இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் ஆரம்பலகாலத் தலைவர்களுள் ஒருவரும் விடுதலைப் போராட்ட வீரருமான தோழர் சி.எஸ்.சுப்பிரமணியம் அவர்கள் 18-9-2011 அன்று இயற்கை எய்தினார். தனது 102-ஆவது வயதில் அமரரான மூத்த தோழர் சி.எஸ். சில மாதங்களுக்கு முன்பு வரை தாமே சமைத்து உண்டு, தம்முடைய துணிகளைத் தாமே துவைத்துக்கொண்ட மாபெரும் ஆளுமை. நாற்காலியில் அமரும்போதோ, எழும்போதோ, நடந்து செல்லும்போதோ ‘இவர் சிரமப்படு கிறாரே...’ என்று எண்ணி அருகிலுள்ள தோழர் கள் யாரேனும் கைகொடுத்தால், “நோ, நோ, ஐ கேன் மேனேஜ்...” என்று தன்னம்பிக்கையை வெளிப்படுத்தும் பாங்கு கொண்டவர் சி.எஸ்.சுப்பிரமணியம். அவர் அமரரானவுடன், அவரது உடல் சென்னைப் புறநகர், அம்பத்தூரில் உள்ள நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் வளாகத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டு, அங்கே அவருக்கு இறுதி அஞ்சலிக் கூட்டம் நடத்தப்பட்டது.

கூட்டத்தில் உரையாற்றிய இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநிலச் செயலாளர் தா.பாண்டியன் தமது உரையில்,. “தோழர் சி.எஸ்.அவர்கள் முதுமையிலும் இளையவராக வாழ்ந்து நாட்டிற்கும், கட்சிக்கும் பெருமை தேடித் தந்தவர். தோழர் சி.எஸ். தன்னை மறந்தார்; உலகத் தையும் மக்களையும் நேசித்தார். முதுமையில் சாதாரண நோய்வாய்ப்பட்டவர்கள், தன் நோயைப் பற்றியும் தன்னைப் பற்றியும் பேசுவார்கள். ஆனால் இவர் தன்னைப் பற்றிப் பேசினால், ‘அதைவிடு’ என்று கூறுவார். ‘கட்சியில் என்ன செய்கிறீர்கள், எங்கு கட்சி வளர்ந்திருக்கிறது? உறுப்பினர் எண்ணிக்கை என்ன?’ என்று கேள்வி கேட்டுப் பதிலை எதிர்பார்ப்பார்.

கட்சியில் எந்தப் பொறுப்பிலும் இல்லாவிட் டாலும் வாழ்நாள் முழுவதும் கட்சியைப் பற்றியே சிந்திப்பதுதான் அவர் செயல். மறைந்த தோழர் கள் பி.சுந்தரய்யா, வ.சுப்பையா, நாகை கே.முருகேசன், ரஷ்யமாணிக்கம், ஆர்யா போன்ற வர்கள்தாம் இவரது உற்ற நண்பர்கள். சிங்கார வேலர், சக்கரை செட்டியார், ஜீவா, பி.ராமமூர்த்தி, பி.சீனிவாசராவ் ஆகியோருடன் இணைந்து பணியாற்றியுள்ளார். பல சதி வழக்குகள், அடக்கு முறைகளைச் சந்தித்தவர் தோழர் சி.எஸ். 1947க்குப் பின்னர், அனைத்தையும் துறந்து துறவி போல் வாழ்ந்தார்.

கடந்த ஐந்து ஆண்டுகளாக, தமிழகத்தின் மூத்த தோழர்களைப் பார்க்கச் செல்லும்போது, நேரில் நான் கண்டதைச் சொல்கிறேன். அவர்களுக்குத் தங்கள் வீட்டுக் குழந்தையைக்கூட அடையாளம் தெரிவதில்லை. ஆனால் கட்சித் தோழர்களைப் பார்க்கும்போது முழுமையான ஞாபக சக்தியுடன் பேசுகிறார்கள், இந்த வியத்தகு மனிதர்கள். தோழர் சி.எஸ். 102 வயதிலும் நாங்கள் சென்று பார்த்த போது ஒவ்வொருவரின் பெயரையும் சொல்லிக் கேட்டார். கோபுவிடம் ‘அமீர் ஹைதர் கான் எங்கு கைது செய்யப்பட்டார்?’ எனக் கேள்வி கேட்டுப் பதில் பெற்றார். பொழுதெல்லாம் நாட்டிற்குத் தொண்டாற்றியவர் சி.எஸ். இயற் கையின் கட்டளைப்படி அவரது மூச்சு நின்றது. ஆனால் அவர் வாழ்ந்து காட்டிய பாடம், என் றென்றும் தொடரும். அவர் வழியில் நின்று பாடுபட சபதமேற்போம். எந்தக் கொடியை உயர்த்திப் பிடிக்க வேண்டும் என்று சி.எஸ். வலியுறுத்தினாரோ, அந்தக் கொடியை இறக்கி அவருக்கு அஞ்சலி செலுத்துகிறோம்” என்றார்.

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய கட்டுப்பாட்டுக் குழுத் தலைவர் ஆர். நல்லகண்ணு தமது உரையில் “தோழர் சி.எஸ். அவர்கள் மரி யாதைக்குரிய தலைவர், விடுதலைப் போராட்ட வீரர். அவரது வாழ்வின் அர்த்தம் கடைசிவரை உள்ளது. 1946-இல் அரை ட்ரவுசர், பனியன் போட்டு ஜனசக்தியில் பணியாற்றியபோது சந்தித் தேன். பிடிவாதமானவர், உறுதியுடன் செயல் பட்டவர், தன்னை முன்னிலைப்படுத்தாதவர் சி.எஸ். அவர்கள். நமது கட்சித் தோழர்களைப் பார்த்து இளவயதில் வேகமாக இருக்கிறாய், வயதாகும்போது கடவுள் பக்தி வந்துவிடும் என்பார்கள். ஆனால் அவர் இலண்டன் சென்று படித்துவிட்டு வந்த பின்னர் இறுதிவரை மாறாத கொள்கை உறுதியுடன் இருந்தார். அண்மையில் நானும் முத்தரசனும் அவரைப் பார்க்கச் சென்றிருந்தபோது எழுப்பி உட்கார வைத்தோம். “கட்சி வளர்ந்திருக்கிறதா?” என்று கேட்டார்.

தமிழ்நாட்டு கம்யூனிஸ்ட் கட்சியைப்பற்றி ஒரு புத்தகம் எழுதும்படி கேட்ட போது, “ஆதாரம் இல்லாமல் எழுதமாட்டேன்” என்று அடம் பிடித்தார். பின்னர், ‘The Growth of Communist Party’ என்ற நூலை எழுதினார். புகைப்படம் எடுக்க அனுமதிக்க மாட்டார். திருப்பூரில் ஒரு நிகழ்ச்சி யில், அவரை அழைத்துவந்து மாநாட்டில் கொடி யேற்றி வைக்கச் செய்து, அவரது 100-ஆவது பிறந்த நாளை, நூற்றாண்டு விழா துவக்கத்தை அறி வித்தோம். அவரது வரலாற்றைச் சொல்லக்கூட அனுமதிக்க மாட்டார். ஈரோட்டில் மக்கள் சிந்தனைப் பேரவை சார்பில் தோழர் சி.எஸ்.க்கு பாரதி விருது கொடுக்க அழைத்தபோதுகூட அவர் ஒத்துக்கொள்ளவில்லை. தோழர் ஸ்டாலின் குணசேகரன் ‘மேடையில் வந்து அமர்ந்தால் போதும்’ என்று சொல்லியதால் ஒத்துக்கொண்டு அந்த விழாவில் கலந்துகொண்டு பாரதி விருதைப் பெற்றுக் கொண்டார் சி.எஸ்.

வட்ட மேஜை மாநாட்டிற்கு காந்தி சென்ற போது அவரை இலண்டனில் சி.எஸ். சந்தித்தார். சி.எஸ். மற்றும் கே.முருகேசன் இணைந்து ஆங் கிலத்தில் சிங்காரவேலரைப் பற்றி ‘தென்னிந் தியாவின் முதல் கம்யூனிஸ்ட்’ என்ற நூலை எழுதி னார்கள். அது வெளிவர 15 ஆண்டுகள் ஆயின. அதில் சிங்காரவேலர் கோட்டு சூட் போட்ட படம் போடக்கூடாது என்றார். ‘பின் எந்தப் படத்தைப் போடுவது?’ என்று நாங்கள் கேட்டோம். அப் போது காந்திஜி, வழக்கறிஞர்கள் நீதிமன்றங் களைப் புறக்கணிக்க வேண்டும் என்று அறைகூவல் விடுத்தபோது, தமிழகத்தில் கோட்டைக் களைந்து வீசியெறிந்த முதல் வழக்கறிஞர் சிங்கார வேலர்தான். அதனால் அந்தப் படத்தைப் போட வேண்டும் என்றார்.

பாரதியின் இந்தியா பத்திரிகை குறித்த நூலைத் தொகுத்தார். இதற்குப் பின்புதான் பாரதியாரின் இந்தியா பத்திரிகையைப் பற்றி அனைவரும் அறிந்தனர். சி.எஸ். எளிமையானவர், பிடிவாத மானவர், தன் வேலையைத் தானே செய்வார், அதனால்தான் 100 வயதிற்கு மேலாக வாழ்ந்தார். தான் கொண்ட கொள்கையில் உறுதியுடன் வாழ்ந்த சி.எஸ். அவர்களின் வாழ்க்கையை ஒரு பாடமாக, எடுத்துக்காட்டாகக் கொண்டு நாம் வாழ வேண்டும்” என்று குறிப்பிட்டார்.

மூத்த தோழர் என்.வரதராஜன் (சி.பி.எம்.) தமது உரையில், “கம்யூனிச இயக்கத்திற்காக சி.எஸ். செய்த தியாகமும், சேவையும் நினைத்து நினைத்து வாழ்க்கையில் கடைப்பிடிக்கத் தக்கவையாகும். சி.எஸ். என்ற மகத்தான மனிதர் பற்றிய உணர்வு என்னை ஈர்த்தது போல் பலரையும் எதிர்காலத் தில் ஈர்க்கும். அந்த மகத்தான மாவீரனுடைய செயல்களை முன்னெடுத்துச் செல்வோம். சி.எஸ். அவர்களுக்கு என் வீரவணக்கத்தைச் செலுத்து கிறேன்.” என்று கூறினார்.

திரைப்படக் கலைஞர் ராஜேஷ் உரையாற்று கையில் “இரண்டு மூன்றாண்டுகளுக்கு முன்பாக ஒரு தோழர் சி.எஸ். பற்றி என்னிடம் கூறினார். நூறு வயதைத் தாண்டி அவர் வாழ்கிறார் என்ற செய்தியைக் கேட்டு நான் பிரமிப்பானேன். அதனால் இரண்டாண்டுகளுக்கு முன் கோபியில் இருந்த அவருடைய வீட்டிற்குச் சென்று பார்த் தேன். 100 வயதிலும் 70 வயது மதிக்கத்தக்க வராகத்தான் இருந்தார். தோழர் சி.எஸ்.சிடம் நான் பேசும்போது வியப்பாக இருந்தது. 80ஐத் தாண்டினால் பெரும்பாலோருக்கு வெவ்வேறு சிந்தனைகள் வரும், பலர் விரக்தியாகப் பேசு வார்கள். தோழர் சி.எஸ். பேசும்போது மனஉறுதி யோடு 40 வயது உள்ளவர் போலப் பேசினார். அவர் இறந்துவிட்டார் என்ற செய்தி கேட்டு அதிர்ச்சியானேன். என் குடும்பத்திற்காக என் சொந்தங்களுக்காக நான் சினிமாவில் சம்பாதித் துக் கொண்டிருக்கிறேன். கம்யூனிசத்திற்காக நான் எதுவும் செய்யவில்லை. அதனால் தோழர் சி.எஸ். இறுதி ஊர்வலத்தில் கலந்து கொள்வதை பாக்கிய மாகக் கருதி இங்கே வந்தேன். இவரது உழைப்பையும், மனஉறுதியையும் போல வேறு யாரிட மும் நான் பார்த்ததில்லை” என்றார்.

இந்தியக் கம்யூனிஸ்ட் (மார்க்சிஸ்ட்) கட்சி மூத்த தோழர் என்.சங்கரய்யா, இரங்கல் செய்தி அனுப்பியிருந்தார்.

இக்கூட்டத்தில் சி.எஸ். அவர்களின் உறவினர் களும் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய குழு உறுப்பினர் ஏ.எம்.கோபு, தோழர்கள் கே.ஜீவ பாரதி, பழனி.சுந்தரேசன், ஜி.பழனிச்சாமி, கே.சுப்ப ராயன், எஸ்.சோமு, மு.சம்பத், எஸ்.எஸ்.தியாக ராஜன், டி.ஆர்.எஸ்.மணி, இரா.முத்தரசன், ஆர்.துரைசாமி, சி.எம்.துளசிமணி, ஜி.வெங்க டாசலம், வி.பி.குணசேகரன் நா.பெரியசாமி உள் ளிட்டோரும் நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் நிறுவனத் தின் பணியாளர்களும் திரளாகக் கலந்து கொண்டனர்.

இறுதிவரை கொள்கையில் உறுதியுடன் வாழ்ந்துகாட்டிய தோழர் சி.எஸ். அவர்களுக்கு எங்கள் செவ்வணக்கம்!

Pin It