புதுச்சேரி நகரில் உள்ள தெருக்களில் தமிழ் பெயர்களைத் தாங்கிய பழமையான தெருக்கள் சில உண்டு. அவற்றுள் ஒன்று ‘நைனியப்ப பிள்ளை தெரு’.

danna agmon bookநைனியப்ப பிள்ளை என்பவர் யார்? என்பது குறித்த எழுத்துப்பதிவு 1948-ஆம் ஆண்டில் வெளியான ‘ஆனந்தரங்கப் பிள்ளை’ ‘சொஸ்த லிகித நாட்குறிப்பு’ என்ற நூலின் முதலாவது பகுதியில் இடம் பெற்றுள்ளது. ஞானுதியாகு என்பவர் இந்நூலுக்கு எழுதிய நூன்முகம் என்ற பகுதியில் நைனியப்ப பிள்ளை என்பவரைக் குறித்து சில செய்திகளைக் குறிப்பிட்டுள்ளார். அவற்றின் அடிப்படையில் நைனியப்ப பிள்ளை தொடர்பாக நாம் அறியலாகும் செய்திகள் வருமாறு:

· புதுச்சேரியில் செயல்பட்டு வந்த பிரெஞ்சு கிழக்கிந்திய நிறுவனத்தின் தரகராக 1708-இல் நைனியப்ப பிள்ளை நியமிக்கப்பட்டுள்ளார்.

· கையூட்டு வாங்கிய குற்றம் அவர் மீது சுமத்தப்பட்டது.

· இக்குற்றத்திற்காக 50 சவுக்கடி மூன்று வருட சிறைத்தண்டனை 8888 வராகன் தண்டம், நாடுகடத்தல் என நான்கு வகையான தண்டனைகள் விதிக்கப்பட்டன.

· 1717-ஆம் ஆண்டில் நைனியப்ப பிள்ளை சிறையில் இறந்துவிட்டார்.

· நைனியப்ப பிள்ளையின் மூத்த மகனான குருவப்பிள்ளை, தமது தந்தைக்கு விதிக்கப்பட்ட தண்டனை தவறானது என்று பாரிஸ் நகரம் சென்று நீதிமன்றத்தில் முறையிட்டார்.

· அவரது முறையீட்டை ஆராய்ந்த நீதிமன்றம் நைனியப்ப பிள்ளை குற்றமற்றவர் என 1720-இல் தீர்ப்பளித்தது.

ஞானு தியாகு குறிப்பிடும் இச்செய்திகள் நைனியப்ப பிள்ளை என்பவரைக் குறித்த மேலோட்ட மான பதிவுகளாக உள்ளன. இதற்கு மேல் விரிவாக எழுத வேண்டிய தேவையும் அவருக்கில்லை.

ஆனால், டானா அகமன் என்ற இந்நூலாசிரியை இச்செய்திகளை விரிவாக ஆராய்ந்து தனி நூலாக ஆக்கியுள்ளார். இந்நூலின் தலைவன் போல் நைனியப்ப பிள்ளை அமைந்தாலும் 18ஆவது நூற்றாண்டில் பிரெஞ்சுக் காலனியாக விளங்கிய புதுச்சேரி நகரின் சமூக வாழ்வில் ஆதிக்கம் செலுத்தியோரை நாம் அறியச் செய்கிறார்.

பிரெஞ்சுக் காலனிய ஆட்சியின் எதிர்மறையான செயல்பாடுகளை வெளிச்சத்துக்குக் கொண்டு வருகிறார். பிரான்ஸ் நாடு கத்தோலிக்கக் கிறித்தவத்தின் செல்வாக்கிற்கு ஆட்பட்ட நாடு என்பதால் இம்மதத்தைப் பரப்ப வந்த கத்தோலிக்கத் துறவற அமைப்பான சேசு சபையினர் இதில் வகித்த பங்கை வெளிப்படுத்துகிறார்.

பிரான்சின் சார்பில் புதுச்சேரியில் அதிகாரம் செலுத்திய பிரெஞ்சு ஆளுநர்களின் இழிசெயல்களை நாம் அறியச் செய்கிறார். இக்காரணங்களால் நைனியப்ப பிள்ளை என்ற தனிமனிதன் எதிர்கொண்ட வழக்கின் வரலாறு ஒரு நுண் வரலாறாக (Micro History) மாற்றம் பெற்றுள்ளது.

நூலாசிரியர் டானா அகமன் வெர்ஜீனியாவில் வரலாற்றுத்துறை உதவிப்பேராசிரியராகப் பணி புரிகிறார். இந்நூலை எழுத பிரான்ஸ் நாட்டில் உள்ள வரலாற்று ஆவணக்காப்பகங்கள், கிறித்தவ சமய நிறுவனங்களின் ஆவணக் காப்பகங்கள், புதுச்சேரியில் உள்ள இந்திய தேசிய ஆவணக்காப்பகம் எனப் பல்வேறு ஆவணக்காப்பகங்களில் உள்ள ஆவணங்களைப் பயன்படுத்தி உள்ளார்.

புதுச்சேரியில் இயங்கி வந்த பிரெஞ்சு கிழக்கந்திய நிறுவனத்தின் தலைமைத் தரகராக நைனியப்ப பிள்ளை நமக்கு அறிமுகமாவதால் தலைமைத் தரகர் என்ற பதவி குறித்து அறிதல் அவசியமாகிறது.

தலைமைத் தரகர்

18-ஆம் நூற்றாண்டு சென்னை நகரில் ஆங்கிலேயர்களும், புதுச்சேரி நகரில் பிரெஞ்சுக் காரர்களும் தம் வாணிப நிறுவனங்களின் வாயிலாக, ஏற்றுமதி இறக்குமதி வாணிபத்தில் தீவிரமாக ஈடுபட்டு வந்தனர். இதுவே இருதரப்பினருக்கும் இடையிலான வாணிபப் போட்டியாகவும் அரசியல் போட்டியாகவும் பின்னர் உருவெடுத்தது.

ஒப்பந்தத்தின் வாயிலாக 1699-இல் டச்சுக் காரர்களிடம் இருந்து புதுச்சேரியைப் பெற்றுக்கொண்ட பிரெஞ்சு நாட்டினர் தம் முக்கிய வாணிபத் தளமாக அதை ஆக்கினர். பொருட்களை இங்கு இறக்குமதி செய்வதிலும் ஏற்றுமதி செய்வதிலும் மிகுந்த சுறுசுறுப்புடன் இயங்கினர். புதுச்சேரியில் இருந்து திரும்பிச் செல்லும் கப்பல்கள் இப்பகுதியில் இருந்து சேகரிக்கப்பட்ட சரக்குகளால் நிரப்பப்பட்டிருக்க வேண்டும் என்பதில் கருத்தாய் இருந்தனர்.

நெசவாளர்களிடம் இருந்து கொள்முதல் செய்யப்பட்ட துணிகள், துணிகளுக்குச் சாயமேற்ற உதவும் சாயப்பொருட்கள், வேளாண் உற்பத்திப் பொருட்கள், தொழிற்பட்டறைகளில் இருந்து உற்பத்தி செய்யப்பட்ட பொருட்கள் என்பனவற்றைச் சேகரித்து தம் நாட்டிற்கும் இதர அய்ரோப்பிய நாடுகளுக்கும் அனுப்பலாயினர்.

உற்பத்தியாளர்கள் உழவர்கள், வணிகர்கள் என்போரிடம் இருந்து இப்பொருட்களைக் கொள்முதல் செய்து சேகரிக்க வேண்டியதிருந்தது. தாம் இறக்குமதி செய்யும் பொருட்களை விற்பனை செய்ய உள்ளுர் வணிகர்களிடம் தொடர்பு கொள்ள வேண்டியிருந்தது.

இப்பணியில் தமக்கு உதவும் பொருட்டு உள்ளுர்வாசிகளைத் தரகர்களாக நியமித்தனர். இவ்வாறு நியமிக்கப்படுவோர், பிரெஞ்சு அல்லது போர்ச்சுக்கீசிய மொழி தெரிந்தவர்களாக இருப்பது அவசியமானது. தமிழ்நாட்டின் தொடக்கக்கால அய்ரோப்பிய வணிகர்களாகவும், காலனியவாதிகளாகவும் போர்ச்சுக் கீசியர்கள் விளங்கியதால் போர்ச்சுக்கீசிய மொழி யறிவுக்கு முக்கியத்துவம் இருந்தது. தரகர்களாகச் செயல்பட்டோர் இரண்டு விழுக்காட்டில் இருந்து நான்கு விழுக்காடு வரை விற்பனை விலையில் ஆதாயமாகப் பெற்றனர்.

 இத்தரகர்களில் ஒருவரைத் தலைமைத் தரகராகப் பிரெஞ்சு கிழக்கிந்தியக் கம்பெனி நியமித்து வந்தது. பிரெஞ்சு அரசின் சார்பில், புதுச்சேரியையும் அதன் சுற்றுப்பகுதிகளையும் நிர்வகித்து வந்த பிரெஞ்சு ஆளுநருடனும், பிரெஞ்சு கிழக்கிந்திய நிறுவனத்தின் உயர்நிலை அதிகாரிகளுடனும் நெருக்கமான தொடர்புடையவராக, தலைமைத் தரகர் விளங்கினார். அடிக்கடி இவர்களைச் சந்திக்கும் வாய்ப்பு இவருக்கிருந்தது. புதுச்சேரியின் குடிமக்கள், வணிகர்கள், தரகர்கள் என்போருக்கும் அதை ஆளுவோருக்கும் இடையிலான தொடர்பு அதிகாரி போன்று செயல்பட இவரது இருமொழியறிவு இதில் துணைநின்றது. இருபத்தியைந்து ஆண்டுக் காலமாகத் தாம் எழுதிவந்த நாட்குறிப்பினால் புகழ்பெற்ற ஆனந்தரங்கப் பிள்ளை, தலைமைத் தரகராக விளங்கியவர்தான். இப்பதவியின் முக்கியத்துவத்தை இவரது நாட்குறிப்பின் வாயிலாக அறியமுடிகிறது. இவருக்கு முன்பு இப்பணியை வகித்த நைனியப்ப பிள்ளை இவரது உறவுக்காரர்தான்.

நைனியப்ப பிள்ளை

ஆந்திரத்தில் இருந்து சென்னைக்கு இடம் பெயர்ந்து வந்த யாதவக் குடும்பத்தைச் சேர்ந்தவர் நைனியப்ப பிள்ளை. சென்னையில் வாழ்ந்துவந்த இவர் ஆங்கிலக் கிழக்கிந்திய நிறுவனத்துடனும், பிரெஞ்சுக் கிழக்கிந்திய நிறுவனத்துடனும் வணிகத் தொடர்பு கொண்டிருந்தார். சென்னையில் இவர் வாழ்ந்து வந்தபோதே இவரது பெயர் பிரெஞ்சுக் கிழக்கிந்திய நிறுவனத்தின் ஆவணங்களில் இடம் பெற்றிருந்தது. பிரெஞ்சு ஆளுகையின் கீழ் இருந்த பகுதிகளில் புகையிலையும், வெற்றிலையும் பயிரிட 1704-இல் அனுமதி பெற்றிருந்தார். பிரெஞ்சு வணிக நிறுவனத்தின் உயர் அதிகாரிகளிடமும், புதுச்சேரியை நிர்வகித்து வந்த பிரெஞ்சு ஆளுநரிடமும் இவருக்கு நல்ல உறவிருந்தது.

பிரெஞ்சு வணிக நிறுவனத்தின் தலைமைத் தரகராகப் பணியாற்றி வந்த உள்ளுர்க் கிறித்தவரின் பணி சிறப்பாக இல்லை என்று கருதியதால் அவரை நீக்கிவிட்டு அந்த இடத்தில் நைனியப்ப பிள்ளையை 1708-ல் நியமித்தனர். அவருடைய திறமையின் மீது நீண்ட காலமாகக் கொண்டிருந்த நம்பிக்கையே இதற்குக் காரணமாகும்.

கிறித்தவர் ஒருவரைப் பதவிநீக்கம் செய்து விட்டு அந்த இடத்தில் இந்து ஒருவரை நியமித்ததை புதுச்சேரியில் செயல்பட்டுவந்த கிறித்தவ துறவற சபையினரான சேசு சபையினர் விரும்பவில்லை.

சேசுசபை

இக்னேஷியஸ் லயோலா என்ற பிரெஞ்சு நாட்டவரால் கி.பி.1540இல் நிறுவப்பட்ட துறவற சபையே சேசுசபை ஆகும். புதுச்சேரியில் வாழ்ந்து வந்த ஆயிரக்கணக்கான பிரெஞ்சு நாட்டவரின் ஆன்மீக வாழ்வில் உதவுவதே இவர்களது பணியாகும். இருந்தபோதிலும் காலனியத்தின் மற்றொரு பணியான கிறித்தவ சமயப்பரப்பிலும் இவர்கள் ஈடுபட்டு வந்தனர். புதுச்சேரியில் கத்தோலிக்கக் கிறித்தவர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதில் இவர்கள் மிகுந்த ஆர்வம் காட்டி வந்தனர். இதன் பொருட்டு பிரான்ஸ் மன்னனிடம் நேரடியாகத் தொடர்பு கொண்டு வந்தனர்.

தலைமைத் தரகராக நைனியப்ப பிள்ளை நியமிக்கப்பட்டதை எதிர்த்து பிரான்ஸ் நாட்டு மன்னனுக்கு மனு ஒன்றை 1711-இல் அனுப்பினர். புதிய கிறித்தவர்களை ஈர்க்கும் வகையில் உயர்பதவிகளை அவர்களுக்கு மட்டுமே வழங்கவேண்டும் என்று மனுவில் குறிப்பிட்டிருந்ததுடன் தலைமைத் தரகர் பதவியில் இருந்து நைனியப்ப பிள்ளையை நீக்க வேண்டும் என்ற வேண்டுகோளையும் முன்வைத் திருந்தனர்.

இம்மனு, புதுச்சேரியில் செயல்பட்டு வந்த ஆளுங் கணத்தாருக்கு மன்னனால் அனுப்பிவைக்கப்பட்டது. மார்ச் 1714இல் இதை ஆராய்ந்த அவர்கள் நைனியப்ப பிள்ளையின் இடத்தை நிரப்ப வேறு எந்த இந்துவோ கிறித்தவரோ இல்லை என்ற கருத்தை வெளிப் படுத்தினர். இருப்பினும் சேசுசபையினரை நிறைவுபடுத்தும் வகையில் இரண்டு திட்டங்களை முன்வைத்தனர். இதன்படி நைனியப்ப பிள்ளையுடன் கூட்டாக இணைந்து செயல்படும் வகையில் சவரி என்ற கிறித்தவர் நியமிக்கப்படுவார். நைனியப்ப பிள்ளைக்கு இணையான முறையில் அப்பதவிக்குரிய அதிகாரங்களும், மரியாதைகளும் அவருக்கு வழங்கப் படும். கிறித்தவர்களின் நலனைப் பாதுகாப்பதிலும், கிறித்தவத்தைப் பரப்புவதிலும் சவரி கூடுதலாகச் செயல்படுவார். இதில் நைனியப்ப பிள்ளையின் குறுக்கீடு எதுவும் இராது.

இரண்டாவதாக ஆறுமாத காலத்திற்குள் நைனியப்ப பிள்ளை கிறித்தவராக மதம் மாறவேண்டும். அவ்வாறு மாறாவிடில் இப்பதவியில் இருந்து நீக்கப்படுவார். அவரது இடத்தில் கிறித்தவர் ஒருவர் நியமிக்கப்படுவார்.

ஆனால் 1714-இல் அறிவிக்கப்பட்ட முடிவின்படி, நைனியப்ப பிள்ளை கிறித்தவராக மதம் மாறவுமில்லை, பதவியில் இருந்து நீக்கப்படவும் இல்லை. 1716-இல் அவர் கைது செய்யப்படும் வரை இப்பதவியில் தொடர்ந்தார். அவர் கைது செய்யப்பட்ட பின் அவர் மீது இரு குற்றச்சாட்டுகள் முன் வைக்கப்பட்டன. இக்குற்றச்சாட்டுகளின் பின்புலத்தில் கத்தோலிக்கக் கிறித்தவத்தின் மதப்புரப்புரை வேட்கை இருந்தது. இதனால் அவர் மீதான குற்றச்சாட்டுகளை அறியும் முன்னர் புதுச்சேரியில் கத்தோலிக்கத்தின் செயல்பாடுகளை அறிந்து கொள்வது அவசியமாகிறது.

புதுச்சேரியில் கத்தோலிக்கம்

பிரெஞ்சு கிழக்கிந்திய நிறுவனம் தொடங்கிய போதே வாணிபம் மட்டுமின்றி கத்தோலிக்கத்தைப் பரப்புவதும் அதன் நோக்கமாக அமைந்திருந்தது. வாணிபத்தின் வாயிலாக காலனிய ஆட்சியை நிலைநிறுத்திய பகுதிகளில் இந்நோக்கத்தை நிறை வேற்றுவதில் ஆர்வம் காட்டினார். இதன் பொருட்டு கத்தோலிக்கத்தின் பல்வேறு சைவப்பிரிவுகளைச்

சேர்ந்த மறைப்பணியாளர்கள் காலனிய நாடுகளில் செயல்பட்டனர். புதுச்சேரியும் இதற்கு விலக்கல்ல.

17-வது நூற்றாண்டிலும் 18-வது நூற்றாண்டின் தொடக்கத்திலும் தெற்காசியாவில், கத்தோலிக்க மறைப்பரப்பில் பணி குறிப்பிட்டுச் சொல்லும் அளவுக்கு நிகழ்ந்து வந்தது. புதுச்சேரியில் பிரெஞ்சு நாட்டு மறைப்பணியாளர்கள் இப்பணியில் ஈடுபட்டு வந்தனர். இவர்கள், சேசுசபை, கப்புச்சின் சபை, பாரிஸ் அந்நிய வேதபோதக சபை என்ற மூன்று துறவற அமைப்பைச் சேர்ந்தவர்கள். இவர்களுள் கப்புச்சின் சபையினர் தான் முதலாவதாக 1674-இல் புதுச்சேரிக்கு வந்தனர். அங்கிருந்த அய்ரோப்பியக் கத்தோலிக்கர் வழிபடும் தேவாலயங்களின் பங்குக் குருக்களாகவும், உள்ளுர் மக்களின் மறைப்பணியாளர்களாகவும் செயல்பட்டனர். அத்துடன் பிரெஞ்சு கிழக்கிந்திய நிறுவனத்துடன் நெருங்கிய தொடர்பு கொண்டிருந் தனர். இத்தொடர்பே சேசுசபையினருக்கும் இவர்களுக்கும் இடையே முரண்பாட்டையும் பகை உணர்வையும் தோற்றுவித்தது. இது வெளிப்படையான ஒன்றாக இருந்ததால் புதுச்சேரியில் வாழ்ந்து வந்த வெனிசியர் ஒருவரிடம், அவர் சேசுசபையின் கடவுளை வணங்குகிறாரா அல்லது கப்புச்சின்களின் கடவுளை வணங்குகிறாரா என்று உள்ளூர்வாசிகள் சிலர் கேட்டனர்.

1689-இல் சேசுசபையினர் புதுச்சேரிக்கு வந்ததில் இருந்தே இவ்விரு துறவற அமைப்புகளுக்கும் இடையே முரண்பாடு உருவாயிற்று. அப்போதைய பிரெஞ்சு ஆளுநர் இவ்விரு அமைப்புகளின் பணிக்களத்தை இரண்டாகப் பகுத்தார். அதன்படி அய்ரோப்பியர் வாழும் பகுதிகளில் கப்புச்சின்களும் உள்நாட்டுக் கிறித்தவர்கள், கிறித்தவராக மாறவிரும்புவோர் வாழும் பகுதிகளில் சேசுசபையினரும் மறைப் பணியாற்ற வேண்டும்.

பொதுவாகவே சேசுசபையினருக்கும் பல்வேறு கத்தோலிக்க சமய அமைப்புகளுக்கும் இடையில் நல்ல உறவு இல்லாதிருந்தது. உள்ளுர்ப் பழக்கவழக்கங்களை உள்வாங்கிக்கொள்ளும் போக்கு சேசுசபையினரிடம் இருந்தது. பிறப்பு இறப்புச் சடங்குகளில் தம் பாரம்பரிய மரபுகளைப் பின்பற்ற புதிய கிறித்தவர்களை அவர்கள் அனுமதித்தனர். வத்திகன் அதிகாரிகளும், பிற மறைப் பணியாளர்களும் இதை ஏற்றுக்கொள்ளவில்லை. கிறித்தவத்தை நீர்த்துப் போகச் செய்வதாகக் கூறினர்.

இருப்பினும் பிரெஞ்சு அரசிடம் செல்வாக்குப் பெற்ற நிலையிலேயே சேசுசபையினர் இருந்தனர்.

****

nayiniyappa pillai streetஇச்சூழலில் 1715 பிப்ரவரியில், புதுச்சேரியில் வாழ்ந்து வந்த நூற்றுக்கணக்கான ஏழைகளை அழைத்து உணவு, ஆடை, கத்தோலிக்கர் பயன்படுத்தும் செபமாலை ஆகியனவற்றை நைனியப்பபிள்ளை கொடையாக வழங்கினார். இவ்வழைப்பு கிறித்த வர்களுக்கு மட்டுமே விடுக்கப்பட்டதா? அல்லது ஏழைகளுக்கான இவ்வழைப்பில் கிறித்தவ சமய ஏழைகளும் கலந்து கொண்டார்களா என்பதில் தெளிவில்லை. நைனியப்ப பிள்ளையின் இக்கொடைச் செயல் கிறித்தவர்களை இழிவுபடுத்திய செயல் என்று சேசுசபையினர் கருதினார்கள்.

புதுச்சேரியில் செயல்பட்டு வந்த சேசுசபைக் குருக்களின் அதிபர் தந்தையாகப் பணியாற்றி வந்த ஜான் வெனட் பூசே என்பவர், புதுச்சேரி ஆளுநருக்கு இது குறித்து எழுதிய கடிதத்தில், ‘நாய்களைப் போன்று’ கிறித்தவர்களை நைனியப்ப பிள்ளை நடத்தியதாகக் குற்றம் சாட்டினார். கிறித்தவர்களின் மீது நைனியப்ப பிள்ளை நடத்தி வரும் தொடர்ச்சியான இழிசெயல் களில் ஒன்றே இச்செயல் என்றும் குறிப்பிட்டிருந்தார். நைனியப்ப பிள்ளையின் சமய ஒடுக்குமுறைக்கு ஆளான கிறித்தவர்கள் பலரின் பெயர்களையும் அக்கடிதத்தில் அவர் குறிப்பிட்டிருந்தார். இந்துக்கள் பலர் கிறித்தவத்தைத் தழுவுவதை, வாக்குறுதிகள் மற்றும் அச்சுறுத்தல் வாயிலாகத் தடுப்பதாகவும் குறிப்பிட்டிருந்தார்.

ஏழைகளுக்கு உதவும் செயலை நைனியப்ப பிள்ளை மேற்கொண்டிருந்தபோதே இக்கடிதம் புதுச்சேரியை நிர்வகித்து வந்த ஆட்சிக்குழுவிடம் சென்றது. 1715 பிப்ரவரி 20ஆவது நாளன்றும் புதுச்சேரிக் கிறித்தவர்கள் நைனியப்ப பிள்ளை வழங்கிய உணவையும் உடை யையும் பெற்றுக்கொண்டிருந்த நிலையில், ஆட்சிக்குழு கூடி இக்கடிதத்தின் செய்தி குறித்து ஆராய்ந்தது. நைனியப்ப பிள்ளைக்கு இணையாக அவர்கள் நியமித்த சவரி என்பவரையும் பெத்ரோ என்ற கிறித்தவரையும் அழைத்து இந்நிகழ்ச்சிகள் தொடர்பாக சாட்சிகளின் சிலரை அழைத்துவரும்படிக் கட்டளையிட்டது.

புதுச்சேரியில் வாழ்ந்து வந்த நான்கு தமிழ்க் கிறித்தவர்களை நைனியப்ப பிள்ளையின் வீட்டில் இருந்து அழைத்து வந்தனர். அவர்களிடம் கேட்டறிந்த செய்திகளை ஓர் அறிக்கையாக ஆட்சிக்குழு பதிவு செய்தது. அதன்படி அந்நால்வரும், நைனியப்ப பிள்ளை கொடை வழங்குவதைக் கேள்விப்பட்டு தன்னிச்சை யாகவே அங்குச் சென்றனர். கிறித்தவர்களும் கிறித்தவர் அல்லாதோரும் அங்கிருந்தனர். அவர்கள் அனைவருக்கும் உணவும் உடையும் வழங்கப்பட்டது. கத்தோலிக்க சமயத்தைச் சிறுமைப்படுத்தும் தன்மையில் எதுவும் அங்கு நிகழவில்லை. அப்படி நம் சமயத்தைச் சிறுமைப்படுத்தும் செயல் எதுவும் நடந்திருந்தால் நாங்கள் அங்குத் தங்கியிருக்க மாட்டோம். மேலும் 300 செபமாலைகளைத் தந்து, புதுச்சேரி கிறித்தவர்களிடம் அவற்றை விநியோகிக்கும்படி நைனியப்ப பிள்ளை கேட்டுக்கொண்டதாகவும் குறிப்பிட்டனர்.

மேற்கூறிய நான்கு கிறித்தவர்களின் சாட்சி யத்துடன் மட்டுமின்றி நைனியப்ப பிள்ளையையும் அழைத்து அவரிடம் விரிவான முறையில் விசாரணை நடத்தினர். இவ் அறச்செயலை அவர் ஏன் நடத்தினார் என்று கேட்டபோது, ஒவ்வோர் ஆண்டும் இவ்வாறு உதவி வழங்குவது வழக்கம் என்றார். ஏராளமான செபமாலைகளை அவர் எவ்வாறு வாங்கினார் என்று கேட்டபோது மாலுமி ஒருவரிடம் இருந்து விலைக்கு வாங்கியதாகவும், கடைத்தெருவில் உள்ள இந்து, கிறித்தவ விற்பனையாளர்களிடமும் இது கிடைக்கும் என்றும் விடையளித்தார்.

இறுதியில், பிறரது வேலைகளில் தலையிடாமல் இருக்கும்படி சேசுசபையினர் அறிவுறுத்தப்படாவிடில், நிறுவனத்தின் முக்கிய தமிழ் ஊழியர்கள் விலகிச் சென்றுவிடுவார்கள் என்று பாரிஸ் நகரில் உள்ள இயக்குநர்களுக்குக் கடிதம் எழுதினர்.

மேற்கூறிய ஆவணச் செய்திகளைக் கூறும் நூலாசிரியர் தன்னுடைய விமர்சனமாகப் பின்வரும் கருத்துக்களை முன்வைக்கிறார்:

பிரான்சின் குடியேற்ற நாடாக பல தசாப்தங்களாகப் புதுச்சேரி இருந்தபோதிலும் அதன் பல்லாயிரக் கணக்கான மக்களில் அய்ம்பதாயிரத்தில் இருந்து அறுபதினாயிரம் வரையிலான மக்களே கிறித்தவர்களாக மாறியிருந்தனர். ஏழைக்கிறித்தவர்களுக்கு உணவும் உடையும் வழங்கியதைவிட, செபமாலை வழங்கியதே அவர்களுக்கு உறுத்தலாய் இருந்தது என்று குறிப்பிடுவதுடன்,

‘நகரத்தின் ஏழைகளுக்கு சேசுசபையினர் வழங்கியதற்கு வலுவான மாற்றாக, ஒரு கலவையை நைனியப்ப பிள்ளை வழங்கினார். மதம் மாறும் போது திருச்சபை மற்றும் அதன் முகவர்களின் அதிகாரத்திற்குப் பணிய வேண்டுமென்று சேசுசபையினர் வலியுறுத்திய போது நைனியப்ப பிள்ளை, கிறித்தவம், கிறித்தவம் அல்லாததுக்கு இடைப்பட்ட ஒரு நிலையை முன்வைத்தார். இதுவே இவரை சேசுசபையின் ஆபத்தான எதிரியாக ஆக்கியது.’

என்று மதிப்பிட்டுள்ளார். புதுச்சேரியில் செயல்பட்டு வந்த கப்புச்சின் சபையின் மறைப் பணியாளர்கள், கொடைச்செயல் தொடர்பான பாரம்பரியம் கொண்டவர்கள். ஏழைகளுக்கு நைனியப்ப பிள்ளை உதவியது குறித்து எவ்விதக் குற்றச்சாட்டையும் அவர்கள் எழுப்பவில்லை. ஆனால், குறைந்த அளவிலேயே, புதிய கிறித்தவர்களைச் சேர்க்க முடிந்த நிலையில் இருந்த சேசுசபையினர், நைனியப்ப பிள்ளையை பதவி நீக்கம் செய்து கைது செய்யும்படி வலியுறுத்தினர். கத்தோலிக்க நம்பிக்கைக்கும், பிரெஞ்சு அரசுக்கும் ஆபத்தான எதிரி என்று குறிப்பிட்டனர். நைனியப்ப பிள்ளைக்கு எதிரான இவர்களது அணிதிரட்டலில் குயிலாமோ ஆந்தரே எபேர் என்ற பெயருடைய புதுச்சேரி முன்னாள் ஆளுநரும் அவரது மகன் எபேர் பில்ஸ் என்பவனும் இணைந்து கொண்டனர்.

ஆளுநர்

புதுச்சேரியில் ஆளுநர் பதவி வகித்தவர் பிரான்ஸ் நாட்டவரான குயிலாமோ ஆந்தரே எபேர். 1708-இல் தலைமைத் தரகராக நைனியப்ப பிள்ளையை முதல்முறையாக நியமித்ததில் இவரது பங்களிப்பு உண்டு. அவரைப் பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்ற சேசுசபையினரின் தொடர்ச்சியான வேண்டு கோள்களைப் புறக்கணித்தவர். ஆளுநராகப் பதவிவகித்த போது பிரான்ஸ் நாட்டில் இருந்த உயர் அதிகாரிகளுக்கு எழுதிய கடிதங்களில் சேசுசபையினர் மீதான இவரது எதிர்ப்புணர்வு அழுத்தமாகப் பதிவாகியுள்ளது. ஆதாரமின்றி குற்றம் சுமத்துபவர்கள் என்று தம் கடிதத்தில் கூறியுள்ளார். சில ஆண்டுகள் பிரான்சில் இருந்து விட்டு உயர்பதவி பெற்று 1715-இல் புதுச்சேரி திரும்பியபின் நைனியப்ப பிள்ளைக்கு எதிரான நிலைப்பாட்டை மேற்கொண்டு, சேசுசபையினருடன் இணைந்து கொண்டார். தம்மையடுத்து ஆளுநராக வந்தவர் நிர்வாகத்தைச் சீர்குலைத்தவர் என்ற கருத்து அவருக்கிருந்தது.

தன் காலத்தில் உயர்பதவி வழங்கப்பட்ட நைனியப்ப பிள்ளை தன்னை அடுத்து வந்த ஆளுநருக்கு கையூட்டு வழங்கிவிட்டு, ஒழுங்கற்று நடந்து கொண்டார் என்று குற்றம் சாட்டினார்.

பிரான்சில் இருந்து தாம் திரும்பிவந்தவுடன் நைனியப்ப பிள்ளையைக் குறித்து மோசமான அறிக்கைகள் தம்மிடம் தரப்பட்டதாகவும் அது தமக்கு வியப்பை அளித்ததாகவும் அவர் எழுதினார். உள்ளூர் மக்களிடம் இருந்து கிறித்தவர், கிறித்தவர் அல்லாதவர் என்ற பாகுபாடின்றி அவர் மீது குறைகூறும் மனுக்கள் வந்தடைவதாகவும் எழுதினார்.

இறுதியாக அவரைக் கைது செய்வது என்ற முடிவையெடுத்தவுடன் புதுச்சேரிவாசிகள் தமக்கு நன்றி கூறியதுடன், தன்னுடைய கோரைப் பற்களால் தம்மை அச்சுறுத்தி வந்த புலியிடம் இருந்து தங்களைக் காப்பாற்றியதாகக் கூறியதாகவும், பாரிஸ் நகரில் இருந்த உயர் அதிகாரிகளுக்கு எழுதிய கடிதத்தில் அவர் குறிப்பிட்டார்.

தம் செயலை நியாயப்படுத்தும் வகையில், 1715 ஆம் ஆண்டில் நிகழ்ந்த பணியாளர்களின் எழுச்சியில் அவரது பங்களிப்பு இருந்ததாகக் குறிப்பிட்டதுடன் அவரது ஒழுங்கீனமான செயல்கள் குறித்து, மக்கள் முன்வைத்த குற்றச்சாட்டுகளின் அடிப்படையிலேயே அவரைக் கைது செய்ததாகவும் எழுதினார்.

இதன் அடிப்படையிலேயே ‘தம் அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தியமை’ என்ற குற்றச்சாட்டுக்கு ஆளாக்கப்பட்டு கைது செய்யப்பட்டார்.

கைது செய்யப்பட்ட நைனியப்ப பிள்ளையின் மீதான வழக்கை நடத்தி அவரைத் தண்டிப்பதில் ஆர்வம் கொண்ட கூட்டணி ஒன்று உருவாகியிருந்தது. முன்னாள் ஆளுநரான எபேர், அவரது மகன் எபேர்பில்ஸ், சேசுசபையின் முதல் இரண்டாவது அதிபர் தந்தைகள், தலைமை உபதேசியாரின் மகன் மனுவேல் ஜகன் ஆகியோர் இக்கூட்டணியின் முக்கிய உறுப்பினர்கள்.

வழக்கு

முன்னாள் ஆளுநராக இருந்து, பதவி உயர்வு பெற்று புதுச்சேரி வந்த எபேர், இந்தியர்களுக்கு எதிராகத் தன் அதிகாரத்தைத் தவறாகப் பயன் படுத்தியதாக நைனியப்பபிள்ளை மீது குற்றம் சாட்டினார். பெரும்பாலும் ஏழைகளாகவும், சக்தியற்றவர்களாகவும் இருந்த தமிழ்க் கிறித்தவர்கள் மீது மத அடிப்படையிலான குற்றச் செயல்களை மேற்கொண்டதாக சேசு சபையினர் குற்றம் சாட்டினர். இக்குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் கைது செய்யப்பட்ட நைனியப்ப பிள்ளையிடம் எந்தவித விளக்கமும் கேட்காமலேயே கைது செய்து புதுச்சேரி கோட்டையில் உள்ள சிறையில் அடைத்தனர்.

கைது செய்யப்பட்டு சரியாக ஒரு திங்கள் கழித்து 13 மார்ச்சு 1716 அன்று சிறையில் இருந்து அலுவலக அறை ஒன்றிற்கு அவரை அழைத்துச் சென்றனர். தமக்கு எதிரான குற்றச்சாட்டுகள் எவை என்பது அப்போது கூட அவருக்குத் தெரியாது.

அவர் சென்ற அறையில் மூன்றுபேர் அவருக்காகக் காத்திருந்தனர். முதலாமவர் எபேர், இரண்டாமவர் அவரது செயலாளர், மூன்றாமவர் தமிழ் மொழி பெயர்ப்பாளரான மனுவேல் ஜகன் (சேசுசபை தலைமை உபதேசியாரின் மகன்). 1716இல் அவர் கைது செய்யப்பட்டு 1717இல் சிறையில் இறக்கும்வரை பிரெஞ்சு மொழியிலேயே அவருடன் உரையாடல் நிகழ்த்தப்பட்டது. ஆனால் அவரால் பிரெஞ்சு மொழியில் உரையாட முடியாது. அதுவரை போர்ச்சுகீஸ் மொழியிலேயே பிரெஞ்சு வணிகர் களிடமும், ஏனைய அய்ரோப்பியர்களிடமும் உரையாடி வந்தார். ஆனால் இப்போது போர்ச்சுகீஸ் மொழியில் உரையாடும் உரிமை அவருக்கு மறுக்கப்பட்டது. இதனால் மொழிபெயர்ப்பாளர் வாயிலாகவே தம் கருத்துக்களைத் தெரிவிக்கும் நிலைக்கு ஆளாக்கப் பட்டார்.

மொழி பெயர்ப்பாளராக நியமிக்கப்பட்ட மனுவேல் ஜகன், இவரைத் தம் எதிரியாகப் பாவித்த, புதுச்சேரிவாழ் சேசு சபையினருடன் நெருக்கமானவர். இவர் மீதான வழக்கை விசாரித்த எபேர் போர்ச்சுகீஸ் மொழி அறிந்தவர் என்பதுடன் அம்மொழியில் உரையாடும் ஆற்றலும் படைத்தவர் என்றாலும் இவரால் உரையாட இயலாத பிரெஞ்சு மொழி வாயிலாகவே வழக்கு விசாரிக்கப்பட்டது.

அரசைத் தன் கட்டுப்பாட்டிற்குள் வைத்துக் கொண்டு நேர்மையற்ற முறையில் அதிகாரத்தைப் பயன்படுத்தியமை, அரசுக்கு எதிராகச் செயல்பட்டமை என இரு கடுமையான குற்றச்சாட்டுகள் அவர் மீது சுமத்தப்பட்டிருந்தன.

இக்குற்றச்சாட்டுகளை ஆராய்ந்த எபேர் 6 ஜுன் 1716இல் அவர் குற்றவாளி எனத் தீர்ப்பளித்தார். தன் அதிகாரத்தை அவர் தவறாகப் பயன்படுத்தியதாகவும், 1715ஆவது ஆண்டில் நிகழ்ந்த பணியாளர் எழுச்சியைத் தூண்டியமை என்ற இரு குற்றங்களுக்காகப் பின்வரும் தண்டனைகள் அவருக்கு வழங்கப்பட்டன.

· கடைத்தெருவில் பொதுமக்கள் முன்னிலையில் 50 சவுக்கடி

· வாணிபம் மேற்கொண்டு அவர் திரட்டிய நிலபுலன்கள், வீடுகள், அணிகலன்கள், யானைகள், பணம் பிறபொருட்கள் அனைத்தும் பறிமுதல் செய்யப்படல்.

· மூன்றாண்டு காலம் சிறைத்தண்டனை அனுபவிக்க வேண்டும்.

· அவரது மகன்களும் புதுச்சேரியில் இருந்து நிரந்தரமாக வெளியேறிவிட வேண்டும்.

இத்தீர்ப்பின்படி அவரது சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டதுடன் அய்ம்பது சவுக்கடிகளையும் பெற்றார். சிறையில் அடைக்கப்பட்ட அவர் சவுக்கடியினால் பெற்ற வலியினால் துயருற்றார். அதே ஆண்டில் ஆகஸ்ட் திங்கள் ஆறாம் நாளன்று இரத்தப்போக்கினால் தம் அறுபதாவது வயதில் காலமானார்.

நைனியப்ப பிள்ளையின் இறப்புக்கு முதல் நாளன்று படைவீரர்கள் சிலர் அவரது சிறையறைக்கு வந்தனர். அவர்களுள் ஒருவன் வாளின் பிடியால் அவரைத் தாக்கினான் என்பது அவரது மகன்களின் குற்றச் சாட்டாகும். அவரது மரணம் அய்யத்திற்கு இடமானதென்று பிரெஞ்சு ஆவணம் ஒன்றும் குறிப்பிடுகிறது.

அவரது மரணம் நிகழ்ந்து மூன்று நாட்கள் கழித்து, பிரெஞ்சு ஆளுகையில் இருந்த கிராமம் ஒன்றிற்கு அவரது மகன்கள் இடம் பெயர்ந்து சென்றனர். அங்கு அவர்களைக் கொலை செய்யும் முயற்சிகள் நடந்தன. அயலாளாக அக்கிராமத்திற்கு வந்த ஒருவனைப் பிடித்து விசாரித்தபோது தலைமைத் தரகராகப் புதிதாக நியமிக்கப்பட்ட பெத்ரோ என்பவனால் அனுப்பப் பட்டவன் என்றும் அவ்வேலைக்காக அவனுக்கும் அவனுடன் வந்தவர்களுக்கும், பணம், அணிகலன்கள் ஆகியனவற்றுடன் பிரெஞ்சு நிறுவனத்தில் ஆயுட்காலம் முழுமைக்கும் வேலை வழங்குவதாகவும் அவர் வாக்களித்ததாகக் கூறினான்.

இத்தகைய அச்சுறுத்தல்களுக்கிடையில் முன்னாள் ஆளுநர் எபேருடன் உடன்பாடில்லாத பிரெஞ்சுக் காரர்கள் சிலரின் அனுதாபமும் உதவியும் நைனியப்ப பிள்ளையின் மகன்களுக்குக் கிட்டியது. பாரிஸ் அந்நியவேதபோதக சபை என்ற பெயரிலான கத்தோலிக்க சமய அமைப்பைச் சார்ந்த மறைப் பணியாளர்கள் சிலரும் இவர்கள்பால் அனுதாபம் காட்டியதுடன் உதவவும் முன்வந்தனர்.

மேல்முறையீடு

இவர்களது உதவியின் அடிப்படையில் 1720இல் சென்னையில் இருந்து இலண்டன் சென்று அங்கிருந்து பாரிசுக்கு, நைனியப்ப பிள்ளையின் மூத்தமகன் குருவப்பா சென்றடைந்தார். பாரிஸ் அன்னிய வேதபோதகச் சபையின் பிரதிநிதியாக புதுச்சேரியில் இருந்த மறைப்பணியாளர், இரண்டு முக்கிய உதவிகளை குருவப்பாவுக்குச் செய்யும்படி பாரிசில் இருந்த தம் சக மறைப்பணியாளர்களுக்குக் கடிதம் எழுதினார். முதலாவது உதவியாக அவர்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட சொத்துக்களைத் திரும்பப் பெற உதவவேண்டும். இரண்டாவதாக அவர் ஒரு நல்ல கிறித்தவராக மதம் மாற முயற்சி மேற்கொள்ள வேண்டும்.

இவ்விரு உதவிகளும் குருவப்பாவிற்குக் கிட்டின. 1720 அக்டோபர் ஞாயிற்றுக்கிழமை எட்டாம் நாளன்று அந்நிய வேதபோதக சபையினரால், தேவாலயத்தில் அவருக்குத் திருமுழுக்கு வழங்கப்பட்டது. சவாலியர் என்ற உயரிய பட்டம் அவருக்கு வழங்கப்பட்டது. சார்லஸ் பிலிப் லூயி குருவப்பா என்பது அவரது கிறித்தவப் பெயராக அமைந்தது.

குருவப்பா பெற்ற உயரிய பட்டம், அவரது தந்தையின் இழந்த நற்பெயரை மீட்டெடுக்க உதவியது. தவறான செயல் மேற்கொண்டவர் என்ற குற்றச் சாட்டில் இருந்து அதிகாரப்பூர்வமாக நைனியப்ப பிள்ளையின் பெயர் நீக்கப்பட்டது. அவருக்கும் அவர் மகன்களுக்கும் எதிராக எபேர் வழங்கிய தீர்ப்பைத் தள்ளுபடி செய்த ஆணையில் 1720 செப்டம்பரில் பிரான்சின் மன்னன் கையெழுத்திட்டான். பறிமுதல் செய்த பொருட்களைத் திருப்பிக் கொடுக்கவும் ஆணை பிறப்பிக்கப்பட்டது. அவர்களுக்கு ஏற்பட்ட இழப்புகளுக்கு ஈடு செய்யும்படி எபேருக்கு ஆணை யிடப்பட்டது. அவ்வாறு ஈடு செய்வதை வங்கித்தாள்களாக அன்றி தங்கம் அல்லது வெள்ளியால் செலுத்த வேண்டும் என்ற குருவப்பாவின் வேண்டுகோளும் ஏற்றுக்கொள்ளப்பட்டது. பின்னர் புதுச்சேரி திரும்பிய குருவப்பா தந்தை வகித்து வந்த தலைமைத் தரகர் பதவியைப் பெற்றார். தந்தையைப் போன்றே ஏழைகளுக்கு உதவிபுரிந்து வந்தார்.

தனிமனிதர் ஒருவரின் வாழ்க்கையை மையமாகக் கொண்டு எழுதப்பட்ட இந்நூல் காலனிய நீதி நிர்வாகத்தின் இருண்ட பக்கத்தை வெளிப்படுத்தி நிற்கிறது. குற்றம் சாட்டப்பட்டவர் அறிந்திருந்த போர்ச்சுகீஸ் மொழியை நன்கு அறிந்திருந்தும், அவர் அறியாத பிரெஞ்சுமொழியில் வழக்கை நடத்தியது, அவர் படித்தறிய முடியாத பிரெஞ்சு மொழியில் ஆவணங்களைத் தயாரித்து குற்றம் சாட்டப்பட்ட வரிடமும், சாட்சிகளிடமும் கையெழுத்து வாங்கியது, சாட்சிகளை மிரட்டியது, தகுதியற்றவரை உள்நோக்கத் துடன் நீதிபதியாகவும், மொழிபெயர்ப்பாளராகவும் நியமித்தது என நைனியப்பபிள்ளையின் வழக்கில் பின்பற்றப்பட்ட திட்டமிட்ட எதிர்மறைச் செயல்களை நூலாசிரியர் வெளிப்படுத்தியுள்ளார்.

அத்துடன் காலனியவாதிகளிடம் நிலவிய கையூட்டு வேட்கை, பழிவாங்கும் உணர்வு, கிறித்தவத் தகவுகளை ஒதுக்கிவைத்துவிட்ட கிறித்தவ மறைப்பணியாளர்களின் செயல்பாடு என்பனவும் இந்நூலில் விரிவாக இடம் பெற்றுள்ளன.

நன்றியுரை

இந்நூலில் இடம்பெற்றுள்ள பிரெஞ்சுச் சொற்களின் சரியான உச்சரிப்பைக் கூறி உதவிய இந்திய அய்ரோப்பிய ஆராய்ச்சி நிறுவனத்தின் துணை இயக்குனர் முனைவர் சாந்தலிங்கம் அவர்களுக்கும், நைனியப்ப பிள்ளை தெரு, பெயர்ப்பலகை இரண்டின் புகைப்படங்களை அனுப்பி உதவிய புதுச்சேரி பிரெஞ்சு ஆய்வு நிறுவனத்தின் ஆய்வாளர் திரு. கண்ணன் அவர்களுக்கும் என் நன்றி உரியது.

Commerce, Conversion and Scandal in French India, (Danna Agmon (2017)

A Colonial Affair. Speaking Tiger publishing PVT. LTD. New Delhi 110 002)

Pin It