புதிய நூற்றாண்டு மனிதர்கள் அமைதியிழந்து தடுமாறித் தவிப்பது இன்றைய எதார்த்தமாக உள்ளது. இன்று, “போர், இனவெறி மற்றும் பொருளாதார அநீதி” போன்றவை உலக அளவில் பரவலாகி வருகிறது. ‘தாராளமயமாதல்’, ‘உலக மயமாதல்’ போன்ற பொருளாதாரக் கொள்கை களின் நடைமுறைகள் மூன்றாம் உலக நாடுகளைப் பல வகைகளிலும் உருக்குலைத்துச் சிதைத்து வருகின்றன. புதிய உலகின் வரலாற்றுப் போக்கை அடையாளப்படுத்தும் விதத்தில் பிடல் காஸ்ட்ரோ தன்னுடைய சமூக அறிவியல் கண்ணோட்டத்தில் முன்வைத்த கருத்துக்களையும், மதிப்பீடுகளையும் இந்த எளிய நூல் தன்னுள் அடக்கியிருக்கிறது. பிடல் காஸ்ட்ரோவுடன் நிகழ்த்திய ஒரு பேட்டியை முதன்மையாக்கி அதனுடன் அவருடைய உரைகளை இணைத்து ஒரு தனிநூலாக இது வடிவமைக்கப் பட்டிருக்கிறது. இது, பலவிதமான நாடுகளில், பல வகையான சூழல்களில் அவர் நிகழ்த்திய பதினான்கு உரைகளின் தொகுப்பாக வடிவமைக்கப்பட்டிருக் கிறது. அவருடைய உரைகள் கடந்த 2000-ஆம் ஆண்டு ஜனவரி 28-ஆம் தேதி முதல் 2001-ஆம் ஆண்டு நவம்பர் 2-ஆம் தேதி வரை அவரால் நிகழ்த்தப்பட்டவை. சென்ற பத்தாண்டுகளில் மூன்றாம் உலக நாடுகளில் நிகழ்ந்துவரும் அமைதி யில்லாத நிலைமைகளை முன்கூட்டியே தெரிவித்த மதிப்பீடுகளின் தொகுப்பாக இது உள்ளது. அறிவியல், தொழில்நுட்பத்தின் வளர்ச்சி இன்றைய மனிதனின் உடல் சார்ந்த, மனம் சார்ந்த உழைப்பி லிருந்து அவனை அந்நியப்படுத்தி அவனை ஓர் எந்திரமாக மாற்றி வருகிறது. அவனே ஒரு விற்பனைப் பொருளாக மாறி வருகிறான். வரலாற்றின் தொடர்ச்சியில் அவன் வளர்ந்து வந்த கலாச்சாரப் பண்பாட்டுத் தன்மைகளை அவன் இழந்து வருகிறான்.

மனிதனுக்கு எதிரான அவனுடைய புதிய சூழ்நிலைமைகளிலிருந்து அவனை மீட்டு அவனுக் கான ஒரு சமுதாயத்தை உருவாக்கும் வகையில் நடைமுறை சார்ந்த கருத்துக்களை பிடல் காஸ்ட்ரோ இந்த நூலில் முன் வைக்கிறார். அதைச் சாத்தியப் படுத்துவதற்கான நடைமுறைகள் கியூபாவில் எப்படியெல்லாம் பின்பற்றப்படுகின்றன என்பதை அவர் தெளிவுடன் விளக்குகிறார்.

சோவியத் யூனியனின் தகர்வுக்குப் பிறகு, சோசலிசம் என்ற வார்த்தை முன்பு எப்போதையும் விட அதிக அளவில் பொருள் உடையதாகக் கூறி அவர் அதை விளக்குகிறார். அவருடைய நாட்டில் அதிகாரம் மக்களிடமிருந்தே மக்களால் செலுத்தப் படுகிறது என்பதைக் குறிப்பிடுகிறார். “கியூபாவில் ஒரு ஒருமைப்படுத்தப்பட்ட நாடும் கட்சியும் உள்ளது. அந்தக் கட்சி வழிகாட்டுகிறது. கட்சி தேர்வு செய்வதோ, நியமனம் செய்வதோ இல்லை. மக்கள் பொது அரங்குகளில் திரளுகிறார்கள். வேட்பாளர்களை நியமனம் செய்கிறார்கள்” என்று அவர் தன்னுடைய நாட்டின் அடிப்படையையும், நடைமுறையையும் தெளிவுபடுத்துகிறார். இந்த நடைமுறையைப் பல கட்சிமுறை பற்றிய நடைமுறைகளோடு ஒப்பிட்டுக் காட்டுகிறார்.

‘தாராளமயமாதல்’, ‘உலகமயமாதல்’ போன்றவை “வளர்ச்சியடைந்த முதலாளித்துவ அமைப்பு பின்னர் நவீன ஏகாதிபத்தியம் எழுச்சி பெற வழிவகுத்தது” என்பதைக் குறிப்பிடும் பிடல் காஸ்ட்ரோ தொடர்ந்து குறிப்பிடுகிறார். “ஒரு வேளை, அதனுடன் இந்தப் பூமியில் உள்ள மனித வாழ்க்கை தாக்குப் பிடிக்க உள்ள இயற்கையான நிலைமைகளை அழித்துவிடும்” என்று அவர் கருதுகிறார். நடைமுறை உலகில் பல வகையான நெருக்கடிகளுக்கு உள்ளாகிவரும் மூன்றாம் உலக நாடுகளைப் போல அல்லாமல் கியூபாவின் தனித்தன்மையை அவருடைய மக்கள் எப்படிப் பாதுகாக்கிறார்கள் என்பதைத் தெளிவுபடுத்து கிறார். அதைப்பற்றிக் குறிப்பிடுகையில் அவர் பெருமிதத்துடன் இப்படிக் கூறுகிறார். “சோவியத் யூனியன் மற்றும் சோசலிச முகாமின் வீழ்ச்சிக்குப் பிறகு கியூபா நிலைக்காது என்று ஒவ்வொருவரும் நினைத்தார்கள். சர்வதேச நிறுவனம் அல்லது உலக வங்கி இல்லாமல், கடன் இல்லாமல் இரட்டை முற்றுகைகளையும், எங்கள் நாட்டின் மீது எப்போதும் வலிமையாக உள்ள அரசால் தொடுக்கப்பட்ட பொருளாதார மற்றும் அரசியல் போர்களை எப்படிச் சமாளிக்க முடிந்தது என்று ஒருவர் நிச்சயமாக வியக்கலாம். நாங்கள் சமாளித் தோம்.” இதைத் தெளிவுபடுத்தி சோசலிசத்தின் தொடர்ச்சியான வளர்ச்சியை நிறுவும் விதத்தில் இந்த நூல் அமைந்துள்ளது. இந்த நம்பிக்கையை உருவாக்க அவர் மேற்கொண்ட நடவடிக்கைகளை அறிவியல் சமூகக் கண்ணோட்டத்தில் அவர் விளக்குகிறார்.

"இன்றைய உலகமயமாதல் சூழலில் கியூபாவின் தனித்தன்மையைக் காப்பாற்றிக்கொள்ள அவர்கள் மேற்கொள்ளும் நடைமுறைகளைப்பற்றிய கருத்தை அவர் இந்தச் சூழலில் தெளிவுபடுத்துகிறார்: “இன்றைய அராஜக உலகம் அல்லது அதன் தத்துவத்தைக் கியூபா பின்பற்ற வேண்டும் என்ற முட்டாள்தனத்தை நாங்கள் முயற்சிக்கவில்லை. எங்களது சொந்த உண்மை நிலைகளை மட்டுமே நாங்கள் பின்பற்றுகிறோம். அதே நேரத்தில் எங்களது வளர்ச்சிக்கும் நிலைத்த தன்மைக்கான உரிமைக்கும் மூன்றாம் உலக நாடுகள் என்று சொல்லப்படும் மற்ற நாடுகளுடன் சேர்ந்து போராடுகிறோம்.”

வறுமையும், நோயும், தாண்டவமாடும் லத்தீன் அமெரிக்கா, கரீபியன், ஆப்பிரிக்க நாடுகளுக்கு ஆயிரக்கணக்கான தங்களது மருத்துவர்களைக் கட்டணம் எதுவும் இல்லாமல் அனுப்பி வைத்துச் சேவை செய்து வருவதை பிடல் காஸ்ட்ரோ அடக்கமாகத் தெரிவிக்கிறார். மூன்றாம் உலக நாடுகளின் வளர்ச்சிக்கு உதவும் வகையில் கல்வித் திட்டங்களை வடிவமைத்து உதவித்தொகை வழங்கி அவர்களைக் கல்வி பயிலச் செய்து வரும் தங்களது நடைமுறைகளையும் குறிப்பிடுகிறார். இந்த விதத்தில், இந்த நூலில் உள்ள பேட்டியில் கியூபாவின் தனித்தன்மை மிகுந்த நிலைப்பாட்டை விரிவான தளங்களில் விளக்குகிறார். இது, உலக மயமாதல் சூழலில் அதைப் புறக்கணித்துவிட்டுத் தன்னியல் இயங்கிவரும் கியூபாவின் வியக்கத் தகுந்த சாதனையைப் புலப்படுத்துகிறது.

அதே சமயத்தில் மூன்றாம் உலக நாடுகளின் பின்தங்கிய நிலைமைகளைக் குறித்து அவர் வருத்தப் படுகிறார். அந்த நாடுகளில் நிலவிவரும் பொதுவான தன்மைகளை இனம் காட்டுகிறார். வாழும் உரிமை, சுகாதாரம், கல்வி, சுத்தமான குடிநீர், உணவு, குடியிருப்பு, வேலை, எதிர்காலத்திற்கான நம்பிக்கை, குழந்தைகளின் எதிர்காலம் போன்ற அடிப்படை உரிமைகள் மறுக்கப்படுவதைக் குறிப்பிடுகிறார்.

புதிய உலகில் பின்தங்கிய நாடுகளில் உலக மயமாதல் கொள்கையின் நடைமுறை என்னென்ன தீமைகளை விளைவித்து மனித குலத்தைச் சீர் குலைக்கிறது என்பதை பிடல்காஸ்ட்ரோ தன்னுடைய பேட்டியின் வாயிலாகத் தெளிவுபடுத்துகிறார்.

வளர்ச்சியடைந்த நாடுகள் எந்தெந்த விதங்களையெல்லாம் மூன்றாம் உலக நாடுகளின் இயற்கை வளங்களைக் கொள்ளையடிக்கின்றன என்பதைக் குறிப்பிடுகிறார். நவீன காலனி யாதிக்கத்தை அவர் அடையாளம் காட்டுகிறார் : “இயற்கை அழிக்கப்படுகிறது. நம் கண்முன்னே பருவநிலை மாறுகிறது. குடிநீர் அதிகமாகப் பற்றாக் குறையாகிறது. அசுத்தப்படுகிறது. கடல் உணவு வளங்கள் காலியாக்கப்படுகிறது. மீண்டும் புதுப்பிக்க முடியாத வளங்கள் வீணாக்கப்படு கின்றன. இவையெல்லாம் ஆடம்பரம் அல்லது முக்கியத்துவமற்ற வகையில் செய்யப்படுகின்றன.” புதிய உலகமயமாதல் கொள்கை மனிதகுலத்தை அழிவுக்குக் கொண்டு செல்லும் போக்கை அவர் இனம் காண்கிறார்.

நவீன கலாசாரப் பரவலின் விளைவாக ஒழுங்கமைக்கப்பட்டு வளர்ந்து வந்த கலாசாரப் பண்பாட்டு நிலைமைகள் எப்படியெல்லாம் தகர்க்கப்படுகின்றன என்பதைத் தகுந்த புள்ளி விவரங்களோடு அவர் குறிப்பிடுகிறார். மூன்றாம் உலக நாடுகளில் தனிநபர் வருமானம் எந்த வகைகளிலெல்லாம் குறைந்து அங்குள்ள மக்கள் வாழ்க்கையில் பின்னுக்குத் தள்ளப்படுகிறார்கள் என்பதைத் தகுந்த ஆதாரங்களோடு அடையாளப் படுத்துகிறார். மூன்றாம் உலக நாடுகளில் பரவலாகிவரும் எய்ட்ஸ் நோய்களால் நிகழும் இறப்புக்களின் பட்டியலை வெளியிடுகிறார். தாய் மார்களின் இறப்பு விகிதங்கள் அதிகரித்துள்ளதைச் சுட்டிக்காட்டுகிறார். குறுகிய காலத்திலேயே ஊட்டச்சத்து இல்லாமையாலும் உடல்நலக் குறை பாடுகளாலும் இறந்து போகும் குழந்தைகளின் எண்ணிக்கை கூடி வருவதைக் கணக்கிட்டுக் காட்டு கிறார். மலேரியா போன்ற கொடிய நோய்களின் காரணமாக ஆண்டுதோறும் இலட்சக்கணக்கான குழந்தைகள் இறந்து போவதைக் குறிப்பிடுகிறார்.

அதே சமயத்தில், வளர்ச்சியடைந்த நாடுகள் இராணுவத்திற்காகச் செலவிடும் தொகைகளைக் கணக்கிடுகிறார். நவீன காலனியாதிக்கத்திற்குள் மறைந்திருக்கும் உள்ளடக்கம் மனிதகுலத்தை அழிக்கக்கூடிய ஒன்றாக இருப்பதைத் தகுந்த ஆதாரங்களோடு அவர் முன்வைக்கிறார்.

உலக அமைதிக்காக, இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு நிறுவப்பட்ட ஐக்கிய நாடுகள் சபையின் கொள்கைகளையும், நடைமுறைகளையும் இனம் காண்கிறார். இன்று, உலகின் பல நாடுகளில் நிலவிவரும் போர்கள் அவருடைய கருத்துக்களை உண்மையாக்குகின்றன.

மூன்றாம் உலக நாடுகளில் உருவாகும் அறிவியல் வல்லுநர்களையெல்லாம் அமெரிக்கா எப்படியெல்லாம் கவர்ந்து இழுத்துக் கொள்கிறது என்பதைப் புள்ளி விவரங்களோடு அவர் குறிப்பிடு கிறார். உலக வங்கியையும், சர்வதேச நிதி நிறுவனத் தையும் அமெரிக்கா எப்படித் தன்னுடைய கட்டுப் பாட்டில் வைத்திருக்கிறது என்பதை அவர் விளக்கு கிறார். கடன் சுமைகளால் மூன்றாவது உலக நாடுகள் எப்படியெல்லாம் சிரமங்களுக்கு உள்ளாகித் தவிக்கின்றன என்பதையும் அவர் விவரிக்கிறார்.

இனவாத, பாசிச ஆப்பிரிக்காவில் இன, பாசிச இராணுவத்திற்கு எதிராக கியூபாவைச் சேர்ந்த இராணுவ வீரர்கள் தாங்களே முன் வந்து போரிட்ட நிகழ்ச்சிகளை நினைவுபடுத்து கிறார். அல்லல்படும் நாடுகளுக்குக் கியூபாவின் தொண்டர்கள் சென்று அந்த நாட்டு மக்களுக்கு உதவி செய்ததை அவர் இப்படிக் குறிப்பிடுகிறார்: “எங்கெல்லாம் எங்கள் சர்வதேசத் தொண்டர்கள் சென்றார்களோ அங்கெல்லாம் தங்கள் கடமையை நிறைவேற்றினார்கள். ஒரு டாலர் கூட முதலீடு செய்யவில்லை. ஒரு சதுர மீட்டர் நிலம் கூடச் சொந்தமில்லை.” அமெரிக்கப் பேரரசின் ஏகாதி பத்திய நோக்கங்களுக்கு எதிராக கியூபாவின் உண்மையான தார்மீக நோக்கத்தை அவர் தெளிவு படுத்துகிறார்.

அதைப் போலவே, நவீன மக்கள் தொடர்பு சாதனங்களைப் பயன்படுத்திப் பரவலான முறையில் இலட்சக்கணக்கானவர்களுக்குக் கல்வியறிவு வழங்கும் புதிய முறையையும் அவர் விளக்குகிறார். மக்களோடு தொடர்புள்ள எல்லாவிதமான அறிவியல் துறைகளும் அவர்களுக்குக் கற்றுக் கொடுக்கும் தங்களுடைய நடைமுறைகளைத் தெளிவாகவே அவர் விளக்குகிறார். இளைஞர் களுக்கு வேலை வாய்ப்புக்களை ஏற்படுத்திக் கொடுக்கும் திட்டங்களைப்பற்றியும், நடைமுறை களைப் பற்றியும் விரிவாக விளக்குகிறார்.

பின்தங்கிய மூன்றாம் உலக நாடுகளில் குழந்தைகள், பெண்கள், இளைஞர்கள், தொழி லாளர்கள், விவசாயிகள் அவல நிலைமைகளில் வாழ்ந்துகொண்டிருப்பதைச் சுட்டிக்காட்டும் அதே வேளையில் வளர்ச்சியடைந்த வல்லரசு நாடுகளில் வாழும் மக்களோடு ஒப்பீடு செய்கிறார். மூன்றாம் உலக நாடுகளில் அவல நிலைமைகளில் வாழ்ந்து கொண்டிருக்கும் பல தரப்பட்ட மக்களுக்கு கியூபா எப்படியெல்லாம் உதவி அந்த மக்களுக்கு மறு வாழ்வு அளித்து வருவதையும் தகுந்த புள்ளி விவரங்களோடு அவர் தெரிவித்து ஒவ்வொன்றைப் பற்றியும் தெளிவாக விளக்குகிறார்.

மனித குலத்தை மிக உயர்ந்த தளத்தில் வைத்து பிடல் காஸ்ட்ரோ மதிப்பீடு செய்கிறார் :

"எங்கெல்லாம் எங்கள் சர்வதேசத் தொண்டர்கள் சென்றார்களோ அங்கெல்லாம் தங்கள் கடமையை நிறைவேற்றினார்கள்.  ஒரு டாலர் கூட முதலீடு செய்யவில்லை. ஒரு சதுர மீட்டர் நிலம் கூடச் சொந்தமில்லை."

“இனவெறி, இனப்பாகுபாடு மற்றும் வெறுப் புணர்ச்சி ஆகியவை இயற்கையானவை அல்ல; மனித உயிர்களின் இயல்பான உணர்வுப் பிரதி பலிப்பு. மனித சமூகத்தின் வரலாறு முழுவதும் அவை சமூக, கலாசார மற்றும் அரசியல் பிரச்சினை, போர், இராணுவ வெற்றி, அடிமைத்தனம் மற்றும் மிகுந்த சக்தி வாய்ந்தவர்கள் எளியவர்களைத் தனிப்பட்ட அல்லது கூட்டான சுரண்டல் ஆகிய வற்றிலிருந்து பிறந்தவை.”

உலகமயமாதல், தாராளமயமாதல் போன்ற கொள்கைகளும் திட்டங்களும் நடைமுறைக்கு வந்த பின்பு உலகம் முழுவதுமாகப் பல வகையான பிரச்சினைகள், உருவாகத் தொடங்கின. அவற்றில் குறிப்பிடத் தகுந்த இரண்டு நிகழ்வுகளைப்பற்றி பிடல் காஸ்ட்ரோ தன்னுடைய கருத்தைத் தெளிவு படுத்துகிறார்:

“பொருளாதார நெருக்கடி, செப்டம்பர் 11 தாக்குதல் மற்றும் ஆப்கானிஸ்தானத்துக்கு எதிரான போரின் விளைவாக ஏற்பட்டதல்ல; முழுமையான அறியாமை அல்லது உண்மையான காரணங்களின் முயற்சியே இத்தகைய உரிமைகள் கொண்டாடுவது. புதிய தாராளமயம் மற்றும் புதிய தாராள உலக மயம் உலகின்மீது திணிக்கப்பட்ட மற்றும் அரசியல் கருத்தின் மாற்ற முடியாத தோல்வி மற்றும் எதிரொலியே இந்த நெருக்கடியின் பின்விளை வாகும்.”

உலக அளவில் நவீன காலனியாதிக்கத்தை நிறுவ முயற்சிக்கும் அமெரிக்கப் பேரரசின் உலக மயமாதல், தாராளமயமாதல் கொள்கைகளையும், திட்டங்களையும், நடைமுறைகளையும் தகுந்த புள்ளிவிவரங்களோடும், ஆதாரங்களோடும் இந்த நூலில் பிடல் காஸ்ட்ரோ தெளிவுபடுத்துகிறார். அதே சமயம் மூன்றாம் உலக நாடுகளில் அல்லல் படும் மக்களுக்கு கியூபா எந்தெந்த வகைகளி லெல்லாம் ஆதரவளித்து உதவி வருகிறது என்பதையும் அவர் விளக்குகிறார். அமெரிக்கப் பேரரசுக்கு எதிராக நிலைநின்று கியூபா எப்படி யெல்லாம் தன்னைத் தற்காத்துக் கொள்கிறது என்பதையும் அவர் உறுதிப்படுத்துகிறார். மூன்றாம் உலக நாடுகளின் ஒருங்கிணைவின் அவசியத்தை அவர் வலியுறுத்துகிறார். அதற்கான நடைமுறைகள் தோன்றி வளர்வதை அவர் அடையாளம் காட்டு கிறார்.

அதற்காக அவர் தன்னையே அர்ப்பணித்துக் கொண்டு செயல்படும் நிலையில் தன்னைப் பற்றி இப்படிச் சொல்கிறார்.

“நான் எப்போதும் வாழ்கிறேன்; என்னுடைய வாழ்க்கையின் மீதமுள்ள காலத்திலும் தொடர்ந்து அமைதியோடு வாழ்வேன். ஏனெனில் எங்களது மக்களின் உரிமைகளையும், பலவீனமான, ஏழை மற்றும் சிறிய நாடுகளின் புகழையும் எப்படிக் காப்பது என்பதை அறிவேன். அதிகமான நேர்மை உணர்வில் நான் எப்போதும் உற்சாகப்பட்டு உள்ளேன். நான் ஒரு புரட்சிக்காரன், புரட்சிக் காரனாகவே இறப்பேன்.”

புதிய உலகின் புதிய வரலாற்றுப் போக்கை அறிந்துகொள்ளவும், அதன் தீமைகளைத் தவிர்த்து புதிய சோசலிச சமுதாயத்திற்கு உலக மக்களை வழிநடத்திச் செல்வதைக் காட்டும் இந்த நூலை ஒவ்வொருவரும் படிக்க வேண்டியது காலத்தின் கட்டாயத் தேவை.

போர், இனவெறி மற்றும் பொருளாதார அநீதி
பிடல் காஸ்ட்ரோ
வெளியீடு : என்.சி.பி.எச்.
விலை : ரூ.115/-

Pin It