பண்பாட்டில் ஆய்வில் ஊர்ப்பெயர்க் காரணம் குறித்த ஆராய்ச்சி சிறப்பிடம் பெறும். ஒரு கட்டம் வரை தங்குமிடம் ஏதுமின்றி நாடோடிகளாகத் திரிந்த நம் மூதாதையர் காலப் போக்கில் ஏற்படுத்திய குடியிருப்புகள் எண்ணிக்கையிற் பலவாயின. அவற்றின் தொகுப்பிற்கு அவர்கள் அறிவுக்கு எட்டியவாறு பெயரிடும் தேவை எழுந்தது. அப்பெயருக்கு அன்றைய சமகாலத்திலோ, சற்று முன்போ அவர்கள் மனத்திற் பதிந்த ஒரு நிகழ்ச்சியோ பொருளோகூடக் காரணமாயிருந்திருக்கலாம். காந்தி யடிகள் ஒரு சமயம் வருகை செய்த இடம், அக்காரணத் தினால் காந்தி நகர், காந்தி சாலை என்ற பெயர் பெறு வதுண்டு. காந்தி மீது கொண்டிருந்த மதிப்புக் காரணமாக மட்டுமே ஒருவர் அல்லது ஒரு குழுவினர் அப்படிப் பெயர் வைப்பதும் உண்டு. முந்தியது காரணம் கருதியது. பிந்தியது ஆர்வத்தாலானது. இதுபோல்வனவே குடியிருப்பிற்குப் பெயரிட முற்பட்ட ஆதிக் குடிமக்களை எதிர் கொண் டிருக்கும். ஆற்றங்கரையில் அமைந்த ஊர் ஆற்றூர். அது பின்னர் ஆத்தூராகத் திரிந்திருக்கலாம். பிற்காலத்தில் ஆறே இல்லாமற்போய் ஆத்தூர் மட்டும் எஞ்சியதும் உண்டு. குளத்தூர், காட்டூர், மலையூர், குன்றத்தூர் என வரிசையாய்ச் சொல்லிப் போகலாம். இப்பெயர்கள் சமயம் காரண மாகவும், காலக் கழிவில் காரணமே காண முடியாத தாகவும் மாறித் திரிந்தும் போயின.

இப்படிப்பட்ட ஊர்ப் பெயர் ஆய்வும் அதன் பொருட்டு வரலாற்றைத் துருவித் துருவிப் போகும் முயற்சியும் உலகெங்கும் பரவிக் கால்பரப்பி வருகின்றன. நாம் அறிந்தவரை தமிழகத்தில் ஊர்ப் பெயராய்வுத் தளத்தில் எல்லார் கவனத்தையும் ஈர்க்கும் விதத்தில் முதலடி எடுத்து வைத்தவர் பேராசிரியர் இரா.பி.சேதுப்பிள்ளையே. அவருக்குப் பின்னர் அறிஞர் பலர் அவ்வழியில் முயன்றனர்; முயல்கின்றனர். இரா.பி.சே. தமிழகம் தழுவிய அளவில் தம் ஆய்வை நடத்தியவர். பின்னர் வந்தவர்களிற் பலர் தம் ஆய்வு எல்லையை வரையறுத்துக் கொண்டனர். ஆய்வெல்லை மண்டலம், மாவட்டம், வட்டம் ஆகியவற்றுள் ஒன்றாகக் கொள்ளப்படுகிறது. இத்துறையின் அண்மை வெளியீடாக வட்ட அளவிலான ஊர்ப் பெயர் ஆய்வினைப் புலவர் அ.ப. பாலையன் மேற்கொண்டிருக்கிறார். சங்க நூற் பயிற்சியில் ஆழங்காற்பட்ட இவர் எதனையும் மேற்போக்காக அல்லாமல், நுணுகி நோக்கும் மதி நுட்பம் மிக்கவர்;

வெறும் கற்பனையுடனோ, புராண நம்பிக்கை சார்ந்த முடிவெடுப்புடனோ, எட்டிச் செல்ல முடியாத சிந்தனைக்கு எட்டுகிற, முந்தைய மரபுடன் முடிச்சிடப்பட்ட ஆழமற்ற குறியீடுகளுடனோ சமரசம் செய்துகொள்ளச் சம்மதிக்காத மனச்சான்றும் அதற்கேற்ற நுண்மாண் நுழைபுலமும் கொண்டவர்.

இவரது ‘திருக்குவளை வட்டம் ஊரும் குறிப்பும்’ என்ற நூல் அண்மை வெளியீடு. இது ஊர்ப் பெயராய்வுப் பாட்டையில் குறிப்பிட்ட எல்லைக் கல். ஆசிரியரின் உழைப்பு பக்கந்தொறும், வரிதொறும் நூலின் கனத்தைக் கூட்டுகிறது.

திருக்குவளை வட்டத்திலுள்ள ஊர்கள், சிற்றூர்கள் ஆகியவற்றின் பெயர் குறித்து ஆராயும் முயற்சியே ‘திருக்குவளை வட்டம் : ஊரும் சிறப்பும்’ என்ற இந்நூல். இது இரு பகுதிகளைக் கொண்டது. முதற் பகுதியில் ஊர்ப் பெயர் உருவாவதற்குக் காரணிகளாக அமைவனவற்றைப் பற்றிய செய்திகள், திருக்குவளை வட்டத்து ஊர்ப் பெயர் களுடன் ஓட்ட வைத்து நோக்கப்படுகின்றன. இப்பகுதி யிலுள்ள ஆய்வுகள், செய்திகள் பிந்திய ஊர்ப் பெயராய்வை எளிமைப்படுத்துகின்றன. இதனால் ஆய்வில் ஐயம், திரிபு, மயக்கம் என்பன தலைகாட்டவில்லை. இப்பெருமை யினால் ஆய்வின் தகுதிப்பாடு மேம்படுகிறது. மொழியியல், இனவரலாறு, சமயம், அரசியல், வரலாறு, தொல்பொருள், நில நூல், சமூகவியல், நாட்டுப்புறவியல், இயற்கை அறிவியல் - போன்ற பல துறை ஆய்வுக்கும் ஊர்ப் பெயர் ஆய்வு இடம் தருகிறது. இந்த அடிப்படையுடன் தொடங்குகிறது இம்முயற்சி.

சங்ககாலச் சோழர்கள் முதல் மராட்டியர் வரையில் ஆண்ட மரபுகள் ஊர்ப் பெயரமைவில் செல்வாக்குச் செலுத்தியுள்ளன.

திருக்குவளை வட்டம் 35 கிராமங்களையும் 28 ஊராட்சிகளையும் 170க்கும் மேற்பட்ட சிற்றூர்களையும் கொண்டது. சோழர்காலக் கல்வெட்டுகள் வலிவலம், திருக் குவளை மணக்குடி, பன்னத்தெரு ஆகிய ஊர்க் கோவில் களில் காணப்படுகின்றன. இவற்றுள் மணக்குடிக் கோவிலில் விக்கிரமசோழன், இரண்டாம் இராசாதிராசன் காலக் கல்வெட்டுகளைக் காணலாம். இச்செய்தி இப்பகுதியின் பழைய வரலாற்றுப் பெருமையை உணர்த்துகிறது.

இவ்வூர்ப் பெயர்கள் கடவுள் முதல் அயல்மொழித் தாக்கம் வரை பல்வேறு காரணிகளைக் கொண்டு ஆராயப் படுகின்றன. இங்குள்ள ஊர்ப்பெயர்கள் பெரும்பான்மை இரு சொற்களாலானவை; சில ஒரு சொல்லால் அமைந்தது. மூன்று சொற்களாலான ஊர்ப்பெயர்கள் ஒன்பதையும் ஆசிரியர் சுட்டிக் காட்டுகிறார் (பக்கம் 20)

சைவ சமயக் குரவர்களால் பாடல் பெற்ற கோவில்கள் அமைந்த ஊர்கள் வருமாறு:

1. வலிவலம் இறைவன், மனத்துணை நாதர். இவரை அப்பர், சம்பந்தர், சுந்தரர் ஆகிய மூவரும் பாடியுள்ளனர். 2. திருவாய்மூரில் கோவில் கொண்டவர் திருவாய்மூர்நாதர். இவரைச் சம்பந்தரும் அப்பரும் பாடியுள்ளனர். 3. திருக் குவளையின் பழைய பெயர் திருக்கோளிலி. இங்குள்ள கோளிலியப்பரை அப்பரும் சம்பந்தரும் சுந்தரரும் பாடியுள்ளனர். இன்று இவ்விறைவன் தியாராசர் என்று அழைக்கப்படுகிறார்.

சுந்தரர் வரலாற்றுடன் சேர்த்துப் பேசப்பட்ட ஊர் குண்டையூர். குண்டையூர் கிழார் ஆண்டுதொறும் திருவாரூரிலிருந்த சுந்தரர் குடும்பத்திற்கு நெல் அனுப்பி வந்தார். இது தொடர்பான இறைச் சோதனையும் இயற்கை இறந்த நிகழ்வால் அது தீர்க்கப்பட்டதும் இவ்வூரைக் களமாகக் கொண்டவை.

குரவர்களால் பாடப் பெறாத குளம்படு நாதரும் பெரும்புகழ் பெற்ற சிவன். அவர் எழுந்தருளியுள்ள ஊர் குளப்பாடு.

சைவ சமயக் குரவர்க்கு அடுத்த நிலையில் வைத்துப் போற்றப்பட்ட அருணகிரிநாதர் பாடிய இறைவன் எட்டுக்குடி முருகன்.

சைவப் பன்னிரு திருமுறையில் இடம்பெற்ற கருவூர்த்தேவர் பன்னத்தெரு முகத்தலைநாதரைப் பாடியுள்ளார்.

ஊர், குடி, தாவரப் பெயர், பறவைப் பெயர் ஆகியவற்றைத் தாங்கி ஊர்ப் பெயர்களையும் ஆசிரியர் வரிசைப்படுத்துகிறார். (ப.27-32) பெரும்பாலும் கோவிலுக்குக் கொடையாக விடப்பட்ட, ஊர்களை அவற்றின் பெயர் கொண்டு அறியலாம். (ப.33-36) நிலம் சார்ந்த ஊர்ப் பெயர் களையும் (ப.36-37) வரலாற்றுச் சிறப்பின் அடையாள மாகிய ஊர்ப் பெயர்களையும் (ப.48-50) சமயச் செல்வாக்கு வெளிப்படும் ஊர்ப் பெயர்களையும் (ப.62-65) வேற்று மொழிச் சொற்களைக் கொண்ட ஊர்ப் பெயர்களையும் (67-70) சேரி, சேத்தி, வாசல், பிடாகை என முடியும் ஊர்ப் பெயர்களையும் (71-73) இவ்வகை ஆய்வு வலைக்குள் அகப்படாத ஊர்ப் பெயர்களையும் (ப.74-77) ஆசிரியர் கவனத்துடன் வரிசைப்படுத்துகிறார். நம் கவனம் அவற்றில் பதியும் விதத்தில் அவர் ஆய்வு முறைப்படுத்தப்பட்டிருக் கிறது.

தெற்குப் பனையூரில் உள்ள தோணித்துறை என்ற சிற்றூரையொட்டி முற்காலத்தில் படகுப் போக்குவரத்து நடந்த செய்தி கவனிக்கத்தக்கது.

ஊர்ப் பெயராய்வின் பயனாகச் சில பெரும் பேறுகள் எய்தும் என்று ஆசிரியர் நம்மையும் தயார்ப்படுத்துகிறார்.

இப்பரந்த தளத்தின்மீது நின்று இரண்டாம் பகுதியில் 35 வருவாய் ஊர்கள், அவற்றுள் உள்ளடங்கிய சிற்றூர்கள் ஆகியவற்றைத் தனித்தனியாக ஆய்கிறார் ஆசிரியர். இவை முறையாக, பொறுமையாக ஆராயப்படுகின்றன. இதற்கு முன் எண்பது பக்கங்களில் அறிமுகப்படுத்தப்பட்ட ஆய்வின் அடிப்படையில் அந்த 35 ஊர்ப் பெயர்களும் ஒவ்வோர் ஊரிலும் அடங்கிய சிற்றூர்ப் பெயர்களும் பயனுள்ள வகையில் ஆய்வு செய்யப்படுகின்றன. இப்பகுதி முற்றிலும் உள்ளூர் சார்ந்தது. ஆங்காங்கு வரலாறு, சமயம், சான்றோர் பற்றிய குறிப்புகளும் பொருத்தமாக இடம் பெறுகின்றன. ஓட்டக்கூத்தர், மணலூர் மணியம்மா, பி.எஸ்.தனுஷ்கோடி, திருமதி.கிருஷ்ணம்மாள் ஜெகநாதன் போன்றோர் சமுதாயத்திற்காற்றிய பங்களிப்பும் பொருத்தமாகச் சுட்டிக்காட்டப்படுகின்றன. திருக்குவளை என்ற அளவில் மு.கருணாநிதி நம் நினைவுக்கு வருதல் தவிராது. அவரும் அவரது புகழ்பெற்ற வரிகளும் நூலில் இடம்பெற்றிருப்பதை நினைவு கூர்கிறோம். பாங்கல் என்றதும் பாங்கல் சாமிநாதன் பெயர் நினைவிற்கு வரவேண்டும். விடப்பட்டுள்ள அதனைச் சுட்டிக்காட்டுவது அவசியம்.

முகத்தலைநாதர் கோவில் இறைவனைக் கருவூர்த் தேவர் பாடும் பாடலில் ‘பன்னகா பரணா’ என்று விளிக் கிறார். அக்கோவிலிருக்கும் ஊரோ பன்னத்தெரு. அப் பெயர் ‘பன்னகாபரணர்’ என்பதிலிருந்து வந்திருக்க வாய்ப்பு உண்டு. இதை ஆய்வாளர் கருதிக் குறிப்பிட்டிருக்கலாம்.

வரலாற்றுக்குத் தேவைப்பட்ட கல்வெட்டுகள், கோவில்கள் முதலியவற்றை இடமறிந்து ஆசிரியர் குறிப்பிட்டிருக்கிறார். இந்நூல் குறிப்பிட்ட வட்டத்தைக் களமாகக் கொண்டு ஆய்வு செய்த சிற்றளவு ஊர்ப் பெயராய்வுக்கு அளித்துள்ள கொடை. இத்துறையில் பின்வரும் ஆய்வாளர்களுக்கு இந்நூல் மேலான வழி காட்டியாய் விளங்கும். இது உண்மை.

திருக்குவளை வட்டம் - ஊரும் சிறப்பும்

ஆசிரியர் : அ.ப.பாலையன்

வெளியீடு : சீதை பதிப்பகம்

விலை : ரூ.70.00

Pin It