நிழல் தரையில் விழாத உயர்ந்த கம்பீரமான கோபுரம், அதைச் சுற்றிலும் கறைபடிந்த நிழல்கள். ஆம். கி.பி.1010-இல் தஞ்சையில் கட்டிமுடிக்கப்பட்ட கருங்கல்லில் நிமிர்ந்த கம்பீரம். தமிழனின் கட்டடப் பொறியியல் நுட்பம், கலைத்திட்டம் உணர்த்தும் மாபெரும் உழைப்பின் உன்னதப் பெருமிதம்! பல இயற்கைச் சீற்றங்களைத் தாண்டி, தாங்கி நிமிர்ந்து நிற்கும் தமிழனின் கலைக் கோவில் என்று சொல்லப் படும் தஞ்சை, பெரிய கோவிலின் சிறப்பினை, அற்புதமான உடல் உழைப்பினைப் பெருமையோடு நினைவு கூர்கிறார் வழக்கறிஞரும், கவிஞருமான வெ.ஜீவகுமார் தனது “இராஜராஜம்” என்னும் நூலில்!

தஞ்சை, பெரிய கோவிலின் பெருமையைச் சொல்லும் போது காலம் கடந்தும் கல்லில் மிளிரும் கலைக் கோவிலைக் கட்டிய மன்னன் இராஜராஜனின் திறமையையும், குணஇயல்பு களையும் சொல்லாமல் தவிர்க்க இயலாது அல்லவா! தஞ்சை, பெரிய கோவிலைக் கட்டத் தெரிவு செய்யப் பட்ட இடம், மண்வாகு, அதன் அன்றைய நிலை, கோவிலைக் கட்ட, பொருளைத் திரட்ட, மனித ஆற்றலைப் பயன்படுத்த கையாண்ட வழிமுறைகள் பற்றி ஆதாரங்களோடு ஜீவகுமார் எடுத்துரைக்கிறார்.

அதே சமயத்தில் தஞ்சை, பெரிய கோவிலின் இராஜகோபுரம் (நுழைவு வாயில் கோபுரம்) முழுமையாகக் கட்டி முடிக்கப்படாமல் விடுபட்டுப் போன காரணங்கள் என்ன. இராஜராஜன் 28 ஆண்டுகள் ஆண்டு பதவியைத் துறந்த பின் இரண்டு ஆண்டுகள் உயிர் வாழ்ந்திருக்கிறான். அந்நாளில் அவன் நிலை என்ன? தந்தையைப் பின் தொடர்ந்து அரசாண்ட இராஜேந்திரசோழன் தன் தலைநகரைக் கங்கை கொண்ட சோழபுரத்திற்கு மாற்றிய மர்மம் என்ன? அங்கும் நுழைவுவாயில் கோபுரம் முழுமை யாகக் கட்டி முடிக்க முடியாமல் போன காரணம் என்ன? போன்ற மிக முக்கிய வினாக்களை எழுப்பு கிறார் இந்நூலில் ஜீவகுமார்.

இராஜராஜன் கட்டிய ஆலயத்திற்கு மேலே வானளாவப் புகழப்படும் சில அடைமொழிகளாவன 1. இராஜராஜன் - ஒரு ஜனநாயகச் சிற்பி, 2. தமிழ் மொழி போற்றி வளர்த்தவன் 3. கல்விக் கண் திறந்தவன் 4. சமய நல்லிலக்கணவாதி 5. பெண் உரிமை பேணியவன் 6. நிலங்களை அளந்து வேளாண்மைப் புரட்சிக்கு வித்திட்டவன் 7. சாதிப் பூசலுக்கு இடம் கொடுத்தவன் 8. அடிமைத்தனம் அகற்றியவன் 9. சட்டம் ஒழுங்கு பிரச்சினைகளின்றி ஆட்சி செய்தவன் 10. கலைகளின் காவலன் போன்ற வற்றை வரலாற்று பூர்வ ஆதாரங்களோடு மறுக்கிறார் வழக்கறிஞர் ஜீவகுமார்.

‘சரித்திரம் தேர்ச்சிகொள்’ என்றான் மகாகவி பாரதி. நமது கடந்தகால வரலாற்றை அறிந்து கொள்ள உண்மையைத் தெளிந்துகொள்ள வரலாற்று இயங்கியல் நோக்கில் ஜீவகுமார் எழுதியுள்ள இந்நூல் இராஜராஜத்தை தமிழர் ஒவ்வொருவரும் படித்தாக வேண்டும். பாவை பதிப்பகத்தின் சிறப்பான முகப்புப் படத்துடன் அச்சாக்கி இருக் கிறார்கள். இந்நூலில் அன்றைய நீர்நிலைகளின் இன்றைய கதி என்ன என்பதைனையும் பட்டியலிட்டு உள்ளார். இவற்றை மீட்டாலே தஞ்சைப் பூமி நெற்களஞ்சியமாய் நீடிக்கவும், எலிக்கறியைத் தேடாதிருக்கவும் உதவும்!

இராஜராஜம்

ஆசிரியர் : வெ.ஜீவகுமார்

வெளியீடு : பாவை பப்ளிகேஷன்ஸ்

விலை : ரூ.50.00

Pin It