உலகின் தலைசிறந்த பத்து நாவல்களில் ஒன்றாகக் கருதப்படும் ‘மோபி டிக்’ அல்லது திமிங்கிலம் என்ற - ஹெர்மன் மெல்வில் எழுதிய - ஆங்கில நாவலின் சுருக்கப்பட்ட தமிழ் வடிவம் தான் ‘திமிங்கில வேட்டை’.

1851-இல் முதன்முதலில் வெளியான இந்த நாவல் இன்றளவும் அமெரிக்காவின் இலக்கியப் பொக்கிஷங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது. குறியீட்டு வகையிலான இந்தப் பெரும் நாவலின் மையப்புள்ளி தேடல்தான்.  தத்துவார்த்த தளங்களில்தான் நாவலின் பயணம் செல்கிறது.

பிற நாவல்களில் காணாத அழகியல், பல் வகைப்பட்ட குண இயல்புகளுடன் கூடிய ஆர்வத்தைத் தூண்டும் மனிதர்கள், கவிதை நடையாவும் இணைந்து நம்மை இந்த நாவலுக்குள் அழைத்துச் செல்கின்றன.

முக்கியமான இரு நிகழ்வுகளால் ஏற்பட்ட தாக்கத்தில்தான் - இந்தக் கதையின் கருவாக அமைய - ‘மோபி டிக்’ நாவலை ஹெர்மன் மெல்வில் எழுதியதாகக் கருதப்படுகிறது.

ஒன்று: 1820-இல் தென் அமெரிக்காவின் மேற்குக் கரையிலிருந்து இரண்டாயிரம் மைல் தொலைவில் கடலில் திமிங்கிலம் மோதியதால் - நான்டுகெட் துறைமுகத்தைச் சேர்ந்த - எஸ்ஸெக்ஸ் என்ற திமிங்கில வேட்டைக் கப்பல் கடலில் மூழ்கிய சம்பவம்.  இந்தச் சம்பவத்தில் உயிர் தப்பிப் பிழைத்த எட்டு பேரில் ஒருவர் தன் அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டிருக்கிறார்.

மற்றொன்று: 1830-களின் பிற்பகுதியில் சிலி நாட்டுத் தீவான மோச்சாவையொட்டிய கடலில் ‘மோச்சா டிக்’ என்ற ஸ்பெர்ம் வகைத் திமிங்கிலம் கொல்லப்பட்ட சம்பவம்.  திமிங்கில வேட்டைக்காரர்களால் குத்தப்பட்ட இருபதுக்கும் மேற்பட்ட எறியீட்டிகளை முதுகில் தாங்கியபடி கடலில் ‘மோச்சா டிக்’ அலைந்துகொண்டிருந்ததாகவும் கப்பல்களை மிக மூர்க்கமாக இந்தத் திமிங்கிலம் தாக்கிவந்ததாகவும் அப்போது பரபரப்பாகப் பேசப்பட்டு வந்தது.

1810 முதல் 1830கள் வரை நூற்றுக்கும் மேற்பட்ட திமிங்கில வேட்டைச் சம்பவங்களில் வேட்டைக்காரர்களைத் தோல்வியுறச் செய்து தப்பியிருக்கிறது மோச்சா டிக்.  கடலோடிகளின் மத்தியில் மோச்சா டிக் பற்றிய கதைகள் ஒரு நாவலுக்குரியனவாகவே உலவி வந்தன.

கடலில் ஒன்றரை ஆண்டுகள் பயணம் மேற்கொண்டு கடற்பயண அனுபவங்களை நாவலாக்கிய ஹெர்மன் மெல்வில், இவ்விரு நிகழ்வுகளால் ஏற்பட்ட தாக்கங்களை ‘மோபி டிக்’ நாவலில் கொண்டு வந்திருக்கிறார்.

*

நாவல் முழுவதும் (அல்லது பெரும்பாலும்) இஸ்மாயில் என்ற கடலோடியின் பதிவாக நீள்கிறது.

கடலோடி உலகம் சுற்றிப் பார்க்க விரும்பும் இஸ்மாயில், ஒரு சுற்றுலாப் பயணியாகப் பயணம் மேற்கொள்ளும் வசதியற்ற நிலையில், கடல் சுற்றக் கூலியும் தருவார்கள் என்பதால் திமிங்கில வேட்டைக் கப்பலில் உலகை வலம்வர விரும்புகிறான்.

வேட்டைக் கப்பலுக்கான தேடுதலைத் தொடங்கும்போது நரமாமிசம் தின்னும் பழங்குடி இனத்தைச் சேர்ந்த குயூகுயெக் என்பவனைச் சந்திக் கிறான்.  இருவரும் நண்பராகிறார்கள்.  இஸ்மாயில் சேரும் திமிங்கிலக் கப்பலிலேயே, அவனுடைய குலதெய்வம் சொன்னபடி, குயூகுயெக்கும் வேலைக்குச் சேருகிறான்.

கப்பலின் கேப்டன் ஆகாப், மிகவும் உறுதியான, இறுக்கமான மனிதன்.  பயணம் தொடங்குவதற்கு முன்னரே துன்பம் வரப்போவதாக எச்சரிக்கிறான் எலிஜா என்ற மாலுமி.  பெக்கோட் கப்பலைப் பேய்க் கப்பல் என்றும் ஆகாப்பைப் பேய் என்றும் குறிப்பிடுகிறான் எலிஜா.

திமிங்கில வேட்டைக் கப்பலின் பயணம் தொடங்குகிறது.  ஒரு நாள் அதிகாலையில் கப்பல் தளத்தில் தோன்றுகிறான் ஆகாப் - ஒற்றைக் காலுடன். துண்டுபட்ட மற்றொரு கால் திமிங்கிலத்தின் எலும்பில் செய்து பொருத்தப்பட்டு மெருகேற்றப் பட்டிருக்கிறது.

கப்பலின் ஒட்டுமொத்த சிப்பந்திகளையும் தளத்தில் திரளச் செய்த ஆகாப், தன்னுடைய இலக்கை, இலட்சியத்தை இந்தப் பயணத்தின் ரகசிய நோக்கத்தை அறிவிக்கிறான் - மிகப் பெரிய திமிங்கிலமான ‘மோபி டிக்’ என்ற வெள்ளைத் திமிங்கிலத்தை வேட்டையாடிக் கொல்வது - தோல்வியில் முடிந்த முந்தைய வேட்டையொன்றில் ஆகாபின் ஒரு காலைத் துண்டித்துச் சென்ற திமிங்கிலம்தான் மோபி டிக்.

‘பயணத்தின் நோக்கம் திமிங்கில வேட்டையே.  திமிங்கில எண்ணெய் சேகரிப்புக்குப் பின் பத்திரமாக நாடு திரும்புவதே’ என்று இணை கேப்டன் ஸ்டார்பக் மீண்டும் மீண்டும் குறிப்பிட்டபோதும், ஆகாப் ஒருபோதும் தன் நிலைப்பாட்டை மாற்றிக் கொள்வதேயில்லை.

வேட்டைக் கப்பலின் பயணம், மாலுமிகள், வேட்டைக்காரர்களின் அனுபவங்கள், கடலில் ஆகாப் மட்டுமின்றி, மற்றவர்களும் சந்திக்கும் சம்பவங்கள் எல்லாமாகச் செல்கிறது கதை.  திடீரென ஒரு நாளில் திமிங்கில வேட்டைக்காகப் படகுகளை இறக்கியபோதுதான், மோபி டிக்கிற்காகவே தன்னுடைய படகுக்கு என்று வித்தியாசமான மஞ்சள் நிற மனிதர்களைக் கொண்ட தனிக்குழுவொன்றையும் ஆகாப் அழைத்து வந்திருப்பது தெரிகிறது.

கடலில் திமிங்கில வேட்டைகள் தொடருகின்றன.  ஆனால், ஆகாபின் எண்ணம் முழுவதும் மோபிடிக்கைச் சுற்றியே இருக்கிறது.  ஒரு வேட்டையின் போது, தங்களுடைய சாவுகளைப் பற்றி ஆகாப்புக்கு முன்னறிவிக்கிறான் தனிக்குழுவின் தலைவனைப் போன்ற பெடல்லா.

சாவின் விளிம்பு வரை சென்று மீளும் குயூ

குயெக், மோபி டிக்கைச் சந்தித்து ஒரு கையைப் பறி கொடுத்துத் திரும்பும் சாமுவேல் என்டர்பை கப்பலின் தலைவன், நோய் தாக்கிய வேட்டைக் கப்பல்...  எனப் பல கதைகள் நாவலில் ஒரு கோவையாக.

எத்தனையோ முறை இணை கேப்டன் ஸ்டார் பக் கேட்டுக்கொண்டும் திமிங்கில வேட்டையையோ, கடல் பயணத்தையோ கைவிடவில்லை ஆகாப்.

இறுதியாகக் கடலில் மோபி டிக்கை, ஆகாபின் குழு சந்திக்கிறது.  கடலில் சுறாக்களுக்கு விருந்தளித்தது யார்? மோபி டிக்கா? வேட்டைக் குழுவா? - பெரும் போராட்டமும் முடிவுமாக நாவல் நிறைவுபெறுகிறது.

*

‘இஸ்மாயில் என்று என்னை அழையுங்கள்’ என்ற வரியுடன்தான் நாவல் தொடங்குகிறது.  இப்போதும் நாவல்களில் மிகப் புகழ்பெற்றதாகத் தொடக்க வரியாகக் கருதப்படுகிறது இந்த வரி.

இந்த நாவலில் இஸ்மாயில் தொடங்கி, பல முக்கியமான மனிதர்களின் பெயர்கள் விவிலியத்தில் இடம் பெற்றிருப்பவை.  ஏதோவொரு வகையில் இவர்கள் விவிலியப் பாத்திரங்களுடன் இணைத்துப் பார்க்கக் கூடியவர்களாகவும் தோற்றம் தருகிறார்கள்.

‘விவிலிய இஸ்மாயில் போலவே வீடற்றவன், நாடோடி, சாபத்தைத் தலையில் தாங்கிக் கொண்டு அலைபவன், அநாதை’ என்றுதான் நாவலின் இணைப்புச் சங்கிலியும் கதைசொல்லியுமான இஸ்மாயிலும் அறிமுகமாகிறான்.  நிறைவிலும் அவ்வாறே தன்னைக் குறிப்பிட்டுக் கொள்கிறான் இஸ்மாயில்.

விடுதி அறையில் ஒரே படுக்கையைப் பகிர்ந்து கொள்ள வேண்டிய நிலையில், “வெறிக்கக் குடித்து விட்டுப் போதையில் கிடக்கும் ஒரு கிறிஸ்துவ வெள்ளைக்காரனோடு படுப்பதைவிட, நல்ல தெளிந்த மனநிலையில் உள்ள ஒரு பழங்குடி மனிதனோடு படுப்பதில் தப்பில்லையே? ஆபத்தும் இல்லையே!” என்று நினைக்கிறான் இஸ்மாயில்.  இந்த இடத்தில் அறிமுகமாகும் பழங்குடியான குயூகுயெக், நாவலின் இறுதி வரையில் உயிரோட்டத்துடன் உயர் பண்பு கொண்டவனாகவே வருகிறான்.

‘மக்கள், ஒரு ராணுவ வீரரை மதிக்கும் அளவுக்குத் திமிங்கில வேட்டைக்காரரை மதிப்ப தில்லை. காரணம், திமிங்கில வேட்டை என்பது ஒரு கேவலமான தொழில், கொடூரமான தொழில் என்பது மக்கள் எண்ணம்.  ‘ஆனால், திமிங்கில வேட்டைக்காரர்கள் யாரும் ராணுவ வீரரைப் போல சக மனிதரைக் கொல்வதில்லை’ என்று திமிங்கில வேட்டைக்காரர்களின் சிறப்பு அறிவுறுத்தப்படுகிறது.

‘கிறிஸ்துவர்களாக உள்ள மேலை நாட்டவர்கள் கேடுகெட்டவர்கள், கொடியவர்கள், கொலைகாரர்கள் என்பது (பழங்குடித் தீவிலிருந்து) இங்கு வந்த பிறகுதான் குயூகுயெக்கிற்குத் தெரிய வந்திருக்கிறது.  இவர்களைக் காட்டிலும் தன் மக்கள் எவ்வளவோ மேலானவர்கள், நாகரிகம் மிக்கவர்கள் என்பது தெரிந்ததும் குயூகுயெக் அதிர்ச்சியில் வாயடைத்துப் போயிருக்கிறான்.  கடைசிவரை தான் பழங்குடி மதத்தவனாகவே இருக்க வேண்டும்.  தப்பித் தவறி கிறிஸ்துவனாகிவிடக் கூடாது என்பதுதான் குயூகுயெக்கின் தற்போதைய விருப்பமாம்’ - இஸ்மாயிலின் வரிகள் இவை.  ஆனால், இந்த வரிகள் எழுதப்பட்டு ஏறத்தாழ 160 ஆண்டுகளுக்கு மேலாகின்றன இப்போது.

விடுதி அறையில் எந்தத் திமிங்கிலக் கப்பலில் ஏறலாம் என்பது பற்றிக் குலதெய்வமான கறுப்பு நிறச் சிலைக் கடவுள் யோஜோவுடன் குயூகுயெக் நீண்ட நேரம் ஆலோசனை நடத்துகிறான்.  கடைசியில் வேட்டைக் கப்பலை இஸ்மாயில்தான் தேர்ந் தெடுக்க வேண்டும் என்று யோஜோ கூறிவிட்டதாம்’.  வினோதமான நம்பிக்கை, ஏறத்தாழ நம் ஊர்களில் சாமி படத்துக்கு முன் பூக்கட்டிப் போட்டுப் பார்த்து முடிவுக்கு வருவதைப் போல.

கப்பலின் கேப்டனும் மோபி டிக்கை வேட்டையாடுவதையே இலக்காகக் கொண்டு வாழ்பவனுமான ஆகாப் என்பவன், விவிலியத்தின் பழைய ஏற்பாட்டில் வரும் ஒரு கொடுங்கோல் மன்னன்.  ஆனால், நம்மூர் வில்லனைப் போன்றெல்லாம் அல்ல ஆகாப், பல நேரங்களில் மதிக்கப்பட வேண்டியவனாகவே இருக்கிறான்.  குறிப்பாக, மோபி டிக்கை வேட்டையாடத் தன்னுடைய படகைக் கடலில் இறக்கச் செய்யும் ஆகாப், ‘ஒருபோதும் கடலில் இறங்கக் கூடாது, நீதான் கப்பலைப் பார்த்துக்கொள்ள வேண்டும்’ என்று திட்டவட்டமாக இணை கேப்டன் ஸ்டார்பக்கிடம் தெரிவிக்கும் நேரம் உள்ளத்தை உருக்கும் இடம்.

ஸ்டார்பக்கின் பாத்திரமும் அற்புதமாக வடி வமைக்கப்பட்டிருக்கிறது.  வேட்டைக் கப்பலில் ஸ்டார்பக் மட்டும்தான் மாற்றிச் சிந்திக்கிறான். ஆகாப்பின் கோபத்தைத் தணித்து, அவனை மோபி டிக் வேட்டையிலிருந்து திருப்ப மேற்கொள்ளும் முயற்சிகள், ஒரு கட்டத்தில் வெறுப்புற்று ஆகாப்பைச் சுட்டுக்கொல்ல நினைக்கும் தருணம், பின்னர் அதைக் கைவிடுவதற்காகக் கருதிப் பார்க்கும் நியாயம்... கடைசியாக ஆகாப்பின் படகைக் கடலுக்குள் இறக்கும் வேளை...  எனச் சொல்லிக்கொண்டே செல்லலாம்.

வேட்டைக் கப்பலில் இணைந்திருந்தாலும், ‘திமிங்கில வேட்டையில், துளி பயம்கூட இல்லாத ஒரு மனிதன், ஒரு கோழையைவிட மிக மிக ஆபத்தானவன்’ என்பது ஸ்டார்பக்கின் கருத்தாக இருக்கிறது.

ஆகாப்பின் அறிமுகமும் அவனைப் பற்றிய விவரணமும் நாவலில் மிகவும் சிறப்பாக இடம் பெற்றிருக்கின்றன.  அவனுடைய தோற்றத்தை விவரிப்பதிலிருந்தே அவனுடைய மனநிலை, நடத்தை எல்லாமும் வாசகர்களுக்கு மிகத் தெளிவாக அறிமுகமாகி விடுகின்றன (ஆகாப்புக்குள் ஒரு பைசாசம் புகுந்து அவனை ஆட்டி வைக்கிறது போலும் - இஸ்மாயில்).

‘பொதுவாக அந்தக் காலத்தின் திமிங்கில வேட்டைக்காரர்களின் மன நிலை ஒரே இயலில் சில உரையாடல்களின் மூலம் மிகச் சிறப்பாக வெளிப்படுகிறது.  அனைவரையும் கப்பல் தளத்துக்கு அழைத்துப் பேசுகிறான் ஆகாப்.  ஒரு கேள்விக்கு வேட்டைக்காரர்கள் சொல்லும் பதில் - ‘ஒன்று திமிங்கிலம் நம்மால் கொல்லப்படும், இல்லாவிட்டால் திமிங்கிலத்தால் நாம் கொல்லப்படுவோம்’.  ‘திமிங்கிலத்தை விரட்டிச் சென்ற பிறகு எதை இழுப்பீர்கள்?’ என்ற கேள்விக்கு அனைவரும் ஒரே குரலில் தெரிவித்த பதில் - ‘செத்த திமிங்கிலத்தை!’ திமிங்கிலத்தை வேட்டையாடி வெற்றி பெறுவோம் என்பதில் அந்த அளவு உறுதியான தன்னம்பிக்கை அவர்களுக்கு...

‘ஒரு திமிங்கிலத்திடம் போய் என்ன வஞ்சம், பழிக்குப் பழி?’ என்ற ஸ்டார்பக்கிற்கு ஆகாப் அளிக்கும் பதிலிலும் அதே தொனி, தனிப்பட்ட கூடுதல் வன்மத்துடன் சேர்ந்து ஒலிக்கிறது - “அந்த வெள்ளைத் திமிங்கிலம் ஒரு தீய சக்தி, அதை நான் கொன்றே ஆக வேண்டும்.  அல்லது அதனால் நான் கொல்லப்பட வேண்டும்.  இது என் விதி.  அந்த வெள்ளைத் திமிங்கிலத்தைக் கொல்வதில் எனக்கு நீங்கள் உதவ முன்வராவிட்டால் நான் தனி ஆளாக அதைக் கொல்வேன்.  அதற்குப் பத்து லட்சம் ஆண்டுகளானாலும் சரி”.

கப்பல் தளத்தில் நடைபெறும் மதுவிருந்தில் எல்லாரும் ‘மோபி டிக்குக்கு மரணம் வருவதாக’ என்று கூறி மது அருந்தும்போது ஸ்டார்பக் மட்டும் விலகிக் கொண்டு, ‘கடவுளே, எங்கள் எல்லாரையும் காப்பாற்று’ என்று முணுமுணுக்கிறான், வரப் போவதை முன்னறிந்தவனைப் போல.  ஆனால், அதே தருணத்தில் ஆகாப்பின் வஞ்சம் அவன் வஞ்சமாகத் தெரிகிறது இஸ்மாயிலுக்கு.  மற்றவர்களுக்கும் அப்படித்தான் இருந்திருக்க வேண்டும்.

ஆகாப் அழைத்து வந்திருந்த தனிக் குழுவொன்றின் தலைவனைப் போலிருந்த பெடல்லா பற்றிக் குறிப்பிடும்போது (மறுபடியும் விவிலியம்!),‘பெடல்லா, ஆதாமின் முதல் மகனாக இருக்க வேண்டும். ஆபேலைக் கொன்றுவிட்டு உலகைச் சுற்றி நாடோடியாக வட்டமிட்ட காயீனாகவே அவன் இருக்க வேண்டும்’ என்று நினைக்கிறான் இஸ்மாயில்.

நாவலில் திமிங்கிலங்களைப் பற்றிய விவரணம், குறிப்பாக ரைட், ஸ்பெர்ம் வகைத் திமிங்கிலங்களைப் பற்றியவை மேன்மேலும் இவற்றைப் பற்றிய விவரங்களைத் தேடிப் படிக்க வேண்டும் என்ற ஆர்வத்தைத் தூண்டுபவை.

நாவலின் இறுதிக் கட்டத்தை முன்குறி சொல்பவனாக ஆரூடம் என்றே குறிப்பிட்டு ஆகாப்பிடம் கூறுகிறான் பெடல்லா. இவற்றைக் கற்பனை செய்து பார்ப்பதே விசித்திரமாகத் தோன்றுகிறது.  ஆகாப்புக்கும் அப்படித்தான் தோன்றியிருக்க வேண்டும்.  ஆனால், நாவலில் அடுத்தடுத்து அவை யெல்லாம் நிறைவேறும் விதத்தைப் பார்க்கும் போது அற்புதமான மாயாஜாலமாகத் தோற்றம் காட்டுகிறது.

நாவல் முழுவதுமே தத்துவமான பார்வையும் வரிகளும் விரவிக் கிடக்கின்றன.

“கடல் ஒன்றுதான் துக்கம் என்னைத் தொடர்ந்து வர முடியாத ஒரே இடம் என்று நம்பியதால் பெருங்கடல்களில் பயணம் செய்யும் ஆசை தன் கழுத்தைப் பிடித்து உந்தியதாக”க் குறிப்பிட்டு தான் அறிமுக மாகிறான் இஸ்மாயில்.

“இந்த உலகத்தில் நாம் எல்லோருமே ஏதோ ஒரு வகையில் அடிமைகள்தானே?”

“நமது வாழ்க்கை எப்போதும் நம் கட்டுப் பாட்டில் இருப்பதில்லையே.  விதிதான் எல்லாவற்றையும் முடிவு செய்கிறது.  விதி நம்மை ஆள்கிறது.  அவனவன் விதி அவனவன் கையில் என்று நாம் தவறாக நினைத்துக் கொண்டிருக்கிறோம்”.

“கப்பல் தளத்தில் ஆகாப்பின் உயிருள்ள காலும் உயிரற்ற காலும் நடமாடுவது, வாழ்வும் சாவும் இணைந்து நடப்பதைப் போலிருந்தது.”

“அந்தத் திமிங்கிலத்துண்டு இரு விளக்குகளின் வெளிச்சத்தில் சமைக்கப்பட்டது.  அந்த இரண்டு விளக்குகளும் திமிங்கில எண்ணெயில் எரிந்துகொண்டிருந்தன.”முக்கியமான ஒரு தருணத்தில் ஆகாப்பிடம் ஸ்டார்பக் கூறுகிறான்: “என்னைக் கண்டு நீங்கள் பயப்பட வேண்டாம்.  உங்களைக் கண்டு நீங்கள்பயப்படுங்கள்.  என்னிடம் நீங்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டாம்.  உங்களிடம் நீங்கள் எச்சரிக்கையாக இருங்கள். ஆகாப், ஆகாப்பைக் கண்டுதான் பயப்பட வேண்டும்.”

இன்னொரு தருணத்தில் மோபி டிக் வேட்டையை விட்டுவிடுமாறு அறிவுரை கூற முனையும் ஸ்டார் பக்கிடம் ஆகாப் கூறுகிறான்: “ஏய் மனிதனே, தூரப் போ.  ஆகாப் எப்போதுமே ஆகாப்தான்.  நான் போயே ஆக வேண்டும்.  என் தளபதியே கேள்.  இந்த முழு நாடகமும் ஏற்கெனவே திட்டமிடப் பட்டுவிட்டது.  விதியின் கட்டளைக்கு நாம் கீழ்ப்படிந்தே ஆக வேண்டும்.  கோடி ஆண்டுகளுக்கு முன்னால், இந்தக் கடல் உருள்வதற்கு முன்பே இந்த விதி எழுதி முடிக்கப்பட்டு விட்டது.  விதிக்கு நான் கீழ்ப்படிந்தே ஆக வேண்டும்.  மோபி டிக்கை நான் துரத்தியே தீருவேன்.  விதியே எனக்கு எஜமான்.”

“ஒரு மனிதனுடைய வாழ்வும் இறப்பும் அவனுடைய மனதில்தான் இருக்கிறது.  அவன் விரும்பாத வரை நோயால் அவனைக் கொன்று விட முடியாது.”

இத்தகைய வரிகளைக் குறிப்பிட்டுக் கொண்டே சென்றால் பல பக்கங்கள் நிறைந்துவிடும்.

ஆங்கிலத்தில் ஏறத்தாழ 600 பக்கங்களைக் கொண்ட இந்த நாவல், தமிழில் சுருக்கமாக மொழிபெயர்க்கப்பட்டு, 189 பக்கங்களில் வெளி வந்திருக்கிறது.இந்த நாவலைத் தமிழில் மொழிபெயர்ப்பது பெரிய வேலை.  அதிலும் சுருக்கமாக, ஆனால், கதை தப்பிவிடாமல் மொழிபெயர்ப்பது என்பது மிகப்பெரிய வேலை.  தன்னுடைய வேலையை மிகச் சிறப்பாகவே செய்திருக்கிறார் மொழிபெயர்ப்பாளரும் பத்திரிகையாளருமான மோகனரூபன்.  அதே வேளையில் தமிழில் எழுதப்பட்ட ஒரு நாவலைப் போலவே செல்கிறது அதன் நடை.இந்த நாவலைப் பற்றி முதன்முதலில் கேள்விப்பட்ட போது வியப்பாக இருந்தது.  பின்னொரு தருணத்தில் சற்றே சுருக்கப்பட்ட ஆங்கில வடிவத்தைப் படித்தபோது (அப்போதெல்லாம் இணைய தளங்கள் என்று எதுவுமில்லை) எப்போது இதைப் போன்ற எழுத்துகளெல்லாம் தமிழுக்கு வரும் என்று தோன்றியதுண்டு (நாமே மொழிபெயர்க்கலாமே என்றெல்லாம் விபரீதமாக ஆசைப்பட்டதும் உண்டு).  ஆனால், மோகனரூபனின் திமிங்கில வேட்டை அந்த ஏக்கத்தைத் தீர்த்துவைத்துள்ளது.ஆனாலும், மோபி டிக் முழுமையாக, வரி விடாமல், மொழிபெயர்க்கப்பட்டுத் தமிழுக்கு வர வேண்டும் என்ற ஆவலையே மீண்டும் மீண்டும் தூண்டிவிடுகிறது திமிங்கில வேட்டை. அதற்கெல்லாம் தேவை காலமும், கவலைப்படாமல் வேலை செய்யப் பணமும்.விவிலியத்தைப் பற்றியும் கிறிஸ்துவத்தைப் பற்றியும் கடல் மற்றும் கடல்வாழ் உயிரினங்கள் பற்றியும் மோகனரூபனிடம் இயல்பாகவே அமைந்து விட்ட அறிவு, இந்த நாவலின் மொழிபெயர்ப்பில் பேருதவி புரிந்திருப்பதாகவே படுகிறது.

திமிங்கில வேட்டை, நல்ல அனுபவம்.  இது போன்ற பிற மொழி நாவல்கள் நிறையவும் தமிழில் வர வேண்டும்.

Pin It