ரெங்கையா முருகன் - வி.ஹரிசரவணன் :
‘அனுபவங்களின் நிழல் பாதை’ - வம்சி புக்ஸ்

இந்தியப் பழங்குடிகள் குறித்தும், நாடோடி வாழ்க்கை நடத்துவோர் குறித்தும், எழுத்து வடிவிலான பதிவுகளை முதலில் தொடங்கி வைத்தவர்கள் ஆங்கில அதிகாரிகளும் கிறித்தவ மிஷனரிகளும்தான்.  தமிழ்நாட்டைப் பொறுத்த அளவில் இத்தகைய பதிவின் முன்னோடியாக, சங்க இலக்கியத்தின் குறிஞ்சித்திணை மற்றும் முல்லைத் திணைப் பாடல்கள் அமைகின்றன.  சிலப்பதிகாரத்தின் வேட்டுவவரியும், குன்றக் குரவையும் கூட இவ்வகையில் குறிப்பிடத்தக்கவை.

வட இந்தியாவில் குருக், வெர்ரியர் எல்வின் போன்றவர்கள் இப்பணியைச் செய்ய, தமிழ்நாட்டில், எட்கர் தர்ஸ்டனும், ஓரளவுக்கு ஒயட்றெட்டும், மெக்கன்சியும் பழங்குடிகள் குறித்த பதிவை ஆங்கில நூல்களின் வாயிலாக வெளியிட்டனர்.  ஆங்கிலம் அறியாத தமிழர்கள் இவற்றைப் படித்தறிய முடியாத நிலையில், பிலோஇருதயநாத்தின் கட்டுரைகளும், நூல்களும் இக்குறையை ஓரளவுக்கு ஈடுசெய்தன.  தி.ஜ.ரங்கநாதன் ஆசிரியராகச் செயல்பட்ட போது ‘மஞ்சரி’ இதழ் பல மொழிபெயர்ப்புக் கட்டுரைகளின் வாயிலாக இந்திய மற்றும் தென்னிந்தியப் பழங் குடிகளைக் குறித்த அறிமுகத்தை, தமிழ் வாசகர் களுக்கு வழங்கியது.

இவற்றில் பெரும்பாலானவை நமக்கு அந்நியமான ஓர் அயற்பண்பாட்டை அறிமுகப் படுத்துவதை நோக்கமாகக் கொண்டவை.  சில இவர்களை அருங்காட்சியகப் பொருட்களாகப் பார்த்தன.

இந்திய விடுதலைக்குப்பின் பழங்குடிகளின் நலனைப் பேண மத்திய அமைச்சர் ஒருவர் நியமிக்கப் பட்டார்.  இவர்களின் மேம்பாட்டுக்காகத் தனி நிதி ஒதுக்கப்பட்டது.  மக்கள் தொகைக் கணக் கெடுப்பின் போது பழங்குடிகள் குறித்த செய்தி தனிப்பனுவலாகப் பதிவு செய்யப்பட்டது.  ஆனால் இவையெல்லாம் இம்மக்கள் வாழ்வில் பெரிய மாறுதல்களைச் செய்யவில்லை.

இன்று உலகமயம், தனியார்மயம் என்ற முழக்கங்களை நம்மையாள்வோர் முன்வைத்து நிற்கும் அரசியல் சூழலில் ‘அனுபவங்களின் நிழல் பாதை’ என்ற இந்நூல் வெளிவந்துள்ளது.

நூலாசிரியர்கள் இருவரும் தம் தேடலின் நோக்கம் என்னவென்று வரையறுத்துக் கொண்டதை...

“எங்கள் பயணத்தின் நோக்கம் பூர்விகக் குடிகள் மீதான புறத்தாக்குதல் குறித்த ஆய்விற் கானது அல்ல.  அவர்களது சடங்குகள் குறித்த பதிவிற்காகவே நாங்கள் பயணித்தோம்” என்று முன்னுரையில் குறிப்பிட்டுள்ளனர்.  ஆனால் இவ்வரையறையை அவர்கள் ஓரளவு கைவிட்டு விட்டனர்.  இதுவே இந்நூலின் சிறப்பாக அமைந்துவிட்டது.

நூலின் முன்னுரையில் மானிடவியலாளர் பக்தவத்சல பாரதி “இந்திய தேசியத்தின் மிக முக்கியமான தொல்குடிகளின் சடங்குகள், வழிபாடுகள், பாண்மரபு, ஓவியம், இசை, நிகழ்கலை, உணவு, தெய்வங்கள், வீடு, குடியிருப்பு, சமூக உறவுகள், புவியியல் கூறுகள் என எண்ணற்ற வழக்காறுகளும் மேலான கவனத்துடன் விவரிக்கப்பட்டுள்ளன.  இத்தகைய ஆவணம் நாட்டார் வழக்காற்றியல் கல்விப் புலத்தின் பயன் தன்மையை விரிவு படுத்தி உள்ளது.  இந்நூலின் முதன்மையான பங்களிப்பாகவும், பயனாகவும் இதனைக் கொள்ளலாம்” (அழுத்தம் எமது) என்று குறிப்பிட்டுள்ளது மிகவும் பொருத்தமான ஒன்று.

இந்நூலாசிரியர்களது இச்சமூகக் கண்ணோட்டம் இந்நூலின் உருவாக்கத் திற்கும் அதன் வெற்றிக்கும் அடிப்படைக் காரணமாக இருந்துள்ளது.  ஓர் அயற்பண் பாட்டினர் குறித்த தேடல் என்று தம் ஆய்வைக் குறுக்கிக் கொள்ளாமல், அம்மக்கள் மீதான உள்ளார்ந்த ஈடுபாடு கொண்டுள்ளனர்.  இது நூலின் முன்னுரையில் பின்வருமாறு வெளிப்படுகிறது.  சற்று நீளமாக அமைந் தாலும், தேவை கருதி முன்னுரையில் இருந்து சில பகுதிகளை மேற்கோளாகக் காட்டுவது அவசியமாகிறது.

“பேராசிரியர்களால் எழுதப்பட்ட இந்திய வரலாற்றுப் பாட நூல்கள், பேரரசர்களின் வாழ்க்கைக் குறிப்புகளையே வரலாறுகளாகப் பதிவு செய்துள்ளன.  சாலிவாகன மவுரிய, குப்த, சேர, சோழ, பாண்டியப் பேரரசுகளின் ஆவணங்களை வரலாற்று மைய நீரோட்டமாக மாற்றி வைத்துள்ளனர்.  இந்தியப் பழங்குடிச் சிற்றரசர்களின் வரலாறு எங்கும் பதியப் படவேயில்லை.”

இவ்வாறு குறிப்பிட்டுவிட்டு, சுர்ஜித் சின்கா என்பவர் மத்திய இந்தியாவில், கோண்டு, பூமியா, முண்டா போன்ற பழங்குடிச் சிற்றரசுகள் பேரரசு களுக்கு இணையாக ஆட்சி நடத்தியிருப்பதாகப் பதிவு செய்துள்ளதைச் சுட்டிக்காட்டுகின்றனர்.  தமிழ்நாட்டிலும், சங்ககாலச் சிற்றரசர்கள் குறித்த ஆய்வுகள் குறிப்பிடத்தகுந்த அளவில் நிகழவில்லை என்பது இதைப் படிக்கும் போது நினைவுக்கு வருகிறது.  புறநானூற்றில் குறுநில மன்னர்களைக் குறித்த பாடல்களே அதிக அளவில் உள்ளதாகக் கைலாசபதி குறிப்பிடுகிறார்.

தம் வாழ்வாதாரங்களையிழந்த நிலையில் இன்றைய பழங்குடி மக்கள் வயிற்றுப் பாட்டுக்காக இடம்பெயரும் அவலநிலையை,

‘பழங்குடிப் பகுதிகளில் சுரங்கப் பணிக்காகக் கிராமத்து மக்கள் தங்கள் பாரம்பரிய வாழிடங் களிலிருந்து வெளியேற்றப்படுகின்றனர்.  நமது புதிய சட்டமன்றக் கட்டடத்தைக் கட்டியவர்கள், தேசிய நாற்சக்கர சாலை போடுகிறவர்கள், பறக்கும் பாலங்கள் கட்டுகிறவர்கள் அனைவரும் இப்படித் துரத்தப்பட்ட மலைப் பழங்குடியினரே.  இவர்கள்தான் நகரங்களில் காலி சிமெண்ட் கோணிகளை மறைப்பாக்கி ஒருவர் ஊற்ற, மற்றொருவர் மடக்கிய கால்களுக்குள் மார்பை மறைத்துக் குருவிக் குளியல் குளிப்பவர்கள், நம் வனதேவதைகள்’

என்று வருந்துகின்றனர்.  தாம் கள ஆய்வு மேற் கொள்ளும் மக்கட்பிரிவினரிடம் கொண்டுள்ள உள்ளார்ந்த ஈடுபாடு, நூல் முழுவதும் விரவிக் கிடக்கிறது.  யந்திரத்தனமான கள ஆய்வை மேற் கொள்ளாதவாறு இவ்வுணர்வே இருவரையும் தடுத்துள்ளது.

books_pho_370நூலின் சிறப்புக் குறித்தும், நூலாசிரியர்களது அணுகுமுறை குறித்தும் இவ்வாறு நீட்சியாகக் கூறுவது தவிர்க்க இயலாததாகிவிட்டது.  இனி நூல் நுவலும் செய்திகளைக் காண்போம்.

* * *

‘பாலைவனக்கதை சொல்லி’ என்ற தலைப் பிலான முதல் இயல், கோமல் கோத்தாரி என்ற ஓர் ஆளுமையைச் சுவைபட அறிமுகம் செய் கிறது.  குறைந்த ஊதியத்தில், நாட்டார் கலைஞர் களைக் கொண்ட குழுவையமைத்து ஊதியம் ஈட்டும் பேராசிரியர்களைக் காணும் தமிழ் மக்களுக்கு இவ்வியலைப் படித்ததும் இப்படியும் ஓர் ஆய்வாளரா! என வியப்புத் தோன்றும்.

கோமல் கோத்தாரிக்கும் ரெங்கையா முருகனுக்கும் இடையே உருவாகி வளர்ந்த தொடர்பு குறித்துப் படிக்கும்போது சிறிது பொறாமையுணர்வும், ஏக்கவுணர்வும் ஒரு சேர என்னுள் தோன்றி மறைந்தன.

நூலில் விவரிக்கப்படும் வடகிழக்கு இந்தியப் பழங்குடிகளைப் புரிந்துகொள்ள உதவும் பின் புலமாக, ‘வடகிழக்கு இந்தியா சில அடிப்படைப் புரிதல்கள்’ என்ற இயல் துணை புரிகிறது.  எல்லைப் பாதுகாப்பு என்பதன் பெயரால், இங்கு நிறுத்தப் பட்டுள்ள இந்திய ராணுவம் இங்குள்ள பெண் களிடம் மேற்கொள்ளும் பாலியல் வன்முறைகள் குறித்த செய்தி, காஷ்மீரை நினைவூட்டுகிறது.  பங்களாதேஷ் நாட்டிலிருந்து இங்கு ஊடுருவி யவர்கள் பெரிய நிலவுடைமையாளர்களாக மாறி யுள்ளதையும் பூர்விகக்குடிகள் நிலங்களையிழந்து நிற்பதையும் படிக்கும் போது, இந்திய அரசு யாருக்குப் பாதுகாப்பு வழங்குகிறது என்ற கேள்வி எழுகிறது.

எஞ்சிய பன்னிரண்டு இயல்களும் பல்வேறு பழங்குடிகளின் வாழ்வியலையும், வழக்காறு களையும், கலை உணர்வையும் அறிமுகம் செய் கின்றன.  இவற்றை எல்லாம் விரிவாகக் கூறினால் நூலின் ஆன்மாவைச் சிதைத்தவனாவேன்.  எனவே சுருக்கமாக இவ்வியல்களில் பதிவாகியுள்ள சில செய்திகளை மட்டும் ‘உங்கள் நூலகம்’ வாசகர் களுடன் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன்.

*     அருணாசலப் பிரதேசத்தின் தலைநகரில் நடந்த ‘எக்ஸ்போ 2005’ கண்காட்சியில் பெப்சி, கோக் உட்பட எவ்விதக் குளிர்பானங் களும் விற்க அனுமதிக்கவில்லை.  ‘அபாங்’ என்ற பெயரிலான அரிசிக்கள் (ரைஸ் பீர்) மட்டுமே விற்க அனுமதிக்கப்பட்டது.  இது அம்மக்களின் பாரம்பரியக் கள்ளாகும் (தமிழ் நாட்டு நிலையை இதனுடன் ஒப்பிட்டுப் பார்த்துக் கொள்ளலாம்).

*     ‘மின்யோங்ஙாதி’ என்ற பழங்குடியினரின் ஜீம் என்ற பெயரிலான காட்டெரிப்பு வேளாண்மை, நிலம் பொதுச் சொத்தாக விளங்குதல், அவர் களது தானியக் கிட்டங்கியின் அமைப்பும் பயன்பாடும், ‘அபாங்’ என்ற பெயரிலான அவர்களது கதைப்பாடல், பிரம்மபுத்திரா ஆறு குறித்த செய்திகளும் வர்ணனைகளும்.

*     அஸ்ஸாமியரின் வீடமைப்பு, விருந்தோம்பல் பண்பு அங்குள்ள ஹயக்ரீவர் கோவிலில் அகத்தியருக்குச் சிலை இருத்தல் (சிலையின் புகைப்படமும் நூலில் இடம்பெற்றுள்ளது).  குடிப்பழக்கம், பெண்களின் நெசவுத்திறன், பாடப் பெறும் கதைப் பாடல்கள், நடனங்கள், சடங்குகள், கூத்துகள்.

*     மலை வளம் மிக்க அஸ்ஸாமிலிருந்து தார் பாலைவனத்திலுள்ள ‘ஜெய் சால்மர்’ என்ற ஊருக்கு நம்மை அழைத்துச் செல்கிறார்கள் ஆசிரியர்கள்.  இம்மக்களின் கமாய்ச்சா, சாரங்கி என்ற இசைக்கருவிகள், இவை இசைக்கப்பட்ட போது பெற்ற உணர்வை, ‘எந்தவித மரபியல் இசையையும் இடம் சார்ந்த சூழலோடு கேட்கும் போது மட்டுமே பரிபூரண திருப்தி அடைய முடியும் என்ற உண்மையை அன்று தான் உணர்ந்தோம்’ என்று குறிப்பிடுவது.

*     கடலைமாவு, பச்சை மிளகாய், பூண்டு, மஞ்சள் தூள் ஆகியனவற்றைத் தயிரில் போட்டுக் கொதிக்க வைத்துத் தயாரிக்கப்படும் ‘கடி’ என்ற கட்டியான உணவு, இது பரிமாறப் பட்டால் அத்துடன் உணவை முடித்துக் கொண்டு எழுந்துவிட வேண்டும் என்ற மரபு, எப்போதாவது பாலைவனத்தில் பெய்யும் மழைநீரை, மரபுசார் அறிவுத்திறன் வாயிலாகச் சேமித்தல், ஒட்டகத்தைப் பராமரிக்கும் சமூகத்தினர், ‘க்வாலா’ என்ற பெயரில் அழைக்கப்படும், ஒட்டகமேய்ப்பவர்கள், இவர்களுக்கும் ஒட்டகத்திற்கும் இடையில் நிலவும் நுட்பமான உறவு, ஒட்டகத்தின் பாதச் சுவடுகள் மணலில் பதிந்திருப்பதை வைத்து அதன் விலையை நிர்ணயித்தல்.

*     மத்திய பிரதேசத்தின் கோண்டு பழங்குடிகள், அவர்களின் உட்பிரிவுகள், இப்பகுதியில் வெர்ரியர் எல்வின் நிகழ்த்திய ஆய்வுகள் குறித்து கோண்ட் பழங்குடிகளின் கடுமையான விமர்சனம், ‘பானா’ என்ற இசைக்கருவி, அதை இசைத்துப்பாடும் ‘பர்தான்கள்’ என்ற பாணர்கள், இவர்களுக்கும் கோண்டுகளுக்கும் இடையிலான நெருக்கமான உறவு.

*     ஒரிசாவில் வாழும் கோண்டுகள், எண்பத்து நான்கு குலக்குறிகளைக் கொண்ட உட்பிரிவுகள் இவர்களிடையே உள்ளமை, இம்மக்கள் வாழும் பகுதியில் காணப்படும் கனிம வளங் களுக்காக ஸ்டெர்லைட், வேதாந்தா போன்ற நிறுவனங்கள் இப்பழங்குடிகளைத் துரத்தி யடிக்கும் கொடுமை, இப்பழங்குடிகளின் அறுவடை நடனம், ‘நாட்கூத்து’ என்ற பெயரிலான தெருக்கூத்து வழங்கும் கதைப் பாடல்கள்.

*     ஒரிசா பகுதியிலுள்ள சோனேபேடா பகுதி யிலுள்ள பூஞ்சியா பழங்குடிகள், அவர்களின் தாய்த்தெய்வமான துவார்ஷனி தேவி, இராமனின் வனவாசத்துடன் தொடர்பு படுத்திக் கூறும் நாட்டார் பாடல்களைப் பாடும் ‘டெபுகுனியா’ என்றழைக்கப்படும் பாடகன், ஏழு சகோதரர் வழிபாடு, சமையலறையைப் புனிதமாகக் கருதுதல், திருமணமாகிச் சென்றபின் தம் வீட்டுப் பெண்ணைக்கூட அயலவராகக் கருதி சமையலறைக்குள் அனுமதிக்காமை.

இவ்வாறு இந்நூலில் உள்ள அனைத்து இயல்களும் பல அரிய செய்திகளை வெளிப் படுத்தும் தன்மையன.  என்றாலும் என்னை மிகவும் ஈர்த்த இயல் ‘மயிலாரா லிங்கா’ என்ற தலைப் பிலான பன்னிரண்டாவது இயலாகும்.

வடகர்னாடகப் பகுதியின் பெல்லாரி நாலேரி மாவட்டங்களில் செம்மறி ஆடு மேய்த்து வாழும் ‘குருவா’ என்ற ஆயர்குலத்தினரிடம் நிலவும் ‘மயிலாரா லிங்கா வழிபாடு, இதனுடன் தொடர் புடைய சடங்கியல் யாத்திரை, இவ்யாத்திரையுடன் தொடர்புடைய வீரகாவிய கதைப்பாடல் மற்றும் சடங்கியல் வழிபாடு, இதைப்பாடும் நாடோடிப் பாடகர்கள், மயிலாரா திருவிழா என்பனவற்றை ஆவணப்படுத்திய செய்திகள் இவ்வியலில் விரிவாக இடம்பெற்றுள்ளன.

களஆய்வில் மிக எளிய மனிதராக ஆய்வாளனுக்குக் காட்சியளிக்கும் ஒருவர் அவர் வாழும் சமூகத்தில் அனைவராலும் மதிக்கப்படும் மிக உயர்ந்த மனிதராகவும் இருக்கலாம் என்ற உண்மையை ஸ்ரீ ஜெயசந்திர உடையாருடனான சந்திப்பு ஆய்வாளர்களுக்கு உணர்த்தியுள்ளது.  களஆய்வு மேற்கொள்வோர் கவனிக்க வேண்டிய செய்தி இது.

ஆந்திர மாநிலம் அனந்தப்பூர் மாவட்டத்தில் உள்ள தர்மாவரம் பகுதியில் நிகழ்ந்து வரும் உறுமலவாரு என்ற சடங்கியல் நிகழ்த்துக் கலையை ஆவணப்படுத்திய செய்தியை ‘உறுமுலவாரு’ என்ற தலைப்பிலான பதின்மூன்றாவது இயல் குறிப்பிடுகிறது.  இவ்வியலில் பயன்படுத்தியுள்ள ‘சிறுதெய்வ வழிபாடு’ என்ற சொல்லைத் தவிர்த் திருக்கலாம்.  ஏனெனில் ஒரு வகையான இன மையவாதச் சிந்தனையின் வெளிப்பாடே இச் சொல்.  நூல் முழுவதையும் படித்து முடிக்கும் போது நூலாசிரியர்கள் இனமையவாதச் சிந்தனைக்கு அப்பாற்பட்டவர்கள் என்ற உண்மை புலப்பட்டாலும், இச்சொல்லாட்சியைத் தவிர்த்திருக்கலாம் என்றே தோன்றுகிறது.

உறுமி இசைக் கருவியை இசைப்பவர்களே உறுமுலவாரு என்றழைக்கப்படுகின்றனர்.  பட்டியல் வகுப்பினரான மாலா சாதியின் உட்பிரிவில் அடங்கும் இக்கலைஞர்கள், அக்கம்மாதேவி காவியப்பாடலைப் பாடும் கலைஞர்களாகவே வாழுகின்றனர்.  தமிழ்நாட்டிலும் தெலுங்கு பேசும் கம்பளத்தார், அருந்ததியர் சமூகத்தினரே உறுமி இசைக்கும் சிறந்த கலைஞர்களாக இருப்பது நினைவில் கொள்ளத்தக்கது.  உறுமி இசைக் கலைஞரான நாகண்ணா என்பவருக்குச் செவ்வியல் கலைஞர்களுக்கே வழங்கப்பட்டு வந்த கலைக்கான, உயரிய விருதான தட்சண சித்ரா விருதை 2006இல் தட்சண சித்ரா நிறுவனம் வழங்கியுள்ள செய்தி குறிப்பிடத்தக்க ஒன்று.

தமிழ்நாட்டின் நாட்டார் கலைஞர்கள் ‘கலைமாமணி’ விருதுக்குப் படும்பாடும், இதைப்பெற இடைத்தரகர்களின் துணையை நாடி நிற்பதும் ஏனோ நினைவுக்கு வந்து தொலைகின்றன.

பழங்குடிகளின் வாழ்வில் சாரம் ஊட்டும் பொருள் மது.  இந்தியப் பழங்குடிகள் தம் வீடுகளில் தயாரித்துக் கொள்ளும் மது குறித்த அற்புதமான ஆவணமாக ‘ரைஸ் பீரும் வறுத்த அணிலும்’ என்ற கட்டுரை அமைந்துள்ளது.  சங்க இலக்கியங்களில் ‘இல்லடுகள்’ ‘தோப்பிக்கள்’ என்ற பெயரில் ரைஸ் பீர் இடம்பெற்றுள்ளது இங்கு நினைவுக்கு வருகிறது.

மதுத் தயாரிப்பில் காலனிய ஆட்சி நிகழ்த்திய குறுக்கீடு, விடுதலைக்குப் பின் உருவான பல்வேறு மாநில அரசுகளும் அதே முறையைப் பின்பற்றிய அவலம் ஆகியன இவ்வியலில் இடம்பெற்று உள்ளன.  தமிழ்நாட்டிலும்கூட அந்நிய நாட்டு மதுபானங்களைத் தடையின்றித் தயாரிக்கவும், விற்கவும், பருகவும் அனுமதி உள்ள நிலையில் கள்ளுக்கு மட்டும் தடையுள்ளது.  அதே நேரத்தில் அண்டை மாநிலங்களில் தடை எதுவுமின்றிக் கள் உற்பத்தி செய்யப்பட்டு, மக்களிடம் விநியோகிக்கப் படுகிறது.

பழங்குடிகளின் சமூக வாழ்வில் ஒரு முக்கிய பங்கு வகிக்கும் பாரம்பரிய மதுத் தயாரிப்பில் வியாபார சமூகமான பார்சிகளின் ஊடுருவல் ஏற்படுத்திய எதிர்மறை விளைவுகளையும் இவ்வியல் வெளிப்படுத்துகிறது.

அரிசிப்பீர் தயாரிப்பு தொடர்பான பழங் குடிகளின் தொல் அறிவியல் குறித்த நுணுக்கமான பதிவாக இவ்வியல் அமைந்துள்ளது.

* * *

இந்நூலைப் படித்து முடித்ததும் இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் வாழும் பழங்குடிகளின் வாழ்வை மிக அருகில் நின்று உற்றுப் பார்த்த உணர்வு ஏற்படுகிறது.  நூலில் இடம்பெற்றுள்ள புகைப்படங்களும், நூலாசிரியர்களின் எழுத்து முறையும் இதற்குத் துணை புரிந்துள்ளன.  நூலின் முன்னுரையில்,

“எடுத்துரைக்கும் முறையானது பயணக் கட்டுரை போன்று இல்லாமல் நிகழ்கால இனவரைவியலாக உள்ளது.  நம்மைக் கைப்பிடித்து நேரில் அழைத்துச் சென்று காட்டுவது போன்ற ஒரு காட்சிப் பனுவலாகவே அமைந்துள்ளது.  தமிழ் இனவரைவியல் கூறலில் இது ஒரு புதிய முயற்சியாகும்.” என்று பக்தவத்சலபாரதி குறிப்பிடுவது முற்றிலும் உண்மை.

ஆங்காங்கே சில சமூக அவலங்களையும் சுட்டிக்காட்டியுள்ளனர்.  சான்றாக, இந்தியாவின் தேசிய அவமானங்களில் ஒன்றான கையூட்டு குறித்தும், இராணுவம் மற்றும் அதிகார வர்க்கத்தின் அணுகுமுறை குறித்தும் அவர்கள் பதிவு செய்துள்ளதைக் குறிப்பிடலாம்.

வெர்ரியர் எல்வினின் எழுத்துக்கள் குறித்த எதிர்வினையாக கோண்டுகள் வெளியிட்ட ‘கோண்டு ஜாதி இதிகாஸ்’ என்ற நூல் குறித்தும், அதைப் பேராசிரியர் ராமச்சந்திர குகா கண்டு கொள்ளாததையும் குறிப்பிட்டுள்ளனர்.

நூலாசிரியர்கள் தம் கள ஆய்வு அனுபவத்தின் சாரமாக, இனிவரும் இனவரைவியல் மற்றும் நாட்டார் வழக்காற்றியல் ஆய்வாளர்களுக்குச் செய்தியொன்றை விடுத்துள்ளனர்.  அது வருமாறு:

“மேற்கத்திய ஆய்வாளர்களின் படைப்பு களை எச்சரிக்கையான மனோபாவத்துடன் உள்வாங்கிக் கொண்டு தன்னளவு சிந்தனை முறையில் ஆய்வை மேற்கொள்ளவேண்டிய நிர்ப்பந்தம் பல தடவை எங்களது அனுபவத்தில் ஏற்பட்டுள்ளது.  அதே போலக் கருவி நூல் களின் துணைகொண்டு இனவரைவியல் ஆய்வு மேற்கொள்ளும்போது நூலில் படிப் பதற்கும், நேரில் காண்பதற்கும், சம்பந்த மில்லாமல் போன ஆய்வையும் காண நேர்ந்துள்ளது.  (பக்கம் 228).  பழங்குடி மக்களை மையமாகக் கொண்ட, ‘மக்கள் இனவரைவியல்’ சார்ந்து தம் பயணத்தின் நோக்கம் அமைந்ததாக நூலாசிரியர்கள் குறிப்பிட்டுள்ளனர் (பக்கம் 412).  இது உண்மை என்பதை நூலைப் படித்து முடித்ததும் ஏற்றுக்கொள்ள முடிகிறது.  ஆனால் ‘பயணக் கட்டுரை’ என்று பதிப்பகத்தார் குறிப்பிட்டுள்ளது நெருடலாக உள்ளது.

இந்நூலுக்கு உந்து சக்தியாக விளங்கிய தேசிய நாட்டுப்புறவியல் நிறுவனத்தின் இயக்குநர் எம்.டி.முத்துகுமாரசாமியையும், ஓர் ஆழமான முன்னுரையெழுதியுள்ள மானிடவியலாளர் பக்தவத்சலபாரதியையும் தீவிர வாசிப்புணர்வு கொண்ட தமிழ் வாசகர்கள் பாராட்டுவார்கள் என்பதில் ஐயமில்லை.

இந்நூலாசிரியர்கள் பயணித்த பாதையில் சென்று மேலும் தரவுகளைத் திரட்டினால், தமிழக சமூக பண்பாட்டு வரலாறு தொடர்பான ஒப்பீட்டு ஆய்வுகளுக்கு இடம் உள்ளது.

Pin It