தமிழகத்தின் ஏனைய நில மக்களோடு சரி சமமாக மதிக்கப்பட்டு, குறிஞ்சி மலரினும் மேன்மையான காதல் வாழ்வுக்குரியவர் அவரே எனக் கணிக்கப்பட்டு, பெரும் புலவர்களால் உணர்ச்சி பொங்கப் பாடிப் போற்றப்பட்ட குறிஞ்சி நில மக்களின் வாரிசுகளே இன்றைய தமிழக மலையக மக்களில் பெரும்பாலோர். காலத் தோடு வளராமல், வரலாற்றில் விடுபட்டு, ஈரா யிரம் ஆண்டுகளாகத் தேங்கிப்போன இவர்கள் பல ஆய்வாளர்களுக்குப் பெரும்பான்மையும் ஒருவகை விலங்கியல் விந்தையாக, நம்மோடு தொடர்பற்ற ஒருவகை வினோதப் பிறவிகளாகத் தோன்றுகிறார்கள். அதனாலேயே குரங்கினங் களில் வளர்ச்சியடைந்த ஒன்றினை ஆய்வு செய்வது போல, இவர்களுடைய அரை நிர்வாண உடம்பையும், வினோதமாய்ப்படுகின்ற பாலியல் பழக்கவழக்கங்களையும், இவர்கள் ஆய்வுகள் என்ற பெயரில் திரட்டி, வெளியிட்டு, பரபரப்பு ஏற்படுத்துகின்றார்கள்.

இந்தப் பெரும்போக்கினூடேயே இன்னொரு போக்கும் வளர்ந்து வந்துள்ளது. சுரண்டல் சார்ந்த தனிச்சொத்துடைமை என்னும் கறைபடா மல், கூட்டாக வாழ்ந்த நம் முன்னோர்களின் சிதில மடைந்த நகல்களான இம்மலையின மக்களை ஆய்வு செய்யும் இவர்களின் நோக்கம் வரலாற்றின் தொடக்க காலத்தில் நாம் எவ்வாறு வாழ்ந்தோம் என்ற புதிரை விடுவிப்பதே.

இன்னும் ஒருவகையான ஆய்வுமுறையும் இதனோடு நிகழ்ந்து வருகின்றது. மலையின மக்கள் நம் சகோதரர்கள். கால - இடச் சூழலால் நம்மிலிருந்து ஒதுங்கி, நாம் இன்று பெற்றிருக்கும் பல்துறை, வளர்ச்சியைப் பெறாமல் தனிமைப் பட்டு, அதே சமயம் நம்மீது படிந்திருக்கும் மானுடத்துக்குப் புறம்பான பண்பாட்டுக் கனவுகளின் நிழல் கூடப்படாமல் தூய்மை யோடிருக்கும் நம் சகோதரர்கள், நாம் அவர் களுக்குக் கொடுக்க வேண்டியதும், அவர்களிட மிருந்து நாம் எடுக்கவேண்டியதும் ஏராளம் உள்ளன என்ற கண்ணோட்டத்தில் செய்யப்படும் மனித நேய ஆய்வு முறை இது.

தமிழகம் நன்கறிந்த கிராமியக் கலைஞரும், பண்பாட்டியல் துறை ஆய்வாளரும் புதுவை மத்தியப் பல்கலைக்கழகத்தின் சங்கரதாஸ் சுவாமி கள் நிகழ்கலைப் பள்ளி இணைப் பேராசிரியரு மான டாக்டர் கே.ஏ.குணசேகரன் இந்த நூலுக் காக மேற்கொண்டிருக்கும் ஆய்வு மூன்றாம் வகை யைச் சார்ந்தது. நூலின் பன்னிரண்டு கட்டுரை களும், இறுதியிலுள்ள கலந்துரையாடல் பதிவு களும் தமிழகத்தின் மூத்த பழங்குடி மக்களான முதுவரிலிருந்து தோடர், சோளர், லிங்காயத்தார், புலையர், காணிக்காரர், கோத்தர், இருளர், லம்பாடியர், மலசர், காடர் என்று பதினொரு இன மக்களின் வாழ்க்கைச் செய்திகளாக விரிகின்றன. தோற்றம், ஆடை - அணிகள், வாழிடங்கள், வாழ்க்கை முறை, தொழில்கள், தொழில் நிலை யால் ஏற்படும் ஏற்றத்தாழ்வுகள், சடங்குகள், நம் பிக்கைகள், விழாக்கள், சுற்றுச்சூழல் தாக்கத்தால் அவர்கள் இன்று பெற்று வரும் மாற்றங்கள், அவருக்குச் செய்யப்பட வேண்டிய உதவிகள் என ஒவ்வொரு இனமக்கள் பற்றியும் ஆய்வாளர் தெளிவாகச் சொல்லுகின்றார். இத்தகவல்களை அவர் கால்கடுக்க அலைந்து, பல சிரமங்களை ஏற்றுப் பெருமுயற்சி செய்து திரட்டியுள்ளார். மலையின மக்கள் உணவு தேடுவது போலவே இதுவும் கடுமையான பணி.

வெளியிலிருந்து பார்ப்பவர்களுக்கு இந்தப் பதினொரு இனத்தினரும் மலையின மக்களே! ஆயினும் வரலாற்றுப் போக்கின் வித்தியாசமான காலகட்டங்களுக்குரிய தொழில்களால் அவர்கள் ஒருவருக்கொருவர் எவ்வளவு வேறுபட்டுப் போயிருக்கிறார்கள்! வேட்டையாடி அன்றாடம் உணவு தேடும் இனத்தாரும், விவசாயம் செய்து ஆண்டு முழுவதற்கும் சேமிக்கும் இனத்தாரும் அடிமைகளும் - எஜமானர்களுமாக, சப்பை மூக்குகளும் - எடுப்பான மூக்குகளுமாக எவ்வளவு வித்தியாசப்பட்டுப் போயிருக்கிறார்கள்! தொழில் வேறுபாடு மூலம் உணவு வேறுபாடு, உணவு வேறுபாடு மூலம் தீண்டாமை ஜாதிபேதப் புயல் எங்கும் மையங்கொண்டு எப்படிக் கழன்றடிக்கிறது!

தொழில் வேறுபட்டாலும்கூட மலையின மக்களிடையே, அவர்களைப் பிளவுபடுத்தும் அள வுக்குப் பெரிய மூலதனம் இன்னும் உருவாக வில்லை என்பது கட்டுரைகளைப் படிக்கும் போது தெரிகிறது. எனவே ஊர்த்தலைவர், பூசாரி, குரு, மருத்துவர், நீதிபதி என்ற அத்தனை பேருமாக ஒருவரே உள்ள நிலையானது ஒருபக்கம் சமூகம் பிளவுண்டு போகாமல் தடுக்க, மறுபக்கம் அதுவே சமூகத்தை வளரவிடாமல் தேங்கவும் வைக்கிறது.

கட்டுரைகளில் வெளிப்படும் இன்னொரு பேருண்மை, இந்தக் குறிஞ்சி நில மக்கள் எந்த மதத்தினரும் அல்ல என்பது. மதம் என்பது அவர் கள் மீது இன்று திணிக்கப்படுகின்றதே தவிர அது அவர்கள் வாழ்வோடு ஒன்றியதல்ல. அவர்கள் வணங்கும் தெய்வங்கள் அவர்களுடைய மூதாதை யரேயொழிய நிலப்பிரபுத்துவப் பெருந்தெய்வங் களல்ல. அவர்களுக்கும் அவர்கள் தெய்வங்களுக் கும் உள்ள உறவுகள்கூட அளப்பரிய வாழ்வார்வத் தால் உந்தப்பட்டவையே. வாழ்வு மறுப்புக் கறை யும் அவர்கள் வழிபாட்டை மாசுபடுத்தவில்லை. இந்த விஷயங்கள் பண்டைய தமிழகம் முழு மைக்கும் பொதுவானவையாக இருந்தனவென ஏற்கெனவே பேராசிரியர் வானமாமலை, கலாநிதி கைலாசபதி போன்றோர் காட்டியுள்ளனர். இந்த ஆய்வில் அவை பளிச்சென்று வெளிப்படுகின்றன. மதமில்லையேல் மனித வாழ்வில்லை என்பார் ஊன்றிக் கவனிக்க வேண்டிய விஷயமிது.

இசையிலும் கலையிலும்கூட இன்றைய இதர தமிழகத்துக்கும் அவர்களுக்கும் ஏகப்பட்ட வேறுபாடு தெரிகிறது. நம் இசையும் நடனமும் சமூகத்திலிருந்து பிரிந்த தனித்திறமை வெளிப்பாடு களாகத் தனிமைப்பட்டு நிற்க, அவர்களின் இசையும் நடனமுமே அச்சமூகத்தின் மொத்த அழகாக வெளிப்படுகின்றன.

விளையாட்டிலும்கூட இந்த வேறுபாட்டை மிக நுட்பமாகக் கண்டு வெளிப்படுத்துகிறார் ஆய்வாளர். இன்று நம் விளையாட்டுகள் யாவும் தனித்திறமைகளை வெளிப்படுத்தும் போட்டி களாகச் சுருங்க, மலையக மக்களின் விளையாட்டு களோ குழுவலிமை நோக்கமாகக் கொண்டவை யாக அமைந்துள்ளன.

தனியுடைமைச் சுரண்டலின் பிளவுக்கும் பொதுஉடைமை ஒத்துழைப்பின் சங்கமத்துக்கு மிடையே விளையாட்டில்கூட எத்தனை வேறு பாடுகள்!

அதுபோலவே சடங்குகளும் விழாக்களும் பிறப்புச் சடங்கு முதல் நீத்தார் நினைவுச் சடங்கு வரை, விதைப்பு விழா முதல் பணியார விழா வரை எல்லாமே அவர்கள் சமூக வாழ்வோடு இரண் டறக் கலந்து நிற்பதை ஆய்வாளர் அருமையாகக் காட்டுகின்றார்.

தமிழகத்திலும் ஒரு காலத்தில் குழுத் திருமணம் இருந்ததாக ஏங்கெல்ஸ் குறிப்பிடுவார். மாமன் கலியாணம் அல்லது மாமன் சடங்குமுறை, மாப்பிள்ளைகளுக்குச் சுருள் வைத்துக் கொடுத் தல், வாசப்படி மறுப்பு என அதன் எச்சங்கள் இன்றளவும் தமிழ் மக்களின் திருமண விழாக் களோடு ஒட்டிக்கொண்டுதான் உள்ளன. கொழுந்தன் - கொழுந்தியாள், மச்சான், மச்சினி, அத்தான் - மயினி, அத்தான் - அத்தாச்சி, உறவுகள், தந்தையின் சகோதர உறவுள்ள அத்தனை பேரும் குழந்தைக்குப் பெரியப்பா, சித்தப்பா ஆதல், அதேபோல் சின்னம்மா பெரியம்மா முறை, இவை பழைய குழுமண முறையின் எச்சங்கள் என்றே தோன்றுகின்றன. தோடர்களின் ‘பால்உறவு’ முறையும் இந்த வகையைச் சார்ந்ததாகவே படுகிறது. ஆனால் உணவு தேடும் நிலையிலுள்ள சில வேட்டைச் சமூகங்களில்கூட ஒருவன் - ஒருத்தி உறவு நிலை மிக அருமையாக அமைந்திருப் பதையும் ஆய்வாளர் அழுத்தமாய்க் குறிப்பிட்டுள் ளார். இதைப் பார்க்கும் போது குழு மணமும் தனி மணமும் அமையக் காரணம் வர்க்க வேறுபாடு மட்டுமா, வேறு காரணிகளும் உண்டா என்று யோசிக்க வேண்டியதிருக்கிறது.

இந்த நூலைப் படிக்கும்போது மனதில் தைக்கிற இன்னொரு விஷயம் பெண் சுதந்திரம். பெண்களுக்கு மலையக மக்கள் சமூகத்தில் இருக்கும் சுதந்திரத்தையும், அவர்களுக்குக் கொடுக்கப்படும் முக்கியத்துவத்தையும் ஆய் வாளர் மிகுந்த கவனத்துடன் வெளிப்படுத்தியுள் ளார். களவும் கற்புமான குடும்ப வாழ்வு அவர் களிடையே இன்றளவும் எந்தச் சிக்கலுமின்றிப் பேணப்படுவதை நாம் காண்கிறோம். இந்த வாழ்க்கை சங்கப் பாடல்களில் காணப்படும் குறிஞ்சி நில மக்களின் வாழ்வோடு பெரிதும் ஒத்திருக்கிறது. தமிழரின் சுதந்திரமான காதல் - கல்யாண வாழ்வு பொய்யும் வழுவும் தோன்றிய பின்னர், ஐயர் யாத்தனர் கரணம் என்ப, என்ற தொல்காப்பியர் கூற்றுப்படி பெற்றோர் செய்து வைக்கும் ஒப்பந்த மண வாழ்வாகப் பிற்காலத்தில் மாறுகிறது என அறிகிறோம். அப்படியென்றால் தமிழ்ச் சமூகத்தில் பொய்யும் வழுவும் புகுந்தது எப்போது? இந்த ஆய்வு செய்ய இத்தகவல்கள் சமூக விஞ்ஞானிகளைத் தூண்டும். நூல் இறுதி யில் உள்ள கலந்துரையாடலில் ‘விரும்பிக் கலியாணம் பண்ணிய பின்னர்க் கணவன் மனைவி மனம் வேறுபட்டுப் பிரிந்தால் என்ன செய்வீர்கள்’ என்று ஆய்வாளர் கேட்டதற்கு, ‘புடிக்காமல் போயி தனியாப் போறது கொழந்தை பெறக் கிறதுக்கு முன்னாடிதான், கொழந்தை பொறந் திட்டா பிரியாதுங்க!’ என்று தரப்படும் பதில் நம் சிந்தனையில் மீண்டும் மீண்டும் எதிரொலிக்கிறது. எவ்வளவு நம்பிக்கையான - இதய பூர்வமான சுதந்திரம் அவர்கள் குடும்ப வாழ்வை இணைக் கிறது!

வரதட்சணைக் கொடுமை இன்று நம் பெண் குலத்தையும் பெண்ணைப் பெற்றோரையும் அச் சுறுத்தும் கொடிய நோய். மலையின மக்களி டையே ஆண்தான் பெண்களுக்குப் பரிசம் போட வேண்டும், சிறப்புச் செய்ய வேண்டும். இதுவும் கூடப் பண்டைய தமிழருக்குரியதே. ஆதி திராவிட மக்களில் உழைப்போராயிருப்பவர் இம்முறை யையே இன்றளவும் பின்பற்றி வருகின்றனர். இதர தமிழர்களும்கூடச் சீதனம் ஒரு பக்கம் இருப்பினும் பண்டைய வழக்கப்படி பெண்ணுக்கு இன்றளவும் பரிசம் போட்டே திருமணம் செய்கின்றனர்.

எவ்வளவு பெரிய பண்பாட்டு வீழ்ச்சியை நாம் அடைந்திருக்கின்றோம் என்ற ஏக்கப் பெருமூச்சே நூலை முடிக்கும்போது நம்முன் எழுகின்றது.

மொழியியல் ரீதியாகவும், மருத்துவவியல் ரீதி யாகவும், மானுடவியல் ரீதியாகவும், சமூகவியல் ரீதியாகவும், பண்பாட்டியல் ரீதியாகவும் பிற மக்களினங்களோடு ஒப்பிட்டும், தனிநிலையிலும் ஆய்ந்து, சமூகத்துக்குப் பயன்தரத்தக்க, பல நல்ல முடிவுகள் தரவல்ல, பல அரிய தகவல்களின் களஞ்சியம் இந்த நூல். இன்றைய தமிழகத்தின் தாக்கத்தால் இம்மக்கள் வாழ்வு எப்படி மாறி வருகிறது, இதில் இலாபமென்ன, நட்டமென்ன, அரசும் தமிழ்ச் சமூகமும் இவர்களுக்கு மேலும் எப்படி எப்படி உதவலாம் என்றெல்லாம் ஆய் வாளர் மிகுந்த மனித நேயப் பொறுப்புணர்வோடு குறிப்பிட்டுச் சொல்லுகின்றார்.

இந்த நூலைத் தமிழறிஞர் உலகம் மிகுந்த உவப்புடன் வரவேற்குமென்பதிலும், புதிய மனித நேயமிக்க வாழ்வுக்காக இதன் சேதிகள் இளைஞர் களை உசுப்பும் என்பதிலும், இன்னும் பல ஆய்வு கள் மேற்கொள்ள இது உந்துசக்தியாக அமையும் என்பதிலும் ஐயமில்லை.

ஆய்வாளருக்கு என் மனமார்ந்த பாராட்டுக்கள்.

Pin It