனவுண்டு’(ப.150) என்னும் மார்ட்டின் லூதர் கிங் மொழியைப் படிக்கும் போது அவரது கனவுக்குள் காலங் காலமாகக் கருப்பின மக்கள் பட்ட வேதனைகள் எல்லாம் வெளிப்படுகின்றன. நாகரிகம் பற்றிப் பேசும் வெள்ளைத் தோல்கள் உலகம் முழுவதும் பரவி அநாகரிகமாகத்தான் பிற இன மக்களை நடத்துகின்றன.

காலங்காலமாக இந்த உலகம் எத்தனையோ போர்களைக் கண்டிருக்கின்றது. இரண்டு போர்களுக்கு உள்ளங்கையில் உலகமாக இருந்துள்ளது. நினைத்துப் பார்க்க முடியாத அளவிற்கு உலகின் சுற்றுச் சூழல் கெட்டுள்ளது. அதற்கான பின்விளைவுகள் எதிர்காலத்தில் கண்டிப்பாகக் கிடைக்கும். கரோனாவைப் போலவே எதிர்காலத்தில் வரும் இயற்கைக் சீற்றங்களும் நோய்களும் வருணம், நிறம், சாதி, மதம், நாடு, மொழி போன்றவற்றைப் பார்க்கப்போவதில்லை. கரோனா - ‘இதுவும் கடந்து போகும்’. படைப்பாளர் நெய்தலினிக்கு மீண்டும் நெஞ்சம் நிறைந்த வாழ்த்துகள்!

- ச.சுபாஷ் சந்திரபோஸ்

Pin It