உலகக் கவிஞர் வரிசை - 8

கவிதை எப்படி வருகிறது? கவிதை எப்படி எழுதப்படுகிறது? போன்ற கேள்விகளை பல முறை கேட்டிருக்கிறோம். பலர் கேட்கவும் பார்த்திருக்கிறோம். இக்கேள்விகளுக்கு பலரும் பல பதில்களை பலவிதமாய் சொல்லியிருக்கிறார்கள். சொல்லலாம்.     ஒரு அனுபவப்பட்ட மனிதன் பேசுகையில் அவரது நிதானமும், வார்த்தைகளை தேர்ந்து பதிவுகளை பகிரும் தன்மையும் அனுபவத்தில் பழுத்த மனிதனுக்கே வரும். இப்படித்தான் மிகை மகிழ்ச்சியும் கடும் துன்பத்திற்கும் ஆளானவர்கள் தங்கள் அனுபவங்களை கவிதையாக மாற்றும் இன்ன பிற கலைப் படைப்பாக வெளிப்படுத்திக் கொண்டிருக்கின்றனர்.

கவிஞர் கேரி கும்மிஸ்கி இங்கிலாந்தில்1963ம் ஆண்டு பிறந்தார். அவர் தற்போது தென்னாப்பிரிக்காவில் வாழ்ந்து வருகிறார். டை ஹார்டு பிரஸ் மற்றும் கிரின் டிரகான் போயடிரி & புரோஸ் ஆகிய பத்திரிக்கைகளின் ஆசிரியராக இருக்கிறார். கும்மிஸ்கியின் கவிதைகள் குறு வெளியீடுகளாகவும் தொகுதிகளாகவும் வெளியாகி உள்ளன. மேலும் பல முன்னணி அச்சு மற்றும் மின் இதழ் களில் இவரது கவிதைகள் வெளியாகி உள்ளன. த சீக்ரெட் ஹவர் (1994) லாஸ்ட் இன் அ வர்ல்டு, விசிட்டே­ன்ஸ் (1995), ரிவர் ஆப் டிரிம்ஸ் (1995), சிட்டி (1995), வென் அப்போலை னீர் டையிட் (1995), யஹட் (வித் ராயல் புளு மெந்தல்) (1996) ரெய்னிங் குளோவ்ஸ் (2000), போக் டாக்ஸ்(2005), ஏப்ரல் இன் த மூன் ‡சன் (2006) ஆகியன இவரது கவிதைத் தொகுதிகளில் குறிப்பிடத்தக்கன.

கும்மிஸ்கியின் கவிதைகளில் எதார்த்தமும் மிகை உணர்ச்சியும் பதிவு செய்யப்பட்டுள்ளது. இவர் கவிதைக்காகச் சொற்களைத் தேட வில்லை. அனுபவங்களின் வீரியத்திற்கு தகுந்தார்போல் கவிதை தனக்கான சொற்களைத் தேர்ந்து கொண்டுள்ளது. கவிஞர் கும்மிஸ்கியின் கவிதைகளில் உள்ள வீரியம் வாசிப்போரை வசீகரிக்கிறது. அவரது அனுபவப் பதிவுகள் கல்மேல் எழுத்தாக கவிதை வரிகளில் தட்டுப்படுகிறது.

1. ஆறு

வெறுமைதான்

மிஞ்சுகிறது

நாளின் இறுதியில்

கடுஞ் சொற்களால்

அதை நிரப்ப வேண்டும்

கதிருமிளம் சூரியன்

பூங்கா நெடுகிலும்

வேகமாக ஆடுகின்றன

பசும் இலைகள்

கீழே

கீழ் நோக்கி

கீழே

ஆறு வரை

அமைதியும்

பொறுமையில்லாத

கற்றுக்குட்டி

வித்தைக்காரன் நான்

என்னுடன் இருப்பதாய்

நீ சொன்ன உறுதியை

எதிர் பார்த்திக்கிறேன்

2. விண்கலம்

பட்டுநூல் பந்துக்குள் பொதியப்பட்டு

விண்கலத்தின் உள்ளே இருத்தி

பாறையயான்றின் விளிம்பில்

புல் தரை மேல் வைக்கப்பட்டது

அதன் வெளியே

கருத்த இரவும் கருத்த கடலும்

சிறு வலிவுடன் விண்மீன்களும்

3. ஒரே காதல்

உன் மீது

மீண்டும் மீண்டும்

காதல் கொள்வதை

என்னால் நம்ப முடியவில்லை

ஒவ்வொரு காதலையும்

மறக்காமல்

உனது துப்பாக்கியை

தோட்டாக்களால் நிரப்பி

சுட்டுத் தள்ளுகிறாய்

சுக்குநூறாகிறது

என் மென்னுலகம்

4. பல வாரங்களுக்குப் பின்

பல வாரங்களுக்குப் பின்

விலகிச் சென்றாய்

நீ அணியும் அலங்காரமான

ஊசியயான்றை கண்டெடுத்தேன்

நீயதை விட்டுப் போயிருந்தாய்

நல்லது செய்தாய்

தற்போது என்னிடம்

உள்ள இதைக் கொண்டு

குத்தி கிழித்திட முடியும்

என் ஆன்மாவை

5. நடைபாதையின் சிரிப்பொலிகள்

தொப்பியை கழட்டுகிறேன்

மேசைகள்

சுழலுகின்றன

என் தலை

தரையில் சாய்கிறது

வசீகர பெண்ணொருத்தி

சிரிக்கிறாள்

நமது கனவுகள்

அனைத்தும்

மயக்கமான

மதிய வேளை சாலையில்

நடந்து போகிறது

6. கைவண்டி

பூங்காவின் ஊடாக

கைவண்டி இழுக்கிறான்

காலை ஏழு மணியாகிறது

நோயாளிகளிடமிருந்து

விடுதலைப் பெற வேண்டும்

அவசரப்படுகிறான்

கொடுங் கனவுகளே

இவனுக்கு ஊதியமாகிறது

அவனை விட்டு விடுங்கள்

அவனை உறிஞ்சாதீர்கள்

அந்த ஏழை மனிதனை

இன்னும் கீழ்மைப்படுத்தாதீர்கள்

7. மனப்பிறழ்வு

மதிய உணவுச் சாலையில்

இங்குமங்கும் திரிந்து

மரங்களெல்லாம் புன்னகைப்பதாய்

நம்பிக்கையூட்டப்பட்டு

சுடப்படும் உணவுகளை புசித்து

கரியான உரையாடல்களை சுவாசித்து

போக்குவரத்தை ஒழுங்கு செய்யும்

அதிகாரியைப் பார்

அவன் சொல்கிறான்

"செய்தித் தாள்களில் மீண்டும் பல

தவறான செய்திகளே வந்துள்ளன...'

அழுகிறான்

மேலும் அழுகிறான்

துப்பாக்கியால் தன்

தலைக்கு குறி வைக்கிறான்

தமிழில்: ஆனந்த செல்வி

Pin It