இந்த நூல் நாகசுர முன்னோடிகளுள் தலைசிறந்தவரான இராஜரத்தினம் பிள்ளை அவர்களைப் பேசுவதுடன், நாகசுரத் தைப் பற்றியும் பேசுகிறது. இராஜரத்தினம் பிள்ளையின் அரிய புகைப்படங்களைச் சேகரித்துத் தந்திருப்பதுடன் முகவீணை, திமிரி நாயனம் என்னும் நாகசுரப் பரிணாமத்திற்கு ஆதாரமாயுள்ள, சிதம்பரம் நடராஜர் கோயில் சிற்பங்களையும் புகைப்படங்களாகத் தந்துள்ளது. மறைக்கப்பட்டிருந்த இசை வரலாற்றின் ஒரு பக்கத்தினைப் பதிவு செய்கின்றது.

தமிழக / தென்னிந்திய இசை வரலாறு மிகவும் சிக்கல் நிரம்பியது. தவறான அணுகுமுறையில் தப்பும் தவறுகளும் மிகுந்தது. திருகல் முருகலானது. அடிப்படை ராகங்கள் 72, இல்லை 32தான் என்பதிலிருந்து எதிரும் புதிருமான நிலைபாடுகள் கொண்டது. இவற்றுடன், பேசப்படாது மௌனம் சாதித்த நிலையும் உண்டு.

குறிப்பாக, இசை வேளாளர்களின் பங்கு தென்னிந்திய இசை வரலாற்றில் இருட்டடிப்பு செய்யப்பட்டிருக்கும். அவர்கள் பேணிக் காத்த சின்ன மேளம் என்னும் பரதம் மேட்டுக்குடி யினரால் எடுக்கப்படும்; ஆனால் தேவதாசி முறை ஒழிப்பில் இசைவேளாளரும் ஒழிக்கப்படுவதற்கான முயற்சி தொடங்கும். பெரிய மேளம் என்னும் நாகசுரம் பிற வகுப்பாரால் தீண்டப்படாது ஒதுக்கியே வைக்கப்படும் இன்று வரையும். அபூர்வமாக ஒரு சின்ன மௌலானாவும் திருவிழா ஜெயசங்கரும் தென்படுவார்கள்.

இதில் சுவையானது, இது பற்றி ராஜாஜியும் பேசியிருப்பதுதான். காரணகர்த்தாவே விளைவு குறித்து நொந்துபோவது மிகமிக சுவைமுரண் கொண்டதல்லவா! ""மிக உயர்வான இக்கலை நம்நாட்டில் ஒரே ஒரு சாராரால் மட்டுமே கையாளப்படுவதை உணரும்போது மிகுந்த வருத்தம் ஏற்படுகிறது. விரைவில் இந்த வாத்தியத்தை எல்லா வகுப்பினருமே நன்கு கற்றுத் தேற வேண்டும்...” (பக். 104).

நாகசுரத்தின் இன்றைய வடிவமைப்புக்கும் கீர்த்திக்கும், காருகுறிச்சி அருணாசலம் என்னும் கலைஞன் உருவாக்கத் திற்கும் அடிப்படையாக இருந்த இராஜரத்தினம் எப்போதும் போற்றிய கலைஞர்கள் - நாகசுரத்தில் - பக்கிரி நாயனக்காரர், மன்னார்குடி சாரநாத நாயனக்காரர் மற்றும் திருச்சேறை முத்துகிருஷ்ணன். அதுபோலவே, வீணை தனம்மாள், எஸ்.ஜி. கிட்டப்பா, மணிக்கொடி எழுத்தாளர்கள் முதலானவர்களிடம் அவர் நெருக்கமாக இருந்திருக்கிறார். கலைஞனின் கர்வத் துடனும் உற்சாகத்துடனும் உல்லாசத்துடனும் வாழ்ந்திருக்கிறார்.

கேலி கிண்டலுடன் சந்திப்புகளைக் கலகலப்பாக்கி இருக்கிறார். எது எப்படி இருப்பினும், இசை என்று வரும்போது, இறுதி மூச்சு வரையும் விடாத சாதகமும், முழுமையான அர்ப்பணிப்பும் கொண்டு, புதுப்புது உருவங்களில் ராகங்களை இழைத்திடுவதில் மட்டும் விட்டுக்கொடுத்தல் கிடையாது.

செம்பொன்னார் கோயில் ராமசாமிப்பிள்ளை, மதுரை பொன்னுசாமி நாயனக்காரர், மன்னார்குடி பக்கிரியா பிள்ளை போன்றோரின் இசை கேட்டு, உத்வேகம் கொண்டு, அவற்றை அப்படியே திருப்பித் தந்துவிடாமல், தன் மனோதர்மப்படி ராகங்களைப் படைத்திருப்பது ராஜரத்தினத்தின் தனிச்சிறப்பாகும். வாய்ப்பாட்டில் அவர் பெற்றிருந்த பயிற்சி இதற்குப் பெரிதும் துணை புரிந்துள்ளது. வீணை தனம்மாளின் வீணை இசையிலிருந்து இசை நுட்பங்களை உள்வாங்கிக்கொண்ட அவர், "எனது கடைசியான குரு ஸ்ரீமதி வீணை தனம்மாள்” என்று குறிப்பிட் டுள்ளார். ராஜரத்தினத்தின் குரலை "ஒரு சங்கிலிருந்து வெளிவரும் நாதம் போல் ஒலிக்கிறதுஃ என்கிறார் எழுத்தாளர் கு. அழகிரிசாமி.

"நாதசுரம்” என்னும் பெயர் இன்றைய வழக்கு. "நாகசுரம்” என்பதே "நாதசுர’மாகியுள்ளது. "நாகசுரம்” என்பது "நாகசாரம்” என்பதனின்றும் பிறந்தது. இதில் "நாக’ என்பது ஏன் இடம் பெற்றது? நாகர்கள் (பழங்குடியினர்) பயின்ற கருவி என்னும் பொருளில் "நாக சின்னம்” "நாகசாரம்” என்னும் வழக்குகள் வந்தன என்கிறார் ஆசிரியர் (பக்.7). "நாக’ என்பது வேறு பொருள்களிலும் வழங்கியுள்ளதை தமிழ்ப் பேரகராதியில் காணமுடிகின்றது. "நாகசம்பங்கி’ என்பதில் "நாகஃ என்பது சிறு இலைகளைக் குறிக்கின்றது; "நாககேசரம்” என்றால் சிறுநாகப்பூ. இன்னொரு பொருளமைதி: "நாகம்” என்பது ஒரு குறிஞ்சிப் பண்ணைக் குறிக்கின்றது; "நாகணவாய்ப் புள்” என்றால் மைனா.

"நாக செண்பகம்” என்பதற்கு ‘common yellow trumpet flowered tree’ என்று விளக்கம் தரப்படுகிறது. இந்த உதாரணங்கள் மற்றும் விளக்கங்களிலிருந்து, நாகம் - நாக என்னும் சொல் முன்னொட்டுக்கு சிறிய-குறுகிய- இசை தொடர்பானது என்னும் பொருள்கள் உண்டென்று அறியலாம். ஆதலின் "நாகர்கள்” என்பதிலிருந்து பிறந்தது என்பதை விடவும், மேற்கொண்ட பொருளமைதி கொண்ட முன்னொட்டாகவே இடம்பெற்றுள்ளது என்பது பொருத்தமாக அமையும்.

"இசைக்கருவிகளால் புகழடைந்தவர் சிலர். வயலின் சவுடய்யா, புல்லாங்குழல் மாலி. ஆனால் இராசரத்தினம் பிள்ளையால் புகழ் அடைந்தது நாகசுரம்” என்று முன்னுரையில் எழுதுகிறார் நா. மம்மது. ஏற்கனவே வீணை தனம்மாள் பற்றியும் கே.பி. சுந்தராம்பாள் பற்றியும் நூல்கள் எழுதியுள்ள திரு. ப. சோழ நாடனின் இன்னொரு வரலாற்றுப் பதிவு இந்த நூலாகும். முக்கிய மான நாகசுர மற்றும் தவில் கலைஞர்களது பட்டியலுடன் வெளி வந்துள்ள இந்நூல், ஒவ்வொரு நூலகத்திலும் மட்டுமல்லாமல், ஒவ்வொரு வாசகனிடத்தும் இருக்கவேண்டிய ஒரு பிரதியாகும்.

நாகசுர சக்ரவர்த்தி திருவாடுதுறை டி.என். இராஜரத்தினம்பிள்ளை வரலாறு, ப. சோழநாடன், நிழல், 2005, பக். 120, விலை. ரூ.60.

Pin It