போதி இலக்கியச் சந்திப்பின் நான்காம் அமர்வு பள்ளத்தூர் பாணர் குடிலில் 28.12.2008 அன்று ஞாயிறு மாலை 6.00 மணிக்கு பேராசிரியர் அரச முருகுபாண்டியன் தலைமையில் தொடங்கியது. தோழர் கனி அனைவரையும் வரவேற்றார். அவரைத் தொடர்ந்து முனைவர் ஆனந்த் டெல்டும்டேயின் நூலை அறிமுகம் செய்து தோழர் நமசு சிற்றுரையாற்றினார்.

அடுத்து பேராசிரியர் அரச முருகுபாண்டியன் எழுத்தாளர் ஆதவன் தீட்சண்யாவின் படைப்புகள் குறித்து விரிவாகப் பேசியதைத் தொடர்ந்து சிறப்புரையாற்ற வந்த ஆதவன் தீட்சண்யா 'சாதி மதமும் படைப்பு மனமும்” என்கிற தலைப்பில் மிக விரிவாக ஒன்றரை மணி நேரம் பேசினார். அவரது உரையைக் கூட்டத்தினர் மார்கழி மாதப் பனியையும், குளிரையும் பொருட்படுத்தாமல் மிகக் கவனமுடன் செவிமடுத்ததுடன் உடனுக்குடன் தங்களது உணர்வுகளையும் வெளிப்படுத்தியது ஆதவனது பேச்சாற்றலின் வீச்சையும், உண்மைத்தன்மையையும் வெளிப்படுத்துவதாக இருந்தது. அவர் தன் உரையை 'ஆரியர் இந்தியாவின் பூர்வ குடிகள்’ என்கிற இந்துப் பயங்கரவாதிகளின் சமகால வரலாற்றுப் புரட்டல்களை ஆழமான வரலாற்றுத் தரவுகளை மேற்கோள் காட்டி அம்பலப்படுத்துவதில் துவங்கி இந்தியாவின் பூர்வ குடிமக்கள் நாகர்கள்தான் என்ற அண்ணல் அம்பேத்கர் அவர்களின் ஆய்வு முடிவைச் சுட்டிக்காட்டி அந்த நாகர்களுடன் திராவிடர்கள் கலந்து திராவிட இனமாக நிலை பெற்றதையும் விளக்கினார். இவ்வாறு நிலைபெற்றிருந்த திராவிட இனத்தின் மீதுதான் வந்தேறி ஆரியர்கள் நிற வேற்றுமையின் அடிப்படையில் முதல் தீண்டாமையை துவங்கி வைத்ததைக் குறிப்பிட்டார்.

அடுத்து தமிழ்ச் சமூகத்தில் நிலவுகின்ற ஏற்றத்தாழ்வும், அதிகாரத்தைச் செலுத்துபவர்கள் X அதிகாரத்திற்கு கட்டுப்பட்டவர்கள் என்ற உறவே நமது குடும்ப அமைப்பிற்குள்ளும் நிலவுவதை விளக்கிக் கூறினார். சமூகத்தளத்தில் உழைக்காதவர்கள் அல்லது குறைந்த உழைப்பைச் செலுத்துபவர்கள் அதிகாரம் மிக்கவர்களாகவும், உழைக்கும் மக்களை அழுக்கானவர்கள், சோம்பேறிகள், நாயைக் குளிப்பாட்டி நடுவீட்டில் வைத்தாலும் அது பீ தின்கத்தான் போகும் என்று இழிவுபடுத்தல்களுக்கு ஆளாக்குவதையும் போலவே, குடும்பத்தில் ஆண்கள் உழைக்காமல் அதே சமயம் அதிகாரம் செலுத்துபவர்களாகவும் அதிக உழைப்பைச் செலுத்தும் பெண்கள் 'சும்மா இருப்பவர்’களாகச் சித்தரிக்கப்படுவதையும் சுட்டிக்காட்டினார். இவ்வாறு வரையறுத்து வந்துள்ள இந்து மதத்தையும், குடும்ப அமைப்பையும் சிதைக்க வேண்டும், சொந்த வாழ்க்கை குறித்துப் பேசாமல் சாதி ஒழிப்பு சாத்தியமில்லை என்றார்.

அடுத்து சாதியின் இருப்பு உளவியல் சம்பந்தப்பட்டது மட்டும்தானா என்று கேள்வி எழுப்பிய ஆதவன் ஒரு ஊரில் நிலம் யாரிடம் இருக்கிறது? அதிகாரம் யாரிடம் இருக்கிறது? அரசியல் கட்சிகளிலும் அரசு எந்திரத்திலும் ஆதிக்கம் செலுத்துபவர்களாக உயர் சாதியினர் மட்டுமே இருந்து வருவதன் காரணம் என்ன? என்று கேட்டதோடு உணவு, உடை, வசிப்பிடம், கோயில், பாதை, கிணறு, சுடுகாடு, இயற்கை வளங்களை நுகர்வது என ஒவ்வொன்றிலும் சாதி ஆதிக்கம் செய்வதைப் பற்றிக் கூறினார்.

இத்தனை வடிவங்களில் பரந்து விரிந்து நிலவும் சாதியை ஒரே ஒரு முனையில் மட்டும் எதிர்த்து வீழ்த்துவது முடியாது. எத்தனை முனைகளில் சாதி நிலவுகிறதோ அத்தனை முனைகளிலும் எதிர்த்துப் போராட வேண்டும். இதில் ஒன்றுதான் அகமண முறைத் திருமண ஒழிப்பு. சுயசாதித் திருமண எல்லையை விரிவுபடுத்துவது நமது வேலையில்லை. மாறாக, சாதி எல்லையை மீறுபவர்களாக, தகர்ப்பவர்களாக நாம் இருக்க வேண்டும். இங்கு மானம் என்பது தம் வீட்டுப் பெண்களை பிறசாதி ஆண்கள் திருமணம் செய்துவிடாமல் கட்டிக்காப்பதிலேயே தங்கியிருக்கிறது. இவ்வாறு சுய சாதித் திருமணங்களைக் கட்டிக் காப்பவர்களே 'மானஸ்தன்’களாக வலம் வருகிறார்கள். நமக்கு மானஸ்தன்கள் வேண்டாம் மானம் கெட்டவர்களே வேண்டும். மேலும் குடும்பம் என்பது பலபட்டறையாக இருக்க வேண்டும் என்றார்.

அடுத்து, போடியில் நகராட்சி எடுப்புக் கக்கூசுக்குத் தடைவிதித்ததைக் குறிப்பிட்ட ஆதவன் தீட்சண்யா இலவச தொலைக்காட்சி வழங்கும் அரசு பொது இடத்தில் மலம் கழிப்பதைத் தடை செய்ய முடியாதா? என்று கேள்வி எழுப்பினார். மழைநீர் சேகரிப்புத் தொட்டி கட்டாத வீட்டின் மின்சாரத்தைத் துண்டிப்போம் என்று கூறிய அரசால் நவீன கழிப்பறை இல்லாத வீட்டிற்கு மின்சாரம் கிடையாது என்று ஏன் கூற முடியவில்லை என்று கேட்டதுடன், அருந்ததியரின் வேதனையை உணராத பொதுச் சமூகத்தை, எல்லோரும் குறிப்பிட்ட காலம் மலம் அள்ள வேண்டும் என்று கட்டாயப்படுத்துவதன் மூலம் மட்டுமே அருந்ததியரின் அவலத்தைப் போக்கக் குரல் எழுப்பச் செய்ய முடியுமோ என்று கேட்டார்.

அய்ரோப்பியரின் வருகைக்குப் பிறகே அருந்ததியர் மலம் அள்ளவும் துப்புறவுத் தொழிலுக்கு வரவும் வேண்டிய நிலை வந்தது என்பதையும் அதற்கு முன் அருந்ததியரின் கைவினைத் தொழில்கள் பற்றியும் அதன் நசிவு பற்றியும் கூறிய தகவல்கள் பார்வையாளர்களுக்குப் புதிய செய்தியாகவே அமைந்திருந்தது. இந்தியாவில் இந்துமதம் மட்டுமின்றி இசுலாமும் கிறிஸ்தவமும் இந்துமதச் சாதியக் கறை படிந்ததாக இருப்பதைக் கூறிய ஆதவன் இந்தியப் பொது உளவியல் சாதிய ஏற்றத் தாழ்வை இயல்பாக ஏற்றுக்கொண்டதாக இருப்பதைச் சுட்டிக்காட்டி இன்றைய படைப்புமனம் என்பது சாதிய, ஆணாதிக்கத்தால் பீடிக்கப்பட்டே இருக்கிறது என்று கூறினார்.

“ஆனால் இந்து மதத்தால் இடையூறு செய்யப்பட்ட படைப்பு மனம் என்னவாக மாறவேண்டும்? எல்லாவித ஒடுக்குமுறை களுக்கும் எதிராகத் தனது படைப்பை முன்நிறுத்த வேண்டும். நடப்புலகத்திற்கு எதிரானதாக படைப்பாளியின் எதிர்வினை அமைய வேண்டும். நடப்புலகில் ஒடுக்கப்பட்ட மக்களின் வாயில் மலத்தைத் திணிப்பவர்களின் வாயில் மலத்தை ஒடுக்கப்பட்ட மனிதனின் கையால் ஊட்டக்கூடியதாக அப்படைப்பு இருக்கும். இதுவே படைப்புச் சுதந்திரம். அது சமூக யதார்த்தத்தை அப்படியே காட்டாமல் படைப்பாளியின் கனவை வாசகனின் கனவாக ஏற்றுக் கொள்ளும்படிச் செய்ய புதிய மொழியை உருவாக்கி கொள்ளும். இவ்வாறான தன்மைகள் என் படைப்புகளில் இருக்கின்றதா என்பதை நீங்கள்தான் கூறவேண்டும். நன்றி!” என்று கூறி தன் நீண்ட உரையை நிறைவு செய்தார்.

ஆதவன் தீட்சண்யாவின் செறிவான உரை நிறைவு பெற்ற பின் தோழர்கள் சிலர் எழுப்பிய கேள்விகளுக்கு விரிவாகவும் எளிமையாகவும் தனக்கேயுரிய நகைச்சுவை உணர்வோடும் பதிலுரைத்தார். இந்த நகைச்சுவையுணர்வு ஒட்டுமொத்த உரை முழுதுமே ஊடாடி பார்வையாளர்களை வசப்படுத்தியதென்றே கூறவேண்டும்.

பார்வையாளரில் பெரும்பாலோர் தாழ்த்தப்பட்டோர் அல்லாதாராகவும், ஆண்களாகவும் அமைந்திருந்த அரங்கில் ஆதவனுடைய பேச்சு அவர்களுடைய சிந்தனையைத் தூண்டுவதாகவும், தவறுகளைச் சுட்டிக்காட்டி மாற்றத்திற்கு வித்திடுவதாகவும் அமைந்திருந்தது என்றே கூறவேண்டும். பார்வையாளர்கள் பெரும்பாலும் பல்வேறு கட்சி, இயக்கச் சார்புடையவர்களே. அவர்களை இந்தியச் சமூக அமைப்பை ஆட்டிப்படைக்கும் சாதியத்தின்பால் கவனம் குவிக்கச் செய்யும் விதமாக அமர்வுகளை ஏற்படுத்திவரும் போதியின் செயற்பாடு தமிழகம் முழுவதும் பரவவேண்டும் எனில், ஆயிரக்கணக்கான போதிகளும் அதில் உரையாற்ற ஆயிரக்கணக்கான ஆதவன் தீட்சண்யாக்களும் உருவாக வேண்டும்.

நாளைவிடியும் இருதிங்களிதழ்

இணையதளத்தில் பெரியார்


தோழமையுடன் அரசெழிலன்

தமிழில் 5000க்கும் மேற்பட்ட இணைய தளங்களும் வலைப்பதிவுகளும் பதிவேற்றம் செய்யப்பட்டு வருகின்றன. பெரியார் தொடர்பான அனைத்து இணையதளங்களையும், வலைப்பதிவுகளையும் ஒரே வலைப் பதிவுக்குள் கொண்டுவர எண்ணி www.periyaariyal.blogspot.com என்ற வலைப்பதிவினைத் தொடங்கியுள்ளேன். இதில் இதுவரை, பெரியார் தொடர்பான 40 வலைத்தளங்கள் மற்றும் வலைப்பதிவுகளுக்கான இணைப்பு கொடுக்கப்பட்டுள்ளன. வாசகர்கள் இவ்வலைப்பதிவினுள் சென்று இதில் விடுபட்ட பெரியார் தொடர்பான தளங்கள் இருப்பின் கீழ்க்காணும் முகவரிக்குத் தெரியப்படுத்தி உதவுங்கள்.

அஞ்சல் முகவரி:

பி.இரெ. அரசெழிலன், ஆசிரியர்: நாளைவிடியும், 7-ஆ, எறும்பீசுவரர் நகர், மலைக்கோயில் தெற்கு, திருவெறும்பூர், திருச்சிராப்பள்ளி - 620 013. மின்னஞ்சல் முகவரி: இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

Pin It