வித்யா ஜெயபிரகாஷ்

புத்தகங்கள் படிப்பது சிறுவயதிலிருந்தே விருப்பமாக இருந்தது. கடந்த சில ஆண்டுகளாக நான் புத்தகம் படிக்கும் பழக்கத்தை ஏற்படுத்திக்கொண்ட பிறகு என்னிடத்தில் நிறைய மாற்றங்களைக் காண்கிறேன். மக்கள் சிந்தனைப் பேரவை நடத்தும் இப்புத்தகக் கண்காட்சி மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. இப்பொழுது எனது சிந்தனை மேம்பட்டிருப்பதை உணர்கிறேன்.

சிந்தனை வளர்கிறது, அது செயலுக்கு உறுதுணை யாக இருக்கிறது. நான் மூன்று ஆண்டுகளாக இக்கண் காட்சிக்கு வந்து கொண்டுள்ளேன். இக்கண்காட்சியை நடத்தும் ஸ்டாலின் குணசேகரன் அவர்களுக்கும் அவர் களது குழுவிற்கும் எனது நன்றிகள்.

erode_bookfair_401மாலையில் நடக்கும் இலக்கியச் சொற்பொழிவு நிகழ்ச்சிகள் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. அவர்களின் பேச்சைக் கேட்பதற்கு இக்கண்காட்சி வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்துள்ளது. ஜெயகாந்தன் போன்ற எழுத்தாளர்களின் படைப்புகளைப் படிக்கும் பொழுது அடித்தட்டு மக்களின் வாழ்க்கை முறையைத் தெரிந்துகொள்ள முடிகின்றது.

சிவகாமி, ஆசிரியர்

பெரியார் மாவட்டத்தில் மக்கள் சிந்தனைப் பேரவையை ஏற்படுத்தி நடத்திக்கொண்டுள்ளார்கள். இது சிறந்த முயற்சி. இக்கண்காட்சியால் மாணவர்கள் படிக்கும் பழக்கத்தை ஏற்படுத்திக்கொள்ள உதவுகிறது. மக்கள் பேரவையினர் இக்கண்காட்சியை எல்லோரிடத்திலும் அழைப்பிதழைக் கொண்டு சேர்க்கின்றனர். திருமண அழைப்பிதழைப் போல் இதனைக்கொண்டு சேர்க் கின்றனர். இதனால் மக்கள் மத்தியில் இக்கண்காட்சி பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. இக்கண்காட்சி தொடங்கப்பட்ட பொழுது 75 கடைகளில் புத்தகங்கள் விற்பனை செய்தனர். ஆனால் இன்று 150க்கும் மேற்பட்ட கடைகளில் விற்பனை நடைபெறுகின்றது என்பதே அதன் வளர்ச்சியைக் காட்டுகிறது. நான் எனது பள்ளி மாணவ, மாணவிகளை ஆண்டுதோறும் அழைத்துவருகிறேன். மாணவர்களுக்குப் பெரிதும் பயனுள்ளதாக இருக்கிறது. இதனை ஏற்பாடு செய்த அனைவருக்கும் நன்றி.

பவானி மகளிர் பள்ளி, தாவரவியல் ஆசிரியர்

இவ்விழாவிற்கு நான் மூன்றாவது முறையாக வருகிறேன். இங்கு கலை, இலக்கியம், பொது அறிவு, அறிஞர்களின் நூல்கள் கிடைக்கின்றன. இதனால் அனைவரும் பயன் பெறுகின்றனர். பண்பாடு இன்று சிதைந்து வருகின்றது. இத்தகைய தருணத்தில் இக் கண்காட்சி மக்கள் மத்தியில் நல்ல நூல்களைப் படிக்கும் ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால் அவர்கள் சிறந்த இளைஞராக வருவார்கள். நல்ல நூல்கள் இளைஞரை நல்வழிப்படுத்தும். எங்களது பள்ளியிலிருந்து 300 மாணவிகளை அழைத்து வந்துள்ளோம். இக்கண்காட்சி எங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக உள்ளது. ஒவ்வொரு வருடைய இல்லத்திலும் சிறிய நூலகம் இருக்க வேண்டும். இக்கண்காட்சி சிறக்க எங்களது வாழ்த்துக்கள்.

வெங்கடேஸ்வரா வித்யாலயா துணை முதல்வர், கோபி செட்டிப்பாளையம்

எங்களது பள்ளிக்கு 75 ஆயிரம் ரூபாய்க்கு மேல் புத்தகங்களை வாங்குகிறோம். இதற்கு முன் நாங்கள் சென்னைக்குச் சென்று புத்தகங்களை வாங்குவோம். இப்பொழுது ஈரோடு புத்தகக் கண்காட்சி எங்களுக்கு அத்தகைய சிரமத்தைக் குறைத்துவிட்டது. எங்களது நூலகம் இன்று புத்தகங்களால் நிறைந்திருக்கிறது.

நவரசம் மகளிர் கல்லூரி, துணை முதல்வர்

சென்னைப் புத்தகக் கண்காட்சி தமிழ்நாடு முழுவதும் பரவலாக அறியப்பட்டுள்ளது. அதற்கடுத்து புகழ்பெற்றுள்ளது ஈரோடு புத்தகக் கண்காட்சி. நான்கு வருடமாக நடக்கும் இப்புத்தகக் கண்காட்சியை ஸ்டாலின் குணசேகரன் அவர்கள் சிறப்பாக நடத்தி வருகிறார். இக்கண்காட்சியில் பல தரப்பிலான புத்தகங்களும் கிடைக்கின்றன. கல்லூரி மாணவிகள் புத்தகக் கடைக்குச் செல்வதற்கு வாய்ப்பில்லை. ஆனால் இக்கண்காட்சிக்குக் கல்லூரிகளே அனுப்பி வைக்கின்றன. அத்தகைய சிறப்பைப் பெற்றுள்ளது இக்கண்காட்சி. இதனை ஏற்பாடு செய்த அனைவருக்கும் எங்களது நன்றி.

ஈரோடு பெண்கள் மேனிலைப் பள்ளி, இயற்பியல் ஆசிரியர்

பாட நூல்களை மட்டுமே பார்த்த மாணவிகளுக்கு இக்கண்காட்சி பல நூல்களைப் பார்க்கும் வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்துள்ளது. இதனால் அவர்கள் மகிழ்ச்சி யடைந்துள்ளது அவர்களின் முகத்தைப் பார்த்தாலே தெரிகிறது. பாட நூல்களைத் தாண்டிப் பல துறை சார்ந்த நூல்களைப் படிக்கும் ஆர்வத்தை இக்கண்காட்சி ஏற்படுத்திக் கொடுத்துள்ளது. இந்நூல்களைப் பார்க்கும் மாணவிகளுக்கு நாம் படித்தது மிகக் குறைவு, நிறைய படிக்க வேண்டும் என்ற சிந்தனையை இக்கண்காட்சி ஏற்படுத்தி யுள்ளது. மக்கள் சிந்தனைப் பேரவைக்கு எங்களது நன்றி.

சௌகத் அலி

ஈரோடு புத்தகக் கண்காட்சிக்குச் சில ஆண்டுகளாக வருகிறோம். மிகவும் பயனுள்ளதாக உள்ளது. 250 ரூபாய்க்கு புத்தகங்கள் வாங்கும் குழந்தைகளுக்குச் சான்றிதழ்கள் தருகிறார்கள். இதனால் குழந்தைகள் மகிழ்ச்சியடைகிறார்கள். சென்னையில் நடப்பதைப் போலவே இங்கும் நடத்துவது அனைவருக்கும் பயனுள்ளதாக உள்ளது. கிராமங்களில் இத்தகைய வாய்ப்புகளை ஏற்படுத்திக்கொடுத்த மக்கள் சிந்தனைப் பேரவைக்கு எங்களது நன்றி. இந்த ஆண்டு மேலும் அரங்குகளை அதிகரித்திருக்கிறார்கள். அது வளர்ச்சியைக் காட்டுகிறது. இக்கண்காட்சி மேலும் மேலும் சிறக்க எங்களது வாழ்த்துக்கள்.

முரளிதரன்

நான் எனது குடும்பத்தோடு வந்துள்ளேன். அனைத்துத் தரப்பு மக்களுக்கு வேண்டிய புத்தகங்கள் இங்குக் கிடைப்பது இப்புத்தகத் திருவிழாவின் சிறப்பாகும். இவ்விழாவில் மாலையில் நடைபெறும் இலக்கியச் சொற்பொழிவுகள் மிகவும் பயனுள்ளவையாக உள்ளன. இக்கண்காட்சி சிறக்க எங்களது வாழ்த்துக்கள்.

சத்தீஸ் கல்லூரி மாணவர், மக்கள் சிந்தனைப் பேரவையின் உறுப்பினர்

மக்கள் சிந்தனைப் பேரவையின் அறிமுகம் பள்ளிக் காலத்திலிருந்தே கிடைத்தது. இப்பேரவையின் செயல் பாடுகள் என்னைப் பெரிதும் ஈர்த்தன. இப்பேரவை யினருடன் இணைந்து மக்களுக்குச் சேவை செய்ய வேண்டும் என்று விரும்பினேன். அதற்கான வாய்ப்பாக இப்புத்தகக் கண்காட்சி அமைந்தது. மக்கள் சிந்தனைப் பேரவையின் கிளையை எங்களது கல்லூரியில் ஆரம்பித் தோம். அதன் மூலம் இக்கண்காட்சி ஏற்பாடுகளில் நாங்கள் பங்கெடுத்துக் கொண்டுள்ளோம். இக்கண்காட்சியை எங்களது குடும்ப விழாவாகக் கருதுகிறோம்.

Pin It