ஓர் ஆவணமாக...

“தமிழகத்தில் மணல் கொள்ளை: பொதுநல வழக்கும் தோழர் ஆர்.நல்லகண்ணுவின் வாதங்களும்” என்ற இந்நூலைத் தயாரித்தளித்துள்ள வழக்கறிஞர்கள் எஸ். அருணாசலத்தையும் த. முருகன் அவர்களையும் இதனைச் சிறப்பாக அச்சடித்து வெளிக்கொணர்ந்துள்ளபாவை பப்ளிகேஷன்ஸ் மற்றும் என்.சி.பி.எச் பொறுப்பாளர்களையும் பாராட்டுகிறேன். ஒரு சமகால வரலாற்று ஆவணமாக இந்நூல் உருவாகியுள்ளது.  தாமிரபரணி நதியில் நடந்து வந்த மணல் கொள்ளைக்கு எதிராகத் தமிழகத்தின் முதுபெரும் தலைவர் தோழர் நல்லகண்ணு அவர்கள் 2010 செப்டம்பரில் ஒரு பொதுநல வழக்கைத் தாக்கல் செய்தார்.  அவ் வழக்கு விசாரணைக்கு வந்த நாட்களில் அவரே நேரில் வாதாடி, ஐந்து ஆண்டுகளுக்குத் தாமிர பரணியில் மணல் அள்ளுவதற்குத் தடை விதிக்கும் தீர்ப்பைப் பெற்ற ஒரு மிகப்பெரிய வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வு இந்நூலில் அதன் எல்லா விவரங்களுடன் பதிவு செய்யப்பட்டுள்ளது. 

மணல் கொள்ளைக்கு எதிரான வழக்கு, தோழர் நல்லகண்ணுவின் வாதங்கள், நீதிமன்றச் சிறப்புக் குழுக்கள், மணல் கொள்ளை நடந்த இடங்களைப் பார்வையிட்டமை, முடிவில் வழங்கப்பட்ட தீர்ப்பு, அத்தீர்ப்பை மறுபரிசீலனை செய்யுமாறு தமிழக அரசு கேட்டுக் கொண்டமை, அதனை ஏற்காமல் தீர்ப்பு உறுதிப்படுத்தப்பட்டமை என வழக்குத் தொடர்பான எல்லாச் செய்திகளும் இந்நூலில் தொகுக்கப்பட்டுள்ளன.  நூலைத் தயாரித்தவர்கள் இருவரும் வழக்கறிஞர்கள் என்பதால் வழக்கு தொடர்பான நீதிமன்ற நிகழ்வுகளே நூலில் மையமான இடத்தை வகிக்கின்றன.  ஆயின் வழக்கைத் தொடர்ந்தவர் தோழர் நல்லகண்ணு என்ற விவசாயிகளின் தலைவர் என்பதால் அவர் இப்பிரச்சினையைக் கையில் எடுப்பதற்கான காரணங்கள், இவ்வழக்கு தாக்கல் செய்யப் படுவதற்கு முன்னும், வழக்கு நடந்த நாட்களிலும் மணல் கொள்ளைக்கு எதிராக நடந்த மக்கள் போராட்டங்களும் நூலில் கூடுதல் முக்கியத்துவத் துடன் எடுத்துரைக்கப்பட்டுள்ளன.  எனவே வழக்கு பற்றிய ஆவணமாக மட்டுமாக இல்லாமல், மணல் கொள்ளைக்கு எதிரான மக்கள் போராட்டங்களின் ஆவணமாகவும் இந்நூல் அமைந்துள்ளது.

நெல்லையிலும் மதுரையிலும், தோழர் நல்லகண்ணுவோடு உடன் நின்று உழைத்த வழக்கறிஞர்கள், சுந்தரனார் பல்கலைக்கழகப் பேராசிரியர்கள், உடன் நின்று உழைத்த நெல்லை, தூத்துக்குடி, மதுரை மாவட்டக் கட்சித் தோழர்கள் ஆகியோர் குறித்த சிறந்ததொரு பதிவாகவும் இந்நூல் அமைந் துள்ளது.  தாமிரபரணி என்ற நதியைப்பற்றிய பதிவாக மட்டுமின்றி, உலகமயமாக்கம், முதலாளியம் ஆகியவை வேகமாகப் பரவிவரும் சூழல்களில் தமிழ்நாட்டு நதிகளைப் பாதுகாப்பதற்கான நடுத்தர மக்கள், அறிவுத்துறையினர் உள்ளிட்ட வெகு சனங்களின், குறிப்பாக விவசாயிகளின் போராட்டங் களின் தொடக்கத்தை இந்நூல் குறிக்கிறது என்றும் கூறலாம்.

ஓர் ஆயுதமாக...

இந்நூல் நோக்கத்தை நூலாசிரியர்கள் ஓரிடத்தில் மிக அழகாக எடுத்துக்காட்டுகிறார்கள்.  “உழைப்பவனை முன்நிறுத்தும் முதல் பிரச்சினை என்கிறவகையில் இந்த நிபுணர்கள் குழு அறிக்கையின் சாராம்சத்தை அவர்கள் அறிந்துகொள்கிறவகையில் இதை நாங்கள் முன்வைக்கக் கடமைப்பட்டிருக் கிறோம்.  மணற்கொள்ளையர்கள் மட்டுமல்லாமல் இயற்கையைச் சுரண்டும் பல்வேறு கொள்ளையர் களிடமிருந்து தம்மை மீட்டெடுக்கவும் மண்ணைக் காப்பாற்றவும், தேவைப்படும்போது திரண்டு எழுவதற்கும் இந்தக் குறிப்பேடுகள் பயன்படலாம்”.  மிகவும் அடக்கமாக ஆனால் மிகச் சரியாக நூலின் நோக்கம் இந்த வரிகளில் பதிவாகியுள்ளது.  இந்த நூல் உழைக்கும் மக்களைச் சென்று சேர வேண்டும் என்பதில் நூலாசிரியர்கள் அக்கறை காட்டியுள்ளார்கள்.  நூல் எளிய மொழியில் எவரும் புரிந்துகொள்ளக்கூடிய நடையில், சட்ட விவரங்கள் வாசிப்போரைச் சிரமப்படுத்தாமல், எழுதப்பட்டிருக்கிறது.  தோழர் நல்லகண்ணுவின் வழக்கும், வழக்கின் வாதங்களில் அவரது உணர்ச்சி வசப்பட்ட பங்கேற்பும் ஆச்சரியத்திற் குரியன

அல்ல.   ஏனெனில் 1940-50 களிலிருந்து அவரது வாழ்வும் செயல்பாடுகளும் இந்த மண்ணின் விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்கள் நலன் களை முன்னிறுத்தியவை.  அந்த விவசாயப் பெருங்குடி மக்களின் சுயமரியாதை, அவர்களின் பொருளாதார நலன்கள், சாதி ரீதியான அவமதிப்புகளுக்கு எதிரான முன்னெடுப்புகள் ஆகியவற்றோடு நேரடியாகத் தொடர்பு கொண்டது அவரது வாழ்க்கை.   எனவே 80 ஆம் ஆண்டுகளுக்குப் பிறகு மத்திய மாநில அரசுகளின் உலகமயமாக்க அரசியல் தமிழகத்தின் நதிகளை, நதி நீரை, நதிப்படுகைகளின் மணல் செல்வத்தை, கனிம வழங்கலைக் கொள்ளையடிக்க முயலும்போது தோழர் நல்லகண்ணு அவரது வயதையும் பொருட்படுத்தாமல் மீண்டும் போர்க் கோலம் பூணவேண்டிய அவசியம் ஏற்பட்டிருக்கிறது. 

முன்பு, பட்டாதார விவசாயிகளை நிலத்தை விட்டு வெளியேற்றாதே, அளக்கும் நெல்லுக்கு ரசீது கொடு, உழுபவனுக்கு நிலம் போன்ற கோஷங்களோடு அவர் இந்த வட்டார உழைக்கும் மக்களை நில உடைமையாளருக்கும் மடங்களுக்கும் எதிராகத் திரட்டினார்.  இப்போது விவசாயிகள், கிராமப்புற மக்கள், நகர்ப்புற மக்கள் அனைவரையும் ஒருசேரப் பாதிக்கும் மணல் கொள்ளை களுக்கு எதிராகப் போராட்டக்களத்தில் இறங்கியுள்ளார்.  விவசாயி களையும் விவசாயத் தொழிலாளர்களையும் முதலாளியமே அரசியலுக்கு இட்டு வரும் என்று மார்க்ஸ் குறிப்பிடுவார். 

sand_370அது முன்னெப்போதையும் விட இப்போது தீவிரமாகத் தமிழகத் தில் நடந்து வருகிறது.  எனது கட்சித்தோழர்கள், இளைஞர்கள் (வீரவநல்லூர் சுடலைமுத்து முதலானோர்) தாமிர பரணி மணற்கொள்ளையர்களால் வெட்டிக்கொலை செய்யப் பட்டுள்ளார் கள் என்று அவர் வாதிட்ட செய்தியை அறிந்து கொள்ளும்போது, தோழமை என்னும் உணர்வில் இந்தப் பழம்பெரும் தோழருக்கு உள்ள அழுத்தமான ஈடுபாட்டையும் இந்த வழக்கில் அவர் உணர்வுபூர்வமாகப் பங்கேற்றதன் இயக்கம் சார்ந்த பின்புலத்தை யும் நம்மால் உணரமுடிகிறது.  மணற் கொள்ளையர்கள் கொள்ளையர்களாக மட்டுமின்றிக் கொலை காரர்களாகவும் உலா வருகிறார்கள் என்பதை உணரமுடிகிறது.

“தோழர் ஆர்.என்.கே அவர்களின் விவாதமும் முறையீடும் வய தான தாமிரபரணி தாய்க்காக மன்றாடும் தனயனது விவாத மாகவும் பெற்ற குழந்தையைக் காப்பாற்றத் துடிக்கும் தாயின் பரிவான குரலாகவும் நீதிமன்றச் சுவர்களில் மோதி எதிரொலித்தன” என்று நூலாசிரியர்கள் மிக அற்புதமாக எழுதி  யுள்ளார்கள்.  தோழர் நல்லகண்ணு அவர்கள் வழக்கு மன்றத்திற்கு வாதிட வந்த வேளைகளில் வழக்கறிஞர்களும் பொதுமக்களும் நீதிபதிகளும் அவருக்கு வழங்கிய மரியாதையை நூலாசிரியர்கள் ஆறுமுக நாவலர்-வள்ளலார் வழக்கோடு ஒப்பிட்டுக்காட்டி யுள்ள முறைமை மிகச் சிறப்பாக அமைந்துள்ளது. 

தோழர் நல்லகண்ணு அவர்களுக்கு வழக்கு மன்றம் காட்டிய மரியாதை உண்மையில் மணற்கொள்ளையர்களுக்கு மக்கள் வழங்கும் பொதுத் தண்டனையைக் குறித்து நிற்கிறது என்று கூறவேண்டும்; மக்களின் சாபம் மணற்கொள்ளையர்களைப் பற்றி நிற்கிறது என்பதை அது குறிப்பதாகவே எனக்குத் தோன்றுகிறது.  சாபம் என்பதை சமயங்கள் சொல்லும் பொருளில் நான் இங்குப் பயன்படுத்தவில்லை.  மணற்கொள்ளையர் களுக்கு எதிரான மக்கள் வெறுப்பின் அடர்த்தியைக் குறிக்கவே பயன்படுத்துகிறேன்.  இத்தனை தீவிரமாக மணற்கொள்ளையர்களை மக்கள் வெறுக்கத் தொடங்கும்போதே நதிகளுக்கும் நதியின் மணலுக்கும் உண்மையான பாதுகாப்பு கிடைக்கும் என்று நம்மால் கூறமுடியும்.

இயற்கையும் மனிதரும்

இயற்கை என்பது உண்மையில் மானுட சமுதாயத்தைப் பொறுத்தமட்டில் வெறுமனே சுற்றுப்புறச் சூழல் அல்ல.  இயற்கையின் தொடர்ச்சி தான் மனிதன்.  இயற்கையிலுள்ள அதே பொருட்கள் தாம் மனிதரிலும் உள்ளன.  அந்தக் காலத்தில், இயற்கை என்பதைப் பஞ்ச பூதங்கள் என்றார்கள்.  அதே பஞ்ச பூதங்களிலிருந்துதான் மனிதனும் தோன்றியுள்ளான் என்பதுதான் பண்டைய இந்தியத் தத்துவம்.   யோக சிந்தனையில் அண்ட பிண்ட ஒற்றுமை என்று பேசுவார்கள்.  அண்டம் எனில் பிரபஞ்சம், பிண்டம் எனில் மனித உடல், இவை வேறு வேறானவை அல்ல என்பதே பண்டைய இந்தியர் மெய்யியல்.  தமிழர் தத்துவமும் அப்படியே கூறுகிறது. 

எனவேதான் “உணவெனப்படுவது நிலத்தொடு நீரே, நீரும் நிலனும் புணரியோர் இங்கு உடம்பும் உயிரும் படைத்திட்டனரே” என்று புறநானூறு கூறியது.  பண்டைத் தமிழர்கள் இயற்கையிலிருந்தே சமூக வாழ்வின் ஒழுக்கங்களை வருவித்தனர்.  எனவே தான் குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை போன்ற நிலங்களைச் சார்ந்து திணை ஒழுக்கங்கள் வரையறுக்கப்பட்டன.  நிலம் சார்ந்தவை தமிழரின் முதல் ஒழுக்கங்கள்.  நிலமும் பொழுதும் முதற்பொருட்கள் எனப் பண்டைத் தமிழ் இலக்கண நூலான தொல்காப்பியம் வரை யறுத்தது.  எனவே இயற்கையை மனிதரின் சுற்றுப்புறச் சூழல் என்று சொல்லுதல் கூடாது.  மனித இயல்பு, மனிதரின் உள்ளுறை ஆற்றல்கள் அவன் வாழும் இயற்கையைச் சார்ந்து அமை கின்றன.  

மனித இயல்பின் முதல் அடிப்படைகளை இயற்கைதான் வழங்குகிறது.  மனிதன் இயற்கையின் ஒரு பகுதியாக அதன் தொடர்ச்சியாக வாழ்கிறான்.  அதிலிருந்து வேறாகியும் வாழ்கிறான்.  மனிதன் இயற்கையோடு “ஒன்றாகி வேறாகி உடனாகி” வாழ்கிறான் என்று சொல்லியாக வேண்டும்.  கடவுள் என்ற சொல்லுக்குக் கடந்தவர் என்றும், உள்ளே இருப்பவர் என்றும் விளக்கம் சொல்லு வார்கள்.  அது கடவுளுக்குப் பொருந்துமோ பொருந்தாதோ, உண்மையில் இயற்கைக்குத்தான் பொருந்தும்.  இயற்கை மனிதனின் உள்ளேயும் உள்ளது.  மனிதனைக் கடந்தும் உள்ளது.  இயற்கையை அழித்தல் என்பது மனிதரின் உள்ளுறை ஆற்றல் களை அழிப்பதாகும்.  இன்று உலக முதலாளியத் தோடு கைகோத்துக்கொண்டு தமிழ் முதலாளிகள், தாமிரபரணிக் கரை முதலாளிகள் இயற்கையை அழிக்கின்றனர் எனில் அவர்கள் தமிழ் மக்களின், தாமிரபரணிக்கரை மக்களின் உள்ளுறை ஆற்றல் களை அழிக்கின்றனர் என்றே பொருள்.

இயற்கை என்பது சடப்பொருள் அல்ல

பண்டைய மக்களின் மெய்யியல் நோக்கு இயற்கையை உயிரற்ற சடப்பொருளாக்குவதை ஏற்காது.  ஆனால் மனித குலம் படிப்படியாக இயற்கையைச் சடப்பொருளாக்கும் செயலில் ஈடுபட்டது.  இயற்கையைச் சடப்பொருளாக்குதல் என்ற நிகழ்வு வரலாற்றில் நீண்ட நெடிய காலமாக நிகழ்ந்து வந்திருக்கிறது.  உயர் திணை/ அஃறிணை/ உயிரற்ற பொருள்/ உயிருள்ள பொருள் என்ற வேறுபாடு எப்போது தோன்றியதோ அப்போதே இயற்கையைச் சடப்பொருளாக்கும் நிகழ்வும் தொடங்கிவிட்டது.  “அவன், அவள், அது எனும் அவை” என்று பகுத்தனர்.  உடலை இழிந்ததாகக் கருதத் தொடங்கியபோதே இயற்கையைச் சடப் பொருளாக்கும் நிகழ்வும் தொடங்கிவிட்டது. 

இயற்கை என்பது உயிரற்றது என்று கருதத் தொடங்கி, அது எனது உடைமை, அது எனது சொத்து, அது எனது கருவி, அது ஒரு சரக்கு, சந்தைப்பொருள் என்று அடுக்கடுக்காக இயற்கைக்கு விரோதமான கருதுகோள்கள் தோன்றிப் பெருகத் தொடங்கிவிட்டன.  இயற்கையைச் சடப்பொரு ளாக்குதலும், அதனைத் தனி உடைமையாக்குதலும், மனிதர்கள் சமூகத்திலிருந்து பிரிவுபட்டுத் தனித் தனி மனிதர்களாவதும் ஆகிய மூன்று நிகழ்வுகள் வரலாற்றில் ஒருசேர நிகழ்ந்தன.  பழங்குடிமக்கள் இயற்கையைச் சடப்பொருள் எனக் கருதுவதில்லை.  அதனைச் சொத்து என்றுகூட அவர்கள் கருது வதில்லை.  நிலம், நீர், காற்று போன்ற எல்லோருக்கும் பொதுவான இயற்கை வளங்களை, வாழ்க்கை ஆதாரங்களைச் சமீபகாலத்தில் மேற்கத்திய அறிஞர்கள் “சமூக மூலதனம்” (ளுடிஉயைட ஊயயீவையட) என்ற சொல்லால் குறிப்பிட்டு வருகின்றனர்.

தமிழர் அடையாளமும் மணற்கொள்ளைக்கு எதிரான போராட்டங்களும்

இந்தப் புது ஆண்டில் ஜனவரி இரண்டாம் நாள் தினமணி இதழின் நடுப்பக்கத்தில் “அணங்கு” பத்திரிகையின் ஆசிரியர் தோழியர் மாலதி மைத்ரி அவர்கள் “போராட்டங்களால் உருவாகும் புதிய அடையாளம்” என்ற தலைப்பில் ஒரு கட்டுரை எழுதியுள்ளார்.  2011 ஆம் ஆண்டில் தமிழகத்தில் எழுந்துள்ள மூன்று போராட்ட இயக்கங்களைப் பற்றியதாக இக்கட்டுரை அமைந்துள்ளது.  பேரறி வாளன், முருகன், சாந்தன் ஆகிய மூவரின் தூக்குத் தண்டனையை நீக்கவேண்டும் என்ற போராட்டம், கூடங்குளம் அணு உலைக்கெதிரான போராட்டம், முல்லைப் பெரியாறு அணை குறித்த போராட்டம் ஆகிய மூன்று போராட்டங்களைப் பற்றி மாலதி மைத்ரி இக்கட்டுரையில் எழுதியுள்ளார்.  இந்தப் போராட்டங்களின் ஊடாக ஒரு புதிய தமிழ் அடையாளம் உருவாகி வருகிறது என்று மாலதி மைத்ரி அக்கட்டுரையில் வாதிடுகிறார். 

தாமிரபரணியில் மணல் கொள்ளைக்கு எதிராக, தோழர் நல்லகண்ணு அவர்கள் துவக்கியுள்ள இப் போராட்டத்தையும் நான் இதே வகைப்பட்டதாகக் கருதுகிறேன்.  தமிழ் அடையாள அரசியல் என்ற ஒன்று ஒரு நூற்றாண்டுக் காலத்திற்கும் மேலாகத் தமிழ் மக்களிடையில் வழங்கிவருகிறது.  ஆயின் பலவேளைகளில் நம்மிடையில் வழங்கும் தமிழ் அடையாளம் தமிழரின் பண்டைப் பெருமிதங்களின் மீது கட்டி எழுப்பப்பட்டுள்ளது.  சங்க இலக்கியம், பாராண்ட மூவேந்தர்கள், மதுரையை எரித்த கண்ணகியின் கற்பு, ஆரியப்படை கடந்த நெடுஞ் செழியன், ராசராசச் சோழன் போன்றவை எல்லாம் அத்தகைய தமிழ்ப்பெருமிதங்களின் மைல்கற்களாக முன்வைக்கப்படுகின்றன.  இத்தகைய தமிழ்ப் பெருமிதங்கள் தமிழரைச் சுயமரியாதை கொள்ள வைத்தன என்று சிலர் வாதிடலாம். 

ஆனால் அப்பெருமிதங்களின் வழியான தமிழ் அடையாள அரசியல் சமீபகாலங்களில் கடுமையான நெருக்கடி களைச் சந்தித்துள்ளன என்பதை நாம் உணர்ந்து வருகிறோம்.  ஈழத்தமிழர்களின் பெருந்தோல்விகளும் திராவிடக் கட்சிகளின் ஊழல் சூறையாட்டங்களும் தமிழ் அடையாள அரசியலுக்கு ஏற்பட்டுள்ள அடிப்படையான நெருக்கடிகளைச் சுட்டிக்காட்டு கின்றன.  உலகமயமாக்க முதலாளியத்திற்குத் தமிழ் நாட்டு விவசாயிகள் பலியாகி அழிந்து வருவதைத் தமிழ் அடையாள அரசியல்வாதிகளால் எவ் வகையிலும் தடுக்க முடியவில்லை என்பதைக் கண்கூடாகக் கண்டு வருகிறோம்.  தமிழர், திராவிடர் என இதுகாறும் பேசிவந்தவர்களிடையில் தமிழ் நாட்டு நில ஆதாரங்கள், நீராதாரங்கள், கனிம வளங்கள் பற்றிய ஓர் அணுகுமுறை கிடையாது.  எப்படித் தமிழர் மானத்தை, ஈழத்தமிழர் உயிர் களை விலைபேசி விற்றழித்தனரோ, அதுபோலவே தமிழ் நிலத்தையும் நீரையும் வெட்டி விலைபேசி விற்றழித்து வருகின்றனர்.  திராவிட இயக்கக் கட்சிகளுக்குத்  தமிழ்நாட்டு விவசாயிகள் பற்றிய ஓர் அணுகுமுறை எப்போதுமே இருந்தது கிடையாது. 

இத்தகைய சூழல்களில்தான் தோழி மாலதி மைத்ரி குறிப்பிடும் போராட்டங்களின் ஊடாக உருவாகி வரும் தமிழ் அடையாளம் என்ற புதிய எதார்த்தத்தை நாம் சந்தித்து வருகிறோம்.  இது பெருமிதங்களின் மீது கட்டப்பட்ட தமிழ் அடையாளம் அல்ல.  இது நெருக்கடிகளின்மீது கட்டப்படும் தமிழ் அடையாளம்.  போராட்டங்களின்மீது கட்டப்படும் தமிழ் அடையாளம்.  போராட்டங்களின் ஊடாகக் கட்டப்பட்டு வரும் தமிழ் அடையாளத்தின் ஒரு குறியீடாக தோழர் நல்லகண்ணுவின் தாமிரபரணிப் போராட்டம் அமைகிறது என்ற முடிவுக்கு நாம் இங்கு வரமுடிகிறது.  போலந்தில் 1860-61 ஆம் ஆண்டுகளில் தேசிய விடுதலைக்கான போராட்டங்கள் எழுந்தபோது மார்க்ஸ் அதனை அமோகமாக ஆதரித்தார்.  அப்படி ஆதரிக்கும்போது அவர் கூடுதலாக, தேசிய விடுதலை எழுச்சிகள் தமது வேலைத்திட்டங்களை விவசாயிகளை மையப் படுத்தி அமைத்துக் கொள்ளவேண்டும் என்று குறிப் பிட்டார்.  முதற்சுற்றில் நெருக்கடியை எட்டியுள்ள தமிழ் அடையாளம் தனது வேலைத்திட்டங்களை விவசாயிகள் மற்றும் உழைக்கும் மக்களை முன்னிறுத்தி உருவாக்கிக்கொண்டால்தான் அது தன்னை நிலைப்படுத்திக் கொள்ளமுடியும் என்பதை சமீப காலங்களில் நிதர்சனமாகக் கண்டு வருகிறோம்.

Pin It