காதல் கணவனை எண்ணி அவன் வரவை எதிர்பார்க்கும் கற்பரசியின் எண்ணக்குமுறலை எடுத்துரைக்க எண்ணுகிற கலித்தொகைக் கவிஞன் பாண்டியப் பேரரசனின் பெருமைகளைச் சொல்லத்துணியும்போதெல்லாம் எழில்மிக்க வையை ஆற்றை எழுத்தோவியமாக்கிக் களிகொள்கிறான். அள்ள அள்ளக் குறையாத அழகிய மணல் குன்றுகளைக் கூறுபோட்டு குறுக்காக ஓடிக் கொண்டிருக்கும் நீரோட்டங்களையும் கலித்தொகைக் கவியரசன் ரசித்துப் பாடிப் பரவசம் கொள்கிறான்.

வையை ஆற்றின் இருகரைகளும் வான் உயர்ந்த மரங் களடர்ந்த சோலைகளாக இருந்திருக்கின்றன. வையை ஆற்றின் இருகரைகளிலும் மலர்க்கொத்துக்களுடன் கூடிய மரக்கிளைகள் தாழ்வாகப் படர்ந்திருக்கின்றன. ஆற்றுக்குள் செந்நிற மணற் குன்றுகள் உள்ளன. அவை கன்னியர் தம் தலைக் கொண்டைகள் போல் காட்சி தருகின்றன. திருமகளின் மார்பில் புரளும் முத்துமாலை போன்று ஆற்றுநீர் அந்த அறல் மணலை ஊடறுத்து ஓடிக்கொண்டு இருக்கிறது. அந்த இளவேனிற் பொழுதும் இப்போது வந்துவிட்டது என்கிறாள் ஒருத்தி.

மற்றொருத்தியோ வையை ஆற்று மணற்குன்றுகளில் அமர்ந்து கும்மாளமிட்டும் பின்பு ஆற்று நீரில் நீந்தி ஆனந்தமாகக் குளிக்கும் பரத்தையர் புனலாட்டம் கூடப் பார்ப்பதற்கு நீ வர மாட்டாயோ? என்று இரங்குவதாகச் சொல்லி, ஆற்றின் வளத்தைக் கவிஞன் ஆராதிக்கிறான். இன்னொருத்தியோ வளையல் அணிந்த இளம் பெண்களின் தலைமுடியை வகுப்பெடுத்து வாரியதுபோல ஆற்றில் நீரோடிய பகுதியை அடையாளங்காட்டுவதைப் போல வண்டலிழைத்தது போலக் கருமணல் மேடுகள் ஈரமுடன் காட்சி தருகின்றன. அந்த இளவேனிற்காலம் வந்துவிட்டது என்று காலத்தின் அருமை கூறி ஆற்றின் அந்தப் பருவத்தையும் படம் பிடித்துக் காட்டுவதாய் அமைந்திருக்கிறது.

கொள்ளிடமும் காவிரியும் குலவிடும் திருவரங்கம் போல் வடபுலத்தில் வையை ஆறு வளங்கொழித்திடச் செய்ய தெற்கில் ஓர் தேனாறாய்த் திகழ்ந்த கிருதமால் நதி திரட்டித் தந்த மருதநிலத் திரவியத்தால் மருதை என்று துலங்கியது மருவி மதிரையாக மாறி மதுரை என்று திரிந்து வழங்கிவருகிறதும் இங்கு நீராதாரங்களாக கல்குளம் கண்மாய், கூத்தியார்குண்டு கண்மாய், தென்கால் கண்மாய், வில்லாபுரம் கண்மாய், அனுப்பானடி கண்மாய், வண்டியூர் கண்மாய், களிமங்கலம் கண்மாய், செல்லூர் கண்மாய், சாத்தமங்கலம் கண்மாய், தல்லாகுளம் கண்மாய் ஆகியவை அமைந்திருந்தன.

ஏந்தல் என்றும் தாங்கல் எனவும் எழில் சேர்த்திருந்த நீர்நிலைகளில் சுதந்திரத்திற்குப் பின்பு முதல் பலியானது தல்லாகுளம். இங்கே மாநகராட்சிக் கட்டடம் எழுந்திட சாத்தமங்கல கண்மாய் கல்விக்கூடமானது. வில்லாபுரம், அனுப்பானடி கண்மாய்கள் வீட்டுமனைகளாகின.

திருப்பரங்குன்றத்தின் தென்கால் கண்மாய் பக்தர்களின் தீர்த்தக் குளமாய்த் திகழ, அதன் வடபுறத்தில் உயர்ந்து நின்ற கரையோ சோலை வனமாய்த் திகழ்ந்து இன்று சுருண்டு போய்விட்டது. படகுசவாரிக்கு உகந்த இந்தத் தென்கால் கண்மாய் ஆக்கிரமிப்பு அதிபர்களால் அழிக்கப்பட்டுவரும் நிலையில் கூத்தியார்குண்டு கண்மாயும் ஆக்கிரமிப்பில் அகப்பட்டு அல்லோல கல்லோலப்பட்டுக் கொண்டிருக்க, கொடிக்குளம் இப்போது கூப்பாடு (அண்ணா தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்திற்காக) போடத் தொடங்கிவிட்டது.

அன்றைய மூவேந்தர் அமைத்த அரிய நீர்நிலைகள் அவர்தம் புகழ்பாடிகளால் போற்றப்படாமல் அழிக்கப்பட்டு வரும் அவலநிலை உருவாகிவிட்டது. உள்ளூர் ஊரணிகளுக்கும் என்றோ உலை வைத்தாகிவிட்டது.

பீபீகுளம், இன்று அனைத்திந்திய வானொலி நிலையமாகவும் மத்திய அரசுப்பள்ளி வளாகமாகவும் மாறிவிட்டன. கீழ்மதுரை தொடர்வண்டி நிலையத்திற்குக் கீர்த்தி சேர்க்கும் இடமாகப் பின்னாளில் பேணப்படுமோ? என்ற தொலைநோக்குச் சிந்தனைக்கு ‘சிறை’ வழங்கும் விதம் சின்னக்கண்மாய் ஆக்கிரமிப்பில் அழிந்துகொண்டிருக்கிறது. ஜெய்ஹிந்துபுர நுழைவாயிலில் இருந்த ஊரணியும் ஒழிக்கப்பட்டுவிட்டது

பெருமாள் கோவில் தெப்பக்குளம் பீதிகொண்டு தவிக்க வலைவீசி தெப்பக்குளமும் வல்லூறுகள் வலையில் சிக்குமோ என்ற வருத்தத்தில் பக்தர்கள் வாழ்கின்றனர். முத்துப்பட்டி கண்மாய்க்கும் மூடுவிழா நடத்திட, அதன் விளைநிலங்கள் யாவும் வீடுகளாய் அழகப்பன் நகராய் அகலவிரிந்து வருகின்றன. மாடுகட்டிப் போரத்தால் மாளாது செந்நெல் என்று யானைகட்டிப் போரடித்த புகழ் ‘மருதை’ புதைகுழிக்குப் போய்விட்டது.

தெற்கு விளைநிலங்கள் தேய்ந்திட வடக்கு, மேற்கு, கிழக்கு வளமை குன்றின. மாபெரும் மாடக்குளம் கண்மாயின் மடியில் கிடந்து வடிநீரால் வாழ்ந்த நிலங்கள் வானமாமலை நகர் தொடங்கி சந்திரகாந்தி நகர், சொக்கலிங்க நகர் என சொர்க்கபுரியாக்கப் பட்டுவிட்டன. வண்டியூர் கண்மாயின் வளமை மாறி கோமதிபுரம், தாசில்தார்நகர் குடியிருப்புகளாகிவிட்டன. எஸ்.எஸ்.காலனி எனப்படும் சோமசுந்தரம் குடியிருப்பும் விளைநிலங்களில் விதைப் பட்டவையே. இதற்கும் முன்னதாக எழுந்தது ஞானஒளிவுபுரம். மதுரை நகரசபை அதிகாரியாக இருந்தவர் நினைவாக எழுந்த பகுதி. இவை எல்லாம் தாண்டி மேற்குநோக்கிச் சென்றால் விராட்டிபத்துவரை தென்னந்தோப்புகளின் தென்றல் காற்றில் குளித்துவிட்டு வறட்சியான நாகமலைப்புதுக்கோட்டை சென்றால் வாவா என்று அழைக்கும் வரலாற்றுச்சின்னமான சமணர் மலைக் குன்று நின்று மனதைச் சாந்தப்படுத்தும்.

இதன் எதிர்ப்புறம் தேனி நெடுஞ்சாலையோரம் நாகமலை அடிவாரப்பகுதி ஜெயராஜ் நாடார் உயர்நிலைப்பள்ளி. இப்பள்ளி வளாகத்தைப் பசுமைமிக்க சுந்தரவனமாக்க அப்பள்ளியின் அன்றைய விவசாயப் பாடப்பிரிவு ஆசிரியர் மறைந்த அய்யாவு சேர்வை அரும்பாடுபட்டது நினைவுகூரத்தக்கது. ஐம்பதுகளில் இம்மாற்றம் நிகழ்ந்தபோது எதிரே வெட்டவெளி.

அசோக் லேலெண்டு கம்பெனியின் அரசுப் பேருந்து நாகமலை புதுக்கோட்டையோடு வந்து சென்றுகொண்டு இருந்தது. மாணவர்கள் நலன் கருதி பள்ளிவரை வந்ததுடன் அதையும் தாண்டி சென்று திரும்பியது. 21-ஆம் எண் பேருந்தின் இறுதி நிறுத்தத்திற்குப் பெயர் இ.தர்மம் எனப்படும் இடையர் தர்மம் என்பதாகும்.

பண்டைய மதுரையின் எச்சங்களாய் கோச்சடை எனவும் பாண்டிமுனீஸ்வரர் கோவில் எனவும் பாண்டியன் கோட்டை, ஆண்டார்கொட்டாரம், கழுகேர்கடை எனவும் இருக்கின்ற இடங்கள் ஆராயப்படவேண்டும்.

புதுவைப்பல்கலைக்கழகத்தின் சார்பில் இடப்பெயர் ஆய்வுக்கழகம் தொடங்கி ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டது போன்று மதுரையிலும் இடப்பெயராய்வுக் கழகம் தொடங்கிடும் பட்சத்தில் தொல்குடியினரான இடையர் பெயரால் அமைந்து மறைந்துவிட்ட காரணம் புலப்படும்.

செந்தமிழர்கள் கண்ட செருமுனைகளில் ஒன்றாய் சிந்திய செங்குருதிகளால் சிவந்த புலமோ என சிந்தை கொள்வார் முன்னே செம்மாந்திருந்த செம்மண் நிலப்பகுதி அன்றைய அரசுப்பணியாளர் சங்கச் செயலர் ஆழ்வாரப்பன் நகராய் அடிக்கோலுற இன்று இப்புலம் எங்கெங்கும் இல்லங்களாகி இனிதே நிற்கின்றது.

தீண்டாமை குளம் ஒன்று மதுரையில் திடலாக மாறிய நிகழ்வும் நடந்துள்ளது. 18-ஆம் நூற்றாண்டில் பார்ப்பனர் ஆதிக்கம் கொடிகட்டிப் பறந்த காலம். அப்போது புறநகர்ப் பகுதியாக இருந்த இடத்தில் படித்துறைகளுடன் ஆழமான நீர்நிலை இருந்து அதற்கு புட்டுத்தோப்பில் இருந்து வைகைநீர் வாய்க்கால் வழியே கொண்டுவந்து நிரப்பப்பட்டது.

அதில் பார்ப்பனர் மட்டுமே குளிக்கலாம், பிற சாதியினர் எவரும் குளித்தால் தீண்டாமைச் சட்டத்தில் தண்டிக்கப்படுவர். இக்குளம் என்ன காரணத்தினாலோ வெள்ளையர் ஆட்சிக் காலத்திலேயே மூடப்பட்டு தினச்சந்தைத் திடலாகியது. பின்பு வார இருமுறை சந்தையாகி இறுதியில் ஞாயிற்றுக்கிழமைச் சந்தையாகி இன்று இரும்பு ஆதிக்கச் சந்தையாகிவிட்டது.

சுதந்திரத்திற்குப் பின்பு திலகர்திடல் எனப் பெயர்பெற்ற இத்திடல் வாரச்சந்தை அல்லாத நாட்களில் பொது விளையாட்டு மைதானமாகியது. கால்பந்துப் போட்டிகள், கைப்பந்துப் போட்டிகள் என களைகட்டி நிற்கும்.

மாலைமுதல் இரவுப் பொழுதில் அரசியல்கட்சிகளின் பொதுக் கூட்டத் திடலாகத் திகழ்ந்தது. அண்ணா, முத்துராமலிங்கத்தேவர், காமராசர், ஜீவா, மா.பொ.சி., ராமமூர்த்தி, பேராசிரியர் சி.இலக்குவனார் போன்றோரின் முழக்கங்களுக்கான மிக உயரமான மேடைத்தளம் அமைந்திருந்து அணிசேர்த்தது. இரண்டாம் உலகப்போர் நிறைவுற்ற காலத்தில் அன்றைய மதுரை நகர் நான்கு வெளிவீதிகளோடு முடங்கிக் கிடந்தது.

மதுரை மாரியம்மன்கோவில் தெப்பக்குளம் நகரில் இருந்து அந்நியப்பட்டுக் கிடந்தது. முனிச்சாலைப் பகுதி நெடுகிலும் இருபுறங்களும் செடிகொடிகளுடன் கூடிய தோப்புத்துரவுகளாகக் கிடந்தன. எனினும் மணல்மேடு எனப்படும் இன்றைய தினமணி தியேட்டர் பகுதியில் டூரிங் கொட்டகை உருவாகி இருந்தது.

கள்வர் நடமாட்டம் கட்டுமீறி நடந்ததால் வழிப்பறிக் கொள்ளைகளுக்கும் பஞ்சமில்லாத நேரம். கீழவெளிவீதியில் இருந்து விளக்குவசதி இருக்கும்.

மின்சார வசதிகிட்டாத அந்த நேரத்தில் ‘சீமைத்தண்ணி’ எனவும் மக்கள் சிறப்புப் பெயரிட்டிருந்த மண்எண்ணெய்ப் பயன்பாடு தொடர்ந்திருந்தது. நகரின் முக்கிய சந்திப்புக்களில் கல்தூண்களில் சிம்னி எனப்படும் கண்ணாடிக் கவசமிட்ட தெருவிளக்குகள் வைக்கப்பட்டிருக்கும்.

மதுரை மாநகராட்சியினர் பராமரிப்பில் இருந்த தெரு விளக்குகளில் தினமும் மண்எண்ணெய்யை ஆங்காங்குப் பணிக்கமர்த்தப்பட்ட ஊழியர்கள் ஊற்றிச் செல்வதுண்டு. அதையும் திருடிச் செல்வாருண்டு.

பத்தொன்பதாம் நூற்றாண்டில் சென்னையில் இருந்து திண்டுக்கல் வழியே மதுரை வரை போடப்பட்டிருந்த இருப்புப்பாதை தூத்துக்குடி துறைமுகம் வரை நீட்டிக்கப்பட்டதும் மதுரை அறிவியல் ரீதியாக வளர அடி எடுத்து வைத்தது. வெள்ளையரின் ஹார்வி மில் நூல் மற்றும் துணி நெசவில் ஈடுபட்டது. ரெயில் நிலையத்தை அடுத்து ஏறத்தாழ 60 ஏக்கர் நிலப்பரப்பில், அதை அடுத்து மதுரை தொழில் நகரமாகத் தொடங்கியது. ரெயில் நிலையத்தைச் சார்ந்த 100 ஏக்கர் நிலப்பரப்பு ஹார்வி மில்லாக உருப்பெற்றது. மிக உயர்ந்த கற்கோட்டை போன்று உடைகற்களால் இதன் பிரம்மாண்ட மதில்கள் எழுப்பப்பட்டன.

ஆண்டுதோறும் ஆயுதபூசைத் திருநாளன்று இவ் வாலையைப் பொது மக்கள் சுற்றிப் பார்க்க அனுமதிக்கப்பட்டனர். அந்த நாட்களில் ஒரு அரிய கண்காட்சியாக அது அமைந்தது.

ஆந்திரமாநிலம் ஐதராபாத்தில் அமைந்துள்ள சாலர்சங் மியூசியத்தைச் சுற்றிவர எத்தனை மணிநேரமாகிறதோ அதே கால அளவு இந்த ஆலையைச் சுற்றிப்பார்ப்பதற்குத் தேவைப்பட்டது.

மதுரை நகரில் பல ஆலைகள் உருவான போதிலும் வேறு எந்த ஆலைத்தொழிலாளர்களுக்கும் இல்லாத முதல் மரியாதை ஹார்வி மில் தொழிலாளர்களுக்கு அப்போது உண்டு.

மதுரை சித்திரைத்திருவிழா தேரோட்டத்தின்போது ஹார்விமில் தொழிலாளர்கள் இருபெரிய தேர்களின் வடங்களைப் பற்றிட நான்குமாசிவீதிகளின் வழியே இறைவனின் வீதிஉலாவை நிறைவு செய்வார்கள்.

திருத்தேர்கள் வீதிஉலாவின் போது தேர்களில் இருந்து மலைவாழைப்பழங்களைப் போடுவார்கள். வடக்குமாசிவீதியில் கிருஷ்ணன் கோவில் அருகே இந்நிகழ்ச்சி நடைபெறும். தேர்களில் இருந்து தெருவில் வீசப்படும் இப்பிரசாதப் பழங்களை எடுக்க பக்தர்களிடையே போட்டி நிகழும். அப்போது கையில் கிடைத்தது கால்வாசி, காலில் மிதிபட்டு நசுங்கியது முக்கால்வாசி என்ற நிலைமையே ஏற்படும்.

வெள்ளையரால் தோற்றுவிக்கப்பெற்ற ஹார்விமில்லுக்குப் போட்டியாகத் தொடங்கப்பெற்ற மதுரை ராஜாமில் இங்கு நினைவுகூரத்தக்கதாகும். தூத்துக்குடி பழனிச்சாமிநாடார் மகன் கனகவேல் என்னும் பெருவணிகரால் ஹார்வி மில்லின் வடகிழக்குப் பகுதியில் வைகை ஆற்றங்கரைஓரமாக ராஜாமில் எனப்படும் நூற்பாலை 19-ஆம் நூற்றாண்டில் தொடங்கப்பட்டு சீரும் சிறப்புடன் நடைபெற்று வந்திருக்கிறது. அரை நூற்றாண்டுக்குப் பின்பு இந்த ஆலை கோவை மில் அதிபர் கிருஷ்ணன் நிர்வாகத்திற்குச் சென்று, பின்னர் வேறொரு நிர்வாகத்திற்கு மாறி, வீட்டு மனைகளாகி வேறுபட்டு கனகவேல் காலனியாக காட்சி தருகிறது.

இதேபோல கன்னித்தமிழ் வளர்க்கும் கல்விச்சுடர்களை மதுரையில் தோற்றுவித்த கருமுத்து தியாகராசன் செட்டியார் அன்னைமீனாட்சியின் அருட்பெயர் கொண்டு மீனாட்சிமில் உருப்பெற்றது.

மதுரையில் இருந்து திருப்பரங்குன்றம் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் இந்த நூற்பாலை உருப்பெற்றது. மதுரையில் இருந்து தெற்கே நெல்லை செல்லும் இருப்புப்பாதையையும் மேற்கே போடி செல்லும் இருப்புப்பாதையையும் எல்லையாகக் கொண்டு ஏறத்தாழ 60 ஏக்கர் பரப்பளவுக்குப் பரந்த நிலப்பரப்பில் மிகப்பெரிய சோலை வனத்திற்குள் ஆலை அமைந்திருந்தது. கருங்கற்களால் கட்டப்பட்ட இந்த ஆலைக்குள் செல்லும் பாதைகள் அனைத்தும் செவ்விளநீர்களைச் சுமந்து நிற்கும் உயரம் குறைந்த குட்டைத் தென்னை மரங்கள் குடை பிடித்ததுபோல் அலங்கரித்து நிற்கும் அழகைக் காணக்காணக் குளிர்ச்சியாக இருக்கும்.

‘ஆலையின் சங்கே நீ ஊதாயோ’ என்ற பாவேந்தர் பாவுக்குப் பதில் தரும் விதம் இந்த ஆலையின் மிகஉயர வெண்ணிறப் புகைப்போக்கியின் உச்சியில் உட்கார்ந்து கொண்ட சங்கு ஒலிக்க, தொலை தூரத்தில் வந்துகொண்டு இருக்கும் ஆண்-பெண் தொழிலாளர் அனைவரும் ஓட்டமும் நடையுமாக ஆலையை நாடி வருவர்.

மீனாட்சி மில் எதிரே அமைந்த ரெயில்வே கேட், தொழிலாளர் தொல்லை கேட்டாகவே அமைந்திருந்தது. ஆலை வாயில் அடைக்கப்படும் நேரத்தில் மில்கேட் மூடப்பட்டுவிட சரக்கு ரெயில் சைகை (சிக்கனல்) கிடைக்காமல் நின்றுவிடும். மறித்து நிற்கும் அதைக் கடக்க இரு பெட்டிகளுக்கு இடையே ஆண்-பெண் தொழிலாளர்கள் அவசர அவசரமாக ஏறிக் கடப்பதுண்டு. ஒரு

சமயம் அவ்வாறு கடக்க முயன்ற ஒரு பெண் தொழிலாளி தடுமாறி தண்டவாளத்தில் விழுந்து தலைதுண்டித்து இறந்தது நினைவு வருகிறது. மீனாட்சி மில்லின் தென்புறம் ஆலையரசர் கருமுத்து தியாகராசன் செட்டியாரின் எழில்மனை ஏற்றமுடன் இருந்தது. கவின்மிகு கட்டடக்கலைக்கு எடுத்துக்காட்டாகத் திகழ்ந்த அந்த வளாகத்தில் நடைபெற்ற ஒரு விழாவுக்குப் பத்திரிகையாளன் என்ற முறையில் செல்லும் வாய்ப்புக் கிட்டியது.

இந்தியாவின் இரண்டாம் கோடீஸ்வரர் இடத்தில் அப்போது இருந்த பிர்லா கூட இந்த அழகிய மாளிகைக்கு வருகைபுரிந்து பாராட்டிச் சென்றுள்ளதையும் அப்போது அறிந்தேன். அத்தகைய வளமனையும் தன் வாழாநாளை முடித்துக் கொண்டுவிட்டது. அந்த வளாகமே இப்போது அடுக்குமாடி வீட்டுக்குடியிருப்புக்களாகி விட்டன.

வரலாற்றுப் புகழ்பெற்ற கோவலன் பொட்டல் தற்போதைய டி.வி.எஸ். நகருக்குப் போகும் வழியில் ஆலமரங்களுடன் அலாதியாக காட்சி அளிக்கும். கோவலன் பொட்டலில் தோண்டப்பட்ட பள்ளங்களில் பண்டைய முதுமக்கள் தாழி கவனிப்பாரற்றுக் கிடக்கும். இப்போது அப்பகுதி இடுகாடாக்கப் பட்டிருக்கிறது. இதன் பின்புள்ள வயல்பகுதி டி.வி.எஸ்.நகர் என உருப்பெற்றுள்ளது. இதற்கு முன்னதாக 1952-ஆம் ஆண்டுவாக்கில் உருப்பெற்ற திருநகருக்கு அன்றைய “சித்ரகலா ஸ்டூடியோ சிறப்பு சேர்த்தது இங்கு உருப்பெற்ற உண்மையான வெற்றி” என்ற நிகழ்த்திரைப்படம் மதுரை சென்ரல் சினிமாவில் சில வாரங்கள் ஓடியது. தியாகராஜ பாகவதர், டி.ஆர்.மகாலிங்கம், பி.யு.சின்னப்பா போன்றோர் பிரபலங்களாய் இருந்த நேரமது. முந்திய சித்ரகலா ஸ்டுடியோ மூடப்பட்டு உரக்கிடங்காகப் போன போதிலும் அதன் நுழைவுத் தோரண வாயில் சாலையோரம் இன்று சான்றாக நிற்கக் காணலாம்.

மதுரையைச் சுற்றிலும் மருதநிலங்கள் பசுமைகொண்டு இருந்தது போல் மதுரை நகருக்கு மற்றோர் அணியாய்த் திகழ்ந்தவை பூங்காக்கள். பெரியார் பேருந்து நிலையம், மத்தியப் பேருந்து நிலையமாக இருந்தபோது, அதன் தென்பகுதியில் முகமது அலி பூங்கா மாட்சிமைகொண்டு இலங்கி மாண்டுபோனது.

காங்கிரஸ் தியாகி சோமயாஜுலு பெயரில் விளங்கிய சிம்மக்கல் பத்மாசினி பூங்கா செடிகொடி மரங்களோடு உடற் பயிற்சிக்குரிய உபகரணங்களோடு இருந்ததும் உருக்குலைக்கப்பட்டு மத்திய நூலகமாய் மாற்றி அமைக்கப்பட்டுவிட்டது.

முன்னதாக இந்த இடம், பூங்கா அமைவதற்கு முன்பு அடுப்புக்கரி ஆவியில் ஓடிய பேருந்துகளின் நிலையமாக, பயணிகளின் பயன்பாட்டில் இருந்தது என்பது இங்குக் குறிப்பிடத் தக்கது.

இதே போல் கீழமாசி வீதியில் பொலிவுடன் திகழ்ந்த உடற்பயிற்சிப் பூங்காவும் ஒழிக்கப்பட்டு தொலைத்தொடர்புத்துறை அலுவலகமாக்கப்பட்டுவிட்டது. இந்தப் பூங்காவின் வெயில் வரவு ஒழிந்த நிழலில் அமர்ந்து அன்றைய ஏட்டுக் கல்வியையும் கற்கலாம். பூங்காவின் பின்கிழக்குப் பகுதியில் இயங்கிய ஏட்டுப்பள்ளிக் கூடத்து ‘அரிவோம்’ முதல் ஆசிரியர் போதிக்கும் அத்தனையையும் கேட்கலாம்.

கீழமாரட்டுவீதியில் தினச்சந்தைக்கு வடபுறம் அமைந்திருந்த பூங்கா போற்றுதலுக்குரியதாகத் திகழ்ந்தது. பசுமையான புல்வெளியோடு ஆங்காங்கே சிமெண்ட் இருக்கைகளுடன் இருந்த இந்த பூங்காவும் அழிக்கப்பட்டதுடன் பொதுக்கூட்டத் திடலாக்கப் பட்டது.

வரலாற்றுச் சிறப்புமிகுந்த இந்தத் திடல் மேடையில் ஏறி அன்றைய தியாகராசர் கல்லூரி மாணவர்களாய்த் திகழ்ந்த நா.காமராஜ், காளிமுத்து இந்தி ஆட்சிமொழிச்சட்டம் நகலை எரித்துச் சிறை புகுந்தனர். இவர்களது பேராசிரியரான சி.இலக்குவனாரும் சிறைப்பிடிக்கப்படக் காரணமாக இருந்த இடம் என்பதும் குறிப்பிடத்தக்கது.

உழைக்கும் வர்க்கம் உணவுச்சாலையாக மதுரை நகர் மத்தியில் மீனாட்சி அம்மன் திருக்கோவில் கிழக்குக் கோபுரம் அருகே அந்திக்கடை பொட்டல் திகழ்ந்தது. கையில் உருட்டித் தரும் கவளச் சோற்றிற்குக் காத்துக் கிடப்போரை இங்கே காணலாம். உழைப்பாளர் வர்க்கம் உண்டபின் உறங்கும் களமாக இருந்த மீனாட்சி பூங்கா இழுபறியில் இயங்கிக் கொண்டு விழிக்கிறது.

நகைக்கடைத்தெருவில் நடுநாயகமான இடத்தில் அமைந்திருந்த ஜான்சிராணி பூங்கா காக்கை குயில்கள் குடிகொண்ட கோடி மரங்களால் நிறைந்திருக்கும். அன்றைய நியூசினிமாவில் படம் பார்க்க டிக்கட் கிடைக்காமல் ஏமாறும் ரசிகர்களின் ஏகாந்தமானது. சுப்பிரமணியபுரத்துப் பூங்காவும் சூம்பிப் போய்விட்டது. அழித்துவிட்ட பூங்காக்களுக்கு ஆறுதலாய் இன்று ஒளிரு பூங்காக்கள் உருவாக்கப்பட்டுள்ளன.

கோட்டை சூழ்ந்த நாகரிகத்திற்குக் காட்டாகத் திகழ்ந்த மதுரையில் 1840ஆம் ஆண்டு ஆட்சியராக இருந்த பிளாக்பென் என்கிற வெள்ளையன் மதுரையின் கோட்டை கொத்தளங்களை இடித்து மனைகளமைத்துக் கொள்ள ஆணையிட்டான். அதன்படி, ஒரு ஜோடி மாடுகள் பூட்டிய வண்டி ஒருபாதையில் வர, மற்றொரு பாதையின் வழியே எதிர்த்திசையில் விழுந்து இன்னொரு ஜோடி மாட்டு வண்டிவரும் அளவுக்கு அகலமான மிக உயர்ந்த கற்கோட்டை மதில்கள்யாவும் அதனையட்டி அமைந்திருந்த அகழிக்குள் விழுந்து எளிதில் மூடப்பட்டு வீடுகளும் வீதிகளும் அமைக்கப்பெற்றுவிட்டன. பழமை வாய்ந்த பாண்டியப் பேரரசின் பழஞ்சின்னம் என்று பறைசாற்றப்படாமல் பாழ்பட்டுக் கிடக்கிறது.
Pin It