உன்கருகிய உடல்
என்கண்ணீராய் கசியுதடா!
நீ வைத்த நெருப்பு
எம்தலையில் எரியுதடா தோழா!
நீ நீறாய் போனாலும்
பூத்தல்லவா கிடக்கிறாய்
நீறு பூத்த நெருப்பாய்.
எரிகிறதே எம் இதயங்கள்

ஆனாலும்...
யார் தலையெரிந்தாலும்
தலைக்கவசமிடும் அரசியல்வாதிகளின்
மூளைகள் மட்டும்
ஐயாயிரம் பாகைகள் தாண்டியும் எரிவதில்லை
இரும்பாய் சிவந்து சிரிக்கிறதே

நெருப்புக்கூட இரக்கமுள்ளது தான்
உன்னைப் பற்றிக் கொண்டதனால்.
அரசியல்வாதிகள் அணைக்கத்தான்
துடிக்கிறார்கள்
வடக்கிலும் தெற்கிலும்.
உன்சாவை அரசியலாக்காதிருந்தால்
நீ பிறந்த பூமியில்
ஈரமிருக்கும்

இருண்டு கிடக்கும் இதயங்கள்
நீயிட்ட நெருப்பிலாவது
உண்மையைத் தேடட்டும்.

சத்தியம் அற்றுப்போன சத்தியாக்கிரகங்கள்
ஆழ்மனதில் கிடக்கும் ஆயுத மனநோய்கள்
இனவெறியாடும் வைரசுகளைக் கொழுத்த
உன்தலையில் தீயிட்டாயே.
இனி எத்தனை மனங்கள்
எரிமலைகளைக் காவப்போகின்றன.

அன்னை ஈழம் ஈன்ற மகன் சிவகுமாரன்
தன்தலையில் தீயிட்டான்
நிலம் வெடித்துப் பிணங்களிலும் பிறந்தது
விடுதலை நெருப்பு.

தமிழக அன்னையின் மகன் முத்துக்குமார்
இட்ட தீயில்
இலங்கையும் இந்தியாவும் எரியுமா?

வடக்கத்தைய இராமன் சவாரிசெய்ய
தெற்கத்தைய அனுமான்களும்
சேவகம் செய்ய
குரங்குக்கூட்டமும் தேவை.
போகப்போகிறீகளா?
முத்துக்குமாரைத்தாண்டி.

ஆயுதங்களுடன் ஆரியன்
இலங்கை வந்தது இன்று நேற்றல்ல
இராமனில் இருந்து இதிகாசமாய் தொடர்கிறது.
இலங்கை எரிகிறது.
இவர்கள் ஏறிப்போனது
தமிழ்நாட்டு முதுகில்தான்.
முண்டு கொடுத்து முண்டு கொடுத்தே
முதுகிழந்து போகிறதே தமிழ்சாதி.

நீ எரிந்த உடலின் இதயத்தில் இருந்து
பிறந்து வந்த பூகம்பம்
பிளக்கும் இப்பூமியை.

முத்தாய்
ஈழமக்கள் எம்இதயத்தின் சொத்தாய்
விழுந்த முத்துக்குமரா!
நீ என்றும் அழகு குன்றாக குமரன்தான்.

நீ எரிந்தவன் அல்ல
ஏற்றியவன்.
நீ விழுந்தவனல்லன்
விதைத்தவன்.
நீ எம்மக்களுக்காக யாசித்தவனல்லன்
வேள்வி நெருப்பை சுவாசித்தவன்
என்றும் எம்மால் நேசிக்கப்படுவாய்

நீ மண்ணை நேசித்த
மக்களை நேசித்தவன்.
மக்களால் நேசிக்கப்படுவாய்.

மனிதநேயனே முத்துக்குமரா!
நீ முத்தாய் எறிந்த
நெருப்புமுத்துக்களை ஏந்தி
எரியும் எம் இதயங்களில் இருந்து
இன்னும் எத்தனை எத்தனை எரிமலைகள்….

மக்களை நேசித்த மன்னவ
உயிருள்ள காதுகளில்
உன்குரல் கேட்டிருக்கும்
மீண்டும் வா
இனி எரியோம்
எரிப்போம் பொய்மைகளை.

(தமிழகத்தில் எம் ஈழத்தமிழ் உறவுகளுக்காய் உன்னதமான தன் உயிரை ஈர்ந்து தீயையே தின்று எம்மிதயங்களில் தீராது நிற்கும் தியாகி முத்துக்குமாருக்கு ஈழத்தமிழர் சார்பில் எம் வீரவணக்கங்கள்)

நோர்வே நக்கீரா இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
Pin It