தமிழ்நாடு அரசுப்பணி தேர்வாணையம் 26-7-2024 அன்று ஒருங்கிணைந்த தொழில்நுட்ப பணிகள் தேர்வு (நேர்முகத்தேர்வு அல்லாத பணிகள்) என்று ஒரு அறிவிக்கை (9-24) அனுப்பியுள்ளது. இதில் உதவி காப்பாட்சியர் (தொல்லியல்) எனும் பதவிக்கு கோரப்பட்டுள்ள தகுதிகள் என இவ்வாறு வரையறை செய்யப்பட்டுள்ளது.

1.           சமஸ்கிருத பட்டப்படிப்புடன் திராவிட மொழிகள் மற்றும் பண்டைய இந்திய வரலாறு பற்றிய அறிவு கட்டாயம் பெற்றிருக்க வேண்டும். (அல்லது) தொல்லியலில் பட்டப்படிப்பு (சமஸ்கிருத பணி அறிவுடன் சமஸ்கிருதத்தில் உயர் தகுதி) மற்றும் திராவிட மொழிகள் மற்றும் எழுத்துக்கள் மற்றும் பண்டைய இந்திய வரலாறு ஆகியவற்றில் அறிவு.

2.           மேற்படி கல்வித்தகுதியுடன் கூடிய தேர்வர்கள் இல்லாதபட்சத்தில் வரலாறு பட்டத்துடன் சமஸ்கிருத பணி அறிவு பெற்ற தேர்வர்கள் கருதப்படுவர்.

3.           சமஸ்கிருதத்தில் உயர் தகுதி பெற்றிருப்பவர்களுக்கு முன்னுரிமை உண்டு.

இன்றைய நிலையில் சமஸ்கிருதம் படித்தவர்களுக்கு முன்னுரிமை அளித்து தமிழக அரசுப் பணிக்கு ஆட்களைத் தேர்வு செய்ய அறிவிப்பு வெளியிட்டிருப்பது தமிழறிஞர்களுக்கும் தமிழார்வலர்களுக்கும் அதிர்ச்சி அளிப்பதாய் இருக்கிறது.

தொல்லியல் துறை சார்பில் நிகழ்த்தப்படும் கல்வெட்டு ஆய்வுகளில் பெரும்பகுதி கிரந்த எழுத்துகள்தான் பயன்பாட்டில் உள்ளன. தொல்லியல் அறிவும், ஆழ்ந்த தமிழ்மொழிப் புலமையும் உள்ளவர்கள் கிரந்த எழுத்துகளை எளிதாகப் புரிந்து கொள்ள முடியும் என்பதே உண்மை நிலைமை. ஏற்கெனவே தொல்லியல் துறையில் உயர்பதவிகளில் இருப்பவர்கள் பலரும் சமஸ்கிருதம் படித்து பணியில் சேர்ந்ததாகக் கூறுவதற்கு இடமில்லை என்பதையும் இவ்விடம் இணைத்துப் பார்க்க வேண்டும்.

பல்லவர், இடைக்காலச் சோழர்கள், விஜயநகரப் பேரரசுக் காலத்தியக் கல்வெட்டுகளில் சமஸ்கிருத வரிவடிவத்திலும் தமிழ்க்கிரந்த எழுத்துருக்களும் கொண்ட கல்வெட்டுகள் இடம் பெற்றுள்ளன. நமது நோக்கம் வரலாற்று வரைவுக்குப் பெரிதும் துணை நிற்கும் கல்வெட்டுகளை நூல் வடிவமாக்குவது தான். இவ்வகையில் தமிழ்க் கல்வெட்டு ஆய்வாளர்கள் அனைவருக்கும் சமஸ்கிருதம் தெரிந்திருக்க வேண்டிய அவசியம் இல்லை.

கடந்த நூற்றாண்டில் சமஸ்கிருதம் படித்தவர்களுக்கு எத்துணை முக்கியத்துவம் அளிக்கப்பட்டது என்பதையும் தமிழ் படித்த பண்டிதர்கள் எவ்விதம் நடத்தப்பட்டார்கள் என்பதையும் இன்றைக்கு நினைத்துப் பார்க்க வேண்டியுள்ளது. அப்போது சமஸ்கிருத ஆசிரியர்களுக்கு அளிக்கப்பட்ட சம்பளம் தமிழ்ப் பண்டிதர்களுக்கு வழங்கப்படவில்லை. அந்தப் பாகுபாடுகள் மீண்டும் தழைக்க வேண்டுமா? இது ஏற்புடையதா?

1835ஆம் ஆண்டு மதராஸ் மருத்துவக் கல்லூரி தொடங்கப்பட்ட காலத்திலிருந்து 1920ஆம் ஆண்டு வரை சமஸ்கிருதம் படித்தவர்கள் மட்டுமே மருத்துவக் கல்வி பயிலமுடியும் என்ற கட்டாய விதி நடைமுறையிலிருந்தது.. பல்வேறு பெரும் போராட்டங்களுக்குப் பிறகு 1921ஆம் ஆண்டு நீதிக்கட்சி ஆட்சிக்கு வந்த பின்னரே சமஸ்கிருதம் கட்டாயம் என்பது நீக்கப்பட்டு சாமானியத் தமிழர்களும் மருத்துவம் படிக்க வாய்ப்புகள் உருவாக்கப்பட்டன. இவையெல்லாம் இன்று நினைவுக்கு வருகின்றன.

ஏறத்தாழ நூறாண்டுகளுக்குப் பிறகு மீண்டும் சமஸ்கிருதம் படித்தவர்கள் மட்டுமே குறிப்பிட்ட தமிழக அரசுப்பணிக்கு விண்ணப்பிக்க முடியும் என்ற அறிவிக்கை என்பது ஒரு வகையில் சமஸ்கிருதத் திணிப்பு மட்டுமல்லாது தமிழ்ப் பட்டப் படிப்பு படித்தவர்களுக்கு பின்னடைவு என்பதையும் கவனத்திற்குக் கொண்டுவர வேண்டியுள்ளது.

- உங்கள் நூலகம் ஆசிரியர் குழு