“தன்னுடைய உழைப்பில் இருந்தும், தன்னுடைய வாழ்வுச் செயலில் இருந்தும் மற்றும் தனது இன - வாழ்விலிருந்தும் மனிதன் அந்நியமாதலின் நேரடி விளைவாக மனிதன் பிற மனிதர்களிடமிருந்து அந்நியப் படுகிறான். மனிதன் தன்னோடு முரண்படும் போது, அவன் பிற மனிதர்களுடனும் முரண்படுகிறான். அவனுடைய உழைப் போடும் அவனுடைய உழைப்பின் விளை பொருளோடும், அவனோடும் அவனுக்கு என்ன உறவு உள்ளதோ அந்த உறவுதான் பிற மனிதர்களோடு அவர்களுடைய உழைப்போடும் அவர்களுடைய உழைப்பின் விளைபொருள்களோடும் இருக்கும். பொது வாக, மனிதன் தனது இன-வாழ்விலிருந்து அந்நியப்பட்டு உள்ளான்; அதுபோலவே மற்ற ஒவ்வொருவரும் மனித வாழ்விலிருந்து அந்நியப்பட்டு உள்ளனர்.”

lady farmerகார்ல் மார்க்ஸ், தனது “பொருளாதார மற்றும் தத்துவக் கையெழுத்துப்படிகள்” எனும் ஆவணத்தில் மனித உற்பத்தி உறவுகள் பற்றிப் பேசும்போது மேலே கண்டவாறு பதிவு செய் துள்ளார். சாதாரண மனிதர்கள், தங்களுடைய வாழ்நிலை சார்ந்து எவ்வாறெல்லாம் அந்நியப் பட்டு வாழ்கிறார்கள்; சமூக விழுமியங்கள் மூலம் உருவாகிய அற மரபுகள் எவ்விதம் சீரழிந்து செயல் படுகின்றன; என்பது குறித்த அக்கறையோடு ‘வண்டல்’ நிலத்தில் வாழும் மனிதர்களை சோலை.சுந்தரபெருமாள் தனது புனைவுகளில் ஆவணப்படுத்தி வருகிறார். இந்தப் பின்புலத்தில், இந்தத் தொகுப்பில் உள்ள புனைவுகளான பத்து சிறுகதைகளில் பேசப்படும் மனிதம் தொடர்பான செய்திகளை இங்கு தொகுத்துக் கொள்ள முற்படு வோம். மனிதஉறவுகள் எவ்வாறெல்லாம் செயல் படுகின்றன, என்பது குறித்த உரையாடல்தான் ‘மனிதம்’ குறித்த உரையாடல் ஆகும். மார்க்சிய இயங்கியலில் உள்ள பல்வேறு தத்துவார்த்த நிகழ்வுகள் மீது ஈடுபாடும், நம்பிக்கையும் கொண்ட படைப்பாளியான சோலை; அந்த மரபை தன்னைச் சுற்றியுள்ள மக்கள் வாழ்நிலை குறித்த உரையாடல் களை மேற்கொள்வதன் மூலம் தனது இருப்பை அடையாளப்படுத்துகிறார். இத்தொகுப்பில் உள்ள கதைகளின் மூலமாக சோலை முன்னிறுத்தும் பல்வேறு மனித உறவுகளை பின்வரும் வகையில் புரிந்துகொள்ள இயலும்.

கீழத் தஞ்சை என்று அழைக்கப்பெறும் ‘வண்டல்’ நிலப் பகுதியில் வாழும் சிறு விவசாயிகள், கூலி விவசாயிகள், அந்நிலப் பகுதியில் புதிதாக ஏற்பட்டுவரும் மாற்றங் களை எவ்வகையில் எதிர்கொள்கிறார்கள்? குறிப்பாக அவர்களுடைய மனித உறவுகளில் ஏற்படும் விரிசல்கள் எவ்வாறெல்லாம் செயல் படுகின்றன? என்பது குறித்தப் பதிவுகளை இப்புனைவுகள் வெளிப்படுத்து முறைகள்.

- நிலத்தோடு மட்டும் வாழ்ந்தவர்கள், அந்த - நில உறவை விட்டுவிட்டு வெவ்வேறு வகை யான வாழ்தல் நிலைக்குத் தள்ளப்படுவது குறித்தப் பதிவுகளை இப்புனைவுகள் கொண் டிருக்கும் தன்மை.

- சமூக விழுமியங்கள் என்று கருதப் பட்டவை இன்றைய சூழலில், மதிப்பிழந்து, அவை வெறும் பண்டங்களாக மதிப்பிடப் படும் தன்மைகள்.

- கீழத்தஞ்சை வண்டல் நிலத்தில் வாழும் நடுத்தர விவசாயக் குடும்பம் என்பது எவ் வகையில் வாழ்கிறது என்ற சித்திரப்பதிவு.

- பெண் உணர்வுகள், திருமணம் நடைபெற இயலாத பெண்கள், பெண் குழந்தைகள் சமூகத்தில் நடத்தப்படும் முறைகள் சார்ந்து, பல்வேறு பெண் - நிலைப்பட்டப் பதிவுகள்.

- சாதாரண மனிதர்களிடம் அவைதீக மரபுகள் எவ்வகையில் உள்வாங்கப்படுகிறது? அதன் மூலம் ஆதிக்க சாதி மரபுகள் நடைமுறைக்கு கொண்டுவரப்படும் அவலம்.

- நவீன மாற்றங்களால் குடும்பம் உடைபடும் முறைகள்; அவை மரபார்ந்த நம்பிக்கை மூலம் மீண்டும் கட்டப்படும் பாங்குகள்.

- விளை நிலங்கள், எவ்வாறு தொழிற்சாலை சார்ந்த உற்பத்தி நிலங்களாக மாற்றம் பெறு கின்றன! அதனை விவசாயிகள் எவ்வாறு எதிர்கொள்கிறார்கள்? என்பது குறித்த உரையாடல்கள்.

மேலே குறித்த பல்வேறு சமூகச் செயல்பாடு களை சோலை, புனைவுகளாகக் கட்டமைத் துள்ளார். ‘வண்டல்’ எனும் கதையில் கூலி விவசாயி எவ்வாறு சிறுவிவசாயி என்னும் நிலைக்கு மாற முடிகிறது. கூலி விவசாயி என்று வாழ்ந்த போது அவன்பட்ட வலிகள், எவ்விதம் சிறு விவசாயியாக மாறும்போது வேறு பரிமாணத்தில் உருப்பெறுகிறது என்பதைப் பதிவு செய்துள்ளார். சிறு விவசாயியின் அடுத்த தலைமுறை; நிலத்தில் உழைக்கும் மனநிலையில் எவ்வாறு விடுபட்டுப் போகின்றனர்; அதன் விளைவாக மதுப் பழக்கம் போன்றவற்றிற்கு அடிமையாகி, சமுக வாழ் நிலையிலிருந்தே அந்நியப்பட்டுப் போவதைப் பதிவு செய்துள்ளார். சமூக மாற்றம் என்பது வாழ்நிலையில் எவ்விதம் சீரழிவாக வடிவம் பெறுகிறது என்பதைப் பேசுகிறார். புதிதாக உருப்பெற்ற நுகர்வுப் பண்பாடு, இளம் தலைமுறையினரை உழைப்பில் இருந்து அந்நியப்படுத்தும் அவலத்தைப் புரிந்து கொள்ள முடிகிறது. இதைப் போலவே ‘பொன்கூடு’ எனும் கதை நிலத்தில் உழைக்க இயலாத சூழல் உருவாவ தால், வளைகுடா நாடுகளுக்கு கூலித் தொழி லாளிகளாக இடம் பெயர்ந்து வாழும் வாழ் முறை குறித்துப் பேசுகிறது. கீழத் தஞ்சைப் பகுதியிலிருந்து மலேசியா, சிங்கப்பூர் போன்ற தென்கிழக்குஆசிய நாடுகள், வளைகுடா நாடுகள் ஆகியவற்றிற்கு வேலைக்குச் செல்லும் இளைஞர்களின் எண்ணிக்கை மிகுதி. வளமான பூமி என்று கருதப்பட்ட வண்டல்நிலம் சார்ந்த உழைப்பு ஏன் சாத்தியப்படாமல் போனது? இதற்கான பண்பாட்டு விழுமியங்கள் எவ்வாறு உள்ளன? ஆகிய பிறவற்றை சோலை - தனது புனை களின் அடிப்படைப் பண்பாகக் கொண்டிருப் பதைக் காண்கிறோம்.

‘தூண்’ எனும் கதை, ஆசிரியப் பணி என்பதன் ‘விழுமியம்’ தொடர்பான உரையாடலாக அமை கிறது. வண்டல் நிலப்பகுதியில் பல ஏக்கர்களுக்குச் சொந்தமான ஒரு மனிதர், ஆசிரியராகவும் பணி யாற்றுகிறார். அந்தத் தொழில் அவருக்கு சமூக மதிப்பீடு மட்டுமே. அதில் அவருக்கு அர்ப்பணிப்பு இல்லை; ஆனால் அர்ப்பணிப்பு மனநிலையோடு செயல்பட்ட ஓய்வுபெற்ற ஆசிரியர் ஒருவரின் பார்வையிலிருந்து இப்புனைவு உருப்பெற்றுள்ளது. நிலம் சார்ந்த உறவும் ஆசிரியப்பணி உறவும் எவ் வகையில் முரணாக அமைகிறது என்பது குறித்த சுவையான பதிவை இக்கதை மூலம் பெறுகிறோம்.

‘வைக்கப்போரும் கடாவடிக்கு வாக்கப்பட்ட வரும்’, ‘ஓராண்காணி’ ‘காத்திருக்கிறாள்’, ‘சர்க் கரை’ ஆகிய கதைகள் பெண் எனும் உயிரி சமூகத்தில் எதிர்கொள்ளும் பல்வேறு பண்பாட்டுக் கூறு களை குறிப்பாக வண்டல் நிலத்தில் வாழும் வாழ் முறைப் பின்னணியில் சோலை பதிவுசெய்துள்ளார். திருமணம் முடித்து குழந்தைகள் பிறந்த பிறகும் கூட பெண்ணைத் தனியாக விட்டுவிட்டு வேறு பெண்களோடு வாழும் ஆண்கள்; அந்தச் சூழலில் அந்தப் பெண் எவ்வாறு தன் இருப்பை உறுதிப் படுத்துகிறாள் என்பது குறித்த உரையாடல்; ஆண்- பெண் உறவில் பெண்ணின் சிறுசிறு விருப்பங்கள் கூட கவனத்தில் எடுத்துக்கொள்ளப் படாமல், ‘ஆண்’ எல்லாச் சூழலிலும் ஆணாதிக்க மனநிலையை, இயல்பான பண்பாட்டு நிகழ்வாக வரித்துக்கொள்ளும் தன்மைகள்; நடுத்தர, சிறு விவசாயக் குடும்பத்து பெண்கள், விளைச்சல் மூலம் கிடைக்கும் வருவாய் சார்ந்தே திருமணங்கள் நடைபெறுவதற்கான சூழல், விளைச்சல் இல்லாமல் போனால் பெண் அவலத்திற்கு ஆளாகும் கொடுமை ஆகிய பெண் நிலைப்பட்ட பதிவுகளை சோலை, தன் ஆக்கங்களில் செய்துள்ளார். பத்து கதை களில் மேலே விவரணப்படுத்தியுள்ள பெண் நிலைப்பட்ட உரையாடல்களே மிகுதியாக இடம் பெற்றுள்ளன என்பதை அறியமுடிகிறது. படைப் பாளியின் ‘பெண்’ குறித்தப் பார்வையின் பரிமாணங்கள் மற்றும் அக்கறைகளை இதன் மூலம் அறிய முடிகிறது. வண்டல் விவசாயக் குடும்பம் சார்ந்த பெண்களின் வாழ்முறை குறித்த நுண்ணிய புனைவுகளை, தமது ஆக்கங்களில் சோலை செய்திருப்பதைக் காண்கிறோம்.

கிராமத்தில் ‘அங்காளம்மை’ எனும் குல தெய்வம், அங்காள பரமேசுவரி எனும் புராண நிலைப்பட்ட, ஆதிக்க சாதி சார்ந்த, வைதீகக் கடவுளாகக் கட்டமைக்கப்படும் பண்பாட்டுப் புரட்டல் குறித்த கதையாக ‘குறி’ அமைந்துள்ளது. நிலவுறவு மாற்றங்கள், எவ்வகையில் பண்பாட்டு உறவு மாற்றங்களை ஏற்படுத்துகின்றன? அவை எவ்வகையில் ஆதிக்க சக்திகளாகவும் வடிவம் பெறுகின்றன என்ற சமூக நிகழ்வை சோலை, இக்கதை மூலம் வெளிப்படுத்துகிறார். நிலவுறவு மாற்றம் எவ்வகையான வேறுபல உறவு மாற்றங் களுக்கு இட்டுச் செல்கிறது என்பது குறித்த உரை யாடல் முக்கியமான ஒன்று. இதனை சோலையின் ஆக்கங்கள் பல பரிமாணங்களில் வெளிப்படுத்து வதைக் காண்கிறோம். நிலத்தோடு வாழ்ந்த விவசாயி, தன் நிலம் தொழிற்சாலையாக வடிவம் பெறும்போது நிலம் சார்ந்த பண்பாட்டு விழுமி யங்கள் எவ்வகையில் நொறுங்கிப் போகின்றன? என்ற உரையாடலை ‘அக்காக்குருவி’ கதை நமக்குச் சொல்கிறது. இவ்வகையில் - வண்டல் நிலத்தின் பல்வேறு பரிமாணங்கள் நவீன உற்பத்தி உறவு மாற்றங்களால் எவ்விதம் மாற்றங்களை உள்வாங்குகின்றன என்ற உரையாடல்தான் சோலையின் கதைகள் ஊடும் பாவுமாக தொடர் வதைப் பார்க்க முடிகிறது.

அந்நியப்பட்ட மனித உறவுகள், பாரம்பரிய மான நிலஉறவுகளில் உருப்பெறுவதை புனை வாக்கும் முறைமைகளின் செய்நேர்த்தி குறித்தும் பேசவேண்டும். சோலையின் கதைமொழிகளே, கதைப்பொருளாக அமைகின்றன. வாசகனின் தேடுதலில் வாழ்க்கை அவலங்கள் குறித்தப் பதிவுகள் தென்படும்போது, அவை அப்புனைவு களில் பயன்படுத்தப்படும் அல்லது விவரண மாக்கப்படும் சொற்கள் மற்றும் சூழல்கள் சார்ந்து வெளிப்படுகின்றன. வண்டல் மண்ணுக்குரிய சொற்களே மிகவும் லாவகமான கதைமொழியாக அமைகிறது.

புனைவின் சக்தி என்பது, புனைவு பேசப்படும் மொழியில்தான் முதன்மையாக நிற்கிறது. பேசப் படும் நிலம், சூழல், பண்பாட்டு விழுமியங்கள், வட்டாரமொழி ஆகிய பல கூறுகள்தாம் புனைவின் காத்திரத்தைக் காட்டும். இவ்வகையில் சோலை பயன்படுத்தும் ‘வண்டல்மொழி’ வேறு எந்தப் படைப்பாளிக்கும் கிடைக்காத அரிய வளமாக இருக்கிறது. வாசகன் வண்டல் மொழிக்குள் பயணம் செய்யும்போது, வண்டல் வாழ்க்கையின் தரிசனம் கிடைக்கிறது; வண்டல் மண்ணின் மணம் மேலெழும்புகிறது. வண்டல் சேறாக மாறும் போது அதற்குள் காலைவிட்டு மாட்டிக் கொண்ட வாசகன், அந்த சேற்றுள் புதையும் மனநிலை பெறுகிறான். இதுவே சோலையின் கொடையாக இருக்கிறது. பாத்திரம் வேறு - சூழல் வேறு - பாடுபொருள் வேறு என்று பாகு படுத்த இயலாத ஒருமை இந்த வண்டல் கதை களுக்குள் பொதிந்திருப்பதைக் காணமுடிகிறது.

சோலையின் நாவல்கள் காட்சிப்படுத்தும் அகன்ற - நிலம், இங்கு கதைகளில் அதே வீரியத் தோடு காட்சிப்படுத்தப்படுவதைக் காண்கிறோம். காவிரி டெல்டா எனப்படும் வண்டல் வாழ்க் கையின் சங்கீதம், நாட்டியம் ஆகிய முருகியல் பதிவுகளை ரசித்த மனிதர்கள், சோலையின் வண்டல் பூமியின் வேறு ஒரு மணத்தை நுகர முடிகிறது. வண்டலின் மேட்டிமைப்படுத்தப் பட்ட, ஆதிக்க சாதி சார்ந்த பதிவுகளைப் பெற்றுள்ள தமிழ்ப் புனைவுலகம், வண்டலின் சாதாரண மனிதர்களை சோலையின் ஆக்கங்கள் வழி கண்டடைய முடிகிறது. உற்பத்தி உறவுகளே மனித வாழ்க்கையைத் தீர்மானிக்கிறது. வண்டல் உற்பத்தி உறவுகளின் பல பரிமாணங்களைக் காட்டும் சோலையின் ஆக்கங்கள், உண்மையான, எதார்த்தமான வண்டல் மனிதர்களை நமக்கு அடையாளப்படுத்துகிறது. இதனையே சோலை தன் அடையாளமாகவும் இருப்பாகவும் கொண்டு செயல்படுவது மெத்த மகிழ்வாக மனதுள் நிறைகிறது.

“சமூக வரலாற்றில் வாழ்வின் அர்த்தத் திற்கான மனிதனின் தேடல் அடிப்படைப் பொருளாதாரத் தேவைகளுக்கும் அப்பால் செல்வதைப் பார்க்கிறோம். அவன் வாழ்வின் அனைத்துப் பிற அம்சங்களிலும் முழு நிறைவைத் தேடுகிறான்; அவற்றை அறவியல் விழுமியங்கள் மூலமே அடைய முடியும்; அவை மட்டுமே மனித குலத்தை விடுதலையின் புதிய தென்றலில் மலரச் செய்யும். அத்தகைய நேர்மறையான விழுமியங்கள் மக்களிடம் வளர்வதை ஆளுகின்ற வர்க்கம் எப்பொழுது தடுத்து வருகின்றன; எனவே கருத்துக்களுக்கும் விழுமியங்களுக்குமான போராட்டம் வரலாறு முழுவதும் தொடர்கிறது” - கோபட் காந்தி.

(வெளியாக உள்ள சோலை சுந்தரபெருமாளின் ‘முத்துகள் பத்து’ என்னும் சிறுகதை தொகுப்புக் கான வீ. அரசுவின் முன்னுரை.)

Pin It