உலக வரலாற்றைக் கிமு, கிபி எனப் பகுப்பதைப்போல், நாம் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் மலேசிய இந்திய வமசாவளியினரின் வாழ்வியல் வரலாறு வருங்காலத்தில் இன்ராப்பிற்கு முன், இன்ராஃபிற்குப் பின், அதாவது இமு, இபி என்று பகுத்துப் பார்க்கப்படுவது தவிர்க்க முடியாததாகிவிட்டது. உலகின் பிற பகுதிகளில் நிகழ்ந்ததைப்போலவே மலேசியாவிலும் இடதுசாரிகள் செய்திருக்கவேண்டிய, ஆனால் செய்யாமல் போன மாற்றத்தை தத்துவம் பயிலாத சாமான்ய வக்கீல்களும் பிறரும் 25-11-2007இல் நிகழ்த்திக் காட்டினார்கள்.

தமிழ்நாட்டு முசுலிம்களில் பெரும்பாலோர் நவம்பர் நிகழ்வை மதப்போராட்டமாகவே நோக்குகின்றார்கள் என்ற இவ்விதழாசிரி யரின் கருத்தோடு, தமிழகத்திலிருந்து வந்து கோலாலம்பூரில் இமாமாக மார்க்கப் பணி செய்வோருடனான உரையாடலும் ஒத்துப்போவது ஒரு நகைமுரண்தான்.

தாங்கள் மூன்றாந்தர குடிமக்களாக நடத்தப்படுகிறோம் என்றும் தங்கள் நலனில் அரசு அக்கறை கொள்ளவில்லை என்பதுமான எண்ணங்கள் மலேசியத் தமிழர்கள் மத்தியில் செழித்ததற்கு அரசுதான் காரணம்.

ஓய்வு பெற்ற டாக்டர் மகாதீர் தலைமையிலாகட்டும், இன்றைய மாண்புமிகு அப்துல்லாவின் நிர்வாகத்திலாகட்டும், சாமிவேலு என்ற கங்காணியின் திறமைதான் பெரிதாகக் கருதப்பட்டதே யொழிய இந்திய மக்களின் தேவைகள் அல்ல. நவம்பர் பேரணி அரசாங்கத்தை உலுக்கி கங்காணியின் மீதான நம்பகத்தன்மையை கேள்விக்குள்ளாக்கியது.

மலேசியத் தமிழர்களின் குறைகளின் வரலாற்றை மைக்கா ஓல்டிங்ஸ் (MAIKA HOLDINGS) இலிருந்து தொடங்குவது பொருத்தமா யிருக்கும் என்று படுகிறது.

மைக்கா ஓல்டிங்சு (MAIKA HOLDINGS) சிக்கல் மகாபாரத பாஞ்சாலியின் புடவைவைப்போல. அவ்வப்போது வெடித்தெழுவதும் பின்னர் நீறு பூத்த நெருப்பாகிப் போவதும் கடந்த கால நிகழ்வுகள். அவற்றின் விளைவுகளை இன்ராஃப் பேரணி நன்கு வெளிப்படுத்தியது.

மைக்கா ஓல்டிங்சு நிறுவனம் ஒரு முதலீட்டு மற்றும் சொத்துடைமை நிர்வாக வர்த்தகத்தை அடிப்படையாகக் கொண்டு செப்தம்பர் 13, 1982இல் தொடங்கப்பட்டது.

இந்தியச் சமூகத்திடமிருந்து வசூலிக்கப்பட்ட 10 கோடியே 60 இலக்கத்திற்கு 1984ஆம் ஆண்டு வாக்கில் அதன் 66,000 பங்கு தாரர்களுக்கு பங்குச் சான்றிதழ் வழங்கப்பட்டன.

மக்கள் ஓசை நாளேட்டில் அதன் ஆசிரியர் திரு இராஜன் அவர்கள் எழுதியிருந்ததைப்போல, இனி எப்போதைக்கும் நிகழ்த்திக் காட்ட முடியாத அதிசயமாக, புறக்கணிக்கப் பட்டவர்கள் அனை வரும் ஒருதாய் மக்களாக மாறிவிட்டது போல் உணர்ந்து, பல்லாயிரக்கணக்கில் பங்கெடுத்த வரலாறு அது.

1979ஆம் ஆண்டு, மாண்புமிகு மாணிக்கவாசகம் அவர்கள் திடீரென்று காலமாக, அதுவரை மலேசிய இந்தியர் காங்கிரசின் (மஇகா) துணைத்தலைவராக இருந்த மாண்புமிகு சாமிவேலு, கட்சியின் தேசியத்தலைவராகிறார். அப்போதுதான், அதாவது 13.09.1982இல் மலேசிய இந்திய சமுதாயம் பொருளாதாரத்தில் உயர்வு பெற வேண்டும் என்ற ஒரு கருத்து முன்வைக்கப்பட்டு, மைக்கா ஓல்டிங்சு லிமிடெட் என்ற ஒரு முதலீட்டு நிறுவனத்தை மஇகா ஆரம்பிக்கிறது.

ஒரு பங்கு ஒரு வெள்ளி என்ற நிலையில் 100 மில்லியன் பங்குகளை விற்பது என முடிவெடிக்கப்படுகிறது. அந்தக் காலகட்டத்தில் இத்தகவல் கிட்டத்தட்ட ஒரு மின்சக்தியை உடலுக்குள் பாய்ச்சுவது போல இந்திய சமுதாயத்தைச் சேர்ந்த ஒவ்வொருவரிடமும் பெரிய பரவசத்தை ஏற்படுத்தியது. இந்திய சமுதாயம் எதிர்காலத்தில் ஏற்றம் பெற வேண்டுமானால், இப்படி ஒரு திட்டம் அவசியமே என்று எல்லோராலும் உணரப்பட்டது.

ஆகவே தோட்டப் பாட்டாளி மக்கள், கிராம மக்கள், நகர்ப்புற இந்தியர்கள், படித்தவர்கள், ஆசிரியர்கள், பட்டதாரிகள், விவசாயிகள், உயர்ந்த பொறுப்பில் இருந்தவர்கள், வணிகர்கள், தொழிலதிபர்கள் என சமுதாயத்தின் எல்லாத் தரப்பு மக்களும் இந்தப் பங்குகளை வாங்கத் திரண்டனர்.

வசதியுள்ளவர்கள் தங்கள் சேமிப்பைக் கொண்டு பங்குகளை வாங்க, வசதியற்றவர்கள் தங்களுக்காகவும் தங்கள் பிள்ளை களுக்காகவும் கடினப்பட்டு, சீட்டுக் கட்டி சேமித்து வாங்கிய நகைகளை அடகுக் கடையில் வைத்து பங்குகளை வாங்கினார் கள். தோட்டப் பாட்டாளிகளும் கிராமப்புற மக்களும் தாங்கள் ஆசையாக வளர்த்து வந்த ஆடுமாடுகளைக்கூட விற்று அதிலிருந்து பெற்ற பணத்தை இந்த முதலீட்டு நிறுவனத்தில் செலுத்தினர்.

ஏற்றம் பெறுவோம் என்ற ஒட்டுமொத்த எதிர்பார்ப்பு, புதிய வாக்குறுதிகளால் ஏற்பட்ட நம்பிக்கை, 1979இல் ஏற்பட்ட மஇகா வின் புதிய தலைமைத்துவம்- இப்படி எல்லாமே இணைந்து இந்தியர்கள் 100 மில்லியன் அல்ல அதையும் தாண்டி 125 மில்லியன் பங்குகளை வாங்கினர் என்பது வரலாறு.

இந்திய சமுதாயத்தால் இதையும் சாதிக்க முடியுமா? என்று மற்ற இனங்கள் வியக்கும் வகையில் இந்த நாட்டில் நடந்த ஒரு பொருளாதார மறுமலர்ச்சி என்று இதனைக் குறிப்பிடலாம்.

இந்த 125 மில்லியன் பங்குகளை தனிநபர்கள் ரொக்கமாக வாங்கிய தோடு, அப்போது உருவாகியிருந்த பல கூட்டுறவுகள், இந்தியர் சார்ந்த அமைப்புகள், சமூக இயக்கங்கள் அனைத்தும் இதற்குப் பக்கபலமாக இருந்து பங்குகள் வாங்கிப் பெருமை சேர்த்தன.

ஒரு முதலீட்டு நிறுவனத்தின் மூலதனத்திற்காக சமுதாயம் தனது சேமிப்பை இழந்தது. வருமானம் ஈட்டும் தனது மூலதனம் பலவற்றை இழந்தது. உடமைகளை இழந்தது. ஆனால், இத்தனை இழப்புகளையும் ஏற்றுக்கொண்ட இந்திய சமுதாயம் ஒரே ஒரு நம்பிக்கையைத்தான் இந்த மைக்கா நிறுவனத்தின் மீது வைத்தது. அதாவது, வருங்காலம் நமக்கு வசந்த காலம், இனி நமக்கு நடக்கப்போவன யாவும் நல்லவையே என்று நம்பியது.

அந்த நம்பிக்கை கானல் நீரான கதையோ மிகச் சோகமானது.

இன்ட்ராபின் எழுச்சியையும் சாமிவேலுவின் வீழ்ச்சியையும் இதன் தொடர்ச்சியாகத்தான் பார்க்க வேண்டும்.

மைக்காவின் நிறுவனராக சாமிவேலு விளங்க, அதன் நிறுவன உறுப்பினர்களாக சி.சுப்ரமணியம், கர்னயில் சிங் நிஜார், மகா லிங்கம் ஆகியோர் ஆரம்பத்தில் இருந்தனர். நிறுவனம் உருவான
பின்னர் படிப்படியாகத் தலைவரின் விருப்பத்தில் அல்லது அவரது கட்டுப்பாட்டில் அவருக்கு வேண்டியவர்கள் மட்டும் மைக்கா பொறுப்புகளில் இடம் பெறுகின்ற காலம் உருவானது.

என்ன செய்கிறார்கள் எதைச் செய்கிறார்கள் என யாருக்கும் தெரியாது. காதும் காதும் வைத்தாற்போல மைக்கா மூலமாக முதலீட்டுத் திட்டங்கள் அரங்கேற்றப்பட்டன. தலைவரின் விருப் பத்தின் பேரில் மைக்காவுக்குப் பதவி நியமனங்ள் நடந்தன. இன்றைய நிலவரப்படி அதன் தலைவராக ரசிட் மானாப் (மலாய்க் காரர்) விளங்க, அதன் முதல் தலைமை நிலைய அதிகாரியாக சாமிவேலுவின் தவப் புதல்வர் வேள்பாரி விளங்கி வருகிறார்.

நியமனம் செய்யப்பட்ட யாருக்கும் வர்த்தக அனுபவமோ ஒரு முதலீட்டு நிறுவனத்தை வழிநடத்தும் வாணிபத் தகுதியோ கிடை யாது. இதனால் இவர்கள் தொடங்கிய 25க்கும் மேற்பட்ட துணை நிறுவனங்களின் மூலம் செய்யப்பட்ட எல்லாமே மூடு விழா கண்டன.

அப்பாவி மக்கள் சேர்த்துக் கொடுத்ததை ஊறுகாய் கம்பெனி, டேப் கம்பெனி, செங்கல் கம்பெனி, புத்தகக் கம்பெனி என்று உருப்படியே இல்லாத திட்டங்களில் முதலீடு செய்து பணத்தைப் பாழடித்தார்கள்.

மஇகா தலைமையகத்திற்கு அருகில் 26 மாடி ஓட்டலைக் கட்டப் போகிறேன் என்று சாமிவேலு அறிவித்து 38 ஆயிரம் சதுர அடி நிலத்தை வாங்க, அவர் நடத்திய சதிராட்டம் ஆகக் கீழ்த்தரமானது..

ஓட்டல் கட்ட அடிக்கல் நாட்டப்பட்டது என்னவோ உண்மை. ஆனால் 23 ஆண்டுகள் கடந்தும் இன்னும் அந்த இடத்தில் ஒரு செங்கல் கூட எழவில்லை. என்றாலும், அதே நிலத்தின் பெயரைச் சொல்லி எம்யூஎஃப்பி (ஙமஊஆ) எனப்படும் நிறுவனத்திடமிருந்து 35 லட்சம் வெள்ளி கடன்தான் வாங்கப்பட்டது. அந்தக் கடனைக் கட்ட மைக்காவிலிருந்து மொத்தம் 52 லட்சத்து 46 ஆயிரம் வெள்ளி வழங்கப்பட்டிருக்கிறது. மஇகா 1 கோடி வெள்ளியை வழங்கி யிருக்கிறது. இவ்வளவு பணம் பறிபோன நிலையில் அந்தக் கட்டடமும் எழவில்லை. அந்த நிலம் என்ன ஆனது என்ற விபரமும் இதுவரை சமுதாயத்திற்குச் சொல்லப்பட வில்லை.

இந்தியர்கள் நம்பிக் கொடுத்த பணத்தை வைத்து முறையாக நிர்வாகம் செய்ய வேண்டிய ஒரு மைக்கா தலைவர் அந்தப் பணிமனையில் பணிபுரியும் சில பெண்களிடம் நடத்திய காமக்
களியாட்டங்களைக் கண்டு இந்தச் சமுதாயம் வெந்து நொந்து வேதனையின் உச்சத்திற்கே போனது. அதுதான் சாமிவேலுவின் தவறான தலைமையின் உச்ச முன்னுதாரணம்.

சரி, சமுதாயம் அள்ளித் தந்த பணத்தைத்தான் ஒழுங்காக நிர்வ கித்து அதை உருப்படியாக செலவழிக்கவில்லை. ஆனால், அரசாங்கம் அள்ளித் தந்த கோடிக்கணக்கான பங்குப் பணத்தை யாவது இவர்கள் அதன் மேன்மைக்கு பயன்படுத்தினார்களா என்றால் அதற்கும் பதில் பூஜ்ஜியம்தான்.

மஇகாவின் அப்போதைய பொது உறவு அல்லது மக்கள் தொடர்புக் குழுவின் தலைவரான பாராட் மணியம் என்ற சுப்ரமணியம் 19.03.1994இல் செய்தியாளர் கூட்டத்தில் ''சாமிவேலு ஒரு திருடர். அவர் இந்தியச் சமூகத்திடமிருந்து பங்குகளைத் (டெலிகோம்) திருடினார்," என்று பட்டவர்த்தனமாகக் கூறினார்.

உடனே அப்போது மைக்காவின் தலைவராக இருந்த திரு ஜி. பாசமாணிக்கம், மைக்காவுக்கு ஒரு கோடியே ஐம்பது லட்சம் வெள்ளி தணிக்கை செய்யப்படாத லாபம் கிடைத்திருப்பதாகவும் அதன் உறுப்பினர்கள் ஐந்து விழுக்காட்டிற்கும் மேலான லாப ஈவை எதிர்பார்க்கலாம் என்றும் அறிவித்தார். கூடவே 64,000 முதலீட்டாளர்களுக்கான வெள்ளி 33 லட்சம் லாப ஈவு மீண்டும் மைக்கா நிறுவனத்தின் முதலீட்டு நடவடிக்கைகளுக்குப் பயன் படுத்தப்பட்டு வர்த்தக நடவடிக்கைகள் விரிவுபடுத்தப் படும் என்றும் அறிவித்தார்.

இரண்டாம் முறை 2003இல் புகைச்சல் ஏற்பட்டபோது முந்தை யவை சம்பந்தமான உண்மை நிலை என்ன என்பது பற்றிக் காவல் துறையினரும், ஏசிஏ-வும் விசாரிக்க வேண்டுமென மைக்கா பங்குதாரர்களும், அகில மலேசிய இந்தியர் முன்னேற்ற முன்னணி (ஐபிஎஃப்)யினரும் நாடு தழுவிய அளவில் போலீஸ் நிலையங்களில் புகார் செய்தனர்.

ஒரு சான்றாக, சா ஆலம் ராஜா என்றழைக்கப்படும் கே இராமசாமி, தாம் 1984ஆம் ஆண்டு மைக்காவில் 2,500 வெள்ளியை முதலீடு செய்திருந்ததாகவும், அம்முதலீட்டுக்கான போனஸ் பத்திரத்தை 1997இல் பெற்றதாகவும் கூறியதோடு, தொடர்ந்து ''மேலும், இன்றுவரை நாம் மைக்காவிடமிருந்து சல்லிக்காசையும் பெற வில்லை. ஆகவே, சாமிவேலு எமது முதலீட்டுத் தொகையோடு இருபது ஆண்டுகளுக்கு எட்டு சதவீதம் எனும் விகிதத்தில் வட்டி யுடன் திருப்பித் தர வேண்டும்," என்று கூறினார்.

அப்போது, சாமிவேலு தனது பத்திரிக்கை செயலாளர் சிவபாலன் வழியாக, '100 மில்லியன் முலீட்டில் தொடங்கப்பட்ட மைக்கா நிறுவனம் 320 மில்லியன் வெள்ளி மதிப்புள்ள சொத்துகளைக் கொண்டிருப்பதாகவும், அவற்றை அழிப்பதற்கு மேற்கொள்ளப் படும் எவ்வகை முயற்சியும் சட்டத்தின் வழி கையாளப்படும்" என்றும் எச்சரித்தார். ஆனால் இந்தப் பொய் சாமிவேலுவின் திருகுதாளங்களில் ஒன்றுதானே தவிர வேறில்லை.

''மைக்கா ஓல்டிங்சு முடிந்துபோன விவகாரம். பழைய குப்பை யைக் கிளறாதீர்கள்," என்று கூறியிருந்த மஇகாவின் உதவித் தலைவரும், எம்பியுமான வீரசிங்கத்திற்கு, மைக்கா பங்குதாரரான காஜாங்கைச் சேர்ந்த திரு எஸ்.இராமசாமி,

"அப்படியானால் மைக்கா பணத்தை முடித்து விட்டீர்களா? குப்பையில் போட்டது உண்மைதானா? உங்கள் தலைவர் மாட்ரிட் ஸ்பெய்னிலிருந்து முப்பத்திரண்டு கோடி வெள்ளி மதிப்புள்ள சொத்துக்களை மைக்கா கொண்டுள்ளதாகக் கூறியுள்ளாரே. இவ்வளவு சொத்துக்களை வைத்துக் கொண்டு பங்கு வாங்கிய உறுப்பினர்களுக்கு என்ன செய்துள்ளீர்கள்? ஏன் டிவிடென்ட் கொடுக்கவில்லை? பிரச்சினை என்று வந்தவுடன் கோடி கோடி யாய்ப் பேசுகின்றீர்கள், இல்லாவிட்டால் அதைப்பற்றியே மூச்சு விடுவதில்லையே, ஏன்? எங்கள் பணம் என்ன ஆனது? அதற்கு பதில் சொல்லுங்கள்," என்று கேட்டிருந்தார்.

இதன் உச்சகட்டமாக, "இந்திய சமுதாயத்தில் மறுமலர்ச்சியை ஏற்படுத்த, சாமியின் இழிவுப் பேச்சுக்கு முடிவு கட்ட ஓரணியாய், ஒரே சக்தியாய்த் திரளுங்கள்!" என்ற தலைப்பில் ஐபிஎஃப் தேசியத் தலைவர் எம்.ஜி.பண்டிதனின் அழைப்பறிக்கையை (17.11.2003) மலேசிய நண்பன் வெளியிட்டது.

இன்றல்ல, நேற்றல்ல, கடந்த 24 ஆண்டுகளாக இப்படி வாய்ச் சவடால் அடித்தே சமுதாயத்தை ஊமையாக்கியவர் சாமிவேலு.

"இவரது இந்த அடாவடிப் பேச்சுகளையும் மக்களைக் கொத்தடிமை களாக நடத்துகின்ற போக்கையும் சூடு சொரணையுள்ள எந்த வொரு தமிழனாலும் பொறுத்துக் கொள்ள முடியாது. 24 ஆண்டு கள் அமைச்சராக இருந்து சமுதாயத்தைப் பொருளாதாரத்தில் தூக்கி நிறுத்துகிறேன் என்று கூறி, ஏழை அப்பாவி மக்களிடம் வசூலித்த 106 மில்லியன் மாயமாய் மறைந்து போன கதையை இந்த நாடே அறியும்.

"சமுதாயத்திற்காக அரசாங்கம் வழங்கிய டெலிகோம் பங்கு களை 2 வெள்ளி கம்பெனிக்கு (வெறும் இரண்டு வெள்ளியை மூலதனமாய்க் கொண்டு தொடங்கப்பட்ட பினாமி கம்பெனி) திசை மாற்றி அப்படியே அந்தப் பங்குகளைக் காணாமல் போகச் செய்த சம்பவங்களையும் இந்த ஏழைச் சமுதாயம் பார்த்துக் கொண்டு எதுவும் கேட்க முடியாமல் வாய்மூடி இருக்கிறது. பணம் போட்டவர்கள் விளக்கம் கேட்டால் குண்டர்களை வைத்து அடித்து மிரட்டுவது, எகத்தாளம் பேசுவது, ஏளனம் செய்வது சாமிவேலுவின் வாடிக்கையாகிவிட்டது.

''சாமிவேலு இந்திய சமுதாயத்திற்குத் தொடர்ந்து தலைவராக நீடித்தால் சமுதாயம் சீரழிந்து சின்னாபின்னமாகிவிடும். அவருக்கு எதிராக ஒன்றுபட்ட சக்தியாக எனதருமைத் தொண்டர்கள் ஓரணி யில் திரள வேண்டிய நேரம் வந்துவிட்டது.

''இந்திய சமுதாயத்திற்கு விடிவு காலம் ஏற்பட, புதிய நம்பிக்கை ஏற்பட, புதிய தலைமைத்துவம் ஏற்பட, நீதி கேட்கும் போராட் டத்தில் நாடு தழுவிய நிலையிலுள்ள ஆயிரமாயிரம் தொண்டர் களும் என் உடன் பிறப்புகளும் ஒரே சக்தியாக முழங்க முன் வருமாறு அழைக்கிறேன்.

''இது வேடிக்கை பார்க்கும் நேரமல்ல. அது விவேகமும் அல்ல. நாம் ஏழைகள்தான். ஆனால் கோழைகள் அல்ல. நம்மைக் கோழைகளாக நினைத்து தமது வாய்க்கு வந்தபடியெல்லாம் இழித்தும் பழித்தும் பேசுகின்ற சாமிவேலுவின் பேச்சுகளை மானம் மரியாதையுள்ள யாரும் பொறுத்துக்கொள்ள முடியாது.

''நமக்கிடையில் இதற்கு முன்பு சிற்சில கோபதாபங்கள் இருந் திருக்கலாம். கருத்து வேறுபாடுகள் இருக்கலாம். அதையெல்லாம் மறந்துவிட்டு இந்திய சமுதாயத்தை ஒரு புதிய பாதைக்கு இட்டுச் செல்லும் மறுமலர்ச்சிக்கு இன்றே தன்னை அர்பணித்துக்கொண்டு என் தொண்டர்கள், என் தம்பிகள், என் உடன்பிறப்புகள் அனை வரும் எழ வேண்டுமென்று அழைக்கிறேன்."
இப்படி வீர முழக்கமிட்ட அதே பண்டிதன், மீண்டும் சாமிவேலு வுடன் சேர்ந்துகொண்டு, நவம்பர் பேரணியின் தாக்கங்கள் பொதுத் தேர்தலோடு ஒன்றுமில்லாமல் ஆகிவிடும் என்று ஆருடம் கூறிய தோடு, இன்று இவ்வுலகத்தை விட்டே பிரிந்தும் விட்டார்.

இவ்வளவு நடந்த பின்னும் அரசாங்கம் அமைச்சர் சாமிவேலு வுக்கு ஆதரவாக அமைதி காத்ததே தவிர, நாட்டு மக்களான பங்குதாரர்களின் நலன் குறித்து அக்கறை கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

முந்தைய பிரதமரின் காலத்தில் அரசாங்கம் அள்ளித் தந்தவை களுக்கு முறையான கணக்குகள் இல்லை. ஏன், இந்திய இளைஞர் களின் குற்றச் செயல் ஈடுபாடுகளைக் குறைப்பதற்காக அண்மை யில் அரசாங்கம் ஒதுக்கிய நிதியில் ஆரம்பிக்கப்பட்டதுதான் ''சமூக வியூக வாரியம்". இதன் கணக்கு வழங்குகள் என்ன? என்பது சமுதாயத்துக்குத் தெரியாது என்பது மட்டுமல்ல அதனால் ஏற்பட்ட தீர்வும் சொல்லும்படி இல்லை.

அதிகாரத்தில் உள்ளவர்கள் செய்ய முடியாததை நவம்பர் 25 பேரணி ஏற்பாட்டாளர்கள் சாதித்தார்கள் என்பதனை எண்ணும் போது ஆனந்தக் கண்ணீர் அருவியாகின்றது. ஒரு முப்பது ஆண்டுகளுக்கு முன் இப்படியொரு விழிப்பு ஏற்பட்டிருந்தால் எம்மினம் எத்தகைய ஆச்சரியங்களை அறுவடை செய்திருக்கும்! திருமணம், இறப்பு, குழந்தை பெயரீடு, குடமுழுக்கு, கோவில் திருவிழா, நூல் வெளியீடு, பாராட்டுக் கூட்டம் என்று அனைத்து நிகழ்வுகளிலும் எது இருந்ததோ இல்லையோ, அடிதடி, குத்து வெட்டு மட்டும் இல்லாமல் இருந்ததில்லை. ஆனால் இன்ராஃப் பிற்குப் பின் ஆங்காங்கே விரல்விட்டு எண்ணத்தக்க அளவில் ஒன்றிரண்டைத் தவிர வேறு எதுவும் இல்லை என மெச்சும் அளவிற்கு நிலைமை மாற்றம் கண்டுள்ளது. பேரங்காடிகளிலும், பொதுப் போக்குவரத்துகளிலும் வேறு பல இடங்களிலும் சந்தித்துக் கொள்ளும் தமிழர்கள் குறைந்த அளவு புன்னகைத்துக் கொள்ள வாவது செய்கின்றார்கள் என்பதை காணும்போது எத்துணை மகிழ்ச்சி! இத்தகைய வியத்தகு மாற்றத்தை ஏற்படுத்திய பேரணி யினருக்கும் அவர்களின் கதாநாயகனான தோழர் உதயகுமாருக்கும் ஒரு சலாம் வைக்காமல் இருப்பது நன்றி கெட்ட செயல் அல்லவா!

இபிக்கு பின் வெறும் லெட்டர் பேட் அமைப்பிடம்கூட மகஜர் வாங்கும் பிரதமர் அன்றைக்கு மைக்கா தொடர்பில் காட்டிய கரிசனம் என்ன! சாமியைவிட சிறந்த கங்காணி வேறொருவர் கிடைக்கமாட்டார் என்ற காரணத்தால் மௌனம் சாதித்தாரா என்ற வினா இயல்பாகவே எழுகின்றது!

இதற்கிடையில், 25.06.2007இல் கிள்ளான் தெங்கு அம்புவான் ரசிமா மருத்துவமனையில் பிரபல தொலைக்காட்சி நடிகை 29 வயதே ஆன சுஜாதா திடீர் மரணமடைந்தார்.

அமைச்சர் சாமிவேலுவின் தவப்புதல்வரும் மைக்காவின் தலைமைச் செயல் அதிகாரியுமான வேள்பாரியின் தனிச் செயலாளராக நீண்ட காலம் பணியாற்றியவர்தான் மறைந்த சுஜாதா. இவரின் திடீர் மரணம் நிகழ்ந்த ஒரு மாதத்திற்குப் பின்னரே புலன் விசாரணை சூடுபிடித்தது. அதுவும் எதிர்க்கட்சி அரசியல்வாதிகளின் தலை யீட்டிற்குப் பின்னரே. திடீர் மரணம் என்று முதலில் வகைப்படுத்தப் பட்டது. பின்னர் கொலை என வகைப்படுத்தப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது. அதன் முடிவுகள் இன்னும் அறிவிக்கப்படவில்லை.

பொதுமக்களால் விலாவரியாக பேசப்பட்ட இம்மரணமும் கூட இந்தியச் சமுதாயத்தில் மேலும் அதிருப்திகள் தோன்ற வழி வகுத்தன எனலாம்.

முன்னர் போலீஸ் லாக்காப்பில் மாண்ட இந்திய இளைஞர்களின் மரணங்களும்கூட நினைவிற்குக் கொணரப்பட்டு விரிவாகப் பேசப் பட்டன. வழக்கறிஞர் உதயகுமாரின் தொடக்கப் பணிகள் எவரும் கண்டுகொள்ளாத காவல் நிலைய சாவுகள் சார்ந்தே தொடங்கின எனலாம். தான் சார்ந்த இனத்திற்கு மட்டுமின்றி போலீஸ் அராஜ கத்திற்குப் பலியான மலாய்க்காரருக்கும் போராடிய சிறப்பிற் குரியவர் இவர். நிலைமை விபரீதமாக, இலண்டனுக்குச் சென்று தங்கியிருந்து, வக்கீலான மலேசிய அமைச்சர் ஒருவரின் உத்தர வாதத்தின் பேரில் கோலாலம்பூருக்குத் திரும்பி வந்தவர் தோழர் உதயகுமார். அன்றைக்கு அவரை நோக்கி ''மலிவான விளம்பரத் திற்காக நாடகமாடுகிறார்," என்று விரல் நீட்டியவர்கள் இன்றைக்கு அவரை சமுதாயக் காவலர் என்று புகழாரம் சூட்டு கின்றார்கள்.

பிறர் மீது பழி போட்டே இவ்வளவு காலம் பதவிகளை அலங் கரித்து வந்தவர்தான் சாமிவேலு.

மலேசிய நாட்டு இந்தியர்களின், குறிப்பாகத் தமிழர்களின் வள வாழ்வு குறித்து இபி-க்குப் பிறகு பலவற்றை சாமிவேலு பேசியுள்ளார். ''எங்கள் நாட்டிற்கு வந்து பாருங்கள். ஒரு பிச்சைக்காரனைக்கூடப் பார்க்க முடியாது. சாதாரண நபருக்குக் கூட ஆயிரக்கணக்கில் சம்பளம் கிடைக்கும் அளவிற்கு வேலை வாய்ப்பு உள்ளது," என்று குமுதம் ரிப்போர்ட்டரில் உளறியிருந் தார். பொறுப்பற்றுப் பேசுவதில் அவர் எப்போதும் வல்லவர்.

இந்தியர்களின் நிலை குறித்து மலாய் நண்பர்கள் இருவரின் கருத்துகள் கடந்த திசம்பரில் என்எஸ்டி ஆங்கில நாளேட்டின் வாசகர் பகுதியில் வெளியிடப்பட்டன. அவை பரிசீலிக்கப்பட வேண்டிய நல்ல ஆவணங்கள்.

''இந்தியக் குடும்பங்களின் சராசரி வருமானம் வெள்ளி 3,456 ஆக இருக்கிறது. தேசிய நிலை சராசரி வருமானமே வெள்ளி 3,022தான் என்று சாமிவேலு குறிப்பிடுகிறார். இது உண்மைக்கு மாறானது மட்டுமல்ல, இவருக்கு எங்கிருந்து இப்புள்ளி விவரங் கள் கிடைத்தன என்பது தெரியவில்லை.

"அண்மையில் பினாங்கிற்குப் போயிருந்தேன். ஜோர்ஜ் டவுன் வட்டாரத்தில் இன்னமும் மிக ஏழ்மை நிலையில் இருக்கின்ற இந்தியக் குடும்பங்களையும் வீடில்லாத குடும்பங்களையும் கண்டேன்.

"அது அந்தி சாயும் நேரம். திடீரென எனது காரை நான் ஒரு நிறுத்துமிடத்தில் நிறுத்தியபோது, அங்கே 'ஜாகா கிரெத்தா" (கார் காவலர்) ஒருவர் என்னை எதிர்கொண்டார். உபரி வருமானத் திற்காக அவர் அந்த வேலையைச் செய்வதாக எனக்குத் தெரிய வந்தது. காசு கொடுக்காமல் போனால் என் காரை கீறி விடுவார்கள் என்ற அச்சத்தில் ஒரு வெள்ளியைக் கொடுத்துவிட்டு வெளி யேறினேன்.

"இரவு வேளையில் ஐந்தடியில் பல இந்தியர்கள் படுத்துறங்கு வதைக் கண்டேன். இரவில் கடைகள் மூடப்பட்ட பிறகு வீடற்ற இந்தக் குடும்பங்கள் இக்கடைகளுக்கு முன் தங்குவதாகத் தெரிய வந்தது.

"இப்போது எனது கேள்வியே, இப்படிப்பட்ட ஏழ்மை நிலையில் உள்ள இந்தியர்கள் இருக்கின்றபோது, இவர்களையும் சேர்த்துத் தான் இந்தியர்கள் வளர்ச்சி அடைந்திருக்கின்றார்கள் என்று சாமிவேலு சொல்ல வருகிறாரா?

"தங்களுக்கான சொந்தக் கூரையின்றி யாருக்கோ உரிமையான கடைகளையே தங்கள் வீடுகளாகக் கொண்டு தங்குகின்ற ஏழை இந்தியர்கள் நகர்ப்புறங்களில் இன்று நல்ல வாழ்க்கையில் இருக்கிறார்கள் என்று சாமிவேலு கூற வருகிறாரா?

"இந்த நாட்டில் உள்ள ஏழைகளில் பெரும்பாலோர் இந்தியர் என்பது ஒரு கவலைக்குரிய கூறாகும். சில நெறி விலக்குகள் இருக்கலாம். ஆனால், எல்லோருமே நலமாக வளர்ச்சியாக இல்லை", என்று விவரித்திருந்தார் துங்கு யூசோப் ஜிவா என்பார்.

இனி, மற்றொருவரின் கருத்தைப் பார்ப்போம்:
''இந்தியர்களின் வளர்ச்சி நிலையைச் சொல்லுகின்றபோது அது உண்மை நிலைகளை எதிரொலிக்க வேண்டும். இந்தியர்களைப் பற்றிச் சொல்லப்படுகின்ற புள்ளி விவரங்கள் எனக்குச் சரியான தாகப் படவில்லை. இன்று மலேசியாவின் மக்கள் தொகை 2 கோடியே 80 லட்சமாக இருக்கிறது. நாம் எப்போதுமே மிகப் பெரிய இடைவெளி நிறைந்த மற்ற இனங்களை ஒப்பிட்டுப் பார்க்கிறோம்.

"பூமிபுத்ராக்கள் (மண்ணின் மைந்தர்கள்) 64 விழுக்காட்டினர் (17,920,000). சீனர்கள் 24 விழுக்காட்டினர் (6,720,000. இந்தியர் கள் 8 விழுக்காட்டினர் (2,240,000). இந்த நாட்டில் அனைத்து மலாய்க்காரர்களும் பூமிபுத்ராக்கள் என்றாலும், பூமிபுத்ராக்கள் எல்லோருமே மலாய்க்காரர்கள் அல்லர். மலேசிய நாட்டு அமைப்பின் அடிப்படையில் பூமிபுத்ரா என்ற சொல் மலாய்க்காரர்களையும் ஓராங் அஸ்லி (பழங்குடிகள்) உட்பட சபா, சரவாவில் (கிழக்கு மலேசியா) வாழும் இதர பல பழங்கடி மக்களையும் குறிப்பிடு கிறது. எப்போதுமே இது போன்ற பூர்வீகக் குடிமக்கள் மிகக் குறைந்த பிரிவினராகவும் வேலை வாய்ப்பு இல்லாதவர்களாகவும் இருப்பதுண்டு. எனவே, ஒரு சராசரி வருமானத்தைக் காட்டுகின்ற போது இது தொடர்பான ஆய்வுகள் சரியாக அமைவதில்லை.

ஒவ்வோர் இனத்திற்கும் மாறுபட்ட அமைப்பு முறைகள் இருக் கின்றன. மாறுபட்ட தொழிலில் அவர்கள் இருக்கிறார்கள். அவர் களின் வருமானமும் மாறுபடுகிறது. சராசரி வருமானத்தை, இதை வைத்துக் கணக்கிட முடியாது. அதை ஓர் அளவுகோலாக வைத்து இந்த நாட்டு மூவினங்களின் வளர்ச்சி நிலையை மதிப்பிடவும் முடியாது. அப்படி கணித்தால் அது ஒரு தவறாகவே முடிந்து விடும். வறுமை என்பது ஒரு குறிப்பிட்ட இனத்திற்கும் சமயத்திற் கும் மட்டும் உரியதல்ல. அவர்கள் இருப்பது கிராமமா அல்லது நகரமா என்பதும் முக்கியமல்ல. அல்லல் படும் அனைவரும் அரசின் ஆதரவுக்கும் உதவிக்கும் உரியவர்கள்," என்று கூறியிருந்தார் எப்எஸ்.மால்ஹி.
முனைவர் நாகப்பன் மக்கள் ஓசை இதழில் எழுதியிருந்த கட்டுரையின் சாரம் இது:

"இந்து உரிமை நடவடிக்கை குழு கம்போங் மேடான் சம்பவம் தொடர்பாக அரச ஆணைக்குழு விசாரணை செய்ய வேண்டும் என்ற கோரிக்கையோடு தன் செயல்பாடுகளைத் தொடங்கியது.

"பின்னர் இமயமலை ஏறிய மூர்த்தியின் பிரேத விவகாரம், காவல் நிலையக் காவல் அறைகளில் தடுத்து வைக்கப்பட்ட இந்தியர்கள் அங்கேயே இறந்து போகும் நிகழ்ச்சிகள் குறித்த விசாரணைகள், கோவில் உடைப்பு போன்ற பல பிரச்சினை களிலும் ஈடுபட்டது.

"ஒட்டுமொத்தமாக இந்தியர்கள் எதிர்நோக்கும் எல்லாப் பிரச்சினை களுக்கும் பொதுக் காரணம் என்ன? என்று பார்த்தபோது ஏழ்மையே என்று அறியப்பட்டது. போதிய கல்வி இன்மை, நல்ல வேலை வாய்ப்பின்மை ஆகியன ஏழ்மைக்கு காரணங்கள் ஆயின.

"ஆனால், இந்தியர்கள் ஏழைகள் அல்லர் என்று கூறும் ஒரு புள்ளி விவரத்தைச் சிலர் இன்று கூறி வருகின்றனர். இந்தப் புள்ளி விவரமே அனைத்துலக நிறுவனங்களுக்கும் அளவுகோல் ஆகிறது.

"புள்ளி விவரம் தவறானதாக இருக்கும் என்பது அதனைக் கையாள்கிற ஆய்வாளர்களுக்கு நன்கு புரியும். புள்ளி விவரத்தை வைத்துக்கொண்டு முடிவு செய்வது ஒரு வகை ஆய்வு. முடிவை வைத்துக்கொண்டு புள்ளி விவரத்தைத் தயார் செய்வது மற்றொரு வகை ஆய்வு. இந்த ஆய்வோ இரண்டாம் வகையானது.

"மலேசியாவின் மூன்று முக்கிய இனங்களின் சராசரி மாத வருமானத்தைக் குறிப்பிடும்போது சீனர்கள் வெ.4,426, இந்தியர்கள் வெ.3,456, மலாய்க்காரர்கள் வெ.2,711 என 2004ஆம் ஆண்டு புள்ளி விவரம் காட்டுகிறது. இந்தப் புள்ளி விவரம் எப்படி தயார் செய்யப்படுகிறது?

"குறிப்பிட்ட இனத்தில் உலகப் பணக்காரரின் மாத வருமானத் தையும் அடிநிலைத் தொழிலாளியின் மாத வருமானத்தையும் கூட்டி சம்பாதிக்கிறவர்-சம்பாதிக்காதவர் ஆகிய அனைவரின் எண்ணிக்கையாலும் வகுத்தால் வரும் சராசரி தொகையே இது.

"மற்றவர்களை விட்டு விடுவோம். இந்தியர்களை மட்டும் எடுத்துக் கொள்ளுங்கள். உலகின் பெரிய பணக்காரர் பட்டியலில் இருக்கும் ஆனந்தக்கிருஷ்ணன் உட்பட பலரைப் பற்றி நாம் அறிவோம். இவர்களை விட கொஞ்சம் சிறிய பணக்காரர்களாகச் சிலர் உள்ளனர். அமைச்சர்கள், துணை அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாநில ஆட்சி மன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் இப்படி பல்வேறு பொறுப்புகளில் இருப்பவர்கள் நிச்சயம் தோட்டப் பாட்டாளிகளைப் போல் சம்பளம் பெறுபவர்களாக இருக்க மாட்டார்கள்.

"இவர்கள் வருமானத்தையும் மலேசிய இந்திய உலகப் பணக் காரர்களின் வருமானத்தையும் தோட்டப் பாட்டாளிகள், தொழிற் சாலைப் பணியாளர்கள் ஆகியோர் சம்பளத்தோடு கூட்டிச் சராசரி கண்டு பிடித்து இந்தியர் வருமானம் 3,456 வெள்ளி என்று சொல்வது புள்ளி விவரத்திற்குப் பொருந்தலாம்.

"ஆனால், உண்மை நிலவரத்திற்குப் பொருந்தாது. நம்மில் எத்தனை பேர் 3,456 வெள்ளி அல்லது அதற்கு மேல் சம்பளம் பெறுகிறோம் என்று பார்த்தால், இந்தப் புள்ளி விவரத்தின் அபத்தம் புரியும்.

"சராசரி மாத வருமானம் இப்படி இருக்கையில், இனங்களின் சொத்துடைமை வேறு தோற்றத்தைக் காட்டுகிறது.

"2002ஆம் ஆண்டின் புள்ளி விவரப்படி சீனர்கள் 40.3 விழுக் காடு, பூமிபுத்ரா 18.7 விழுக்காடு இந்தியர் 1.5 விழுக்காடு. இந்த 1.5 விழுக்காடும் இந்தியர்களில் இரண்டு அல்லது மூன்று பேரின் சொத்துடைமைக்குள் அடங்கிவிடும் என்பது அனைவராலும் அறியப்பட்ட உண்மை.

"இந்தியரின் சராசரி மாத வருமானத்தைவிட பூமிபுத்ராக்களின் சராசரி வருமானம் குறைவாய் இருப்பதற்கு என்ன காரணம்?

"பூமிபுத்ரா என்றவுடன் நாம் மலாய்க்காரர்களை மட்டுமே நினைவு படுத்திக்கொள்கிறோம். தீபகற்ப மலேசியாவில் பல வகைப் பெயர்களில் பழங்குடியினர் இருக்கின்றனர்.

"சபா, சரவா மாநிலங்களில் நகர்ப்புற மக்களோடு கிராமப்புற மக்களும் பல இனங்களின் பெயரால் பழங்குடியினரும் வாழ் கின்றனர். இவர்கள் அனைவருமே பூமிபுத்ரா மக்கள் தொகையில் அடக்கப்படுகின்றனர்.

"தீபகற்ப மலேசியாவிலும் சபா, சரவா மாநிலங்களிலும் உள்ள இப்பழங்குடியினர் நிரந்தர வருமானம் தரும் தொழில்களைச் சார்ந்தவர்கள் அல்லர். அனைவரையும் சேர்த்து பூமிபுத்ராக்களின் சராசரி மாத வருமானத்தைக் கணக்கிடுவதால் அவர்களின் சராசரி வருமானம் குறைந்துள்ளது.

"பூமிபுத்ராக்களின் சராசரி வருமானம் குறைந்திருந்தாலும் அவர் களின் சொத்துடமை இந்தியர்களைக் காட்டிலும் 17 மடங்கு அதிக மாய் உள்ளது. இது எப்படி சாத்தியமானது? பூமிபுத்ராக்கள் நிறுவன ரீதியாக வளர்ந்திருக்கிறார்கள் என்பதையே இது காட்டுகிறது. இந்த நிறுவனங்களில் முதலீடு செய்யும் வாய்ப்பு பெற்ற பூமி புத்ராக்கள் இவை ஈட்டும் லாபத்திலும் பங்கு பெறும் வாய்ப்பை பெற்றிருப்பார்கள். நமது சொத்துடமை 1.5லிருந்து 1.3க்குப் போயிருக் கிறது. நிறுவன ரீதியில் நாம் தேய்மானம் அடைந்திருக்கிறோம்.

"சராசரி மாத வருமானம் மக்கள் தொகையை அடிப்படையாகக் கொண்டது. பூமி புத்ராக்களின் சராசரி மாத வருமானத்தைக் கொண்டு பார்த்தால் இவர்களில் ஏழைகள் இருக்கின்றனர் என்பதை மறுக்க முடியாது. இதற்கு இரண்டு காரணங்களை நாம் அனுமானிக் கலாம். இவர்களில் ஒரு பகுதியினர் தங்கள் பண்பாட்டிலிருந்து மாற விரும்பாத, அரசின் புதிய மேம்பாட்டுத் திட்டங்களை ஏற்காத பழங்குடி மக்களாக இருக்கலாம். மற்றொன்று, புதிய பொருளா தாரக் கொள்கையின் சலுகைகள் ஏழை பூமிபுத்ராக்களுக்குப் போய்ச் சேராமல் இருக்கலாம்.

"ஒரு நாட்டின் ஏழைகள் எந்த இனத்தவராக இருந்தாலும் அவர்களை மேம்படுத்துவது அரசின் கட்டாயக் கடமையாகும். ஏழ்மையை அடிவேராகக் கொண்டு சமூகப் பொருளாதாரச் சீர் கேடுகள் வளர்கின்றன. கொலை, கொள்ளை, வழிப்பறி போன்றவை, சமயம், அதிட்டம் ஆகியவற்றின் பெயரால் நடைபெறும் ஏமாற்று வேலைகள் ஆகியவை சமூகப் பொருளாதாரச் சீர்கேட்டின் வெளிப் பாடுகள். அதிருப்திகள், ஆட்சேபணைகள், மறியல் ஆகியவை அதே சமூகப் பொருளாதாரச் சீர்கேட்டின் நாகரிகமான வெளிப்பாடுகள்.

"பிரச்சினைகளின் மூலகாரணத்தைக் கண்டு நிலைமையைச் சீர் செய்வதற்கான வழிமுறைகளை ஆராய்ந்து அரசு செயல்பட வேண்டும். காவல் துறையை மேம்படுத்துவதும் சிறைச்சாலை களை விரிவுபடுத்துவதும் பிரச்சினைகளைத் தீர்க்காது. ஆணிவேர் வரை பிரச்சினைகளை அலசி ஆராய்வதே முக்கியம்."

2

24.11.07 மாலை கதிரவன் மேற்றிசையில் மறைய, இருள் கவியத் தொடங்கியதும் பக்தர்களின் எண்ணிக்கை மெல்ல மெல்லப் பெருகியதால் என்றைக்கும் இல்லாத அளவிற்கு பத்துமலையில் கூட்டம் அதிகமாக இருந்ததாம். மாற்ற முடியாது என்று சொல்லப் பட்டு, நம்பப்பட்டு வரும் தலையெழுத்தை மாற்றி அமைத்த மாந்தர்களின் வரலாறு பத்துமலை அடிவாரத்தில்தான் துவங்க விருக்கின்றது என்பதனை அப்போது எவரும் அறிந்திருக்கவில்லை.

இப்படி பெரும் எண்ணிக்கையில் திரண்டிருந்தவர்களில் ஒரு பிரிவினர் கார்த்திகை விழாவுக்காக வந்திருந்தவர்கள் என்றால், மற்றொரு பிரிவினர் மறுநாள் நடைபெறவிருந்த பேரணியில் பங்குபெற வருகை தந்திருந்தவர்கள். நாட்டின் பிற பகுதிகளில் இருந்தும் வந்து சேர்ந்திருந்தவர்கள் அன்றைய இரவு கார்த்திகைத் திருநாள் வழிபாட்டிலும் கலந்து கொள்வதற்காக அங்குக் கூடியிருந்தனர் என்று தெரிய வருகின்றது.

நேரம் செல்லச் செல்ல குழுமியிருந்தவர்களின் எண்ணிக்கை உயர்ந்து சென்று சில ஆயிரங்கள் ஆகியதாம். இப்படித் திரண்டவர்கள் தங்களின் சொகுசு வாழ்க்கைக்கு உத்தரவாதம் அளித்துக் கொண்டிருப்பவர்களின் அதிகாரத்திற்கு அறைகூவல் விடுப்பவர்களால் ஏற்பாடு செய்யப்பட்டு மறு நாள் ஞாயிற்றுக் கிழமை நடைபெறவிருக்கும் பேரணியில் பங்கெடுக்க வந்தவர்கள் என்பதனை உணர்ந்த கோயில் நிருவாகத்தினர், கோயில் சொத்துகளுக்கு அழிவை ஏற்படுத்துகின்றனர் எனும் நோக்கில் போலீசில் புகார் செய்துள்ளனர்.

ஆலய வளாகத்தின் முதன்மை கேட் மூடப்பட்டதின் பின், அங்கிருந்து வெளியேறுவதற்காக முயன்றவர்களின்மீது கலக மடக்கும் போலீசார் கண்ணீர் புகையையும் அமில நீரையும் பீய்ச்சி அடித்தனர் என்பதெல்லாம் மறுநாள் ஸ்டார், என்எஸ்டி, மலாய், மாண்டரின் மற்றும் தமிழ்த் தினசரிகளிலும் வெளிவந்த செய்திகளாகும்.

ஆனால், ஐஜிபி கண்ணீர்ப் புகை மற்றும் அமில நீர் பயன்படுத்தப் படவில்லை என்று ஆணித்தரமாகக் கூறியதை ஸ்டார் ஆங்கில நாளேடு வெளியிட்டிருந்தது. இணையப் பக்கத்தில் காணப்பட்ட ஒளிப்படங்கள் போலீஸ் படைக்கு பொறுப்பானவரின் அறிவிப்புக்கு மாறானதாகவே இருந்தன.

இச்சம்பவத்திற்குச் சிலநாட்களுக்கு முன்னர் நேர்மையான தேர்தல் நடைபெற வேண்டியும், தேர்தல் ஆணையரின் பதவி நீட்டிப்பு செய்யப்படக்கூடாது எனக் கோரியும் எதிர்க்கட்சிகளை உள்ளடக்கிய ''பெர்சே" (தூய்மை) எனும் அமைப்பின் ஏற்பாட்டில் நடைபெற்ற பல்லாயிரக்கணக்கில் பல்லின மக்களும் பங்கெடுத்த போராட்டத் திலும் கண்ணீர்ப்புகையும், அமில நீரும் தாராளமாகக் கையாளப்பட்டன. அப்போதும் போலீசுத் துறையின் அதிகாரிகள் இப்படித் தான் மறுத்தனர் என்பதும் ஒப்பிடத்தக்கதாகும்.

போலீசாரை எதிர்கொண்ட மக்கள் கையிலிருந்த பிளாஸ்டிக் தண்ணீர் புட்டிகளோடு, கீழே கிடந்த கற்களையும் எடுத்துத் தங்களைத் தாக்கியவர்களின் மீது எறிந்திருப்பர் என்பது ஏற்கத்தக்கவையே. தம்மைத் தற்காத்துக் கொள்ளாத உயிர் எதுவும் இருப்பதாகத் தெரியவில்லை!

கோவில் வளாகத்தில் கூடியிருந்தவர்களின் மீது தாக்குதல் மேற் கொண்டனர் கலகமடக்கும் போலீசார். இந்த அமளிதுமளியில் தான் நூற்றுக்கும் மேற்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டனர். இது எவ்வகையிலும் சட்டக் காவலர்களின் கவனத்திற்கு வரவில்லை. மாறாக, காயம்பட்ட போலீஸ்காரர்களின் நிழற்படங்கள் பத்திரிக்கைகளில் வெளியிடப்பட்டு பரபரப்பாக்கப்பட்டது.

மக்கள் ஓசை நிருபர் திரு விசுவநாதன் இது குறித்து, ''ஞாயிற்றுக் கிழமை அதிகாலை 3 மணியளவில் சிற்கோம்பாக்கில் இருந்து பத்துமலை நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந் தேன். நான் ஒரு பத்திரிக்கை விற்பனையாளன் என்பதால் அந்நேரத்தில் பத்திரிக்கைகளை எடுக்க அந்த வழியே சென்றேன். பத்துமலை மயில் கேட்டை வந்தடைந்ததும் அங்கு இந்தியர்கள் கதறித் துடித்து நாலாபுறமும் ஓடிய காட்சியைத் பார்த்துத் துடித்துப்போனேன். பத்துமலை வளாகமே கரும்புகையாகக் காட்சியளித்தது. உள்ளே இருந்தவர்கள் வெளியே வர முடியாத படி இரும்புக் கதவுகள் பூட்டப்பட்டிருந்தன. பத்துமலையில் இருந்த கூட்டத்தைக் கலைக்க போலீசார் மேற்கொண்ட நடவடிக்கையில் அவர்கள் அங்குமிங்கும் ஓடிய காட்சிகள் பெரும் வேதனையைத் தந்தன," என்று குறிப்பிட்டிருந்தார்.

கோயில் வளாகத்தில் அடைபட்டு நின்ற மக்கள் மீது தாக்குதல் தொடுக்கப்பட்டதோடு 700க்கும் மேற்பட்டோர் கைது செய்யப் பட்டனர். பின்னர் படிப்படியாக விடுவிக்கப்பட்டு 80 பேர் நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டனர். இவர்களில் இறுதியாக 31 பேர் ஒரு போலீசுக்காரரைத் துரத்திக் கொலை செய்ய முயன்றதாகக் குற்றஞ்சாட்டப்பட்டு வழக்கு மன்றத்தில் நிறுத்தப் பட்டனர். இருபது ஆண்டு சிறைத்தண்டனை விதிக்க வகை செய்யும் குற்றவியல் சட்டம் பிரிவு 307இன் கீழ் இவர்கள் குற்றச்சாட்டை எதிர்நோக்கியிருந்தனர்.

சா ஆலம் செசன்சு கோர்ட்டில் நடைபெற்ற இவ்வழக்கில் 31 பேருக்கும் பிணையல் மறுக்கப்பட்டது.

ஏறத்தாழ பத்து நாட்கள் இடைவெளியில் மீண்டும் நடைபெற்ற வழக்கில் ஐவர் விடுதலை செய்யப்பட்டதோடு, 26 பேர் மீதான கொலை முயற்சி குற்றச்சாட்டு விலக்கிக்கொள்ளப்பட்டது.
ஆனால், பொதுச் சொத்துக்கு சேதம் விளைவித்தல், சட்ட விரோதப் பேரணியில் பங்கேற்றல் ஆகிய இரண்டு குற்றச் சாட்டுகளை 26 பேரும் எதிர்நோக்கியிருக்கின்றனர். இவ்வழக்கின் பின்னணியில் உள்ள அரசியல்தான் என்ன? ஜாமீன் மறுக்கப்படும் அளவு கடுமையான வழக்கில் திடீர் திருப்பம் ஏற்பட்டது ஏன்?

''வேறொன்றுமில்லை, நவ. 25க்குப் பிறகு செல்லாக் காசாகி விட்ட மஇகாவிற்குப் புத்துயிர் ஊட்ட மேற்கொள்ளப்படும் நாடகத்தின் முதல் அங்கம் இது," என்று கருத்து தெரிவித்தார் வழக்கறிஞர் தோழர் ஒருவர். பின் வந்த நாட்களில் அரங்கேறியவை அவரின் கருத்தை உறுதி செய்தன.

துணைப்பிரதமர் முதல் இன்னபிற மலாய்க்கார, சீன அமைச்சர்கள் அனைவரும் 'இந்தியர்கள் ம இ காவைக் கைவிட்டு விடக் கூடாது. மஇகா மட்டுமே இந்தியர்களை பிரதிநிதிக்கும் கட்சி. அக்கட்சியினால் மட்டுமே இந்தியர்களின் எதிர்காலத்திற்கு உத்தரவாதம் வழங்க முடியும்" என்று கருத்து வெளியிட்டனர்.

கிழக்கு வானம் இன்னமும் இருட்டியிருந்த அந்தப் புலர்காலை நேரத்தில் பிரிட்டிசு தூதரகத்தைச் சுற்றியிருந்த சாலைகளில் - மலேசிய நாடு விடுதலை பெற்று அரை நூற்றாண்டுகளாகிவிட்ட பிறகும் உரிமை மறுக்கப்பட்டவர்களாக வாழும்- இந்திய மற்றும் இலங்கை வமிசாவளியினரான மலேசியர்கள் கூட்டம் கூட்டமாக நடமாடிக்கொண்டிருந்தார்கள். இவர்களோடு வெளியூர்களில் இருந்து இரயிலிலும், பேருந்துகளிலும் வந்து சேர்ந்தவர்களும் அங்கிருந்தவர்களோடு கலந்தனர்.

நேரம் கரையக் கரைய அம்மக்கள் திரளின் எண்ணிக்கை ஆயிரம், ஐந்தாயிரம், பத்தாயிரம் என்று பெருகிக்கொண்டிருந்தது. நாடு முழுவதிலுமிருந்து மக்கள் தைப்பூசத்திற்கு வருகையளிப்பதைப் போல் வந்து குவிந்துகொண்டிருந்தார்கள் என்று அன்றைய காட்சியை விவரித்தார் இடதுசாரிக் கட்சியைச் சேர்ந்த தோழர் சிவ லெனின்.

பேரணிக்கு வருபவர்களைத் தடுப்பதற்காகத் தலைநகரில் ஆங்காங்கே சாலைத் தடுப்புகளை ஏற்படுத்தியிருந்த போலீசாரின் முன்னேற்பாடு பலன் தராத நிலையில், குவிக்கப்பட்டிருந்த கலகமடக்கும் போலீசார் காலை எட்டு மணியளவில் அமில நீரைப் பாய்ச்சி கூட்டத்தினரைக் கலைக்க முற்பட்டனர். இதன் தொடர்ச்சியாக அவர்கள் கண்ணீர்ப் புகை பயன்பாட்டையும் மேற்கொண்டனர். இப்படி கலைக்க முயன்றபோது, கூடியிருந்த வர்கள் சிதறிக் கலைந்து பின்வாங்குவதும் பின்னர் மீண்டும் ஒன்று திரண்டு முழக்கமிடுவதுமாக நேரம் கடந்து கொண்டிருந்தது.

''தாக்குதல்களினால் அவதிப்படுவோரை ஓரமாக அழைத்துச் செல்வதும் பாதிக்கப்பட்டவர்களின் வாயில் உப்பைப் போடுவது தோடு முகங்களைக் கழுவி விடுவதுமான நம் மக்களின் ஒற்றுமை யினைக் கண்டு பிரமித்துப் போனதோடு இஃது கனவா அல்லது உண்மையா என்பதனை உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டி எனது கையை கிள்ளிப் பார்த்துக் கொண்டேன்," என்றார் இடதுசாரிக் கட்சியினரான நாற்பதைக் கடந்த நண்பர் மணியம்.

அங்கிங்கெனாதபடி தூதரகப் பகுதியை ஒட்டியிருந்த சாலைகளில் கூடி நின்றனர் வாய்ச்சொல்லைத் தவிர எந்தவித ஆயுதமும் அற்ற மக்கள். உயர்ந்த இரட்டை அடுக்குக் கட்டடம் இருக்கும் ஓகஇஇ எனப்படும் நீண்ட தெருவில் காலை பத்து மணியளவில் இதர பொறுப்பாளர்களோடு தோன்றிய உதயகுமார், அங்கு குழுமியிருந்த ஏறத்தாழ 10,000 ஆயிரம் பேர் மத்தியில் உரை நிகழ்த்தினார்.

இவ்வாறு தங்களின் வழித்தோன்றல்களின் வளவாழ்வுக்காகக் கண்ணீர்ப் புகைத் தாக்குதலை எதிர்கொண்டு, வேதியல் நீரில் நனைந்து கொண்டிருந்த நிலையில், வேதமூர்த்தி மற்றும் மனோகர னோடு வேறு சிலரும் உரையாற்றினர்.

எழுச்சி உச்சக்கட்டத்தை அடைந்த நிலையில் குழுமியிருந்த பல்லாயிரத்தவர் தூதரகத்தை நோக்கிச் செல்ல எத்தனித்தனர். இவற்றைத் தடுக்கும் முயற்சியில் இறங்கிய காவலர்கள் இடைவிடாத கண்ணீர்ப் புகையோடு அமில நீர்த்தாக்குதலையும் மேற்கொண்டனர்.

''நாங்கள் மலேசியர்கள். எங்களுக்கு நீதி வேண்டும். சுதந்திரம் வேண்டும். தமிழ்ப்பள்ளிகளைப் புறக்கணிக்காதே," போன்ற சொற்கள் முழக்கங்களாக ஒலித்தன என்று சிவ லெனின் குறிப்பிட்டார்.

பிரிட்டானியத் தூதரக அதிகாரிகளிடத்தில் மனுவைச் சமர்ப்பிக்க வாய்ப்பில்லாத நிலையில் நண்பகல் ஒரு மணியளவில் உரை யாற்றிய உதயகுமார் பேரணியில் கலந்து கொண்டவர்களுக்கு நன்றி சொல்லி அமைதியாகக் கலைந்து செல்லக் கேட்டுக் கொண்டார்.

தங்களின் நோக்கம் நிறைவேறவில்லையே என்ற வருத்தம் இருந்த போதிலும், சட்டத்தை மதித்து ஏற்பாட்டாளர்களின் வேண்டு கோளை ஏற்ற பேரணியினர் வரலாற்றை மாற்றி எழுத வழிசெய்து அங்கிருந்து மெல்லக் கலைந்து சென்றனர்.

பங்கேற்றோரின் கருத்தைத் தெரிந்து கொள்வது சூழ்நிலையைப் புரிந்துகொள்ள உதவும்.

''கர்ப்பினிப் பெண்ணுக்கு முறையான பாதுகாப்பும் மரியாதையும் இல்லை. கர்ப்பினிப் பெண் என்றுகூடப் பாராமல் என்னையும் கலகத்தடுப்புப் போலீசார் தாக்கினர். நாங்கள் அமைதியாகத் தானே ஊர்வலம் சென்றோம்? அராஜகம் புரியவில்லையே? எனினும் போலீசார் ஏன் அராஜகம் செய்தனர்?" எனக் கலங்கினார் ஆஸ்துமா நோயாளியான நான்கு மாதக் கர்ப்பினி பி இந்திரா.
மலேசிய வழக்கறிஞர் மன்றத்தைச் சேர்ந்த பத்துப் பேர் கொண்ட கண்காணிப்புக் குழுவினர் பேரணியில் கலந்துகொண்டனர். அக்குழுவிற்குத் தலைமையேற்ற வழக்கறிஞர் ஹரிஸ் இப்ராகிம் (மலாய்க்காரர்), "இந்தப் பேரணியில் கலந்துகொண்ட கூட்டத் தினரைப் போலீசார் கையாண்டவிதம் குறித்து நான் அதிருப்தி அடைந்துள்ளேன்," என்றார். மேலும் 'பேரணியில் கலந்து கொண்டவர்கள் மீது தண்ணீர் அடித்த போலீசார் அவர்களைப் பிடித்து மிகவும் மோசமாகத் தாக்கியது வருத்தத்தை அளிப்பதாக" அக்குழுவில் இடம்பெற்றிருந்த பிறிதொரு வழக்கறிஞர் தெரிவித்திருந்தார்.

மறுநாள் நடைபெற்ற நாடாளுமன்ற மக்களவைக் கூட்டத்தில் ம இ காவைப் பிரதிநிதித்த கேமரன் மலைத் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் கே.தேவமணி, ''அண்மையில் இந்து உரிமை நடவடிக் கைக்குழு நடத்திய பேரணி, அரசாங்கத்தின் கொள்கைகள் மீதான இந்திய சமுதாயத்தின் மன நிறைவின்மையைப் புலப்படுத்து கிறது. அதனால்தான் 50 ஆயிரம் பேர் வரையில் வீதியில் திரண்டிருக்கிறார்கள். இது அரசாங்கத்தின் தோல்வி. எனவே, அரசாங்கம் இதனைக் கவனமாகப் பரிசீலிக்க வேண்டும்," என்று பேசியிருந்தார்.

அவருக்குப் பதிலளித்த பிரதமர் துறை அமைச்சர் நஸ்ரி அப்துல் அசிஸ், ''ஐம்பதாயிரம் பேர் வரை அப்பேரணியில் திரண்டார்கள் என்பதை தேவமணி எப்படிச் சொல்ல வருகிறார் என்பது தெரிய வில்லை. அப்படியென்றால், இவரும் அவர்களோடு சேர்ந்து ஆர்ப்பாட்டம் செய்தாரா? அரசாங்கம் இந்தியர் களுக்கு எதுவும் செய்யத் தவறி விட்டது என்று இவர் சொல்வாரா னால் இவர் எதற்காக மஇகாவில் இருக்கிறார்? மஇகாவில் இருந்து இவர் விலகுவதுதான் மரியாதையாக இருக்கும். அரசாங்கத்தை மஇகா நூறு விழுக்காடு ஆதரிக்கிறது என்று நான் நம்புகிறேன்," என்று பேசியிருந்தார்.

அவையின் 18(1) பிரிவின் கீழ் இந்து உரிமை நடவடிக்கைக் குழுவினரின் பேரணி சம்பந்தமாக விவாதிக்க வேண்டும் என்று எதிர்க் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் குலசேகரன், கொண்டு வந்த அவசரத் தீர்மானம் மக்களவையில் நிராகரிக்கப்பட்டது.

இது குறித்து வழக்கறிஞர் மன்றத் (BAR COUNCIL) தலைவர் அம்பிகா சினிவாசன், ''அமைதியான முறையில் பேரணியில் கலந்து கொண்டவர்கள் மீது முரட்டுதனத்தை போலீசார் காட்டியிருக்க வேண்டிய அவசியமில்லை. பேசுவதற்கு வாய்ப்பளிக்கப்படும் ஒரு நாட்டில் எதையும் பேசாமல் இருக்க வேண்டும் என தடைவிதிப்பதும் அமைதியான முறையில் நடைபெறும் பேரணியைத் திசை திருப்பி விடுவதும் சரியான செயல் அல்ல. எதையும் பேசக்கூடாது, நாங்கள் சொல்வதைக் கேட்டு அமைதியாக இருங்கள் என்று சொல்வதாக இருந்தால் ஒரு சனநாயகம் பறிக்கப்படுவதாகத்தான் அர்த்தமாகிறது. பேசித் தீர்க்க வேண்டிய பல விவகாரங்கள் இருக்கும் நிலையில் பேசும் உரிமைகள் தடுக்கப்படுமானால் வருங்காலத்தில் பேசித்தீர்க்க வேண்டிய விவகாரங்களுக்கு யாருமே பேச முன்வர மாட்டார்கள்" என்று கூறினார்.

''இப்படியொரு பேரணி நடத்தப்பட்டதைக் குறைகூறுவதை விடுத்து ஆயிரக்கணக்கான மக்கள் தங்களது நிறைவின்மையை வெளிப்படுத்தியதற்கான காரணத்தை அறிந்துகொள்ள வேண்டும். இந்திய சமூகம் மற்றும் இதர சமூகங்களின் சாதாரண நிலையில் உள்ளவர்களின் வீட்டுடைமை, கல்வி, சுகாதாரம், வேலை வாய்ப்பு, சொத்துடைமை, சமய சுதந்திரம் போன்ற சிக்கல் களுக்குத் தீர்வு காணப்பட வேண்டும். நாட்டின் அமைதி மற்றும் நிலைத்தன்மைக்குப் பேரணி, மறியல் மற்றும் ஆர்ப்பாட்டங்களை விட அதிருப்தியும் ஏமாற்றமும் பெரிய மிரட்டலாக இருக்கும்," என்று பினாங்கு மாநில அமைச்சர் டாக்டர் தோகின்வூன் (சீனர்) கூறியிருந்தார்.

இன்றைக்கு சீனர்களைப் பெரும்பான்மையாகக் கொண்டுள்ள பல்லினக் கட்சியான கெரக்கானின் இளைஞர் பிரிவு உதவித் தலைவரான எஸ்.பரஞ்சோதி, 'மலாய்க்காரர்களின் மத்தியில் தன்னுடைய பிரபலத்தை நிலைநிறுத்திக்கொள்ள, இனவாத உணர்ச்சியைத் தூண்டும் வகையில் அம்னோ நிலைமையை மோசமாக்கிக்கொண்டிருப்பதாகவும், இந்திய சமூகம் நான்காம் தர பிரஜைகளாகத் தள்ளப்படும் அளவுக்கு அவர்களைப் பற்றி அரசாங்கம் கவலைப்படாமல் தொடர்ந்து புறக்கணித்து வருவ தாகவும்" அரசாங்கத்தைக் குற்றஞ் சாட்டி இருந்தார்.

இவர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அம்னோ வினர் கோரியபோது தாம் எவ்வகை யான நடவடிக்கைக்கும் அஞ்சப் போவதில்லை என்று ஒற்றை வரி யில் முடித்துக்கொண்டார்.

பேரணி முடிந்த சில நாட்கள் இடைவெளியில் பத்திரிக்கையாளர் களிடம் பேசிய உதயகுமார் இந்திய சமூகத்தின் நலனைப் பாது காக்க உதவக்கூடிய 18 அம்சக் கோரிக்கை (இக்கோரிக்கைகளில் சில விட்டுக்கொடுப்புகள் வேண்டும் என்பது நமது கருத்து) குறித்து மாண்புமிகு அப்துல்லா அகமது படாவியுடன் பேச்சு நடத்த நாங்கள் தயாராக இருக்கிறோம். அப்துல்லா தான் எங்கள் பிரதமர். எங்கள் கோரிக்கை குறித்து அவருடன் மனம் திறந்து பேச விரும்பு கிறோம். நாங்கள் சந்தித்துப் பேச பிரதமர் இணக்கம் தெரிவித்தால் எங்களின் போராட்டத்திற்கு வெளி நாடுகளின் ஆதரவைப் பெறும் முயற்சியை நிறுத்திக்கொள்வோம்," என்று குறிப்பிட்டிருந்தார்.

ஈழ நாட்டுப் போராட்ட வரலாற்றை நன்கு அறிந்திராத காரணத்தால் தான் இவர்கள் இந்தியாவை நம்பியதும் நம்புவதும் என்று சொல்வதில் தவறிருக்காது.
இந்திய நாட்டு ஆட்சியாளர்களைப் பொறுத்தமட்டில் அவர்களுக் குத் தமிழ் என்பதும் தமிழன் என்பதும் வெறுக்கத்தக்க கெட்ட வார்த்தைகள்.
அத்தகைய தன்மை கொண்டவர்களை விடவா, மலாய்க்காரர்கள் மோசமானவர்களாக இருந்துவிடப் போகிறார்கள்?

இங்கு கங்கானி முறை அமுலில் இருப்பதும், இந்தியர்களின் அதிகார பூர்வ பிரதிநிதிகள் தாங்கள்தாம் என்று சொல்லிக்கொள்பவர்கள் தங்களது மூக்கிற்கு அப்பால் பார்க்க முடியாதவர்களாக இருப்பதும் தான் ஒட்டுமொத்த பிரச்சினைகளுக்கும் அடித்தளமாகிறது.

"இந்தியர்களின் ஏகோபித்த ஒரே தலைவர் வலிமை கொண்ட சங்கிலிமுத்து சாமிவேலுதான் என்ற மாயையில் இருந்த பிரதமர் எவ்வாறு உதயகுமார் தரப்பினரோடு பேச்சு வார்த்தைக்கு முன் வருவார்?" என்ற வாசகர் அனுமானம் சரியானதே!

அப்படியொரு சந்திப்பு இன்னும் நிகழவில்லை. மாறாக, ''என்னிடம் பெரிய காது உள்ளது. நல்லது கெட்டதுகளை என் பெரிய காது நிச்சயம் செவிமடுக்கும்," என்ற பிரதமரிடம் நேரடியாக மனு சமர்ப்பிக்க அமைக்கப்பட்ட நாற்பத்தெட்டு அமைப்புகளின் கூட்டு கீழ்க்காணும் கூட்டறிக்கையை வெளியிட்டது:

''மலேசிய மேம்பாட்டுத் திட்டங்களின் வழி நாட்டின் இனங்களுக்கிடையே வருமான இடைவெளியைக் குறைக்க அரசாங்கம் நடவடிக்கைகளை எடுத்தாலும் அவை மலேசிய இந்தியர்களுக்கு அவ்வளவாகப் பயன் தரவில்லை. மலேசிய இந்தியர்கள் மத்தியில் இத்தகைய சிக்கல்கள் இருப்பதால்தான் அவர்களின் மனக்குறை களின் வெளிப்பாடுகள் மறியலில் வந்து முடிகின்றன. இதன் வழி, இந்திய சமூகத்துக்குப் பிரச்சனைகள் இருப்பது தெளிவாகத் தெரிகிறது. கடந்த நவம்பர் 25, கோலாலம்பூரில் கூடிய ஆயிரக் கணக்கான இந்தியர்கள், தங்களின் அதிருப்தியை வெளிப்படுத்தி, மலேசியாவில் சிறந்த எதிர்காலம் வேண்டி அவர்கள் தங்கள் கோரிக்கைகளை முன்வைத்தனர்."

இபிக்கு முன், "பிரதமரிடம் சொல்லி விட்டேன், பேசி விட்டேன்" என்று அம்புலி மாமா கதைகள் சொல்லிக்கொண்டிருந்தவரிடம்தான் இவர்கள் கோரிக்கை வைத்துக்கொண்டிருந்தார்கள்.

அரசு சாரா (என்ஜிஓ) இந்தியப் பொது அமைப்புகளின் பெறுப் பாளர்களைப் பிரதமர் சந்தித்தார். கையோடு இந்தியர்களின் பிரச்சினைகளைக் கண்டறிய சிறப்புக் குழு அமைக்கும்படி மஇகாவைப் பணித்தார். ஒன்றைக் கவனியுங்கள். இவ்வளவு நடந்த பின்னும் பிரதமர் சாமிவேலுவைத்தான் நம்பிக் கொண்டிருந்தார் என்பது அவரின் நல்ல காலமா? தமிழரின் கெட்ட காலம் என்று சொல்வதா?

கைதானவர்களின் விடுதலைக்காக ஆங்காங்கே உள்ள கோயில் களில் சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டன. மஇகாவினரின் தலையீட்டால் பல்வேறு ஊர்களில் வழிபாடு நடத்த கோயில் நிருவாகத்தினர் அனுமதி மறுத்தனர்.

டிசம்பர் 2ஆம் தேதி பத்துமலையில் நடைபெற்ற அவ்வாறான சிறப்பு வழிபாட்டுக்குப் பின் நடைபெற்ற கூட்டத்தில், உதயகுமார் கீழ்க்கண்டவாறு பேசியிருந்தார்:

''கடந்த 26 ஆண்டுகளாக இந்திய சமுதாயத்தைப் பிரதிநிதித்து அமைச்சரவையில் வீற்றிருக்கும் சாமிவேலுவால் சமுதாயப் பிரச்சினைகளைத் தீர்க்க முடியவில்லை. ஒரு மாதத்திற்கு நான்கு முறை அமைச்சரவைக் கூட்டம் நடைபெறுகிறது. ஆண்டுக்கு 52 முறை என்ற கணக்கில் கடந்த 28 ஆண்டுகளில் 1,456 அமைச்சரவைக் கூட்டத்தில் சாமிவேலு பங்கேற்றிருக்கிறார். இதே காலகட்டங்களில் தமது அமைச்சிலும் இந்தியர்களைச் சந்தித்துக் குறைகளைக் கேட்டறிந்திருக்கிறார். அப்படியானால் கடந்த 28 ஆண்டுகளில் அப்படி என்னதான் சாமிவேலு அமைச்சரவையில் பேசி இந்திய சமுதாயத்தின் பிரச்சினைகளைத் தீர்த்து வைத்தார் என்பதைத் தெரிந்துகொள்ள மலேசிய இந்திய சமுதாயமே ஆவலுடன் இருக்கிறது. இந்திய சமுதாயத்தை மஇகா மட்டும்தான் பிரதிநிதிக்கிறது என்று மார்தட்டிக் கொள்ளும் சாமிவேலு, இந்தியர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு அமைச்சரவையில் பேசித் தீர்வு காண முடியாமல் போனது ஏன்? இனியும் இந்திய சமுதாயம் சாமிவேலுவையும், மஇகாவையும் நம்பத் தயாராக இல்லை. சமுதாயம் விழித்துக் கொண்டது. பிரதமர் அப்துல்லா அகமது படாவியால் மட்டுமே சமுதாய பிரச்சினைகளுக்குத் தீர்வு காண முடியும். மஇகா அமைத்துள்ள சிறப்புக்குழு மீது சிறிதளவும் நம்பிக்கை இல்லை. இதுவரை இந்திய சமுதாயம் பாழ்பட்டுப் போனதற்கு இவர்களே முழுக்க முழுக்கக் காரணம்."

தோழர் உதயகுமாரின் உரையை மக்கள் ஓசை நாளேடு வெளியிட்டது.

9.12.07 அன்று பினாங்கு மாநிலத்தின் பட்டர்வொர்த் நகரில் நடைபெற்ற பிரிதொரு வழிபாட்டுக் கூட்டத்திற்குப்பின் உதய குமார், கீழ்கண்டவாறு பேசியிருந்ததை மலேசிய நண்பன் நாளேடு வெளியிட்டிருந்தது:

''நாங்கள் விடுதலைப்புலிகள் இயக்கத்தோடு தொடர்பு கொண்டுள்ளதை 24 மணி நேரத்திற்குள் போலீஸ் நிரூபிக்க வேண்டும். அப்படி நிரூபிக்கவில்லை என்றால் விடுதலைப் புலிகளோடு தொடர்பு இருப்பதாக கூறப்பட்ட குற்றச்சாட்டு பொய்யான குற்றச்சாட்டாகக் கருதப்படும். கடந்த 50 ஆண்டுகளாக மலேசிய இந்தியர்கள் எதிர்நோக்கி வரும் பல்வேறு பிரச்சினைகள் குறித்து சம்பந்தப்பட்டவர்களிடம் பலமுறை பல மகஜர்கள் வழங்கப்பட்டன. எந்த மகஜருக்கும் சம்பந்தப்பட்டவர்களிடமிருந்து எந்தப் பதிலும் கிடைத்ததில்லை. ஒரு அரசியல் கட்சி திட்டமிட்டு இன்ராப் பிற்கு எதிராகப் பொய்ப்பிரச்சாரங்களைச் செய்து வருகிறது. இதற்கு காரணம் எந்த நேரத்திலும் பொதுத் தேர்தல் அறிவிக்கப்பட்டால் இந்தப் பிரச்சினையைப் பெரிதுபடுத்தி தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொள்ளத்தான். இந்த நாட்டு மலாய் சமூகத்தினர் மிகவும் நல்லவர்கள். நாம் யாரையும் வம்பிற்கு இழுக்கவில்லை. நமது சட்ட பூர்வ உரிமைகளைத்தான் கேட்கிறோம். இன்று இந்தப் வழிபாட்டுக் கூட்டம் நடத்தப்படுவது சிறையில் அடைத்து வைக்கப்பட்டுள்ள 31 பேர்கள் விரைவில் விடுவிக்கப்பட வேண்டும் என்பதற்காகவே. எந்த நேரத்திலும் நான் கைது செய்யப்படுவேன். அதைப்பற்றிக் கவலைப்படவில்லை. நமது நோக்கம் நமது உரிமையைப் பெறுவதுதான். நாடு முழுவதும் தற்போது இந்தியர்களிடையே ஏற்பட்டுள்ள இந்த விழிப்புணர்ச்சி தொடர வேண்டும்.

"நாம் ஒன்றுபட்டிருந்தால் நம்மை யாரும் ஒன்றும் செய்துவிட முடியாது. நாம் யாருக்கும் எதிரிகள் அல்லர். நாம் தீவிரவாதிகளும் அல்லர். இப்போது மட்டுமல்ல, எப்போதும் மலேசிய இந்தியர்கள் தீவிரவாதத்தில் ஈடுபடமாட்டார்கள். அதில் நம்பிக்கையும் இல்லை."

வழிபாட்டுக் கூட்டங்கள் ஒரு புறம், கருத்துக் கணிப்பு இன்னெரு புறம், சவடால் தலைவரின் நக்கல் நையாண்டி எரிச்சல் கலந்த பல்சுவை பேச்சு வேறொருபுறம் என்று நாட்கள் ஓடின.
நாட்டின் நிலைத்தன்மைக்கும் பாதுகாப்பிற்கும் அச்சுறுத்தலான வர்கள் என்ற காரணத்திற்காக 13.12.2007 தேதியன்று இன்ராஃப் முன்னணியினரான
1. பொன்னசாமி உதயகுமார், வயது 46, இன்ராஃப்பின் சட்ட ஆலோசகர்.
2. மலையாளம் மனோகரன், வயது 46, இன்ராஃப்பின் சட்ட ஆலோசகர்
3. இராமசாமி கெங்காதரன், வயது 40, இன்ராஃப்பின் சட்ட ஆலோசகர்
4. வீரமான் கணபதிராவ், வயது 34, இன்ராஃப்பின் சட்ட ஆலோசகர்
5. கிருச்ணன் வசந்தகுமார், வயது 34, இன்ராஃப்பின் ஒருங்கிணைப்பாளர்
ஆகிய ஐவர் உள்நாட்டுப் பாதுகாப்புச் சட்டத்தின் 1960, பிரிவு 8(1)இன் கீழ்க் கைது செய்யப்பட்டனர்.
இன்ராஃப்பின் தலைவர் வக்கீல் பொன்னுசாமி வேதமூர்த்தி, அச்சமயம் போராட்டத்திற்கு ஆதரவு திரட்ட வேண்டி வெளி நாடு சென்றிருந்ததால் அவர் பெயர் கைதுப் பட்டியலில் இடம் பெறவில்லை.

உள்நாட்டுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் பேரா மாநிலத்தில் தைப்பிங் நகரை அடுத்து அமைக்கப்பட்டுள்ள தடுப்பு முகாமின் காவலில் வைக்கப்பட்டுள்ளவர்களை விடுதலை செய்ய வேண்டு மென்று அரசாங்கத்திற்கு வேண்டுகோள் விடுப்பதும், அவர்கள் விடுதலை செய்யப்படும் வரை ஓயப்போவதில்லை என்றும் முழக்கமிட்டு தேர்தல் தோல்விக்குப் பின் ஆயிரம் கதைகள் பேசும் சாமிவேலு, அவ்வய்வரும் கைது செய்யப்பட்டபோது என்ன சொன்னார் என்பது நீங்கள் கட்டாயம் தெரிந்திருக்க வேண்டிய ஒன்றாகும்.

''நாடு அமைதியாக இருப்பதற்கு இன்ராஃப்பின் ஐந்து முக்கிய தலைவர்களும் உள்நாட்டுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டது சரியான நடவடிக்கையாகும்".
மற்றொரு நிகழ்ச்சியில் பின்வருமாறு உதிர்த்திருந்தார்:

''இந்த நாடு அமைதியில்லாத நாடு என உலகுக்குப் படம் பிடித்துக் காட்டவும், இந்நாட்டுப் பாதுகாப்பிற்குக் குந்தகம் விளைவிக்கவும் முயன்ற தலைவர்களைக் கைது செய்தது, அரசு செய்த ஒரு தைரியமான நடவடிக்கை."

இவ்வகை அரசியலுக்கு என்ன பெயரிடுவது என்று நீங்களே முடிவு செய்யுங்கள்.

அரசு சார்பற்ற அமைப்புகளைச் சேர்ந்த மற்றொரு குழுவினர் பிரதமரைச் சந்தித்துப் பேசினர். அவ்வமைப்புகளின் பொறுப்பாளர் களில் பத்துமலை தேவஸ்தானத்தின் தலைவரும் அடக்கம். சாமி வேலுவும் பங்கேற்றிருந்தார்.

இச்சந்திப்பைத் தொடர்ந்து, பிரதமர் இலாகாவில் துணையமைச் சராக இருக்கும் மாண்புமிகு கேவியஸ் (தமிழர்) அவர்கள் கட்சி நிகழ்ச்சி ஒன்றில் இவ்வாறு பேசினார்:

''சாமி கும்பிட வந்தவர்களை வெளியே போகவிடாமல் இரும்புக் கேட்டைப் பூட்டிப் போலீசாரை வரவழைத்தவர்கள்தான் இந்திய சமுதாயத்தின் பிரச்சினைகளைத் தீர்க்கப்போகிறார்களா? பத்து மலையில் போலீசார் நுழைந்திருக்கிறார்கள். இவர்களை நுழைய அனுமதித்தது யார்? இரும்பு கேட்டைப் பூட்டி மக்கள் வெளியேறிவிடாமல் போலீசாரை வரழைத்தவர்கள் இவர்கள்தான்.

ஆனால், இன்று இவர்கள் சமுதாயம் எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்து அரசாங்கத்திடம் பேசி இருப்பதாகச் சொல்வது வேடிக்கையாக இருக்கிறது. இப்படிப்பட்ட சமுதாயத் தலைவர்களை நாம் தூக்கி எறியனும். இவங்கதான் சமுதாயத்திற்காகப் போராடப் போகிறார்களா? பத்துமலை தைப்பூச உண்டியல் பணம், சிறி மகா மாரியம்மன் ஆலய வசூல், கோர்ட்மலை பிள்ளையார் ஆலயத்தின் வசூல் ஆகியவற்றைக்கொண்டு இந்தியச் சமுதாயத்திற்கு எவ்வளவோ செய்திருக்கலாம். ஆனால் அப்படிச் செய்யவில்லை. இவர்கள் சமுதாயத்தின் மேம்பாடு குறித்துப் பேசுகிறார்கள். இந்தப் பணம் சமுதாயத்திற்குக் கொடுக்கப்பட்டிருந்தால் பல பிரச்சினைகள் தீர்க்கப்பட்டிருக்கும்."

எதிரி போர்வைக்குள்தான் இருக்கிறான் என்பதனை மலேசிய இந்தியர்களில் பெரும்பான்மையினரைப் புரிந்துகொள்ளச் செய்தது நவம்பர் பேரணியாகும்.
மலேசியத் தமிழர்களின் பரிதாப நிலைக்கு மலாய்க்காரர்களைப் பெரும்பான்மையாகக்கொண்ட அரசாங்கம் மட்டுமே காரணமல்ல. கூடவே அடிமைப் புத்தி கொண்ட இந்திய வம்சாவளி அரசியல் தலைவர்களும்தான்.

இந்திய சமூகத்துக்குச் சேவையாற்றப் பேயாய் அலைந்து கொண்டிருப்பதாக சாமிவேலு பறைசாற்றிக்கொள்வதுண்டு. மலேசியாவில் 40,000க்கு மேற்பட்ட இந்தியர்களுக்குப் பிறப்புப் பத்திரம் இல்லை. அடையாள அட்டைக்காகவும் குடியுரிமைக் காகவும் சுமார் 70,000 இந்தியர்கள் காத்திருக்கின்றனர். இக்குறைபாடுகளால் அவர்கள் தங்கள் வாழ்க்கையில் பெரும் இன்னல்களை அனுபவிக்கின்றனர். இவ்வுண்மைகள் பேய்க்குத் தெரியாது என்பதுதான் அதிசயம்.

இபிக்குப் பின் முதன்முதலாகச் சொல்லத்தக்க பல நிகழ்வுகள் நடைபெற்றுள்ளன.

ஸ்ரெய்ட் டைம்சு நாளிதழுக்குப் பேட்டியளித்த சாமிவேலு, "நாடு முழுவதும் உள்ள தமிழ்ப் பள்ளிகளில் கடுமையான ஆசிரியர் பற்றாக்குறை நிலவுகிறது. வரும் பள்ளி ஆண்டு தொடங்குகிறபோது குறைந்தது 350 முதல் 400 ஆசிரியர்கள் வரை நிரப்பப்பட வேண்டும்," என்று சொல்லிக்கொண்டு திரிகிறார். இது தேசிய ஆசிரியர் பணியாளர் சங்கத்தின் பொதுச்செயலாளர் லொக் இம் பெங் (சீனப் பெண்மணி) அவர்களின் அறிக்கை கடந்த டிசம்பர் மாதம் தினசரியில் வெளிவந்த பிறகுதான் அவருக்குத் தெரிய வந்துள்ளது.

மக்களின் மௌனம் நிறைந்த சகிப்புத்தன்மை எதற்காகவோ விழிப்போடு காத்து நின்றதைப் பேரணிக்குப் பின் நடைபெற்ற சம்பவங்கள் புலப்படுத்துகின்றன.

"இந்நாட்டில் உள்ள இந்தியர்கள் மலேசிய அரசாங்கத்தால் இன அழிவுக்கு உட்படுத்தப்படுகிறார்கள் என்ற பச்சைப் பொய்யை இந்து உரிமை நடவடிக்கைக் குழு கட்டவிழ்த்து விட்டிருக்கிறது. நான் உண்மையிலேயே ஆத்திரம் அடைந்திருக்கிறேன். நான் அவ்வளவு எளிதில் சினமுற மாட்டேன். ஆனால் இந்தப் பச்சைப் பொய்யைச் சகித்துக்கொள்ள முடியவில்லை. இன அழிவு என்பது போஸ்னியாவைப் பார்த்து நாம் தெரிந்துகொள்ள வேண்டும். செர்பியர்கள் கொல்லப்பட்டபோது போஸ்னியர்களை அந்நாட்டிலிருந்து முற்றாகத் துடைத்தொழிப்பதற்கு அவர்கள் என்னென்ன செய்ய முடியுமோ அத்தனையும் செய்தார்கள். ஆனால் நாம் இங்கு அப்படியொரு செயலைச் செய்யவும் இல்லை. செய்ததும் இல்லை."

இப்படிச் சொன்னவர் பிரதமர் மான்புமிகு அப்துல்லா படாவிதான்.

இசா சட்டத்தில் எழுபதுகளில் மூன்றாண்டுக் காலம் தடுப்புக் காவலில் இருந்த பழம்பெரும் தொழிற்சங்கவாதி தியாகராஜா இதற்குச் சொன்ன மறுமொழி: "இவர் பட்டியலிட்டது மட்டும்தான் இன அழிப்பிற்கான வழிமுறை என்று இவருக்கு யார் சொன்னது? திபெத்தில் அன்றாடம் நடக்கும் இனக்கலப்பையும் பண்பாட்டு ஒடுக்குதலையும் இன ஆழிப்பு என்ற வரையறைக்குட்படுத்துவது என்ன பாவமா? தாய்மொழிக் கல்விக்கான வாய்ப்புகளைக் குறைப்பதையும், வழிபாட்டுத்தலங்களை இடித்து அப்புறப்படுத்து வதையும், பல்கலைக் கழக நுழைவு, அரசாங்க உத்தியோக வாய்ப்பு என்பனவற்றில் ஓரங்கட்டப்படுதலையும், குறிப்பிட்ட இன இளைஞர் மட்டும் போலீஸ் லாக்கப்பில் மாண்டுபோவதை யும் நீண்ட கால நோக்கில் பார்ப்போமானால் இன அழிப்பின்பாற் பட்டவையே ஆகும்."

உள்நாட்டுப் பாதுகாப்புச் சட்டம் விதி 73இன் கீழ் சந்தேகத்திற் குரிய மனிதர்களை 60 நாட்களுக்குக் காவலில் அடைத்துவைத்து விசாரணை செய்ய போலீசாருக்கு அதிகாரம் உள்ளது. அதன்பின் போலீசார் வழங்கும் பரிந்துரையின் பேரிலேயே சம்பந்தப்பட்டவர் களை இரண்டாண்டுகள் வரை தடுப்பு முகாமில் வைக்க உள்துறை அமைச்சர் ஆணை பிறப்பிக்க முடியும்.
ஐவர் கைதில் இந்த அடிப்படைகள் ஏதும் பின்பற்றப்படவில்லை. உரிமைகள் அற்ற இடத்தில் சனநாயகம் கேலிக் குரியதாவது இவ்வாறுதான்.

நிலைமை இவ்வாறு அல்லோலப்பட்டுக் கொண்டிருந்த சூழலில்தான் அதிர்ச்சிக்குள்ளாக்கிய அந்தச் சம்பவம் நடந்தது.

வழக்கம்போல் தைப்பூச நாள் வந்தது. கோயிலுக்கும் தெய்வங்களுக்கும் மட்டுமே முதன்மை தரும் தீவிர மதப்பற்றுள் ளவர்கள் என்று சுயமரியாதைக்காரர் களாலும் சீனர்களாலும்

மலாய்க்காரர் களாலும் கருதப்படும் தமிழர்கள் "பத்து மலை தைப்பூசப் புறக்கணிப்பு" செய்தது தான் அது.
அரசுக்குத் தமிழர்கள் காட்டிய அசலான எதிர்ப்புணர்வு.

மலேசிய இந்தியர்களுக்கு அனைத்து உரிமைகளையும் சலுகைகளையும் அரசு வழங்க வேண்டும் என்பதுடன் உள் நாட்டுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டிருக்கும் தங்களை நிபந்தனையின்றி விடுதலை செய்ய வேண்டும் என்றும் அந்த ஐவரும் 20ஆம் நாள் காலை ஏழு மணிக்கு உண்ணா நோன்பு போராட்டத்தைத் தடுப்புக் காவலில் தொடங்கினர்.
பத்துமலையில்தான் மக்கள் கோயில் புறக்கணிப்பு. மற்ற கோயில் களில் எப்போதும்போல் கூட்டம் பொங்கி வழிந்தது.

நாட்டில் பல்வேறு பிரச்சினைகள் தலைதூக்கி நின்றபோதும், "மக்களுக்களித்த வாக்குறுதிகளை தேசிய முன்னணி நிறை வேற்றி இருப்பதால் தேர்தலில் மிகப்பெரிய வெற்றியைப் பெறு வோம்," என்று கூறி பிரதமர் தேர்தலைச் சந்தித்தார்.

புரையோடிப்போன தேசிய முன்னணி ஆட்சியின் மேல் ஏற்பட்ட வெறுப்பும், டாக்டர் மகாதிரால் ஓரினப் புணர்ச்சியாளர் என்று குற்றம் சாற்றப்பட்டு பதவி நீக்கம் செய்யப்பட்டுச் சிறையிலும் தள்ளப்பட்ட முன்னாள் துணைப்பிரதமர் அன்வர் இப்ராஹிம் சிறை மீண்ட பின்னர் இந்தியர்களோடு கொண்ட அணுக்கத் தொடர்பும், இபிக்கு முன் உதயகுமார் குழுவினருடன் சமூக நீதிக் கட்சி, அதாவது மக்கள் நீதிக் கட்சி இணைந்து செயல் பட்டமையும், இன்ராஃப் பேரணிக்குப் பின் நாடு முழுமையும் முன்னெழுந்த எழுச்சியின் நியாயமும், அன்வரின் அனுபவமும் நம்பகத்தன்மையும் தேர்தலில் நல்ல பலனைத் தந்தன.

தேர்தலுக்கு முன்னர் அன்வர் கூறியது: "இந்திய சமுதாயத் தினரிடத்தில் புதிய உத்வேகத்தை அரசியல் ரீதியாகக் காண முடிகிறது. 50 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த மாற்றம் ஏற்பட்டுள்ளது. இன்றைய சூழ்நிலையில் இந்திய சமுதாயம் முழுமையான மனத் தோடு அரசியல் மாற்றத்திற்குத் தயாராகிவிட்டதைக் காண முடிகிறது. இதன் முக்கிய காரணங்களில் ஒன்று இன்ராஃப் தலைவர்களும் அவர்களின் போராட்டமும் ஆகும்."

பிரதமர் அப்துல்லா படாவியைத் தவிர ஏனையோர்க்கு இந்த உண்மை தெரியவே செய்தது.

தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டபோது நாடு மீண்டும் ஒருமுறை அமர்க்களப்பட்டது.

மலேசிய வரலாற்றில் முதன்முறையாக ஆளும் கூட்டணி மூன்றில் இரண்டு பங்குப் பெரும்பான்மையை இழந்து சாதாரண வெற்றியைப் பெற்றது.

28 ஆண்டுகள் கோலோச்சிய சாமிவேலு காணாமல் போயிருந்தார். 9 நாடாளுமன்றத் தொகுதிகளில் போட்டியிட்ட மஇகா 3இல் மட்டுமே தலை காட்டியது. அதேபோல் 20 சட்ட மன்றத் தொகுதிகளில் 7 இடங்களையே தக்க வைத்துக்கொண்டது.

முந்தைய பொதுத்தேர்தலில் 199 இடங்களைப் பெற்றிருந்த ஆளுங் கூட்டணி இப்போது 136 இடங்களை மட்டுமே பெற்றது. முன்பு 19 இடங்களில் வென்ற எதிர்க்கட்சிகள் இப்போது 83 நாடாளுமன்ற இடங்களைப் பிடித்தன.

எதிர்க்கட்சிக் கூட்டணி ஆளும் பினாங்கு மாநிலத்தில் துணை முதல்வராக அரசியல் விஞ்ஞானப் பேராசியரான தமிழர் முனைவர் இராமசாமி பதவி ஏற்றிருக்கிறார்.
இவையெல்லாம் நினைத்துப்பார்த்திராத சம்பவங்கள்.

சில பத்து ஆண்டுகளாக மலேசிய அரசியல் களத்தில் "பீப்பிள்ஸ் பவர்" என்றும் "குவாசா ராக்யாட்"(மலாய் மொழி) என்றும் இடதுசாரியினரால் முழக்கப்படுவதுதான் மக்கள் சக்தி என்னும் மந்திரம். இந்தியர்கள் மத்தியில் இச்சொற்றொடரை வழக்கப்படுத்தியவர்கள் இன்ராஃப் அணியினர்தாம்.

பல்லாயிரக்கணக்கில் தமிழ் மக்களை அணி திரட்டித் தங்கள் உரிமைகளுக்காகப் போராடுவதென்பது கற்பனையாயிருந்த சூழலில் செயல்திட்டம் வகுத்துத் தங்கள் மனக்கசப்பை, நிறைவின்மையை ஆள்வோருக்குப் புரிய வைத்ததில் இப்பேரணி தன் இலக்கை எட்டிவிட்டது.

பேரணி உருவாக்கிய எழுச்சி தமிழ்ப் பள்ளிகளில் பிள்ளைகளின் எண்ணிக்கையாகப் பரிணமிக்கிறது.

தேர்தல் காலத்தில் சுழன்றுச்சுழன்று பணி செய்த "பாஸ்" எனக் கூறப்பெறும் பான் இஸ்லாமிக் பார்ட்டியின் மலாய்க்கார முஸ்லிம் முதியோரும் இளையோரும்தான் "மக்கள் சக்தி" என்று தமிழில் விண்ணதிர முழக்கமிட்டவர்கள் என்பதனை சகவாழ்வின் தோழமைக் குறியீடாக நினைவில் கொள்ளவேண்டும்.

ஐவரின் விடுதலை பற்றி ஓய்வு கொடுக்கப்பட்ட சாமிவேலு பேசுகிறாரே என்கிறீர்களா?

வெளிநாட்டில் இருக்கும் இன்ராஃப் தலைவர் வேதமூர்த்தி தன் பத்திரிக்கை குறிப்பில் சொல்கிறார்: "சாமிவேலுவின் தயவில் சிறை மீள்வதை உதயகுமார் விரும்பமாட்டார்."

இன்ராஃப் முன்னணியினரோடு இணைந்திருந்த சிலரும் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதால் ஐவரும் சிறிது காலத்துக்குப் பின்னாவது விடுதலையடைவார்கள் என்பது திண்ணம்.

"கலகம் ஒப்புக்கொள்ளப்படும்போது அதுவே புரட்சியாகப் போற்றப்படுகிறது. புரட்சி தோற்கும்போது கலகமாக ஒடுக்கப்படுகிறது," என்பது சமூகச் சிந்தனையாளரின் புலப்பாடு நிறைந்த வரிகள்.

நவம்பர் 25 பேரணியைப் புரட்சியாகவோ கலகமாகவோ பார்ப்பதை விட விழிப்புற்ற சமூகத்தின் புத்தெழுச்சியாகப் போற்றிக் கொள்வது பொருத்தமானது.

Pin It