கன்னட நவீன இலக்கியத்தின் பேராளுமை களில் ஒருவராகத் திகழ்ந்தவர். பி. லங்கேஷ். நவ்யா என்ற நவீனத்துவப் படைப்புலகத்தைக் கன்னடத்தில் தோற்றுவித்தவர்கள் தேஜஸ்வி, யு.ஆர். அனந்தமூர்த்தி, லங்கேஷ் என்ற முப் பெரும் படைப்பாளிகள்.

ka nallathambiபி.லங்கேஷ் (1935 - 2000) ஷிமோகா மாவட்டத்தில் கொனகவள்ளி கிராமத்தில் பிறந் தவர். பெங்களூரிலும், மைசூரிலும் ஆங்கில இலக் கியம் பயின்றவர். 1959 முதல் 1978 வரை கல்லூரி, பல்கலைக்கழகங்களில் பேராசிரியராகப் பணி புரிந்தவர்.

சிறுகதைகளில் தொடங்கிய இவரது படைப்புப் பணி நாவல்களாக விரிந்து, நாடகங்களாகப் பரந்து, கவிதைகளாகப் பளிச்சிட்டு திரைப்பட உலகிலும் பரிமளித்தது. ஒவ்வொரு களத்திலும் தனி முத்திரை பதித்த லங்கேஷின் படைப்புகளில் இறையடியான் மொழிபெயர்த்த சில கதைகள் அடங்கிய ஒரு தொகுப்பும், சாகித்ய அகாதெமி விருது பெற்ற கல் கரையும் நேரம் ஆகிய இரண்டு நூல்கள் மட்டுமே இதுவரை தமிழில் லங்கேஷின் படைப்புகளாகக் கிடைக்கின்றன.

கன்னட இலக்கியத்தில் enfant terrible ஆக விளங்கிய லங்கேஷின் கவிதைகளும் பிற படைப்பு களும் தமிழில் மொழிபெயர்க்கப்படாமல் போனது மிகப்பெரிய இழப்பென்றே சொல்ல வேண்டும். இந்தச் சூழலில் லங்கேஷின் ரத்தினச் சுருக்கமான சில கவிதைகளை ‘மொட்டு விரியும் சத்தம், என்ற நுட்பமான தலைப்பில் மொழி பெயர்த்துத் தந்திருக்கிறார் பெங்களூரைச் சேர்ந்த இலக்கியச் சுவைஞரும், அரிய புகைப்படக் கலைஞருமான கா. நல்லதம்பி.

அட்சர ஹொச காவ்யா (1970), தலெமாறு (1973), சித்ர சமூக (1999) முதலிய கவிதைத் தொகுப்புகளைத் தந்துள்ள லங்கேஷ் ‘நீலு’ என்ற புனை பெயரில் எழுதிய கவிதைகள் ‘நீலு காவ்யா’ என மூன்று தொகுப்புகளாக (2007, 2009, 2010) அவர் காலத்துக்குப் பின் திரட்டப்பட்டு வெளி வந்துள்ளன. அவற்றிலிருந்து தனக்குப் பிடித்த சில கவிதைகளை கா. நல்லதம்பி மொழிபெயர்த்துத் தந்திருக்கிறார். இது அவருடைய கன்னி முயற்சி என்று சொல்லப்பட்ட போதிலும், மிக முதிர்ச்சி யுடன் செய்யப்பட்ட மொழிபெயர்ப்பு என்றே கூறுதல் தகும். நூலின் கவிதைகள் அழகு என்றால் மொழிபெயர்ப்பாளரின் கலைநயமான புகைப் படங்கள் அழகுக்கு அழகு சேர்க்கின்றன.

கேலியும் கிண்டலும் குத்தலும் ஏளனமுமாக லங்கேஷின் கவிதைகள் மனிதனை அம்புகளாய்த் துளைப்பது ஒரு பக்கமென்றால், ஆழ்ந்த உண்மை களின் தரிசனங்களாக வெளிப்படும் சத்தியங்கள் இன்னொரு பக்கம். மனித மனங்களில் ஒளிந்தி ருக்கும் வசீகரங்களை முன்வைப்பது போலவே வக்கிரங்களை வெளிச்சமிட்டுக் காட்டுவதும் லங்கேஷுக்குச் சாத்தியமாகி இருக்கிறது. அனுபவங் களின் கொட்டாரம் திறந்து புறாக்களைப் போலவும் வண்ணத்துப் பூச்சிகள் போலவும் கவிதைகள் சிறகடிப்பது இன்னொரு பரிமாணம்.

வாழ்வின் எல்லா நிலைகளிலும் மறைந்து கிடக்கும் சத்தியங்களை ஒளிவுமறைவின்றிப் பேசுகிறார் லங்கேஷ். அவற்றைச் சொல்வதில் கவிஞருக்குக் கூச்சம் ஏதுமில்லை.

“பத்தினியான என் கனவுகளை

வர்ணித்தால்

நீங்கள் மிரண்டு

இறந்து விடுவீர்களோ என்பதால்

வர்ணிப்பதில்லை.”

என்ற கவிதை அப்படிப்பட்டது. மனதுக்குள் புகுந்து பார்த்தால் வேடங்கள் வெறும் புனைவு எனப் புலப்பட்டு விடுகிறது.

அரசன் ஒருவனுக்குக் குழந்தை இல்லை. யாரோ சொன்னதால் யாகம் செய்கிறான். குழந் தைகள் பிறக்கின்றன. யாகத்தின் பின் ஓர் உண்மை ஒளிந்திருக்கிறது.

“ஒரு காலத்தில் அரசன் ஒருவன்

குழந்தைப் பிறப்புக்காக

யாகம் செய்ய அரண்மனைக்கு

விருந்தாளிகளை அழைத்த போது

குழந்தைகள் பிறந்தன

இயற்கையாகவே...”

வாசகனிடம் ஒரு மர்மமான புன்னகையை வர வழைப்பதில் கவிதை வெற்றி பெற்று விடுகிறது.

இன்னொரு கவிதை இந்தச் சமுதாயத்தின் புனிதப் பீடங்களை அம்பலப்படுத்துகிறது.

“பாவ மன்னிப்பின் போது

விபசாரி ஒருத்தி பாதிரியிடம்

வர்ணித்த தவறுகளைக் கேட்டவர்

இதுவரையில் தான் செய்ய முடியாத

தவறுகளுக்காக வருந்தினார்.”

‘புறந்தோல் போர்த்து எங்கும் புழு அழுக்கு மூடி’ யுள்ள புனிதங்கள் மீது கட்டாரிகளை வீசுகிறது லங்கேஷின் கவிதை.

இது ஏதோ புனிதர்களை மட்டும் கட்ட விழ்த்துப் பார்க்கும் நோக்கம் அல்ல. மனிதனின் அடி மனதில் குவிந்து கிடக்கும் குப்பை கூளங் களை அம்பலப்படுத்தும் பார்வையும் கொண்டது. இதை மற்றொரு கவிதையில் லங்கேஷ் சொல் கிறார்:

“எல்லா மனங்களிலும் இருக்கும்

இரகசிய ஆசை

ஏழைப் பையனுடன்

ஓடிப்போன

பணக்கார அழகியின் கதை”

லங்கேஷ் தன் சிறுகதைகளிலும், நாவல் களிலும், திரைக்கதைகளிலும் செய்திருக்கிற அதே உளவியல் பரிசோதனையைக் கவிதைகளிலும் செய்து பார்த்திருக்கிறார்.

லோகியா சோஷலிஸ்டாகப் பரிணமித்திருந்த லங்கேஷிடம் சமூக உணர்வு நிரம்பியிருந்தது. கலைஞனை விடவும் உழைப்பாளி தான் அவருக்கு உயர்ந்தவனாகத் தெரிந்தான். தொழிலாளியையும் கலைஞனாகப் பார்த்தவர் பாரதியார். ‘பாட்டும் செய்யுளும் கோப்பவனும், பரத நாட்டியக் கூத்திடு பவனும், இரும்பைக் காய்ச்சி உருக்குபவனும், கரும்பைச் சாறு பிழிகிறவனும்’ அவருக்குப் படைப்புக் கலைஞர்களாகவே இருந்தார்கள். ஆனால் லங்கேஷின் பார்வை மாறுபடுகிறது:

“மண்ணைக் குழைத்துச்

சிலை செய்பவனைவிட

மண்ணை உழுது

நெல் விளைவிப்பவன்

மிகப் பெரிய கலைஞன்.”

என்கிறார் லங்கேஷ்.

பெண்களின் இயற்கைத் துயரங்களில் மனம் கசிபவராகவே லங்கேஷ் விளங்குகிறார். ஆண்கள் வாழ்வின் பங்குதாரர்களாக இருக்க மறுக்கும் செருக்கின் மீது மிக நயமான தாக்குதல் நிகழ்த்து கிறார். பெண்களை மலடுகள் என்று பேசுகிற வழக்கை மாற்றிக் கவிஞர் சொல்கிறார்:

“எவ்வளவு மலடு

தலைப் பிள்ளை பெறும் கர்ப்பிணியின்

ஆதங்கத்தையும் ஆனந்தத்தையும்

ஊகிக்கக் கூட முடியாத

ஆண்கள்...”

தேவைக்கு மேலே சேர்ப்பவன் திருடன் என்பது ஒரு சிந்தனை. பறவைகளும் விலங்குகளும் பசித்த போதன்றி மற்ற நேரங்களில் இரை தேடுவதில்லை; சேமித்து வைப்பதும் இல்லை. ஆனால் மனிதன் தேவையை மீறியும் சேமிக்கிறான். எனவே பிறருண வையும் தனதாக்கிக் கொள்கிறான்.

“தன் குடும்பத்தின்

மூன்று வயிறுகளுக்காக

மூட்டை மூட்டையாய்

நெய் பயிர் செய்யும்

விவசாயியைப் பார்த்து ஆச்சரியமடைந்து

உட்கார்ந்திருந்தது ஒரு பறவை”

என்பது அவர் கவிதைகளில் ஒன்று. இயற்கை

மீது கொண்ட இந்தக் காதலால் இன்னொரு கவிதையில் சொல்கிறார்.

“பூவும் வண்டும்

பாடிய காதல் பாட்டுக்களின்

பிரதியிருந்தால் தயவு செய்து

அனுப்பிக்கொடுங்களேன்”

எல்லாச் சிறந்த கவிஞர்களையும் போலவே இயற் கையில் கரையவும், மனிதக் கீழ்மையைக் கண்டு சினக்கவும் லங்கேஷ் உணர்ச்சி மயமானவராக இருந்திருக்கிறார். சீனா திபெத்தைத் தன் வச மாக்கி ஆக்கிரமித்த கொடுமை கண்டு அவர் மனம் பதைக்கிறது. ஒரு சர்வாதிகாரம் தனித் தன்மை வாய்ந்த ஒரு பண்பாட்டை அழித்தொழித்த சோகம் எத்தனை எழுத்தாளர்களின் ஆத்மாவை அன்று அலைக்கழித்தது என்று சொல்லுவதற் கில்லை. லங்கேஷ் இது குறித்த கவலையைக் கவிதையாகப் பதிவு செய்திருக்கிறார்.

“பனிபடர்ந்த குட்டி திபெத்

சீனா வசமான அன்று

நிறையப் பறவைகள்

கடவுள் நாமம் பாட மறுத்தன.”

ஆழ்ந்த அனுபவங்களின் விளைவாகப் பெற்ற வித்தியாசமான பார்வைகளால் நிரம்பியிருக் கின்றன லங்கேஷின் கவிதைகள் என்பதை ஒரு பருந்துப் பார்வையாலேயே நம்மால் கண்டு கொள்ள முடிகிறது. மகாத்மாக்களையும், துறவி களையும் அவர் எடை போடுவது அந்த அனுபவத் தராசில் தான். மனித வாழ்க்கைக்கு அப்பால் என்ற சிந்தனை அவரிடம் விமர்சனத்துக்குள்ளாகிறது.

“சந்நியாசி

தன் ஆன்மீகச்

சொற்பொழிவுகளின் நடுவில்

பிஞ்சுக் குழந்தையின்

முகம் பார்த்து

ஒரு விநாடி மௌனமானார்”

என்ற கவிதை மிக லாகவமாக இச் செய்தியை நம்மிடம் கொண்டு சேர்க்கிறது. வாழ்க்கை அவலங் களையும், அவற்றை எதிர்த்து நடத்தும் போராட்டங் களையும் வசமாக்கிக் கொண்டது. இந்த எதிர் வினை இல்லாமல் போனால் அது வாழ்க்கையின் அர்த்தத்தை இழந்த சூனியமாகி விடும்.

“எதிர்த்துப் போராட வேண்டிய

அநியாயங்களே இல்லாத

செல்வச் செழிப்பான - சுகமான

நாட்டின் மனிதர்கள்

உற்சாகம் இழந்தவர்கள்தான்.”

என்பது அவர் கவிதைகளில் ஒன்று. இதனால் தான் வனவாசத்தில் கண்ட வாழ்க்கையின் சத்தியம் மெத்தைச் சுகங்களில் கிடைக்காது என்பதே இராமாயணம் உணர்த்தும் நீதி என்பார் லங்கேஷ்.

கவிதை குறித்துத் திட்டமான தெளிவான கோட்பாடுகள் கவிஞர் லங்கேஷிடம் இருந்தன. கவிதை வினை புரியும் ஆற்றல் கொண்டதாக இருக்க வேண்டும் என்று அவர் கருதினார். தன் கவிதை கண்ணாடி அல்ல; நிழற்படக் கருவியும் அல்ல; இதயத்தின் இரகசியங்களே என் கவிதைகள் என்று திட்டவட்டமாகத் தெரிவித்திருக்கிறார். அறைகூவல்களை நெஞ்சினுள்ளே அல்லது சமு தாயத்தின் உள்ளே அலையாக எழுப்பாத கவிதை வீண்வேலை என்றும் அவர் கருதினார்.

“எழுத்தாளனின் வரிகள்

காலம் மற்றும் தேசத்திற்குச்

சவாலாக இல்லையெனில்

அவன் எழுத்தாளன் அல்ல

வெறும் எழுத்தர்...”

என்பார் லங்கேஷ்.

ஆழ் நோக்கும், அனுபவச் சித்திரிப்பும், உள்ளுக்குள் நகைக்க வைக்கும் அங்கதமும் லங்கேஷின் கவிதைகளாக இதயத்தைத் தொடு கின்றன. ஏளனக் கூர்மை நிரம்பிய வரிகள் நம்மைச் சிரிக்கவும், சிந்திக்கவும் வைக்கின்றன.

“தென்னிந்தியாவில் அதிகமான

திருடர்களையும் பொய்யர்களையும்

பார்த்தவன்

திருப்பதி வேங்கடாசலபதி”

என்று அவர் பகடி செய்யும் போது அயோக்கியர் களின் புகலிடம் அரசியல் அல்ல, பக்தி என்று நம் மனம் ஆமோதிக்கவே செய்கிறது.

லங்கேஷின் அருமையான கவிதைகளை கன்னடத்தின் அழகு குலையாமல் மொழிபெயர்த்துத் தந்திருக்கிறார் கா. நல்லதம்பி. மொழிபெயர்ப்பு என்பது மூலத்தின் சாரத்தை இழக்காமல், ஈரத்தை இழக்காமல் பெயர்த்து நடும் நடவு என்றால் கா.நல்லதம்பி அந்த நடவில் வெற்றி பெற்று விட்டார் என்றே சொல்ல வேண்டும். அவருடைய மொழிபெயர்ப்புக் களம் மேலும் விரிவடைந்து கன்னட இலக்கியச் சிகரங்களை நமக்கு அறிமுகம் செய்ய வேண்டும் என்ற எண்ணத்தைத் தூண்டுகிறது இந்நூல்.

தமிழ் ஆளுமையும் கன்னடப் புலமையும் ஊடும் பாவுமாய் தம்முள் இணைத்து வைத் திருக்கும் மொழிபெயர்ப்பாளருக்குத் தேர்ந்த வாசகப் பரப்பு காத்திருக்கிறது என்பது உறுதி.

மொட்டு விரியும் சத்தம்

ஆசிரியர்: கா. நல்லதம்பி

(லங்கேஷின் தேர்ந்தெடுத்த கவிதைகள்),

விழிகள் பதிப்பகம்,

திருவான்மியூர்,

சென்னை 600 041.

விலை ரூ. 165/-

Pin It