சமீபத்தில் அ.மார்க்ஸ் அவர்களுடைய ‘சிறு பான்மையினர் தொடர்பான ஆணையங்கள் பரிந் துரைகள் குறித்த பரிசீலனைகள்’ என்னும் நூலைப் படிக்க நேரிட்டது. முதலில் இந்த நூலைப் பதிப்பித்த ‘முரண்’ பதிப்பகத் தோழர் கள் இயக்கன், புகழன் இருவருக்குமே என்னுடைய நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். பேரா சிரியர் அ.மார்க்ஸ் அவர்களுடைய எழுத்து மிகக் கடினமானது என்கிற எனக்குள் நீண்ட நாட்களாக இருந்த ‘மாயை’யினை இந்நூல் தகர்த்தெறிகிறது. இருபெரும் பிரச்சினைகளான இடஒதுக்கீடு, பாபர் மசூதி இடிப்பு இவையிரண்டையும் மிக ஆழமாக இந்நூல் விளக்குகிறது.

நூலுக்குள் காணப்படும் சில சுவாரசியமான பக்கங்கள்:

“1940ஆம் ஆண்டின் பிற்பகுதியில் ‘மகாத்மா காந்தி’ தனது பொதுக்கூட்டங்களிலும், தனி உரை யாடல்களிலும் எதிர்கால இந்தியா ஒரு மதச் சார்பற்ற நாடாக இருக்க வேண்டும் என்பதைத் தொடர்ந்து வற்புறுத்திக் கொண்டே இருந்தார். மத மாற்றங்களை அவர் ஏற்றுக் கொண்டதில்லை. ஆனால் மத மாற்றத் தடைச் சட்டம் என்கிற பேச்சு எழுந்த போது அதை எதிர்க்கிற முதல் நபராக அவரே விளங்கினார். மிகவும் ஆழமான மத உணர்வுடையவர் அவர் என்பது எல்லோருக்கும் தெரியும். ஆனாலும் ஒரு மதச்சார்பற்ற அரசியல் சட்டம் உருவாவதற்கு அவரே காரணமாக இருந் துள்ளார்.

இந்தியா ஒரு மதச் சார்பற்ற நாடு என்று சொல்வது பம்மாத்து வேலை என்கிற ஒரு குட்டு வைக்கிறார். அ.மார்க்ஸ். உதாரணத்திற்கு ‘சிறு பான்மையினருக்கு எதிராகப் பெரும்பான்மை மதத்தினரைத் திரட்டுவதற்கு மதம் மட்டுமின்றி வகுப்பு வன்முறைகளும் கூட இங்கே ஒரு வழி முறையாகப் பயன்படுத்தப்படுகின்றன. கலவரங் களுக்குப் பின் உடனடியாக நடைபெறவுள்ள தேர்தல்களில் வன்முறைக்குக் காரணமான வலது இந்து அமைப்புகள் வெற்றி பெறுவது வாடிக்கை யாகிவிட்டது’ என்கிறார்.

அருணாசலபிரதேசம், சட்டீஸ்கர் மாநிலங் களில் இந்து மதத்தில் இருந்து (கிறிஸ்துவ, முஸ்லிம்) அந்நிய மதங்களுக்கு மாறுவதை மட்டுமே தடை செய்கின்றன. பிற மதங்களில் இருந்து இந்து மதத்திற்குத் திரும்புவதைக் குற்ற மாக வரையறுப்பதில்லை. அதனைச் சட்ட பூர்வ மாக ஏற்கின்றன. எனவே இச்சட்டங்கள் மூலம் கிறிஸ்துவ, முஸ்லிம் மதப் பரப்பாளர்கள் மட் டுமே மிரட்டப்படுகின்றனர். இன்னொன்று, இன் னொரு பக்கம் தலித், பழங்குடி கிறிஸ்துவர்கள் ஒவ்வொரு ஆண்டும் இந்துக்களாக மதம் மாறு கின்றனர். இதை அவர்கள் வீடு திரும்புதல் (கர் வாபசா) என அழைக்கின்றனர். அரசியல் சட்டம் வழங்கியுள்ள இடஒதுக்கீட்டு உரிமைகள் கிறிஸ்துவ, முஸ்லிம் தலித்களுக்கு மறுக்கப்படும் நிலையை வலதுசாரி இந்து அமைப்புகள் தமது மத மாற்ற நடவடிக்கைகளுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்கின்றன. அரசுக்கும், மதத்திற்கும் எப்போதும் ஒரு நெருக்கமான உறவு இருந்து வருவதை நூலில் சுட்டிக் காட்டுகிறார் அ.மார்க்ஸ். ‘அரசு நடத்துகிற திறப்பு விழாக்கள், அடிக்கல் நாட்டு விழாக்கள்’ முதலியவற்றில் பூமி பூஜை போன்ற இந்து மதச் சடங்குகளுடன் நடத்தப்படுவது வழக்கமாகிவிட்டன. தினந் தோறும் பள்ளிகளில் வந்தேமாதரம் பாடுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

மதச்சார்புடன் திரித்து எழுதப்பட்ட வரலாற்று நூல்கள் பாடத் திட்டங்களில் சேர்க்கப் பட்டுள்ளன. இதுபோன்ற பல விஷயங்களை வைத்துப் பார்க்கும்போது மதச்சார்பின்மை மரணித்து விட்டதாகக் கூறுகின்றார் அ.மார்க்ஸ்.

1871ஆம் ஆண்டு பிரிட்டிஷ் ஆட்சியில் ஹண்டர் கமிஷன் தொடங்கி தற்போதைய ரங்கநாத் மிஸ்ரா அறிக்கை வரை இடஒதுக்கீடு கோஷமிட்ட போதிலும் அரசு கொஞ்சங்கூடச் செவி சாய்க்கவில்லை என்பதை இந்நூல் தெளி வாகப் பல இடங்களில் முன் வைக்கிறது.

ரங்கநாத் மிஸ்ரா ஆணைய அறிக்கையில் வலி யுறுத்தப்படுகிற இடஒதுக்கீடு மிக முக்கியமான கோரிக்கை ஆகும். கோரிக்கை விவரம்:

சிறுபான்மையினருக்கு 15 சதவீத இடஒதுக் கீட்டில் 10 சதத்தை முஸ்லிம்களுக்கு அளிக்கப்பட வேண்டும். மீதமுள்ள 5 சதத்தை சிறுபான்மை யினருக்கு அளிக்கப்பட வேண்டும். சிறுபான்மை யினரில் 73 சதம் முஸ்லிம்கள் என்பதால்). இந்த இடஒதுக்கீட்டில் சிறிய மாறுதல்களைச் செய்து கொள்ளலாம். ஒதுக்கப்பட்ட 10 சத இடங்களைப் பூர்த்தி செய்யும் அளவிற்கு முஸ்லிம் மாணவர்கள் இல்லையெனில் மிஞ்சுகிற காலி இடங்களைப் பிற சிறுபான்மையினர் சமூகத்தைச் சேர்ந்தவர்களுக்கு இடம் கிடைக்காத பட்சத்தில் அவர்களுக்கு அளிக் கலாம். எக்காரணத்தைக் கொண்டும் ஒதுக்கப் பட்ட 15 சத இடங்களைப் பெரும்பான்மைச் சமூகத்தைச் சேர்ந்தவர்களுக்கு அளிக்கக்கூடாது. அதே சமயம் பட்டியல் சாதியினர் மற்றும் பழங்குடியினர் விஷயத்தில் கடைப்பிடிப்பது போலச் சிறுபான்மையினர் சமூகத்தைச் சேர்ந்த மாணவர்களின் தம் தகுதி அடிப்படையில் மற்றவர் களுடன் போட்டியிட்டு (பொது ஒதுக்கீட்டில்) இடம் பெற்றால், இந்த 15 சதவீத இடஒதுக்கீட் டினை, அதில் அவர்களைக் கணக்கில் எடுத்துக் கொள்ளக்கூடாது. அதே போலச் சிறுபான்மை யோர் நலனுக்காகச் செயல்படும் அனைத்து நிறுவனங்கள், மத்திய மாநில சிறுபான்மையோர் ஆணையங்கள் எல்லாம் சந்திக்கும் குவி மையங்களை எல்லா மாவட்டங்களிலும் அதிகாரிகள் மற்றும் உள்ளூர் வல்லுநர்கள் அடங்கிய சிறுபான்மையோர் நலக்குழுக்களை உருவாக்க வேண்டும்.

“இதுபோலச் சிறுபான்மையோர் நலனுக்காக அமைக்கப்படும் குழுவிலாவது சிறுபான்மையின ருக்கு இடம் அளிக்க வேண்டும். அப்போதுதான் ஆணையங்கள் மீதான நம்பிக்கை பெருகும்.

‘விடியல் வெள்ளி’, ‘சமநிலைச் சமுதாயம்’ ஆகிய இதழ்களில் தொடர்ந்து வெளியான கட்டு ரைகளைத் தொகுத்து நூலாக்கப்பட்டுள்ளது. பதிப்பகத்தாரின் முதல் முயற்சியாக இந்நூல் சொல்லப்பட்டாலும் ‘இடஒதுக்கீடு’ என்கிற ஒரு மாபெரும் போராட்டமிக்க விஷயத்தை அலசும் விதமாகக் கட்டுரைகளை நூலாகப் பிரசுரித்த ‘முரண்’ பதிப்பகத் தோழர்களைக் கை குலுக்கி எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இடஒதுக்கீடு குறித்துப் பல்வேறு இடங்களில் ரங்கநாத் மிஸ்ரா ஆணையம் வலியுறுத்தும் கோரிக்கைகள் வழியாக வைக்கப்படும் வாதங் களைப் பார்க்கும்போதும், தனிப்பட்ட சில வாதங் களை முன் வைக்கும் வேளையிலும் அ.மார்க்ஸ் ஒரு வழக்கறிஞராகக் காட்சியளிக்கிறார்.

72 பக்க சிறு நூலாக இருந்தாலும், இந்தி யாவில் சிறுபான்மையோர் மீது அரசு கவனம் செலுத்திடவும், எதிர்காலத்தில் சிறுபான்மை யோர் மீது அதிக அக்கறை காட்டுவதற்கு அரசுக்கு நல்வழிகாட்டியாகவும் இந்நூல் திகழும். அதற்கான தகுதி, அடையாளம் எல்லாமும் இருக்கிறது.

நூல்: சிறுபான்மையினர் தொடர்பான ஆணையங்கள் பரிந்துரைகள் குறித்த பரிசீலனைகள்

ஆசிரியர் : அ.மார்க்ஸ்

வெளியீடு : முரண் பதிப்பகம்

95/202, கால்வாய்க் கரை சாலை

இந்திரா நகர், அடையாறு

சென்னை - 600 020.

Pin It