buddhist flagகொடி என்பது தனித்துவமான வடிவமைப்பு. அது பல்வேறு வண்ணங்களைக் கொண்டமைந்துள்ளன. பெரும்பாலான கொடிகள் செவ்வகம் அல்லது நாற்கரத்தில் அமைந்திருக்கும். கொடி ஒவ்வொரு நாட்டின் அடையாளத்தை குறியீடு. அது அந்த நாட்டின் தேசிய கொடியின் விதிமுறைகளின் படி பறக்கவிடப்படும். கொடிகள் அடிப்படை சமிஞ்சை மற்றும் அடையாளங்களில் பொதுவான கருவியாக உள்ளது.

கொடியை முதன் முதலில் எந்த நாடு பயன்படுத்தியது என்பதில் தெளிவான வரலாறு இல்லை. ஆனால் தமிழ் மண்ணுக்கும் மக்களுக்குமான உறவு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. முடியுடை வேந்தர்கள் மூவரும் தங்களுக்கானக் கொடியை பயன்படுத்தினர். சேரர்கள் வில்அம்பும், சோழர்கள் புலிக் கொடியையும், பாண்டியர்கள் மீன் கொடியையும் பயன்படுத்தியதை யாவரும் அறிவோம்.

பின்னர் கொடியின் முக்கியத்துவம் 17ஆம் நூற்றாண்டில் கவனம் பெற தொடங்கியது. அந்த நூற்றாண்டில் கடல் வாணிகம் செழிப்பாக இருந்தது. கப்பலை பயன்படுத்தும் நாட்டினர் தாங்கள் எந்த நாட்டைச் சார்ந்தவர்கள் என்பதை குறிக்கும் வகையில் கொடியைப் பறக்கவிட வேண்டும் என்ற கடற்சட்டம் கொண்டு வரப்பட்டது.

நாட்டின் உயர் பதவிகளில் இருக்கும் தலைவர்கள் இறக்க நேர்ந்தாலும் அல்லது கட்சித் தலைவர்கள் முக்கிய பொறுப்பாளர்கள் தவறி விட்டாலோ அப்போதெல்லாம் கொடியை அரைக்கம்பத்தில் பறக்க விடப்படும்.

கொடியிலுள்ள வண்ணங்களுக்கு ஒவ்வொரு குணம் உண்டு. நீலம், கருப்பு, சிவப்பு, பச்சை, காவி உள்ளிட்ட வண்ணங்கள் பெரும்பாலான நாடுகளின் கொடிகளில் இடம் பெற்றிருக்கின்றன. சில நேரங்களில் போரை எதிர்கொள்ள முடியாமல் போனால் அல்லது சமாதானத்தை விரும்புவோர் வெள்ளை நிறக் கொடியை ஏந்துவதண்டு. ஆயினும் கொடியின் முக்கியத்துவம் அவ்வந்த நாட்டின் தேசியக் கொடியைப் பயன்படுத்துவதில் இருந்து உணர முடியும். அவ்வப்போது தேசியக் கொடியைப் பயன்படுத்துவதில் ஏற்படும் பிரச்சனை கவனம் பெற்று வருகிறது.

கோவிலில் திருவிழாக்கள் நடைபெறும் போது கொடியேற்றத்துடன் தொடங்குவதையும் காணலாம். கொடி என்பது ஒவ்வொரு நாட்டுக்கும் குடிமகனுக்குமான உறவாகும். கட்சிக்கும் தொண்டனுக்கும் உறவாகவும், கடவுளுக்கும், பக்தனுக்கும் உறவாகவும் குழந்தைக்கும் தாய்க்குமான தொப்புள் கொடி உறவைப் போல பிணைக்கப்பட்டு இருக்கிறது.

பத்தொன்பதாம் நூற்றாண்டில் பௌத்த மார்க்கத்தை சார்ந்தவர்கள் தங்கள் சமயத்தையும் தத்துவத்தையும் உலக நாடுகளுக்கு கொண்டு செல்ல அல்லது பௌத்தர்களை ஒன்றிணைக்கும் நோக்கில் தங்களுக்கான பிரத்யேகமான ஒரு கொடியை உருவாக்கினர். அது உலகில் உள்ள பௌத்தர்களை ஒரு கொடியின் கீழ் கொண்டுவர விருபியதின் வெளிப்பாடு அது. அதை உலகிலுள்ள பௌத்தர்களும், பௌத்த நாடுகளும் ஒரே வண்ணத்தில் அமைந்த கொடியை பயன்படுத்துவதில் இருந்து காணமுடியும்.

பௌத்தம் என்பது கௌதம புத்தரின் இவ்வுலகிற்கு போதித்த நற்செய்தி. தத்துவத்தின் வெளிப்பாடு. இது ஒரு சமயம். இதை மார்க்கம் என்றழைப்பது சாலச் சிறந்தது. மார்க்கம் என்பதற்கு நெறி என்பது பொருள். நெறி என்றால் நெறிப்படுத்துவதில் இருந்து தோற்றம் பெற்றது. நல்வழிப் பாதையை நோக்கி செல்ல உந்து சக்தியாக இருந்தது. அதனால் பௌத்தத்தை மதம் என்று சொல்வதை விட அது ஒரு வாழ்வியல் நெறிமுறை என்பதே முறையாகும்.

கி.மு. 583 ஆம் ஆண்டு பிறந்த சித்தார்த்தர், தனது இருபத்தி ஒன்பதாம் ஆண்டு தன்குடும்ப உறுப்பினர்களின் விருப்பத்தோடு பரிவு ராஜ்யத்தை ஏற்றுக் கொண்டார். அதன்பிறகு அவருடைய தேடல் தீவிர தன்மை அடைந்திருந்தது. அதனால் தன்னுடைய 35வது வயதில் ஞானம் பெற்றார். ஞானம் என்பது அறிவு என்ற பொருளில் ஆளப்பட்டு வருகிறது. இங்கு எல்லோருக்கும் அறிவு இயல்பாகவே இருக்கிறது. ஆனால் அதை பகுத்து ஆராய்ந்து பயன்படுத்தும் முறையைத் தான் புத்தர் இவ்வுலகுக்கு போதித்தார்.

தான் கண்ட உண்மையை எண்வழி மார்க்கத்தின் வாயிலாகவும், பஞ்சசீலக் கொள்கையின் வாயிலாகவும் எடுத்தியம்பி 80 வயது வரை இவ்வுலகில் குறிப்பாக ஆசிய நாடுகளில் குறுக்கும் நெடுக்குமாக அளந்து பார்த்த பெருமை அவரைச் சாரும். அந்த அடிப்படையில் தான் பௌத்த கொடியில் குறுக்கும் நெடுக்குமாக ஒன்றுபோலவே வண்ணங்கள் இடம் பெற்றிருக்கும்.

பௌத்த கொடி 19ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் புத்தர் மார்க்கத்தின் உலகளாவிய அடையாளமாக வடிவமைக்கப்பட்டது. இன்று உலகம் முழுவதும் உள்ள பௌத்தர்களால் பயன்படுத்தப்பட்டும் வருகிறன.

கொடியின் வண்ணங்கள்

பௌத்த சமயத்தைப் பின் தொடர்புகளன் கொடி ஆறு செங்குத்துப் பட்டைகளை கொண்டுள்ளது. அதை புத்தர் ஞானம் பெற்ற போது அவரது உடலில் இருந்து வெளிப்பட்டதாக பௌத்தர்கள் நம்பும் ஒலியின் ஆறு வண்ணங்களை குறிக்கிறது.

நீலம் - உலகளாவிய இறக்கத்தை குறிக்கிறது 

மஞ்சள் - மத்திய வழி (Middle Way) நடு பாதை 

சிவப்பு. - நல்லொழுக்கம் கண்ணியம் 

வெள்ளை - தம்மத்தின் தூய்மை (விடுதலைக்கு வழிவகுக்கும்) 

ஆரஞ்சு - புத்தரின் போதனைகளில் ஞானம் 

ஆறாவது செங்குத்து. இக்கொடி பறக்கும் போது மற்ற ஐந்து வண்ணங்களில் செவ்வகை பட்டையால் ஆனது. மேலும் ஒளியின் நிற மாலையில் உண்டாகும் வண்ணங்களில் கலவையாகும். இந்த புதிய கலவை வண்ணம் புத்தரின் போதனைகள் உண்மை அல்லது ஒளி சாரம் (Prabashara) , என்று குறிப்பிடப்படுகிறது.

தேரவாத பௌத்தத்தை பின்தொடரும் பௌத்த நாடுகள் சில தங்கள் நாட்டுக்கான வண்ணங்களை மாற்றி பயன்படுத்தி கொண்டனர். பர்மாவில் ஆரஞ்சு நிறத்திற்கு பதிலாக இளஞ்சிவப்பு (Pink) வண்ணத்தை மாற்றிக் பயன்படுத்துகின்றனர். திபெத்திய நாட்டினரும் ஆரஞ்சு நிறத்திற்கு பதிலாக பழுப்பு (coffee colour) நிறத்தை பயன்படுத்துகிறார்கள். நேபாள நாட்டு பௌத்தர்கள் ஆரஞ்சு நிறத்திற்கு பதிலாக ஊதா நிறத்தைப் பயன்படுத்துகின்றனர். ஜப்பான் நாட்டிலும் ஆரஞ்சுக்கு பதிலாக பச்சை வண்ணத்தை பயன்படுத்துகின்றனர்.

பௌத்த கொடியின் வடிவத்திற்கு ஒரு சிறப்பு உண்டு. அது குறுக்கே பயன்படுத்தப்பட்ட கொடியின் வண்ணம் நெடுகவும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதுதான் பகவன் புத்தர் தன் வாழ்நாளில் மக்களை சந்தித்து குறுக்கும் நெடுக்குமாக இவ்வுலகம் முழுவதும் பயணம் சென்றதை பறைசாற்றுகிறது.

பௌத்தக் கொடியை முதன் முதலில் 1885ஆம் ஆண்டு கொழும்பு கமிட்டியால் வடிவமைக்கப்பட்டது. அன்று கொழும்பில் உள்ள பௌத்த சிந்தனையாளர்கள் ஒன்றிணைந்து குறிப்பாக வண. ஹிக்கடுவே ஸ்ரீ மங்கல தேரர் (தலைவர்), வண. குணானந்த தேரர், டொன் கரோலிஸ் ஹேவாவிதாரண (அனகாரிக தர்மபாலாவின் தாய் வழி தாத்தா), சார்ள்ஸ் ஏ. டி. சில்வா, பீட்டர் டி ஆப்ரூ, வில்லியம் டி ஆப்ரூ (பீட்டரின் தந்தை) உள்ளிட்ட பௌத்த சிந்தனையாளர்கள் ஒன்றிணைந்து வைசாக திருநாளில் 1885ஆம் ஆண்டு மே மாதம் 28ஆம் தேதி வெளியிட்டனர்.

கர்னல் ஹென்றி ஸ்டீல் ஆல்காட் தியாசபிகல் சொசைட்டியின் நிறுவன தலைவர். அதன் நீண்ட ஸ்ட்ரீமிங் வடிவம் பொது பயன்பாட்டிற்கு சிறமமாக இருப்பதாக கூறினார். அதனால் தேசியக்கொடியின் அளவு மற்றும் வடிவத்தை மாற்றி அமைக்க பரிந்துரை செய்தார்.

1889 ஆம் ஆண்டில் மாற்றியமைக்கப்பட்டு ஜப்பானில் அனகாரிக தர்மபால மற்றும் ஆல்காட் ஆகியோரால் அறிமுகப்படுத்தப்பட்டது. அதன் பின்னர் பேரரசர் மெய்ஜிக்கு வழங்கினர். பிறகு பர்மாவிற்கு வழங்கப்பட்டது.

1950ஆம் ஆண்டு உலக பௌத்தர்களின் கூட்டமைப்பில் பௌத்தர்களின் கொடி சர்வதேச பௌத்த கொடியாக ஏற்றுக் கொள்ளப்பட்டது.

பகவன் புத்தர் என்றும், எப்பொழுதும் யாருக்கும் சொந்தமில்லை. எல்லோரும் அவரவர் விரும்பிய வடிவத்தில் அணைத்துக் கொண்டனர். பலர் மகாயான பௌத்தத்தை பின் தொடர்வதை போலவும், பலர் தேரர்வாத பௌத்தத்தைப் பின் தொடர்வதை போலவும், பாபாசாகேப் அம்பேத்கர் நவயான பௌத்தத்தை கற்பித்ததைப் போலவும் எந்த தேசத்துக்கு எப்படிப்பட்ட புத்தர் தேவையோ அந்த வகையில் கொடியின் வண்ணத்தையும் மாற்றி பயன்படுத்தி கொண்டனர்.

- பேரா. எ.பாவலன்

Pin It