தமிழ்ச் சமூகத்தில் நிலவுகின்ற வசைச்சொல் ஒவ்வொன்றிற்கும் ஒரு பண்பாட்டு அடையாளமும் சமூகக் காரணங்களும் இருக்கின்றன. தமிழ் நாட்டில் உள்ள அனைத்துத் தரப்பு மக்களிடமும் காணப் பெறுகின்ற சில வசைச்சொற்களுள், மயிராண்டி, மயிரைப் புடுங்கி (மயிர் புடுங்கி), மொட்டையாண்டி என்பனவும், அச்சமூட்டும் சொற்களுள் பூச்சாண்டி எனும் சொல்லும் முக்கியத்துவம் வாய்ந்தனவாகத் திகழ்கின்றன. இச்சொற்கள் உருவாக்கத்திற்கு அடிப்படைக் காரணங்கள் இருக்க வேண்டுமேயொழிய, இவை பொருளற்ற வெறும் வசைச்சொற்களாக மட்டும் இருக்க வாய்ப்பில்லை. இதுகுறித்து விளங்கிக் கொள்வது தமிழ்ச் சமூக வரலாற்றைத் தெளிவதில் முக்கியப் பங்கு வகிக்கக் கூடியதாக அமையும்.

மயிராண்டி

‘ஆண்டி’ எனும் சொல் சமயத்துறவிகளைக் குறிக்கக் கூடியது. தமிழ்நாட்டு வரலாற்றுச் சூழலில், முதற்கண் சமண, பெளத்த மரபுகளுக்கு உரியதாக இருந்த இந்தச் சொல் வழக்கு, பின்னர் வைதிக மரபுகளுக்கும் உரியதாகப் பெருவழக்கு பெற்றிருக்கின்றது. தமிழ்ச் சூழலைப் பொருத்தவரை வைதிகத் துறவிகளும் ஆசீவகத் துறவிகளும் தலைமயிரைக் கொண்ட ஆண்டிகளாக இருந்திருக்கின்றனர். இவர்களுக்கு மாற்றாக இருந்த சமண, பெளத்தத் துறவிகள் தலைமயிரற்று இருந்திருக்கின்றனர். இந்நிலையில், வைதிக, ஆசீவகத் துறவிகளையே தமிழ்ச் சமூகம் மயிராண்டிகள் (மயிரை உடைய ஆண்டிகள்) என்று குறித்திருக்க வேண்டும். மயிராண்டி எனும் இச்சொல்லாடலை வசைச்சொல்லாகச் சமணர்களும் பெளத்தர்களும் பயன்படுத்தியிருக்க வாய்ப்புண்டு. அதற்கான தொனியே இன்றும் சமூக வழக்கில் நின்று நிலவுகிறது. கழுவேற்றம் பற்றிக் கிடைக்கும் சில சிற்பங்கள் தலைமுடியுடன் காணப்பெறுகின்றன. இச்சிற்பங்களை ஆசீவகர்களாகவும் இல்லறத்தில் இருக்கும் சிரமணர்களாகவும் (சாகவர்கள்) கருத வேண்டியுள்ளது. சாவகர்களை விடுத்து நோக்கும்போது, கழுவேற்றம் செய்யப்பெற்ற ஆசீவகத் துறவிகள் மயிருடன் இருந்திருக்கின்றனர் என்பதை அறியமுடிகிறது.

சமண, பெளத்த மரபுகளுக்கு எதிரான கொள்கைகளைக் கொண்டிருந்த வைதிகர்கள், அவர்களுக்கு எதிராகத் தலைமயிரை வளர்த்திருக்கின்றனர் எனலாம். தலைமயிர் வளர்த்தல் சமண, பெளத்தர்களுக்கு எதிரானது என்பதைச் சைவர்கள் ‘பறிதலையர்’ என்று சமணர்களை எள்ளி நகையாடுவதிலிருந்து புரிந்து கொள்ளலாம். அவ்வாறு தங்களால் எள்ளி நகையாடப்பெற்ற அந்த அவைதிக மரபுக்கு எதிராக, வைதிகர்கள் தலைமயிரை வளர்த்திருக்கின்றனர் என்று கருதுவதே பொருத்தமானது. சமண, பெளத்த, ஆசீவக, வைதிகத் துறவிகள் அனைவரும் செவ்வியல் காலத்திலேயே தமிழ்நாட்டில் பரவலாக வாழ்ந்திருக்கின்றனர் என்பதற்குச் சிலப்பதிகாரமும் மணிமேகலையும் தக்க சான்றுகளாகின்றன. இந்நிலையில், மயிரை உடைய ஆண்டிகள் (மயிராண்டிகள்), மயிரற்ற ஆண்டிகள் எனும் இருவகைப்பட்ட ஆண்டிகளும் அவர்களைக் குறிக்கும் இவ்விருவகைப்பட்ட சொல் வழக்குகளும் செவ்வியல் காலத்திலேயே தோற்றம் பெற்றிருக்கின்றன எனக் கருதலாம். ஒவ்வொரு சமயக் குழுவும் பிற சமயக் குழுக்களை வசைபாடுவதற்கும் எள்ளி நகையாடுவதற்கும் இத்தகு சொற்களைப் பயன்படுத்தியிருக்க வேண்டும். இந்நிலையில், ‘மயிராண்டி’ எனும் இவ்வசைச் சொல்லானது ஆசீவக, வைதிகத் துறவிகளைக் குறிக்கப் பயன்படுத்தப்பெற்றிருக்க வேண்டும் என்பதைப் புரிந்துகொள்ள முடிகிறது. சமண, பெளத்தர்களால் உருவாக்கப்பெற்ற இச்சொல், காலப்போக்கில் அனைவரும் வழங்கும் வசைச்சொல்லாக மாறியிருக்கலாம் எனக் கருதவேண்டியுள்ளது.

மயிரைப் பிடுங்கி / மயிர் பிடுங்கி

சமணர்கள் தலைமயிரைப் பிடுங்கிக் கொள்ளும் வழக்கத்தைக் கொண்டவர்களாக இருந்தனர். தலைமயிரைப் பிடுங்கிக் கொள்ளும் இவ்வழக்கத்திற்கு ‘லோமம்’ என்று பெயர். “தலைமயிரைக் கத்தியால் மழிக்காமல், கைகளிலேயே பிடுங்கிக் களைய வேண்டும். அவ்வாறு செய்யும் நாள்களில் துறவி உண்ணா நோன்பு இருக்க வேண்டும். அப்போது உடம்பில் உண்டாகும் பொறுக்க முடியாத வலியைப் பொறுத்துக் கொள்ள வேண்டும். இவ்வாறு செய்வது துறவியின் துன்பம் பொறுக்கும் ஆற்றலையும் மன உறுதியையும், உடம்பின் மீதுள்ள பற்றின்மையையும் குறிப்பதாகும்” (2023:62-63). சமணத்தில் புனிதமானதாகக் கருதப்பெற்ற இந்தப் பண்பு வைதிகத்தில் இழிவானதாகவே கருதப்பெற்றுள்ளது. “தலைபறித்த கையர்” (இரண்டாம் திருமுறை, 2526) என்று திருஞானசம்பந்தர் பல இடங்களில் சமணர்களை இழிநிலையாகப் பதிவு செய்கிறார். தொடர்ந்து, “ஊத்தைவாய்ப் பறிதலையர்” (பெரிய. 2655) எனச் சேக்கிழாரும், “கேசம் பறிகோப் பாளிகள்” (திருப்புகழ், திருவோத்தூர், 0688) என்று அருணகிரிநாதரும் சமணத் துறவிகளை எள்ளி நகையாடுகின்றனர். தலைமயிரைப் பறிக்கும் இவ்வழக்கை, கி.பி.7ஆம் நூற்றாண்டு முதல் 14ஆம் நூற்றாண்டு வரையிலும் தொடர்ச்சியாகச் சைவர்கள் எள்ளி நகையாடுவதை மேற்கண்ட சைவ இலக்கியச் சான்றுகள் தெளிவுபடுத்துகின்றன. எனவே, கிட்டத்தட்ட 700 ஆண்டுகளுக்கும் மேலாக, சமணர்களின் தலைமயிரைப் பறிக்கும் வழக்கத்தை வைதிகர்கள் எள்ளி நகையாடி இருக்கின்றனர் என்பது தெளிவாகிறது.

சமணத் துறவிகளைச் சைவர்கள் எள்ளிநகையாடிய இவ்வழக்கே, பின்னர் அவர்களைத் திட்டும் வசைச்சொல்லாக மாறியிருக்கின்றது. பின்னர், வைதிகத்தில் மட்டுமன்றி பொதுவெளியிலும் இச்சொல் பெருவழக்கு பெற்றிருந்திருக்கின்றது. அதன் காரணமாகவே, இன்றும் ‘மயிரைப் பிடுங்கி / மயிர் பிடுங்கி’ எனும் சொல் வசைச்சொல் வழக்காகத் தமிழ்ச் சமூகத்தில் நிலைபெற்றிருக்கின்றது. சமணத்துறவிகள்தான் மயிரைப் பிடுங்கிக் கொள்ளும் இவ்வழக்கைக் கையாண்டனரே ஒழிய இல்லறத்தில் இருக்கும் சமணர்கள் இவ்வழக்கைக் கையாளவில்லை. அதனால், மயிர் பிடுங்கி என்று குறித்தாலே சமணத் துறவிகளையே குறிக்கும் என்பது தெளிவாகிறது. எனவேதான், ‘மயிராண்டி, மொட்டையாண்டி, பூச்சாண்டி’ எனும் சொற்களைப் போல் ‘ஆண்டி’ எனும் பின்னொட்டு இல்லாமல் ‘மயிர் பிடுங்கி / மயிரைப் பிடுங்கி’ என்பதாகத் தமிழ்ச் சமூகத்தில் இச்சொல் நிலைபெற்றிருக்கின்றது என்றும் குறிக்க இயலுகிறது.

மொட்டையாண்டி

தலை மழிக்கும் வழக்கம் பெளத்தத் துறவிகளுக்குரியது. தற்பொழுது உள்ள கோயில்களில் மொட்டையடிக்கும் வழக்கம் எங்கெல்லாம் உள்ளனவோ, அக்கோயில்கள் எல்லாம் ஒரு காலத்தில் பெளத்தக் கோயில்களாக இருந்திருக்க வேண்டும் என்று குறிக்கலாம். வைதிகத்தில் தலை மழிக்கும் வழக்கம் புனிதமாகக் கருதப்பெறவில்லை. மாறாக, தலை மழிக்கும் வழக்கத்தை இழிவானதாகக் கருதும் போக்கே வைதிகர்களிடம் இருந்துள்ளது. “பிக்ஷாபாத்திரம், மூன்று வஸ்திரம், இடையிற் கட்டுங் கச்சை, கந்தைகளைத் தைத்தற்கு வேண்டிய ஊசி, செஷளரக்கத்தி, நீர் வடிகட்டுகிற துணி என்னும் எட்டுமே பிக்ஷூக்களுக்குரியவை; இவற்றையன்றித் தமதென்று வேறொன்றையும் வைத்திருத்தல் கூடாது” (உ.வே.சா., 1992) எனும் கருத்து கவனத்தில் கொள்ளத்தக்கதாகும். சவரக்கத்தி, தலை மழிப்பதற்காகவே பெளத்தர்களால் பயன்படுத்தப் பெற்றதாகும். புத்தர் மணிமுடியைத் துறந்து, துறவியாக மாறியதால் பெளத்தர்கள் தம் தலைமேல் இருக்கும் தலைமுடியையும் துறந்தவர்களாக இருக்கின்றனர் என்பது பொருத்தமானதே ஆகும். தலை மழிக்கும் வழக்கத்திற்குப் பெளத்தர்கள் எத்தகைய முக்கியத்துவத்தை அளித்தனர் என்பது இதன்வழித் தெளிவாகிறது. தலை மழித்தல் என்பது மயிர் பறித்தல் என்பதிலிருந்து வேறானது. இந்த வேறுபாட்டை உணர்த்தவே ‘மயிரைப் பிடுங்கி, மொட்டையாண்டி’ எனும் இருவேறு வழக்குகள் தமிழ்ச் சமூகத்தில் நிலைபெற்றிருக்கின்றன.

தொடக்கக் காலத்திலும் வைதிகச் செல்வாக்கு மிகுந்த காலத்திலும் தமிழ்ச் சமூகத்தில் மொட்டையடித்தல் என்பது இழிநிலை வழக்காகவே இருந்திருக்க வேண்டும். ‘மொட்டையடித்துக் கரும்புள்ளி செம்புள்ளி குத்திக் கழுதைமேல் ஏற்றிவிடுவேன்’ என்று கூறும் வழக்காறு இதற்குச் சான்று. வைதிகத்தில் தலை மழித்தல் பற்றிப் பன்னிரு திருமுறையிலோ, திவ்வியப் பிரபந்தத்திலோ ஓரிடத்தும் புனிதமாகக் குறிக்கப்பெறவில்லை. ஆனால், பெளத்தம் தலை மழித்தலைப் புனிதமாகக் குறிக்கிறது; பெளத்தத் துறவிகள் தலை மழிக்காது இருக்கக் கூடாது என்பதையும் வலியுறுத்துகிறது. பெளத்தத் துறவிகள் தலை மழிக்கும் வழக்கமுடையோராக இருக்கச் சமணர்கள் தலைமயிரைப் பிடுங்கிக் கொள்ளும் வழக்கமுடையோராகவும் வைதிகத் துறவிகள் சடாமுடி வளர்க்கும் பண்புடையோராகவும் இருந்திருக்கின்றனர். சமண, வைதிகத் துறவிகளிலிருந்து வேறுபடுத்திக் காட்டவே பெளத்தத் துறவிகளை ‘மொட்டையாண்டிகள்’ என்று குறிக்கும் வழக்கம் இடைக்காலத்தில் உருவாகியிருக்க வேண்டும். பின்னர், வைதிகர்களின் ஆதிக்கத்தால் அது வசைச்சொல்லாக மாற்றம் பெற்றிருக்க வேண்டும் என்று குறிக்கலாம்.

தமிழ்த் திரைப்படங்களில் பெரும்பாலும் எதிர்நிலைக் கதாபாத்திரங்களில் (வில்லனாக) நடிப்போரை மொட்டையடித்தவராகக் காட்சிப்படுத்தியிருப்பதைக் காணலாம். இதனைப் பெளத்தச் சிந்தனைக்கு எதிரான, இந்தியச் சமூகச் சிந்தையில் ஊறியிருக்கும் வைதிகக் கருத்தியலாகக் குறிக்கலாம். மேலும், கோபத்தில் ஒருவரைத் திட்டும்போது, ‘மொட்டையாப் போயிடுவாய்’ என்று திட்டும் வழக்கை இன்றும் காணமுடிகிறது. தலையை மழித்துக் கொண்ட பெளத்தத் துறவிகள் ‘மண்ணாசை, பொன்னாசை, பெண்ணாசை’ முதலான ஏதுமற்றவர்கள். அவர்களைப் போல ஒன்றுமில்லாமல் போய் விடுவாய் என்னும் கருத்தின் அடிப்படையிலேயே இவ்வகையான வசைச்சொல் தமிழ்நாட்டில் தோன்றியிருக்கின்றது. மயிர் போதல் தலை போதலுக்கு இணையாகவே பார்க்கப் பெற்றிருக்கின்றது. இதனை அடியொற்றியே ‘முண்டம்’ எனும் சொல் வழக்கும் தோற்றம் பெற்றிருக்கின்றது எனலாம். ஏதுமற்றதற்கு முண்டம் என்று பொருள். இதனடிப்படையில், தலையில் ஏதுமற்றதைக் குறிக்க முண்டம் எனும் சொல்வழக்கும் பயன்படுத்தப்பெற்றிருக்கின்றது. வைதிக வளர்ச்சிக் காலத்தில் பெளத்தச் சிலைகள் உடைக்கப் பெற்று முண்டமாக்கப்பெற்ற தன்மையும் இத்துடன் இணைத்து நோக்குதற்குரியதாகும். இதனடிப்படையில் பார்க்கும்போது, மொட்டைத்தலையுடன் தொடர்புடைய வசைச்சொற்கள், இழிசொற்கள் அனைத்தும் பெளத்தச் சிந்தனைக்கு எதிரானவையாக உருவானவை எனக் கருத முடிகிறது.

பூச்சாண்டி

சிறு குழந்தைகள் சேட்டை செய்தால், அடம் பிடித்தால் ‘பூச்சாண்டியிடம் பிடித்துக் கொடுத்துவிடுவேன்’ என்று கூறிக் குழந்தைகளைப் பயமுறுத்துவதை இன்றுவரை காணமுடிகிறது. இந்தப் பூச்சாண்டி யார்? எங்கிருக்கிறார்? அவர் வருவாரா? அவர் குழந்தைகளை என்ன செய்வார்? இன்றும் அந்தச் சொல்லுக்குக் குழந்தைகள் ஏன் அச்சப்படுகின்றன? என்பது குறித்துச் சிந்திக்க வேண்டியுள்ளது. பூச்சு என்பது விபூதிப் பூச்சைக் குறிக்கும். விபூதி பூசுபவர்களைப் ‘பூச்சுக்காரர்கள்’ என்றும், திருநாமம் இடுவோரை ‘நாமக்காரர்’ என்றும் குறிப்பது வைதிகத் தமிழ்ச் சமூக வழக்கு. மேலும், தற்காலத்தில் தமிழ்நாட்டுக் கிறித்தவர்களை ‘வேதக்காரர்கள்’ என்றும் குறிக்கின்றனர். தற்காலத்தில், ஒரே இனத்தவர் கிறித்தவம், இந்து எனும் மதங்களில் இருந்தால், கிறித்தவத்தில் இருப்பவரை ‘வேதக்காரர்’ என்றும், இந்து மதத்தில் இருப்பவரைப் ‘பூச்சுக்காரர்’ என்றும் கூறும் வழக்கு சிவகங்கை மாவட்டப் பகுதிகளில் பரவலாகக் காணப்பெறுகிறது. இவற்றின் வழிப் ‘பூச்சு’ என்பது விபூதிப் பூச்சைக் குறிக்கும் என்பது தெளிவாகிறது. எனவே, ‘பூச்சாண்டி’ என்பது சைவத் துறவிகளைக் குறிப்பதற்குப் பயன்பட்ட சொல் என்பது தெளிவாகிறது.

சைவத் துறவிகளைக் குறிக்கப் பயன்படும் இச்சொல்லைக் கூறிக் குழந்தைகளைப் பயமுறுத்த வேண்டிய தேவை என்ன? என்பது குறித்துச் சிந்திக்க வேண்டியுள்ளது. சைவத் துறவிகள் சிரமண மரபுகளில் (சமண, பெளத்த, ஆசீவக) வந்தவர்களைக் கழுவேற்றம் செய்திருக்கின்றனர் என்பது பெரியபுராணம் போன்ற இலக்கியங்கள் வழி அறிய முடிகிறது. இது புனைவு என்று சிலர் கருதினாலும், இது உண்மையாக இருக்கவே வாய்ப்புண்டு. இராமநாதபுரம் மாவட்டம், திருப்புல்லாணி அருகே பள்ளபச்சேரி எனும் கிராமத்தில் உள்ள கிராமக் கோயிலில் ஐந்து கழுமரங்கள் உள்ளன. அவை, அவற்றில் பலியிடப்பெற்றவரின் நினைவாக வணங்கப் பெறுகின்றன. ஈரோடு அருகில் உள்ள காளிங்கராயன் கால்வாய்க்கு அருகில் உள்ள அய்யனாரப்பன் கோயிலில் பனை மரத்தால் ஆன கழுமரம் ஒன்று உள்ளது. இதனைக் காத்தவராயன் சாமியாகக் கருதி அப்பகுதி மக்கள் வழிபடுகின்றனர். விருதுநகர் மாவட்டம், சிவகாசிக்கு அருகில் உள்ள ஊர் எம். புதுப்பட்டி. இங்குக் கூடமுடையார் கோயில் என்று ஓர் அய்யனார் கோயில் உள்ளது. இதனைக் கூடலிங்கசாமி கோயில் எனச் சைவக் கோயிலாகக் கருதியும் வழிபடுகின்றனர். இந்தக் கோயிலில் கழு மண்டபம் என்று ஒரு மண்டபமே உள்ளது. அந்த மண்டபத்தில் ஒரு காலத்தில் கழுவேற்றம் நடந்ததாக அப்பகுதி மக்கள் கருதுகின்றனர். கூடமுடைய அய்யனார், கூடலிங்க சாமியாக மாற்றம் பெற்றிருப்பதன் வழிச் சிரமண மரபுகளை எதிர்த்த சைவர்களின் போராட்டமும் வெற்றியும் தெளிவாகிறது.

புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கியில் உள்ள அரபி பள்ளியின் கிழக்கில் இருக்கும் குளம் மண்டிக்குளம். இந்தக் குளத்தின் கிழக்குக் கரையில் அருள்மிகு முத்துமாரியம்மன் கோயில் என்று ஒரு கோயில் உள்ளது. இந்தக் கோயிலில் கழுமரம் ஒன்று உள்ளது. தற்போது, கோயில் புணரமைப்பிற்குப் பின்னரும் அந்தக் கழுமரத்தைச் செப்பம் செய்து அதே இடத்தில் அதே பெயரில் அமைத்துள்ளனர். முழுக்காரணம் அப்பகுதி மக்களுக்குத் தெரியாவிட்டாலும், அங்கு சிலரைக் கழுவேற்றம் செய்திருக்கின்றனர் என்று கூறுகின்றனர். அறந்தாங்கியிலிருந்து அந்தக் கோயில் வழியாகச் செல்லும் மாநில நெடுஞ்சாலையில்தான் திருப்பெருந்துறை எனும் ஆவுடையார் கோயிலுக்குச் செல்ல வேண்டும். மாணிக்கவாசகர் சிவபெருமானைத் தரிசித்த தலமாக வழங்கப்பெறும் அந்தக் கோயிலில் கழுவேற்றம் பற்றிய ஓவியம் இருப்பதும் கவனத்தில் கொள்ளத்தக்கதாக உள்ளது. அறந்தாங்கி, ஆவுடையார் கோயில் ஆகிய இரண்டு நகரங்களுக்கும் அருகில் இருக்கும் ஊர் கம்மங்காடு. இச்சிற்றூரில் மூன்று இடங்கள் ‘கழுவன் திடல்கள்’ எனும் பெயரில் உள்ளன. அங்கு, வெவ்வேறு காலக்கட்டங்களில் மூன்றுபேர் கழுவேற்றம் செய்யப்பெற்றிருக்கின்றனர். இன்றும் அந்த இடங்களுக்குப் பெண்கள் தனியாகச் செல்லக் கூடாது எனும் நம்பிக்கை நிலவுகிறது. பெண்ணாசையை வெறுத்த சமண, பெளத்தத் துறவிகள் கழுவேற்றம் செய்யப்பெற்ற இடம் என்றும், அதன் புனிதம் கருதியே பெண்கள் அங்குச் செல்லக்கூடாது எனும் வழக்கு இருக்கிறது என்றும் இதைப் பார்க்க வேண்டியுள்ளது.

மதுரையைச் சுற்றிக் கழுவனூர், கழுவன்குளம், கழுவக்குடி, கழுமரம், கழுவன்சிம்மை போன்ற பெயருடைய ஊர்கள் பல உள்ளன. தமிழ்நாடு முழுவதும் பரவலாக இருக்கின்ற இத்தகு அடையாளங்கள் கழுவேற்றம் செய்யப்பெற்ற நிகழ்வு புனைவன்று என்பதைத் தெளிவுபடுத்துகின்றன. இதைச் செய்தவர்கள் மேனியில் விபூதிப் பூச்சைக் கொண்டிருக்கும் சைவத் துறவிகள். ஏராளமானவர்களைக் கழுவேற்றம் செய்த இச்செயல்களுக்கு அடித்தளமாக அமைந்தவர்கள் இந்தப் பூச்சு ஆண்டிகள் என்பதால், ‘அவர்களிடம் பிடித்துக் கொடுத்துவிடுவேன்; அவர்கள் கழுவிலேற்றி விடுவார்கள்’ என்று பயமுறுத்துவதாக இவ்வழக்குச் சொல் உருவாகியிருக்கின்றது. இடைக்காலத்தில் பெருவழக்காக இருந்த இம்முறை இன்று இல்லாமல் போயிருந்தாலும், அதை மையமிட்டு உருவான சொல்வழக்கு மட்டும் இன்றும் நிலைபெற்றிருக்கின்றது. பண்பாட்டுச் சொல்லாடல்கள் அதைக் காப்பாற்றி வந்திருக்கின்றன.

மயிராண்டி, மயிர் பிடுங்கி (மயிரைப் பிடுங்கி), மொட்டையாண்டி எனும் இச்சொல்லாடல்களுக்கான எதார்த்தங்களோ, நிகழ்வுகளோ இன்று இல்லாத சூழலில் இச்சொற்கள் மட்டும் இன்றும் நிலைத்திருக்கின்ற தன்மையானது பண்பாட்டு நிலைபேறாக்கத்தை அடிப்படையாகக் கொண்டது. இவற்றை வெறும் வசைச்சொற்கள் என்றோ, அச்சமூட்டும் சொற்கள் என்றோ கடந்து செல்ல இயலாத தன்மைக்குரியனவாக அமைகின்றன என்பதும் நினைவில் கொள்ளத்தக்கதாகிறது.

துணை நின்றவை

  • ஆறுமுக நாவலர் (பதி.), 1869 (ஏ.ப.), பெரியபுராணம் என்று வழங்குகின்ற திருத்தொண்டர் புராணம், சென்னபட்டணம்: வித்தியாநுபாலன அச்சியந்திரசாலை.
  • அருணகிரிநாதர், (ஆ.வி.இ.), திருப்புகழ், இங்கர்சால்: மின்னியத் தொகுப்பு (www.valluvarvallar.com)
  • கிருட்டினமூர்த்தி கோ., 2023, தமிழ்நாட்டில் சமணம் (கி.பி. ஆறாம் நூற்றாண்டு வரை), சென்னை: செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம்.
  • சாமிநாதையர் உ.வே., 1992, பெளத்த மதத்துள் மும்மணிகள் என்று வழங்குகின்ற புத்த சரித்திரம் பெளத்த தருமம் பெளத்த சங்கம், சென்னை: உ.வே.சா. நூல்நிலையம்.
  • வசந்தகுமார் இராச. (பதி.), 2015, திருஞான சம்பந்த சுவாமிகள் அருளிச்செய்த தேவாரத் திருப்பதிகங்கள் - இரண்டாம் திருமுறை (பண்முறை), கோவை: கற்பகம் பல்கலைக்கழகம்.

- முனைவர் மா. பரமசிவன், உதவிப்பேராசிாியர், தமிழ்த்துறை, தியாகராசர் கல்லூாி, மதுரை.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.