வரலாற்றின் தொடக்க காலத்திலிருந்தே பல்வேறு சமயங்களைப் பின்பற்றுவோர் வாழும் நாடாகத் தமிழ்நாடு இருந்துவந்துள்ளது. வைதீக, அவைதீக சமயநெறிகளும், நாட்டார் சமய நெறியும் இக்காலத்தில் செல்வாக்குடன் இருந்துள்ளன. அத்துடன் கடவுள் என்ற கருத்து நிலையை மறுக்கும் உலகாயதம் என்ற சிந்தனைப் போக்கும் நிலை பெற்றிருந்துள்ளது. ஆயினும் இவை தம்முள் முரண்பட்டு, ஒன்றுக்கொன்று மோதிக் கொண்ட மைக்குச் சான்றுகள் எவையும் இல்லை.

பரசமய எதிர்ப்பு

சங்க காலத்திற்குப் பின் பரசமய எதிர்ப்பு தமிழ்ச் சமூகத்தில் காணப்படுகிறது. பல்லவர் காலத்தில் தொடங்கி விசய நகரப் பேரரசுக் காலம் முடிய பரசமய எதிர்ப்பு என்பது பல்வேறு வடிவங்களில் பரவலாக நிலவியுள்ளது. பரசமய எதிர்ப்பின் வெளிப்பாட்டை

(i) தத்துவம் சார்ந்தது

(ii) பரசமயத்தோரின் வாழ்க்கை முறையைப் பகடி செய்து பழித்துரைப்பது

(iii) புராணம் சார்ந்தது

என மூன்று வகையாகப் பகுக்கலாம். தத்துவம் சார்ந்த எதிர்ப்பை மணிமேகலை, குண்டலகேசி, நீலகேசி ஆகிய காப்பியங்கள் வெளிப்படுத்து கின்றன. சைவம், வைணவம், ஆசீவகம், சமணம், சாங்கியம் போன்ற சமயநெறிகளை மணிமேகலை கேட்டறிந்ததை ‘சமயக் கணக்கர் திறம் கேட்ட காதை’ குறிப்பிடுகிறது. இவற்றிற்கு மறுப்புக் கூறாது கேட்ட மணிமேகலை பூதவாதியிடம் மட்டும் வாதம் செய்கிறாள். பின்னர் அறவண அடிகளைச் சந்தித்தபோது, தான் கேட்ட பல் சமய நுண்பொருள் தன் உள்ளத்தைத் தொடவில்லை என்கிறாள். இறுதியாக ‘பவத்திறம் அறுகென’ப் பாவை நோற்ற காதையில் மணிமேகலை தவக்கோலம் பூண்ட செய்தி இடம்பெறுகிறது. இச்செய்திகளை யெல்லாம் ஒருசேரப் படிப்போர் உள்ளத்தில், பௌத்தமே மெய்ச்சமயம், பிற சமயங்கள் பயனற்றவை என்ற கருத்து படியும் வகையில் சாத்தனார் கூறிச் செல்கிறார்.

நீலகேசிக் காவியம் இதற்கு நேர்மாறாகப் பல்வேறு சமய வாதிகளிடம் வாதம் செய்து, காப்பியத் தலைவியான நீலகேசி வெற்றி பெறுவதைக் குறிப்பிடுகிறது. ஒவ்வொரு சமயத் தத்துவங்களின் பலவீனங்களைச் சுட்டிக்காட்டும் வகையிலான நீலகேசியின் வாதம் பரசமய எதிர்ப்பின் வெளிப்பாடு தான்.

நாயன்மார்கள், ஆழ்வார்கள் தத்தம் சமயம் பரப்புவோராகச் செயல்பட்டார்கள். இதன் அடிப்படையில் இவர்களை மிஷனரிகள் என்று அழைப்பது பொருந்தும். சமயப்பரப்பாளர்களாகச் செயல்பட்டமையால், பரசமய எதிர்ப்பு சற்றுத் தூக்கலாகவே இவர்களிடம் காணப்படுகிறது. அத்துடன் சற்றுத் தாழ்ந்து பழிச் சொற்களைப் பயன்படுத்தும் போக்கு இவர்களிடம் மேலோங்கி யுள்ளது. சான்றாகத் திருநாவுக்கரசர் தம் தேவாரப் பதிகங்களில் சமணரைப் பழிக்கப் பயன்படுத்தும் சொற்கள் சிலவற்றைக் காண்போம்.

“பொறியற்ற சமண் நீசர்,”

“குண்டர்கள்,”

இது மட்டுமின்றி சமண சமயத்தில் இருந்த போது கொண்டிருந்த புறக் கோலத்தை

“உறி தூக்கி”

“குண்டனாய்த் தலை பறித்து”

“துவர்வாய்க் கொண்டு”

என்றெல்லாம் இழிவாகக் குறிப்பிடுகிறார். திருஞான சம்பந்தரோ, தம் தேவாரப் பதிகங்களில் பத்தாவது பதிகத்தை அவைதீக சமயப் பழிப்புக்கென்றே ஒதுக்கிவிட்டார்.

சமணத்திலிருந்து சைவனாக மாறிய மகேந்திர வர்ம பல்லவன், தான் எழுதிய ‘மத்த விலாசப் பிரகாசனம்’ என்ற நூலில் பழக்கவழக்கங்களை மையமாகக் கொண்டு பௌத்த துறவிகளைப் பகடி செய்துள்ளான்.

பிற்காலச் சோழர் காலத்தில் சைவம் ஏற்றம் பெற்றபோது வைணவத்துடன் முரண்பட்டு நின்றது. தில்லைக் கோவிலில் இருந்த கோவிந்தராசப் பெருமாளின் உருவச் சிலையைக் கடலில் தூக்கி எறியும் அளவுக்கும், வைணவ ஆச்சாரியரான இராமானுசரை வெள்ளுடை தரித்து நாட்டை விட்டு ஓடச் செய்யும் அளவுக்கும், கூரத்தாழ்வார் என்ற வைணவ ஆழ்வாரின் கண்களைப் பறித் தெடுக்கும் அளவுக்கும் வைணவத்தின் மீதான சைவ சமயத்தின் எதிர்ப்பு நீண்டது.

பிற்காலச் சோழர் காலத்தில் தொடங்கிய சைவ வைணவ மோதல் விசய நகரப் படை எடுப்பின் விளைவால் உருவான நாயக்கர் ஆட்சிக் காலத்திலும் தொடர்ந்துள்ளது. இக்கால கட்டத்தில் உருவான பள்ளு நூல்கள் இதற்குச் சான்றாகின்றன. பள்ளு நூல்களில் காலத்தால் முந்திய முக்கூடற் பள்ளுவில் இடம்பெறும் முக்கூடற்பள்ளி (மூத்த பள்ளி) என்ற பாத்திரம் வைணவம் சார்ந்தவளாகவும், மருதூர்ப் பள்ளி (இளைய பள்ளி) என்ற பாத்திரம் சைவம் சார்ந்தவளாகவும் படைக்கப்பட்டுள்ளனர்.

இருவரும் தம்முள் சண்டையிட்டுக் கொள்ளும் போது தத்தம் சமயப் பெருமைகளைப் பேசுவதை விட பரசமயத்தைத் தாக்குவதிலேயே ஆர்வம் காட்டுகின்றனர்.

மங்கையொரு பங்கிருக்க

       யோகி யென்றுதான் - கையில்

மழுவேந்தி நின்றா னுங்கள்

       மத்த னல்லோடி

கொங்கைதனில் நாச்சியாரைச்

       சங்கை யில்லாமல் - பண்டு

கூடி நெய்யில் கையிட்டா னுங்கள்

       கொண்ட லல்லோடி

காமனை மருகனென்

       றெண்ணிப் பாராமல் - காய்ந்து

கண்ணிலேறு பட்டா னுங்கள்

       கர்த்த னல்லோடி

மாமனென்று பாராமல் முன்

       கஞ்சனைக் கொன்றே - கண்கள்

மாறாதேபூப் பட்டா னுங்கள்

       மாய னல்லோடி

எனவே இக்காலகட்டத்தில் பரசமய எதிர்ப்பு புராணங்களை மையமாகக் கொண்டு வெளிப் பட்டது என்று கூற இடமுள்ளது. தத்தம் சமயச் சார்பை விளக்கும் வகையிலும், மாற்றுச் சமயத்தைப் பகடி செய்யும் வகையிலும் “பள்ளியர் ஏசல்” என்ற பள்ளு இலக்கிய உறுப்பு சில கவிஞர்களால் பயன்படுத்தப்பட்டுள்ளது. இவர்கள் அனைவரும் புராணச் செய்திகளை முன் நிறுத்தியே தம் வாதங் களை அமைத்துள்ளனர். தத்துவ எல்லைக்குள் நுழையவில்லை. இதற்குக் காரணம் இவ்விலக்கியங்கள் அடித்தள மக்களை முன்நிறுத்தி எழுதப்பட்டது தான்.

கத்தோலிக்கமும் பரசமயமும்

கத்தோலிக்கம் தமிழ்நாட்டில் பரவியபோது, அதைத் தழுவிக் கொண்டவர்கள் பெரும்பாலும் அடித்தள மக்கள்தாம். குறிப்பாக ஒடுக்கப்பட்ட மக்கள் பிரிவினராக விளங்கிய “தீண்டத் தகாதோர்” என்போர் இதில் முன்னணியில் இருந்தனர். இவர்கள் தமக்குரிய நாட்டார் தெய்வக் கோவில்களில் ஆண்டுக்கு ஒரு முறையோ, இரண்டாண்டுக்கு ஒரு முறையோ நடத்தும் திருவிழாக்களில் நாட்டார் நிகழ்த்துக் கலைகளை இடம்பெறச்செய்து கண்டும் கேட்டும் மகிழ்ந்து வந்தனர். இது மட்டுமின்றி வைதீக சமயங்களான சைவ, வைணவக் கோவில் சார்ந்த விழாக்களின் போது நிகழும் கலை நிகழ்ச்சி களையும் தூரத்தே நின்று கண்டு மகிழ்ந்தனர்.

இம்மக்கள் கத்தோலிக்கத்தைத் தழுவிய பின்னர் அவர்களுக்கென்று, கோவில் சார்ந்த நிகழ்த்துக் கலைகளை உருவாக்க வேண்டிய கட்டாயம் கத் தோலிக்கத் திருச்சபைக்கு ஏற்பட்டது. இறையியல் மற்றும் தத்துவம் சார்ந்த ஒப்பீட்டு ஆய்வுகளை நிகழ்த்தி இம்மக்கள் கத்தோலிக்கர்களாகவில்லை. எனவே தாம் முன்னர் பார்த்த நிகழ்த்துக் கலை களை மீண்டும் மீண்டும் பார்ப்பதன் அடிப்படையில் ஒரு சிலர் கத்தோலிக்கத்தைக் கைவிட்டுப் பழைய சமய நெறியை மேற்கொள்ளவும் வாய்ப்பிருந்தது.

இதனை உணர்ந்த கத்தோலிக்கத் திருச்சபை, தம் முந்தைய சமயத்தின், கோவில்சார் நிகழ்த்து கலைகளைக் காணச் செல்வதைத் தடை செய்தது. அத்துடன் அதை ஈடுகட்டும் வகையில் புதிய நிகழ்த்து கலைகளை உருவாக்கியது. இவ்வகையில் வசனமும் செய்யுளும் கலந்த ‘வாசகப்பா’ என்னும் கலை வடிவை அது பயன்படுத்தியது. இதற்குச் சான்றாக, ஈழத்துக் கத்தோலிக்கர்களிடமும், தமிழ் கத்தோலிக்கர் களிடமும் வழங்கிவந்த வாசகப்பா நாடக நூல்கள் அமைகின்றன.

அலெக்சாண்டர் வாலிங்கனோ என்ற சேசுசபைத் துறவி, ரோமில் இருந்த சேசு சபையின் அதிபர் தந்தைக்கு கி.பி.1584 டிசம்பர் 15 ஆம் நாள் கடிதம் ஒன்று எழுதியுள்ளார். அக்கடிதத்தில் இங்குள்ள மக்களைக் கவர்வதற்கும், இந்துத் திருவிழாக்கள் குறித்து அவர்கள் கொண்டுள்ள உணர்வையும் நினைவையும் மாற்றுவதற்கும் நாடகங்களை உருவாக்கியுள்ளதாக எழுதியுள்ளார்.

16 ஆம் நூற்றாண்டின் இறுதிப்பகுதியில் எழுதப் பட்ட இக்கடிதம் கத்தோலிக்க அரங்கம் மேற் கொண்ட இரு பணிகளைத் தெளிவாகச் சுட்டு கின்றது.

முதலாவது, கத்தோலிக்கம் குறித்த ஈடுபாட்டைக் கத்தோலிக்கர்களிடமும் கத்தோலிக்கர் அல்லா தாரிடமும் உருவாக்குதல்.

இரண்டாவதாக, தம் பழைய சமயம் சார்ந்த உயர் மதிப்பீடு புதிய கத்தோலிக்கர்களிடம் மீண்டும் துளிர்விடுவதைத் தடுத்தல்,

இவற்றுள் இரண்டாவது பணிக்குத் துணை நிற்கும் வகையிலேயே பரசமய எதிர்ப்பு கத்தோலிக்க அரங்கில் இடம்பெற்றுள்ளது.

கல்வியறிவு மறுக்கப்பட்டவர்களே பெரும் பாலும் தொடக்ககாலக் கத்தோலிக்கர்களாக இருந்தனர். அவர்களிடம், தாமஸ் அக்கினோ உருவாக்கிய கத்தோலிக்க இறையியலைப் பற்றிப் பேசுவதில் பயனில்லை என்ற நிலையில், பரசமய எதிர்ப்பு என்ற உத்தி முறை புதிய கத்தோலிக்கர் களை, விலகிச் செல்லாமல் தடுத்தது.

தைரியராயர் வீதி நாடகம்

பரசமய எதிர்ப்பானது யாவரும் அறிந்த புராணங்களை மையமாகக் கொண்டே நிகழ்ந்து உள்ளது. இதற்குச் சான்றாக ‘தைரியராயர் வீதி நாடகம்’ என்ற வாசகப்பா நாடகத்தைக் குறிப் பிடலாம். இந்நாடகம் திருவண்ணாமலையில் இருந்து ஏறத்தாழ 12 கி.மீ தொலைவிலுள்ள கெ(க)ங்கப்பட்டு என்ற கிராமத்தில் ஆண்டுதோறும் ஈஸ்டர் பண்டிகை முடிந்து மூன்று வாரம் கழித்து மே மாதத்தில் ஊரவர்களால் நடத்தப்படுகிறது. இவ்வூரில் வாழும் கத்தோலிக்கர்களில் மிகப் பெரும்பான்மையோர் ஆதி திராவிடர் (பறையர்) வகுப்பைச் சேர்ந்தவர்கள்.

இந்நாடகத்தில் இடம்பெறும் தைரியராயருக்கு உருவச்சிலை ஒன்று ஊரில் அமைக்கப்பட்டுள்ளது. இவர் ஒரு வரலாற்றுப் பாத்திரம் என்று இவ்வூர் மக்கள் நம்புகின்றனர். இவரது இயற்பெயர் கான்ஸ்டைன்டின் என்பதாம். இப்பெயரைத் தமிழில் தைரியராயர் என்று குறிப்பிடுகின்றனர். ராயர் என்பது மன்னனுக்குரிய பட்டமாக விசயநகர ஆட்சிக் காலத்தில் வழங்கியுள்ளது.

மர்ச்சீலியான் என்ற மன்னன் ரோம் நாட்டை ஆண்டு வருகிறான். தன் மந்திரியை அழைத்து நாட்டு வளமையைக் கேட்க

சொல்லுவேன் பிர்மா விஷ்ணு ருத்திரன்

சுவாமிக்கு அர்ச்சனை தூ பநை வேத்தியம்

வல்லவா குறையன்றியே ஓர் நாளு

வளருதென்ன ரசே உன் கீர்த்தி வளருதென்னரசே

என்று கூறிவிட்டு ரோம் நகரில் கிறித்தவம் பரவுவதை

என்ன சொல்லுவேன் ரோமை நாட்டினில்

ஏத்தகிருஸ்துவோர் எங்கும் பரவியே

இருக்கு ராரையா செழித்தோங்கி இருக்குராரைய்யா

வேதங்கள் படிக்கு ரார்வெகுபேரை மயக்குரார்

பாதிரிவருகிறார் பணங்களை தருகு ரார்

பட்டணம் வீணாச்சு கிருஸ்து

    மதம் யெட்டி பெருகாலாச்சி

என்று கூறி விட்டு உரைநடையில்

“சரணம் சரணமையாமகா ராஜா பூபதியே நமது

ராட்சியத்தில் கிறிஸ்து வேதமென்று ஒரு புதிய

வேதமுண்டாகி அதாவது

    ஒரு தொத்து வியாதியைப்போல்

நமது இராட்சியம் எல்லாம் பரவி விட்டது இன்றைக்கு

சிவமதமாயிருப்பவர்கள் நாளைக்கு

   கிறிஸ்து மத மென்று சொல்லுகிறார்கள்

இப்படி பட்டணம் முழுவதும் கெட்டுப் போய் விட்டது

    இதன்மர்மத்தை இன்னதென்று

அறியக்கூட வில்லையே மகாராஜ பூபதியே”

என்று விளக்குகிறான். இவ்வுரை கேட்ட மர்ச்சிலி யான் அப்படி “அந்த வேதம் நமது இராட்சியத்தில் அதிகம் பரவுதென்றால் இனி நாம் சும்மா இருக்க லாகாது. அப்படி வேதத்தில் சேர்ந்த பேர்களை வேதத்தை விடும்படியாகவும் அப்படி விடாத பேர் களை நானாவித ஆக்கினைகள் செய்தும் அவர்களை அடித்து அதாகுதம் செய்து அவர்கள் சொத்துக்களை யெல்லாம் அரண்மiனையில் சேர்த்துவிட்டு அவர் களைப் பிறதேசம் விடுவீர்களாகவும்”

என்று கட்டளையிடுகிறான். இக்கட்டளையைக் கேட்ட மந்திரி சேவகர்களை அழைத்து

“அகோவாருங்களிடா சேகுவோர்களே

     நமது ராட்சியத்திலுண்டாகிய

கிறிஸ்துவர்களை செய்யாத கொடிய

   வேதனைகளை செய்து வேதத்தை விடச்

செய்யவும் அப்படி விடாத பேர்களை வெட்டியும்

மற்றவர்களை பிறதேசம் ஓட்டி விடுவீர்களாகவும்”

என்று ஆணையிடுகிறான். இது நிறைவேற்றப்படவே கிறித்தவர்கள் மர்ச்சீலியானின் மாமனாரான தைரியராயன் என்ற மன்னனிடம் சென்று முறையிட அவர் கிறித்தவர்களுக்கு அடைக்கலமளிக்கிறார்.

இச்செய்தியை அறிந்த மர்ச்சீலியான், தன் மாமனாரான தைரியராயனிடம் கப்பம் வாங்கி வரும்படி பணிக்கிறான். தைரியராயன் கப்பம் கட்ட மறுத்து விடுகிறார். பின்னர் தன் மனைவியை அழைத்து தன் மாமனாரின் செயலைக் கூறுகிறான். தன் தந்தை மீது படையெடுக்க வேண்டாமென்று அவள் கூறிய அறிவுரையை ஏற்காமல் படையெடுக்க முனைகிறான் மர்ச்சீலியான் .

மர்ச்சீலியானின் ஒன்று விட்ட சகோதரன் திய்யக்குளோசன் இவனது படைத் தலைவன் பங்கிராஸ் கிறித்தவர்களுக்கு ஆதரவாகச் செயல் படுகிறான். அவனது போதனையால் மனைவி அலமேல் அம்மாள், மகள் செவிலி, சோம்பாய் என்போர் கிறித்தவர்களாக மாறிவிட்ட செய்தியை அமைச்சன் குறிப்பிடுகிறான்.

அவர்களை அழைத்து வரும்படி மர்ச்சீலியான் உத்தரவிட அவர்களும் வருகின்றனர். தன் முன் வந்த மனைவியிடம் தான் செய்ய இருக்கும் பராசக்தி பூசையைக் குறித்து

“கேளும்மாதே பராசக்தியேன்று

     ஒரு பொண்ணுருவத்தை

செய்து அம்மணமாக நிருத்தி ஒரு பொற்குடத்தில்

நல்ல உயர்ந்த சாராயத்தை நிரப்பி விக்கிரகத்தின்

கால் நடுவே வைத்து சகல கனி வர்கங்களும்

பலகாரப்பட்சனங்களையும் வரிசை பிரகாரமாக

வைத்து படைப்பதற்கு இரண்டு

     கன்னிப் பெண்களையும்

பூசாரியுடன் கூட்டி, எக்திய குண்டத்தை வளர்த்திட

ஓம் சாந்தி செய்து சகல பூசை நெய் வேத்தியங்களும்

முடிந்த உடன் சாராயம் முதல்

     சகல பண்டுபலாதிகளையும்

சகலரும் உண்டு, குடித்து, களித்து,

      படுத்து நித்திரை செய்து

போவதும் பராசக்தி பூசையென்று சொல்லப்படும்

என் பிராண வதியே”

என்று கூற, அவளோ

“கேளும் என் பிராண ரட்சகா

     தேவரீர் சொல்லியவைகளை

கேட்ட போது பேய்க் கூத்தாகத் தோன்றுகிறது

       இன்னும் அதன்

விருத்தாந்தத்தை அடியாளுக்கு

     உரைசெய்ய வேணுமையா

சுவாமி என் பிராண ரட்சகா”

என்று கூறி விடுகிறாள். இதற்கு மர்ச்சீலியான் விடை கூற இருவருக்குமிடையே தர்க்கம் நடக்கிறது. இத்தர்க்கத்தில் சைவ, வைணவ புராணக் கதைகள் பகடி செய்யப்படுகின்றன.

“ஆதியான் சோதி அமல சர்வேசுரன்

தீதில்லா ஏசு கிறித்துவ நாதன்

விமலனே யன்றி வேறு தெய்வத்தை

குவலயத் தன்னில் கும்பிட மாட்டேன்.”

என்ற கருத்து நாடகத்தில் அழுத்தம் பெறுகிறது. ரோம் நாட்டில் கிறித்தவம் பரவியபோது அதை பரவவிடாது தடுத்தவர்களுள் மர்ச்சீலியான் என்பவனும் ஒருவன். அவனுடைய வரலாற்றை இங்கு நாடகமாக ஆக்கும்போது தமிழ்நாட்டு சமயங்களுக்கும் கிறித்தவத்திற்கும் இடையில் நிகழும் மோதலாக இந்நாடகம் சித்திரிக்கிறது. ஒரு கதைக் கருவை ஐரோப்பாவிலிருந்து எடுத்துக் கொண்டு அதைத் தமிழ்ச் சூழலில் நிகழ்த்துக் கலையாக மாற்றியிருக்கிறார்கள். கிறித்தவர் அல்லாதவர்களும் இந்நாடகத்தைப் பார்க்கும் பொழுது கிறித்தவச் சமயத்திற்கும் தம் சமயத்திற்கும் இடையிலான முரண்பாடுகளை அறிந்துகொள்ளும் வாய்ப்பை இந்நாடகம் ஏற்படுத்தியுள்ளது. அத்துடன் புதிய கிறித்தவர்கள் கிறித்தவத்தின் எல்லைக்குள் நிலைத்து நிற்கவும் உதவியுள்ளது. ஆனால் இத்தகைய வரலாற்றுச் சூழல் தற்போது இல்லை. என்றாலும் கடந்த கால சமயச் சூழலின் எச்சமாக இந்நாடகம் காட்சி தருகிறது. ஒரு வகையில் தமிழ்நாட்டு சமய வரலாறு தொடர்பான ஓர் ஆவணம் என்றும் இதைக் குறிப்பிடலாம்.

(தைரியநாதன் வீதி நாடகத்தின் கையெழுத்துப் படியை வழங்கி உதவிய பணி. பிரிட்டோவின் சென்ட், சே.ச. அடிகளார் அவர்களுக்கும், கள ஆய்வில் துணைபுரிந்த தோழர் த.ம.பிரகாஷ் (திருவண்ணாமலை) அவர்களுக்கும் நன்றி உரியது.)

Pin It