ஒக்ரோபர் 2013

வீதியெங்கும் நின்றிருந்த வாகனங்களின் கீழ் காயமடைந்தவர்கள் இரத்தம் வழிய வழியக் கிடந்தனர்.

ஓரளவு நகர முடிந்தவர்கள் கைகளாலும் கால்களாலும் அரக்கி அரக்கி நகர்ந்தனர்.

மற்றவர்கள் கைகளை நீட்டிக் கதறினார்கள்.

எந்தக் குரலுக்கும் செவிசாய்க்க முடியவில்லை.

பார்வதியின் மனம் கதறி அழுதுகொண்டிருந்தது.

எறிகணையில் சிதறிப்போன உடல்கள் அப்படி அப்படியே கிடந்தன. அவற்றில் இலையான்கள் மொய்த்திருந்தன. உடல்களைக் கடக்கும் போதெல்லாம் இலையான்கள் குய்யென ஒலியெழுப்பி அடங்கின.

அபிராமி மூக்கைப் பொத்திக்கொண்டாள். அவற்றைப் பார்க்கவிடாமல் தலையைத் திரும்ப முடியவில்லை. திரும்புகிற பக்கமெல்லாம் ஏதோ ஒன்று கிடந்தது.

தினேஸின் தந்தையும் சகோதரிகளும் இருந்த இடத்திற்குப் போனார்கள்.

ஒரு பெண்ணுக்குத் தொடையில் றவுண்ஸ் கொழுவி அங்குத் தூக்கி வந்திருந்தார்கள்.

“முல்லைத்தீவுக்குப் போகப் போனாங்கள், நாசமாப் போவாங்கள் சுட்டுப் போட்டாங்கள்.”

“இப்பவும் ஏன் சனத்த மறிக்கிறாங்கள்” பார்வதி பொருமி னாள்.

“இரவுக்கு ஒரு திட்டமிருக்காம். அது முடியத்தான் சனத்தை விடச் சொல்லியிருக்கிறாங்களாம்.”

மக்களும் போராளிகளும் கலந்திருந்தார்கள்.

அரிசி, மா எல்லாம் தாராளமாகக் கிடைக்கத் தொடங்கியது. ஆயிரம் ரூபாவுக்கும் பெற முடியாத அரிசி விற்க முடியாமல் கிடந்தது. சீனி, பற்றறிகள், சாரங்கள், பாதணிகள், பால் மா, மீன் ரின் எல்லாம் தெருக்களில் வீசப்படுமளவுக்கு மலிந்தன.

வீதிகளில் நின்ற லொரிகளை உடைத்து பொருட்களை வெளியே எறிந்தனர்.

தண்ணீர் பெரும் தட்டுப்பாடானது. கிணறு வெட்டி வைத்திருந்தவர்கள் மற்றவர்களைத் தண்ணீர் அள்ள விடாது தடுத்தார்கள். நான்கு குடும்பம் இறைத்தால் வற்றிவிடுகிற அளவில் தான் தண்ணீரும் கிணறுகளில் இருந்தன.

நெடுந்தூரம் போய்த் தண்ணீர் கொண்டு வரவேண்டியிருந்தது. வழியில் நாறிக் கிடக்கும் பிணங்களைக் கடந்தே போக வேண்டும்.

பார்வதி இரண்டு வாளிகளில் தண்ணீர் கொண்டுவந்தாள். ஒரு வாளித் தண்ணீரில் இரு பிள்ளைகளையும் குளிப்பாட்டினாள். ராணிக்குக் கைகால்களையும் முகத்தையும் மட்டுமே அலம்பத் தண்ணீர் கிடைத்தது.

பார்வதி மாவைக் குழைத்து தட்டுப் பலகாரம் சுட்டாள். மா, சீனி, எண்ணெய் முதலானவை தாராளமாகக் கிடைத்ததால் நிறையவே செய்தாள். சீனியில் பாகு செய்து, அதில் போட்டுப் பிரட்டியதும் தனித் தனி பொலித்தீன் பைகளில் போட்டாள்.

“துர்க்கா, இந்தா இதை உன்ர பையில வை.”

ராணியிடமும் கலாவிடமும் ஒவ்வொன்றையும் தூக்கிக் கொடுத்தாள்.

இதற்குள் தினேஸ் அந்தக் கடார் நிலத்தில் ஒரு பதுங்கு குழியை வெட்டிமுடித்தான். ஆழமும் இல்லை. நீளமும் இல்லை. ஆனால் உட்கார்ந்தால் மறையுளமளவு வெட்டி மண்ணை மூட்டையில் கட்டி கரையில் அடுக்கினார்கள்.

“அதென்ன தனித்தனிப் பையும் பலகாரமும்” என்று தினேஸ் கேட்டான்.

“எட எப்பிடியாவது பிரிஞ்சிட்டாலும், அவரவர் பையில இருக்கிறதுதான் நல்லது” என்றாள் பார்வதி.

ஆங்காங்கே சனங்கள் அடுப்பு மூட்டிச் சமைத்தனர். ரொட்டியோ புட்டோ. “மாவை எல்லோருக்கும் குடுங்கோ” என்ற பார்வதி சீனியையும் அவ்வாறே பொது உடைமையாக்கினாள். மீன் ரின்கள் இரண்டைக் கறியாக்கினர். கூடி உண்டனர்.

மாலையில் தண்ணீர் தேடிப் போனாள். நேற்று தண்ணீர் அள்ள விடவே மாட்டோம் என்றவர்களைக் காணவில்லை. போய் விட்டனர். கூடாரங்கள் வெறிச்சோடியிருந்தன.

கிணற்றில் சிலர் குளித்துக் கொண்டிருந்தனர். அதிலிருந்து நூறு மீற்றர் இருக்கலாம். வெடிப்பொருட்கள் கொண்ட வாகன மொன்று வெடிக்கத் தொடங்கியது. கரும்புகை குபுகுபுவெனத் திரளாக மேலெழும்பியது. திடீர் திடீரெனச் சன்னங்கள் பறந்தன.

பார்வதி எதையும் பொருட்படுத்தாமல் குளித்துமுடித்தாள். கூடவே வந்த ஜனனியையும் அம்பிகாவையும் குளிக்கச் செய்தாள். கொண்டுபோன பாத்திரங்களில் தண்ணீர் நிரப்பிக்கொண்டு திரும்பி வந்தார்கள்.

அந்தச் சூழலெங்கும் வெடிமருந்துக் குதங்களும், வாகனங்களும் எரிந்துகொண்டிருந்ததால் எறிகணைகள் வீழ்வதும் வெடிப்பதும் தெரியவில்லை.

வாண வேடிக்கைபோல சன்னங்கள் உயரப் பாய்ந்தன.

பேத்தி தமிழொளியும் இன்னொரு போராளியும் மீண்டும் வந்திருந்தார்கள். பார்வதி பொரித்த பலகாரத்தையும் கொடுத்து தேநீரும் ஊற்றிக் கொடுத்தாள். “ஏன் பிள்ளை, எல்லாருந்தான் விட்டிட்டுப் போயிற்றினம் எண்டுறாய். நீயும் நில்லன் பிள்ளை எங்களோட.”

தமிழொளி பேசாமல் இருந்தாள்.

நாலைந்து சிறுமிகள் அவர்களிடம் ஓடி வந்தனர். “எங்கள இயக்கம் வீட்ட போகச் சொல்லி அனுப்பீற்றுது. நாங்கள் அம்மா ஆக்களத் தேடித்திரியிறம்” என்று அழுதபடி சொன்னார்கள்.

“அங்க பிரதான தெருவுக்குப் போங்க, கன பெற்றார் பிள்ளையள் வருவினமெண்டு பாத்துக் கொண்டு நிக்கினம்” என்றாள் பார்வதி. அவர்கள் திரும்பி ஓடினர். பிடித்துச் செல்லப்பட்ட பிள்ளைகளைத் தேடிப் பெற்றோர் தெருவெங்கும் அலைந்தபடியிருந்தனர்.

“நீயும் நில்லு பிள்ளை” பார்வதி தமிழொளியிடம் மீண்டும் சொன்னாள்.

“வர ஏலாதம்மா... இண்டைக்கு இரவு ஒரு ஒழுங்கிருக்கு, அது பிசகினா வருவன். இல்லாட்டி பிறகு சந்திப்பம்.”

அவளுடன் வந்தவன் துர்க்காவின் பதுங்குகுழி மேலிருந்து அவசரப்படுத்தினான். “நேரமாச்சு நேரமாச்சு, இன்னும் அரை மணி நேரந்தான் இருக்கு....”

தமிழொளி எல்லோரையும் ஏக்கத்தோடு பார்த்தாள். “அவசர அவசிய வேலை. இப்ப நான் மாட்டனெண்டு சொல்ல ஏலாது” என மெதுவாகச் சொன்னவள் “நான் போறன்” என்றவாறு எழுந்தாள். அவளுடைய தேசிய அடையாள அட்டையையும், கொஞ்சம் பணத்தையும் ராணி அவளது கையில் திணித்து வைத்தாள்.

கூட வந்தவன் எழுந்தான். எல்லோரையும் கும்பிட்டு விடை பெற்றவன், “நாளைக்கு சனத்த விடுவாங்கள். இரவோட எங்கட வேலை முடியும்” என்றான். இருவரும் பக்கத்துக் கூடாரத்தின் ஊடாக நடந்து மறைந்து போனார்கள்.

(தமிழ்க்கவி எழுதிய ‘ஊழிக்காலம்’ நாவலின் சில பகுதிகள் - தமிழினி வெளியீடு.)

Pin It