தனியார் தொலைக்காட்சி செய்தி சேனல்கள் அத்தனையிலும் இன்று அரசியல் விவாத நிகழ்ச்சிகள் சக்கைப்போடு போடுகின்றன. இதனைப் பார்க்கின்ற நேயர்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகின்றன. ஆரம்ப காலங்களில் சன் தொலைக்காட்சியில் ‘நேருக்கு நேர்’ என்கிற நிகழ்ச்சியில் அரசியல் பிரபலங்களைப் பேட்டி கண்டார் திரு.வீரபாண்டியன். காலப்போக்கில் எதிரெதிர் முகாமில் உள்ள இருவரை அழைத்து அவரவர் அபிப்ராயங்களைச் சொல்ல வைத்து நிகழ்ச்சியைச் சின்ன விவாதமேடையாக்கினார். அந்த நிகழ்ச்சியின் நீட்சிதான் இன்று நேர்படப்பேசு, ஆயுத எழுத்து, விவாத அரங்கம், எத்தனை கோணம் எத்தனை பார்வை, புதுப்பது அர்த்தங்கள் இத்தியாதித் தலைப்புகளில் வெவ்வேறு சேனல்களில் விவாத நிகழ்ச்சிகளாக மாறி இருக்கின்றன என்றால் அது மிகையன்று.

இந்த நிகழ்ச்சியில் அரசியல் கட்சி சார்ந்தவர்கள்., எழுத்தாளர்கள், பத்திரிக்கையாளர்கள், முன்னாள் அரசு உயர் அதிகாரிகள் என்று பலதரப்பட்ட முக்கியஸ்தர்கள் கலந்துகொண்டு தத்தமது எண்ணங்களை வெளிப் படுத்தி வருகிறார்கள்.

இடதுசாரி இயக்கம் சார்பில் விவாதங்களில் பங்கேற்கும் பேராசிரியர் அருணன், அ.குமரேசன், கனகராஜ், மயிலை பாலு, பாக்கியம், லெனின், டாக்டர் ரவீந்திரன், மு. வீரபாண்டியன் முதலியோர் வரலாற்றுப் பின்னணியுடன் தங்களது வாதங்களை முன் வைத்து விவாதத்திற்கு எடுத்துக்கொண்ட விசயத்திற்கு வலு சேர்க்கிறார்கள்.

கம்யூனிஸ்ட் கட்சிகள் குறித்தும், மார்க்சியம் பற்றியும் கோபமூட்டக்கூடிய விமர்சனங்கள், கருத்துக்கள் எதிராளிகளிடமிருந்து வந்தாலும் கொஞ்சமும் உணர்ச்சி வயப்படாமல் சிரித்துக்கொண்டே தனது ஆணித் தரமான விளக்கங்களை வழங்கும் அருணனின் பாணி பார்வையாளர்களின் பாராட்டுதல்களை பெற்று வருகிறது என்பதில் இரண்டுவிதக் கருத்துக்கள் இருக்க இடமில்லை.

மாற்று முகாமினரின் சூடான விமர்சனங்களுக்கு மிகுந்த பொறுமையுடன் தெளிவான பதில்களைத் தரும் கனகராஜ், குமரேசன், மயிலை பாலு, லெனின், மு.வீரபாண்டியன் ஆகியவர்களின் விளக்கங்களைப் புரிந்து, ஏற்றுக்கொள்ளாமல் பிரச்சினையை வேறு திசைக்கு திருப்பி விடுகிற எதிரணியினரின் பாணியையும் அடிக்கடிப் பார்க்க முடிகிறது.

‘இடதுசாரி இயக்கத்தைச் சார்ந்த முதலமைச்சர்கள், அமைச்சர்கள் மீது ஊழல் குற்றச்சாட்டுகள் இதுவரை எழுந்ததில்லை என்றால்...’

‘ஒப்புக்கொள்கிறேன்...’

‘அப்பறம் நீங்கள் ஏன் ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளான கட்சிகளுடன் கூட்டணி வைக்கிறீர்கள்..’

இதுபோன்று ஏட்டிக்குப் போட்டியாக கேள்வி கேட்டு விவாதத்தை வேறு பாதைக்கு மாற்றி விடுகிறார்கள். அவ்வப்போது தோழர் தா.பாண்டியன் விவாதங்களில் பங்கேற்கின்றார். தனது கணீர் குரலில் மிகத் தெளிவாய் ஆணித்தரமாய் தனது வாதத்தை எடுத்து வைக்கும் போது எவரும் பதில் சொல்ல முடியாமல் அமைதி காப்பதையும் காண முடிகின்றது.

பாரதிய ஜனதா கட்சியைப் பொறுத்தவரை அந்தக் கட்சிக்காக வாதிடுவோரின் எண்ணிக்கை சற்று அதிகமாக இருப்பதாகவே தோன்றுகிறது. தமிழிசை சௌந்தர்ராஜன், வானதி சீனிவாசன், எச்.ராஜா, எஸ்.ஆர் சேகர், கே.டி.ராகவன், இராமமூர்த்தி, சடகோபன், டால்பின், நமோ நாராயணன், கல்யாணசுந்தரம் என்கிற ரீதியில் பட்டியல் நீளுகிறது.

எந்தப் பொருள் குறித்துப் பேசினாலும் இவர்கள் இந்துத்துவாவை தூக்கிப்பிடிப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளார்கள். ஆர்.எஸ்.எஸ். தனியான கலாச்சார அமைப்பு என்கிறார்கள். ஆர்.எஸ்.எஸ் அமைப்பு, மோடி அரசாங்கத்தை இயக்கவில்லை என்கிறார்கள்... பா.ஜ.கவின் தாய் ஆர்.எஸ்.எஸ்... ஆர்.எஸ்எஸ் இயக்கத்தில் இருந்தவர்கள் என்று சொல்வதில் பெருமை யடைகிறோம்... இப்படி முன்னுக்குப் பின் முரணாகக் கூறி விவாதங்களை இவர்கள் எல்லோருமே குழப்பு கிறார்கள். அதுவும் எச். ராஜா, கே.டி. இராகவன், இராம மூர்த்தி ஆகியோர் பெரியாரை ‘பெரியார்’ என்று விளிப்பதைத் தவிர்த்து திரு.ஈ.வே.ரா. என்கிறார்கள். கருணாநிதியைக் கூட ‘கலைஞர்’ என்பவர்கள் பெரியார் பற்றிப் பேச்சு வரும்போது கவனமாகப் ‘பெரியார்’ என்று சொல்வதைத் தவிர்க்கிறார்கள்.

எதிர்க் கருத்துடையோர் என்பதை மறந்து அவர்களை எதிரியாகக் கருதி எச்.ராஜா, கே.டி.இராகவன், இராமமூர்த்தி ஆகியோர் அதிகமாக உணர்ச்சிவயப் படுவதை விவாதங்களில் காணமுடிகிறது. இந்த இருவரது முகங்களில் புன்னகையைக் காண்பது என்பது அரிதினினும் அரிதான ஒன்றாகவே இருக்கிறது.

அதே நேரத்தில் டாக்டர் சுப்பிரமணிய சுவாமி குறித்து கேள்வி எழுப்பும் போது மட்டும் மழுப்பலான பதில்களைத் தந்து பெரும்பாலும் மவுனம் காக்கிறார்கள். காங்கிரசு கட்சியின் மீது ஜனங்கள் கொண்ட அதிருப்தியை பா.ஜ.க. வெற்றியாக அறுவடை செய்திருக்கின்றனர் என்பதை மறந்து, மக்கள் பா.ஜ.க.வின் கொள்கைக்கு வாக்களித்திருப்பதாக இன்னமும் இவர்கள் நம்புகிறார்கள் என்பதை இவர்களின் வாதங்கள் காட்டிக் கொடுக்கின்றன.

அ.இ.அ.தி.மு.கவுக்காக ஆவடி குமார், டாக்டர் சமரசம் ஆகிய இருவர் மட்டுமே பேச வருகின்றார்கள். சமீப காலமாக கௌரி சங்கர் என்கிற பெரியவர் கலந்து கொள்கிறார். அம்மா புகழ் பாடுதல், கருணாநிதி எதிர்ப்பு இவை இரண்டுமே இவர்களின் வாதங்களின் மையக்கருவாக இருக்கிறது. இவர்களைக் காட்டிலும் கூட்டணிக் கட்சிக்காரர்களான செ.கு.தமிழரசன், வேல்முருகன் ஆகியோர் ஜெயலலிதாவை தலையில் தூக்கிவைத்துக் கொண்டாடுகிறார்கள். வருங்காலங்களில் சின்னக்கட்சிகளுடனும் கூட்டணி இல்லை என்று அம்மா அறிவித்துவிடக் கூடாதல்லவா...? அதனால் தானோ என்னவோ ஜால்ரா சத்தத்தை ஓங்கி ஒலிக்கச் செய்கிறார்கள் போலும்.

தி.மு.க. சார்பில் கலந்து கொள்வோர்களும் ஏனோ குறைந்த எண்ணிக்கையினராகவே இருக்கிறார்கள்.

சுப.வீரபாண்டியன், கே.எஸ்.ராதாகிருஷ்ணன், பொள்ளாச்சி உமாபாதி, அப்பாவு, பிரசாந்த் ஆகியோர்களே மாறி மாறி கலந்துகொள்கின்றனர். சுப.வீரபாண்டியன், திராவிட இயக்க வரலாறு, பெரியாரின் கொள்கை முதலியனவற்றை விரிவாக எடுத்து வைக்கிறார். மற்றவர்களிடம் வழக்கம் போல் கலைஞர், ஸ்டாலின் புகழ்பாடுதல், ஜெயலலிதாவைச் சாடுதல் முதலிய சங்கதிகளே மேலோங்கி நிற்கின்றன. கே.எஸ். இராதாகிருஷ்ணனிடம் கோபக்கனலைக் காண முடிகிறது. தோழர் கனகராஜ் அவர்களிடம் கோவித்துக்கொண்டு ஒரு முறை தந்தி தொலைக்காட்சி விவாதத்தில் இருந்து வெளிநடப்புச் செய்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தகுந்த ஒன்றாகும். எழுத்தாளர் மனுஷ்ய புத்திரனும் தி.மு.க.வை ஆதரித்தே பேசிவருகிறார்.

காங்கிரசு கட்சியின் சார்பில் பேசுவதற்கு கோபண்ணா, விஜயதாரிணி, ஜோதிமணி, அமெரிக்கை நாராயணன், உ.பலராமன், பீட்டர் அல்போன்சு, முனைவர் பாட்சா ஆகியோர்கள் அழைக்கப்படுகிறார்கள். இவர்களில் அமெரிக்கை நாரயணன் சிடுசிடு மூஞ்சிக்குச் சொந்தக்காரராக இருக்கிறார். மன்மோகன் சிங் அரசு கடைப்பிடித்த நடைமுறைகளையே மோடி அரசு பின்பற்றி வருகிறது என்பதை இவர்கள் திரும்பத் திரும்ப கிளிப்பிள்ளையாய் சொல்லி வருகிறார்கள். தற்போது பீட்டர் அல்போன்சு, முனைவர் பாட்சா இருவரும் த.மா.கா. அணியை ஆதரிக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தகுந்த செய்தியாகும்.

ம.தி.மு.க. சார்பில் ஆவடி அத்திரிதாஸ், காரை செல்வராஜ் ஆகியோர் மட்டுமே விவாதங்களில் பங்கேற்கிறார்கள். ஈழப்பிரச்சினை, மீனவர்பிரச்சினை இன்னபிற பிரச்சினைகளில் மோடி அரசாங்கச் செயல்பாடுகளை கடுமையாக விமர்சனம் செய்கிறார்கள்.

தமிழ் உணர்வாளர்கள் என்கிற அடிப்படையில் தோழர் தியாகு, அய்யநாதன், பெ.மணியரசன், சீமான் ஆகியோர் கலந்துகொண்டு அவர்கள் தரப்பு நியாயங்களை மிக விரிவாக எடுத்து வைக்கிறார்கள். பாட்டாளி மக்கள் சார்பில் வழக்குரைஞர் பாலுக்கு மட்டுமே வாய்ப்பு வழங்கப்படுகிறது. அவரும் முடிந்த வரை தனது கருத்துக்களுக்கு வலுச்சேர்க்க போராடுகிறார். அத்தோடு மருத்துவர் ஐயா, சின்ன அய்யா புகழும் பாடிக் கொண்டிருக்கிறார்.

கட்சி சாயம்படாத பத்திரிக்கையாளர்கள் கார்த்திகைச் செல்வன், மணி, சமுகவியலாளர் பானு கோம்ஸ், பேராசிரியர் இராமு மணிவண்ணன், எழுத்தாளர் ஞாநி, முன்னாள் அரசாங்க உயர் அதிகாரிகள் தேவசகாயம், முருகன், கருணாநிதி ஆகியோர் அவ்வப் போது முகம் காட்டி தத்தமது அபிப்ராயங்களைப் பதிவு செய்கிறார்கள்.

மொத்தத்தில் மாற்றுக் கருத்தாளரைப் பேச விடாமல் பேசுதல், அவர்கள் மனது காயப்பட வேண்டும் என்பதற்காக தடித்த வார்த்தைகளை வீசுதல் ஆகியனவற்றை இந்த விவாதங்களில் கலந்து கொள்வோர் தவிர்க்க வேண்டும். அவரவர் கொள்கை அவரவர் உரிமை என்பதை அவசியம் உணரவேண்டும். அத்தோடு மறைந்த தலைவர்கள் மீது காழ்ப்புணர்வு காட்டுவதை கைவிடுவது நல்லது. இவற்றை பங்கேற் போர் பின்பற்றினால் பார்வையாளர்கள் நிறைய விசயங்களை அறிந்திடக்கூடிய வாய்ப்பு ஏற்படும். நிகழ்ச்சியின் மெருகு கூடி உபயோககரமான நிகழ்ச்சியாகத் திகழும்.

Pin It