சமீபத்திய மூன்றாண்டுகளில் நடந்த இஸ்லாமியத் தமிழ் இலக்கிய மாநாடுகள், கருத்தரங்கங்கள், கூட்டங்கள் ஆகியவற்றில், ஒரு சில நிகழ்வுகளில் பார்வையாளனாகக் கலந்துகொள்ளும் வாய்ப்புகள் கிடைக்கப் பெற்றேன். மிக அரிதாக நடத்தப்பட்ட அந்த நிகழ்ச்சிகள் எல்லாமே, ஓரளவு பிரம்மாண் டத்தைக் கொண்டிருந்தன. தமிழின் முக்கிய இலக்கண, இலக்கியவாதிகள், படைப்பாளிகள், அரசியல் வாதிகளையும் மேடையேற்றியிருந்தன. இருந்தாலும், அந்த நிகழ்வுகள் பல்வேறு இடர்ப் பாடுகளுக்கிடையே நடத்தப்படுவது தெரிய வந்தது. சிலவற்றுக்குப் பொருளாதார நெருக்கடி. சிலவற்றில் நிகழ்ச்சி நிரலே நெருக்கடி, சில நிகழ்ச்சிகள் புகழ்ச்சிக்காக நடத்தப்பட்டன. சில, அவசியம் கருதி. இன்னும் சில, கட்டாயத்தின் பேரில்!

அந்த நிகழ்ச்சிகள் எல்லாவற்றிலுமே இஸ் லாமியத் தமிழ் இலக்கிய வரலாறு பற்றிய பேச்சு களாக விழா நடத்துபவர்களைப் புகழ்வதும், அதற்கு அப்புறமாக, இஸ்லாமியர்களின் மறைநூலான குரான், முகம்மது நபியவர்களின் வாழ்க்கை முறையை மையமாகக் கொண்ட ஹதீஸ்களிலிருந்து ஒரு சிலவற்றை எடுத்துப் பேசுவதுமே பிரதானமாக இருந்தன. மேடையேறியிருந்த பிற சமூகங்களின் பிரபலங்கள்கூட ‘பொத்தாம் பொதுவாக’ இஸ் லாத்தின் மாட்சிமை, நபிகளின் வாழ்க்கை என்று தான் பேசினார்கள். மாற்றுச் சமூகத்தினர் இஸ்லாம் பற்றிப் பேசினால் உச்சி குளிர்ந்து போகும் முஸ்லிம்கள் கைதட்டல்களைக் காற்றில் கலக்கவிட்டனர்.

அதுபோலவே, ஒருவர் வாசித்து முடித்த கட்டுரையின் பிரதியாகவே அடுத்தவரின் கட்டுரையும் இருப்பதைப் பார்க்க நேர்ந்தது. உரைகளும் அப்படியே. ஒரு புள்ளியிலிருந்து துவங்கிப் பெரு வெள்ளமாக உருக்கொள்ளும் பாய்ச்சலை, அதற்கான பரந்த வெளியிருந்தும் எந்தவொரு கட்டுரையோ, பேச்சோ கருக்கொள்ளவில்லை. புதிய கோணங்களையோ, அபார வீச்சையோ அந்தக் கருக்கள் கொண்டிருக்க வில்லை. வாசித்த, பேசிய ஆட்கள் வேறுவேறாக இருந்தனர். ஆனால் சொற்கள் ஒன்று போலவே இருந்தன.

ஒரு சிலர் இவற்றிலிருந்து விலகி சீறாப் புராணத்தை, குணங்குடி மஸ்தான் சாகிபுப் பாடல் களைப் பற்றிப் பேசினர். அவர்களும்கூட கடிகை முத்துப் புலவரின் மாணவரான உமறுவின் வாழ்க்கை, வடக்கிலிருந்து வந்த வாலைக்குருவுடனான போட்டி, எட்டையபுர மன்னரின் ஆதரவு, சீதக்காதியின் ஆவல், அவர் உமறுவிடம் எண்ணத்தை வெளிப் படுத்துதல், ஆன்மிக ஆசான் சதக்கத்துல்லா அப்பா விடம் அழைத்துச் செல்லுதல், உமறுவைக் கண்ணு றும் சதக்கத்துல்லா அப்பா அவர் கோலம்கண்டு சினந்து உரைதர மறுத்தல், முகம்மது நபியின் கனவுப் பிரவேசம், முதலில் மறுத்த சதக்கத்துல்லா அப்பாவே, பின்பு தகவல்தர சம்மதித்தது என்று பரவலாக அறியப்பட்ட கருத்துகளைப் பகிர்ந்து விட்டு, இறங்கிவிடுபவர்களாக இருந்தனர். அதைத் தாண்டி, இஸ்லாமியத் தமிழ் இலக்கியத்தில் எதுவும் இல்லை என்பது போலான தோற்றத்தை அவர்களின் பேச்சு உருவாக்குவதாக இருந்தது.

சமீப காலமாக, இஸ்லாமியத் தமிழ்ப் படைப் பாளிகளில் சிலரும் அப்படித்தான் எழுதியும் வரு கின்றனர். அதைப் படிக்கும் போது, ‘உண்மையும் அதுதானோ?’ என்ற சஞ்சலம் உருவாகிறது. ‘அவ்வளவு தானோ?’ என்று நம்பவும் தோன்றுகிறது. அதற்கு அந்தப் படைப்பாளிகள் லாவகமாக எடுத்து வைக்கும் தரவுகள், உதவுகின்றன. ஆனால் அவையெல்லாமே பொதுப் புத்தியில் பதிய வைக்கப்பட்ட மிகச் சாதாரண விஷயங்களாக இருக்கின்றன. தேடுதல் இல்லாத மொன்னைப் பயணங்களை அவை பேசுகின்றன.

அந்த வகையில் இங்கே ஃபிர்தௌஸ் ராஜ குமாரன் என்னும் எழுத்தாளர் ‘உயிர் எழுத்து’ மார்ச் - 2012 இதழில், ‘தற்கால இஸ்லாமியப் படைப்புகளும் - படைப்பாளிகளும்...’ என்னும் தலைப்பில் எழுதியுள்ள கட்டுரையை ஒப்புநோக்கலாம். நிறைய தரவுகள் இருப்பதுபோலத் தோற்றம் தரும் அந்தக் கட்டுரை, வெள்ளாடு மேய்ந்த புல்தரையாகக் காணப்படுகிறது. “தமிழிலக்கியத்தில் செவ்வியல் பண்புகொண்ட இஸ்லாமிய இலக்கியங்கள் மிகக் குறைவே. சீறாப்புராணம் போன்றதொரு காவியச் சுவை உள்ள எந்தப் படைப்பும் இதுவரை வரவே யில்லை” என்றும், அதே கட்டுரையின் பிறிதொரு இடத்தில், ‘சீறாப்புராணத்தைத் தாண்டி இலக்கியம் இன்னும் வளரவேயில்லை! இஸ்லாமிய இலக்கியம் என்றாலே சீறாப்புராணமும் குணங்குடி மஸ்தான் சாகிப்பின் பாடல்களும் என்ற நிலை தான் இன்னமும்!’ என்று அதில் அறுதியிட்டுள்ளார்.

‘வரவில்லை... வளரவில்லை’ என்று குறிப் பிட்டிருப்பாரேயானால், அது அவரது வாசிப்பின் தேடுதலைப் பொருத்தது என்று விட்டுவிடலாம். அவர் சுட்டும் ‘வரவேயில்லை... வளரவேயில்லை’ என்னும் அழுத்தத்தில், அவர் மிக நீண்ட தேடுதலை நடத்தியது போலவும் அதனடிப்படையில் அக் கட்டுரையை எழுதியது போலவும் காட்டியுள்ளார். அதே வேளையில் அந்தக் கட்டுரையில், சீறாப் புராணத்தையும், குணங்குடி மஸ்தான் சாகிபு பாடல்களையும் இதே இஸ்லாமிய சமூகம், எந்த அளவுக்கு ஏற்றுக் கொண்டது என்பது குறித்த தரவுகள் எதையும் அவர் குறிப்பிடவில்லை.

பிறரின் அடியொற்றியதாக இருக்கும் அவரின் இந்தப் போக்கு, கீரனூர் ஜாகீர்ராஜா தனது எதிர் வினையில் குறிப்பிட்டிருப்பதுபோல, ‘சீறாவையும், மஸ்தானின் கீர்த்தனைகளையும் தன் வாழ்நாளில் சீண்டிக்கூடப் பார்த்திருக்கமாட்டார்’ என்பதை உறுதிப்படுத்துகிறது.

கடந்த அரை நூற்றாண்டில் நடத்தப்பட்ட பல்வேறு ஆய்வுகள், தேடல்கள், முயற்சிகள், பரண் களில் ஒளிந்துகிடந்த இஸ்லாமியத் தமிழ் இலக்கிய நூல்களை, ஒழிக்கப்பட்ட, மறைக்கப்பட்ட, இலை மறை காயாகக் கிடந்த பல அரிய பொக்கிஷங்களை வெளிக்கொண்டு வந்துள்ளன. எண்ணிறந்த அவை யெல்லாமே தமிழ் இலக்கியப் பெரு வெளியில் முக்கிய இடத்திற்கானவை. பொருளமைப்பிலும் கட்டமைப்பிலும் புகழ் வாய்ந்த வேறெந்த மொழி நூல்களுக்கும் சற்றும் குறைவில்லாதவை.

இஸ்லாமிய இலக்கியம், இஸ்லாம் பரவிய தேசங்கள் அத்தனையிலும் அந்த மண்ணுடனும் மண்ணின் வாழ்க்கையுடனும் இரண்டறக் கலந்த தாகவே இருந்து வந்திருக்கின்றது. இருந்தும் வரு கின்றது. சொல்லப்போனால், ‘இஸ்லாம் உலகில் பரவுவதற்கு முன்பிருந்தே அம்மதத்தின் மூல ஸ்தலமான அரேபியாவின் மக்கள், பல்வேறு நாடுகளுக்கு வியாபார நிமித்தமாகச் சென்று வருபவர்களாக இருந்துள்ளனர். மேற்கு இந்திய நாடுகளுடன் அரேபியர்கள் பெருமளவிலான வியாபார நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தனர் என்கிறார், இலங்கையைச் சேர்ந்த வரலாற்றாசிரியர் எஸ்.சிறிகந்தையா.

எஸ்.கிருஷ்ணசாமி ஐயங்கார் தனது நூலில், ‘முகம்மது நபியின் வருகையினாலும் அவரின் பின் வந்தவர்களின் தலைமையில் இஸ்லாம் வளர்ச்சி யடைந்தமையினாலும் ஒரே முறையில் அட்லாண்டிக் சமுத்திரத்திலிருந்து பசுபிக் சமுத்திரம் வரையிலு முள்ள பிரதேசங்களில் இஸ்லாம் பரவியபோதிலும் அவர்களின் செல்வாக்கு நிலையாக இருந்தது. இந்த சமுத்திரத்தைச் சேர்ந்த நாடுகளிலேயாம்’ என்றும், ‘அவர்கள் உடல்பலம் வாய்ந்த பேரரசாக மாறியது இந்து சமுத்திரத்திலேதான்’ என்றும், ‘அரபு மக்களின் வருகையினால் ஏற்பட்ட நிலை யான பெரும்பேறுகளை இந்து சமுத்திரத்தின் மேற்குக்கரை நாடுகளிலே காணக்கூடியதாக உள்ளது’ என்றும் குறிப்பிட்டு உள்ளார்.

அதன்படி, பண்டமாற்று வியாபாரத்துக்காக வந்த அரேபியர்கள், தங்களின் ‘நிலையான பெரும் பேறுகளான’ இலக்கிய வகைமைகளையும் வடிவங் களையும் கொடுத்துவிட்டே போயிருக்கிறார்கள்.

கி.பி.ஏழாம் நூற்றாண்டு முடிவதற்கு முன்பே தமிழ்நாட்டில் நுழைந்த இஸ்லாமுடன் இஸ்லாமிய மக்களின் வாழ்க்கை முறையும் நுழைந்துவிட்டது. இஸ்லாமியர்களின் வாழ்க்கை முறை இஸ்லாத்தின் நெறியடிப்படையில் இருந்து வருகிறது. இஸ்லாத்தின் நெறியே இஸ்லாமிய இலக்கியமாகவும் உருக் கொண்டுள்ளது. குறிப்பாக, தமிழ்ப் பெரு வெளியில் இஸ்லாமிய இலக்கியத்தின் பங்கு அலாதியானது.

ஆனால் தமிழிலக்கிய வரலாறு எழுதிய எழுத் தாளர்கள், ஒரு சில நூல்களை அறிமுகப்படுத்தி விட்டு, தமிழ்த் தொண்டிலே ஊறித்திளைத்த பல நூற்றுக்கணக்கான இஸ்லாமியத் தமிழ்ப் படைப்பு களை, அது வேறு மொழியிலானது என்று தள்ளி வைத்துவிட்டனர். அவர்கள் ஆராயாமல் விட்டது ஒருபுறமிருக்க, தமது இலக்கிய வளம் குறித்து அறியாதவர்களாக இஸ்லாமியர்களே இருந்து விட்டதுதான் வேதனையானது. அதுதான் ஃபிர்தௌஸ் ராஜகுமாரன்களைத் தேடுதல் இல்லாமல் இப்படி எழுதச் செய்கிறது.

சைவ, வைணவ, சமண, பௌத்த சமயங்கள் தமிழுக்குக் கொடையாக இலக்கியங்களைக் கொடுத் திருப்பதுபோல இஸ்லாமும் தமிழுக்குச் சிறப்புடன் கொடையளித்திருக்கிறது. உலகின் வேறெந்த மொழிக்குமில்லாத தனிப்பெருஞ்சிறப்பு தமிழுக்கு உண்டு. எல்லாச் சமயங்களும் தமிழைப் பேணி வளர்த்துள்ளன. அந்த வகையில் ‘எண்ணிறந்த இஸ்லாமியப் புலவர்கள் மிகச் சிறந்த படைப்புகள் பலவற்றைத் தமிழிலேயே படைத்திருக்கின்றனர். இவ்விலக்கியங்களினாலே தமிழ் இலக்கியம் பெரும் பயனடைந்திருக்கின்றது’ என்று சொல்லி யிருக்கிறார், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் கலாநிதி சு.வித்தியானந்தன். மேலும் அவர், தான் எழுதிய ‘தமிழ்த்தென்றல்’, ‘கலையும் பண்பும்’ என்னும் நூல்களில், ஏனைய தமிழ் இலக்கிய வரலாறு எழுதிய நூலாசிரியர்கள் புறக்கணித்திருந்த இஸ்லாமியத் தமிழ் இலக்கியம் பற்றிய வரலாற்றினைக் குறிப்பிட்டும் எழுதியிருக்கிறார்.

1946ஆம் ஆண்டில் இலங்கைப் பேராதனைப் பல்கலைக் கழகப் புகுமுக வகுப்புக்கான நேர்முகத் தேர்வில் கலந்துகொண்ட இஸ்லாமிய மாணவர் ம.முகம்மது உவைஸ் என்பவரிடம் அப்பல்கலைக் கழகத் தமிழ்ப் பேராசிரியராக இருந்த விபுலானந்த அடிகள், ‘தமிழிலுள்ள இஸ்லாமியக் காப்பிய மொன்றைக் குறிப்பிடும்படி கேட்டிருக்கிறார். அப்போது அதற்குப் பதில் சொல்ல முடியாமல் அந்த மாணவர் தத்தளித்தபோது, ‘நீங்கள் சீறாப் புராணம் பற்றிக் கேள்விப்பட்டதில்லையா?’ என்று வினவியிருக்கிறார். அப்படி சீறாப்புராணமேகூட வெகுதளங்களில் அறியப்படாமலேயே இருந்திருக்கிறது.

பேராசிரியர் விபுலானந்தரின் அந்தக் கேள்வி சம்பந்தப்பட்ட மாணவரை மட்டுமல்ல, பிற பேராசிரியர்களையும் ஆய்வாளர்களையும் விழிக்கச் செய்திருக்கிறது. விபுலானந்தருக்குப் பின் அப் பல்கலைக்கழகத்தில் தமிழ்ப் பேராசிரியராகப் பொறுப்பேற்ற பேராசிரியர் ச.கணபதிப்பிள்ளை இஸ்லாமிய இலக்கியப் பகுதியைத் தனது துறையில் துவக்கியிருக்கிறார். அதன் பயனாகவே இஸ்லாமியத் தமிழ் இலக்கியம் வெளிப்பட்டிருக்கிறது.

விபுலானந்தரின் கேள்விக்குப் பதில் சொல்ல முடியாமல் அன்று தத்தளித்த மாணவர் ம.முகம்மது உவைஸ், இஸ்லாமியத் தமிழ் இலக்கியத்தில் ‘முதுகலைமாமணி’ பட்டம் பெற்றார். அப்போது, ‘Muslim contribution to Tamil literature’ என்னும் பொருளில் ஆய்வு செய்து, ‘கலாநிதி’ பட்டம் பெற்றிருக்கிறார். அவரது தமிழிலக்கிய ஆய்வுகள், கடந்த காலத்தில் கண்டுகொள்ளப்படாமலிருந்த இஸ்லாமியத் தமிழிலக்கியப் படைப்புகளைக் கண்டடையச் செய்திருக்கின்றன. அவரைப் போலவே தமிழ்ச் சமூகத்தில் பலரும் ஆராய்ச்சியில் ஈடுபட்டு, இஸ்லாமியர்களின் பங்களிப்பு, தமிழ் இலக்கிய வரலாற்றில் கணிசமாக உள்ளது என்று நிரூபணம் செய்துள்ளனர்.

இது குறித்து, மதுரை காமராசர் பல்கலைக் கழகத்தின் தமிழியல்துறைத் தலைவராக இருந்த தி.முருகரத்தினம், ‘உலகப் பெருஞ்சமயங்களெல்லாம் தமிழகத்தின் மண்ணில் மணம் வீசிக்கொண்டிருக் கின்றன. இஸ்லாமியத் தமிழ் இலக்கியங்களில் காப்பியங்கள், சிற்றிலக்கியங்கள், பக்தி சமய இலக் கியங்கள் எனப் பலப்பல உள்ளன. ஆனால் அவற்றின் வரலாறுகள் புதையுண்ட பொன்போலப் புலப் படாது கிடக்கின்றன’ என்கிறார்.

தொடர்ந்து நடைபெற்றுவரும் இஸ்லாத்தின் வரலாறு, பண்பாடு, இலக்கியம் குறித்த ஆய்வுகள் மூலமாக, இஸ்லாமியத் தமிழ் இலக்கியத்தின் மூத்த நூலான ‘பல்சந்த மாலை’யின் எட்டுப் பாடல்கள் கிடைக்கப் பெற்றிருக்கின்றன. நூலின் பெயர் புலப்படாத அகப்பொருள் பற்றிய நூலுக்குப் பேராசிரியர் வையாபுரிப்பிள்ளையவர்களால் ‘களவியற் காரிகை’ எனப் பெயரிடப்பட்டிருக்கும் இதில், ‘பல்சந்த மாலை’க்குரிய சில பாடல்கள் மேற்கோள் செய்யுட்களாகத் தரப்பட்டுள்ளன. களவியற்காரிகை என்னும் நூலின் இறுதிப் பகுதியில் பேராசிரியர் அவர்கள், ‘பல்சந்தமாலை என்ற பெயருடைய நூல் ஒரு சில செய்திகளைப் புலப்படுத்துகிறது. பன்னிரு பாட்டியலில் பல்சந்த மாலை என்றொரு பிரபந்தவகை கூறப்பட்டுள்ளது’ என்கிறார்.

இது சீறாப்புராணத்துக்கும் முந்திய காலத்தது. கி.பி.12 ஆம் நூற்றாண்டின் இறுதியில் தமிழ்நாட்டின் ஒரு பகுதியான வைப்பாற்றுக்கும் வைகையாற்றுக்கும் இடைப்பட்ட பகுதியை ஆண்டு வந்த ஒரு முஸ்லிம் மன்னனைக் குறித்துப் பாடப்பட்டது. கிடைத் திருக்கும் எட்டுப் பாடல்களில் இரண்டாவது பாடல் இது.

நாட்டம் புதைக்கின்ற தென்னீ மடந்தை நவ கண்டமே

வீட்டம் புகழ்வின்னன் மேவா ரெனவிங்ஙன் யான்வருந்த

வாட்டம் பயின்றாங் ககிலின் குழம்பணிந் தாகமெங்கும்

வேட்டம் தெரிகின்ற கொங்கைக ளென்னை மிகைசெய்தவே.

இதற்கு, ‘நீ ஏன் நாணிக் கண் புதைக்கின்றாய்? மடந்தையே! ஒன்பது கண்டங்களுக்கு அப்பாலும் சென்று புகழ் ஈட்டும் வின்னன் தன் பகைவர் என யான் வருந்தி, அங்கு அகிலின் குழம்பு அணிந்து, ஆகம் முழுவதும் வேட்கை மீதூர்ந்து விளங்கு கின்ற கொங்கைகள் என்னை மிகவும் வருத்தின’ என்பது பொருள்.

இது அகப்பொருட்டுறையில் ‘ஆற்றான் கிளத்தல்’ என்னும் வகையாகும். இதனைப் பேரா சிரியர் வையாபுரிப்பிள்ளையவர்கள், ‘இவ்வகை சொல்லக் கேட்டு நாணினாற் கண்புதைத்தாளுக்குத் தலைமகன் கூறுதல்’ என்று விளக்குகிறார்.

திருக்கோவையார், ‘கண்புதைக்க வருந்துதல்’ என்கிறார். திருக்கோவையாரில் 43 - ஆவது திருப் பாடல் இதற்கு மேற்கோளாகக் காட்டப்பட்டுள்ளது.

தலைவி வெட்கப்படுகிறாள். அவ்வெட்கம் காரணமாகக் கண்களைப் புதைத்துக் கொள்கிறாள். அவள் தன்முன் வராது கண்புதைத்து ஒதுங்கின மையைத் தலைவனால் பொறுக்க முடியவில்லை. அவன் ஆற்றாது வருந்தினான். அவ்வாறு வருந்திய தலைவன் தன் வருத்தம் தோன்ற தலைவியை நோக்கிக் கூறுவதாக உள்ளது. இதனை யாத்த ஆசிரியரின் பெயர்கூடத் தெரியவராத நிலையில், அற்புதமாக இருக்கும் இதனை ஏன் வரலாற்றை எழுதியவர்கள் தவிர்த்தார்கள் என்பது வரலாற்றின் புதிரான பகுதியாகும்.

சீறாப்புராணத்துக்கு முந்திய பல்சந்த மாலை தவிர்த்து, யாகோபு சித்தர் பாடல்கள், ஆயிர மஸ் அலா, மிகுறாசு மாலை, திருநெறி நீதம், கனகாபிஷேக மாலை, சக்கூன் படைப்போர், முதுமொழி மாலை, மக்காப்பள்ளு ஆகிய வகைமைகள் கண்டறியப் பட்டுள்ளன.

இதில் மிகுறாசு மாலை தமிழ் இலக்கியத்துக்குப் புதிய வகையைச் சேர்ந்தது. விண்ணேற்றம் குறித்த முதல் நூலாகக் கருதப்படுகிறது. அதுபோல ஆயிர மஸ் அலா பிற சமய, இன இலக்கியங்களில் இல்லாத இஸ்லாமிய மதத்திற்கே உரிய சிறப்பிலக்கிய வகையாகும். யாகோபு சித்தர் பாடல்களில் பெரும் பான்மையானவை மருத்துவம் குறித்தவை. இவை யெல்லாமே இஸ்லாம் தோன்றிய பின், கி.பி.1700 ஆம் ஆண்டுக்குள் எழுதப்பட்டவை.

அதே வேளையில், கி.பி.1807 முதல் கி.பி.1821 வரையிலான 15 ஆண்டுகளில் ஒன்பது இஸ்லாமியக் காப்பியங்கள் தமிழில் படைக்கப்பட்டுள்ளன. பதினைந்து ஆண்டுகள் என்பது, 2500 ஆண்டு களின் வரலாறு கொண்ட தமிழ் இலக்கியப் பெருவெளியில் மிகக் குறைந்த காலமாகும். இந்தக் கால வெளிக்குள் ஒன்பது காப்பியங்கள் படைக்கப் பட்டுள்ளன என்பது, வேறு எந்தக் காலகட்டத்திலும் இல்லாதது. இலக்கியக் காப்பியப் போட்டி நடத்திய மதுரை மீசல் வண்ணக் களஞ்சியப் புலவரும், காயல் பட்டினத்து செய்கு அப்துல் காதிறு நயினார் லெப்பை ஆலிம்புலவரும் எழுதிய குத்பு நாயகம் முகியித்தீன் புராணங்கள் மிக முக்கியமானவை. மேலும் சின்ன சீறா, இராஜ நாயகம், திருமணி மாலை, இறவுசுல்கூல் படைப்போர், புதுகுஷ்ஷாம், நவமணி மாலை, நாகூர்ப் புராணம், ஆரிபுப் புராணம் என்று விரிந்து செல்கிறது.

இது தவிர, இஸ்லாமியக் குறுங்காப்பியங் களாக வேத புராணம், பொன்னரிய மாலை, யூசுபு நபி காவியம், முகாஷபா மாலை, மூசா நபி புராணம், ஷாதுலி நாயகம் என்று மீட்டெடுக்கப் பட்டுள்ளன. சிற்றிலக்கியங்கள் வகையில் படைப் போர் இலக்கியம், முனாஜத்து இலக்கியம், கிஸ்ஸா இலக்கியம், மஸ்அலா இலக்கியம், நாமா இலக்கியம், கலம்பக இலக்கியம், அந்தாதி இலக்கியம், ஆற்றுப் படை இலக்கியம், கோவை இலக்கியம், மாலை இலக்கியம், சதக இலக்கியம், பிள்ளைத் தமிழ் என்றும் எழுதப்பட்டுள்ளன. இவையத்தனையுமே தமிழிலுள்ள இஸ்லாமிய இலக்கியங்கள்தான்.

தமிழ்கூறும் நல்லுலகில் இருக்கும் இவை யெல்லாம் சேரவேண்டிய இடத்திற்குச் சேரவேண்டிய சமூகத்துக்கு முழுமையாகச் சென்றடையவில்லை என்பது வேண்டுமானால் உண்மையாக இருக்கலாம். ஆனால் ‘அதுபோல ஒன்று இல்லவேயில்லை’ என்று பேசுவதையும் எழுதுவதையும், அவர்கள் அதை அறியாமல் செய்கிறார்கள் என்று எடுத்துக் கொள்ள வேண்டியதுதான்.

‘இஸ்லாமியப் படைப்புகளுக்கும் படைப்பாளி களுக்கும் இஸ்லாமிய சமூகம் தரும் அங்கீகார மின்மை குறித்து, கடந்த 2012 மார்ச் 5 ஆம் தேதி திருச்சி ஜமால் முகம்மது கல்லூரியில் நடந்த ‘இஸ்லாமிய நவீன புனைகதைகள்’ கருத்தரங்கில் திருவிதாங்கூர் முஸ்லிம் கலைக்கல்லூரியின் தமிழ் இஸ்லாம் இருக்கையின் தலைவர் பேராசிரியர் ஹாமீம் முஸ்தபா, ‘முறையாக 12 - ஆம் நூற்றாண்டிலிருந்து தொடங்கும் இஸ்லாமியத் தமிழ்ப் பேரிலக்கிய வரலாற்றில் பேசுவதற்கும் எழுதுவதற்கும் எவ்வளவோ கொட்டிக் கிடக்கின்றது. அள்ளஅள்ளக் குறையாத அதை மீட்டெடுப்போம். போதுமான அளவுக்கு இருக்கும் அதைத் தாண்டி இஸ்லாமிய நவீன இலக்கியம், பெருவீச்சுடன் இஸ்லாமியத் தமிழ்ப் பேரிலக்கியத்திற்குத் தன் பங்களிப்பைத் தந்து வருவது, பெருங்கவனத்திற்குரியது’ என்று பேசியது, மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்தது.

தரவுகள் எடுத்தாளப்பட்ட மூலங்கள்:

1.            இஸ்லாமியத் தமிழ் இலக்கிய வரலாறு - பதிப்புத்துறை, மதுரை காமராசர் பல்கலைக் கழகம் - தொகுதிகள் 1,2,3

2.            உயிர்எழுத்து மாத இதழ், மார்ச் - 2012 - ஃபிர்தௌஸ் ராஜகுமாரனின் கட்டுரை.

3.            உயிர்எழுத்து மாத இதழ், ஏப்ரல் - 2012 ஃபிர்தௌஸ் ராஜகுமாரனின் கட்டுரைக்கு கீரனூர் ஜாகீர்ராஜாவின் எதிர்வினை.

4.            இஸ்லாமிய வலைத்தளங்கள்

5.            பேரா.ஹாமீம் முஸ்தபா உரை.

6.            தமிழிசை அறிஞர் ந.மம்மது அவர்களுடனான தொடர் உரையாடல்.

Pin It