ungalnoolagam sep 17 wrap 500

amarvathi book 350தமிழக வரலாற்றாய்வுக்கு சிறப்பான பங்களிப்பைச் செய்து வரும் நம் கால வரலாற்றறிஞர்களுள் ஒருவர் பேராசிரியர் ப.சண்முகம். 1944 ஆம் ஆண்டில் கோயமுத்தூர் நகரில் பிறந்த இவர் தம் உயர்நிலைப் பள்ளிப் படிப்பையும் இளங்கலைப் பட்டப்படிப்பையும் கோவையில் பயின்றார். பண்டைய வரலாறு, தொல்லியலில் முதுகலைப் படிப்பை சென்னைப் பல்கலைக்கழகத்தில் பயின்றுவிட்டு சென்னை நந்தனம் அரசு கலைக் கல்லூரியில் உதவிப் பேராசிரியர் பணியில் 1972இல் சேர்ந்தார்.

1977 இல் முனைவர் பட்டம் பெற்றுவிட்டு சென்னைப் பல்கலைக்கழகத்தின் பண்டைய வரலாறு, தொல்லியல் துறையில் பேராசிரியராகவும், பின்னர் அத்துறையின் தலைவராகவும் பணியாற்றி ஓய்வு பெற்றார்.

ஆங்கிலத்திலும் தமிழிலும் தமிழக வரலாறு குறித்த ஆய்வுக்கட்டுரைகளையும் நூல்களையும் தொடர்ச்சியாக எழுதி வருகிறார். பல்கலைக்கழகங்களிலும், ஆய்வு நிறுவனங்களிலும் ஆய்வுச் சொற்பொழிவுகளை ஆற்றி வருகிறார்.

‘சங்ககாலக் காசு இயல்’, ‘தமிழக மண் உருவங்கள்’ என்ற இவரது நூல்கள், தம் வரலாற்று அறிவைத் தமிழிலும் வெளிப்படுத்த விழையும் இவரது ஆர்வத்தின் வெளிப்பாட்டிற்குச் சான்றுகளாகும். தமிழ்நாட்டு வரலாறு குறித்த நூல் வரிசையை, தமிழக அரசு வெளி யிட்டபோது, அதில் இவரது பங்களிப்பும் இடம்பெற்று உள்ளது.

இந்தோனிஷியா, மலேசியா, மியான்மர், வியட்நாம், லாவோஸ், தாய்லாந்து, கம்பூச்சியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளுக்குச் சென்று இந்திய, தமிழ்ப் பண்பாடும் சிற்பக்கலையும் அங்கு பரவியது குறித்து ஆய்வு செய்துள்ளார்.

ஜப்பான் நாட்டின் டோக்கியா பல்கலைக்கழகத்தில், தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்கும் இந்தியாவுக்கும் இடையிலான பண்பாட்டு உறவு, வாணிபக் குழுக்களின் செயல்பாடுகள் தொடர்பான ஆய்வுகளில், இணைந்து பணியாற்றியுள்ளார். இது தவிர பெரிய ஆய்வுத்

திட்டங்களையும் மேற்கொண்டு அவற்றை நிறைவு செய்துள்ளார்.

இவரது தொடர்ச்சியான, ஆழமான ஆய்வுப் பணியைப் பாராட்டும் முகத்தான் இவரது மாணவர் களும், வரலாற்றறிஞர்களும் இணைந்து ‘அமராவதி’ என்ற தலைப்பில் சிறப்பு மலர் ஒன்றை வெளிக் கொணர்ந்துள்ளார்கள்.

தமிழ்நாட்டின் அறிவுச்சூழலில் இத்தகைய மலர்கள் பெரும்பாலும் தனிமனிதத் துதிபாடும் தன்மை கொண்ட கட்டுரைகளைக் கொண்டதாய், சிற்றிலக்கிய காலப் பாட்டுடைத் தலைவனை நினைவூட்டும் வகையில் அமைகின்றன. நீலகண்ட சாஸ்திரியார், கே.கே.பிள்ளை, தெ.பொ.மீனாட்சி சுந்தரனார், நா.வானமாமலை, ஏ.சுப்பராயலு ஆகியோரைப் பாராட்டும் வகையில் வெளியான மலர்கள் விதி விலக்கானவை. (இப்பட்டியலில் இடம்பெறத் தவறிய மலர்கள் ஒன்றிரண்டு இருக்கலாம்).

அமராவதி என்ற பெயரைத் தாங்கிய இந்நூல் ஆழமான கட்டுரைகளைத் தாங்கி வெளிவந்துள்ளது. அளவான முறையில் அவரைப் பற்றிய வாழ்க்கைக் குறிப்புகளுடன் தொடங்கும் இந்நூலின் முதற்பகுதியில் பேராசிரியர் ப.சண்முகத்தின் ஒன்பது ஆங்கிலக் கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன. இரண்டாம் பகுதியில் வரலாற்றறிஞர்கள் எழுதியுள்ள 36 ஆங்கிலக் கட்டுரை களும் எட்டு தமிழ்க் கட்டுரைகளும் இடம்பெற்றுள்ளன.

இக்காரணத்தால் இத்தொகுப்பானது வரலாற்றுக் கருவூலமாக அமைந்துள்ளது.

ப.சண்முகத்தின் கட்டுரைகள்

ஆய்விதழ்களில் பேராசிரியர் எழுதிய கட்டுரைகள் அவரது கட்டுரைத் தொகுப்பில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள் என மொத்தம் ஒன்பது கட்டுரைகள் இத் தொகுப்பில் இடம்பெற்றுள்ளன. இக்கட்டுரைகளை அவற்றின் உள்ளடக்கத்தின் அடிப்படையில் பின்வருமாறு வகைப்படுத்தலாம்.

1)            பண்டைய ஊர்கள் நகரங்கள் குறித்தவை (கட்டுரை எண்:1,2)

2)            இடைக்காலத் தமிழகத்தின் நாணயமுறை குறித்தவை (கட்டுரை எண்: 3)

3)            வாணிபம் கைத்தொழில் குறித்தவை (கட்டுரை எண்: 4,5,6)

4)            கடல்சார் வாணிபம் குறித்தவை (கட்டுரை எண்: 7,8,9)

இக்கட்டுரைகள் அனைத்தும் கல்வெட்டுச் சான்று களையே முக்கிய ஆதாரமாகக் கொண்டுள்ளன. மேற் கூறிய நான்கு வகையான கட்டுரைகளில் மூன்றாவது வகை சார்ந்த இரண்டு கட்டுரைகளின் மையச் செய்திகள் மட்டும் இங்கு அறிமுகமாகின்றன.

வாணிபமும் கைத்தொழிலும்

ஒரு குறிப்பிட்ட சமூகத்தின் நாகரிகம், பொருளியல் வளர்ச்சியின் அடையாளங்களுள் ஒன்று அச்சமூகத்தில் நிகழ்ந்த வாணிப நடவடிக்கைகளும் வாணிபம் செய்யப் பட்ட பொருள்களும் இவை ஆய்வுக்குரியன. தனித் தனியான வணிகர்களின் வாணிபமானது, வளர்ச்சி பெறும்போது, அது பல வணிகர்கள் இணைந்த வணிகக் குழு (கில்ட்) ஆக மாறி ஓர் அமைப்பாக நிலைபெறுகிறது. தமிழ்நாட்டில் வாணிபக் குழுக்களின் தோற்றம் சங்க காலத்திலேயே உருப்பெற்றுவிட்டது. வாணிகச் சாத்து என்ற பெயரால் வணிகக் குழுவை சங்க இலக்கியங்கள் குறிப்பிடுகின்றன.

சங்க காலத்திற்குப் பின்னால் தோன்றிய தமிழ்க் கல்வெட்டுகளில் ‘சித்திரமேழி நாட்டார்’, ‘அய்நூற்றுவர்’. வாணியநகரம் எனப் பல்வேறு பெயர்களில் வணிகக் குழுக்கள் குறிப்பிடப்படுகின்றன. இக்குழுக்கள், ‘மகமை’, ‘மகன்மை’ என்ற பெயரில் தம் ஆதாயத்தில் ஒரு குறிப் பிட்ட விகிதாச்சாரத்தை அறச்செயல்களுக்காகத் தாமே முன்வந்து வழங்கியுள்ளன. இதை லெவி, செஸ் என்று இன்றைய வழக்கில் கூறலாம்.

கி.பி. 13 ஆம் நூற்றாண்டில் இருந்து 15ஆவது நூற்றாண்டு வரையிலான கல்வெட்டுகளில் இம் மகமையானது ‘பட்டணப்பாகுடி’ என்று குறிப்பிடப் படுகிறது. இச்சொல்லில் பாகுடி என்பது ‘பங்கு’ என்ற பொருளைத் தருகிறது. இதன் அடிப்படையில் பட்டணப்பாகுடி என்பதை நகரத்தின் பங்கு என்று கூறலாம்.

கல்வெட்டுச் சான்றுகளின் அடிப்படையில் பார்க்கும் போது, ‘பட்டினப்பாகுடி’ மகமை விதிப்பில் மன்னர்களுக்கோ, தல நிர்வாகத்திற்கோ எவ்விதத் தொடர்பும் இல்லை. மன்னர்களின் ஆணையினால் இவை விதிக்கப்படவில்லை. வழக்கமாகக் கல்வெட்டு களின் தொடக்கத்தில் இடம்பெறும் மெய்கீர்த்திகள் பட்டினப்பாகுடி தொடர்பான கல்வெட்டுக்களில் காணப்படவில்லை. ஆட்சி புரியும் மன்னனைக் குறித்த பதிவுகள் இடம்பெறவில்லை. அரசு அதிகாரிகளின் பெயர்களும் பதிவாகவில்லை.

இதன் அடிப்படையில் பார்க்கும் போது இம் மகமையானது வணிகக்குழுவின் உறுப்பினர்களாலேயே முடிவு செய்யப்பட்டுள்ளது என்பது தெரிகிறது. இம்மகமையை வாங்குவதிலும் அரசு ஊழியர்களுக்குப் பங்கில்லை. வணிகக் குழுவின் நிர்வாகிகளோ அவர் களால் நியமிக்கப்பட்டவர்களோ இதை வணிகர்களிடம் இருந்து வாங்கினர்.

வணிகக் குழுக்களால் வாங்கப்பட்ட பட்டணப் பாகுடி, பணவடிவிலோ, பொருள்வடிவிலோ, பெரும் பாலும் கோவில்களுக்கே வழங்கப்பட்டு, திருவிழாக் களுக்கும் நாள்வழிபாட்டிற்கும் பயன்பட்டுள்ளன. சில நேரங்களில் கோவிலுக்கு நந்தவனம் உருவாக்கவும் கோவிலைப் பழுதுபார்க்கவும், மண்டபம் கட்டவும் பயன்படுத்தப்பட்டுள்ளது.

பட்டினப்பாகுடி மகமையானது அன்றாடம் பயன் படுத்தும் பொருட்கள் மீதும் ஆடம்பரப் பொருட்கள் மீதும் விதிக்கப்பட்டுள்ளது. பயறு வகைகள், நெல், அரிசி, சாமை, வரகு, கேழ்வரகு, கம்பு, தேங்காய், ஆமணக்கு, எள், கடுகு, வெற்றிலை, இஞ்சி, சுக்கு, வெள்ளைப்பூண்டு, கருப்புக்கட்டி, உப்பு, காய்கறி, புளி, தேன், மெழுகு, பருத்திநூல் புடவை வகைகள், துணிகள் குதிரை, யானை, ஒட்டகம், பசு, எருது, எருமை, அகில், கஸ்தூரி, சந்தனம், கற்பூரம், மூலிகை வேர்கள், யானைத் தந்தம், பவளம், முத்து, தங்கம், செம்பு, பித்தளை, இரும்பு என்பன முக்கிய வாணிபப் பொருட்களாக விளங்கியுள்ளன.

பேராசிரியரது கணிப்பின்படி, கர்நாடகப் பகுதியில் கிடைத்துள்ள கல்வெட்டுகளிலும், தமிழ்நாட்டில் கிடைத்துள்ள கல்வெட்டுகளிலும், பாக்கு, மிளகு என்ற இரண்டும் இவ்விரு பகுதிகளிலும் சந்தைப்படுத்தப் பட்டுள்ளன. பலவகையான பருத்தி வகைகள், பட்டு கம்பள ஆடைகள் என்பன தமிழ்நாட்டில் விற்கப்பட குறைந்த வகையிலேயே இவை கர்நாடகத்தில் விற்பனை செய்யப்பட்டுள்ளன.

விலங்குகள், மாடுகள் ஆகியன விற்பனைப் பொருளாகத் தமிழ்நாட்டுச் சந்தைகளில் விளங்க, கர்நாடகச் சந்தைகளில் இவை விற்பனைப் பொருளாக இல்லை. மதிப்பு மிக்க விற்பனைப் பொருளாகத் தங்கம் கர்நாடகத்தில் விளங்கியுள்ளது. ஆனால் தமிழ்நாட்டில் இந்நிலை இல்லை.

பட்டடையும் தொழிலும்

தமிழ்க் கல்வெட்டுகளில் ‘பட்டடை’ என்ற கலைச் சொல் இடம்பெறுகிறது. இச்சொல் தொழிற்கூடங்களைக் குறிப்பதாகவுள்ளது. இச்சொல்லை அடிப்படையாகக் கொண்டு ‘பட்டடைச் சிற்றாயம்’, ‘பட்டடைச்சுங்கம்’, ‘பட்டடைத் தண்டல்’, ‘பட்டடை வரி’, ‘பட்டடை ஆயம்’ என்ற வரிகளின் பெயர்களும் கல்வெட்டுக்களில் காணப்படுகின்றன. இந்நூலில் இடம்பெற்றுள்ள, பேராசிரியர் சண்முகத்தின் கட்டுரை ஒன்று விஜயநகரப் பேரரசின் ஆளுகையின் போது பல கிராமப்புறங்களில் உற்பத்தியான வாணிபப் பொருட்களையும் அவற்றை உற்பத்தி செய்த கைவினைஞர்களையும் அறிமுகம் செய்கிறது. துணிகள், அணிகலன்கள், மட்பாண்டங்கள், சுடுமண் உருவங்கள், உலோகப்பொருட்கள், இரும்பு செம்புக் கருவிகள் என்பன உள்நாட்டுத் தேவைக்கும் அயல்நாட்டு ஏற்றுமதிக்கும் பட்டடைகளில் உற்பத்தியாகி உள்ளன.

பட்டடைகள் குறித்த இக்கட்டுரையில் விஜயநகர் ஆட்சிக்காலத்தைய 250 தமிழ்க் கல்வெட்டுகளைச் சான்றுகளாகப் பயன்படுத்தி உள்ளார். இவற்றுள் பெரும்பாலானவை கல்வெட்டுத் தொகுப்புகளில் இடம்பெறாதவை. படி எடுக்கப்பட்ட நிலையிலேயே பாதுகாக்கப்பட்டு வருபவை.

உற்பத்திக்கான நிலங்கள், வேளாண் உற்பத்திப் பொருட்கள், தொழிற்கூடங்கள் தொழில்கள் மீதான வரிகளை இக்கல்வெட்டுகள் குறிப்பிடுகின்றன. இவ்வகையில் ‘கைக்கோளர்கள்’, ‘வாணியர்’, ‘குயவர்Õ, Ôகம்மாளர்Õ, Ôவணிகர்கள்Õ, என்போர் மீது வரிவிதிக்கப் பட்டுள்ளது. வாணிபம் நிகழும் இடங்களாக, சந்தை, பேட்டை என்பன விளங்கின.

சந்தைப்படுத்தப்பட்ட பொருட்களை இக் கல்வெட்டுகள் வாயிலாக அறிய முடிந்தாலும், மேலும் பல விரிவான செய்திகளை அறியமுடியவில்லை. சான்றாக மூலப்பொருள் விநியோகம், மூலதனம், உற்பத்திக் கருவிகள் என்பன குறித்த செய்திகள் போதாமையாகவே உள்ளன.

···

இக்கட்டுரைக்கான கல்வெட்டுச் சான்றுகள் செங்கல்பட்டு, தென்ஆற்காடு, வடஆற்காடு, திருச்சிராப் பள்ளி, சேலம், திருவாரூர், புதுக்கோட்டை ஆகிய ஊர் களிலும் அவற்றைச் சுற்றியுள்ள ஊர்களிலும் சேகரிக்கப் பட்டவை ஆகும்.

விஜயநகர ஆட்சிக்காலத் தமிழகத்தில் பொருள் உற்பத்தியாளர்கள், உழுகுடி, பட்டடைக்குடி என இரு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டிருந்தனர். நிலம் சார்ந்த வேளாண் உற்பத்தியில் ஈடுபட்டிருந்தோர் உழுகுடி என்றும், வேளாண்மையில் ஈடுபடாத கைவினைஞர்கள் பட்டடைக்குடி என்றும் அழைக்கப்பட்டனர். குடியானவர் என்ற பெயராலும் உழுகுடிகள் என்று அழைக்கப்பட்டனர். வேளாளர், கொடிகாரர் (வெற்றிலை பயிரிடுவோர்) ஆகியோர் இப்பிரிவில் அடங்குவோர்.

பட்டடைக் குடியினர் Ôகாசாயத்தார்Õ என்றும் அழைக்கப்பட்டனர். ஆயமாக (வரியாக) காசினை (உலோக நாணயத்தை) செலுத்தியமையால் இப்பெயரைப் பெற்றுள்ளனர். இப்பிரிவில், (1) கோ முட்டிகள் (தெலுங்கு பேசும் மரபில் வந்த வணிகர்கள்) (2) செட்டி, வர்த்தகர் (வணிகர்கள்) (3) கைக்கோளர் (4) சேனியர் (நெச வாளர்கள்) (5) செக்கார் (எண்ணெய் ஆட்டுவோர்) (6) எருதுக்காரர் (பொதி சுமக்கும் அல்லது வண்டி இழுக்கும் காளைமாடுகளின் உரிமையாளர்) ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

இதன் அடிப்படையில் நில உரிமையாளர்களாகவும் நிலமில்லாத சாகுபடியாளர்களாகவும் விளங்கியோர் வேளாண்மைக் குடியினராகவும், வேளாண்மை அல்லாத தொழிலை மேற்கொண்டிருந்தோர் தொழிற்குழுவின ராகவும் இருந்துள்ளனர் என்பது தெளிவாகிறது.

உற்பத்தியாளர்களிடையே நிலவிய இப்பிரிவினைகள் 14 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் சம்புவராயர்கள் ஆட்சியின்போது இறுதிவடிவம் பெற்றுள்ளது. இவர்களது கல்வெட்டுகள் பட்டடைக் குடிகளை, காசாயக்குடிகள் என்றே குறிப்பிடுகின்றன. சோழர் ஆட்சிக் காலத்திற்கு பிற்பகுதியில் கூட இச்சொல்லாட்சி காணப்படுகிறது.

நன்செய்நிலச் சாகுபடியாளர்கள் தாம் செலுத்த வேண்டிய வரியை விளைபொருளாகவும் சில நேரங் களில் ரொக்கமாகவும் செலுத்தியுள்ளார்கள். புன்செய் நில வேளாண்மை மேற்கொண்டோர் தாம் செலுத்த வேண்டிய வரியை ரொக்கமாகச் செலுத்தியுள்ளார்கள். கைவினைத் தொழில் செய்தோர் ரொக்கமாகவே செலுத்தி வந்தனர்.

பட்டடை என்ற சொல்லாட்சி பட்டாடை என்று தவறாகப் படிக்கப்பட்டுள்ளது. தி.நா.சுப்பிரமணியன் ‘பட்டடை-நூலாயம்’ என்ற சொல்லை பட்டாடை நூலாயம் என்று தமது கல்வெட்டுச் சொல் அகராதியில் குறிப்பிட்டுள்ளார். தமிழ்நாட்டின் துணிகள் குறித்த தம் ஆய்வு நூலில் விஜயா ராமசாமி, பட்டாடை நூல்

ஆயம் என்றே குறிப்பிட்டுள்ளார். டி.வி.மகாலிங்கம் பட்டுத் துணி மீதான வரி என்றே பட்டடை ஆயம் என்ற சொல்லுக்குப் பொருள் கண்டுள்ளார். ஆயினும் பட்டடை என்ற சொல்லுக்கு, கொல்லரின் தொழிற் கூடம் என்றும் வெறொரு இடத்தில் பொருள் உரைத்துள்ளார். இது சரியான பொருள்தான்.

எ.சுப்பராயலு, பட்டடை என்ற சொல் கைவினைஞர் குழுக்களைக் குறிப்பதாகத் தம் கட்டுரையில் பதிவு செய்துள்ளார்.

பட்டடைக்குடிகள் கிராமப்புறப் பட்டடைகளில் துணிகள், உலோகச் செய்கலங்கள், அணிகலன்கள், எண்ணெய், மட்கலங்கள், சுடுமண் உருவங்கள் ஆகியன வற்றை உருவாக்கும் பணியில் ஈடுபட்டிருந்தோர் பட்டடைக் குடிகள் என்றழைக்கப்பட்டனர். இப் பட்டடைக்குடிகளால் உற்பத்தி செய்யப்பட்ட பொருட்கள் சந்தைக்கு அனுப்பப்பட்டன.

விஜயநகர ஆட்சியின் போது பட்டடைகள் வளர்ச்சி பெற்றன. இது தொழில் மயமாதலுக்கு இட்டுச் சென்றது. பட்டடைகள் பல்வேறு கிராமங்களில் அதிகரித்தன. மற்ற தொழில்களைவிட நெசவு சார்ந்த தொழில்கள் பெரிதும் வளர்ச்சி பெற்றன. பல்வேறு கிராமங்களில் புதிதாகத் தறிகள் நிறுவப்பட்டன. அத்துடன் சந்தைகளும் பேட்டைகளும் புதிதாக உருவாக்கப்பட்டன.

கி.பி.1397 ஆம் ஆண்டுக் கல்வெட்டு ஒன்று செங்கல்பட்டு மாவட்டத்தில் கிடைத்துள்ளது. இதில் ‘பதினெண் பட்டடை’ என்ற சொல்லாட்சி இடம் பெற்றுள்ளது. ஆயினும் பதினெண் பட்டடைகளின் பெயர்கள் இக்கல்வெட்டில் இடம்பெறவில்லை. ஆனால் செட்டிகள், கைக்கோளர், எண்ணெய் வாணியர் என்போர் குறிப்பிடப்பட்டுள்ளனர். மற்றொரு கல்வெட்டில் ‘பலபட்டடை’ சில்லறைப்பட்டடை, சக்கிலிப்பட்டடை (தோல் தொழிற் கூடம்), செக்குப் பட்டடை (எண்ணெய் எடுக்கும் இடம்) என்ற பெயர்கள் இடம்பெற்றுள்ளன. இவ்வாறு பட்டடை என்றழைக்கப்பட்ட தொழிற்குழுமங்கள் பல கல்வெட்டுக்களில் குறிப்பிடப்பட்டுள்ளன. இவை மேற்கொண்ட தொழிலின் அடிப்படையில் இவற்றை ஏழு உப குழுக்களாகப் பகுக்கலாம். அவையாவன:

(1) வணிகர்கள் (2) நெசவாளர்கள் (3) கைவினைஞர்கள் (4) எண்ணெய் ஆட்டுவோர் (5) ஆயர்கள் (6) பல்வேறு தொழில்புரிவோர் (7) மீனவர்.

இவ்வாறு ஒவ்வொரு குழுவிலும் அடங்கும் சமூகங்களையும் ஆசிரியர் குறிப்பிட்டுள்ளார். பல்வேறு தொழில் புரிவோர் என்ற ஆறாவது குழுவில், கைவினைப் பறையர், நாவிதர், வண்ணார், சக்கிலியர் ஆகியோரையும் இக்குழுவில் இணைத்துக் கொள்ளலாம் என்பது ஆசிரியரின் கருத்தாகும்.

இவ் ஏழு பிரிவுகளில், நெசவாளர், வணிகர், எண்ணெய் ஆட்டுவோர், கைவினைஞர்கள் ஆகியோர் நல்ல பிரதிநிதித்துவம் பெற்றிருந்தனர். இவர்களோடு ஒப்பிடுகையில் பிற சமூகத்தினர் குறைந்த அளவு பிரதி நிதித்துவமே பெற்றிருந்தனர். நெசவாளர் பிரிவில் கைக் கோளர்கள் அதிக இடத்தைப் பெற்றிருந்த நிலையில் இதே தொழில் புரிந்து வந்த சாலியர், சேனியர், கோலியர் ஆகியோர் ஒன்றிரண்டு இடங்களிலேயே பிரதிநிதித்துவம் பெற்றிருந்தனர்.

பஞ்சகம்மாளர் என்றழைக்கப்படும் கம்மாளர் பிரிவில், கொல்லர், தச்சர், தட்டார், சிற்பாசாரி, கன்னார் என்ற அய்ந்து கிளைச் சாதிகள் இருந்தன. பல குடியிருப்புகளில் சிறு குழுக்களாக இவர்கள் செயல் பட்டுள்ளனர். முற்றிலும் இவர்களே வசித்த தெருக்கள் கம்மாளத் தெரு என்று பெயர் பெற்றிருந்தன.

செட்டிகளும் வணிகர்களும் கிராமப் புறங்களில் சரக்குகளைச் சேகரித்து சந்தைகளில் விற்றனர். இவ் வகையில் உற்பத்தியாளனுக்கும் நுகர்வோருக்கும் இடையே இணைப்பாகச் செயல்பட்டனர்.

செக்கின் துணையால் எண்ணெய் எடுப்போராக வாணியர்கள் விளங்கினர். எண்ணெய் வாணியர் என்றும் இவர்கள் அழைக்கப்பட்டனர். மட்பாண்டங்களையும் சுடுமண் உருவங்களையும் செய்வோராக, குயவர்களும், கால்நடைகளைப் பராமரித்து பால், வெண்ணெய், நெய் தயாரிப்பாளராக மன்றாடிகளும் இருந்துள்ளனர். கோவிலுக்குரிய கால்நடைகளைப் பராமரித்து கோவிலில் நந்தாவிளக்கு எரிப்பதற்குத் தேவையான நெய் வழங்குவதும் மன்றாடிகளின் பணியாகும்.

பட்டடைகளின் இருப்பிடம்

பொதுவாகக் கோவிலின் அருகிலேயே பட்டடைகள் அமைந்திருந்தன. கோவிலுக்கு உரிமையான திருமடை வளாகம் பகுதியிலேயே பட்டடைக் குடிகள் வாழ்ந்தனர். சில இடங்களில் வரி செலுத்துவதில் இருந்து இவர் களுக்கு விதிவிலக்கும் அளிக்கப்பட்டது, கிராமக் குடி யிருப்புகளிலும் பட்டடைகள் செயல்பட்டன. சில ஊர்களில் கிராமக் குடியிருப்பு, கோவில்மனை என இரு இடங்களிலும் இவை செயல்பட்டன. பிராமணர் களுக்கு உரிமையான அகரப்பற்று பகுதியிலும் இவை செயல்பட்டுள்ளன.

வரிகள்

பட்டடைகள் உற்பத்தி செய்யும் பொருட்களின் மீது வரி விதிக்கப்பட்டுள்ளது. இவ்வரிகளின் பெயர்கள் உற்பத்திப் பொருட்களுடன் இணைத்தே குறிப்பிடப் பட்டுள்ளன. சான்றாக, தறிஇறை, செக்கிறை தட்டார் இறை, செட்டிஇறை என்ற பெயர்களைக் குறிப்பிடலாம்.

தறி

நெசவுக்குப் பயன்படும் தறியைக் குறிக்க சேனியத் தறி, பறைத்தறி, சாலிகர் நிலைத்தறி என்ற பெயர்கள் கல்வெட்டுகளில் இடம்பெற்றுள்ளன. இப் பெயர்கள் தறிகளை இயக்கும் சாதிகளின் பெயர்களுடன் இணைந்து பெயர் பெற்றுள்ளன. இத்தறிகளுக்கிடை யிலான வேறுபாடுகள் குறித்து எதுவும் தெரியவில்லை.

பறையர் தறி, சேனியர் தறி என்ற இரண்டு தறிகளுக்கும் ஆண்டுக்கு மூன்றுபணம் வரி விதிக்கப் பட்டுள்ளது. கைக்கோளர் தறிக்கான வரியை விட இது குறைவானதாகும். கைக்கோளத் தறிக்கு மாதத்திற்கு அரைப் பணம் என வரி விதிக்கப்பட்டுள்ளது. இதன்படி பார்த்தால் ஆண்டுக்கு ஆறுபணம் வரியாகிறது.

இவை தவிர கொம்புத் தறி, சாட்டித் தறி என்ற பெயர்களும் குறிப்பிடப்பட்டுள்ளன. இத்தறிகளுக்கும் ஆண்டுக்கு மூன்று பணம் வரி வாங்கப்பட்டுள்ளது. சாலியர் தறி நிலைத்தறி’ என்றும் அழைக்கப்பட்டுள்ளது. இத்தறிக்கு ஆண்டுக்கு ஒன்பது பணம் வரி விதிக்கப் பட்டுள்ளதால் இதில் நெய்யப்படும் துணி உயர் ரகத் துணியாக இருந்திருக்க வேண்டும்.

உரிமையாளர்கள்

தறிகள் சிலவற்றின் உரிமையாளர்களது பெயர்கள் கல்வெட்டுகளில் காணப்படுகின்றன. தறிகளைப் போன்றே செக்கு, ஊதுலை, கரும்புச்சாறு பிழியும் எந்திரம் என்பன தனி மனித உடைமைகளாகவே இருந்துள்ளன. கோவில்களும் தறிகள் சிலவற்றிற்கு உரிமையாளர்களாக இருந்துள்ளன. ‘முதலி’ என்ற பெயரிலான சாதித் தலைவர்களும் தறிகளின் உரிமையாளர்களாக இருந்துள்ளனர்.

தறிகளில் நெய்யப்பட்ட ஆடைகளை வணிகர் களுக்கு விற்பது மட்டுமின்றி நேரடியாக நுகர் வோருக்கும் விற்றுள்ளனர். நெய்த துணிகள், தனிப்பட்ட நெசவாளர்களால் மட்டுமின்றி, கூட்டாகவும் விற்கப் பட்டுள்ளன. நெசவாளர்கள் மீதான வரியும் கூட்டாக விதிக்கப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் நெசவாளர் களில் ஒரு பகுதியினர் இணைந்து ஒரு வகையான கார்ப்பரேட் அமைப்பாகச் செயல்பட்டுள்ளார்களோ என்று கருத இடமளிக்கிறது.

புடவைகள் தானியங்களுடன் பண்டமாற்று செய்யப்பட்டுள்ளன. இதனால் நெசவாளர்களுக்கும் நுகர்வோருக்கும் இடையே நேரடியான பரிமாற்றம் இருந்துள்ளது தெளிவாகிறது.

அரசின் ஆதரவு

பட்டடைகள் நிறுவ விஜயநகரப் பேரரசு ஆதரவு அளித்து வந்துள்ளது. புதிய பட்டடைகளையும் அதில் செயல்படுவோருக்கான குடியிருப்புகளையும் அமைத்தது. பட்டடைக் குடிகள் மீதான வரிகளைக் குறைத்ததுடன், சமூகச் சிறப்புரிமைகளையும் வழங்கியது. பெருமளவில் கைக்கோளர்களே புதிய குடி இருப்புகளில் நிலை பெற்றாலும் பிற பட்டடைக் குடிகளும் அனுமதிக்கப் பட்டார்கள். இவர்களுக்குச் சில வரிகளில் இருந்து விலக்களித்தார்கள். ‘சர்வ மானிய இறையிலி’ என்ற பெயரில் எல்லா வகை வரிகளிலும் இருந்து விலக்களிக்கப் பட்டு இவர்களுக்கு நிலம் வழங்கப்பட்டது. வரி விலக்கின்றி, வரிக்குறைப்பும் குறிப்பிட்ட காலம் வரை வரிவிலக்களித்தலும் நிகழ்ந்துள்ளன. சான்றாக பொன்னூர் என்ற ஊரில் கைக்கோளருக்கு ஆறு மாதங்கள் வரை வரிவிலக்கு வழங்கப்பட்டுள்ளது. ஆறுமாதங்கள் முடிந்த பின்னர் தறி ஒன்றுக்கு ஆண்டுக்கு மூன்று பணம் வரி செலுத்தியுள்ளார்கள்.

வரி எதிர்ப்பு

தொழில் புரியும் குழுக்கள் தம்மால் வரி செலுத்த இயலாதபோது வேறு ஊருக்கு இடம்பெயர்ந்துள்ளார்கள். எதிர்ப்பைத் தெரிவிக்கும் வழிமுறையாக இது அமைந்தது. இது போன்ற பதினான்கு நிகழ்வுகளை ஆசிரியர் கண்டறிந்துள்ளார்.

இடப்பெயர்ச்சியைத் தடுத்து அவர்களை மீண்டும் குடியமர்த்தும் பணியினை அரசு மேற்கொண்டது. இதற்காக வரித்தள்ளுபடி அல்லது வரிக்குறைப்பை அது மேற்கொண்டது.

சந்தைகள்

விஜயநகரப் பேரரசின் பொருளாதாரத்தில் சந்தைகள், பேட்டைகள் முக்கிய பங்கு வகித்தன. வணிகர்களும் நுகர்வோரும் உற்பத்தியாளருடன் நெருக்கமாக, இவை உதவின. இவை ஒவ்வொரு ஊர்களிலும் ஒரு குறிப்பிட்ட கிழமைகளில் நிகழ்ந்தன. இப்பேட்டைகளை விஜயநகர மன்னர்கள் நிறுவினர். புறம், பட்டினம் போன்ற நகரப்பகுதிகளில் பேட்டைகள் அமைந்தன. பேட்டைகளின் காரணமாக அவை உருவான பகுதிகள் சிறப்படைந்தன.

வாணிபப் பொருட்கள்

சந்தைகளின் பெயர்கள் கல்வெட்டுகளில் இடம் பெற்றிருந்தாலும் அங்கு சந்தைப்படுத்தப்பட்ட பொருட் களின் பெயர்கள் இடம்பெறவில்லை. ஆயினும் சில குறிப்பிட்ட ஊர்களில் இருந்த சந்தைகளில் சிறப்பாக விற்பனையான பொருட்கள் குறித்த செய்திகளை அறிய முடிகிறது. இவ்வரிசையில், பருத்தி-பஞ்சு-பருத்திநூல்-பஞ்சைப் பயன்படுத்தி தயாரிக்கப்பட்ட பொருட்கள் சிறப்பிடம் பெறுகின்றன.

இவை தவிர, மெழுகு, உலோகப் பொருட்கள், பட்டுநூல், செம்பு, இரும்பு, இரும்பால் செய்த பொருட்கள், சாயங்கள், சந்தனம், மிளகு, தேன், தானியங்கள் என்பனவும் சந்தைகளில் விற்கப்பட்டன.

ஆசிரியரின் மதிப்பீடு

தமிழகத்தில் விஜயநகர ஆட்சியின் போது தொழில் மயமாதல் என்பது பட்டடைகளின் வளர்ச்சியால் நிகழ்ந் துள்ளது என்பது ஆசிரியரின் கருத்தாகும். ஆயினும் தொழிற்கருவிகள், எந்திரங்கள் குறித்த சான்றுகள் கிடைக்கவில்லை, பாரம்பரியக் கருவிகள் நன்றாகப் பயன்படுத்தப்பட்டிருக்க வேண்டும் என்று கருதுகிறார்.

மேற்கொள்ளப்பட்ட தொழில்களில் துணிகள் தொடர்பான தொழில் செழித்து வளர்ந்திருந்தது. துணிகளை அடுத்து எண்ணெய்த் தொழில் வளர்ச்சி பெற்றிருந்தது.

உற்பத்தியாளர்களுக்கு விஜயநகரப்பேரரசும், நாயக்கர் ஆட்சியும் கோவில்களும் உதவி உள்ளன. பட்டடைகள் அமைக்க இடம் வழங்கல், நெருக்கடிக் காலங்களில் ஆதரவு தருதல் என்பன, உதவிகளுள் முக்கியமானவை. சில நேரங்களில் சமூகம் சமயம் சார்ந்த சிறப்புச் சலுகைகளைப் பெற்றார்கள். இதிலும் நெசவாளர்களே முன்னணியில் இருந்தனர்.

···

தமிழ்நாட்டின் வடமாவட்டங்களில் குறிப்பாக திருச்சி, சேலம், திருவாரூர், புதுக்கோட்டை, பழைய செங்கல்பட்டு, வடஆற்காடு, தென் ஆற்காடு, மாவட்டங்களில் கிடைத்துள்ள 250 தமிழ்க் கல்வெட்டுக் களை அடிப்படையாகக் கொண்டு இக்கட்டுரையை ஆசிரியர் எழுதியுள்ளார். இதுபோன்று தமிழ்நாட்டின் ஏனைய பகுதிகளை மையமாகக் கொண்டு ஆய்வு மேற் கொண்டால் வேளாண் சமூகமாக விளங்கிய தமிழ்ச் சமூகத்தில் நிகழ்ந்த தொழில் வளர்ச்சி குறித்த முழுமையான சித்திரம் கிடைக்கும்.

···

அடுத்த இதழில் பேராசிரியர் ப.சண்முகத்தின் சிறப்பு மலரில் இடம்பெற்றுள்ள வரலாற்றறிஞர்களின் கட்டுரைகள் சிலவற்றைக் காண்போம்.

தொடரும்...

அமராவதி

AMARAVATI

 (வரலாறு, தொல்லியல், கல்வெட்டு, நாணயவியல் குறித்த கட்டுரைகள்)

பதிப்பாசிரியர்கள்:

ந.அதியமான், எஸ்.ராஜவேலு, ஜி.செல்வகுமார்

Pin It

gowri 350

பாசிசத்தின் கோரமுகம் மீண்டும் வெளிப்பட்டிருக்கிறது. பெங்களூருவில் பத்திரிகையாளரும் மாற்றுச் சிந்தனையாளருமான கவுரி லங்கேஷ் கொடூரமாகச் சுட்டுக்கொல்லப்பட்டார். இவர் பிரபல கன்னட எழுத்தாளரும் முற்போக்கு இயக்கத்தைச் சேர்ந்த நாடகக் கலைஞருமான பி.லங்கேஷின் மகள். லங்கேஷின் நாடகங்கள் மக்களைத் தட்டி எழுப்பும் வல்லமை பெற்றவை. அவர் நடத்திய இதழ் லங்கேஷ். சாதி, சமய வேற்றுமை போக்கவும், மூடநம்பிக்கை ஒழிக்கவும், பத்திரிக்கை உலகில் சமூகச் சீரழிவுகளையும், அதிகார அத்துமீறல்களையும் துணிவுடன் வெளிப்படுத்தினார். அவர் எப்போதும் சொல்வது “பத்திரிக்கை ஓர் எதிர்கட்சியாகச் செயல்பட வேண்டும்” என்பது.

கவுரி தன் தந்தையின் நிழலில் வளர்ந்தவர் அல்ல. கருத்தியலில் தந்தையால் ஊக்கம் பெற்ற அவர் செயல்பாடுகளில் தன் சொந்தக் காலில் நின்று, போராடி, முன்னிலை பெற்றார். டைம்ஸ் ஆப் இந்தியா, சண்டே இதழ்களில் பணியாற்றிய கவுரி தன் தந்தை மறைவிற்குப் பின் லங்கேஷ் இதழின் ஆசிரியப் பொறுப்பேற்றார்.

வாராவாரம் லங்கேஷ் பத்திரிக்கையின் வரவு ஆள்பவர்களை அச்சம் கொள்ளவைத்தது. குறிப்பாக இந்துத்துவ சக்திகளுக்கு எதிராகப் போராடினார். இதனால் ஆர்.எஸ்.எஸ், பா.ஜ.க. வின் பல வழக்குகளைச் சந்தித்தார். 2008 ஆம் ஆண்டு தார்வார் தொகுதி பா.ஜ.க. எம்.பி பிரகலாத் ஜோஷி, பா.ஜ.க.வைச் சேர்ந்த உமேஷ் டூஷி ஆகியோரைப் பற்றி எழுதியதற்காக அவதூறு வழக்குக்கு ஆளாக்கப்பட்டார். இது குறித்து எழுதிய நிருபர் முதல் குற்றவாளி, ஆசிரியர் கவுரி இரண்டாம் குற்றவாளி. இவ்வழக்கில் கடந்த சில மாதத்திற்கு முன்பு தீர்ப்பு வெளியானது. நிருபர் விடுவிக்கப்பட்டு, கவுரிக்கு ஆறு மாதச் சிறையும், பத்தாயிரம் அபராதமும் விதிக்கப்பட்டது.

ஹ§ப்ளி நீதிமன்றத்தில் பின்னர் பிணையில் வெளிவந்தார். இது பற்றி பின்னர் கவுரி பேசுகையில், “என்னை சிறையில் தள்ளலாம் என்று பலரும் மனப்பால் குடித்துக் கொண்டிருக் கிறார்கள். அவர்களை நான் ஏமாற்றிவிட்டேன். ஹ§ப்ளி நீதிபதி அவர்கள் தனக்கு இருக்கும் அனைத்து அறிவையும் பயன்படுத்தி நான் குற்றவாளி எனக் கண்டறிந்துள்ளார். இது எனக்குத் தற்காலிகமான பின்னடைவுதான். நான் உயர் நீதிமன்றத்தில் சந்திப்பேன்” என்றார்.

இதுபோல் பல வழக்குகள் சமூக ஊடகங்களில் எதிர்ப்புகள். மிரட்டல்கள். கடைசி கடைசியாக “நரேந்திர தபோல்கர், கோவின்ந்த் பன்சாரே, எம்.எம்.கல்புர்கி, போல் நீயும் கொல்லப்படுவாய்” எனப் பகிரங்கக் கொலை மிரட்டல்கள். கவுரி லங்கேஷ் எல்லாவற்றையும் தன் துணிவால், கருத்தியல் தெளிவால் தீரத்துடன் எதிர் கொண்டார். ஜனநாயகத்தின் மீதும், சமூக மாற்றத்தின் மீதும் வேட்கையுடன் செயல்பட்டார்.

“இந்திய நாட்டின் ஒரு குடிமகளாக நான் பாஜக வின் பாசிச, மதவாத கொள்கைகளைக் கடுமையாக எதிர்க்கிறேன். ஹிந்து தர்மா என்ற பெயரில் சமூகத்தில் திணிக்கப்படும் சிந்தனைகளையும் நான் கடுமையாக எதிர்க்கிறேன். நான் ஹிந்து தர்மம் முன்னிறுத்தும் சாதியப் பாகுபாடுகளை எதிர்க் கிறேன். நான் எல்.கே. அத்வானியின் ரத யாத்திரையை எதிர்த்தேன். நரேந்திர மோடி ஆட்சியில் குஜராத்தில் நடந்த இனப் படு கொலையை எதிர்த்தேன். நமது அரசியல் அமைப்பு சாசனம் மதச் சார்ப்பற்றவளாக இரு என்று எனக்கு போதிக்கிறது. அதன்படியே நடக்கிறேன்.

மதவாதிகளுக்கு எதிராகப் போராடுவது எனக்கு வழங்கப்பட்டிருக்கும் உரிமை. சாதிக் கொடுமைகளுக்கு எதிராகப் போராடிய சமூக அநீதிகளுக்கு எதிராகப் போராடிய சீர்திருத்தவாதி பசவாவைத் தந்த கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்தவள் நான். எனவே இப்படித்தான் இருப்பேன்” என ஒரு பேட்டியில் மிகத்தெளிவாக தன்னை அறிவித்துக்கொண்டார்.

காவிரிப் பிரச்சினையின் போது கர்நாடகத்தில் தாக்கப்பட்ட தமிழர்களுக்கு ஆதரவாகவும், மாதொரு பாகன் நாவலுக்காகப் பெருமாள் முருகன் மீதான வன்முறைக்கு எதிராகவும் குரல் கொடுத்தவர் லங்கேஷ் என்பது குறிப்பிடத்தக்கது.

மனுதர்ம எதிர்ப்பு, சாதிய எதிர்ப்பு, மூடநம்பிக்கை ஒழிப்பு, உலகமய எதிர்ப்பு, பகுத்தறிவு பரப்பல் என்பதையும் எல்லாவித அதிகார மையங்களை குறி வைப்பதையும் தன் வாழ்நாள் பணியாகக் கொண்டார். எனவேதான் ரோஹித் வெமூலாவையும், கன்னையா குமாரையும், ஜிக்னேஷ் மோவானியையும், சந்திர சேகரையும் தன் பிள்ளைகளாக அவரால் உணரமுடிந்தது.

தன் கண்முன் நிகழ்ந்த அனைத்து அரசியல், சமூகப் பண்பாட்டு நிகழ்வுகளிலும் கருத்துச் சார்புடன் களம் கண்டார் என்பதே கவுரியின் அடையாளம்.

தோட்டாக்கள் உன்னிடம் (கோழையே)

என்னிடம் அழியாத வார்த்தைகள்

எதற்கும் அஞ்சமாட்டேன்

நான் கவுரி லங்கேஷ்!

என மேடைகளில் முழங்கினார் கவுரி. காவு கொண்டு விட்டது காவிக்கும்பல். கவுரி லங்கேஷின் வார்த்தைகள் நிஜத்தோட்டாக்களாக மாறித்தான் ஆக வேண்டும்!

Pin It

இரண்டு மூன்று ஆண்டுகளாக எனக்கு வரும் மின்னஞ்சல்களின் எண்ணிக்கை சிறுகச்சிறுகக் குறைந்து இப்போது ஒன்று அல்லது இரண்டு எனத் தேங்கிவிட்டது. அவை கூட நண்பர்களிடமிருந்து வந்தவையாக அல்லாமல் ஏதோ நிறுவனங்களிடமிருந்து வந்த நினைவூட்டு மடல் களாகவே பல சமயங்களில் இருக்கும். சில நாட்களில் ஒன்று கூட வந்திருக்காது. மின்சாரமில்லாத நேரத்தில் அறையைத் திறந்துபார்த்ததுபோல இருக்கும். புதிய மடல்கள் எதுவுமற்ற அஞ்சல் பெட்டியின் வெறுமை முகத்தில் அறையும். அக்கணம் கவியும் தனிமை யுணர்விலிருந்து விடுபடுவது அவ்வளவு எளிதல்ல.

எனக்குத் தனிமை ஒன்றும் புதிய விஷயமல்ல. காலம் காலமாக என்னைத் தொடர்ந்துவரும் தனிமையின் இறுக்கத்திலிருந்து தப்பிக்க, இளமையில் எனக்கொரு எண்ணம் உதித்தது. தனிமையை ஒரு குழந்தைபோல ஆக்கி, அதை மடியிலிட்டு கொஞ்சத் தொடங்கினேன். என்னை இறுக்க நினைத்த தனிமையை நானே விரும்பித் தழுவிக்கொண்டேன். திகைத்துப்போன தனிமை அன்றுமுதல் என்னுடன் தோழமையுடன் ஒட்டிக் கொண்டது. என் உளைச்சல்களிலிருந்து விடுபட்டெழ எழுத்தென்னும் நிழலடிக்கு என்னை அதுதான் மௌன மாக விரல்பற்றி அழைத்துவந்து சேர்த்தது. இலக்கியம் என்னும் திரையின் வழியாகக் காணக்கூடிய விரிந்த வானத்தையும் கடல்களையும் மலைகளையும் காடு களையும் நதிகளையும் மனிதர்களையும் வாழ்க்கையையும் பார்க்க வைத்தது. ஒரு திருவிழாக் கூட்டத்தில் சுதந்திரமாகச் சுற்றித் திரியும் சிறுவனைப்போல என்னை அலையவைத்து மகிழ்ச்சியில் திளைக்க வைத்தது.

காலடியில் விழும் நிழலைப்போல தனிமை எனக்களித்த மகிழ்ச்சியின் அடித்தளத்தில் ஒட்டி யிருக்கும் துயரத்தை நான் மட்டுமே அறிவேன். அந்தத் துயரத்தை வெல்வதற்காகவே மீண்டும் மீண்டும் தனிமையை நாடி ஓடுகிறேன். அதன் இழைகளைப் பிரித்தெடுத்து எனக்குத் தேவையான மகிழ்ச்சியென்னும் ஆடையை விதவிதமாக நெய்துகொள்ள முயற்சி செய் கிறேன். மூச்சுமுட்ட நிற்க நேரும் ஒருசில கணங்களில் அந்தத் தனிமை நூறு கைகளுடனும் நூறு ஆயுதங் களோடும் விஸ்வரூபம் கொண்டு வழிமறித்து ஆர்ப்பரிப் பதைக் கண்டு திகைத்துவிடுகிறேன். ஒரு மோகினியென வழிகாட்டி அழைத்து வந்தவளே என்னை வீழ்த்திவிடக் கூடுமோ என்று குழம்புகிறேன். 

என்னுடைய மனக்குறையை உள்ளூர உணர்ந்து கொண்டவனைப்போல ஒருநாள் திடுமென என்னுடைய இளம்பருவத்துத் தோழன் பழனி ஒரு மின்னஞ்சலை அனுப்பியிருந்தான். அது ஓர் அதிசயமான நாள். அஞ்சல் கூட அல்ல. அது ஒரு படம் மட்டுமே. தன் கைப் பேசியின் வழியாக அவன் எடுத்த ஒரு பூசணிப்பூவின் படம். மார்கழி மாதம் தொடங்கிய நாள் அது. அழகாக மலர்ந்த அந்தப் பூவின் மஞ்சள் நிறத்தைப் பார்த்ததுமே என் மனமும் சட்டென்று மலர்ந்துவிட்டது. விசித்திரமான ஒரு துள்ளல். விலாப்புறத்தில் இறக்கைகள் முளைத்து வானை நோக்கித் தாவிப் பறக்கத் துடிப்பதுபோல ஓர் எழுச்சி. மிக அற்புதமான பொற்கணம் அது. ஒவ்வொரு நாளத்திலும் புதுவேகத்துடன் ரத்தம் பாய்ந்து செல்லும் அதிர்வை ஒவ்வொரு கணமும் உணர்ந்தபடியே இருந்தேன். நான் விழுந்துவிடாமல் இருக்கும் வகையில் என்னைப் பற்றி மீட்டெடுத்த ஆதரவுக் கரமென அப்பூவை நினைத்துக்கொண்டேன்.  அக்கணத்தில் என் அறை அற்புதமான ஓர் உலகெனத் தோன்றியது. என் மேசை, கதவு, ஜன்னல் திரைச்சீலை, பூந்தொட்டி எல்லாமே அழகு பொருந்தியவையாக மாறிவிட்டன. அந்தப் பூவைக் கண்டதால் பொங்கிய ஆனந்தம் மனத்தில் சூழ்ந்திருந்த வெறுமையை எங்கோ விரட்டி விட்டது. அவனை உடனடியாக அழைத்து நன்றி சொல்லவேண்டும் எனத் தோன்றினாலும் நான் அவனை அழைக்கவில்லை. ஒரு பதில் மடல் மட்டும் அனுப்பியிருந்தேன்.

யாரோ அவன் மனத்தில் புகுந்து தூண்டிவிட்டது போல மறுநாளிலும் அவனிடமிருந்து வேறு சில பூக்களின் படங்கள் வந்தன. வெள்ளை, மஞ்சள், நீலம், சிவப்பு என வெவ்வேறு நிறங்களில் செம்பருத்திப்பூக்களின் படங்கள். அல்லிவட்டமும் புள்ளிவட்டமும் கூட துல்லியமாகத் தெரியும் வகையில் நேர்த்தியாக இருந்தன. காலை நேரத்தில் மின்னஞ்சல் பெட்டியைத் திறக்கும் தருணத்தை அந்தப் படங்கள் அற்புதமானவையாக மாற்றிவிட்ட அதிசயத்தை என்னால் உணரமுடிந்தது. அவனை அன்றும் நான் அழைக்கவில்லை. பதில் மட்டுமே விடுத்திருந்தேன்.

அடுத்த நாள் அவனிடமிருந்து பன்னீர் ரோஜாக்களின் படங்கள் வந்து சேர்ந்தன. அவற்றின் இதழ்களில் பனித்துளிகள் தேங்கி நிற்பதைப் பார்க்கப் பார்க்க மகிழ்ச்சியாக இருந்தது. அன்றுதான் நான் அவனை அழைத்து தினம் வரும் பூக்களுக்காக முதன்முறையாக நன்றி சொன்னேன். அயல்நாட்டில் படிக்கும் மகனுடன் முகம்பார்த்தபடி தினமும் உரையாடும் வகையில் ஒரு புதிய கைப்பேசியை வாங்கியிருப்பதாகவும் அதில் பொருத்தப்பட்டிருக்கும் கேமிரா வழியாக மார்கழி நேரத்து அதிகாலை நடைப்பயிற்சியின்போது அப்படங்களை எடுத்ததாகச் சொன்னான். “உனக்கு புடிக்கும்ன்னு திடீர்னு தோணிச்சிடா, அதுக்கப்புறம் யோசிக்கவே இல்ல, உடனே அனுப்பி வச்சிட்டன்” என்றான். என் காலை நேரத்தை உற்சாகமாக மாற்றும் அப்படங்களின் அற்புத ஆற்றலைக் குறிப்பிட்டு வெகுநேரம் பேசினேன். 

அதைத் தொடர்ந்து அவனிடமிருந்து ஒவ்வொரு நாளும் படங்கள் வரத் தொடங்கின. பூவரசம்பூ, மகிழம்பூ, ஊமத்தம்பூ, பரங்கிப்பூ, ரோஜாப்பூ, சாமந்திப்பூ, போகன் வில்லா என ஒரு பெரிய வரிசை. பசு, கன்று, எருமை, ஆடு, காகம், குயில், மைனா, புறா, அணில், சேவல் என மற்றொரு வரிசை. தும்பைச்செடி, தக்காளிச்செடி, முடக்கத்தான் கீரைக்கொடி, சூரியோதயம், பனை மரங்கள், பாளம்பாளமாக வெடித்துக் கிடக்கும் ஏரியின் தரை, சருகுகள், வாசல்களை அலங்கரித்திருக்கும் வண்ணக்கோலங்கள் என பிறிதொரு வரிசை. எங்கோ இருக்கும் என் கிராமத்தை, வேலிகளை, செடிகளை, கொடிகளை, சாலைகளை, தெருக்களை அவை நினைவூட்டிப் பரவசத்தைப் படரவைத்தன.

ஒரு மாதத்துக்கும் மேல் தொடர்ச்சியாக வந்து கொண்டிருந்த படங்கள் தெம்பூட்டும் உற்சாக ஊற்று களாக இருந்தன. ஒவ்வொரு நாளும் மின்னஞ்சல் பெட்டியைத் திறக்கும்போது ஒருவித எதிர்பார்ப்பில் என் மூச்சுத் துடிப்பு அதிகரிக்கத் தொடங்கியது. அவன் அனுப்பி வைத்திருக்கும் படம் கணினித்திரையில் விரிந்து படரும் கணத்தில் மனம் பூரித்துவிடும். சட்டென ஒரு சாரல் வீசியதுபோல உடலும் மனமும் குளிர்ந்துபோகும். பல கணங்கள் அப்படத்தை வைத்த கண்ணை எடுக்க முடியாமல் பார்த்தபடியே இருப்பேன். அதன் வழியாக ஊற்றெடுக்கும் எண்ணங்களை ஒருபக்கம் மனம் பின் தொடர்ந்தபடியே இருக்கும். மறுபக்கம் என் தினசரி வேலைகளில் மூழ்கத் தொடங்கிவிடுவேன். எக்கணமும் விரித்தெடுத்துப் பார்க்கும் வகையில் அப்படத்தை மூடாமல் சுருட்டி கணிப்பொறியில் விளிம்பிலேயே வைத்திருப்பேன். தேவைப்படும் கணத்தில் அதைத் தொட்டால் போதும், உடனே அது மலர்ந்து விரிந்து விடும்.

இன்றும் ஒரு படம் வந்திருந்தது. ஒரே ஒரு துண்டு வெண்மேகம். வெட்டவெளியான நீல வானத்தில் வழி தெரியாத குழந்தைபோல எங்கோ போய்க்கொண்டே இருக்கும் மேகம். மனம் போன போக்கில் எதையோ பாடியபடி செல்வதுபோலத் தோன்றியது. எங்கும் ஒலிக்காத அந்த இசையை என் ஆழ்மனம் உள்வாங்கி ஒலித்த விதம் ஆச்சரியமாக இருந்தது. அதில் திளைக்கத் தொடங்கி உறைந்திருந்த நிலையில் தற்செயலாக மனத்தில் காளிதாசனின் பெயர் எழுந்தது. அதைத் தொடர்ந்து மேகசந்தோஷத்தின் கவிதை வரிகள் மிதக்கத் தொடங்கின. அந்த மேகம் யாரோ ஒருவருடைய தூதுச் செய்தியை எடுத்துச் செல்கிறது என நினைத்துக் கொள்வது மகிழ்ச்சியாக இருந்தது. மீண்டும் மீண்டும் அந்த மேகத்தையே கண்விலக்காமல் பார்த்தபடி இருந்தேன். தூதுச் செய்தியை அது மனத்திலேயே எண்ணங்களாக ஏந்திச் செல்கிறதா அல்லது எழுதி யளிக்கப்பட்ட மடலை தன் இதயத்தோடு ஒட்டி வைத்துக்கொண்டு பறந்து செல்கிறதா என்று கேட்கத் தோன்றியது. இப்படி ஒரு தனிமையில் கடந்துபோகும் துண்டு மேகத்தின் காட்சிதான் காளிதாசனுக்கு அக் காவியத்தை எழுதத் தூண்டிய ஊற்றாக இருக்கக்கூடும் என நினைத்துக்கொண்டேன்.

மாறிமாறி எழுந்த பரவசமான எண்ண அலைகள் ஓய்ந்த பொழுதில் அந்த மேகத்தை ஓர் இளைஞனாக, இளம்பெண்ணாக, முதியவராக உருமாற்றி விதவிதமான கற்பனைகளில் மூழ்கி அசைபோடத் தொடங்கினேன். எதைத் தேடி நகர்கிறது இந்தப் பயணம்? ஞானத்தையா? அடைக்கலத்தையா? அனுபவத்தையா?

படத்தின் மீது பதிந்த பார்வையை எடுக்கவே முடியவில்லை. ஒருகணம் அதை இறகுவிரித்துப் பறந்து செல்லும் ஒரு பறவையாக உருவகிக்கத் தொடங்கினேன். கூட்டத்தைவிட்டு விலகிய பறவை என்ற சொல் எழுந்ததுமே Ôகுடம்பை தனித்தொழிய புள்பறந்தற்றே உடம்பொடு உயிரிடை நட்புÕ என்னும் திருக்குறளின் வரிகள் நினைவில் விரிந்தன.

எந்தக் கூட்டைவிட்டுச் செல்கிறது இந்த வெண்மேகப்பறவை? இன்னொரு கூடு அமையும் வரைக்கும் இப்படியே பறந்தலைந்தபடியே இருப்பதுதான் இதற்கு விதிக்கப்பட்ட வாழ்க்கையா? ஒருகணம் அம்மேகத்தோடு சேர்ந்து நானும் பறப்பது போல கற்பனை செய்துகொண்டேன். அது கடந்து செல்லும் தோப்புகளையும் நதிகளையும் நகரங்களையும் குன்றுகளையும் அதன் இறக்கையோடு ஒட்டியபடி நானும் கடந்துசென்றேன். புக்கில் அமைந்தின்று கொல்லோ உடம்பினுள் துச்சில் இருந்த உயிர்க்கு என்னும் மற்றொரு குறளும் நினைவில் படரத் தொடங்கியபோது என் உற்சாகம் சட்டென வடியத் தொடங்கியது. அந்த மேகம் உற்சாகத்தில் நீந்தும் உல்லாசப் பறவையல்ல, வாழ இடம்தேடும் பறவை என்று தோன்றியதும் அதன்மீது ஒரு பரிவு சுரந்தது.  அனைத்து எண்ணங்களும் விலகியோட, ஆதரவின்றி நின்றிருக்கும் அதன் தனிமை என்னைத் தாக்கியது. அது சுமந்துசெல்லும் துயரத்தையும் வலியையும் கூட என்னால் உணரமுடிந்தது. அந்தத் தனிமைப் புள்ளியை நான் தொட்டுவிடக்கூடாது என்பதற்காகத்தான் மனம் இத்தனை நூறு சொற்களை என்மீது குவிக்கிறதோ என்று தோன்றியது.

படத்திலிருந்து விழிகளை விலக்கவே முடிய வில்லை. அதன் பிசிறுகள் அடர்ந்த விளிம்புகள் ஆடை குலைந்து தடுமாறி நடந்துபோகும் பித்தனென அதைக் கருத வைத்தது. அதன் மொழி புரியவில்லை. அதன் சைகையும் புரியவில்லை. அது எதையோ சொல்கிறது. எதையோ முன்வைக்கிறது. அது எது என்னும் கேள்வி முகத்தில் அறைவதுபோல இருந்தது.

அதற்குப் பிறகு அந்தப் படத்தை என்னால் தொடர்ந்து பார்க்கமுடியவில்லை. மூடிவைத்துவிட்டு எழுந்தேன். ஆனாலும் என் முன்னால் விஸ்வரூபம் கொண்டு அது மீண்டும் மீண்டும் நிற்பதுபோலவே இருந்தது. விலகிச் செல்லச் செல்ல இன்னும் நெருக்கம் கொண்டு வந்து நின்றது. என்னைத் தொட்டு இழுத்துச் செல்ல வந்ததைப்போல அருகில் நிற்பதை உணர முடிந்தது. அந்தத் துயரம், வலி. முனகல், தவிப்பு அனைத்தும் என்னை வந்தடைந்தபடி இருந்தன.

அதன் தனிமையை யாருமே உணரப் போவ தில்லை. ஆற்றங்கரையில் விரிப்பின் மீது கிடத்தப்பட்ட ஒரு குழந்தைபோல அது வானத்தைப் பார்த்தபடியே கிடக்கிறது. யாரும் நிமிர்ந்துகூடப் பார்க்காத வெட்ட வெளியில் பாதைகளே அற்ற திசையில் அது அப்படியே இருக்கவேண்டியதுதான். அழுதாலும் புரண்டாலும் தொட்டெடுக்க யாருமே இல்லாத கொடுமைமிக்க தனிமை. இரக்கமுடன் நெருங்கி நிற்க யாருமற்ற உலகம். முழுமையான தனிமை. திசைமுழுதும் பரவி விரிந்த வானத்தின் காலடியில் தன்னையே அர்ப்பணித்தபடி காத்திருக்கிறது அது. அல்லது சென்றுகொண்டே இருக்கிறது. எந்த விசை அதற்கு நம்பிக்கையூட்டு கிறதோ? இரக்கத்தின் ஈரம் என்று அதன்மீது படியுமோ?

ஒரு வேலையில் பொருத்திக்கொள்ள வேண்டிய நெருக்கடியில் நான் முதன்முதலாக வீட்டைவிட்டுக் கிளம்பி முப்பத்தைந்து ஆண்டுகள் கடந்துவிட்டன. அந்த முதல் பயணத்தின் தூக்கமற்ற தனிமை சூழ்ந்த இரவை என்னால் ஒருபோதும் மறக்கமுடியாது. ஜன்னலுக்கு வெளியே தெரியும் வானத்தையே பார்த்தபடி விழித்திருந்தேன். கருமையிலிருந்து நீலம் வரைக்கும் அதன் நிறம் மாறும் ஒவ்வொரு கணமும் அதன் மீதே பார்வையைப் பதித்திருந்தேன். ஏதோ ஒரு கணத்தில் அதற்கும் எனக்குமிடையில் இசைவான வகையில் ஒரு நட்பு உருவாகிவிட்டது. எனக்கும் அதற்குமிடையில் நிகழ்ந்த நீண்ட உரையாடல் பொழுது கழிவதையே உணரவிடாமல் செய்துவிட்டது. உன்னை நோக்கியே வந்துகொண்டிருக்கிறேன் என அதனிடம் மனமாரச் சொல்லத் தொடங்கிவிட்டேன்.

என்னைக் கைவிட்டுவிடாதே என்று உருக்கமுடன் கோரிக்கை வரிகளை முன்வைத்தபடி இருந்தது என் மனம். படிப்படியாக மனம் இளகத் தொடங்கிய தருணத்தில் பாரம் விலகி அமைதி பிறப்பதை உணர்ந்தேன். விடிந்த போது இன்னும் சூரியன் உதித்து வராத வானத்தில் ஒரு ஒற்றை மேகம் தவழ்ந்து செல்வதைப் பார்த்தேன். எவ்வளவு அழகான மேகம். எவ்வளவு அழகான தூய வெண்மை. ஒரு கணம் அது நான் நான் என மனம் கூவியது. ஓயாத பயணமே உன் வழி என அது என்னிடம் சொல்லாமல் சொல்வதை அறிந்துகொண்டேன். எனக்கான ஞானத்தை, வழியை அக்கணம் வழங்கிய தாகவே உணர்ந்தபோது மனம் சிலிர்த்தடங்கியது.

அறையை விட்டு வேகமாக வெளியேறி, எங்கள் அலுவலகத்துக்கு அருகிலிருந்த பேருந்து நிறுத்தத்துக்கு வந்து அங்கிருந்த இருக்கையில் அமர்ந்துகொண்டேன். எங்கெங்கும் மனிதர்கள். வாகனங்கள். இரைச்சல்கள்.  பத்துப் பதினைந்து நிமிடங்கள் சுற்றிச்சுற்றி வேடிக்கை பார்த்தபடியே பொழுதை ஓட்டினேன். ஒரு கணம் சற்றே ஆறுதலாக இருந்தது. எல்லாமே சிறிது நேரம் தான். உண்மையில் அந்த இரைச்சல்களில் மனம் பதியவே இல்லை என்பதை தாமதமாகவே உணர்ந்தேன். பெருங்கூட்டத்திலும் தனியன் நீ என்று யாரோ சொல்வதுபோல இருந்தது. விலகியோடிய பாசி மெல்ல மெல்லப் பரவி குளம்முழுதும் விரிவதுபோல தனிமையின் சித்திரம் மறுபடியும் கண்முன்னால் விரிந்தது.

அந்த மேகத்தின் வெண்மையை என் அகக் கண்களால் துல்லியமாகப் பார்க்க முடிந்தது. என்னையே உருக்கி வார்த்ததுபோல இருந்தது அதன் கோலம். மெதுவாக நடந்து அலுவலகத்துக்குத் திரும்பி கணிப்பொறியைத் தொட்டேன். சட்டென திரை விழித்தெழுந்து படத்தை ஒளிரவைத்தது. ஒரு கணம் கண்ணாடியின் முன்னால் நின்று என்னை நானே பார்த்துக்கொள்வதுபோல இருந்தது.

பரபரப்பினால் நேரக்கூடுவது ஒன்றுமில்லை என்பதை மனம் உணர்ந்தே இருந்தது. அங்கிருந்து தப்பி ஓடுவதன் மூலம் எந்தப் பிரச்சினையும் முடிவுறப் போவதில்லை. எங்கு ஓடி நின்றாலும் அது என்னை விடப்போவதில்லை. என்ன செய்வது என்னும் கேள்வியோடு மீண்டும் மேகத்தின் மீதே பார்வையைப் படரவிட்டேன். சட்டென்று ஒரு திட்டம் தோன்றியது. படத்தை மறுபடியும் திரைவிளிம்புக்குத் தள்ளிவிட்டு வெண்திரையில் ஒவ்வொரு எழுத்தாக தட்டச்சு செய்யத் தொடங்கினேன். எழுத்தே எனக்கு விதிக்கப் பட்ட வழி. அதுவன்றி நான் நடந்து செல்ல வேறு வழியில்லை. கரிய எழுத்துகள் வெண்திரையில் கூடியிணைந்து சொற்கூட்டம் பெருகியது. மனம் உருகி அருவியெனப் பொங்கிய சொற்களனைத்தும் திரைக்குள் ஓடிப் பாய்ந்தபடி இருந்தது. எனக்குள் இவ்வளவு சொற்களா என்று திகைப்பாக இருந்தது.

எழுதி முடித்த பின்னரே மெல்ல மெல்ல மனம் அமைதி நிலைக்குத் திரும்பியது. தனிமையின் சாபத்தை தனிமையின் வரத்தால் கடந்து மறுகரைக்கு எப்படியோ வந்து சேர்ந்துவிட்டேன். களைப்பும் பரவசமும் இணைந்த மனநிலையில் மேகத்தை அனுப்பிய பழனியை நினைத்துக்கொண்டேன்.

நான் இருக்கிறேன். இந்த வாழ்க்கைக்கு அது போதும். என்னுடன் மோதும் தனிமையும் வேதனையும் ஒருவகையில் என்னைக் கலைத்து விளையாடும் கருணைத்தெய்வங்கள். அடித்தும் அணைத்தும் என்னை ஏந்திக்கொள்ளும்  அத்தெய்வங்களின் காலடியில் ஒரு மேகமென நான் தவழ்ந்தபடி இருப்பேன்.

Pin It

மேலை நாட்டினர் ஆரம்ப காலத்தில் தமிழ்க் கடற்கரைப் பிரதேசங்களில் தமிழ்நாட்டின் பருவ கால மற்றும் சீதோஷ்ண நிலை குறித்து அறியாத பெழுது நோய்களைக் குணமாக்குவதில் பல இடர்ப்பாடுகளை எதிர்கொண்டனர்.  ஏனெனில் ஐரோப்பாவில் அவர்களால் அறியப்பட்ட நோய் களையும் தமிழ்நாட்டில் காணப்படும் நோய் களையும் ஒத்துநோக்கிய பொழுது, பெருமளவில் குழப்பங்களுக்கு உள்ளானார்கள்.  இதனால் ஐரோப்பிய மருத்துவர்கள் தமிழ் மருத்துவ ஆய்வு களை, நூல்களைப் படித்து, அதிலுள்ள உண்மை களை அறிந்துகொள்ள தமிழ் மொழியைக்

கற்றுக் கொண்டனர்.  ஏனெனில் மொழி அறிவு இன்றி மருத்துவக் கூறுகளை மொழிபெயர்ப் பாளர்கள் மூலம் அறிந்து கொள்வது, அவ்வளவு சிறப்பாக அமையவில்லை.  ஆனாலும் சில நேரங் களில் அவர்கள் துணையும் தேவைப்பட்டது.  தமிழ் மொழி அறிவு பெற்ற பிறகு, அவர்கட்குத் தேவையான மருத்துவச் செய்திகளைத் தங்களுடைய தாய் மொழியில் விரிவாக மொழிபெயர்த்துத் தங்கள் நாடுகளுக்கு அனுப்பினர்.  சில சமயம் தமிழ் மருத்துவ ஓலைச்சுவடிகளையே விலை கொடுத்து வாங்கி, இம்மருத்துவக் களஞ்சியங்களில் உள்ள, மேம்பட்ட மருத்துவ அறிவு, பல தலைமுறை யினருக்கு உதவக்கூடும் என எண்ணி, தங்கள் நாடு களுக்கு அனுப்பி வைத்தனர்.  இப்படியாகவே தமிழ் மருத்துவம் ஐரோப்பாவைச் சென்றடைந்தது.

ஐரோப்பாவில் 1480-இல் 11-ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்ட “The Salerno Regimen of Health” என்ற மருத்துவ நூல், பின்பற்றப்பட்டு வந்தது.  இது நோயாளிக்கு வேண்டிய உணவை மட்டும் கூறி மருத்துவக் குணப்பாட்டைக் குறித்து ஏதும் விளக்க வில்லை.  இதற்கு மாறாக தமிழ்நாட்டில் சித்தா, ஆயுர்வேத மருத்துவ நூல்களில் நூற்றுக்கணக்கான மருத்துவக் குணப்பாடும் மருந்தும் குறிப்பிடப் பட்டிருந்தன.  ஆகவே ஐரோப்பியர்கள் இவ்விரு மருத்துவத் துறைகளைப் பிரித்துப் பாராது மருந்து களைக் குறித்து ஆய்வுகள் நடத்தி, நூல்களில் கூறப்பட்டவைகளைச் சரிபார்த்துக் கொண்டனர்.

மூன்று சித்த மருத்துவ நூல்கள் எழுதிய வீரமாமுனிவர்:

மருத்துவ நூல்கள் மற்றும் அறிவியல் நூல்கள் எழுதும் பணியை, சீர்திருத்தக் கிருத்தவர்களே பெருமளவில் தமிழகத்தில் எடுத்துக்கொண்ட நிலையில் கத்தோலிக்கப் பாதிரியாரான பெஸ்கி என்ற வீரமாமுனிவரும் இதில் நாட்டம் கொண்டார்.  இதற்கு முன் ஜெயசூட் பிரிவினர் தங்களுக்காக மட்டும் 1652-இல் “Seminario de Santa Cruz dos Milagres” என்ற ஐரோப்பிய மருத்துவ நூலைத் தமிழில் வடித்திருந்தனர்.

வீரமாமுனிவர் (1680-1746) 1711-இல் கிருத்து வத்தைப் பரப்ப தமிழகத்திற்கு வந்து, தஞ்சாவூரில் தமிழைச் சிறப்பாகக் கற்றறிந்தார்.  இவர் பல தமிழ் நூல்களை எழுதினாலும் மருத்துவம் குறித்த நூல்கள் மூன்று எழுதினார்.  தமிழகத்தில் அன்றைய நிலையில் செய்யுள் நடையிலேயே நூல்கள் இருந்ததால் வீரமாமுனிவரும் தன் நூல்களையும் செய்யுள் நடையிலேயே எழுதினார்.  இவர் எழுதிய நசகாண்டம் நூறு பாடல்களைக் கொண்டது.  அவை நான்கு வரி களில் வெண்பாப் பாடல்களாக எழுதப்பட்டுள்ளன.  இச்சுவடிநூல் நூல் வடிவமாக 1874-இல் நாராயண சாமி நாடார் என்பவரால் வெளியிடப்பட்டுள்ளது.  இந்நூலில் முப்பது மருந்துகள் கூறப்பட்டுள்ளன.  இதில் பரங்கிப்பட்டை, சித்தரமூலம், பாதரசம் மற்றும் உலோகங்களின் பயன்பாடுகளுடன் தோல் நோய், வயிற்றுப்புண், செரிமானக் குறைவு, இரத்த சோகை, பெண்களுக்கான வெள்ளைப்படுதல், மூலம், நெஞ்சக நோய்கள் ஆகியவைகளை எவ்வாறு குணமாக்குவது? என்பதற்கான பாடல்களும் உள்ளன.  வீரமாமுனிவரின் இரண்டாவது நூல் ரண வாகடம்.  இது வாகடத்திரட்டு என்று இரண்டு பாகங்களையுடைய 100 செய்யுள் என்றும் குறிப்பிடப்படுகிறது.  மூன்றாவது நூல் அனுபோக வைத்திய சிந்தாமணி, இந்நூல் விருத்தாப்பாவினால் எழுதப்பட்டு 130 வரிகளைக் கொண்டுள்ளது. (European and Tamil Encounters in Modern Sciences: P.534-535)

வீரமாமுனிவரின் நூல்களைக் குறித்து முனைவர் விரிஜின் விமலாபாய் கருத்து

வீரமாமுனிவர் வாகடத்திரட்டு என்ற பெயரில் சுமார் 100 ஆண்டுகளுக்கு முன்பு அக்கீர் பா.மு. அப்துல்லா சாயபு முதல் முதலாக ஒரு நூலை வெளியிட்டுள்ளார் என்று கூறுகிறார்.  இதில் அப்துல்லா தனது பதிப்புரையில் “இந்நூலானது ராஜரிஷியும் மகா ஆங்கிலம் மற்றும் தமிழ் முதலியவைகளில் மிகவும் தேர்ச்சியுற்றுத் தமிழில் பல நூற்கள் இயற்றி, கீர்த்தி பெற்றவருமாகிய வீரமாமுனிவரால் செய்யப்பட்டது என்றும் நசகாண்டம், நவரத்தினச் சுருக்கமாலை, மகா வீரியச் சிந்தாமணி என்னும் மூன்றினையும் ஒருங்கு சேரத்திரட்டிய காரணத்தால் வாகடத்திரட்டெனும் திருநாமம் பெற்று விளங்கும் பெருமை வாய்ந்தது” என்று குறிப்பிடுகிறார்.

வீரமாமுனிவரின் தமிழ் இலத்தீன் அகராதி காய்ச்சல் விடுங்காய்ச்சல், விடாக்காய்ச்சல், நாலாம் முறைக்காய்ச்சல், மூன்றாமுறைக் காய்ச்சல், உட் காய்ச்சல், பித்தக் காய்ச்சல், மந்தக் காய்ச்சல், கடுங் காய்ச்சல், தோஷக்காய்ச்சல், பெருவாரிக் காய்ச்சல் என 15 வகையான காய்ச்சல்களைக் குறிப்பிட்டுள்ளது.  (சித்த மருத்துவ நூல்களை வீரமாமுனிவர் எழுதி யிருக்க வாய்ப்பில்லை என முனைவர் மறைதிரு.  இராசமாணிக்கம், ‘வீரமாமுனிவர் தொண்டும் புலமையும்’ என்ற தன் நூலில் குறிப்பிடுகிறார்.  அதற்கான காரணங்களை அவர் கூறுகையில்

(1) நூற்களின் நடையும், கருத்தும் பிற்காலத்தவை யாக உள்ளது.  (2) இல்லறத்தில் ஈடுபட்ட புலவர்கள் கூடப் பயன்படுத்த விரும்பாத சில மகடூஉ முன்னிலைகள் இங்கு வருகின்றன.  (3) கருத்துக்கள் முற்றிலும் முரண்பட்டு கருத்துக்கள் மேல்வாரி யாகவும் விளம்பரமாகவும், சிற்றின்பப் போக்கிலும் அமைந்துள்ளன.  (4) மற்ற நூல்களைப் போல முனி வரும் அவர்தம் கூட்டாளிகளும் இம்மருத்துவ நூல்களில் சான்று பகரவில்லை என்று கூறி இறுதியாக இந்நூல்களையும் முனிவர் எழுதிய பிற நூல்களையும் ஊன்றிப் படிப்போர் மேற்கூறிய கருத்துக்களை எளிதில் கண்டுணரலாம் என்று விளக்கம் அளிக்கின்றார்.

(தமிழ் இலக்கியங்களில் மருத்துவம் 2005: பக்.: 40-45)

சீகன் பால்கு: (Bartholomaeus Ziegen Balg)

சீர்திருத்த கிருத்துவ மிஷனரிகளில் சீகன் பால்கு பாதிரியார் டேனிஸ் வசமிருந்த தரங்கம் பாடிக்கு முதன் முதலில் டென்மார்க்கிலிருந்து 1906 ஜூலை 9-ல் வந்திறங்கியவர்.  சீகன் பால்கு இங்கு வந்தபின் சமயப் பிரசாரங்கள் செய்யத் தமிழைச் சிறப்புறக் கற்றுணர்ந்தார்.  1708-இல் முதல் முதலாக ஒரு தமிழ் மருத்துவரைத் தரங்

கையில் சந்தித்தார்.  இவரின் உதவியால் மருத்துவச் சுவடிகளைப் படித்ததோடு அச்சுவடிகளை விலை கொடுத்து வாங்கிப் படித்து, தமிழ் மருத்துவத்தை நன்கு புரிந்துகொண்டார்.

அச்செழுத்துக்கள் உருவாகாத கால கட்டத்தில் வழக்கில் இருந்த அறிவியல் கருத்துக்களை ஓலைச் சுவடிகளில் தமிழர்கள் பதிவு செய்துள்ளனர்.  தமிழில் எழுதுமுறை வரலாற்றை ஓலைச்சுவடிகளி லிருந்தே தொடங்க வேண்டும்.

தமிழகத்தில் நிலவிவந்த மருத்துவமுறையை டேனிஸ் மிஷனரியாக தரங்கம்பாடி வந்த சீகன் பால்கு குறிப்பின்படி அறியமுடிகிறது.

“மருத்துவப் பயிற்சியில் சுதேசிகள் நல்ல முறையில் பயிற்சியுடையவர்களாக இருக்கிறார்கள்.  அவர்களின் மற்ற நூல்களைவிட மருத்துவ நூல்களே சிறப்புத் தன்மையுடையனவாகவே இருந்தன.  மருத்துவ நூல்களில் இடம் பெற்ற முக்கிய கருத்துக்கள் பயன்பாட்டு நிலையில் அமைந்திருந்தன.  தாயின் வயிற்றில் உள்ள போதே மனிதர்களுக்கு நோய்கள் வரக்கூடும் என்றும், மற்ற அனைத்து வகை நோய் களும் இதன் வகையிலே அடங்கும் என நம்பினர்.  நோய்களைக் கண்டறிய மூன்று விதமான நடை முறைகளை அறிந்திருந்தனர்.  இதைப் பற்றிய தகவல் களை, பகுதி சாஸ்திரம் என்ற நூலில் எழுதி யிருந்தனர்.  இதன்படி நாடித்துடிப்பு மணிக்கட்டு, கழுத்து, விரல் மூட்டு ஆகிய மூன்று இடங்களி லிருந்து கண்டறியப்பட்டது.  பெண்களுக்கு இடது மணிக்கட்டிலிருந்தும், ஆண்களுக்கு வலது மணிக் கட்டிலிருந்தும் நாடித்துடிப்புகள் கண்டறியப் பட்டன.  வாத நாடி தவளை மாதிரியும், பித்த நாடி கோழி மாதிரியும், மயில் மாதிரியும் துடிக்கின்றன... ... வாத நாடியும், பித்த நாடியும் ஒரே மாதிரி துடித்தால் நோயாளிக்குத் தொண்டைப்புண், இருமல், ஜலதோஷம் மற்றும் உடல் சூடு இருப் பதாகக் கருதப்பட்டது.  ஐரோப்பியர்களிடம் வழக்கில் இருந்த மாதிரியான சிறுநீர்ப் பரிசோதனையும், இவர்களிடம் வழக்கில் இருந்தது... ... பாத்திரத்தி லுள்ள சிறுநீரில் வைக்கோலின் உதவியால் எண்ணெய் தெளிக்கும் போது எண்ணெய் மிதக்காவிட்டால் காப்பாற்ற முடியாது எனவும் கருதப்பட்டது.”

(C.S. Mohanavelu, German Tamilology : p.124)

இம்மாதிரியான சீகன் பால்குவின் குறிப்புகள் தமிழர்களிடம் இருந்த மரபு சார்ந்த மருத்துவத் தொழில் நுட்பத்தையும், அவர்கள் ஓலைச் சுவடி களில் மருத்துவக் குறிப்புகளை நூலாக்கம் செய் துள்ளனர் என்பதையும் உறுதி செய்கின்றன.

சீகன் பால்கு தரங்கம்பாடியில் தாம் நிறுவிய பள்ளியில் பின்வருமாறு குறிப்பிட்டுள்ளார்.  “தமிழ்ப் பள்ளியின் மூத்த மாணவர்களுக்கு நாள் தோறும் ஒரு மணி நேரமாவது மருத்துவம் கற்றுக் கொடுக்க வேண்டும்.  ஒவ்வொரு திங்கட்கிழமையும் ஏதாவது ஒரு கிராமத்திற்குச் சென்று மாணவர்களுடன் மூலிகைகளை அவர்கள் அடையாளம் காண உதவுவதுடன், மருந்து தயாரிக்கும் முறையை கற்றுக் கொடுக்க வேண்டும்.  அத்துடன் மூலிகை மாதிரிகளைக் கொண்டு வந்து அவற்றைத் தனி அறையில் வைக்க வேண்டும்.  நீண்ட தொலைவி லிருந்து கொண்டு வரப்பட்ட மூலிகைகளையும், அதே அறையில் சேமித்து வைப்பதுடன், மாண வர்கள் அவற்றை அறிந்து கொள்ளும்படி உற்சாகப் படுத்த வேண்டும்.  இறுதியாக, கிடைக்கக்கூடிய அனைத்துத் தமிழ்ச் சுவடிகளையும் சேகரித்து, அவற்றைப் படிக்க வேண்டும். (Daniel Jeyaraj, 2006. Bartholomaus Ziegenbalg - The Father of Modern Protestant Mission).

இதன் மூலம் பள்ளியில் பயின்ற மாணவருக்கு நமது பாரம்பரிய மருத்துவ முறையும் கற்றுக் கொடுக்கப்பட்டது என்பது அறிய முடிகின்றது.  இத்துடன் 27 ஜூன் 1712-இல் ரோமன் கத்தோலிக்கர் ஒருவரை மருத்துவராக நியமித்தார்.

இதனால் தரங்கம்பாடி பள்ளியில் அவர் தமிழ் மருத்துவம் வளர, அவர் செய்த பணிகளை நினைத்துப் பார்க்கும் போது அவர் பெருமை சொல்லாமல் விளங்குகிறது.  இதனை நோக்கும் போது மரபுசார் தமிழ் மருத்துவத் தொழில் நுட்பம் எவ்வளவு தூரம் சிறப்பாக இருந்துள்ளது என்பதையும் மற்றும் தமிழர்கள் ஓலைச்சுவடி களில் மருத்துவக் குறிப்புகளை நூலாக்கம் செய் துள்ளனர் என்பதையும் உறுதி செய்ய முடிகிறது.  (தமிழில் அறிவியல் இதழ்கள் : பக். - 34)

வாகடச்சுவடி என்னும் சுவடி நூலை ஆலப்பன் என்ற தமிழரின் துணையுடன் படித்து, முழுவது மாகப் புரிந்து கொண்டார்.  இந்நூல் 120 பகுதி களைக் கொண்டது.  அவைகளில் நோய்க்கான காரணம், உடல்கூறு, உடல் இயக்கம், நோய்க் குறியியல், குணப்பாடு, நச்சு மருந்து, நச்சுக்கான மாற்று மருந்து ஆகியவைகள் குறிப்பிடப்பட்டிருந்தன.  இந்நூலைச் சீகன் பால்கு விலைக்கு வாங்கி தரங்கையிலிருந்து டென்மார்க்கிற்கு அனுப்பினார்.  இந்த ஓலைச்சுவடி ஜெர்மனி மிஷனரி தலைநகரான ஹாலோ நகரத்திற்கு 1780-இல் வந்தடைந்தது.

இதுபோல சீகன் பால்கு “உடல்கூறு வண்ணம்” எனும் நூலை வாங்கி ஹாலோவிற்கு அனுப்பினார்.  இந்நூல் மனிதன் கடைத்தேறுவதைப் பற்றிக் கூறுகிறது.  தமிழ் மருத்துவர்களால் கூடச் சரியாக புரிந்து கொள்ள முடியாத “தத்துவ விளக்கம்” என்ற நூலும் இவரால் ஹாலோ நகருக்கு அனுப்பப்பட்டது.  இந்த இரண்டு நூல்களும் தற்பொழுது “Franckesche Stiftungen” எனும் ஆவண நூலகத்தில் காணக்கிடைக்கின்றன.  (Europian and Tamil Encounters in Modern Science : Page - 542)

அகஸ்தியர் இரண்டாயிரமும் - கிரண்லரும்: (J.E. Grundler)

1709 ஜூலை 20-ல் தரங்கம்பாடிக்கு வந்தடைந்த கிரண்லர் பாதிரியார் தமிழைக் கற்று மருத்துவச் சுவடிகளைப் படிக்க ஆர்வம் காட்டியதன் விளை வாகத் தரங்கம்பாடிக்கு அருகிலுள்ள பொறை யாறுக்கு சென்று 1710-லிருந்து இரண்டு ஆண்டுகள் மருத்துவச்சுவடி நூல்களைப் படித்தார்.  அப்பொழுது தமிழர்களைப் போலவே, உணவு அருந்தி, உடை உடுத்தி, தமிழ் கலாச்சாரத்தை ஒட்டிய வாழ்க்கை நடத்தினார்.  இக்கால கட்டத்தில் தமிழ் மருத்து வர்கள் எப்படி மருத்துவம் புரிகின்றனர், எவ்வாறு நோயைக் கண்டுபிடிக்கின்றனர்.  மருத்துவம் அளிக் கின்றனர் என்பதை அறிந்து அகஸ்தியர் இரண்டா

யிரம் எனும் சுவடி நூலைத் தமிழிலிருந்து ஜெர் மானிய மொழியில் மொழி பெயர்த்தார்.  இதன் பெயர் “தமிழ் மருத்துவர்” (Tamil Physician).  1711-இல் மொழிபெயர்க்கப்பட்ட இந்நூலைக் கப்பல் மூலம் கோப்பன் ஹேகன் வழியாக ஹாலோ நகருக்கு 1712-இல் அனுப்பி வைத்தார்.  இத்துடன் மூலிகைச் செடியின் மாதிரிகளையும் அனுப்பி வைத்தார்.  இந்த நூலும் சீகன் பால்கு அனுப்பிய நூலைப் போலவே ஹாலோ நகரின் ஆவணக் காப்பகத்தில் உள்ளது.  இந்நூலில் உள்ளூர் மக்கள் எப்படி மருத்துவம் பெற்றுக் குணமடைகின்றனர் என்பதுடன் ஒரு பிராமணர் துணையுடன் தமிழ்ப் பள்ளிகளில் எப்படி மருத்துவம் கற்றுத் தரப் படுகிறது என்பதைக் குறித்தும் நூலின் முகவுரையில் குறிப்பிட்டுள்ளார்.

இவருடைய “தமிழ் மருத்துவர்” (Tamil Physician). நூல் இரண்டு பாகமாக உள்ளது.  முதல் பாகத்தில் நோயாளியை எப்படி வரவேற்பதிலிருந்து, நோயாளி குணமாவாரா? அல்லது இறப்பாரா? என்பது வரை உள்ளது.  இரண்டாம் பகுதியில் உடல் உறுப்பு களில் ஏற்படும் நோய்களும் அவற்றிற்கான மருந்து களும் குறிப்பிடப்பட்டுள்ளது.  இத்துடன் முதல் பாகத்திலுள்ளது போல இரண்டாம் பாகத்திலும் மருத்துவ அகராதி இடம் பெற்றுள்ளது.

இவர் நூலில் குறிப்பிடப்பட்டுள்ள மருத்துவ முறைகள் அகஸ்தியர் இரண்டாயிரம் என்ற நூலில் குறிப்பிடப்பட்டவைகளாகவே உள்ளன.  இவர் நூல் அக்காலகட்டத்தில் (1712) கோப்பன் ஹோமின் ஜெர்மானிய மருத்துவர்களால் படிக்கப்பட்டுக் கற்பிக்கப்பட்டது.  கிரண்லர் இத்துடன் நில்லாது, சித்த மருந்துகளைக் குறித்து ஜெர்மனியில் உள்ள தன் நண்பர்களுக்கு அவ்வப்பொழுது தன் கடிதத்தின் மூலம் தெரிவித்தார்.  இதன்படி சித்த மருத்துவம் ஜெர்மானியர்களுக்கும் கிடைக்கும் வகையில் பணியாற்றியது கிரண்லரின் சிறப்பாகும்.

அகஸ்தியர் வைத்தியச் சுவடியும் தியோடர் லுட்விக் ஃப்டிரிச் ஃபோலியும்

டேனிஷ் அறுவைச் சிகிச்சை மருத்துவராகத் தியோடர் லுட்விக் ஃப்டிரிச் ஃபோலி தரங்கம் பாடியில் ராணுவ மருத்துவமனையில் 1777-இல் பணிபுரிந்தார்.  அப்பொழுது மருத்துவச் சுவடிகளை உள்ளூர் வாசிகள் துணையுடன் கற்றுக்கொண்டார்.  இதன் படி அகஸ்தியர் மருத்துவச் சுவடிகளைக் கற்றுக் கொண்டு பல கட்டுரைகளை 1795-

லிருந்து 1801 வரை டேனிஷ் மொழியில் எழுதினார்.  ஆனால் அவைகள் அச்சாகவில்லை என்றாலும், அக்கட்டுரைகள், கோப்பன் ஹேகனில் அரிய ஓலைச்சுவடிகள் காப்பகத்தில் உள்ளன.  இந்த மருத்துவ மொழிபெயர்ப்பில் ஃபோலி பாதரசத்தை அகஸ்தியர் சுவடியில் உள்ளபடி ஆவியாக்கி உறை படிவமாக்குவதைக் குறிப்பிடுகையில் ஜெர்மன், டேனிஷ் மருத்துவர்களுக்கு மருந்து தயாரிக்க மிகவும் உதவக்கூடும் என திட்டமிட்டு மொழி பெயர்த்ததாகக் கூறுகிறார்.  ஆனாலும் இப்பாதரச உறை படிவம் குறித்த கருத்தை ஐரோப்பிய மருத்து வர்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் என்றும் குறைபட்டுக் கொள்கிறார்.  எனினும் தரங்கைக்கு மருந்து விற்பனை செய்ய வந்த இரண்டு தமிழ் மருத்துவர்களிடம் (அப்பா, மகன்) தமிழ் மூலிகை மருத்துவம் தயாரிக்கும் முறையைக் கேட்டறிந்து அவர்களுக்கு ஒரு பவுண்ட் சுத்திகரிக்கப்பட்ட பாதரசத்தை அளித்தார்.  இச் செய்தி குறிப்பிடப் பட வேண்டிய ஒன்றாகும்.  ஏனெனில் அக்கால கட்டத்தில் ஐரோப்பிய வணிகர்களால் பாதரசம் சைனாவிலிருந்து பெறப் பெற்று தமிழ் மருத்துவர் களுக்கு விற்பனை செய்யப்பட்டது.

அகஸ்தியர் வைத்தியம் 500 - ஓலைச் சுவடியும் ஒயிட்லா அன்சிலியும்

ஒயிட்லா அன்சிலி உதவி மருத்துவராக இங்கிலீஷ் குடியிருப்பில் 1788ல் பணிபுரிந்த பிறகு கிழக்கிந்திய கம்பெனியில் முழு நேர அறுவை மருத்துவராக 1794-ல் சேர்ந்து, உள்நாட்டு தாவரங்களை அறிந்து கொள்ள விருப்பத்தைத் தெரிவித்தார்.  இதன்படி உள்ளூர் தாவரங்கள் மருத்துவ குணங்களைக் கொண்டது என்றும், இங்குள்ள மூலிகைகள் ஐரோப்பியர்களுக்கு ஆராய்ச்சி செய்ய அவ்வளவு எளிதானதல்ல என்று கூறும் அன்சிலி 20 ஆண்டுகள் கடை மருந்துகளைக் கண்டு கேட்டு, அறிந்து அவற்றை மேலை நாட்டினர் புரிந்து கொள்ளும் விதமாக ஆய்வுகளை மேற்கொண்டார்.

அன்சிலி தமிழ் மருத்துவ நூலான அகஸ்தியர் வைத்தியம் 500-ஐக் கற்றுணர்ந்து ஹிந்துஸ்தான் மருந்துகளின் கையேட்டை 1813-இல் தயாரித்து மதராஸ் அரசின் உதவியுடன் வெளியிட்டார்.  இதில் ஜான் பீட்டர் ராட்லர் எனும் புகழ் பெற்ற தாவர இயல் நிபுணர் தனக்குச் செய்த உதவிகளைக் குறிப்பிட்டு, அவருக்கு அந்த நூலைக் காணிக்கை யாக்கினார்.

மருத்துவக் குணமுள்ள மூலிகைகளின் பெயர் களை ‘டாக்டர் அன்சிலி’ கூர்ந்து கற்று தெலுங்கர், முஸ்லீம் ஆகியோருக்கும் இம்மருந்துகள் பொது வாகவே உள்ளன என்று கூறினார்.  ஆனால் சில மருந்துகள் வேறுபட்டிருந்ததால் ஐரோப்பிய மருத்துவர்கள் கேள்வி எழுப்பினர்.  மதராஸில் முக்கிய தாவரங்கள் உள்ள தோட்டத்தின் பொறுப் பாளர் ராபர்ட் ரைட் அன்சிலியின் நூலில் படங்கள் இல்லாத குறையைச் சுட்டிக் காட்டினார்.  ஆனாலும் அன்சிலியின் நூல் இரண்டு பதிப்புகளைக் கண்டு இரண்டு பகுதிகளாக லண்டனில் 1826-இல் வெளி யிடப்பட்டது.

அன்சிலி மருத்துவ நூல்களின் தமிழ் இலக்கணத்தை 1813-இல் பட்டியலிட்டார்.  இந்தப் பட்டியலில் வைத்தியர் வாகடம் முதல் அகஸ்தியர் வைத்தியம் 300 வரை பல நூல்கள் இருந்தன.  இதில் “மருத்துவம் சமயத்துடன் பின்னிப்பிணைந்து, கடவுளே எல்லாம் என்று கூறுவதால் தமிழ் மருத்துவம் வளராது ஒரு தேக்க நிலையை அடைந்தது” என்று குறிப்பிட்டுள்ளார்.

மருத்துவர் இல்லாத ஊருக்கான மருத்துவ நூல் பண்டிதர் ஏ.ஜா. உவேரிங் துரை (1860)

திருவிதாங்கோடு சமஸ்தான மஹாராஜாவின் மருத்துவர் ஏ.ஜா. உவேரிங் துரை என்பவரால் எழுதப் பட்ட நூல்.  இது இங்கிலீஷ் வைத்திய முறையால் எழுதப்பட்ட சில கடை ஒளஷதங்களுடையவும் இந்திய தேசத்தில் சாதாரணமாய் உண்டாகும் சில பூண்டுகளுடையவும் பலன்களைப் பற்றிக் காட்டிய குறிப்புகள்.  இதற்கு ஆங்கிலத் தலைப்பாக “Remarks of the uses of some Bazaar Medicines and on a few of the common indigenous practice according to European Practice” என உள்ளது.

இதில் Plants என்பது பூண்டு என்று மொழி பெயர்க்கப்பட்டுள்ளது.  அன்றைய நிலையில் மூலிகை அல்லாத செடிகளுக்கு இம்மொழிபெயர்ப்பு அமைந் திருக்கலாம்.  அதேபோல் இந்நூலின் ஆசிரியர் பெயர் Waring-உவேரிங் ஆகியுள்ளது.  மேலும் முகவுரையின் கடைசியில் “செய்கிறதில் (இம்மருந்தை) அனுகூல மில்லாவிட்டாலும் யாதொரு கெடுதல் சம்பவிக்க மாட்டாது” என்றும் கூறப்பட்டுள்ளது.

இந்நூலில் முகவுரையில், “வாக்சினேற்றரால் தாங்கலிருக்கும் அந்தந்த ஸ்தலங்களில் தகுந்த வைத்தியர்களில்லாமல் தங்களைச் சுற்றியிருக்கும் சனங்களுக்கு வியாதி உண்டானால் அதைத் தணிக்கிற தற்கும் சில சமயங்களில் ஒன்றாய் சுகமளிக்கிறதற்கு ஏற்ற வழிகளை இதனால் அவர்கள் அறிய வேண்டும் என்கிற நோக்காய் செய்யப்பட்டிருக்கிறது” என்று இந்நூலின் அவசியத்தையும் எழுதப்பட்ட காரணத் தையும் எடுத்துக் கூறுகிறது.

இதில் கடை மருந்துகள் ஒளஷதங்கள் என்று கூறப்பட்டிருப்பவை படிகாரம் அல்லது சீனக் காரம் கரியபோளம் (Aloes), வெள்ளைப் பாஷாணம் (Arsenic White), கூவிளம் என்னும் வில்வப்பழம் (Baelw Bilva Fruit), குடம் என்ற கற்பூரம் (Champhor), துரிசு (Sulphate of Copper), தண்ணீர் (Water), கோழிக் குஞ்சின் சாறு (Chicken Broth),, ஆட்டிறைச்சியின் சாறு (Mutton Broth).

இந்நூல் According to English Practice என்று முகப்பு அட்டையில் குறிப்பிட்டிருந்தாலும் அன்றைய காலகட்டத்தில் இம்மருத்துவம் எம்மாதிரி இருந்தது என்பதை கீழ்க்கண்ட மருத்துவ முறைகளையும் உரைநடையையும் கொண்டு அறியலாம்.

“விப்புருதி (Abscess) முதலாவது சுடுதண்ணீர் ஒற்றல் இடவும் மருந்து வலியுமிருக்கில் அட்டை களை விடவும், பின்பு அதன் மேல் நவசாரத் தண்ணீரை அடிக்கடி விடவும், சீழ் கட்டத் துவங்கின உடன் அரிசி மாவின் போல்ட்டிசையாவது.  அவித்த வெண்காயத்தின் போல்ட்டிசையாவது அவித்த வெங்காரத்தின் போல்ட்டிசையாவது வைத்துக் கட்டவும், விப்புருதியின் மேற்பக்கம் விரலை வைத்து அழுத்தும் போது கீழ் பிதுக்கி தளம்பிக் காணுகில் மிகுதியாய் முளைத்திருக்கும் பக்கத்தில் கருவியால் கீறி அரிசி மாவின் போல்டிசை வைத்துக் கட்டவும்...  தூக்கத்துக்கு விரோதமாய் வலி அதிக மிருக்கில் சொல்லியிருக்கிறது போல் அபினைக் கொடுக்கவும்.  நோயாளி அதிக பலவீனமாயிருக்கில் கோழிக் குஞ்சின் கஷாயம் அல்லது ஆட்டிறைச்சியின் கஷாயம் தினந்தோறும் கொடுத்து நல்ல சாப்பாடும் செய்விக்கிறதுமன்றி அப்போது வேப்பம் பட்டைக் கஷாயமாவது கிரியாத்துக் குடிநீராவது கொடுக்கவும்.”

கலைச்சொற்கள்

நூல் முழுவதும் ஒவ்வொரு மருந்திற்கும் தமிழின் தலைப்பிற்குப் பிறகு அடைப்புகளில் அதற்கான ஆங்கிலச் சொற்களும் கொடுக்கப்பட்டுள்ளன.

Sulphate of Iron  -   அன்னபேதி

Sulpher  - கெந்தகம்

Toddy Poutice - கள்ளுப்போல்ட்டிஸ்

Borax  -  வெங்காரம்

One Scruple  - இசுக்குருப்புகள்

Half a drachm - 20 கிறேன் (grains), திரும் = 30 கிறேன்.

இந்நூலின் மூலம் பத்தொன்பதாம் நூற்றாண்டில் அலோபதி மருத்துவத்தின் முதலுதவி மருந்துகள் என்னவென்று அறிந்து கொள்ள முடிகிறது.  இதில் வெண்பாஷாணம் போன்ற சில மருந்துகளைத் தவிர மற்றவை வீட்டு உபயோகத்தில் உள்ள பொருட்களாக இருக்கின்றன (எ.கா. தண்ணீர்) என்பதைப் பார்க்கும்பொழுது இன்றைய முன்னேற்றத் துடன் ஒத்துப் பார்க்கையில் மலைக்கும் மடுவுக்கும் உள்ள வேறுபாடாகத் தெரிய வருகிறது.

தமிழ் மருத்துவ ஓலைச்சுவடியை எப்படி ஐரோப்பியர்கள் கற்றுணர்ந்தனர்

17-ஆம் நூற்றாண்டில் அச்சு இயந்திரம் தமிழகத் திற்கு வரும் வரை மருத்துவ ஓலைச்சுவடிகள் செய்யுள் வடிவத்திலேயே இருந்தன.  சில செய்யுள் சிறியதாகவும், சில நீண்டும் எழுதப்பட்டிருந்தன.  சித்த மருத்துவச்சுவடிகள் பெரும்பாலும் அந்தாதி யாப்பு வடிவத்திலேயே அமைந்திருந்தன.  இச்சுவடியின் ஆசிரியர்கள் எந்த ஆண்டு, மாதம் நாட்களில் எழுதினார்கள் என்ற குறிப்புகள் அதில் இல்லை.  மேலும் அச்செய்யுளைக் கொண்டு எந்தக் காலத்தில் எழுதியிருப்பார்கள் என்று கணிப்பதும், மிகவும் கடினம் ஆகும்.  இச்சுவடிகள் 200- 300 ஆண்டு களுக்கு மேல் கேடுறும் என்பதால் மறுமுறை இது பெயர்த்து பனை ஓலைகளில் எழுதப்படுவது வழக்கம்.

இவ் ஓலைச்சுவடிச் செய்யுளில் பெரும்பாலும் அக்கால கட்டத்தில் நடைமுறையில் இருந்த சமஸ்கிருத வார்த்தைகளே காணப்படுகின்றன.  மேலும் அன்றாடப் பேச்சு வழக்கிலுள்ள சொற்கள்.  எ.கா. : அரைச்சு, குளுந்து, வெடிச்சு, வீங்க போன்ற வைகள் காணப்படுகின்றன.  இது போல இலக்கியத்தில் காணப்படும்.  எ.கா. தென்னெண்ணெய், தாமரை வழயம், போன்ற சொற்களும் சுவடிகளில் உள்ளன.  மூலிகையின் பெயர்களும் உச்சரிப்புகள் மாறி திரிபலா (திரபலை), கரி கொனை (கரி கொன்றை) எனச் சில வார்த்தைகள் மாறியும் உள்ளன.  எ.கா.: முடக்கொட்கை (முடக்கற்றான்), கொடிசப்பாலை (குடுசப்பாலை).  இவைகள் வேண்டுமென்றே மாற்றப்பட்டதா என்பதற்கு விடையாக, இது அறிந்தோர்க்கு மட்டும், சுவடிப் பாடல்கள் பயன்பட வேண்டும் என்று எழுதப் பட்டதாக அறிய வருகிறது.  இதன் காரணமாக ஐரோப்பியர்கள் இவைகளை எளிதில் அறிந்து நடைமுறைப்படுத்துவது கடினமாக இருந்தது. ஆகவே பல நேரங்களில் மேலை நாட்டினருக்கு மொழி பெயர்ப்பாளர்கள் தமிழ் மருத்துவத்தை அறியத் தேவைப்பட்டது.

இக்கடினமான சூழலில் மேலை நாட்டவர் தமிழ் மருத்துவத்தை அவர்கள் மொழியில் மொழி பெயர்க்க குறிப்பிட்ட நிலையில் சில சமயம் வார்த்தைக்கு வார்த்தை மொழிபெயர்த்தனர்.  சில சமயம் அச்செய்யுளின் சாரத்தைக் கொடுத்தனர்.  இன்னும் சில நேரங்களில் ஐரோப்பிய மருத்துவர் களுக்குத் தேவையற்றவைகளை ஒதுக்கி தேவை யானவற்றை மட்டும் சுருக்கி எழுதினர்.  ஏனெனில் தமிழ் மருத்துவப்பாடல்களில் உள்ள உவமைகள், உருவக வழக்குகள் செறிவாக இருந்த காரணத் தாலும் செய்யுள் வடிவில் விளங்காததாக இருந்தமை யாலும், தமிழ் மருத்துவச் சுவடி மொழிபெயர்ப்பு என்பது ஐரோப்பியர்களுக்கு ஒரு சவாலாகவே இருந்தது.

Pin It

களவொழுக்கம் குறித்த இரு பிராகிருதப் பாடல் களும் இரு சங்க இலக்கியப் பாடல்களும் இக் கட்டுரையில் ஒப்பிடப்படுகின்றன.  முதலில் பிராகிருதப் பாடல்: ‘அறுவடைக்குத் தயாராகவிருக்கிற நெல் வயலில் தலைகுனித்தவாறு அழாதே! அரிதாரம் பூசிய முகத்துடன் கூடிய நடிகர்களைப் போல சணல் தோட்டம் உள்ளது’ (வஜ்ஜாலக்கம், 473).  இப்பாடல் வஜ்ஜாலக்கம் என்ற நூலில் அசதி என்ற அதிகாரத்தில் இடம்பெற்றுள்ளது.  சதி என்ற சொல் கற்புடைய மகளிரைக் குறிக்கும்.  ‘அசதி’ என்ற சொல் கற்பில்லாத (unchaste) பரத்தையைக் குறிக்கும்.  வரைவில் மகளிர் என்ற சொல்லையும் அசதி என்ற சொல்லோடு ஒப்பிடலாம்.  வள்ளுவர் குறிப்பிடும் பொருட் பெண்டிர் என்ற சொல் ÔவேசியÕ என்ற வடசொல்லோடு ஒத்தது.  ஒரு பெண் நெல்வயலைச் சாக்காக வைத்துத் தினமும் தன் காதலனைச் சென்று களவின்பம் அடைந்து வந்தாள்.  நெல்வயல் அறுவடைக்குத் தயாராகி விட்டது. அறுவடை முடிந்தவுடன் வயலுக்குச் செல்ல முடியாது. சென்றாலும் மறைந்து ஒழுக முடியாது.  இதனை எண்ணிஎண்ணிக் கலக்கமுற்றாள்; கண்ணீர் விட்டு அழுதாள்.  இதனைக் கண்ணுற்ற அப்பெண்ணுக்கு நெருக்கமான ஒருவர், ஓ! மகளே அழ வேண்டாம். நெல் வயலை அறுவடை செய்தால் என்ன கெட்டுவிட்டது?  நன்றாக வளர்ந்த சணல் தோட்டம் உள்ளது.  களவுக் கூட்டத்திற்கு அவ்விடத்தைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம் என்று சமாதானம் கூறுகிறார்.  சணல் தோட்டம் அரிதாரம் பூசிய நடிகர்களைப் போல வனப்பாகவுள்ளது என்றும் கூறப்பட்டுள்ளது. 

இன்னொரு பிராகிருதப் பாடல் (அபபிரம்சா) நிலவை வெறுத்து அதனைக் குறை கூறுவதாக உள்ளது.  நிலவின் துன்பத்தைக் கண்டு பெண் மகிழ்ச்சி அடை வதாகப் புனையப்பட்டுள்ளது.  இப்பாடலும் பரத்தையின் (அசதி) கூற்றாக அமைந்துள்ளது.

சந்திரகிரகணத்தைக் கண்டவுடன் பரத்தையர் மிகவும் மகிழ்ச்சியடைந்தனர்.  வெட்கத்தை விட்டு கொல்லென்று சிரித்தனர், ஓ, ராகு! நிலவை விழுங்கி விடு. பிரியமானவர்களைக் கூடமுடியாமல் பிரிந்து வாழ் வதற்கு அதுவே காரணமாகவுள்ளது1 என்றும்கூறினாள்.

நிலவு பகல் போலக் காய்ந்தால் பரத்தையர் தாம் விரும்பிய ஆடவரைச் சந்தித்து இன்பமுற இயலாது.  சந்திர கிரகணத்தன்று நிலவை இராகு விழுங்குகிறது.  அதனால் ஒளி மாய்ந்து இருள் தோன்றுகிறது.  இருளில் எண்ணம் போல ஆடவரைச் சேர்ந்து உள்ளம் களிப்புற இயலும்.  இதுதான் கிரகணத்தைக் கண்டு மகிழ்ச்சி யடையக் காரணம் பகைவனுக்குப் பகைவன் நமக்கு நண்பன் என்பது போல நிலவுக்குப் பகைவனான இராகு பரத்தையர்க்கு நண்பனாகி விடுகிறான்.  இந்தப் பாடலில் இராகு சந்திரனை விழுங்குகிற தொன்மம் பயன்படுத்தப்பட்டுள்ளது. பாடல் இராகுவை நோக்கிப் பேசுவதாக அமைந்துள்ளது. பரத்தையரின் களவொழுக்கம் பகல் வேளையிலும் இரவு நேரத்திலும் நிகழும் என்பதை இரு பிராகிருதப் பாடல்களிலிருந்து உணர்ந்து கொள்ளலாம், பரத்தமை ஒழுக்கத்திற்கு உலகில் அனுமதி இல்லை. அதனால் அவர்கள் மறைந் தொழுக வேண்டிய நிலை என்பதனையும் உணரலாம்.

இனி குறுந்தொகையில் வரும் ஒரு பாடல் (375)

அம்ம வாழி தோழி இன்றவர்

வாரா ராயினோ நன்றே சாரல்

சிறுதினை விளைந்த வியன்கண் இரும்புனத்து

இரவரி வாரின் தொண்டகச் சிறுபறை

பானாள் யாமத்தும் கறங்கும்

யாமம் காவலர் அவியன் மாறே

மலைச்சாரலில் தினை விளைந்த வயலில் அறுவடை நடைபெறுகிறது, அதனால் பகற்பொழுதில் தலைவனைச் சந்திப்பது சாத்தியமில்லை. இரவுப் பொழுதில் சந்திக்கலாம். ஆனால் அறுவடை பகற் பொழுதையும் கடந்து இரவு நேரத்திலும் தொடர்கிறது.  அச்சமயம் (விலங்குகளை விரட்டுவதற்காக) தொண்டகம் என்னும் சிறுபறையை அடித்து ஒலியெழுப்புகிறார்கள்.  இரவில் காவலர்களும் கண்விழித்துக் கொண்டுள்ளனர்.  இத்தகைய சூழலில் தலைவன் இன்று வராவிட்டாலும் நல்லதுதான். இப்பாடல் தோழி கூற்றாக அமைந்துள்ளது. பகல் நேரத்திலும் இரவு நேரத்திலும் தலைவனும் தலைவியும் சேருவதற்கு வாய்ப்பில்லை என்று கருதித் தோழி களவுக் கூட்டத்தைத் தவிர்க்கிறாள்.  இரவரிவார்- இரவில் அறுவடை செய்வோர், யாமம்-இரவுப் பொழுது, நள்ளிரவு. கறங்கும்-ஒலிக்கும்.

இன்னொரு நற்றிணைப் பாடலின் கருத்தையும் பார்ப்போம். தலைவி மலர்ந்த வேங்கை மரநிழலில் தலைவனோடு ஒன்றாக இருந்தாள். கதிர் தின்ன வந்த கிளிகளை இருவரும் ஓட்டினர். அருவியில் குளித்துச் சந்தனம் பூசி மகிழ்ந்தனர். தினைப்புனம் முற்றி விளைந்தது. வேட்டுவர் அதனை அறுவடை செய்து விடுவர். எனவே புனங்காவலைச் சொல்லி வெளியே வரமுடியாது. தலைவனைச் சந்திக்க முடியாது

(நற்றிணை 259, தமிழ்க்காதல், ப.54).  முற்றிய தினை களவொழுக்கத்திற்கு முதல் இடையூறாகும்.  இதனால் பகல் நேரத்தில் சந்திப்பதும் புணர்ச்சியும் இல்லை யாகும். பின்னர் தலைவன் இரவு நேரத்தில் சந்திக்க ஏற்பாடு செய்க என்று வேண்டுவான். இரவுக் களவுக் கூட்டத்திற்கும் தொல்லைகள் உண்டு என்று சொன் னோம் அல்லவா? அதற்கு இன்னொரு எடுத்துக் காட்டுப் பாடல் (குறுந். 47).

கருங்கால் வேங்கை வீயுகு துறுகல்

இரும்புலிக் குருளையின் தோன்றும் காட்டிடை

எல்லி வருநர் களவிற்கு

நல்லை அல்லை நெடுவெண் ணிலவே

வேங்கை-வேங்கை மரம், வீ-மலர்கள், உகு-உதிர்த்தல், துறுகல்-நெருங்கிய கல், குருளை-குட்டி, எல்லி-இரவு நேரம், நல்லை-நல்லது, அல்லை-அல்ல.

கரிய கால்களையுடைய வேங்கை மரத்தினுடைய மலர்கள் நெருங்கிய கற்கள் மீது உதிர்ந்துள்ளன.  அக்காட்சி புலிக்குட்டி படுத்திருப்பதைப் போல தோற்ற மளிக்கிறது. புலி என்று நினைக்கும்போதே நெஞ்சில் அச்சமும் தோன்றுமன்றோ? அத்தகைய காட்சி கொண்ட காட்டு வழியில் தலைவன் தலைவியைச் சந்திக்க வருகின்றான். நிலவொளியும் பகல்போன்று காய்கிறது. இதனால் தலைவன் தலைவியின் கள வொழுக்கத்திற்கு இடையூறு ஏற்படுகின்றது. தோழி இந்நிலையில் நிலவைப் பார்த்து நீ நல்லது இல்லை என்று கூறுகிறாள். கற்புக் காலத்தில் இன்பம் தரும் நிலவே களவிற்கு மட்டும் நல்லை அல்லை என்று தோழி கூறுகிறாள்.

இப்பாடல்களை எழுதிய புலவர்களின் பெயர்கள் தெரியவில்லை. நெடுவெண்ணிலவே என்ற அழகிய தொடர் அப்பாடலை எழுதிய புலவருக்குப் பெயராக அமைந்து நெடுவெண்ணிலவினார் ஆயிற்று.  பிராகிருதப் பாடல்கள் பரத்தையரின் களவொழுக்கம் குறித்துப் பேசுகின்றன.  தமிழ்ப் பாடல்கள் களவொழுக்கத்தில் ஈடுபடும் தலைவன்/தலைவி குறித்துப் பேசுகின்றன.  நெல் அறுவடையும், தினை அறுவடையும் பகலின்கண் காதலர் கூட்டத்திற்குத் தடைகளாகவுள்ளன.  அவ்வாறே நிலவொளி இரவுக் காலத்தில் காதலர் சேர்ந்தொழுகத் தடையாக உள்ளது.  இரு மரபுகளும் இரவும் பகலும் களவுக் கூட்டங்கள் நடைபெற்றதைக் குறிக்கின்றன.  களவொழுக்கம் தூயது, கள்ளவொழுக்கம் தீயது.  களவுக் காதலர் மன மாசற்றவர், மணந்துகொள்ளும் உள்ளத்தினர்.  வெளிப்பட்ட பின்னும் வாழ்பவர்.  கள்ளக் காதலர் தம்முள் அன்பற்றவர், மணம் என நினையா வஞ்சகர், வெளிப்படின் மாய்வர் அல்லது மாய்க்கப்படுவர் என்று வ.சுப.மாணிக்கம் குறிப்பிடுவார். பேராசிரியரின் கூற்றைக் கொண்டு பிராகிருதக் காதலரின் ஒழுக்கத்தையும் தமிழ்க் காதலர்களின் ஒழுக்கத்தையும் வேறுபடுத்திக் காணலாம்.  இருப்பினும் தொல்காப்பியரின் சூத்திரம்,

குறிஎனப் படுவது இரவினும் பகலினும்

அறியக் கிளந்த ஆற்றது என்ப (களவியல், 128)

என்பது இரு மரபுகளுக்கும் பொதுவாகவே உள்ளது.

1. When they saw the eclipse of the moon, unchaste women felt immensely elated (laughed without any restriction) and said, O, Rahu! do swallow up the moon, who is responsible for our separation from our desired person.

Pin It