இருபதாம் நூற்றாண்டுத் தமிழ் இலக்கியத் தளத்தில் எந்தப் புள்ளியிலிருந்து நம் பயணத்தைத் தொடங்கினாலும் சமுத்திரத்தை எதிர்கொள்ளாமல் அடுத்த இலக்கை எட்ட முடியாது. அந்த அளவிற்கு இருபதாம் நூற்றாண்டுப் புத்திலக்கிய முயற்சியில் முத்திரை பதித்தவர் இவர். 61 ஆண்டு மட்டுமே வாழ்ந்த மிகவும் பிற்பட்ட குடியைச் சேர்ந்த இந்த நெல்லைச் சீமைக்காரரின் பிள்ளைப் பருவமோ ஆதரவற்ற அகதி நிலையில் தொடங்கியது; தொடர்ந்தது. தத்தித் தடுமாறி அலைகாற்றில் அகப்பட்ட சருகு போல் சுற்றிச் சுழன்று எவ்வாறோ பொருளியல் பி.ஏ., பட்டம் பெற்றார்; பிறகு பல பணிகளுக்குத் தாவித் தாவிச் சென்று கடைசியாக மத்தியத் தகவல் தொடர்பு ஒலிபரப்புத் துறையில் பணிபுரிந்தார்; இதே காலத்தில் தமிழ் இலக்கியத்தில் புதிய சாதனை களையும் சாதித்திருக்கிறார். 24 சிறுகதைத் தொகுப்பு, 10 குறும் புதினத் தொகுப்பு, 15 நவீனம், லியோ டால்ஸ்டாய் நாடகம்; 3 கட்டுரைத் தொகுப்பு என்று இவரது சாதனைச் சமுத்திரம் பரந்து விரிந் திருக்கிறது. 1979 முதல் வாழ்நாள் இறுதி வரை இந்தப் பேனா ஓய்வின்றி உழைத்தது.

பேராசிரியர் இரா.காமராசு ஒருவரில் ஒன்று வாரானால், அவர் தனித்தன்மை படைத்தவர் என்று உறுதியாய்க் கூறலாம். பேராசிரியர் நாவானமா மலையின் ஆய்வுத் தடத்தை அங்குலம் அங்குலமாக அளந்தறிந்த இவர் படைப்பாளி சமுத்திரத்தின் அலைகளையும் துளிகளையும் எண்ணிக்கை பிடித் திருப்பது பொருத்தமான முயற்சியே.

அவர் பேனா செல்லும் வழியில் சமுத்திரத்தின் சாதனைச் சுவடுகளை உற்றுநோக்குவோம்.

சாகித்திய அகாதெமியின் ‘இந்திய இலக்கியச் சிற்பிகள்’ வரிசையில் ‘சு.சமுத்திரம்’ காமராசு கையில் மதிப்பீடாகிறார். 128 பக்க அளவிலான இந்நூல் படிக்கத் தொடங்கியவரின் நெஞ்சுப் பரப்பை ஆட் கொள்கிறது. ஆறு தலைப்புகளில் சமுத்திரத்தின் வாழ்க்கைச் சுருக்கம், சிறுகதைகள் பற்றிய நெட் டோட்டப் பார்வை, நவீனங்களின் உயிர்ப்பைச் சுவாசிக்கச் செய்தல், நாடக மேடையில் டால்ஸ் டாய், கட்டுரைகள், புயலுக்கும் பேராழிச் சுழலுக்கும் தடுமாறாத படைப்பாளியின் நிமிர்ச்சி எனச் சாதனைச் சரித்திரத்தைக் கட்டம் கட்டமாக வகுத்துக் காட்டுகிறார் காமராசு.

மனித சமுதாயத்தின் எதிரிகளையும் துரோகி களையும் பேனா என்ற பேராயுதத்தால் ‘சங்காரம்’ செய்த போராளி சமுத்திரம் என்பதை நூலாசிரியர் நிறுவும் பொழுது நாமும் ‘நிச்சயம்’ என்று நிமிர் கிறோம். இருபதாம் நூற்றாண்டு முதற் பாதி வரை மேல்சாதியாரால் தாழ்த்தப்பட்டவர்களைப் போல நடத்தப்பட்ட மிகவும் பின்தங்கிய குடும்பத்தில் பிறந்தவர் சமுத்திரம். அது இவர் வாழ்க்கை நெடுகிலும் இடறியது.

தொடக்கத்தில் இவர் பேனா முனைக்குப் பக்கங்களை ஒதுக்கியது செல்வாக்குமிக்க ஒரு வணிக இதழ்க் குழுமம். அதுவே ஒரு கட்டத்தில் இவரைக் காயப்படுத்துவதில் ஆனந்தப்பட்டது; பின் சமரசத்திற்குச் சாமரம் வீசியது. மற்றவரானால் நீண்ட கையை விடாமற் பற்றிக்கொள்ளுவார். அதை உதறி நிமிர்ந்த செம்மாப்பு சமுத்திரத்தின் தனித்தன்மை. ஒடுக்கப்பட்ட மக்களுக்குச் சம உரிமையும் சுயமரியாதையும் கிடைக்கப் போராடியது சமுத்திரத்தின் பேனா. அது மையோடு கொண் டிருந்த உறவினும் உரிமையோடு கொண்ட உறவே கொண்டாடத்தக்கது. திரையுலக அனுபவங்கூட இவரது தன்மானத்தை நாடி பார்க்க முனைந்த பொழுது அந்த உறவை உதறி எறிந்தவர் இவர்; தமிழக அரசு அளித்த பரிசுகளைப் பெற்ற இவர், “இப்பரிசுகள் மக்கள் வரிப்பணத்தின் மாற்று வடிவம். எனவே மக்களுக்கு விசுவாசமாக எழுதுவேன்” என்றுரைத்தபோது, முதுகு சொறியும் முனைப்பிற்குத் தாம் ஆளில்லை என்று நாடே கேட்க உரக்க மொழிந்தவர். சாகித்திய அகாதெமி விருது பெற்ற பொழுது, ‘இடஒதுக்கீடு’ என்று ஒரு மேட்டுக்குடி இதழ் பொருமியது. இவரோ, ‘முப்புரி நூல் வலு வானதா? பனைநார் வலுவானதா? பார்த்து விடு வோம்’ என்று போர் முழக்கம் புரிந்தவர். விருது பெற்ற சமுத்திரத்தைப் பாராட்டிப் பணமுடிப்பு அளிக்க ‘மகாசன மாநாடு’ வருந்தி வருந்தி அழைத்த பொழுது, ‘அந்த மாநாட்டிற்கு வரமாட்டேன்’ என்று தயங்காமல் மறுத்த இவர் சமரசமற்ற சாதி மறுப்பாளர்.

‘வரலாற்றுத் தடம் எழுத்துகளால் ஆனது தான், ஆனால் வெறும் எழுத்துகளால் ஆனது என்ற எல்லைக்குள் நுடங்காமல், வாழும் சமுதாயத்தின் வேட்கைக்கான போர்க்களத்தில் மெச்சத்தகுந்த பங்குப் பணியாற்றியிருக்க வேண்டும்.’ இந்த இலக்கணத்திற்கு வாழும் சான்றுகள் இந்த ஆறடி மனிதரும் இவர் பேனா வடித்த எழுத்துகளும்.

தலித்தியம் என்ற சொல் பயன்பாட்டு அரங்கில் முகம் காட்டாத நாளிலேயே தீண்டாமை, சாதி இழிவு, ஆதிக்க அநீதி ஆகிய இருட்டுக் கோட்டை களைத் தம் பேனாப் பீரங்கியால் பேர்த்தெறிந்தவர் சமுத்திரம்.

பெண்ணியம் பேச்சு முனைக்கு வராதிருந்த காலத்திலேயே ஆணாதிக்கம், வரதட்சணைக் கொடுமை, விதவை நிலை ஆகிய பெண்மைக்கு எதிரான ஓரவஞ்சங்களை வேரற வெட்டியழித்தவர் இவர். வைகுண்டர் வழியில் செருக்குடன் நடந்த இவருக்கு ஏகலைவன் என்ற பாரதக் கதைமாந்தன் மனத்திற்கு ஏற்றவன். இன்னும் குறிப்பிட வேண்டிய செய்தி இவர் பேனா முனையோடு நில்லாது கள மிறங்கிச் சமரசமின்றிப் போராடியவர் என்பதே. காலப்போக்கில் இவர் கொண்ட வளர்ச்சி இவரது பெண்ணுரிமையைப் போற்றும் இயல்பை உறுதி செய்தது. கால வரிசைப்பட்ட இவரது படைப்புகள் இதை வெளிப்படுத்தும்.

‘வேரில் பழுத்த பலா’ (குறுநாவல்) சாகித்திய அகாதெமி விருது பெற்றது. இது முதல் தலை முறையாக வேலைக்குச் சென்ற பெண் எதிரிடும் இடர்ப்பாடுகளையும் சாதிய இழிவழிவையும் வெளிப்படுத்தியது.

இவர் ஐந்நூறு சிறுகதைகள் வரை எழுதி யுள்ளார். அவை 24 தொகுப்பாக வெளிவந்தன. அதுவரை படைப்புத் தறியில் பாகாகவோ ஊடாகவோ முகம் காட்டியிராத பொருண்மை பல இவர் கைப்பட்டுக் கதைப் பொருளாயின.

‘முகம் தெரியாத மனுசி’ என்ற கதை தோள்சீலைப் போராட்டத்தில் பங்கேற்ற சூழலை விவரிக்கிறது.

‘வாழ்க்கைப் பாக்கி’ சாவு வீட்டுச் சலனங்களைப் படம்பிடிக்கும் மிகச் சிறந்த கதை. பண்டாரம் என்ற அலுவலக உதவியாளர் மேற்கொண்ட அலுவலகப் பயணம் பற்றி எள்ளல் துள்ள விளக்கும் கதை. ‘பண்டாரம்’, ‘தராசு’ என்ற கதை அலுவலக ஊழியரின் நேர்மையை முன்னிலைப்படுத்தும் ஒரு சத்தியத்தின் அழுகை (சாதியம்), எதிர் பரிணாமம் (போலி அரசியல்), ஐம்பெரு விழா (சமூகத்தின் போலித் தனம்), மானுடத்தின் நாணயங்கள் (பெண்ணின் அவலம்),

அம்மையப்பன் (தனிமனித நேர்மை), பிணம் தின்னும் சாத்திரங்கள் போன்ற ஒவ்வொரு புதினமும் அதனதன் தனித்தன்மைச் சாதிப்பினால் வெற்றி பெற்றது.

“என் எழுத்து ஏழ்மையின் வெற்றியாகாது; ஏழைகளின் வெற்றியாக வேண்டும்” என்ற நோக்கத்தி லிருந்து இவர் வழி தவறியதில்லை. இதுவே இவர் பெருமைகளில் முதன்மையானது. இவர் படைப்பு களில் உத்தி, வடிவம் என்று சிலம்ப மாடுவதிலும் பொருண்மையே அழுத்தம் பெற்றது. இது இவரை முற்போக்கு அணியில் நிறுத்தியது எனலாம்.

இவர் தெளிவும் ஆற்றலும் பெற்ற எழுத்தாளர்; சமூகத்தின் தூதுவராகப் படைப்பைப் பயன்படுத்தி யவர்.

முளைக்கும் பருவத்திலேயே நாட்டுப்புறக் கலையில் கால் பதித்த ஈடுபாடு பிற்காலத்தில் சாமானியர் உணர்வுகளைப் படைப்பின் பொருளாக்க ஆர்வ மூட்டியது.

இளமைப் பருவத்திலேயே தேசிய இயக்க ஈடுபாடும் காமராசர் பாராட்டும் நேர்ந்தாலும், இந்த முதல் தலைமுறைக் கல்விமான் எச்சரிக்கை யாகவே அடிவைத்து முன் சென்றார். பிள்ளைப் பருவ வறுமையும் அநீதி கண்ட பொருமலும் இவரை இடதுசாரிச் சார்புக்கு ஈர்த்தன. “கலை மக்களுக்காக” என்ற அணியில் இவர் நின்றார்.

“இவர் எழுதுகோலுக்கு இதயம் இருக்கிறது” என்ற இராம.குருநாதனின் கூற்று சரியான மதிப்பீடு.

அரசியல் தலைவர்களின் காலில் விழுந்து விழுந்து தமிழர்கள் முதுகெலும்பின் செயல்பாட்டை மறந்து தவழ்கிறார்கள் என்ற எள்ளல் எதிர் பரிணாமத்தில் அம்பலமேறியது.

தேவதாசி முறைக்கு எதிராகச் “சாக்கம்மாவும்” பெண்ணின் பொருளாதாரச் சுதந்திரம் கோரிச் “சுமைதாங்கியும்” தனித்தன்மை பெற்றன.

இவர் படைப்புகளில் மரபு வழிப்பட்ட உவமை களும் ஊர்ப்புற வழக்காறுகளும் இடம்பிடித்தது தனி அழகு. அவை சமூக வரலாற்றிற்கும் தமிழிலக்கிய வரலாற்றிற்கும் நிச்சயமாக உதவி புரியும் உள்ளீடு உடையவை. இவரது நவீனங்களில் “ஒரு கோட்டுக்கு வெளியே” முதற் பிரசவம், பதினெட்டு மொழிகளில் வானொலி நாடகமாகவும், பதினான்கு மொழிகளில் மொழிபெயர்ப்பாகவும் அமைந்த பெருமை பெற்றது. ஊருக்குள் ஒரு புரட்சியோ ஐந்தாண்டுத் திட்டம் செயல்படும் அவலநிலையைத் தோலுரித்தது “புத்தம் புது காலை” என்ற பெயரில் திரைப்படமாகவும் வெளிவந்தது.

இவர் எழுதிய அரவாணிகளைப் பற்றிய “வாடா மல்லி” வாரத் தொடராக வந்த பொழுதே வாசகர்களை ஆட்கொண்டது. “பாலைப்புறா” என்ற நவீனம் எய்ட்ஸ் நோயாளிகளை மனித நேயத்துடன் அணுகியது.

ஆண்மைக் குறைவால் உண்டாகும் உளவியற் சிக்கலை ஒத்தை வீடும் ஓரினச் சேர்க்கைக்கு அடிமைப்படுதலைப் புதை மண்ணும் கலைப் பாங்குடன் வடித்தன. இவ்வாறாக விளிம்பு நிலையினரின் மன உணர்வுகளை எழுது பொருளாக ஏற்றுக் கதை படைத்து இலக்கிய உலகம் கொண்டாடுமளவு வெற்றி பெற்றவர் சமுத்திரம்:

தனியார் கல்லூரியின் அழுக்குகளை சத்திய ஆவேசம் எழுத்தில் ஏற்றியது ‘சோற்றுப் பட்டாளம்’ ‘இல்லந்தோறும் இதயம்’ என்பவை திருமணத்தில் பெண்ணுரிமைப் போராட்டத்தையும், தொழுநோய் பாதித்த பெண்ணிடம் ஏற்படும் உடன்பாடான மாறு பாட்டையும் முன்வைத்தன. சுருங்கச் சொன்னால், இவர் கதைகள் யதார்த்த வழியில் கலைப் படைப் பாயின; பிறர் தொடாத களத்திலும் புலத்திலும் இறங்கி ஈடுபாட்டுடன் மேம்பட்டன.

இவரது நாடக மேடை அனுபவம் ‘லியோ டால்ஸ்டாய்’ என்ற நாடகமாகும். பத்தே கதை மாந்தரைக் கொண்ட இக்கலை வடிவம் நெடுங் காலம் சுவைஞர்கள் நினைவில் ஆட்சி செய்தது.

இவரது கட்டுரை நூல்கள் 1. கதைகளின் கதைகள் 2. சமுத்திரம் கட்டுரைகள் 3. என் பார்வையில் கலைஞர் என்பவை. தம் கதைகளின் பின்னணியை சுவையுடன் கூறியது முதல் தொகுப்பு எழுத்தாளர் களுக்குப் பயனளிக்கும் பயிலரங்கு. மற்றிரு கட்டுரை நூல்களும் மேற்கொண்ட பொருளுக்கியைந்து பெயர் சொல்லும் நூல்கள்.

சமுத்திரம் ஒரு சமஉரிமைப் போராளி, சமரச மற்ற எழுத்துப் போராளி, உண்மையை உரத்துக் கூறியவர். இவரைப் பொறுத்தவரை மனிதநேயம் தற்கருணை வாதம் அல்ல, ஒரு போராட்டக் குறியீடு. இவரை உருவாக்குவதில் வள்ளலாரும் வைகுண்ட சாமியும் பங்கேற்றனர். வீரன் சுந்தரலிங்கமும் குணங்குடி மஸ்தான் சாகிபும் வேதநாயக சாத்திரியும் தோள் சீலைப் போராட்ட முன்னோடி. மீட் பாதிரியும் சாதிப் பட்டப் பெயர் சேர்த்துக் கையெழுத்துப் போட மறுத்த மதுரை மாவட்ட (நாட்டாண்மை)க் கழகத் தலைவர் இராமச்சந்திரனும் வழிகாட்டிகளாயினர். எழுத்தாளரினின்று வேறு படுத்துவன. அவை, சமூக நிகழ்வுகளிற் பங்கேற்பு, மனிதநேயம், தம்மைத் தாமே பரிசீலனை செய்து கொள்ளுதல், அனுபவத்திலிருந்து பெறும் பாடம், தொலைநோக்குப் பார்வை, புகழ்மயக்கின்மை, படைப்பில் வெளிப்படும் பொதுமை, தம்மையும் ஒரு பாத்திரமாக இணைத்தல், சொந்த வாழ்விற் பற்றின்மை, தம் படைப்பைப் பொதுச் சொத்தாக்கக் கருதும் மனப்பான்மை என்பன.

ஒரு படைப்பாளியின் வாழ்க்கையும் சாதனையும் பரவலாக வரையப்பட்டிருக்கிற வகையில் நூலாசிரியர் பாராட்டிற்குரியவர். படைப்பாளியின் வாழ்க்கையே படைப்புக்கு வேராக மறைந்தும் மறையாமலும் அமைய வேண்டும். இதனை வெளிப்படுத்துதல் நூலின் நுட்பமாகக் கையாளப்பட்டிருக்கிறது. படைப் பாளியிடம் கொண்ட மதிப்பு அவரை மதிப்பிடுவதில் குறுக்கிடாமல் நூலாசிரியர் நடுநிலையுடன் நடந்து கொண்டிருக்கிறார்; சார்புச் செய்தி எதுவும் இடம் பெறுதலோ, படிப்பவரை மயங்கச் செய்தலோ இல்லாமல் தாம் மேற்கொண்ட பணியை நிறைவு செய்திருக்கிறார்.

நூலில் அங்கங்கு காணப்படும் எழுத்துப் பிழைகள் பார்வை இடம் மாறினாலும், நூலாசிரியர் சமுத்திரம் என்ற படைப்பாளியின் முழுப் பரி மாணத்தை நம் முன் நிறுத்துவதில் பெரு வெற்றி பெற்றிருக்கிறார்.

Pin It