ஐரோப்பியர் ‘இந்தியா’என்று இன்று அழைக்கப் படும் நிலப்பகுதியில் ஊருடுவியதன் மூலம், இப்பகுதியில் வாழ்ந்த மக்களுக்கு ஏற்பட்ட மாற்றங்கள் குறித்த விரிவான உரையாடல் நிகழ்த்தும் தேவை நம்முன் உள்ளது. காலனியம் எனும் சமூகப் பொருளாதார மற்றும் பண்பாட்டு நிகழ்வு குறித்துப் பல்பரிமாணப் பதிவுகளை இன்றைய கண்ணோட்டத்தில் செய்ய வேண்டும்.அவ்வகையான செயல்பாட்டிற்கு ஆவணமாக காதரீன் மேயோவின் ‘இந்திய மாதா’நூல் தொடர்பான உரையாடல்கள் உதவும். இத்தொகுப்பில் இடம் பெற்றுள்ளவற்றை நமது புரிதலுக்காகப் பின்வரும் வகையில் தொகுத்துக்கொள்வோம்.

- 1858 இல் இந்தியா என்ற முழுநிலப் பகுதியும் பிரித்தானிய மகாராணியின் ஆட்சியதிகாரத்துக்கு வந்தது. 1799இல் திப்பு சுல்தானின் வீழ்ச்சி யோடு பிரித்தானியர் அதிகாரத்தைக் கைப் பற்றினாலும் அதனை முழுமையான விதத்தில் அதிகாரத்துக்கு உட்படுத்துவதற்கு சுமார் அறுபது ஆண்டுகள் அவர்களுக்குத் தேவைப் பட்டன. அடுத்த எழுபது ஆண்டுகளில், அவர் களது ஆட்சி அதிகாரத்துக்கு எதிரான குரல் உருப்பெற்று வளர்ந்து விட்டது. 1920களில், பிரித்தானியருக்கு எதிரான உள்ளூர் மக்களின் குரலைப் பண்பாட்டு நோக்கில் ஒடுக்கும் முயற்சி மேற்கொள்ளப்பட்டது. அதற்கென பிரித் தானியர் வேண்டுகோளின் அடிப்படையில், அமெரிக்கப் பெண்மணியான மேயோ எழுதியதுதான் ‘இந்திய மாதா’.

- மேயோவின் நூலில் செய்யப்பட்டிருக்கும் விமர்சனங்களை, ஓர் உளவாளியின் குரல் என்று கருதினாலும் அதில் உண்மை நிகழ்ச்சிகள் இல்லாமல் இல்லை எனும் கருத்தை முதன்மைப் படுத்தியது கோவை அய்யாமுத்து அவர்களின் ‘மேயோ கூற்று மெய்யா-பொய்யா?’ எனும் நூல்.

- “பிரித்தானியரின் கேவலமான உளவாளி மேயோ. அவரது நாவில் பொய்களே தொண்ணூறு சதவீதம். சீர்திருத்தம் செய்ய வேண்டியது பத்து சதவீதச் செய்திகள் இடம்பெற்றுள்ளன” என்று வ.ரா. கூறுகிறார். மேயோவின் பொய்களை அடிப்படையாகக் கொண்டு, இந்தியச் சமூகம் குறித்த மிக விரிவான உரையாடலை முன்வைக்கும் நூல்தான் வ.ராமசாமியான வ.ரா அவர்களின் ‘மாயா மேயோ’ எனும் நூல்.

- மேயோவின் நூலில் எந்தவித அடிப்படையான புரிதலும் இல்லை. வெறும் புளுகு மூட்டை என்னும் கண்ணோட்டத்தில் மேயோவின் நாடான அமெரிக்காவில் நிகழும் பல்வேறு தகவல்களைத் தொகுத்து அவற்றோடு ஒப்பிடும் போது இந்தியாவின் நிகழ்வுகள் ஒன்றும் பெரிதில்லை என்று கருதும் சி.எஸ். ரங்கய்யர் அவர்களின் ‘இந்திய பிதா’ எனும் நூல்.

- எவ்விதம் பிரித்தானிய அரசு மேயோவை அவர்களது ஆட்சிச் சிறப்பு குறித்து நூல் எழுதச் செய்தார்களோ அதைப்போல் இந்திய அரசு, மேயோ நூல் எழுதப்பட்டதன் பின்னுள்ள பரிமாணங்கள் குறித்த விரிவான ஆய்வே மனோரஞ்சன் ஜா அவர்களின் ‘காதரீன் மேயோவும் இந்தியாவும்’ எனும் நூல்.

வெவ்வேறு கண்ணோட்டங்களில் எழுதப்பட்ட மேற்குறித்த ஐந்து நூல்களையும் தொகுத்து, இவ் வகையான தொகுப்பாக இன்று எதற்காக வெளியிட வேண்டும்? இத்தொகுப்பு மூலம் வாசகன் எதைப் பெறப் போகிறான்? இன்றைய சமூகச் சூழலின் புரிதலுக்கு இத்தொகுப்பு எந்த வகையில் உதவும்? எனப் பல்வேறு கேள்விகளை முன்வைக்க முடியும். இக்கேள்விகளுக்கான உரையாடலாக இப்பகுதியைப் பயன்படுத்திக்கொள்வோம். இக்கேள்விகளைப் பின்காணும் கருத்தியல் சார்ந்த அணுகு முறைகளோடு இணைத்துக் காணும் தேவையுள்ளது.

- ‘இந்தியா’ எனும் பல்மொழி, பல் இனம், பல் சூழல் உள்ள நாடு யாந்திரீகமாகக் கட்டப் பட்ட வரலாற்றைப் புரிந்துகொள்வதன் அவசியம்,

- ‘நாடு’ எனும் கருத்துநிலை, எந்தெந்த நிலையில் பல்வேறு வகைப்பட்ட சிந்தனை யாளர்களாலும் புரிந்துகொள்ளப்படுகிறது,

- தேசியம் எனும் கருத்துநிலையைக் காலனியம் எவ்வாறு உருவாக்கியது,

- மொழி, மதம் ஆகியவற்றின் செயல் பாடுகள் எவ்வகையில் அமைகின்றன-

ஆகிய பிற குறித்து இன்றைய பின்புலத்தில் புரிந்து கொள்வதற்கு இத்தொகுப்பு உதவும்.

காலனியத்தின் மூலம் ‘நாடு’ எனும் கருத்தாக்கம் கட்டப்பட்டதன் மூலமாக, மேற்குறித்த மொழி, இனம், தேசியம் ஆகிய பிற கருத்தாக்கங்கள் புதிய தன்மையில் உருப்பெறுகின்றன. இவ்விதம் உருப்பெற்றவற்றை எவ்விதம் எதிர்கொள்வது? என்பது குறித்த வெவ்வேறான கண்ணோட்டங்கள் உருவாகின்றன. தமிழ்ச்சூழலில் உருவான கண்ணோட்டங்களையும் ‘இந்திய அரசு’ என்பது சுதேசிகளின் ஆதிக்கத்தின் கீழ் வந்தபின், மேற்குறித்த தன்மையை எப்படி எதிர்கொண்டது என்பது குறித்துப் பதிவானவற்றையும் இத்தொகுப்பில் ஒட்டுமொத்தமாக வாசிக்கமுடிகிறது. இந்த வாசிப்பில் முதன்மையாக முன்னெழும் மனப் பதிவுகளாகப் பின் கண்டவற்றைக் கூறலாம்.

- பெரியார் எனும் ஈ.வெ.ராமசாமி மேற்குறித்த கருத்துநிலைகளை எவ்வகையில் எதிர்கொண்டார் என்பது தொடர்பான உரையாடல்,

- காந்திய ஈடுபாடு உடைய, ‘தேசம்’ என்பதைப் புனிதமாகக் கருதிய வ.ரா. எதிர்கொண்ட முறைமை மற்றும் இக் கருத்துநிலை சார்ந்த பிறர் எதிர்கொண்ட நிலை,

- தேசத்தைக் கட்டிக்காக்க பின்னால் உருவான இந்திய அரசு எதிர்கொண்ட பாங்கு...

மேற்குறித்த தன்மைகளை விரிவாகப் புரிந்து கொள்ள இத்தொகுப்பு அடிப்படை ஆவணமாகிறது. காலனியச் செயல்பாட்டை அதன்கீழ் இருந்து அனுபவித்தவர்கள் மேற்கொண்ட கண்ணோட்டங் களை இன்றைய பொருத்தப்பாட்டுடன் அணுகும் கடமை நம் முன் உள்ளது.

பெரியார் மேயோவின் நூல் குறித்த உரையாடல் நிகழ்ந்து கொண்டிருந்த காலச்சூழலில் தேசியம் என்பது குறித்து எழுதிய விளக்கம் பின்வரும் வகையில் அமைகிறது.

“சாதாரணமாக யோசித்துப் பார்த்தோமானால், இந்தியாவில் தேசியம் என்கிற பதமே தப்பான வழியில், மக்களை ஏமாற்றிப் பிழைக்க ஒரு கூட்டத்தார், அதாவது - மேல்சாதியார் என்று சொல்லிக்கொள்ளும் பார்ப்பனர்களால் கற்பனை செய்யப்பட்டு, அவர்களுக்குத் தரகர் களாக இருந்தால்தான் பிழைக்க முடியும் என்று கருதிய சில பார்ப்பனரல்லாத படித்தவர்கள் என்பவர்களால் ஆதரிக்கப்பட்டு, இவ்விரு கூட்டத்தார் சூழ்ச்சியாலும் பாமர மக்களை ஏமாற்றிச் சிலர் பிழைக்க உபயோகிக்கப்பட்டு வரும் ஒரு பாதகமும் அபாயமுமுள்ள அர்த்தமற்ற ஒரு வார்த்தையாகும்.

இன்னும் விளக்கமாகச் சொல்ல வேண்டுமானால், தேசியமென்பது மக்களின் ‘தத்துவார்த்த இயல்’ என்பதில் கடவுள், மோட்சம், நரகம் என்கிற வார்த்தைகள் எப்படி அர்த்தமற்றவையாகவும் புரோகிதக் கூட்டமும், பாதிரிக் கூட்டமும், முல்லாக் கூட்டமும், சந்நியாசிக் கூட்டமும் பாமரமக்களிடம் சமயத்திற்கு ஒரு அர்த்தமும் சந்தர்ப்பத்துக்கு ஒரு கருத்துமாய்ச் சொல்லி, அவர்களை ஏமாற்றிப் பிடுங்கித்தின்று, சோம்பேறிகளாய் இருந்து-நோகாமல் வாழ்வதற்காக செய்துகொண்டிருக்க உபயோகப்பட்டு வருகின்றன என்று அறிய முடிகிறது. அதேபோல் தேசிய மென்னும் பதமும் சரீரப்பிரயாசை ஒரு சிறிதும் எடுத்துக்கொள்ள இஷ்டமில்லாமல் நெஞ்சத்தில் அழுக்குப்-படாமல், பாமரர்களை ஏமாற்றிப் பிழைக்கவும் கீர்த்திபெறவும் கண்டுபிடிக்கப்பட்ட சாதனமாகும்.

இந்தப் பதமானது, ஆங்கில பாஷையில் நேஷனல் என்கின்ற பதத்தின் மொழிபெயர்ப்பு என்கின்ற முறையில் ஏற்பட்டதே தவிர, மற்றபடி அது இந்தியாவின் வேறு எந்த பாஷையிலும் எந்தச் சமூகத்திலும் இருந்ததல்ல வென்றே சொல்லலாம்.” (குடி அரசு. 19.5.1929)

‘தேசம்’ குறித்து மிகுந்து அக்கறை கொண்டு, காலனியச் செயல்பாடுகளை எதிர்கொண்ட பலரும் பெரியார் வரையறை செய்துள்ள தேசம் பற்றிய புரிதல் உடையவர்கள் என்று கருத முடியவில்லை. இந்தப் பின்புலத்தில் பெரியார் வழியில் செயல்பட்ட தோழர் கோவை. அய்யாமுத்து அவர்கள் காதரீன் மேயோவின் இந்தியா என்ற தேசத்தின் மீதான விமரிசனங்களை எதிர் கொண்டிருப்பதைப் புரிந்துகொள்ளவேண்டும். உளவாளி சொல்லும் உண்மைகளைப் புரிந்து கொள்ளும் அல்லது நேர்மையாக மதிப்பீடு செய்யும் பக்குவம் பெரியாரின் வழிப்பட்ட ‘தேசம்’ குறித்த கருத்தியல் சார்ந்தவர்களுக்கு உருவானது. இந்தப் புரிதல் இன்றும் கூட வெகுசன வெளியில் இருக்கிறதா? என்பது அய்யமே. பின்நவீனத்துவக் கருத்துநிலைகள், தமிழ்ச் சூழலில் முதன்மைப்படுத்தப்பட்டு விவாதிக்கப்பட்டபோது, பெரியார் நிலைப்பாடுகள் அக்கருத்துநிலையை வலுப்படுத்த உதவின என்பதை இங்கு இணைத்துப் பார்க்கலாம். எனவே மேயோவின் குற்றச்சாட்டுகளை பெரியார் வழிநின்று தமிழ்ச்சமூகம் எதிர்கொண்டது. இவ்வகையான அணுகுமுறை இந்தியாவில் எந்தப் பகுதியிலும் நிகழவில்லை என்பதைப் பதிவு செய்வது அவசியம். இன்றைய இந்தியச் சமூகநிலை குறித்து ஆய்வாளர் ராஜ்கவுதமனின் பதிவைப் பெரியாரின் அன்றைய கருத்துநிலையோடு இணைத்துப் பார்க்கலாம். இன்றும் இந்தியாவிற்குப் பெரியார் பெரிதும் தேவைப் படுகிறார். அந்த வகையில் இத்தொகுப்பு மீண்டும் அச்சாவது சரியே. இந்தச் சமூகம் குறித்த ராஜ்கவுதமன் பதிவு வருமாறு:

“இந்தியர் ஒவ்வொருவரின் ஆழ்மனதிலும் சாதியம்” என்னும் இனக்குழு மனப்பாங்கு பிராமணியத்தால் கட்டப்பட்டுள்ளது. இதற்கு வைதீக வருணாசிரம தருமம் அடிச்சட்டம். வேளாண்மைக் கலாசார உறவுகளோடும், பொருளாதார உற்பத்திமுறையோடும், உற்பத்தி முறையின் சக்திகளான வர்க்கங்களோடும் ஊடும் பாவுமாய்ப் பின்னப்பட்டது இந்தியச் சாதியம். இதன் பிறப்பிடங்களாகக் குலம், குடி, இனம், குருதி உறவு, வருணம் எனப் பலவாக இருந் தாலும் இதனைக் கண்காணித்துப் பராமரித்துப் பலன் அடைந்து வந்தது பிராமணியமே. இந்தியச் சாதியத்தை ஆராய்ந்த பெரும்பாலானவர்கள் இப்பிளவை முன்வைத்துள்ளனர். சாதி வரிசையில் தலைமையிடம் பிடித்த சிறுபான்மை பிராமணர் களுக்கு மேல் மானிடர் யாருமில்லை. கோவில் களும் கடவுள்களும் மட்டுமே இருந்தன; இருக் கின்றன. அவற்றுக்குக் கீழே அவற்றிற்குத் தானம் வழங்கிப் பராமரித்த வேளாளர்களுக்கு நிலங்கள் மீது காலனியாட்சி உரிமை இருந்தது. இவையும் அரசர்களால் வழங்கப்பட்டவை. வேளாளர்க்கும் கீழே வணிகர், விவசாய உழைப்பாளிகள், குத்தகைதாரர்கள், வீரர்கள், கூலிப்படைகள், கைவினைச் சாதிகள், தீண்டா தார் எனப்பட்ட தலித் சாதியினர் இயங்கினார்கள். நிலவுடைமை, விளைச்சல், நீர், உழைப்பு ஆகியவற்றுக்கு உடைமைகொள்ள உரிமை பெற்ற சாதிக்குழுக்களை நோக்கியே அடுத்தடுத்த சாதிகள் நகர்ந்தவண்ணம் இருந்தன என்பது இந்திய - தமிழக வரலாறு”.-(ஆரம்பகட்ட முதலாளியமும் தமிழ்ச்சமூக மாற்றமும். முன்னுரை: 2009)

மேற்குறித்த விவரணங்கள் சார்ந்து இந்தியா என்று பிரித்தானியர்களால் உருவாக்கப்பட்ட நிலப்பகுதியில் சாதி, மதம் ஆகியவை செயல்பட்டதன் ஒரு வடிவமே தேசமாக உருவானது. அவ்வகையான தேசம் குறித்த விரிவான விமர்சனங்களை பிரித்தானியர்களின் உளவாளி காதரீன் மேயோ முன்வைத்தார். உளவாளி முன்வைத்த காரணத்தினால் அது பொய்யாகிவிடுமா? அவரின் கருத்துகளை எதார்த்தத்தோடு உரசிப்பார்க்கும் பணியைப் பெரியாரியச் சிந்தனை நமக்கு வழங்கியது. அதற்கான அரிய ஆவணமாக இந்தத் தொகுப்பு அமைந்திருக்கின்றது.

வ.ரா. என அறியப்படும் வ.ராமசாமி குறித்து நான் முன்னர் எழுதிய பகுதி ஒன்றை அப்படியே கீழே தருகிறேன்.

“1917 தொடங்கி தொடர்ச்சியாகத் தமிழ் நாட்டில் பத்திரிகையாளராகச் செயல் பட்டவர். சுதந்திரன், தனவைசிய ஊழியன் , தமிழ்நாடு, பாரததேவி, நவயுகம் என்ற பத்திரிகை களோடு நேரடித் தொடர்பு கொண்டவர். சுதந்திரச் சங்கு, மணிக்கொடி, காந்தி, தினமணி, சுதேசமித்திரன் போன்ற பத்திரிகைகளில் தொடர்ச்சியாக விரிவான விவரணக் கட்டுரைத் தொடர்களை எழுதியவர்.

பாரதியோடு சில ஆண்டுகள் வாழ்ந்தவர். காங்கிரஸ் கட்சிச் செயல்பாடுகளில் ஈடுபட்ட போது, பாரதியை வாய்க்கும் இடமெல்லாம் அறிமுகப்படுத்தியவர். ‘மகாகவி’ பாரதி என்ற பட்டத்தை நிலைநிறுத்தியவர்.

காந்தியாரைத் தெய்வமாக வணங்கியவர். காந்தியமே விடுதலைக்கு வழியெனப் பிரசாரம் செய்தவர். கிறித்துவப் பின்புலச் சீர்திருத்த வாதம், பிரம்ம சமாஜ சீர்திருத்தவாதம் என்ற வளர்ச்சியில் காந்திய சீர்திருத்தவாதத்தை வரித்துக் கொண்டவர். பகுத்தறிவுச் சீர்திருத்த வாதம் செயல்படத் தொடங்கிய காலத்தில், காந்திய சீர்திருத்தவாதத்தை, அதற்கு மாற்றாக முன்வைத்தவர்.” (தமிழியல் ஆய்வு: கருத்து நிலைத் தேடல் எனும் கட்டுரை நூல் தொகுப்பில் உள்ள ‘பிரசுரிக்கப்படாத ஒரு பிரதியின் எழுதப் படாத கதை’ எனும் கட்டுரை 2001: 24).

வ.ரா. எனும் மனிதர் குறித்த மேற்குறித்த புரிதலோடு அவர் காதரீன் மேயோவை மிகக் கடுமையாக விமர்சனம் செய்து எழுதிய நூலை அணுகலாம். அந்த நூலில் வ.ரா.வின் பதிவு பின்வருமாறு:

“ஹிந்து விதவைகளைப் பற்றி மேயோ கேவல மாக எழுதியிருக்கிறார் என்று ஹிந்துக்கள் ஆத்திரப்படுவதில் பிரயோசனமில்லை. மேயோ விதவைகளைப்பற்றிப் பொய் எழுதியிருக்கிறார் என்று கொண்டு ஹிந்து சீர்திருத்தக் காரர்கள் மனம் நோக வேண்டாம். ஹிந்து விதவைகளின் பண்டை இலட்சியம் எப்பொழுது அழிந்து போயிற்றோ, அதன்பின்னர் அவர்களுடைய திக்கற்ற நிலைமை மட்டும் மிகுதியாக நிற்பது அநியாயமாகும். ஹிந்து ஜனசமூகமே, தற்போது தனது கட்டுக்குலைந்து, தனது பண்டைத் தன்னடக்க இலட்சியங்களை உதறித் தள்ளிவரும் பொழுது, ஹிந்து ஆண்மக்கள் தங்கள் விதவைகளின் பரிதாப நிலையைக் கண்டும் அவர்களுடைய நிலைமையின் சீர்திருத்தத்தில் நாட்டம் கொள்ளாமலிருந்தால் மேயோ சொல்லவேண்டியதில்லை, அது எல்லோருக்கும் எளிதிலே தெரிந்துவிடும் - ஹிந்து ஜன சமூகத்தின் உயிர்ச்சத்து விரைவில் அழிந்துபோகும். ஒழுங்கற்ற முறைகளில் நபர்கள் தங்கள் விருப்பங்களைக் கட்டுப் பாடின்றிப் பூர்த்தி செய்து கொள்ளும் நிலைக்கு வந்துவிட்டால், அந்த ஜன சமூகம் பாழ்பட்டுப் போய்விடும். பண்டை நாகரிகங்கள் உலகத்தில் அழிந்து போன வகை இதுதான். ஹிந்துமக்கள் விழித்துக் கொள்ளுவார்களாக!” (இந்நூல். ப. 487)

மேயோவின் அனைத்துக் கருத்துகளையும் மறுக்கும் வ.ரா., விதவைகள் குறித்த மேயோ பதிவை, அனுதாபத்தோடு அணுகுகிறார். அதில் அவர் கூறும் ‘ஹிந்து’ என்பவன் யார்? அதன்பின் உள்ள வருணம் குறித்து வ.ரா. என்ன கருதுகிறார்? இவை பற்றியெல்லாம் நாம் அறியமுடியவில்லை. கலப்புமணம் செய்து கொண்ட வ.ரா. பெண்கள் குறித்து தமிழ்ப் புனை கதையுலகில் எழுதிய அளவிற்கு இன்னொரு வரைக் கூறமுடியாது. இருந்தாலும் ‘ஹிந்து’ என்ற நம்பிக்கையுடையவராக இருக்கிறார். இது பாரதி, காந்தி வழி உருவான கருத்துநிலை. இந்த மனநிலையிலிருந்து அவர் தேசத்தைக் கட்டமைக்கிறார். அந்த தேசத்தை மேயோ இழித்துரைப்பதாகக் கோபப்படுகிறார்.

இந்தத் தொகுப்பில் கோவை அய்யாமுத்து, வ.ரா. என்ற இரு முரண்பட்ட கருத்துநிலைகளை நாம் எதிர் கொள்கிறோம். இரண்டு மனிதர்களும் நேர்மை யானவர்கள். உண்மை மீது நம்பிக்கையுடையவர்கள். ஆனால் இவர்கள் கட்டமைக்கும் ‘தேசம்’ வேறு வேறானது. இதில் எந்த தேசத்தை நாம் வரித்துக் கொள்ளவேண்டும்? என்ற உரையாடலுக்கு இத் தொகுப்பு அடிப்படையாக அமையும்.

இத்தொகுப்பில் இணைக்கப்பட்டுள்ள சி.எஸ். ரங்கய்யர் நூல், ஆழமான தத்துவப் பின்புலங்களின்றி மேயோவை, மேயோ பாணியில் எதிர்கொள்ளும் நூல். அரசியல் சொல்லாடல்களை எளிமைப்படுத்திக் காணும் உரையாடல்களைக் கொண்டிருக்கிறது. அவர் மாதா என்றால் இவர் பிதா என்கிறார். அவ்வளவே.

‘மனோரஞ்சன்ஜா’ நூல் (வெங்கடசாமிநாதனால் மொழிபெயர்க்கப்பட்ட) மிகவும் சுவையான பின்புலம் கொண்டது. பிரித்தானியர்கள் அமெரிக்காவைச் சேர்ந்த பத்திரிகையாளரான காதரீன் மேயோவை நியமித்து, அன்றைய இந்தியா குறித்து எழுதச் சொன்னார்கள். அவர்களின் நோக்கம், பிரித்தானியர்களின் ஆட்சியைக் கட்டிக்காப்பதற்கு மேயோ எழுதுவது உதவும் என்பது. இதே கண்ணோட்டத்தில், பிரித்தானியர்களிடமிருந்து ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றிய பின்பு, தங்கள் அதிகாரச் செயல்பாட்டை நியாயப்படுத்தவேண்டும். அதற்காக, மேயோ,குறித்த புலன்விசாரணை சார்ந்த ‘ஆய்வு’நூலை எழுதுவதற்கு மனோரஞ்சன்ஜாவை நியமித்தார்கள். இருவரும் ஒரே நோக்கத்தில் செயல்பட்டிருக்கிறார்கள். அரச அதிகாரம் என்பது ஒரே கருத்துநிலை உடையது என்பது இதன் மூலம் வெளிப்படுகிறது. இந்த நூலில் மேயோவை உளவாளி என்று நிரூபிக்கும் முயற்சி முதன்மையாக வெளிப் பட்டுள்ளது. அவர் முன்வைத்திருக்கும் விமரிசனங்களை எளிதாகப் புறக்கணிக்கிறார் இந்த ஆய்வாளர். வழக்கமான கல்விப்புலம் சார்ந்த ஆய்வு முறையில் அமைந்திருக்கும் இந்நூல், துப்பறியும் தன்மையுடன் எழுதப்பட்டிருக்கிறது.இந்திய ஆளும் வர்க்கத்தின் சொல்லாடல்கள் நியாயப்படுத்தப்பட்டு, இந்திய ‘தேசம்’ காப்பாற்றப்பட்டுள்ளது. தனக்கிட்ட கட்டளையை முறையாக நிறைவேற்றியுள்ளார்மேயோவும் அவ்விதம் செயல்பட்டாலும் பல்வேறு எதார்த்தங்களைப் பதிவு செய்தார்; ஆனால் ஜா, மேயோ என்ற பத்திரிகையாளரைப் பற்றிய ஆய்விலேயே முழுக்கவனம் செலுத்தியுள்ளார்.அவரது கருத்துகள் மீது ஜா கவனம் குவிக்கவில்லை.

1925-30 ஆண்டுகளில் இந்தியாவில் ‘இரட்டை யாட்சி’ முறை நடைமுறைக்கு வந்த சூழலில் இந்தி யாவின் நிலைமைகளை மதிப்பீடு செய்த காலனியப் பார்வை, தேசம் எனும் கருத்தாக்கத்தை நம்பாத பார்வை, தேசத்தை நம்பிய பார்வை, பொய்யான தேசத்தைக் கட்டிக் காப்பதாகக் கூறும் பார்வை என்று பல கோணங்களில் இத்தொகுப்பு செயல்படுகிறது. இத்தொகுப்பு காலனியம் குறித்த நவீன ஆய்வுக்கு உதவும் அரிய தரவாக அமைகிறது. இதனை வெளிக் கொண்டுவரும் விடியல் பதிப்பகப் பணி வரலாற்றில் நினைக்கப்படும்.

இம்முயற்சியை முன்னெடுத்த தோழர் விடியல் சிவா இன்றில்லை. இக்கட்டுரையின் முதல் ஐந்து பக்கங் களை எனது கையெழுத்தில் எழுதிக் கொண்டிருந்த போது சிவா மறைந்து கொண்டிருந்தார். இந்தத் தொகுப்பு பற்றி என்னிடம் சிவா நிறையப் பேசினார். மேயோ குறித்து வ.ரா.வின் நூலை நான் கொடுத்தேன். அப்போது, இத்தொகுப்புக்கு நான் ஓர் அறிமுகம் எழுத வேண்டுமென்று கேட்டார். நான் இப்போது எழுதி விட்டேன். அவர் இல்லை. அவர் இருக்கும்போதே எழுதி இருக்கவேண்டும். அதைச் செய்யாத குற்ற உணர்வு இந்த நூல் வழியாக என்னுள் பதிந்துவிட்டது.

(குறிப்பு: விடியல் பதிப்பகம் வெளியிட உள்ள ‘இந்திய மாதா’ எனும் நூலிற்கு எழுதிய அறிமுக உரை)

Pin It