அமோகமாக வளர்ந்து அனைவரையும் ஈர்த்த புதுக் கவிதைகள் சற்றே தேக்கமடைந்துவிட்டதோ என்றும், மலிவடைந்து போயிற்றோ என்றும் எனக்கு எண்ணங்கள் உண்டானதுண்டு. அதை மாற்றும் வகையிலும், நம்பிக்கை யூட்டும் வகையிலும் எழுதிவரும் கவிஞர்களில் அதுவும் குறிப்பாகப் பெண் கவிஞர்களில் குறிப்பிடத்தகுந்தவர் சுமதிராம்! ‘நவீன கவிதையுலகில் தவிர்க்க முடியாதவர்’ எனத் தனது படைப்பாற்றலால் நிரூபித்துக் கொண் டிருப்பவர்!

வாழ்க்கை அனுபவங்கள் அர்த்த ரூபங்களாக மனதில் பதிகிற பொழுது அவற்றை இப்படியான எழுத்துக்களின் வழியே எல்லோருடனும் பகிர்ந்துகொள்ளலாம் என்கிற உண்மையை உணர்த்தும் கவிதைகள் இதில் நிறையவே உள்ளன. அநேகமாக எல்லாக் கவிதைகளிலுமே இவரும், இவரது துணைவரும், மகளும், வாழ்விடமும், பணியும் மையம் கொண்டு இருப்பதை வாசிப்பவர்கள் மிகச் சீக்கிரத்திலேயே அறிந்துகொள்ள முடியும்.

பள்ளிக் கேள்வித் தாள்களானாலுஞ்சரி; கல்லூரிக் கேள்வித் தாள்களானாலுஞ்சரி... தமிழ்ப் பாடப் பிரிவில் கோடிட்ட இடங்களை நிரப்புக என்றொரு பகுதி இடம் பெறுவதுண்டு! மாணவ மாணவியர் தத்தமது நினை வாற்றலைக் கொண்டு அது செய்யுள் வரியாயினும் அல்லது உரைநடை வரியாயினும் சரியாக ஓரிரு வார்த்தைகளைக் கொண்டு நிரப்பிவிடுவர். மதிப்பெண்ணும் அதற்குப் பெற்று விடுவர்.

இங்கே கவிஞர் சுமதிராம், கோடிட்ட இடங்களாக நிறையவற்றை நமக்குக் காட்டி அவற்றை நம்மைக் கொண்டே நிரப்பிக் கொள்ளச் சொல்கிறார். அவருக்கான அனுபவங்களைக் கொண்டு அவரும் நிரப்பிக்கொண்டே வருவதைப் படித்துப் படித்து... நகர்ந்து வருகிற வாசக நெஞ்சங்களுக்கு அவரவர் அனுபவங்களுக்கேற்ப நிரப்பிக் கொள்கிற புதிய பாடங்களையும் கற்றுக் கொடுத்து விடுகிறார்.

இளம்பிஞ்சுக் கையைப் பிடித்து மெல்ல மெல்ல நடக்கக் கற்றுக் கொடுக்கும் தாயின் அன்புப் பிடிப்பைப் பார்த்திருக்கிறோம்! தோழமையோடு கை குலுக்கி, இணைந்து ஒன்றாகி ஒரு பாதையில் நடக்கும் நட்புப் பிடிப்பைக் கண்டிருக்கிறோம்! தளர்ந்துபோன பெற்றோர் களை, உற்றார் உறவினர்களை அணுகி அணைத்துக் கொள்ளும் பாசப் பிடிப்பையும் அனுபவித்திருக்கிறோம்! தட்டுத் தடுமாறிக் கீழே விழப்போகும் ஆதரவற்றவர் களையும் வழிகொண்டு சேர்க்கும் நேசப்பிடிப்பையும் உணர்ந்திருக்கிறோம். இவையனைத்தையும் ஒரே துடிப்போடு தனது கவிதைகளின் வழியே நமக்குள் மறுபதிவு செய்கிறார் இந்தக் கவிஞர் சுமதிராம்.

புதிய தலைமுறையின் புத்திக் கூர்மை கொண்ட இவரது மகள், இந்தத் தொகுதியின் முதல் கவிதையான மாலை நேரக் கேள்வியில் தொடங்கி... கசடற, அப்பா மகள், பொம்மைக் கடவுள், பண்ணை சென்ற சிறுமி, ஏன், சிறியது கேட்கின், அம்மாவிற்கும், அசைதல், வீச்சு, அப்பா வந்த நாளில், சிறு மகிழ்வு கொண்டு, தொலைத்த தேடல்... என ஒரு டஜன் கவிதைகளில் வண்ணச் சிறகுகள் விரித்துப் பறந்து பறந்து நம் மனங்களில் ஒட்டிக் கொள்கிறாள்.

திருமண ஆல்பத்தில் தாங்கள் இடம்பெறவில்லை யென்று குழந்தைகளுக்கு வருகிற கோபமும், பொதுமைத் தன்மையோடு அனைவருக்குமான குணத்தைக் காட்டு கின்றது. கடவுளைக் காட்டிலும், பொம்மையையும் உயிருள்ள ஜீவனாகக் கருதும் பூசாரித் தாத்தாவைப் புரிந்து கொண்டுவிட்ட பகுத்தறிவுச் சிறுமி பாராட்டுக்குரியவளே! அதுபோன்றே இயற்கையின் இனிமையில் தன் நெஞ்சைப் படரவிட்டு மகிழ்ந்துபோன அவள்...

“அல்லிக் குளத்தை / அலைபேசியில் படமெடுத்து / கைப்பேசிக்கு குளிருதாம்...” எனச் சிரித்தாள். நிலா வந்து அல்லி பூக்கும் வரை காத்திருப்பதற்கு அசதி விடவில்லை. தூக்கம் வந்து அவளை அள்ளிக் கொண்டுவிட்டது.

“நிலா வந்தபோது / அதைப் பார்க்காமலேயே / தூங்கிப் போயிருந்தாள்...” என்று சுமதிராம் கவிதையை முடிக்கிறார்.

‘விண்ணில் அந்த நிலா பூத்து வந்ததுகூட, மண்ணில் துயிலும் இந்த மலரைப் பார்ப்பதற்காகவே’ என்று நமக்குள் கவிதையைத் துவங்கச் செய்கிறார்.

“பாப்பாவைப் படைத்த கைகளினாலே / பால் போன்ற நிலவைப் படைத்தானோ...” என்று கவிஞர் கண்ணதாசன் கடவுளின் கைவண்ணங்களைத் தனது பாடலொன்றில் காட்டியதும் நினைவுக்கு வருகிறது.

“ஒரு நாளும் பள்ளிப் பேருந்தில் / ஏற்றிவிடாத / அப்பா வாய்க்கப்பட்ட மகள் / பார்த்துவிடக் கூடாது / பேருந்திற்காய்க் காத்திருக்கும் / தன் மகளின் பள்ளிச் சீருடையை / சரி செய்து கொண்டிருக்கும் / ஏதோ ஒரு அப்பாவை” என்று ‘பிரார்த்தனை’ கவிதையில் நிகழ்ச்சியின் காட்சியைக் கவிதைச் சிமிழுக்குள் கச்சிதமாக நெற்றிப் பொட்டுப் போல் இட்டுச் செல்லும் பாங்கு இவருக்கு நன்கு கைவரப் பெற்றுள்ளது படிப்போர் பாராட்டுமாறு வைத்து விடுகிறது.

கிராமத்தைப் பிரிந்து வந்த ஏக்கம், வருத்தமான வார்த்தைகளிலே தெறித்து சில கவிதைகளில் விழுந் துள்ளதும் அவைகள் மனங்களை ஆற்றுப்படுத்தக் கூடியவைகளாய் இருப்பதையும் அறிய முடிகிறது. உதாரணங்களாக 1. காட்டுவதற்கு 2. அப்பாக்களின் இரவு ஆகிய கவிதைகள் அப்படி அமைகின்றன. வழி மாறிப் போய்விடாமல் எண்களின் வழியே காலத்தைக் கடந்து வரும் மனிதனையும்... வீடு திரும்பும் மற்றொரு விலங்காகப் பார்த்துள்ள பார்வை வித்தியாசமானது மட்டுமல்ல! விஞ்ஞான பூர்வமானதும்கூட!

திருத்த வேண்டிய தேர்வுத் தாள்கள் தலையணை யடியில் தூங்கும் போதும் வந்து மிரட்டும் கனவுகளும், பயணத்தின் போது பார்க்க நேரிடும் நெஞ்சை நெருடும் நினைவுகளும் இவருக்குக் கவிதைப் பொருட்களாகக் கிடைக்கின்றன.

“கீற்றுகளில் நீர் சொட்டும் அழகிற்காகவாவது / இன்னும் கொஞ்சம் மழை பெய்திருக்கலாம்...” என்று எதிர்பார்க்கும் மனமானது சொற்செட்டுக் கொண்ட கற்கண்டுக் கவிதையை இயற்றிக் காகிதத்துக்குக் கொடுத்துவிட்டு, ஆகாயத்துக்கும் அதையே கோரிக் கையாக வைத்துள்ளது நமது கவனத்தில் பெய்கிறது.

வாழ்தலைக் ‘கொசு’விடம் இருந்தும்கூடக் கற்றுக் கொள்ளலாம் என்கிற நுட்பமும், மனைவி, மகள், மாமியார், மருமகள், நாத்தனார், மதினி, அக்கா, தங்கை என்கிற பெண்மையின் எல்லாக் கதாபாத்திரங்களும் ஒட்டுமொத்தப் பறவைகளைப் போன்றதே என்கிற தெளிதலும் நேர்த்தியாய் விளங்குகின்றன. 

‘வெகு கால ருசி’ என்னும் நான்கு வரிக் கவிதையின் கடைசி வார்த்தையானது ‘எறும்பு’ என்றே முடியும் என எண்ணியவாறு வாசக உள்ளங்கள் ஊர்ந்து வர அதுவோ ‘நினைப்பு’ என்று முடிந்து ‘சட்’டென நிற்கிறது. விடுகதை போல இந்த விடு கவிதைப் பாணி ளுலஅbடிடiஉ யீடிநஅ-ல் சோதனை முயற்சி என்றாலும் கூரிய முனையோடு கூடியது.

“.... கைப்பேசியில் நீ என்னை / ஓயாது துரத்தி” என்கிற இடத்திலும்; “ஒரு தானியத்திற்கும் / மற்றொரு தானியத்திற்கும் ஆன இடைவெளி” என்கிற இடத்திலும் கவிஞரின் நிதானம், நங்கூரம் பாய்ச்சுகிற களங்களாய்க் காணத்தக்கன.

நகர வாழ்க்கை தருகின்ற இறுக்கத்தையும், அதே தருணத்தில் பிரிவு தருகின்ற நெருக்கத்தையும்... மேற்கு மலைத் தொடர்ச்சிக்கும், கிழக்குக் கடற்கரைக்கும் உள்ள நெடிய இடைவெளியையும் அனாசயமாய் அர்த்தம் மிளிரும் கவிதைகளாக்கும் லாவகமும் ‘சபாஷ்’ போட வைக்கின்றன.

எளிய உவமைகளும், உரிய உருவகங்களும், நல்ல படிமங்களும், நயமான குறியீடுகளும், நலமான சொல் லாட்சிகளும் கொண்டுள்ள இந்தக் கவிதைகளே... இவரை, முதல் தொகுதியிலேயே வெற்றிபெறச் செய்துள்ளன.

போர் மரபு, உயிர் தெறித்து, மற்றவரின் மழை போன்ற முத்திரைக் கவிதைகள் இவரின் மீதுள்ள நம்பிக்கையைக் கூடுதலாக்குகின்றன. இன்னமும் உயரிய கவிதைகள் இவரிடம் இருந்து வெளியாகும் என்பதையும் உறுதி கூறுகின்றன.

“கவிதையைப் பேசும் ஓவியம் என்றும், ஓவியத்தைப் பேசாக் கவிதை” என்றும் குறிப்பிடுவதுண்டு. இந்தக் “கோடிட்ட இடங்களை நிரப்புதல்” - தொகுதியில் செ.சீனிவாசனின் கோட்டோவியங்கள், கவிதையோடு இணைந்து ஆங்காங்கே பேசவும் செய்கின்றன. ஏனெனில், சுமதி ராமுடைய கவிதைகளின் ஒவ்வொரு எழுத்தும்... வாழ்வியல் ஓவியத்திற்கான ஒவ்வொரு புள்ளியாக முத்திரை பதித்துள்ளன.

கோடிட்ட இடங்களை நிரப்புதல்

ஆசிரியர் : சுமதிராம்

வெளியீடு : வம்சி புக்ஸ்

விலை : ரூ.50.00

Pin It