படித்துப் பாருங்களேன்...

(Karashima Noboru (2016) Medieval Religious Movements and Social change : A Report On The Indian Epigraphical Study. The Toyo Bunko, Tokyo.)

இடைக்காலத் தமிழக வரலாற்றில் ஆர்வம் கொண்டோர், நன்கு அறிந்த வரலாற்றறிஞர் நொபுரு கரோஷிமா. சப்பான் நாட்டைச் சேர்ந்த இவர் தமிழக வரலாற்று வரைவுக்கு சிறப்பான பங்களிப்பைச் செய்துள்ளார்.

இவரது ஆய்வுப்பணி குறித்து, இந்நூலின் முன்னுரையில் பேராசிரியர் எ. சுப்பராயலு பின்வருமாறு குறிப்பிட்டுள்ளார்:

noboru karashima bookசோழர் மற்றும் விஜயநகர ஆட்சிக் காலத்தைய சமூகப் பொருளியல் அமைப்புகள் குறித்த ஆய்வுகளை, கல்வெட்டுச் சான்றுகளின் துணையுடன் இவர் நடத்தி யுள்ளார். இவரது ஆய்வுக்கான முக்கிய தரவுகளாகக் கல்வெட்டுகள் அமைந்தன. ஒன்றிரண்டு கல்வெட்டு களை மட்டும் சான்றாகக் கொள்ளாமல் குவியல் முறை யியலைப் பயன்படுத்தி ஏராளமான கல்வெட்டுக்களைச் சான்றாகக் கொண்டார்.

இடைக்காலத் தமிழகத்தின் வேளாண் கட்டமைப் பையும், வருவாய் அமைப்பையும் மையமாகக் கொண்டே இவரது ஆய்வுகள் நிகழ்ந்தன. அதே நேரத்தில் சமுதாயம், அரசியல் தொடர்பான செய்திகளை வெளிக்கொணர்வதிலும் ஆர்வம் காட்டினார்.

பேராசிரியர் சுப்பராயலு குறிப்பிடும் அறிமுகத்தின் வெளிப்பாடாகவே, கரோஷிமா பதிப்பித்துள்ள இந்நூல் அமைந்துள்ளது. அரை நூற்றாண்டுக் காலமாக அவர் மேற்கொண்டிருந்த ஆய்வுப்பணியில் பல ஆய்வுத் திட்டங்களைப் பொறுப்பேற்று நடத்தி வந்தார். அவற்றுள் ஒன்றே, இடைக்கால சமய நிறுவனங்களை மையமாகக் கொண்ட இவ் ஆய்வாகும்.

2009-ஆம் ஆண்டில் சப்பானிய அரசு நல்கிய நிதி உதவியுடன், இவ் ஆய்வுத்திட்டம் அவரால் வழி நடத்தப்பட்டது. இத்திட்டத்தில் தமிழ்நாட்டைச் சேர்ந்த வரலாற்றுப் பேராசிரியர்கள் எ. சுப்பராயலு, ப.சண்முகம் ஆகிய இருவரும் இணைந்து செயல் பட்டமை தமிழ் அறிவுலகம் பெருமைப்பட வேண்டிய ஒன்று.

இவ் ஆய்வுத்திட்டத்தின் ஒரு பகுதியாகச் சில கருத்தரங்குகளை அவர் நடத்தியுள்ளார். இக்கருத்தரங்குக் கட்டுரைகள் சிலவற்றின் தொகுப்பாக இந்நூல் உருப் பெற்றுள்ளது.

இந்நூலைப் பதிப்பித்து, முன்னுரையும் எழுதி முடித்த கரோஷிமா, இந்நூல் அச்சுவடிவம் பெறும் முன்னர் காலமானார்.

இச்சுருக்கமான அறிமுகச் செய்திகளையடுத்து இந்நூலுக்குக் கரோஷிமா எழுதியுள்ள அறிமுக உரையைக் காண்போம்.

அறிமுக உரை

தம் அறிமுக உரையில், இந்நூலின் மையப்பொருள் தொடர்பான பின்வரும் செய்திகளைக் கரோஷிமா குறிப்பிடுகிறார்:

அவரும் சுப்பராயலு, சண்முகம் ஆகிய இருவரும் இணைந்து, பிற்காலச் சோழர்கள், பிற்காலப் பாண்டியர்கள், விஜயநகர ஆட்சிக்கால (கி.பி.12 முதல் கி.பி.14 வரை) தென்இந்தியாவில், குறிப்பாகத் தமிழகத்தில் நிகழ்ந்த சமூக, பொருளாதார மாற்றங்களை ஆராய்ந்துள்ளனர்.

அவ்வாறு ஆய்வு செய்தபோது புதிய சாதிகளின் உருவாக்கம், மலைவாழ் மக்கள் உள்ளிட்ட அடித்தள சமூகப் பிரிவினர் அதிகாரம் பெற்றமை என்பன தெரியவந்தது.

அதே நேரத்தில் இதுபோன்ற மாற்றங்கள் சமயங்களிலும் நிகழ்ந்துள்ளது. வைணவத்தில் பிளவு ஏற்பட்டு தமிழ் வைணவம் தோன்றியது. இதுபோன்றே, தமிழ் சைவசித்தாந்தமும், வீரசைவமும் நிலைபெற்றன. தமிழ் சித்தர்களும் அறிமுகம் ஆனார்கள்.

சமூக பொருளியல் மாறுதல்களுக்கும், சமய வளர்ச்சிக்கும் இடையே நெருக்கமான உறவிருப்பதாக எங்கள் மூவர் குழு கருதியது.

சங்கரர், ராமானுஜர், மத்துவர், மெய்கண்டார், சிவவாக்கியர் ஆகியோரின் படைப்புகள் தென்இந்தியச் சமயத்தின் தத்துவார்த்த வளர்ச்சியை நாம் அறியும்படிச் செய்கின்றன. இச்சமய சிந்தனை வளர்ச்சியின் விளைவாக சமய இயக்கங்களும் தோன்றியிருக்கும் என நாம் உய்த்துணரலாம்.

என்றாலும், வரலாற்று அடிப்படையில் இச்சமய இயக்கங்களையும், இப்புதிய சிந்தனைகளையும் அரசும் மக்கள் பிரிவும் எவ்வாறு எதிர்கொண்டன என்பதையும், சமூக மாறுதல்களுக்கும், இச்சமய சிந்தனைகளுக்கும் இடையிலான உறவை இணைத்துப் பார்க்க முடியுமா? என்பதை ஆராயவேண்டும்.

இவ் ஆய்வை மேலும் முன்னெடுத்துச் செல்ல மடங்களைக் குறித்த கல்வெட்டுகளின் மீது இவ் ஆய்வுக்குழு தன் பார்வையைத் திருப்பியது. எட்டாம் நூற்றாண்டு தொடங்கி பதினெட்டாம் நூற்றாண்டு வரையிலான காலத்தில் மடங்கள் நிறுவப்பட்டமை, இவற்றிற்கு மானியம் வழங்கப்பட்டமை குறித்த கல்வெட்டுகள் உள்ளன.

எட்டாம் நூற்றாண்டுக் கல்வெட்டுகளில் மடம் என்பது தம் குருவுடன் துறவிகள் தியானம் செய்யும் இடமாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. பதினொன்றாவது நூற்றாண்டில் இருந்து மடங்களின் எண்ணிக்கை அதிகரிக்கத் தொடங்கியது. காளமுகம், பாசுபதம், சைவ சித்தாந்தம் என்ற பல சமயங்களின் வருகையே இதற்குக் காரணமாகும். முதலாம் ராஜராஜன், முதலாம் ராஜேந்திரன் என்ற இரு சோழ மன்னர்களின் புரோகிதர் களாக இருந்தவர்கள் சைவ சித்தாந்தத் துறவிகள்தாம்.

இம்மடங்களின் தோற்றமும் அவற்றின் செயல் பாடுகளும், தமிழகத்தின் கேரளத்திலும் ஆறாம் நூற்றாண்டு முதல் ஒன்பதாம் நூற்றாண்டு வரையிலான காலத்தில் உருவான பக்தி இயக்கத்துடன் தொடர் புடையனவாய்த் தோன்றுகின்றன. இந்துத்துவத்தை தமிழகத்தில் பரப்பி பெரும் மாறுதல்களை இவை உருவாக்கின. பக்தியைச் சார்ந்த சித்தாந்தமானது வட இந்திய பிராமணியத்தையும் தமிழகத்தின் பாரம்பரிய சமயமரபையும் ஒன்றிணைத்தன. சமய இயக்கத்தின் வாயிலாக இப்பகுதி மக்களிடையே புத்துணர்வை உருவாக்கின.

மடங்களைக் குறித்த கல்வெட்டு ஆய்வானது, மடங்களின் முக்கியத்துவத்தையும், புதிய சமூகக் கருத்துக்களையும், சிந்தனைகளையும் பரப்பியதையும் 12, 14-ஆவது நூற்றாண்டு தமிழகத்தில் நிகழ்ந்த சமூக மாறுதல்களையும் வெளிப்படுத்துகிறது.

இச்சமூக சமய மாறுதல்கள், 11-ஆவது நூற்றாண்டு வடஇந்தியாவில் இருந்து வந்த, சித்தாந்தத் துறவிகளால் நிறுவப்பட்ட கோளகி மடத்தின் செயல்பாடுகளாலும், 13-ஆம் நூற்றாண்டில் உருவான சைவசித்தாந்தத் தத்துவம் வாயிலாகவும் வெளிப்பட்டன.

இச்சமூக மாறுதல்கள், பிராமணர் அல்லாதவரான, உழவர்கள், வணிகர்கள், கைவினைஞர்கள் என்ற அடித்தட்டுமக்களின் பங்களிப்பாய் நிகழ்ந்தது. 12, 13ஆவது நூற்றாண்டுகளில், மடங்கள் தொடர்பான கல்வெட்டுக்களின் எண்ணிக்கை அதிகரிப்புக்கு விளக்கம் அளிப்பதாக இந்நிகழ்வைக் குறிப்பிடலாம்

இக்கூற்றுகளை அடுத்து அவர் நடத்திய கருத்தரங்கில் படிக்கப்பட்ட கட்டுரைகளின் மையச் செய்திகளைக் கூறிச் செல்கிறார்.

நூலின் உள்ளடக்கம்

மொத்தம் எட்டு ஆய்வுக்கட்டுரைகளின் தொகுப்பாக இந்நூல் அமைந்துள்ளது. நூலின் இறுதியில் மடங்கள் தொடர்பான 469 கல்வெட்டுகளின் பட்டியல் இடம் பெற்றுள்ளது. இக்கல்வெட்டுக்களைப் பயன்படுத்தி, 2010, 2011-ஆம் ஆண்டுகளில் சுப்பராயலு, சண்முகம் ஆகிய மூவரும், ‘தமிழ்நாட்டின் மடங்களும் இடைக் கால சமய இயக்கங்களும்: கல்வெட்டியல் ஆய்வு’ என்ற தலைப்பில் ஆய்வுக்கட்டுரை ஒன்றினை இரு பகுதிகளாக வெளியிட்டுள்ளனர்.

இந்தியக் கல்வெட்டு ஆண்டறிக்கை, எபிகிராபிகா இண்டிகர், தென்இந்தியக் கல்வெட்டுகள், திருவிதாங்கூர் தொல்லியல் ஆய்வு வரிசை, புதுக்கோட்டை கல்வெட்டுகள், தமிழ்நாடு அரசின் தொல்லியல் துறையின் வெளியீடுகள், புதுச்சேரி, பிரெஞ்சு ஆய்வு நிறுவன வெளியீடு ஆகியன வற்றைப் பயன்படுத்தி இப்பட்டியலைத் தயாரித் துள்ளார்கள். இப்பட்டியலில், இக்கல்வெட்டுகள் காணப்படும் ஊர்களின் பெயர்கள் குறிப்பிடப் பட்டுள்ளன. எதிர்கால ஆய்வாளர்களுக்கு உதவிட வேண்டும் என்ற பரந்த நோக்கில் இதை வெளியிட்டு உள்ளமை பாராட்டுதலுக்குரியது.

இந்நூலில் இடம்பெற்றுள்ள எட்டு கட்டுரை களையும் ஒரே இதழில் அறிமுகப்படுத்த இயலா தென்பதால் இரண்டு கட்டுரைகள் மட்டுமே இங்கு அறிமுகம் செய்யப்படுகின்றன.

நொபுரு கரோஷிமா

‘தமிழ்க் கல்வெட்டுகள் வாயிலாக அறியலாகும் கடந்தகாலம்: கிராம சமூகமும் சாதி அமைப்பிற்கு எதிரான அறைகூவலும்’ என்ற தலைப்பில் கரோஷிமாவின் கட்டுரை அமைந்துள்ளது. கட்டுரையின் தொடக்கத்தில் இந்தியாவில் காணப்படும் கல்வெட்டுகள் தொடர்பான சில அடிப்படைச் செய்திகளைக் குறிப்பிட்டுள்ளார்.

பண்டைய, இடைக்கால இந்து அரசு மரபு தொடர்பாகக் குறிப்பிட்டுச் சொல்லும் அளவுக்கு வரலாற்று நூல்கள் இல்லை என்று கருதும் இவர், இக்குறையைக் கல்வெட்டுகள் ஈடு செய்துள்ளன என்கிறார்.

இக்கல்வெட்டுகளின் எண்ணிக்கையை அவற்றின் மொழி அடிப்படையில் பின்வருமாறு பட்டியலிட்டு உள்ளார்.

கல்வெட்டின் மொழி   எண்ணிக்கை

சமஸ்கிருதம்   7,800  

பிற ஆரிய மொழிகள் 5000   

தமிழ் (திராவிடம்)       28,000

கன்னடம் (திராவிடம்)            11,000

தெலுங்கு (திராவிடம்)            5,000  

பிறமொழிகள் (பாரசீகம், அரபி இன்ன பிற) 3,000  

மொத்தம்         59,800

சுப்பராயலு 2001-ல் தயாரித்த இப்பட்டியலின் அடிப்படையில் பார்க்கும்போது திராவிட மொழிக் கல்வெட்டுகள் எண்ணிக்கையில் விஞ்சி நிற்பது புலனாகிறது. இவை பெரும்பாலும் தென் இந்திய இந்துக்கோவில்களில் காணப்படுகின்றன. தமிழ்க் கல்வெட்டுகளின் காலத்தை 1993இல் கார்பினி என்பவரும், 2001-ல் சுப்பராயலுவும் பின்வருமாறு வரிசைப்படுத்தி உள்ளனர்.

காலம்  எண்ணிக்கை

கி.மு. மூன்று முதல் கி.பி. 5 வரை       100     

கி.பி. 6 முதல் 9 வரை  900     

10 முதல் 13 வரை       19,000

14 முதல் 16 வரை       6000   

17 முதல் 19 வரை       2000   

மொத்தம்         28000 

பத்தாம் நூற்றாண்டு தொடங்கி பதினாறாம் நூற்றாண்டு வரையிலான காலம் சோழர், பாண்டியர், விஜயநகர் ஆட்சிக்காலமாகும். இக்காலத்தில் தான் அதிக எண்ணிக்கையிலான கல்வெட்டுகள் பதிவாகி உள்ளன. இதே போக்குதான் வடஇந்தியாவிலும் நிலவுகிறது.

கிராமம் குறித்த ஆய்வுகள்

கல்வெட்டுகளைச் சான்றாகக் கொண்டு அவை உருவான காலத்திய அரசியல் வரலாற்றை எழுத முடியும். மற்றொரு பக்கம் இவற்றின் துணையுடன் பண்டைய, இடைக்காலக் கிராமங்களின் வரலாற்றை எழுதும் முயற்சியும் நடந்துள்ளது. இவ்வகையில் நீலகண்ட சாஸ்திரியின் ‘சோழர் வரலாறும் நிர்வாகமும்’ என்ற நூல் குறிப்பிடத்தக்கது. இதன் தமிழ் வடிவத்தை “சோழர்” என்ற தலைப்பில் இரு தொகுதிகளாக என்.சி.பி.எச் வெளியிட்டுள்ளது.

இந்நூலில் பிராமணக் குடிஇருப்புக்களில் பிராமண நிலக்கிழார்கள் உருவாக்கிய ‘சபை’ என்ற கிராம நிர்வாக அமைப்பை ஆராய்ந்துள்ளனர். கிராமத்தின் வேளாண்மை, இது தொடர்பாக அமைக்கப்பட்ட ‘வாரியங்கள்’ என்ற அமைப்புகள் (தோட்ட வாரியம், ஏரிவாரியம், கழனிவாரியம், பஞ்சவாரியம், கணக்குவாரியம்), அவற்றின் பணிமுறை, சபை உறுப்பினர்களையும், வாரிய உறுப்பினர்களையும் தேர்வு செய்யும் முறை என்பன குறித்த செய்திகள் எல்லாம் சாஸ்திரியின் இந்நூலில் இடம் பெற்றுள்ளன.

இதே காலத்தில் ‘தென்இந்தியாவின் பொருளாதார நிலை’ (1000-1500) என்ற தலைப்பில் எ. அப்பாத்துரை, இடைக்காலத் தென் இந்தியாவின் வேளாண் சமூகம் குறித்த நூலை எழுதினார். இதற்காக அவர் தமிழ் மற்றும் பிறமொழிக் கல்வெட்டுகளைப் பயன்படுத்தி யுள்ளார். கிராமங்களில் நிலவிய நிலஉரிமை முறை குறித்தும் இந்நூலில் விவாதித்துள்ளார்.

இவை முன்னோடியான சிறப்பான ஆய்வுகள் என்றாலும் சில தளைகளுக்கு இவை ஆட்பட்டிருந்தன. முதலாவதாக 1930இல் தேசிய உணர்வுக்கு இவை ஆட்பட்டிருந்தன. பண்டைய, இடைக்கால இந்தியாவில் மக்களாட்சி முறையில் தேர்வு செய்யப்பட்ட உள்ளாட்சி அமைப்பு இருந்தது என்பதை நிறுவமுயன்றனர். பிராமணக் குடியிருப்புகளில் சபை அமைப்பின் உறுப்பின் தேர்வில் மக்களாட்சி முறை நிலவியது என்பதை நிலைநிறுத்த அதிக முயற்சி செய்தனர். இதனால் கிராமம் குறித்த ஆய்வின் பிற கூறுகள் ஆய்வுக்கு உட்படுத்தப்படாது போயின.

noboru karashima family

அடுத்த சிக்கல், கல்வெட்டுக்களைப் பயன்படுத்திய முறை. அப்பாத்துரை தம் கருத்துக்களை நிறுவ ஒன்று அல்லது இரண்டு கல்வெட்டுக்களைப் பயன்படுத்தி யுள்ளனர். இக்கல்வெட்டுக்களுடன் தொடர்புடைய ஏனைய கல்வெட்டுகளை அவர் ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளவில்லை. இவற்றுள் சில அவர் மேற்கோள் காட்டும் கல்வெட்டுடன் முரண்படுபவை. கல்வெட்டுச் செய்தியை மிகச் சுருக்கமாகக் கூறும் கல்வெட்டு ஆண்டறிக்கையைப் பயன்படுத்திய அளவுக்குக் கல்வெட்டுக்களின் மூலப்பனுவலைப் பயன்படுத்த வில்லை.

என்றாலும், முன்னோடியான ஆய்வாக இருப்ப தாலும் இதுபோன்று இதற்கு முன் நிகழ்ந்த ஆய்வுகள் எவையும் இல்லை என்பதாலும், இதை ஓரளவுக்கு ஏற்றுக்கொள்ளலாம்.

ஆனால் இன்றும் கூட இந்த அவலநிலை தொடர்கிறது. இதனால்தான் புள்ளியியல் சார்ந்த ஆய்வுமுறையை கல்வெட்டாய்வில் அறிமுகப்படுத்தி உள்ளேன் என்கிறார். இம்முறையின்படி ஒரு குறிப்பிட்ட செய்தியுடன் தொடர்புடைய கல்வெட்டுக்களையும் அவர் பயன்படுத்துகிறார்.

கல்வெட்டில் கிராம சமூகம்

இந்திய கிராமங்கள் சுயதேவைப் பூர்த்தியுடையன வாயும், வெளிஉலகத் தொடர்பின்றியும் இருந்தன என்ற தவறான கருத்து அய்ரோப்பியர்களிடம் உண்டு. ஆளும் தலைமுறைகள் மாறினாலும், புரட்சி நிகழ்ந்தாலும் கிராமிய சமூகங்கள் அப்படியே இருக்கும் என்று கூறிவந்தனர். இக்கூற்றுகளை, தஞ்சாவூர், கங்கை கொண்ட சோழபுரம் என்ற இரு ஊர்களில் கிடைத் துள்ள கல்வெட்டுக்களின் அடிப்படையில் கரோஷிமா ஆராய்கிறார்.

தஞ்சைப் பெருவுடையார் கோவிலில் காணப்படும் கல்வெட்டுகளின் மூன்று கல்வெட்டுகளில் 40 கிராமங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. கல்வெட்டு சிதிலமடைந்துள்ளதால் 30 கிராமங்களைக் குறித்தே அறியமுடிகிறது. இக்கல்வெட்டுகள் வாயிலாகப் பின்வரும் செய்திகளை நாம் அறியமுடிகிறது.

1.         கிராமத்தின் மொத்தப் பரப்பளவு

2.         வரிவிதிப்பிற்காளான, வரிநீக்கம் பெற்ற நிலங்களின் பரப்பளவு

3.         வரிவிதிப்பிற்குரிய நிலங்களின் மீது விதிக்கப் பட்ட வரியின் அளவு

4.         குடியிருப்புப் பகுதிகள், கோவில்கள் உள்ளிட்ட வரி விதிக்கப்பட்ட நீக்கம் செய்யப்பட்ட நிலங்களின் வகைகள்.

தானியக் கதிர்களில் இருந்து தானியங்களைப் பிரித்தெடுக்கும் களங்களும், தானியக் களஞ்சியங்களும் ஈழவர் (கள் இறக்குவோர்) குடிஇருப்புகளும் வரி விலக்குப் பெற்றிருந்தன.

முதலாம் இராஜேந்திரனால் உருவாக்கப்பட்ட கங்கை கொண்ட சோழபுரம் கோவிலில் கிடைத்துள்ள கல்வெட்டில் கோவிலுக்குக் கொடையாக வழங்கப் பட்ட கிராமங்கள் இடம்பெற்றுள்ளன. ஆனால் இக்கல்வெட்டுச் சிதைந்துள்ளமையால் எத்தனை கிராமங்கள் கொடையாக வழங்கப்பட்டன என்பதை அறியமுடியவில்லை. ஆயினும் தஞ்சாவூர்க் கல்வெட்டில் இடம்பெறாத செய்தி ஒன்று இக்கல்வெட்டில் இடம் பெற்றுள்ளது.

பயிராகும் பயிருக்கேற்ப வரி வாங்கப்பட்டதை இக்கல்வெட்டு குறிப்பிடுகிறது. தஞ்சைக் கல்வெட்டில் பிரமதேயக் கிராமங்கள் இடம் பெறவில்லை.

ஆனால் ‘நகரம்’ என்றழைக்கப்படும் அய்ந்து வணிகர் குடியிருப்புகள் குறிப்பிடப்பட்டுள்ளன. இங்கு நெல் வடிவில் அல்லாமல் தங்கமாகவே வரி வாங்கப் பட்டுள்ளது. ஆனால் பயிர் அடிப்படையில் இல்லாமல் நிலத்தின் பரப்பளவின் அடிப்படையில் இது வாங்கப் பட்டுள்ளது.

கிராமத்தின் மக்கள் வாழும் இடம் பல்வேறு பெயர்களில் அழைக்கப்பட்டுள்ளது. பொதுவாக சேரி என்பது குடியிருப்பைச் சுட்டும் சொல்லாகவே பயன்படுத்தப்பட்டுள்ளது. இன்றுபோல் இழிவான பொருளில் பயன்படுத்தப்படவில்லை. குடியிருப்புகள் குறித்த பதிவு வருமாறு:

குடி இருக்கை - குடியானவர் (பெரும்பாலும் குத்தகை உழவர்கள்) வாழும் இடம்

ஈழச்சேரி - கள் இறக்குவார் வாழும் பகுதி

தீண்டாச்சேரி - தீண்டத்தகாதோர் என ஒதுக்கி வைக்கப்பட்ட மக்களின் இருப்பிடம்

தலை வாய்ச்சேரி - நீர்நிலையின் மைய மடையை நிர்வகிப்போர் வாழும் இடம்

தளிச்சேரி - கோவிலுடன் தொடர்புடையோர் வாழும் இடமாக இருக்கலாம்.

ஊர்நத்தம் - ஊரார் (வெள்ளாள நில உடைமை யாளர்)

பறைச்சேரி - பறையர் வாழும் இடம்

கம்மாளச்சேரி - கொல்லர், தச்சர் உள்ளிட்ட கை வினைஞர்கள் வாழும் இடம்

மேற்கூறிய குடியிருப்புகள், கல்வெட்டில் குறிப்பிடப்பட்டுள்ள ஊர்களில் இடம் பெற்றுள்ளதை எண்ணிக்கை அடிப்படையில் சுட்டிக்காட்டப் படுவதுடன் வண்ணாரச் சேரி என்ற பெயரில் வண்ணார் குடியிருப்பு ஒரு கிராமத்தில் இருந்துள்ளதையும் குறிப்பிட்டுள்ளார்.

கோவில், சுடுகாடு என்பன அனைத்துக் கிராமங் களிலும் இடம் பெறவில்லை. மகாதேவர், பிடாரி, அய்யன், துர்கா என்ற பெயரிலான தெய்வங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. 24 கிராமங்களில் எட்டு கிராமங்களில்தான் சுடுகாடு குறிப்பிடப்பட்டுள்ளது. வெள்ளாளர்களுக்கென்றும், பறையர்களுக்கென்றும் தனித்தனி சுடுகாடுகள் இருந்துள்ளன. ஆனால் எல்லாக் கிராமங்களிலும் பறையர்களுக்கென்று சுடுகாடுகள் குறிப்பிடவில்லை. இதனால் கிராம எல்லையைக் கடந்து கோவில் விழாக்களும், இறந்தோரை எரியூட்டலும் நிகழ்ந்திருக்கலாம் என்பது கரோஷிமாவின் கருத்தாகும்.

கல்வெட்டில் இடம் பெற்றுள்ள கிராமங்கள் சிலவற்றில் குடிநீர்க் குட்டைகள் மட்டுமே உள்ளன. இவை வேளாண் பாசனத்திற்குப் பயன்படாதவை.

18 கிராமங்களில் மட்டுமே பாசனக் கால்வாய்கள் உள்ளன. ஒரு கிராமத்தின் பரப்பளவை விடக் கூடுதலான நிலப்பரப்பில்தான் வேளாண்மை நிகழ்ந்துள்ளது.

இதன் அடிப்படையில் நோக்கினால் சோழர் காலக்கிராமங்கள் வெளி உலகத்துடன் தொடர்பற்றுப் போய் தனித்தனித் தீவுகளாக இயங்கவில்லை என்பதை உணர்ந்துகொள்ளலாம்.

இதனையடுத்து வேளாண் உற்பத்தியிலும், மக்களின் சமூக வாழ்க்கையிலும் முக்கிய பங்கு வகித்த ‘நாடு’ என்ற நிர்வாக அமைப்பு குறித்துப் பேசுகிறார். பல கிராமங்களை உள்ளடக்கியதே ‘நாடு’ ஆகும். சில நேரங்களில் ஒன்றிரண்டு பிரமதேயக் கிராமங்களும், வணிகர்களால் நிர்வாகிக்கப்படும் நகரங்களும் இதில் அடங்கி இருக்கும். எனவே தென்இந்தியாவின் கடந்த காலத்தைப் புரிந்துகொள்ள நாடு என்ற அமைப்பைக் குறித்தும் அறிதல் அவசியம்.

இக்கட்டுரையின் இறுதிப்பகுதியில், கல்வெட்டுக் களின் இறுதியில் இடம்பெறும் ‘காப்புரை’ அல்லது ‘ஓம்படைக்கிளவி’ என்றழைக்கப்படும் தொடர்களால் ஏற்பட்ட மாறுதல்களை ஆராய்கிறது. (இது குறித்து அவர் எழுதிய கட்டுரையின் தமிழ் வடிவம் தோழர் க.காமராசனால் மொழி பெயர்க்கப்பட்டு அகம் புறம் 3-ல் வெளியாகியுள்ளது.)

அரசியல்- பொருளியல் நிலைகள்

கல்வெட்டின் இறுதியில் இடம் பெறும் காப்புரைகளில் காணப்படும் மாறுதல்கள் பிராமணிய சித்தாந்தத்தில் இருந்து விலகி நிற்பதாகவும், அல்லது பிராமணிய எல்லைக்குள் இருந்துகொண்டே புதிதாக ஒன்றைக் கூறுவதாகவும் உள்ளன என்பது இவரது அவதானிப்பாகும்.

நிலவுடைமையாளர்கள், பிராமணர்கள், வேளாளர்கள் ஆகியோரின் ஆதிக்கத்திற்கு ஆட்பட்டிருந்த சாதியினர் அதிகாரத்திற்கு வந்ததையும் காப்புரைகளில் ஏற்பட்ட மாறுதல்கள் வெளிப்படுத்துகின்றன. சோழர் ஆட்சியின் இறுதியில் அரசின் அதிகாரம் மறைவுற்ற நிலையில் தாம் வாழும் பகுதியைப் பாதுகாத்துக்கொள்ளும் பொறுப்பு, அப்பகுதியில் வாழும் மக்களுக்கு ஏற்பட்டது.

12-ஆம் நூற்றாண்டுக்குப்பின் புதிய சாதிகள் அதிகாரத்தை அடைந்தன. இதன் அடிப்படையில் ‘சித்திரமேழி பெரியநாடு’, ‘இடங்கை’, ‘வலங்கை’, ‘அய்ந்நூற்றுவர்’ என்ற அமைப்புகள் உருவாயின. பிராமணர் வேளாளர் ஒடுக்குமுறையை இவை எதிர்த்தன. பிராமணர் வேளாளருக்கு எதிரான ஒரு அதிகாரத்தை உருவாக்கிக்கொள்வதில், சோழர் படையில் பணி யாற்றிய மலைவாசிகள் குறிப்பிடத்தக்கவர்கள். சமவெளிப்பகுதியில் விற்பனைக்கு வாங்கியோ, பலவந்தமான முறையிலோ விளைநிலங்களை இவர்கள் பெற்றிருந்தார்கள். கடல்சார் வாணிபத்தின் வாயிலாக வளம் பெற்றிருந்த வணிகர்களும் கைவினைஞர்களும் இவர்களுடன் இணைந்திருந்தார்கள். இச்சாதியினர் ஒரு குழுவாக இணைந்துகொண்டனர்.

யாதவர், நாட்டார் மக்கள், மலையமான்கள், அந்தணர், பன்னாட்டர் என்போர் ‘சித்திரமேழி பெரிய நாட்டார்’ குழுவில் இடம் பெற்றிருந்தனர். வன்னிய நகரம், கைக்கோளர் என்போர் ‘பதினெண் விஷயம்’ என்ற வணிகர் குழுவில் இடம் பெற்றிருந்தனர். கல்வெட்டொன்று ‘அந்தணன் முதல் அரிப்பன் ஈறாக’ என 28 சாதிகளைக் குறிப்பிடுகிறது. அரசியல் நிலை வலுக்குன்றியமையும், சமூக ஒழுங்கின்மையும் 13-ஆம் நூற்றாண்டில் உருவானது.

இத்தகைய சூழலில் ஆதிக்கம் செலுத்திய பழைய சாதியினருக்கும், புதிதாக வலுப்பெற்ற சாதியினருக்கும் இடையே சமூக மேலாண்மை தொடர்பான போராட்டம் நிகழலாயிற்று. இக்காலத்தில் தம் அதிகாரத்தை இழந்து வந்த பிராமணர்களும், வேளாளர் களும் ஓலமிடத் தொடங்கியதை திருக்கச்சூர்க் கல்வெட்டு வெளிப்படுத்துகிறது. இரத்தினபுரி கல்வெட்டு, பிராமணர்களின் கண்களைப் பறிக்கவும், மூக்கை வெட்டவும் கட்டளையிடுகிறது. பிராமணர் மீதும், பிராமணியச் சித்தாந்தத்தின் மீதும், அடித்தட்டு மக்கள் கொண்டிருந்த வெறுப்புணர்வை இது காட்டுகிறது. மேலும் பிராமணிய சித்தாந்தத்தின் படிநிலைத் தன்மையுடனான சாதி அமைப்பிற்கு மாறாக நேர்கோட்டமைப்பில் இடங்கை, வலங்கை என்று இரு சாதிக்குழுக்களை உருவாக்கினர்.

என்றாலும், மனுஸ்மிருதி உருவாக்கிய சாதியப் படிநிலை சார்ந்த பிராமணிய சித்தாந்தத்தின் தாக்கத்தை வெளிப்படுத்தும் தொடர்களையும், கல்வெட்டுகளில் காணமுடிகிறது. சான்றாக,

‘அந்தணன் தலையன் அரிப்பன் கடையாக’

தன் குதிரைக்குப் புல்லிடும் புலையருக்குத்

தன் மாணாட்டியைக் கொடுத்தவனாவான்’

என்ற காப்புரை வரிகளைக் குறிப்பிடலாம்

அரசியலிலும், பொருளியலிலும் வளர்ச்சி பெற்ற புதிய சாதியினர், பிராமணிய சமூக ஒழுங்கிற்கு அறை கூவல் இட்டன. இடங்கை, வலங்கை என்ற இரு பிரிவு களை உருவாக்கி சமத்துவ சமூகத்திற்கு அடித்தள மிட்டன. பிராமணிய சித்தாந்தத்தின் அடிப்படையில் உருவான சாதிய அமைப்பை இது அழிக்காவிட்டாலும், தென் இந்தியாவின் இடைக்காலச் சமூகத்திற்குப் புதிய வரவாகும்.

இடங்கை - வலங்கைப் பிரிவுகள் தொடர்பாக நீண்ட காலமாக நடந்துவரும் விவாதத்திற்கு இது ஒரு புதிய பங்களிப்பாகும்.

எ.சுப்பராயலு

தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக இருந்து ஓய்வுபெற்ற இவர், காத்திரமான ஆய்வுநூல்களையும், ஆய்வுக்கட்டுரைகளையும் தொடர்ச்சியாக எழுதி வருகிறார். இவர் உருவாக்கிய ‘தமிழ்க்கல்வெட்டுச் சொல்லகராதி’ கல்வெட்டியல் ஆய்வுக்கு அருங்கொடை யாகும். இங்கு அறிமுகமாகும் நூலில் திருவிந்தளுர் என்ற ஊரில் கண்டெடுக்கப்பட்ட சோழர் காலத்தைய செப்பேட்டை அறிமுகம் செய்துள்ளார்.

திருவிந்தளூர் செப்பேடு

நாகை மாவட்டம் மயிலாடுதுறை அருகில் உள்ள கிராமம் திருவிந்தளூர். இதன் அருகில் உள்ள கழுதண்ணி முட்டம் என்ற பகுதியில் கைலாசநாதர் கோவில் என்ற பெயரிலான சிவன்கோவில் உள்ளது. கட்டிட வேலைக்காக இக்கோவில் வளாகத்தில் நிலத்தைத் தோண்டும்போது ஒரு தொகுப்பாக செம்பு வளையத்தில் கோர்க்கப்பட்ட 86 செப்பேடுகள் கிடைத்தன. முதல் பக்கம் மட்டும் கிடைக்கவில்லை. செப்பேடுகள் சேர்க்கப் பட்ட வளையத்தில் உள்ள வட்டவடிவ முத்திரையில் சோழர்களின் புலிச்சின்னம் பொறிக்கப்பட்டுள்ளதுடன் இராஜேந்திரதேவன் வழங்கிய கொடை என்ற எழுத்துப் பொறிப்பும் இடம் பெற்றுள்ளது. ஒவ்வொரு செப்பேடும், சராசரி 44 செ.மீ. நீளமும் 21 செ.மீ அகலத்தையும் கொண்டுள்ளன. செப்பேடுகள், இணைப்பு வளையம், வளையத்தின் மீதான முத்திரை எல்லாம் சேர்த்து ஏறத்தாழ 150 கிலோ கிராம் எடையுள்ளது. இவ் வகையில் பெரிய அளவிலான செப்பேடுகளில் ஒன்றாக இது அமைகிறது.

இருபுறமும் எழுத்துப்பொறிப்புடைய இச்செப்பேடு 3710 வரிகளைக் கொண்டு இதுவரை, கிடைத்துள்ள செப்பேடுகளுள் அளவில் பெரியதாக அமைகிறது.

செப்பேட்டுச் செய்தி

கி.பி.1053-56 ஆண்டுகளில் பழைய பிராமணக் குடியிருப்புகளில் இருந்து அழைத்துவரப்பட்ட ஏறத்தாழ 660 பிராமணர்களைக் குடியேற்றி புதிதாக உருவாக்கப்பட்ட பிரமதேயக் குடியிருப்பை இச் செப்பேடு குறிப்பிடுகிறது.

செப்பேட்டின் தொடக்கத்தில் வடமொழியில் எழுதப்பட்ட மெய்க்கீர்த்திப் பகுதி நீங்கலாக எஞ்சிய பகுதிகள் தமிழில் அமைந்துள்ளன.

இப்புதிய பிரமதேயக் குடியிருப்பில் குடியேற்றப் பட்ட பிராமணர்கள் பெற்ற பொருளியல் நலன் களையும், பண்பாட்டு உரிமைகளையும் (மாடிவைத்து வீடுகட்டல், ஓடுவேய்தல் போன்றவை) நீர்மேலாண்மை உரிமையையும் இச்செப்பேடு குறிப்பிடுகிறது.

அவதானிப்புகள்

இச்செப்பேட்டை ஆய்வு செய்து பின்வரும் செய்திகளை சுப்பராயலு வெளிப்படுத்தி உள்ளார்.

·          அரசுக்கு வரியாக வரவேண்டிய 80,000 கலம் நெல் இங்குக் குடியேற்றப்பட்ட பிராமணர்களுக்குப் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது.

·          அத்துடன் நிலத்தின் உரிமையாளர்கள் என்ற முறையில் குடியானவர்களிடம் இருந்து குத்தகைப் பங்கையும் பெற்றுள்ளார்கள்.

·          இப்பிரமதேயம் உருவாக்கப்படும் முன்னர் நில உரிமையாளர்களாய் இருந்தோரின் நிலஉரிமை பறிக்கப்பட்டு அது பிரமதேயக் கிராமத்தில் குடியேற்றப்பட்ட பிராமணர்களுக்கு வழங்கப் பட்டது. இதன் பொருட்டு அவர்களுக்கு இழப்பீடு வழங்கப்பட்டதா? என்பதில் தெளிவில்லை.

·          கொடை தொடர்பான பதிவுகளில் இடம்பெறும் காப்புரை (ஓம்படைக்கிளவி) தொடர்களில் பெரும்பாலும், கங்கைக் கரையில் காரம் பசு அல்லது பிராமணனைக் கொன்ற பாவம் குறிப்பிடப்படும். இச்செப்பேட்டில் ஆயுதம் தரிக்காத (நிராயுத பாணி) சத்திரியனைக் கொல்வதும் பாவங்களில் ஒன்றாக இடம் பெறுகிறது. போர்க்களத்தில் உயிர்நீத்தவர்கள், புண்ணியம் அடைந்தவர்களாகக் குறிப்பிடப்படுகிறார்கள்.

இடைக்காலத் தென்இந்தியக் கோவில்களின் அரசியல் பங்களிப்பு (கேசவன் வேலு, தோட்) மற்றமை (the other) குறித்த தொடக்ககால மலையாள மணிப் பிரவாள நூல்களின் பதிவு (ராகவன் வாரியார்), ஸ்ரீலங்காவில் இந்துத்துவமும் அரச பதவியும் (பத்மனாதன்) ஆகிய கட்டுரைகளும் குறிப்பிடத்தக்க கட்டுரைகளாய் இந்நூலில் இடம்பெற்றுள்ளன.

Pin It