அதிமுகவில் இருந்து வந்த செங்கோட்டையன் தவெக அமைச்சராக இருக்கிறார். வெல்லமண்டி நடராசன் இதோ மேடைக்கு வந்து பாராட்டுகிறார். அதிமுக வில் இருந்து வந்த மற்றும் பலர் கூடவே இருக்கிறார்கள். ஆனாலும் அதிமுகவும் திமுகவும் கூட்டுச் சேர்ந்து தம்மை ஆட்சியமைக்க விடாமல் தடுக்கப் பார்த்தனர் என்று விஜய் பேசுகிறார்.
தான் அதிமுகவினரின் வீட்டுக்கே போய் சோபா கொடுத்து சி.வி.சண்முகம், வேலுமணியோடு பேரம் பேசி சட்டவிரோதமாக தவெகவுக்கு இழுக்கலாம்! அது மலிவான அரசியல் இல்லை. ஆனால் திமுகவும் அதிமுகவும் பேச்சுவார்த்தை கூட நடத்தி விடக் கூடாது!
அதே போல தனக்கு (தவெகவுக்கு) எதிரான வாக்குகளைப் பெற்று "தீயசக்தி"யான திமுகவின் ஆதரவில் வென்ற கட்சிகளின் ஆதரவைப் பெற்றுத்தான்ஆட்சி அமைக்கலாம். அது அறமற்ற செயல் அல்ல. ஆனால் திமுகவும் அதிமுகவும் மட்டும் பேச்சு வார்த்தை நடத்தி விடக்கூடாது.
அது மட்டுமல்ல பாஜக நினைப்பதெல்லாம் இதோ தவெக ஆட்சியில் நடைபெறுகிறது. வந்தே மாதரம் பாடுகின்றனர். தமிழ்த்தாய் வாழ்த்தை மூன்றாம் இடத்திற்குத் தள்ளுகின்றனர். வள்ளுவருக்கு காவிச் சாயம் பூசி மகிழ்கின்றனர்.
பக்ரீத் பண்டிகைக்கு மாடுகளை வெட்டத் தடை விதிக்கின்றனர். ஒரு பார்ப்பனரை அறநிலையத்துறை மந்திரியாக்கி அழகு பார்க்கின்றார்.
தமிழ்நாடு முழுதும் கொலை, கொள்ளை, பாலியல் வன்கொடுமை, வன்முறை வெறியாட்டம், பெண் குழந்தைகள் கொலை, இரவில் தொடர் மின் தடை, போதிய பேருந்து வசதி இல்லை என மக்கள் அல்லல் படுகின்றனர். இவற்றை எதிர்த்து மக்கள் தன்னெழுச்சியாகப் போராட்டம் நடத்துகின்றனர்.
விவசாயக் கடன்களை முழுமையாக ரத்து செய்யச் சொல்லி விவசாயிகள் போராட்டம் நடத்துகின்றனர். அப்போது தவெக அமைச்சர் ஒருவர் சொல்கிறார் "விவசாயத்தை விட விளையாட்டு சிரமமானது" என்று! இதனைக் கேட்டு விவசாய மக்கள் மேலும் கொந்தளிக்கின்றனர்.
ஆனால் விஜய்க்கு ஆதரவளிக்கும் கட்சிகளின் தலைவர்கள் இன்னும் ஊடகங்களின் முன் அமர்ந்து அதிமுகவும் திமுகவும் பேச்சு வார்த்தை நடத்தி விட்டனர் என்று கூப்பாடு போட்டுக் கொண்டிருக்கின்றார்கள்.
அதே நேரம் திமுக கூட்டணியில் வென்று விட்டு தவெகவுக்கு ஆதரவாகச் செல்லலாமா என்ற கேள்விக்கு தேர்தல் முடிவுக்குப் பிறகு அப்படிப் போகலாம். அது தவறில்லை. இந்தியா முழுதும் நடந்து வரும் ஒன்று தான் எனத் தோழர் கே.பாலகிருஷ்ணன் மின்னம்பலம் நேர்காணலில் பதில் சொல்கிறார். ஆனாலும் திமுகவும் அதிமுகவும் மட்டும் பேசி விடக்கூடாது! அது மன்னிக்க முடியாத குற்றம்!
இதுவா தமிழ்நாட்டின் தலையாய பிரச்சனை?
மக்கள் போராடுகின்றனர் விஜய் கண்டு கொள்ளாமலும் அது பற்றி வாய் திறக்காமலும் மவுனம் காக்கிறார். அவரைக் கண்டியுங்கள் அல்லது வாய் திறந்து பேசச் சொல்லுங்கள். அதை விட்டு விட்டு விஜய் பேசுவதையே நீங்களும் பேசுவீர்கள் என்றால்....?
அடுத்து, 6 மாதம் அமைதியாக இருப்போம் என்று சொன்னவர்களால் 6 நாட்கள் கூட பொறுமையாக இருக்க முடியவில்லை என்று விஜய் நேற்று திருச்சியில் பேசியதையே அவருக்கு ஆதரவு அளித்துவரும் கட்சித் தலைவர்களும் பேசி வருகின்றனர்.
மக்களுக்கு நன்மை தரும் ஆட்சியை நடத்தினால் ஆறு மாதமென்ன 5 ஆண்டுகள் கூடப் பொறுக்கலாம். ஆனால் போகிற போக்கைப் பார்த்தால் ஆறு வாரங்களிலேயே தமிழ்நாடு சீரழிஞ்சு சின்னா பின்னமாகிப் போய் விடும் என்ற நிலை இருக்கும் போது எப்படி பொறுக்க முடியும்?
திமுக ஏன் பொறுக்க வேண்டும்? மக்கள் போராடுகிறார்களே? விவசாயிகள் போராடுகிறார்களே? அவர்களிடம் போய்ச் சொல்லுங்களேன்
ஒரு ஆறு மாதம் பொறுங்கள் என்று! துணிச்சல் இருக்கிறதா தோழர்களே?
இதோ விஜய், பாஜகவின் கையாளாக நின்று வந்தே மாதரத்தைத் திணிக்கும் ஆளுநருக்குப் பணிந்து போகிறார். இசுலாமியரின் மத வழிபாட்டு உரிமைகள் பறிபோவதை வேடிக்கை பார்க்கிறார். பல்கலைக் கழக வேந்தராக முதலமைச்சரே இருக்க வேண்டும் என்பதில் தனக்கு உடன்பாடில்லை எனச் சொன்ன அமைச்சரைக் கண்டிக்கவும் இல்லை.
இந்தப் போக்குகளை எல்லாம் கண்டிக்கும் திமுகவினரைப் பார்த்து "சும்மா சும்மா குறை சொல்லாதீர்கள் ஆறு மாதம் பொறுங்கள்" என்று அறிவுரை சொல்லும் தோழர்களுக்கு ஒன்றை மட்டும் சொல்லி நிறைவு செய்யலாம்!
பார்ப்பனியத்தை எதிர்த்த போராட்டத்தினால் தான் திராவிட இயக்கம் 100 ஆண்டுகளாக இன்னும் உயிர்ப்போடு இருக்கிறது. ஏனென்றால் போராட்டமே வாழ்க்கை! போராடாத எந்த உயிரினமும் வாழாது! வாருங்கள் சேர்ந்து போராடுவோம்!
- குமரன் தாஸ்