தவசிக்கருப்பசாமி எனப்படும் ஹரி கிருஷ்ணனின் முதல் கவிதைத் தொகுப்பு இது. ‘மணல்வீடு’ எனும் காலாண்டிதழை நடத்திவரும் இவருக்கு மற்ற எல்லாவற்றையும்விட, கூத்துக் கலைஞர்களைக் கொண்டாட வேண்டும்; சாம்பல் திரைக்குள் ஒடுங்கியிருக்கும் அற்புதக்கலைஞர்கள் மீது வெளிச்சம்பட வேண்டும்; அவர்தம் அருமையும் பெருமையும் ஊர் அறியவேண்டும், உலகறிய வேண்டும். இதற்கென தன்னை அர்ப்பணித்துள்ள ஹரிகிருஷ்ணன் கவிதைகளும், கூத்துக் கலைஞர் களை சுற்றி வருவதாக இருக்கின்றன. நமக்குப் புதியதொரு சாளரம் திறக்கப்படுகிறது.

thavasikaruppusamyகிராமிய வாழ்விலும் அடிமட்ட நிலைக்கு தள்ளப்பட்டு, அதிலும் தெருக்கூத்து ஆடப் போய் விடும் ஒருவருக்கு அடையாளம் என்ற ஒன்றோ அங்கீகாரம் என்ற ஒன்றோ வாய்ப்பதில்லை. வறுமையையும் தாங்கிக் கொள்ள வேண்டும். தங்கள் அகஉலகத்தை வெளியிட சந்தர்ப்பமின்றி தங்களுக்குள்ளேயே குமைந்து கொண்டிருப் பவர்கள் அவர்கள்.

இச்சூழலில் ‘தூங்கும் கவி/ விழித்த கவிதை’ என்பதாக தவசிக்கருப்பசாமி கலைஞர்களின் மனங்களைப்பேச வைக்கிறார்; அவர்தம் அந்தரங்க வாழ்விலிருந்து நாடக மேடை நையாண்டி வரை பகடி செய்கிறார். தனிப்பட்ட வாழ்க்கை வேறு, கூத்து வாழ்க்கை வேறு என்ற பேதமில்லை. ஒன்றைப் பேசும்போது மற்றொன்று சேர்ந்து கொள்கிறது. அதுவும் எழுத்து மரபு சார்ந்த இலக்கியப் பாத்திரங்களோ / விவரிப்புகளோ அல்லாமல், வாய்மொழி மரபு சார்ந்த / கூத்து வடிவம் சார்ந்த நிகழ்வுகளும் பாத்திரங்களும்தான் தொடர்புபடுத்தப்படுகின்றனர்.

“எம் தாயொரு வேசை நானொரு கன்னிமை கழிந்த படைப்பு

... கறந்த பாலுமெச்சில் பிறந்த குழவியுமெச்சில்”

என்று தானே தன்னைத் திறந்து காட்டுகிறது ஒரு பாத்திரம். எல்லாம் சிதைந்துவிட்ட நிலையில் பாதுகாக்க / போற்ற எந்தப் புனிதமும் இல்லை. மீறல்கள் சாதாரணம். அப்போது எதை மறைக்க/ யோசிக்க. ஒன்றுகூட இல்லை என்பதுதான் அப் பட்டமாயிருக்கிறது.

“குலைகாய்ந்த ஐவண்ணப் புரவிகள் கொள்ளை மறுத்து

நிறை வெள்ளாமைகளில் மேய்கின்றன

ஆரூட்டு குதுர ராசாவூட்டு குதுர

சேரி சேரி மேஞ்சிக்க...”

என்று பூடகமாகக் குறிப்பிடப்பட்டது. ஆளுமைச் சிதைவுகளையும் அகச்சிதைவுகளையும், வாய் மொழி அங்கதத்தில் பறையடிப்பதாக.

சதா நெருக்கடியும் அவலமும் நிறைந்த அன்றாடப் பிழைப்புக்கும் அல்லாடும் ஒரு கூத்தர்

‘நிறைந்த சபையில் உசுருப்போக கொடுத்தா வைத்திருக்கிறேன்’

என்று வெதும்புகிறார்.

இன்னொரு பக்கம்,

“காக்கா பறக்காது கரிக்குருவி நாடாது

ஆரவல்லி பேரைச் சொன்னால் அறுத்ததலை கொக்கரிக்கும்

சூரவல்லி பேரைச் சொன்னால் சுட்டதலை கொக்கரிக்கும்”

என்று பெண்ணின் குரல். வாய்மொழி இலக்கி யத்தில் ஓங்கி ஒலிக்கின்ற பெண்ணின் குரல். எழுத்து இலக்கியத்தின் ஆண்குரலுக்கு பதிலடி யாக வரும் நாட்டார் மரபுமூலம் வெடிக்கும் பெண்ணின்குரல்.

“சூலி மயக்கம் சுடுகாட்டுஞானம் சிறிதுதூரம் ஊத்து பொத்து உடைப்பெடுத்து கொண்டுவிட்டது”

என்பது போன்று புதுப்புது பிரயோகங்கள் பரிச்சய மாகின்றன.

“சொக்கஞ்சேரு - கைலாசஞ்சேரு - சாமிபாதஞ்சேரு சொக்கஞ்சேரு - கைலாசஞ்சேரு - சாமிபாதஞ்சேரு ஆயிரம் லிங்கம் சாட்சி - தாலிக்கயிறு பத்திரம்”

என்று சேலம் பகுதிகளில் வெட்டியான் கூறும் வாசகத்தைச் சேர்த்து ஒரு பரிகாசத்தை தவசிக் கருப்பசாமி நிகழ்த்தும்போது, பண்பாட்டிழைகளி லிருந்து ஓரிழை நம்மிடம் வந்து சேருகிறது.

“அசந்து தூங்கி விழித்தெழுந்து கூத்துக்கு கிளம்பும வதியில் அன்றாடயிருட்டு தலைமேல் கவிழ்ந்திருக்கும்...”

என்பது கூத்து ஆளுமைகளைச் சித்திரப்படுத்தும் படிமமாகிவிடுகிறது.

“கொழுநன் காரி உமிழ்ந்த எச்சில்

மொகரக்கட்டையில் இன்னும் மணத்துக்கிடக்கிறது

எனக்கென்ன ராசாத்தி தங்கமாயிருக்கிறேன்...”

சதா அவலங்களை எதிர்கொள்ள வேண்டியவள் அவற்றையெல்லாம் அடுக்கிவிட்டு இப்படி முடிக்கும்போது வெளிப்படும் சுயஎள்ளல் நுட்ப மாயும் இருக்கிறது, போட்டு உடைப்பதாயும் இருக்கிறது.

***

சில கவிதைகளில் உள்ள மொழிவழக்கு/ பிரயோகம் வாசகனை நுழையவிடாமல் தடுக் கின்றது. மேலும், துல்லியமின்றி எங்கோ திரியும் தன்மையில் ஒன்றிரண்டு கவிதைகள். இந்தச் சிக்கல்களின்றி சரியான திசைவழியில் பயணிக் கையில் தவசிக்கருப்பசாமி நிறையவே கண்டறி கிறார். கிராமம் சார்ந்த எளிமை, சுட்டெடுக்கும் வறுமை, தெருக்கூத்துக் கலைஞர்களது உன்னதப் பாங்கு, வாய்மொழி மரபிலான வளமான மொழி, பரிகாசம் என்று. இவை வாசகனுக்கும் ஆச்சரி யத்தை ஏற்படுத்தி, கவனம் கொள்ள/ எதிர்வினை யாற்றவைப்பவைதான்.

வாய்மொழி இலக்கியம் சார்ந்து இயங்கும் என்.டி. ராஜ்குமார் எதிர்ப்பையும் கோபத்தையும் வெளிப்படுத்துகிறார் என்றால், தவசிக்கருப்ப சாமியோ பரிகசிப்பை மையப்படுத்துகிறார். வேறொன்றும் செய்ய இயலா நிலையில் பிரதானப் பாத்திரங்களை பகடி செய்து நகைச்சுவைக்கு உள்ளாக்கிவிடும் கோமாளியைப்போல/ கட்டியங் காரனைப்போல. ஒரு நிலையில், அங்கதமும் பரிகாசமும் நையாண்டியும்தான் கடுமையான விமர்சனமாய் நிற்பவை.

அழிபசி

ஆசிரியர்: தவசிக்கருப்புசாமி

வெளியீடு: மணல் வீடு

ஏர்வாடி, குட்டப்பட்டி அஞ்சல்,

மேட்டூர் வட்டம், சேலம் மாவட்டம் - 636453

விலை - 80.00/-

Pin It