மனிதர்களின் உலகில் பல்வேறு இணை முரண்கள் மாபெரும் இயங்கு சக்திகளாக வினைபுரிந்து கொண்டிருக்கின்றன. இரவு X பகல், உயர்வு X தாழ்வு, நன்மை X தீமை, கடவுள் X சாத்தான் முதலிய பலப்பல இணை முரண்களில் மனிதர்களுக்குத் தீராத சிக்கலாக நீடிப்பது இன்பம் X துன்பம் என்ற இணை முரண்தான். மனிதன் என்றால் யார் எனச் சுருக்கமாக வரையறுக்கச் சொன்னால், இன்பம் X துன்பம் என்ற இணை முரணின் விளையாட்டுப் பொம்மை எனச் சொல்லி விடலாம் போல் தோன்றுகிறது. புறநானூற்றுப் புலவர் பக்குடுக்கை நன்கணியார், இந்த இணை முரணைக் கீழ்க்கண்டவாறு அடுக்குகிறார்.

ஓர் இல்லத்தில் இறப்பு- அழுகை, அதே நேரத்தில் பக்கத்து வீட்டில் பிறப்பு- இன்பம். மற்றொரு வீட்டில் இணைந்து இருந்தவர்கள் பிரிகின்றனர்; அங்கே வீடு முழுக்க சோகம். அதற்குப் பக்கத்து வீட்டில் பிரிந்திருந்தவர்கள் கூடுகின்றனர்; எங்கும் மகிழ்ச்சி வெள்ளம்.

இவ்வாறு சொல்லிவிட்டு அந்தப் புலவர்,

"இன்னா தம்ம இவ்வுலகம்
இனிய காண்க இதன் இயல்புணர்ந்தோரே!” (புறம்-194)

என்று இறுதியில் இந்த உலகம் துன்பமயமானது என்றே முடிக்கின்றார்.

"பிறந்தோர் உறுவது பெருகிய துன்பம்”

எனச் சொல்லும் மணிமேகலை,

"அவலக்கவலை கையாறு அழுங்கல்
தவலா உள்ளந் தன்பால் உடையது
மக்கள் யாக்கை”

என்று யாக்கை சுமக்கும் உள்ளத்தையும் அந்த உள்ளத்தில் பெருக்கெடுக்கும் பல்வேறு வகையான கவலைகளையும் இனம்பிரித்துச் சொல்கிறது. சமஸ்கிருதத்தில் கூட "ஸ்ர்வம் துக்கமயம் ஜெகத்” என்றொரு வாசகம் உண்டு. நமது சமகாலக் கவிஞர் கண்ணதாசன் கூட, "கண்ணிலே நீரெதற்கு?” என்ற வினாவைக் கேட்டுவிட்டு, "காலமெல்லாம் அழுவதற்கு” எனப் பதிலும் கூறுகிறார். கருவறை தொடங்கிக் கல்லறை வரை தொடரும் மனிதனின் அழுகையைக் கவிஞர் வாலி,

"பாலுக்கு அழுவான் குழந்தையிலே - பின்
கூழுக்கு அழுவான் வறுமையிலே
நூலுக்கு அழுவான் பள்ளியிலே - பின்
மாலுக்கு அழுவான் இளமையிலே”

எனப் பலவாறு அடுக்கிவிட்டுக் கடைசியில் இவ்வாறு முடிக்கிறார்:

"எத்தால் இவனைத் தேற்றுவது? – அட!
எவர்தான் இவனை மாற்றுவது?
செத்தால் அழுகை நிற்கிறது - உடன்
மற்றவர் அழுகை கேட்கிறது.”

இவ்வாறு ஒட்டுமொத்த மனித வாழ்க்கையையே அழுகையின் வரலாறாகப் படம் பிடிக்கிறார்அந்தக் கவிஞர். ஆக, மனித வாழ்க்கையின் மையப் பிரச்சினையாக இருப்பது இந்தத் துன்பம்தான் எனப்படுகிறது. புத்தரின் வாழ்க்கையே இதற்குச் சான்று. எல்லோரும் துன்பத்திலிருந்து தப்பித்து ஓடவே முயலுகின்றனர்.

துன்பம் பெருக்கெடுத்தால் சிலருக்கு முகத்தில் தாடி பிறக்கிறது. சிலர் போதைப்பொருட்களால் துன்பத்தைச் சாகடிக்க முயன்று முடியாமல் போகவே நொந்து வெந்து செத்துப் போகின்றனர். வேறு சிலர் சூதாட்டம், குதிரைப் பந்தயம், பரத்தையர் வீடு என இடறி விழுகின்றனர். மற்றும் சிலர் "துன்பத்தை வெல்லுவது எப்படி?” எனப் புத்தகங்களைத் தேடிப் படிக்கின்றனர். மேலும் நகைச்சுவை மன்றங்கள், சிரிப்பு பட்டிமன்றங்கள், அரட்டை அரங்கங்கள் எனப் பல அமைப்புகள் மூலமாகத் துன்பத்தை மறக்கடிக்க முயலுகின்றனர். வசதி படைத்த வர்க்கத்தினர் ஜிட்டு கிருஷ்ணமூர்த்தி, ஓஷோ, சாயிபாபா, பங்காரு அடிகளார், சங்கராச்சாரியார், வேதாத்ரி மகரிஷி, அமிர்தானந்த மயி, யோகி ராம்சுரத்குமார், சிவசங்கர பாபா, கல்கி என ஞானிகளாகக் கருதப்படுபவர்களின் பேருரைகளில் தங்கள் புண்பட்ட மனத்திற்கு மருந்து தேடி அலைகின்றனர்.

பெருவாரியான ஏழை மக்கள் சாமியார்களின் மந்திர தந்திரங்களில் தங்கள் துன்பத்திற்கு விடுதலை கிடைக்காதா? என்று இரவு பகலாக வரிசையில் காத்துக்கிடக்கின்றனர். முதுமைக் காலத்தில் கோயில் கோயிலாகச் சுற்றிக் கடவுளோடு பேரம் பேசிப் பலியிடுகின்றனர். மொட்டை அடிக்கின்றனர். தங்கக் கட்டிகளை உண்டியலில் போடுகின்றனர். பக்திப் பாடல்களைப் பரவசமாகப் பாடுகின்றனர். சோதிடம், வாஸ்து என்று சரணடைகின்றனர். சூன்யம், மாயை போன்ற மயக்கும் தத்துவச் சொற்களால் தங்களது துன்பத்தைத் துடைக்க முயல்பவர்களும் உண்டு. "துன்பம் நேர்கையில் யாழெடுத்து நீ இன்பம் சேர்க்க மாட்டாயா?” என்றும் "துன்பக்கடலில் நீந்தும்போது தோணியாவது கீதம்” என்றும் கலை இலக்கியங்கள் மூலமாகவும் துன்பத்தைத் துடைக்கப் பார்க்கிறார்கள். இன்னும் பில்லி சூனியம், தாயத்து, கல் மோதிரம், எண் சாஸ்திரம் முதலியவை மூலமாகவும் துன்பத்தை விரட்ட முயல்கின்றனர். எதுவும் முடியாத பட்சத்தில் தூக்க மாத்திரைகளை விழுங்கித் துக்கத்திலிருந்து தற்காலிகமாக மட்டுமே விடுதலை அடைகின்றனர். இப்படித் துன்பத்தை எதிர்கொள்ள எத்தனையோ வகையான முயற்சிகளை மேற்கொண்டாலும் மனிர்களுக்குத் துன்பத்திலிருந்து விடுதலை உண்டா?

இவ்வளவு கேள்விகளும் விசாரணைகளும் இங்கே விரிவாக முன்வைக்கப்பட்டது எதற்காக? திருவள்ளுவர் இதற்கு என்ன வழி சொல்லுகிறார் என்பதை ஆராய்வதற்காகத்தான்.

வள்ளுவருக்கும் இந்தத் துன்பம்தான் மனித இனத்தின் தலையாய சிக்கலாகப் பட்டிருக்கிறது. எனவேதான் "கடவுள் வாழ்த்து” என்று வரும் பகுதியிலேயே இடும்பை இல்லாமல் வாழ்வதற்கு வேண்டுதல் - வேண்டாமை இல்லாதவனின் அடியைச் சேர்ந்தொழுக வேண்டும் (குறள்-4) என்றும், தனக்கு நிகராக ஒருவரையும் சொல்ல முடியாத ஒருத்தரைச் சேர்ந்து வாழத் தெரியாமல் இருந்தால் மனக்கவலையை மாற்றிக்கொள்ள முடியாது என்றும் (குறள்-7) இரண்டு குறளில் பேசுகிறார். இங்கே கவலையைக் கடிவதற்கு அவர் காட்டும் வழி விருப்பு வெறுப்பற்ற, நிகரென்று யாரும் சொல்ல முடியாத நிலைக்குத் தன்னளவில் ஒவ்வொருத்தரும் உயர்ந்து கொள்ளும் கட்டத்தில்தான் விடுதலை சாத்தியம் என்பதாகும். "துன்பத்தை” ஒரு புறப்பொருளாகப் புனைந்து கொண்டு அதிலிருந்து தப்பித்து ஓடுவதற்கான வழிமுறைகளை வடிவமைப்பதன் மூலம், பலர் உழைக்காமல் சம்பாதித்துத் தங்கள் "பிழைப்பை” நடத்துவதற்கான எளிய முறையைக் கண்டுபிடித்துள்ளனர். இதை உணர்ந்த வள்ளுவர், கணியன் பூங்குன்றனார் போலத் "தீதும் நன்றும் பிறர் தர வாரா” என்ற பார்வையை உள்வாங்கியவராகத் தென்படுகிறார். துன்பம் என்பது வெளியே இருப்பதல்ல; நம் கூடவே பிறந்தது. சிரிப்பைப் போல, கோபத்தைப் போல, காமத்தைப் போல நாமிருக்கும் வரை நம்மோடு கூடவே வாழ்ந்து கூடவே அழிவது. அது ஒரு "மனோபாவம்”. அது ஓர் இயல்பு. இப்படிப்பட்ட புரிதல்தான் துன்பத்தை எதிர்கொள்ள உன்னதமான வழியெனச் சுட்டிக்காட்டுகிறார் வள்ளுவர்.

"இடுக்கண் அழியாமை” என்று ஓர் அதிகாரத்தையே அமைத்து இது குறித்து ஆராய்கிறார். "யார் துன்பக்குழியில் எளிதாக வீழ்ந்து மடிகிறார்கள்? என ஒரு புள்ளிவிவரம் எடுக்கிறார். அடைந்தோம், அடைந்தோம் என்று ஆனந்தப்படுபவர்கள்தான், இழந்தோம், இழந்தோம் என்று துன்பப்படுகிறார்கள் என்றொரு முடிவுக்கு வருகிறார். உடனே இப்படி ஒரு குறளை அமைக்கிறார்:-

அற்றோம்என்று அல்லல் படுபவோ பெற்றேம்என்று
ஓம்புதல் தேற்றா தவர்.” (குறள்-626)

இப்படியாகச் சிலபேரின் துன்பத்திற்குக் காரணத்தையும், அதைக் களைவதற்கான வழியையும் முன்மொழிகிறார். இரட்டை நிலையைக் கடப்பதுதான், துன்பத்தைக் கடப்பதற்கான ஒரே வழி என்கிறார். எனவேதான் மேலும் ஒரு குறளை அதேபோல் அமைக்கிறார்.

"இன்பத்துள் இன்பம் விழையாதான் துன்பத்துள்
துன்பம் உறுதல் இலன்” (குறள்-629)

இந்தக் குறள் நுட்பமான தளத்திற்கு நம்மை அழைக்கிறது. இந்த உலகத்தாரால் கட்டமைக்கப்பட்டு "இன்பமானவை” எனச் சில உலவி வருகின்றன. அப்படிப்பட்டவை தமக்கு நேரும்போது, அவற்றில் இன்பத்தை அனுபவிக்க விரும்பாமல், அதைக் கடந்த ஒரு மனநிலையில் தன்னை நிலைநிறுத்திக்கொள்ளும் ஆற்றல் கொண்டவன், துன்பம் வரும்போதும் அப்படியொரு கடந்த நிலையைக் கைவரப் பெறுவான் என அழகாகக் கூறுகிறார். ஆகத் துன்பத்திலிருந்து விடுதலை காண்பது என்பது, அதன் இணைமுரணான இன்பத்திலிருந்து விடுதலை பெறுவதன் விகிதாச்சாரத்தில் இருக்கிறது என்கிறார் வள்ளுவர். இவ்வாறு "இன்பத்தை” வென்றுவிடும்போது அந்த மனிதருக்குள் மற்றொரு "ஞானம்” பிறக்கிறது; அந்த "ஞானம்” என்ன? "துன்பம் இயல்பானது; இயற்கையானது; இந்த உடம்பின் குணங்களுள் ஒன்று; உடம்பெடுத்த யாரும் இத்துன்பத்தை அனுபவித்தே தீர வேண்டும்”, என்பதுதான் அந்த ஞானம். எனவேதான் இப்படி இரண்டு குறட்பாக்களை அமைக்கிறார்,

"இலக்கம் உடம்பு இடும்பைக்கு என்று கலக்கத்தைக்
கையாறாக் கொள்ளாதாம் மேல்.” (குறள்-627)

என்றும்,

இன்பம் விழையான் இடும்பை இயல்பு என்பான்
துன்பம் உறுதல் இலன்.” (குறள்-628)

இங்கே பெரும்பாலும் மனித சுயத்தின் தன்னலத்தினால் உருவாகும் உள்ளக் கலக்கமே, அச்ச உணர்வினால் உருவாகும் எண்ண ஓட்டங்களே, துன்பப் பெருக்கிற்கு ஏதுவாக அமைகின்றன. இதைத்தான் பாரதியார் "எண்ணக்கவலை” என்பார். நாம் அடைகிற பல கவலைகள் எண்ணங்களில் உருவாகும் "கற்பனை” வடிவங்களே என்பதை நமது அனுபவமும் நமக்குச் சொல்லுகின்றன. எனவேதான் "கலக்கத்தைக் கையாறாக் கொள்ளாதாம் மேல்” என அற்புதமாக அடையாளம் காணுகிறார். மேலும் இதையே விளக்குவதற்கு,

"வெள்ளத்து அனைய இடும்பை அறிவுடையான்
உள்ளத்தின் உள்ளக் கெடும்” (குறள்-622)

என்ற ஒரு குறளையும் எழுதுகிறார்; ""உள்ளம்” நினைத்தால் எதையும் இல்லாமல் ஆக்கலாம்; எதையும் உள்ளதாக்கலாம். உள்ளம் துளியைக் கடலாக்கிக் காட்டும்; கடலைத் துளியாக்கியும் காட்டும். எனவேதான் வள்ளுவர் அத்தகைய உள்ளத்தால், இன்னாததையே இன்பமெனக் கொண்டாடப் பழகிவிடுங்கள் என்கிறார்.

"இன்னாமை இன்பம் எனக்கொளின் ஆகும்தன்
ஒன்னார் விழையும் சிறப்பு.” (குறள்-630)

இவ்வாறு உள்ளத்தைப் பழக்க என்ன செய்ய வேண்டும்? உழைப்பு; உழைப்பு. இது ஒன்றுதான் மனிதர்களை ஈனக்கவலைகளில் இருந்து மீட்டெடுக்கும். அதற்கு உவமையாகத் தடைகள் பல வந்தாலும் தளராமல் தன் பாரத்தை இழுத்துச் செல்வதிலேயே "குறியாக” இருக்கும் "எருதினைக்” காட்டுகிறார் வள்ளுவர். இப்படிப்பட்ட வனிடம் தப்பித் தவறி துன்பம் வந்து மாட்டிக்கொண்டால், அந்தத் துன்பமே துன்பப்படுமென அழகாகக் கவிதை வரைகிறார் வள்ளுவர்.

"மடுத்தவாய் எல்லாம் பகடுஅன்னான் உற்ற
இடுக்கண் இடர்பாடு உடைத்து. (குறள்-624)

இவ்வாறு எதற்கும் அழியாமல் முயற்சியில் காலூன்றி நிற்பவரை நோக்கி "எறும்பும் துன்பமும் அடுக்கி வரும்” என்ற பழமொழிக்கேற்ப கோடித்துன்பம் கூட்டமாய் வந்தாலும், அந்தத் துன்பங்கள்தான் துன்பப்படுமே தவிர, அந்த மனிதர் அல்லர் என்கிறார் வள்ளுவர்.

அடுக்கி வரினும் அழிவு இலான் உற்ற
இடுக்கண் இடுக்கண் படும்.” (குறள்-625)

இவ்வளவு சொன்ன வள்ளுவர், இவற்றையும் மீறித் துன்பம் வந்தால் என்ன செய்வது? என்று வரும் வினாவிற்கும் பதில் சொல்லுகிறார். துன்பம் வரும்போது "சிரித்து விடுங்கள்”. அதைவிட அதை வெல்லுவதற்கு வேறு வழியில்லை என்று வழிகாட்டுகிறார்.

"இடுக்கண் வருங்கால் நகுக, அதனை
அடுத்தூர்வது அஃதுஒப்பது இல்.” (குறள்-621)

சிரிப்பினால் "முப்புரங்களை” அழிக்க முடியுமென்றால், துன்பத்தை ஏன் அழிக்க முடியாது என்பதுதான் வள்ளுவரின் கேள்வியாக இருக்கிறது; ஆனால் சிரிக்கிறவர்கள் சிவனைப் போல வேண்டுதல், வேண்டாமை கடந்தவர்களாக, தன்னளவில் வளர்ந்தவர்களாக இருக்க வேண்டும். தன்னை வளர்த்துக்கொள்ளாமல் தன் மனத்தை உயர்த்திக்கொள்ளாமல் துன்பத்தைத் துடைக்கத் தூய மார்க்கம் ஏதும் இல்லை என்பதுதான் வள்ளுவம். எனவேதான் காமத்துப் பாலில் ஒரு தலைவி, தம் நெஞ்சமே துன்பத்திற்குத் துணையாகாவிட்டால், வேறு யார்தான் துணையாக முடியும் எனக் கேட்கிறார்:-

"துன்பத்திற்கு யாரே துணையாவார் தாமுடைய
நெஞ்சம் துணையல் வழி” (குறள்-1299)

ஆக, துன்பத்தைக் கடக்க வெளியே வழிகள் ஆயிரம் காட்டப்படலாம்; அத்தனையும் வீண். மனம் மட்டுமே துன்பத்தை வெல்லத் துணையாக முடியும் என்பதுதான் வள்ளுவர் காட்டும் வழியாக இருக்கிறது.

துன்பத்தைக் கண்டு சிரித்துவிடச் சொன்னார். சிரிப்பையும் மீறித் துன்பம் தொடர்ந்தால் என்ன செய்வது? வள்ளுவர் அதற்கும் வழிகாட்டுகிறார். அந்தத் துன்பத்தை அனுபவியுங்கள் என்கிறார். "கொன்றால் பாவம் தின்றால் தீரும்” என்பதுபோல "வரும் துன்பத்தை வரவேற்று அனுபவித்துத் தீர்ப்பதால் முடிந்துவிடும்”. முடிவது மட்டும் அல்லாமல், தன்னைச் சுமந்து அனுபவித்த அந்த மனிதரையும் மேன்மைப்படுத்தும் என அழகான ஓர் உவமை மூலம் உரைக்கிறார்:

"சுடச்சுடரும் பொன்போல் ஒளிவிடும் துன்பம்
சுடச்சுட நோற்கிற் பவர்க்கு.” (குறள்-267)

இப்பொழுது என்ன தெரிகிறது? மனக்கவலையை மாற்றுவதற்குத் தனக்குவமை சொல்ல முடியாத அளவிற்கு உயர்ந்த நிலையை எட்ட வேண்டும் என்கிறார். அந்த உயர்ந்த நிலையை எட்டுவதற்குத் தங்கம் போன்று "துன்பம்” என்ற நெருப்பில் குளிக்க வேண்டும் என்கிறார்; இதுதான் வள்ளுவம் காட்டும் வழி. வாழ்க்கையின் முரணை முரணாகவே முன்வைக்கும் உன்னத சிந்தனை என்பது இதுதான். இத்தகைய இடங்களில்தான் வள்ளுவர் மாபெரும் தனித்த ஒரு தத்துவச் சிந்தனையாளராக வெளிப்படுகிறார்; எந்த ஒன்றிற்கும் "இதுதான் தீர்வு” என எதையும் முன்வைக்காமல், அதனுடைய பலதரப்பட்ட முகங்களையும் சிந்திப்பவர்கள் முன்னே விரித்துக் காட்டிவிட்டு "நிச்சயமற்ற தன்மையை” நோக்கி நம்மைக் காட்டிவிடுபவராக விளங்குகிறார். இந்த ஆழ்ந்த புலமைதான், அவரை எந்த ஒரு தனித்த கோட்பாட்டிற்குள்ளோ, தத்துவப் பிரிவிற்குள்ளோ, தனியொரு மதத்திற்குள்ளோ மடக்கிப்போட முடியாத மாபெரும் ஆற்றலை அவருக்கு வழங்கியிருக்கிறது; இந்தத் தன்மைதான் அவரது பனுவல்(பங்ஷ்ற்) காலம், இடம், இனம், மொழி கடந்து வரலாறுதோறும் புதுப்புது அர்த்தங்களை வாசகர்கள் தொடர்ந்து உற்பத்தி செய்து கொள்வதற்கான களமாக நின்று நிலவுவதற்கான வலுவைக் கொடுத்திருக்கிறது.

Pin It