மார்கனின் சமுதாய வளர்ச்சிக் கட்டங்கள் பற்றிய கருத்துகளை வகைப்படுத்திய எங்கெல்ஸ், சமுதாய முன்னேற்றத்தில் ஐந்து வளர்ச்சிப் படி நிலைகளைக் கண்டறிந்தார். அவை: புராதனப் பொது உடைமைச் சமூகம் - அதாவது இனக்குழு வாழ்க்கைச் சமூகம், அடுத்து அடிமைச் சமூகம், நிலமானியச் சமூகம். மனித சமுதாயம் இன்று முதலாளித்துவச் சமூக அமைப்பில் இயங்கிக் கொண்டிருக்கிறது.  எங்கெல்ஸ் போன்ற சிந்தனை யாளர்களின் கூற்றுப்படி அடுத்து நாம் அடைய வேண்டிய, நாம் அடைய இருக்கிற சமூக வளர்ச்சி - சோஷலிசச் சமூகம்.

தொல் பழங்குடியினத்தவர் இது என் நாடு, இது என் எல்லை; அது உன் நாடு, அது உன் எல்லைஎன்று பகைமை பாராட்டத் தெரியாதவர்கள்.  இயற்கை சில வேளைகளில் மழையின்மையால் வறட்சியையும், அளவற்ற மழையினால் வெள்ளத்தையும், சூறைக்காற்றையும் வாரி இறைத்த வேளையில், இயற்கையைத் தம் வயப்படுத்த நினைத்த மனிதன்

இயற்கைக்கு ஆணையிட்டான். மேகங்கள் சேர்வது போல, இடியிடிப்பது போல பாவனை செய்து இயற்கையே, நான் செய்வதைப் பின்பற்றி, நீயும் இவ்வாறு மழையைப் பொழிவி!என்று உத்தர விட்டான்.

இந்த மாய வித்தையானது நாகரிகம் வளர்ச்சி யுற்று, வர்க்க வேறுபாடு தோன்றும் வேளையில் உழைக்காதவர்களுக்கு ஊதியம் அளிக்கிற நோக்கில் மதமாக உருவெடுக்கிறது. ஆதிமனிதன், கடவுள் என்ற சொல்லை அறியாது, இயற்கைக்கு ஆணையிட்ட சடங்குகள், பிற்காலத்தில் கடவுளிடம் கையேந்த வைக்கிற மதமாக மாறி, அந்த மதம் எவ்வாறு அரசியலில் ஊடுருவி, அதிகாரத்தைப் பிடித்துள்ளது என்பதை ஆய்ந்து, ‘ஆதிமனிதன் கையாண்ட மந்திரம், சடங்குகள் வேறு; குறுக்கே பாய்ந்த மதங்களின் மந்திரம், சடங்குகள் வேறுஎன்று வகைப்படுத்தி எழுதப்பட்டுள்ளது - பிள்ளையார் அரசியல்என்னும் இந்நூல். 

மதங்களையும் மதம் சார்ந்த சடங்குகளையும் பொது வாழ்விலிருந்து - குறிப்பாக, அரசியலிலிருந்து ஒதுக்கி வைக்க வேண்டும்.  மதம் தனிமனிதன் சார்ந்ததாக மட்டுமே ஆக்கப்பட வேண்டும்என்று வலியுறுத்துகிறார் இந்நூலை இயற்றியுள்ள ஆ.சிவசுப்பிரமணியன்.  முன்னோர் சொன்னதை அப்படியே காப்பியடிப்பதை விடுத்து, எந்தக் கோட்பாட்டையும் நடைமுறையில் காணும் மார்க்சிய ஆய்வு முறையின்படி, நாட்டார் வழக் காற்றியலில் ஆழ்ந்து ஈடுபட்டு ஆராய்ச்சி செய்து வரும் - குறிப்பாக, நூல்களைக் காட்டிலும் களப் பணிகளில் கடுமையாக உழைத்துவரும் ஆ.சிவசுப்பிர மணியன் 1980-களிலிருந்து 2000 வரை நம் மண்ணில் அவ்வப்போது எழுந்த சமூகச் சிக்கல்களைப் பண் பாட்டு மானிடவியல் நோக்கில் நேரடியாக ஆய்ந்து, தெளிந்த வரைமுறையுடன் பல்வேறு இதழ்களில் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பே இந்நூல். 

சமபந்தி - ஓர் எதிர்ப் பண்பாடுஎன்னும்  முதலாவது கட்டுரையில் பந்திஎன்பது இனக் குழு வாழ்க்கையில் பாதீடு’, ‘கூட்டுணாஎன்ற சங்க இலக்கியச் சொற்கள் அனைவரும் பகுத்து உண்டதைக் குறிக்கின்றன என்று இயம்பும் நூலாசிரியர் பொருளியல் வேறுபாடுகள், சாதிய மேலாண்மை உருவான பின்னர், உணவு வேளையின் போது உடன் அமர வேண்டியவர்கள் குறித்த வரையறைகள் உருவாகினஎன்று துவங்கி, மனுதர்ம சாஸ்திரமும், அதைப் பின்பற்றும் இந்து மதமும் இந்தியச் சமூகத்தில், ஒரே வரிசையில் அமர்ந்து உண்ணுபவர்கள் ஒரே சாதியினராக இருக்க வேண்டும் என்ற மரபுக்கு எவ்வாறு வித்திட்டு அதை வளர்த்தன என்று விளக்குகிறார். குறிப்பாக, ‘பார்ப்பனர்கள் உணவு உண்ணுவதை மற்ற சாதியினர் பார்க்கக் கூடாது, பார்த்தால் தீட்டு உண்டாகும்என்ற மனுவின் விதி, திருவாங்கூர் மன்னர் பிராமணர்களுக்கு உணவளித்த போது, அதை மன்னரின் மகன் பார்த்ததால் தீட்டாகி, புதிதாக உணவு சமைக்கப்பட்டுப் பரிமாறப்பட்ட தகவலும் இக்கட்டுரையில் கொடுக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக, பிராமணர்கள், சைவர்கள், கிறித்தவர்கள் (தலித் அல்லாதவர்கள்) எப்படி சாதிக் கொடுமை நிகழ்த்தி வருகின்றனர் என்பதற்குச் சான்றாக, தமிழகத்தில் நடந்த பல்வேறு நிகழ்ச்சி களைத் தெளிவுறுத்துகிறார் நூலாசிரியர். ஆதிக்க சக்திகள் பண்பாடு என்ற பெயரில் மேலாண்மை செய்து வருவதற்கு எதிராக, எதிர்ப் பண்பாடு (ஊடிரவேநச ஊரடவரசந) ஒன்று உருவாக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்துகிறார்.

பூசாரிகளுக்கு வலைவிரிக்கும் இந்துத்துவ அரசியல்என்ற இரண்டாவது கட்டுரை கிராமப் புறக் கோவில் பூசாரிகளை ஆதிக்க சமூகம் இழிவு படுத்துவதைப் பற்றி விவாதிக்கிறது.

1990களில் இந்துத்துவ ஆதிக்கத்துடன் கை கோத்துக் கொண்டு தமிழக அரசே கிராமங்களில் உள்ள கோவில் பூசாரிகள் தகுந்த பயிற்சி பெற வேண்டும்என்ற வேண்டுகோள் பெயரில் ஆணை யிட்டதைச் சுட்டிக்காட்டி எழுதிய நூலாசிரியர் அதனால் ஏற்படக்கூடிய விளைவுகளைத் தெரிவித்து உள்ளார்.

அடுத்து இடம்பெற்றிருப்பது - இந்நூலுக்குப் பெயராக விளங்கும் பிள்ளையார் அரசியல்என்னும் கட்டுரை.  தமிழக மக்களின் வாழ்க்கையில் இடம்பெற்றுள்ள பிள்ளையாரின் தோற்றம் குறித்த சில கதைகளைக் கூறி அவருக்கு யானை உருவம் எப்படி வந்தது என்று, வரலாற்று அளவிலான ஆய்வின் மூலம் கூறுகிறார் நூலாசிரியர்.  நீண்ட காலமாக, பிராமணியத்துக்கு வெளியே மற்றை யோருக்கு மட்டும் கடவுளாக விளங்கிய கணபதி தமிழக நாட்டார்களிடம் இயற்கைப் பாதிப்புகள் நேரும் போது தண்டனை பெறுகிற அளவுக்கு நெருக்கமாக இருந்தார் என்பதை விவரித்து குப்தப் பேரரசில் ஆளுவோரின் சமயமாக விளங்கிய பிராமணியச் சமயம் சூத்திரர்களின் கடவுளான பிள்ளையாரைத் தன்னுள் இணைத்துக் கொண்டதைச் சுட்டிக்காட்டுகிறார்.  இவ்வாறாக, பிராமணக் கடவுள்களில் ஒருவராக இடம்பிடித்த பிள்ளையார் உயர்ந்த தெய்வம் என்ற வகையில் அடுத்த படி நிலைக்கு எப்படிச் சென்றார் என்பதை இக் கட்டுரையின் மூலம் எளிதில் அறிந்துகொள்ள முடிகிறது.

அடுத்த கட்டுரை 1999-இல் வெளிவந்த ஓர் அர்த்தமுள்ள குடிமக்களுக்குச் சில அர்த்தமுள்ள கேள்விகள்என்னும் தலைப்புடையது. போப் இரண்டாம் ஜான் பாலின் இந்திய வருகையையொட்டி, இந்து மதவாத அமைப்பு களின் செலவில் இந்தியா முழுவதும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. அதில் மதமாற்றம் என்பது ஒருவரை அவரது பாரம்பரியத்திலிருந்து துண்டித்து விடுவதாகச் சுட்டிக்காட்டி, குரல் எழுப்பியுள்ளன - இந்துத்துவ அமைப்புகள்.  அதனைத் தனது கட்டுரையில் சுட்டியுள்ள நூலாசிரியர் இந்துப் பாரம்பரியம் அடித்தட்டு மக்களை என்னென்ன செய்தது என்றும், அவர்கள் மதம் மாறினால் இந்து சமயத்தின் எந்தப் பாரம்பரியம் கெட்டு விடும் என்றும் வினவி, இந்து ஆதிக்கத்தை நோக்கி இருபத்தொன்பது கேள்விகளை முன்வைத்து உள்ளார்.  பாரம்பரிய மதத்தில் உள்ள அழுக்கு களாக நூலாசிரியரால் சுட்டிக்காட்டப் பெறுபவை இன்னும் தீர்க்கப்படவேண்டிய நிலையிலேயே உள்ளன.

இந்திய அரசின் விளையாட்டுத் துறை ஆண்டு தோறும் வழங்கி வரும் விருதுகளில் ஒன்றான துரோணாச்சாரியார் விருதினைப் பற்றியது அடுத்த கட்டுரை.  அதில் துரோணாச்சாரியாரின் யோக்கியதையைக் கிழிகிழியெனக் கிழித்து, அப்பெயரை நீக்கி ஏகலைவன் விருதுஎன்று பெயர் சூட்டும்படி வலுவாக வாதிட்டிருக்கிறார்.

சிறு பிள்ளைகளுக்கிடையே நேரும் அற்பச் சச்சரவுகள் முதல் பெரிய மனிதர்களிடையே நிகழும் ஆணவச் சண்டைகள் வரை எந்த உரையாடலிலும் நீ என்ன அரிச்சந்திரனா?’ என்றோ நீ என்ன அரிச்சந்திரன் வீட்டுக்கு அடுத்த வீட்டுக்காரனா?’ என்றோ உணர்ச்சிமிகு வினா ஒன்று இயல்பாக எழும். அந்த அளவுக்கு இந்தியாவில் இந்த அரிச் சந்திரனின் கதை பிரசித்தம். ஆனால், இதற்கு மாறுபட்ட கருத்தினை - அதாவது, அரிச்சந்திரனின் சுயரூபத்தை அரிச்சந்திரன் - ஒரு மறுவாசிப்புஎன்னும் கட்டுரை நமக்கு எடுத்தியம்புகிறது.

வியாசபாரதத்தின் வனபர்வம் 77-ஆம் அத்தி யாயத்திலிருந்து விசயபாரதி மறுவாசிப்பு செய்து எழுதிய செய்தியையும் கி.பி.பதினாறாம் நூற்றாண்டில் வீரகவிராயர் எழுதிய அரிச்சந்திரபுராணம் என்னும் தமிழ் நூல் அளிக்கும் தகவலையும் மேற்கோள்களாகக் கையாண்டு, இந்நூலாசிரியர் அரிச்சந்திரனின் மெய்யுருவை நமக்கு வெளிப்படுத்துகிறார்.

அரிச்சந்திரன் விசுவாமித்திரனிடம் சிக்கி, அவரது வற்புறுத்தலின்படி புலைக்குலம் என்னும் தாழ்த்தப்பட்ட இனத்தைச் சார்ந்த பெண்களை மணக்கிற சூழ்நிலை ஏற்படும் பொழுது, என்ன இழப்பு நேர்ந்தாலும், எந்த இழிநிலை வந்தாலும் புலைச்சியரை மணக்க மாட்டேன் என்று கூறித் தன்னுடைய நாட்டையும் செல்வத்தையும் நீர் வார்த்துக் கொடுத்து தனது வருணத் தூய்மைக் கொள்கையை உறுதியுடன் கடைப்பிடித்துள்ளான்.

பண்டைய நூல்களில் இடம்பெற்றுள்ள எத்தனையோ பயனுள்ள மருத்துவக் குறிப்புகள், மெய்யியல் குறிப்புகள் எல்லாம் மக்களுக்குத் தெரியாமல் மறைந்து கிடக்க, ஆதிக்க வர்க்கத்தின் இதுபோன்ற புரட்டல் செய்திகள் மட்டும் இன்றும், நம்மில் பட்டணம் முதல் பட்டிக்காடு வரை எப்படிப் பரவியிருக்கிறது, பாருங்கள்!

அடுத்து, ‘சிவாஜி விழாவும் பாரதியும்என்ற பெயரில் இடம்பெற்றுள்ள கட்டுரை பத்தொன் பதாம் நூற்றாண்டின் இறுதியிலும், இருபதாம் நூற்றாண்டின் துவக்கத்திலும், வட இந்தியாவில் நடந்த சத்ரபதி சிவாஜி பிறந்தநாள் கொண்டாட்ட விழாக்களில் இஸ்லாமியர்களை வருந்தச் செய்யும் படி பேசப்பட்ட உரைகளைப் பற்றியது.  அதனால் எழுந்த சச்சரவு இஸ்லாமியர்களின் இதயங்களில் என்னென்ன எதிர்வினைகளை ஏற்படுத்தும் என்று தமிழகத்திலிருந்துகொண்டே உற்றுநோக்கிய மகாகவி பாரதியார் அந்தச் சச்சரவு விதை முளை விடா வண்ணம் எவ்வாறு தனது எழுத்தின் மூலம் முட்டுக்கட்டை இட்டார் என்பதை இக்கட்டுரை விளக்குகிறது.

பள்ளித் தலமனைத்தும் கோயில் செய்குவோம்என்ற பாரதியின் வரியை இந்துத்துவவாதிகள் எவ்வாறு நோக்கினர், அதை எவ்வாறு நோக்க வேண்டும் என்பதையே இக்கட்டுரையில் நூலாசிரியர் விவரித்திருக்கிறார்.  பாரதியின் படைப்புகளில் இருந்து, சில மேற்கோள்களைக் காட்டி, அவரது கண்ணோட்டம் இதுதான் என்று விளக்கி, கோவில் களுக்குரிய சிறப்பான இடத்தைப் பள்ளிகளும் பெற வேண்டுமென்பதும் கோவில்களைப் போலவே பள்ளிகளும் சமுதாயச் சொத்தாகத் திகழ வேண்டு மென்பதும்தான் பாரதியின் கருத்து என்று முத்தாய்ப்பாகக் கட்டுரையை நிறைவு செய்கிறார் ஆசிரியர்.

இந்தியாவில் சமயக் காழ்ப்புணர்ச்சி, சமயச் சசிப்புத் தன்மை இவ்விரண்டையும், வரலாற்று நிகழ்ச்சிகளின் அடிப்படையில் எந்தப் பாதை?’ என்னும் தலைப்பில் இந்நூலாசிரியர் விளக்கி யுள்ளார்.  இந்துக்கள் முஸ்லிம் பள்ளி வாசல்களுக்கு உதவி புரிந்து ஆதரவு அளித்து வந்ததையும், இன்றும் அப்படியே அளித்து வருவதையும், இந்துக் கோவில் களுக்கு இஸ்லாமிய மன்னர் ஆதரவுக்கரம் நீட்டியதையும் சுட்டிக்காட்டியுள்ளார். அதே போன்று, கிறித்தவ தேவாலயத்துக்கு இந்து மன்னரின் அன்பளிப்பு, மாரியம்மன் கோயிலுக்கு வேளாங் கன்னி ஆலயத்தின் நன்கொடை எனப் பல வரலாற்றா தாரங்களின் அடிப்படையில் நிறுவப்பட்ட இக் கட்டுரை மனிதநேயத்தை வலியுறுத்துகிறது.

சாதிய முரண்பாடுகளும் மதமாற்றமும்என்னும் கட்டுரை, ஒரு குறிப்பிட்ட சாதியினர் அல்லது ஊரினர் பெருந்திரளாக மதம் மாறும் குழும மதமாற்றம், படையெடுப்பு, வரிக்கொடுமை, இடர்ப் பாதுகாப்பு, திருமண உறவு, வேலை வாய்ப்பு, மருத்துவம், கல்வி போன்ற உலகியல் காரணங் களால் மட்டுமே நிகழும் என்று வாதிடுகிறது.  தமிழகத்தில் பாதுகாப்புக்காக இந்துக்கள் மதம் மாறிய ஓரிரு நிகழ்ச்சிகளை இடம், நாள், பின் புலம், விளைவு ஆகிய விவரங்களுடன் எடுத் துரைத்துள்ளார் நூலாசிரியர்.

2002-இல் தமிழ்நாடு அரசு வெளியிட்ட மத மாற்றத் தடைச் சட்டத்தின் உண்மைத் தன்மையை, எதிர்கால விளைவை, அதைச் சமுதாயம் இவ்வாறு எதிர்கொள்ள வேண்டும் என்ற வரைமுறையைப் பேசுகிறது - மதமாற்றத் தடைச் சட்டம் - சில மறைக்கப்பட்ட உண்மைகள்என்னும் சிறு உரை.

அடுத்து, ‘சமபந்தி - ஓர் எதிர்ப்பண்பாடு: மேலும் சில செய்திகள்என்னும் ஒரு பின்னிணைப்பு இடம் பெற்றுள்ளது. அது நூலின் முதல் கட்டுரையின் செய்தியை ஒட்டியதே.  அதில் தந்தை பெரியார் எழுதிய சுயசரிதைஎன்னும் நூலிலிருந்து சுவை யான மேற்கோள் ஒன்று இணைக்கப்பட்டுள்ளது.  அதைப் படிக்கிற வாசகர்கள் குலுங்கிக் குலுங்கிச் சிரிப்பர்; சிரிப்பு அடங்கியதும் நிமிர்ந்தமர்ந்து சிந்திப்பர்.

மதம் சமூகத்தை விட்டே ஒழிய வேண்டும் என்பதே மார்க்சிய நோக்கம்.  இருப்பினும், இன்றைய சூழலில், மதம் எவ்வாறு மனித சமூகத்தில் ஊடாடிக்கொண்டிருக்கிறது என்று கண்டறிந்து, மார்க்சிய அடிப்படையில் அதைக் கையாண்டு எதிர்காலத்தில் உருவாக இருக்கிற சமயமற்ற சமூகத்துக்கு அடிகோல வேண்டும். அதற்கான முயற்சிகளுள் ஒன்றுதான் ஆ.சிவசுப்பிரமணியன் இயற்றியுள்ள பிள்ளையார் அரசியல்என்னும் இந்நூல்.   வழிபிறழாது, மொழி தளராது, நோக்கத்தை நோக்கிக் கருத்தை நகர்த்திச் செல்லும் சிவசுப்பிர மணியத்தின் எழுத்துப் பண்பு இந்நூலிலும் மிளிர் கிறது.  பாவை பப்ளிகேஷன்ஸ் வெளியிட்டுள்ள இந்நூல் இன்றைய சமூகத்துக்கு இன்றியமையாத நூல்.

பிள்ளையார் அரசியல்

மத அடிப்படைவாதம் பற்றிய கட்டுரைகள்

ஆசிரியர் : ஆ.சிவசுப்பிரமணியன்

வெளியீடு : பாவை பப்ளிகேஷன்ஸ்

விலை : ரூ.75.00

Pin It