இஸ்லாமிய இயக்கம் ஒன்றின் மிரட்டலுக்குப் பயந்து சட்டம் ஒழுங்கை முன்நிறுத்தி சென்னைப் பல்கலைக் கழகம், அமெரிக்க இஸ்லாமிய பெண்ணியலாளர் அமீனாவதூதின் நிகழ்ச்சியை ரத்து செய்திருக்கிறது. இது தமிழகத்திற்கு நேர்ந்த ஒரு அவமானமாகும். மாற்றுக் கருத்துக்கள் இல்லாமல் எதுவும் இல்லை. அதற்காக ஒரு இஸ்லாமிய பெண்ணிய சிந்தனைப் பரப்பைத் தடை செய்வது ஜனநாயகத்திற்கும், மனித உரிமைகளுக்கும் எதிரான ஒரு நடவடிக்கையாகும்.

aminavath_340மேற்குலகின் பெண்ணியத்தை அப்படியே மாதிரி யாக முன்வைக்க முடியாது.  ஆனால் இதிலிருந்து உருவாகும் இஸ்லாமிய பெண்ணியக் கோட்பாட்டை மறுதலிக்கவும் முடியாது. அதுபோல ஒற்றைப் படுத்தப் பட்ட பெண்ணியத்தை மறுகட்டமைப்பு செய்யும் வித்தியாசப் பெண்ணியக் கருத்தாக்கம் பெண்ணியத்தில் பன்மியத் தன்மையை வலியுறுத்துகிறது. ஜுலியா கிறிஸ்தவா, லிண்டா நிக்கெல்சன், லூயி எரிகாரே உள்ளிட்ட பெண்ணியச் சிந்தனையாளர்கள் இவ்வகையில் தொடர்ந்த உரையாடலை நிகழ்த்தி உள்ளார்கள்.

ஐரோப்பியச் சூழலில் பெண்களுக்கான ஒட்டுமொத்த பிரச்சினைகள் வெள்ளையின, கறுப்பின, லெஸ்பியன் இனப் பெண்களுக்கானது எனத் தனித்தனியாக வேறு படுத்தியே பார்க்கப்படுகிறது. இந்தியச் சூழல்களிலே சாதீய கட்டுமானத்திற்குள் இயங்கும் ஒடுக்கப்பட்ட பெண் களுக்கான பெண்ணியம், மத நிறுவன அமைப்புக்குள் செயலாக்கம் புரியும் பெண்ணியம் என்பதாக இதன் எல்லைகள் மாறுபட்டு விரிவடைந்துள்ளன.

இவ்வாறாக நுண் நிறுவனங்கள் வழி பெண்ணின் ஆற்றலைக் கட்டுப்படுத்துவதும், உயிரியல் தாழ்வு நிலையை மையமாகக் கொண்டு பாலியல் ஏற்றத்தாழ்வு களை நிரந்தரப்படுத்துவதும் தொடர்ந்து நிகழ்கிறது.

பெண்ணிய சிந்தனையுலகம், தமிழ்ப் பெண்ணியம், நவீன பெண்ணியம், மிதவாதப் பெண்ணியம், தீவிரப் பெண்ணியம், சோசலிசப் பெண்ணியம், பின் நவீனப் பெண்ணியம், கறுப்புப் பெண்ணியம், தலித் பெண்ணியம் என்பதாகப் பல நிலைகளில் செயல்படுகிறது. இந்நிலையில், இஸ்லாமியப் பெண்ணியத்திற்கான தேடல்களை ஆண்-பெண் உறவுகளையும், உரிமைகளையும் சரிசமமாகக் கருதுகிற புள்ளிகளிலிருந்தே நிகழ்த்த முடியும்.

இஸ்லாமியப் பெண்ணியச் சிந்தனையைப் பேசியவர்களில் இருபதாம் நூற்றாண்டின் துவக்ககால எகிப்திய அறிஞர்கள் காசீம் அமீன் (1863-1908) சலமா மூஸா (1887-1958) ஷெய்க் முஹம்மத் அப்தூ (1849) உள்ளிட்டோர் முக்கியத்துவம் பெறுகின்றனர். ஷரீ அத்தை விஞ்ஞானத்தின் துணைகொண்டு அணுகுதல், பெண்களுக்கான கல்வி, சுதந்திரம், சமத்துவம், அறிவுத்துறை தொடர்பான பிரச்சினைப்பாடுகளைப் பதிவு செய்தல் என்பதாக இது நடந்தேறியது.

ஈரானிய சமூக அறிஞர் அலிஷரிஅத்திய் பழமை வாதப் பெண், ஐரோப்பிய நாகரிகப் பெண் என்கிற இருவித எல்லைகளையும் விமர்சனப்படுத்தி மூன்றாம் நிலையிலான இஸ்லாமியப் பெண்ணைக் கட்டமைக் கிறார். பெண் பாலியல் பண்டமாக்கப்பட்டமைக்கு எதிர்வினையையும் ஆற்றுகிறார். மொழியியல் ஆய்வின் அடிப்படையில் ஏற்கனவே நிர்மாணிக்கப்பட கருத்தைச் சிதைத்து மறு கட்டுமானம் செய்கிறார். ஆதாமின் விலா எலும்பிலிருந்து ஹவ்வா படைக்கப்பட்டாள் என்கிற சொல்லாடலை மறுத்து திருக்குர் ஆனிய மூலமொழியில் ஆதமும், ஹவ்வாவும் ஒரே வித இயற்கையிலிருந்து படைக்கப்பட்டுள்ளதாகச் சொல்லப்பட்டு இருப்பதை விவரிக்கிறார். இந்தத் திசை வழியிலேயே பஞ்சாபில் பிறந்த குலாம் அஹ்மத் பர்வேஸ் தெற்காசிய சூழலில் முக்கியமானவராகிறார்.

உலக அளவில் இஸ்லாமிய பெண்ணியச் சிந்தனை களைத் தங்களது நூல்களாலும், சிந்தனைகளாலும் பேச்சாலும் முன்னெடுத்துச் சென்றவர்களில் வெர்ஜினியா காமன்வெல்த் பல்கலைக்கழகப் பேராசிரியை அமினாவதூத், நியூயார்க் அரசியல் பேராசிரியை அஸ்மா பர்லாஸ், கானடா எழுத்தாளரும் பத்திரிகையாளருமான இர்ஷத் மஞ்சி, சோமாலியாவை பிறப்பிடமாகக்கொண்ட அயன் ஹிர்ஸ் அலி, இந்திய அமெரிக்க முஸ்லிம் பத்திரிகை யாளரான அஸ்ரா கியூ நொமேனி, மேற்கு ஆப்பிரிக் காவின் மொரோக்கோ தேசத்தின் பாத்திமா மெர்னிஸி ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள்.

இதில் எழுத்தாளர் அமினா வதூத்தின் எழுத்துகள், சென்னைப் பல்கலைக்கழக இஸ்லாமிக் ஸ்டடிஸ் பிரிவில் பாடத் திட்டத்திலேயே சேர்க்கப்பட்டிருக்கிறது. அப்படி இருக்க, அவர் பேசுவதற்குத் தடை விதிக்கப் பட்டிருப்பது கண்டிக்கத்தக்கது. பாலினம் மற்றும் இஸ்லாமிய சீர்திருத்தங்கள்’ என்பது கருத்தரங்கில் அவர் பேச இருந்த தலைப்பு.

அமெரிக்காவிலிருந்து கேரள மாநிலத்திற்குவந்து கோழிக் கோட்டில் தங்கியிருந்த அவர் விமான நிலையத்தி லிருந்து சென்னை புறப்படவிருந்த சமயத்தில் இந்த கருத்தரங்க ரத்து அவருக்குத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

அமெரிக்காவின் மெரிலேண்ட் நகரைச் சேர்ந்தவர் அமினாவதூத் (Amina Wadut).  அறுபது வயதை நிரம்பியவர். இவர் எழுதிய மிக முக்கிய நூல்களில் குர் ஆனும் பெண்களும் - புனிதப் பிரதிகள் பெண்நோக்கில் மீள்வாசிப்பு (Qur'an and Woman: Rereading the Sacred Text from a Woman's Perspective) மற்றும் உள்கட்டமைப்பில் பாலின அறப்போர் - இஸ்லாத்தில் பெண்ணிய சீர் திருத்தங்கள் (Inside The Gender Jihad: Women's Reform in Islam) ஆகியவை குறிப்பிடத்தக்கவை.

ஆமினாவதூத் மலேசியாவை அடிப்படையாகக் கொண்டு இயங்கும் இஸ்லாமிய சகோதரிகள் அமைப்பின் நிறுவனர்களில் ஒருவர். இந்த அமைப்பானது உலகம் முழுவதும் பெண்களுக்கு நீதியையும், சமத்துவத்தையும் குர் ஆனிய அடிப்படையில் வலியுறுத்தி ஆன்மிக தளத்தில் கடந்த இருபதாண்டுகளுக்கும் மேலாக இயங்குகிறது. மேலும் பெண்களுக்கு எதிரான குடும்ப வன்முறை மற்றும் முத்தலாக் முறைமை ஆகியவற்றிற்கு குர் ஆனிய அடிப்படையில் சமத்துவ முறையிலான தீர்வை முன்னெடுக்கிறது. இஸ்லாமிய சகோதரிகள் அமைப்பு (SiS) என்பது நம்பிக்கைகொண்ட பெண் களுக்காக உலகம் முழுவதும் இயங்கும் அமைப்பு. இந்த அமைப்பின் ஒருங்கிணைப்போடு ஆமினாவதூத் முஸ்லிம் குடும்பங்களில் பெண்களுக்கான சமத்துவம் மற்றும் நீதி ஆகியவற்றை வலியுறுத்தி முசாவா இயக்கத்தை நடத்தினார்.

அமினாவதூத் நியூயார்க் நகரில் மார்ச் 18-ஆம் தேதி 2005-ஆம் வருடத்தில் வெள்ளிக்கிழமை ஜும்மா தொழு கையைப் பெண் இமாமாக நின்று தொழுவித்துக் கொடுத்தார். இது உலக அளவிலான விவாதத்திற்கும் பழமைவாதிகளின் கடும் கண்டனத்திற்கும் ஆளானது.

இது பற்றிய அன்றைய ஒரு இணைய செய்திக் குறிப்பினை இங்கு நாம் வாசிக்கலாம்.

தன் இனிய குரலில் தொழுகைக்கான அழைப்புகளை (Call to Prayer)  விடுத்த ஸஹய்லா எல்-அட்டார் (Sueyhla El-Attar). இவருடைய பாட்டனார் கெய்ரோ நகர மசூதி ஒன்றில் பல ஆண்டுகளாகத் தொழுகைக்கான அழைப்பு விடுத்து வருகிறார்.

தொழுகையின் ஆரம்பத்தில் கடவுளை நினைவு கூரும் ஜிகிர் (Zikr) -ஐ வழங்கிய கருப்பின முஸ்லிம் பெண் ஸலிமா அப்துல்-கஃபூர் (Saleemah Abdul-Ghafur).

இவர் Living Islam Out Loud : American Muslim Women Speak என்ற புத்தகம் எழுதியுள்ளார். செய்தி யாளர் கூட்டத்தில் பேசும் முஸ்லிம் விழிப்புணர்வு அமைப்பின் இயக்குநர் அஹமத் நாஸெஃப் (Ahmed Nassef).  எழுத்தாளர் ஆஸ்ரா நொமானி, தொழுகைக்குத் தலைமை வகித்த பேராசிரியர் அமினாவதூத் ஆகியோரும் செய்தியாளர் கூட்டத்தில் பேசினர். இது பால் சமத்துவம் நோக்கிய ஒரு செயல்பாடாகவே நாம் கருத முடியும்.

சென்னைப் பல்கலைக்கழகத் தடைவிதிப்புபற்றிக் குறிப்பிடும் எழுத்தாளர் அமினாவதூத், ‘‘என் உணர்வு களைப் பதிவு செய்ய, பகிர்ந்துகொள்ள நினைத்தேன். அனுமதி மறுத்திருக்கிறார்கள்’ என்று சொல்லியிருக் கிறார். ட்விட்டர், ஃபேஸ் புக் மற்றும் ஊடகங்களுக்கு இப்படிச் சொல்லியிருக்கிறார் அமினா. இதுபோன்ற சூழலில் பொது நிகழ்ச்சிகளில், பல்கலைக்கழகங்கள் அல்லது கல்லூரிகள் நடத்தும் நிகழ்வுகளில், சமூக அமைப்புகள் நடத்தும் கருத்தரங்குகளில் தன்னால் பங்கேற்க இயலாது என்றும் வருத்தத்தோடு குறிப் பிட்டிருக்கிறார். அவருடைய ட்விட்டர் பக்கத்தில் 300க்கும் மேற்பட்ட அவரின் ஆதரவாளர்கள் இது தொடர்பாகக் கருத்துச் சொல்லியிருக்கிறார்கள். ஃபேஸ்புக்கில் அவருடைய 1,868 உறுப்பினர்களும் ஆதரவு தெரிவித்திருக்கிறார்கள்.

எழுத்தாளரின் பேச்சால் சட்டம் ஒழுங்கு பாதிக்கப் படலாம் என்ற நிலையில் நிகழ்ச்சிக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. அமெரிக்க தூதரகத்துக்குப் பல மாதங்களாகப் பாதுகாப்பு கொடுக்கப்படும்போது இந்தியப் பல்கலைக்கழகத்துக்கு போலீஸ் பாதுகாப்பு கொடுக்க முடியாதா?’’ என முன்னாள் நீதிபதி சந்துரு கேட்டிருக்கும் கேள்வி நடுநிலையாளர்களையும் சிந்திக்க வைக்கிறது.

டாக்டர் ஆமீனாவதூதின் சென்னைப் பல்கலைக்கழகச் சிறப்பு விரிவுரை ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து எழுத்தாளர்கள், பத்திரிகையாளர்கள், கல்வியாளர்கள் கூட்டறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இந்தக் கூட்டமைப்பு அறிக்கையில் தமிழக மற்றும் இலங்கை எழுத்தாளர்கள் 89 பேர் கையெழுத்திட்டுள்ளனர்.

Pin It