சமயம் அல்லது மதம் என்பது மனிதர்களின் ஆன்மிக ஆற்றலை வளர்க்கும் புனிதப் பணியைச் செய்வதாக பெரும்பாலானவர்கள் கருதிக் கொண்டுள்ளனர். பௌத்தம், சமணம், கிறித்தவம் போன்ற சமயங்கள் அவற்றின் தோற்ற காலத்தில் மனிதர்களின் மன அமைதிக்கு வழிகாட்டுவதாக இருந்திருப்பதனையும் நாம் வரலாற்றில் அறிகின்றோம். தமிழ்நாட்டைப் பொறுத்தவரை அவைதிக சமயங்களான பௌத்தமும், சமணமும் அத்தகைய பணிகளைச் செய்துள்ளன. சங்க காலத்திற்குப் பின்னர் வந்த நூற்றாண்டுகளில் தமிழ் மக்கள் இந்த அவைதிக மதங்களின் ஊடாகத்தான் தங்களுடைய பண்பாட்டையும், கலாச்சாரத்தையும், இலக்கண, இலக்கியங்களையும் செழுமைப்படுத்தி வெளிப்படுத்தியுள்ளனர். பல்லவர்களின் ஆட்சியின் நடுப்பகுதியிலிருந்து வைதிக மதங்களான சைவமும் வைணவமும் செல்வாக்கு மிக்க சமயங்களாக வளரத் தொடங்கிவிட்டன. ஆனால் வைதிக சமயங்களின் வளர்ச்சி என்பது நிலவுடைமையின் வளர்ச்சியாகத்தான் இருந்தது. சமயங்களின் பெயரால் ஒருங்கிணைய வேண்டிய தமிழர்கள் வருணங்களாகவும் சாதிகளாகவும் பிளவுண்டு சிதைந்தனர். இந்தச் சிதைவே இங்கு பண்பாடாகவும், கலாச்சாரமாகவும், இலக்கிய வளர்ச்சியாகவும் காட்டப்பட்டன. இந்தக் கட்டமைப்பில் உருவானதுதான் இந்திய சநாதன சதுர்வர்ண சமுதாயம் என்பது.

இச்சமூக நிலையின் இன்னொரு இறுக்கம்தான் பக்தி இயக்கம் என்பது.

அன்றைய தமிழகத்தில் வளர்ந்து வந்த நிலவுடைமைச் சமுதாயத்திற்கு இயைபுடையதாக வேதநெறியையும் வைதிகக் கலாச்சாரத்தையும் தமிழ்ப்பண்பாடாக வளர்த்தெடுத்ததுதான் பக்தி இயக்கம். "வேதநெறி தழைத்தோங்க, மிகு சைவத்துறை விளங்க’ பக்தி இயக்கம் எழுந்ததாக சேக்கிழார் குறிப்பிடுகின்றார்.

நாயன்மார்களாலும் ஆழ்வார்களாலும் பாடப்பெற்ற கோவில்கள் பிற்காலங்களில் மிகப்பெரிய நிலச்சுவான்தார்களாக நிலைபெற்று விட்டதை வரலாறு சுட்டிக்காட்டுகின்றது. பல்லாயிரக் கணக்கான தமிழ்க் கல்வெட்டுகளில் பெரும்பாலானவை கோவில்களைச் சார்ந்த நிலவுரிமை ஆவணங்களாகவே உள்ளன என்பது கவனிக்கத்தக்கது. பக்தி இயக்கத்தை வளர்த்தவர்கள் அப்பர், சம்பந்தர், சுந்தரர் போன்ற சைவர்களும், திருமங்கையாழ்வார், நம்மாழ்வார், பெரியாழ்வார் போன்ற வைணவர்களும் ஆவர். 1500 ஆண்டுகள் கடந்த பின்பும் இவர்கள் அனைவரும் பிறந்த வருணமும், சாதியும் இன்றும் நமக்கு வெளிப்படையாகத் தெரிகின்றன. ஆனால் அவைதிக சமயங்களாகிய சமண, பௌத்தத்தைச் சார்ந்த இளங்கோவடிகள், சாத்தனார், திருத்தக்கதேவர், திருவள்ளுவர் போன்றவர்கள் என்ன வருணத்தைச் சார்ந்தவர்கள், என்ன சாதியைச் சார்ந்தவர்கள் என்பதை நம்மால் அறிய முடியாது. தமிழர்கள் அனைவரும் காலங்காலமாகப் பெருமை கொள்ளத்தக்க தகுதி படைத்த தமிழ் நூல்களைப் படைத்த தமிழ் அறிஞர்கள் என்பதை மட்டும்தான் நம்மால் அறிய முடிகின்றது.

1

நிலவுடைமையின் வளர்ச்சியினாலும், போர்த்திறத்தின் வெற்றியினாலும் பொருளாதாரத்திலும், அதிகாரத்திலும் முதன்மை அடைந்துவிட்ட சில சூத்திரத் தமிழ்க் குடியினர் தங்களைப் பார்ப்பனர்களுடன் இணைத்துக்கொண்டு, பொதுவான தமிழ் மக்களைவிடத் தாங்கள் உயர்ந்தவர்கள் என்று காட்டிக்கொண்டனர். தமிழ்ச் சூத்திர மன்னனான இராசராசனே தன்னுடைய அரச குருவாக ஈசான சிவ பண்டிதர் என்ற வட இந்தியப் பார்ப்பனரைத்தான் நியமித்துக் கொண்டான். பிற்காலங்களில் இவனுடைய வாரிசுகள் அனைவரும் இதே வழியைப் பிசகாமல் பின்பற்றி நடந்தனர் என்பதை இவர்களுடைய கல்வெட்டுகள் குறிப்பிடுகின்றன. இந்த பார்ப்பன, சூத்திர உயர்சாதி கூட்டாளிகள் தமிழ்நாட்டின் வரலாற்றில் குறிப்பிடத்தக்க காலங்களில் எல்லாம் மதங்களின் பெயராலும், மொழியின் பெயராலும் தமிழ் மக்கள் அனைவரையும் ஆட்சி செய்து வந்தனர். சுமார் 1500 ஆண்டுகால வரலாற்றில் இந்த ஆட்சி அதிகாரத்தைத் தொடர்ந்து தங்கள் வாரிசுகளிடமே தக்கவைத்துக் கொள்ளச் செய்த செயல்கள் என்பனவே தமிழ்ப் பண்பாடாக இன்றும் இவர்களுடைய இருபதாம் நூற்றாண்டின் வாரிசுகளால் பெருமைபடச் சொல்லப்பட்டு வருகின்றன.

வருணாசிரம தர்மத்தையும், பார்ப்பனக் கலாச்சாரத்தையும் தமிழர் பண்பாடு போல காட்டி, பெருவாரியான தமிழ் மக்களை ஒதுக்கப்பட்டவர்களாகவும், தாழ்த்தப்பட்டவர்களாகவும் தள்ளி வைத்து இவர்கள் ஆடிய நாடகங்கள் இன்றைய நிலையில் விமர்சனத்திற்கு உள்ளாக்கப்படுகையில், பழிகளையெல்லாம் பார்ப்பனர்கள் தலையில் கட்டிவிட்டு, சூத்திர உயர்சாதித் தமிழர்களாகிய தாங்கள்தான் தமிழைக் காப்பவர்கள் போலவும், "உண்மையான’ தமிழர்களாகிய தங்களை விமர்சிப்பவர்கள் தமிழர்களாக இருக்க அருகதையற்றவர்கள் போலவும் கூக்குரல் இடுகின்றனர்.

எடுத்துக்காட்டாக, இந்த உயர்சாதி சூத்திரத் தமிழர்கள் "சைவசித்தாந்தம்’ என்பது தமிழ்மக்கள் அனைவரின் தனித்துவமான தத்துவம் என்பார்கள். மதம் சார்ந்த சைவ சித்தாந்திகளை தத்துவ ஞானிகள் என்றும் கூறுவார்கள். உலகினரால் தத்துவஞானிகள் என்று அழைக்கப்படுபவர்கள் சாக்ரடீஸ், பிளேட்டோ, அரிஸ்டாட்டில், காண்ட், ஸ்பினோசா போன்றவர்கள்தாம். எவ்வளவு புகழ் பெற்றவர்களாயிருந்தாலும் இயேசு கிறிஸ்து, மார்டின் லூதர்கிங் போன்ற இறைஞானிகளை அவர்கள் தத்துவஞானிகள் என்று குறிப்பிடுவதில்லை. ஆனால் நம்முடைய சூத்திரத் தமிழர்களோ இறையியலாளர்களையே தத்துவஞானிகள் என்பார்கள். எந்தத் தர்க்கத்துக்கும் உட்படாமல் இவர்கள் புரியும் பம்மாத்து வேலைகளில் சிறிதளவாவது உண்மை இருக்குமெனில் எவ்வளவு நன்றாயிருந்திருக்கும்!

தமிழர்களில் தாழ்த்தப்பட்டவர்களை ஒதுக்கிவிட்டு "உங்களைப் போன்ற சூத்திரர்களாகிய எங்களுக்காவது சைவ சித்தாந்தத்தில் இடம் கொடுங்கள்” என்று கேட்டவர்களிடம் சிவஞான முனிவர் பதில் சொல்வதைப் பாருங்கள் - அதற்கு முன்னர் இந்த சிவஞான முனிவர் யார் என்பதைத் தெரிந்துகொள்ள வேண்டும். 18ஆம் நுற்றாண்டில் வாழ்ந்த இவர் இன்றுவரை திருவாவடுதுறை மடத்தினரால் குலதெய்வமாகக் கொண்டாடப்பட்டு வருபவர். தமிழ் இலக்கண இலக்கியங்களில் மட்டுமல்லாது வடமொழியாம் சமஸ்கிருதத்திலும் பெரும் புலமையாளர். சமஸ்கிருத நூல்கள் பலவற்றிற்கு பாஸ்யங்கள் எனப்படும் பேருரைகள் பல உண்டு. அதுபோல தமிழில் உள்ள "சிவஞான போதம்” நூலுக்குப் பேருரை வரைந்தவர். "சிவஞான மாபாடியம்” என்பது அந்த உரையின் பெயர். அந்த உரையின் முன்னுரையாக அமைந்துள்ள பாயிரப் பகுதியில் சிவஞானபோதம் ஏன் தோன்றியது, அதனுடைய அமைப்பும் தன்மையும் என்ன, இதனை வாசிக்கும் உரிமையுடையவர்கள் யார் என்பன போன்ற பல கேள்விகளை எழுப்பிக்கொண்டு அதற்கு விடையும் கொடுக்கின்றார். அத்தகைய செய்திகளை தான் மட்டும் சொல்லவில்லை, தனக்குப் பல நூற்றாண்டுகளுக்கு முன்பே வாழ்ந்த "சைவ அறிஞர்கள்”/"ஞானிகள்” போன்றோரும் சொன்னதைத்தான் தானும் மேற்கோளாகக் கொண்டு விளக்குவதாகக் கூறுகிறார். இனி அவர் கூறுவனவற்றைப் பார்ப்போம்:

சைவ சமயத்தைச் சார்ந்தவர்கள் இந்திய- தமிழகச் சமயங்களைத் தமக்கு நட்பான சமயங்கள் என்றும் பகையான சமயங்கள் என்றும் இரண்டாக வகைப்படுத்துகின்றனர்.1 நட்புச் சமயங்களை அகச்சமயம், அகப்புறச்சமயம், புறச்சமயம் என்பார்கள். பகைச்சமயங்களாக உலகாயதம், நால்வகை பௌத்தம், சமணம் போன்றவைகளை ஒதுக்கி புறப்புறச்சமயங்கள் என்பார்கள். இவை எதனால் பகையான சமயங்கள் ஆயின தெரியுமா? வேதங்களையும், ஆகமங்களையும் ஒப்புக்கொள்ள மறுத்துவிட்டதால்தான்.2 அதாவது வைதிகத்தை மறுக்கும் சமயங்கள்தான் இவர்களுடைய பிறவிப் பகைவர்களான சனியன்கள். இதனை சைவ சித்தாந்த நூல்களில் "சித்தாந்த அஷ்டகம்” என்று அழைக்கப்படுகின்ற எட்டு நூல்களை எழுதியவரும், சுமார் 15 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்தவருமான பார்ப்பன சைவ சித்தாந்தியாகிய உமாபதி சிவாச்சாரியார் என்பார் தன் நூலான சிவப்பிரகாசத்தில் கூறுகிறார்:

"புறச் சமயத்தவர்க்கு இருளாய் அகச்சமயத்து ஒளியாய்
................................................
வேதாந்தத் தெளிவாம் சைவ
சித்தாந்தத்திறன் இங்குத் தெரிவிக்கல் உற்றாம்”
- சிவப்பிரகாசம் - பாடல்-7

"வேத நூல் சைவநூல் என்று இரண்டே நூல்கள்
.............................................
திகழ் பூர்வம் சிவாகமங்கள் சித்தாந்தமாகும்
- சிவஞான சித்தியார் பாடல் - 15

என்று சிவஞான சித்தியாரில் இன்னொரு பார்ப்பன சைவசித்தாந்தியாகிய அருள் நந்திசிவாச்சாரியார் கூறுகிறார். சுருக்கமாகக் கூறினால் வேதங்கள் - ஆகமங்கள்தாம் சைவ சித்தாந்தத்தின் உயிர், அதை எதிர்ப்பவர்கள் யாவரும் தங்களைப் பொறுத்தவரை மயிர் என்பதுதான் சைவக் கொள்கையின் அடிப்படை.

அப்படியானால் வேதங்கள் மட்டும் போதுமே, சைவ சித்தாந்தம் எதற்கு என்ற கேள்வியை சிலர் எழுப்புகின்றனர்.3 அதற்கு விடையாக அவர்கள் சொல்கிறார்கள்: "வேதங்கள் என்பன பார்ப்பனர், சைத்திரியர், வைசியர் என்று வர்ணாசிரமத்தில் உயர்படியில் உள்ளவர்களுக்குத்தான் உரிமையுடையன. அதாவது பூணூல் அணியும் தகுதி பெற்ற "இருபிறப்பாளர்களின்” சொத்து அது. தாழ்ந்த வர்ணத்தினரான சூத்திரர்களுக்கும் வர்ணத்திகருந்து தள்ளப்பட்டு தீண்டாதவர்களாக உள்ளவர்களுக்கும் வேதத்தில் உரிமை இல்லை என்றனர். ஆனால் தமிழ்நாட்டு வரலாற்றில் சோழர்களின் ஆட்சியிலும்,

அதன் பின் வந்த காலங்களிலும் நிலவுடைமையாளர்களாக, உள்ளூர் ஆட்சியாளர்களாக மாறிவிட்ட உயர்சாதி சூத்திரர்கள் தங்களுக்கும் சமயம், கலாச்சாரம் தொடர்பான நடவடிக்கைகளில் பார்ப்பனர்களைப் போன்ற உரிமைகள் வேண்டும் என்றனர். மொத்த தமிழ்ச் சமூகத்தின் மீதும் பார்ப்பனர்களான தங்கள் அதிகாரம் தொடர்ந்து நிலைபெற வேண்டுமாயின் தமிழ்நாட்டில் வல்லாண்மையினராக வாழும் சூத்திரத் தமிழர்களின் ஆதரவு இன்றியமையாதது என்பதை வரலாற்றின் ஊடாகப் புரிந்து கொண்டதன் விளைவாக சைவசித்தாந்தத்தில் சூத்திரர்களுக்கும் பங்கு அளித்தனர். கூடவே அதில் சில நிபந்தனைகளையும் விதித்தனர்.

சைவசித்தாந்தத்தில் முதல் உரிமை பார்ப்பனர், சத்திரியர், வைசியர் முதலியோருக்கும், அடுத்ததாக இம்மூன்று வர்ணத்தார்க்கும் வைப்பாட்டிகளாக இருந்த சூத்திரப் பெண்களுக்குப் பிறந்தவர்களுக்கும் அதன் பின்னரே நிலவுடைமையாளர்களான சூத்திரர்களுக்கும் என இடமளித்தனர். இதனைப் பெற்றுக்கொண்ட நிலவுடைமையாளர்களான சூத்திரர்கள் தங்களை அண்டி வாழ்கின்ற நிலமற்ற உழைப்பாளர்களான சூத்திரர்களும் அதனுள் இடம் பெற்று விட்டால் தங்கள் மரியாதை கேள்விக்குள்ளாகிவிடும் என்பதை அறிந்து கொண்டு, உயர் வர்ணத்தினருடைய வைப்பாட்டிகளின் பிள்ளைகளான "அநுலோமர்” வகையறாக்களுக்கு அளித்த "தீட்சாகுரு” பதவியை "அவனவன் அப்பனுக்கும் ஆத்தாளுக்கும் முறையாகப் பிறந்த உழைப்பாளரான சூத்திரனுக்கு” அளிக்க மறுத்தனர். அதற்கு மேலும்,

தாங்கள் எல்லாம் சூத்திரர்கள் ஆயினும் உயர்நிலையில் உள்ள "சத்சூத்திரர்கள்” என்றும், உழைப்பாளிகளான சூத்திரத் தமிழர்கள் "அசத்சூத்திரர்கள்” என்ற தாழ்ந்த பிரிவினர் என்றும் சொல்லி விலக்கி வைத்தனர். அதற்கு ஆதாரமாகக் காட்டுவதற்கு நூல்களையும் இயற்றி வைத்தனர். 15ஆம் நூற்றாண்டில் கமலை ஞானப்பிரகாச சூத்திரர் எழுதிய "சாதி நூல்” என்பதும், 17ஆம் நூற்றாண்டைச் சேர்ந்ததாகக் கருதப்படும் "வருணசந்திரிகை” என்ற நூலும், 20ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் கடலூர் கனகசபைப்பிள்ளை என்பவர் எழுதிய "வருண சிந்தாமணி” என்ற நூலும் இதற்கான வெளிப்படையான ஆதாரங்கள் ஆகும். இந்நூல்கள் எல்லாம் கடவுளின் ஆணையால்தான் வர்ணாசிரம தர்மம் தமிழ்நாட்டில் நிலவுகிறது என்று குறிப்பிடுகின்றன. இதனை எழுதுபவர்கள் பச்சைத் தமிழர்கள் மட்டுமல்ல, சத்சூத்திரர்கள் என்பதையும் குறிப்பிட்டே ஆக வேண்டும்.

2

இத்தகைய பிரச்சனைகளுடன் "திருமந்திரம்” நூல் எவ்விதம் சம்பந்தப்பட்டுள்ளது என்று பார்க்க வேண்டும். முல்லை, குறிஞ்சி, நெய்தல், மருதம் என்று நில வேறுபாடுகளுடன் மட்டும் வாழ்ந்து வந்த பழந்தமிழ் மக்களை, மருதத்தின் ஊடாக வளர்ந்த வேந்தர்கள் வைதிகப் பார்ப்பனியத்துடன் சேர்ந்து கொண்டு வருணமயப்படுத்த முயன்றனர். ஆரம்ப காலங்களில் இவர்களுடைய இம்முயற்சி தோல்வி அடைந்தது. நிலத்தினை (திணை) அடிப்படையாகக் கொண்ட பழங்குடிகள் வேந்தர்களின் இம்முயற்சிகளை முறியடித்தனர். ஆனால் பின்னர் வந்த காலங்களில் தனியார் நிலவுடைமையின் வளர்ச்சியும் வணிகத்தால் ஏற்பட்ட செல்வப் பெருக்கமும் வர்க்க வேறுபாடுகளை உருவாக்கியது. இந்த வர்க்க வேறுபாடுகள் வருண முறையுடன் கலந்து பழங்குடி மக்களின் தனித்துவ கலாச்சாரத்தை சாதியமாக மாற்றியது. வர்ணத்துள் உள்ள வேறுபாடுகள் உயர்சாதி, தாழ்ந்த சாதி என்ற பிரிவினைகள் உண்டாக வழிவகுத்தன. வர்ணத்துள் அடங்காத மக்கள் தாழ்ந்தவர்களாகவும் தீண்டாதவர்களாகவும் ஓரங்கட்டப்பட்டனர். இந்த நிலை சோழர் காலத்தில் ஒரு வலுப்பெற்ற அமைப்பாக நிலைபெற்றுவிட்டது. சோழ அரசன் இராஜ மகேந்திரன் (கி.பி. 1060-1083) காலத்திகருந்து மூன்றாம் இராசராசன் (கி.பி. 1216-1256) காலம் வரையான 150 ஆண்டுகால சோழர் மெய்க்கீர்த்திகள் அனைத்தும் இந்த வர்ண சாதி அமைப்பை கட்டிக்காப்பதைப் பெருமையாகக் கூறுகின்றன.

"தருமநெறி நிற்ப மனுநெறி நடாத்திய”
"மேவரு மனுநெறி விளக்கிய”
"மாப்புகழ் மனுவுடன் வளர்ந்த கோப்பரகேசரி”
"மனுவாறு பெருக கலியாறு வறப்ப”
"மண் முழுதுங் களிப்ப மனுநெறி வளர்த்து”
"மேதினி சாதி ஒழுக்கமும்
நீதி அறமும் பிறழாது திகழ”
"தருமமும் திருமறையும் ஓங்க”
"செயல் வாய்ந்த மனுநூலும் செங்கோலும் திறை நடப்ப”

வேதநெறி நின்று மனுநீதி காப்பதுதான் தமிழ்ச் சூத்திர மன்னர்களான தங்களின் புகழ் நிறுத்தும் பணியாக இவ்வாறு பறைசாற்றி மகிழ்ந்தனர். உள்நாட்டு நிர்வாகத்தில் பார்ப்பனருடன் கைகோர்த்து களிப்புடன் பங்கேற்ற உயர்சாதி சூத்திரர்கள் வைதிக தர்மமான பார்ப்பனக் கலாச்சாரத்தையே தாங்களும் கைக்கொண்டனர். சுமார் 1000 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ்மக்களைக் கொள்ளையடித்த இந்தப் பார்ப்பன சூத்திரக் கும்பலானது 19, 20ஆம் நூற்றாண்டுகளில்தான் தங்களுடைய கூட்டணியை முறித்துக்கொள்ளும் நிலைக்கு வந்தது. ஏன் இந்த நிலை வந்தது? மொத்தத் தமிழ் மக்களையும் வாழ வைக்கவா? அதுதான் இல்லை.

3

வெள்ளையர்கள் உள் நுழைந்து (சாதிகளாக- தீண்டாதவர்களாக மக்களைப் பிரிக்காமல் இருந்திருந்தால் அந்நியர்கள் இங்கே நுழைந்திருக்க முடியுமா? சைவம் போன்ற வைதிக மதப் பிரிவுகள் உண்மையான மதமாக செயல்பட்டு, கடவுளின் சந்நிதியில் அனைத்து மக்களும் சமமானவர்கள் என்ற கொள்கை கொண்டிருந்தால் கிறித்தவம், இஸ்லாம் போன்ற மதங்கள்தான் இங்கு கால்வைத்திருக்க முடியுமா?) தங்களை ஆள்வோராக நிலை நிறுத்திக்கொண்ட பின்னர் உள்நாட்டு நிர்வாகம் நவீனமயப் படுத்தப்பட்டது. இதன் விளைவாக பார்ப்பன- சூத்திர கூட்டு உள்கட்டமைப்பு மெல்லமெல்லத் தன் சக்தியை இழக்கத் தொடங்கியது.

விரைவிலேயே நிலைமையை உணர்ந்து கொண்ட பார்ப்பனர்கள் தங்களுடைய வைதிக ஆச்சாரங்களை விட வெள்ளையனின் அடிமையாக மாறுவதில் அநாச்சாரம் எதுவும் ஏற்பட்டுவிடாது என்றும் அதுதான் நவீன காலத்தில் தங்களுடைய நிலையைத் தக்கவைத்துக்கொள்ளும் சரியான வழியாகவும் இருக்கும் என்றும் புரிந்துகொண்டு செயல்படத் தொடங்கினர்.

தங்களுடைய தெய்விக ஆச்சாரமான வேத வேதாங்கக் கல்வியைவிட ஆங்கிலக் கல்விதான் தற்காலத்திய அதிகாரத்தைத் தங்களுக்கு வழங்கும் ஆற்றலுடையது. தாங்கள் இதுவரை கூறிவந்த மத ஆச்சாரம் என்பதுகூட அரசு அதிகாரத்தின் உள்வடிவம்தான். நவீன காலத்தில் இந்த வடிவம் செல்லுபடியாகாமல் செயல் இழக்கத் தொடங்கிவிட்டது என்பதையெல்லாம் புரிந்துகொண்டு செயல்படத் தொடங்கிவிட்டனர். இந்த நிகழ்வை நிலவுடைமைக் கலாச்சாரத்தில் ஊறி நின்ற உயர்சாதி சூத்திரர்களோ சரியான காலத்தில் புரிந்துகொள்ளத் தவறிவிட்டனர். இவர்கள் விழிப்படைந்த காலத்தில் நிலைமை கைமீறிப்போய் விட்டதை உணர்ந்தனர். இதே நேரத்தில் வெள்ளையர்கள் இரட்டை ஆட்சிமுறை என்பதன் வழியாக உள்ளூர் நிர்வாக ஆட்சியில் இந்தியர்களும் பங்குபெறும் வாய்ப்பை அளித்தனர்.

நவீன தேர்தல் முறையின் ஊடாக பொதுமக்களின் விருப்பத்தின் படிதான் ஆள்பவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என்பதால் மக்களைத் திரட்ட வேண்டிய நெருக்கடி இவர்களுக்கு ஏற்பட்டது. அரசு நிர்வாக அமைப்பில் ஏற்கனவே பெரும்பகுதியில் ஒட்டிக்கொண்ட பார்ப்பனர்கள், உள்ளாட்சி அமைப்பிலும் பங்குபெறப் போட்டியிட்டனர். இதனால் இதுகாலம் வரையில் தங்களுடன் தோளோடு தோள் நின்ற பார்ப்பனர்களை உயர் சாதி சூத்திரர்கள் பகைவர்கள்போல எதிர் நிறுத்தும் கட்டாயத்தில் தள்ளப்பட்டனர். இதனை இச்சூத்திர உயர்சாதியினர் பல தளங்களில் செயல்படுத்தினர். இது அரசியல் தளத்தில் பார்ப்பனர் அல்லாதார் இயக்கமாகவும், பண்பாட்டுத் தளத்தில் தனித்தமிழ் இயக்கமாகவும் வெளிப்பட்டது. ஆனாலும் சைவ வெள்ளாள மடங்களின் சார்பான நிலவுடைமைக் கலாச்சாரம் சார்ந்த உயர்சாதி சூத்திரர்கள் தங்கள் கூட்டாளிகளான பார்ப்பனர்களை உள்கையில் நட்பாகவே கருதி வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

நவீன முதலாளி வர்க்கமாகவும், நகர்புறம் சார்ந்த மத்திய தர வர்க்கமாகவும், உருப்பெற்ற உயர்சாதி சூத்திரர்கள் புதிய உலகத்தைப் புரிந்துகொண்டு ஆங்கிலேயர்களுடன் இணைந்தும், ஆங்கிலேயர்கள் சென்ற பின்பு தங்களுக்கு அரசு அதிகாரத்தில் சரியான பங்கு பெறுவதற்காகவும் பல காய்களை நகர்த்தினர். அவற்றுள் குறிப்பிடத்தக்கவையாக "தமிழ்தான் உலகின் முதல் மொழி என்பதும், தமிழன்தான் (எந்தச் சாதித் தமிழன் என்பதை குறிப்பிட மறந்து விட்டனர்) உலகில் தோன்றிய முதல் மனிதன் என்பதும் தமிழில் தொன்மையான நூல்கள் 5000 ஆண்டுகளுக்கு முன்பே தோன்றிவிட்டன என்பதும் போன்ற பெருங்குரல்களை எழுப்பினர். இத்தகைய கற்பித முழக்கங்களில் ஒன்றாக மறைமலையடிகள் தன்னுடைய "மாணிக்கவாசகர் வரலாறும் காலமும்” என்ற நூகல் தமிழ் ஆகமங்களை சமணர் அழித்தனர் என்று எழுதி பழங்காலத்தில் தமிழருடைய எதிரிகள் சமணர்கள் என்றும் கட்டமைத்தார்.

தமிழ் வரலாற்றில் சமணர்கள் எழுதிய பல நூல்கள் வைதிகர்களால் அழிக்கப்பட்டதாகத்தான் பல தகவல்கள் கிடைக்கின்றன. குண்டலகேசி, வளையாபதி, களவியல் காரிகை (இந்த நூலின் எடுத்துக்காட்டுப் பாடல்கள் இஸ்லாமியத் தலைவன் ஒருவனைப் பலபடப் புகழ்வதால் இந்த நூல்கள் அழிக்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது) போன்ற நூல்கள் அழிக்கப்பட்டன. குறிப்பாக வளையாபதி நூல் 19ஆம் நூற்றாண்டு வரை ஆறுமுக நாவலர், உ.வே.சா, கோவையைச் சேர்ந்த புலவர் ஒருவர் போன்ற பலருடைய கைகளில் கிடைத்தும் பதிப்பிக்க வழியின்றி சைவர்களால் அழிக்கப்பட்டது. தற்பொழுது நாம் தமிழ்நாட்டில் பார்க்கின்ற சைவ, வைணவக் கோவில்கள், அவற்றின் வழிபாட்டு நடைமுறைகள் என்பன பல்லவர்களின் ஆட்சிக்காலமான 6,

7ஆம் நூற்றாண்டுகளுக்குப் பின்பானவை என்பது பட்டயங்களும், கல்வெட்டுக்களும் குறிப்பிடுகின்ற வரலாற்று உண்மைகள் ஆகும். அந்தக் காலகட்டத்திற்கு முன்னதாக கடவுள் வழிபாடும், கோவில்களும் நாம் இன்று கிராமங்களிலும், பழங்குடி மக்களிடமும் பார்ப்பது போன்ற எளிமையான வழக்கங்கள்தான். ஏராளமான நிலங்களையும் ஆடு மாடுகளையும் பிற்காலங்களில் தங்கம், வைரம், வைடூரியம், முத்துக்கள் போன்ற செல்வங்களையும் குவித்துக்கொண்டு, பார்ப்பனர்கள்தான் வழிபாட்டுச் சடங்குகளைச் செய்ய வேண்டும் என்றும், வர்ணத்தில், சாதியில் தாழ்ந்தவர்கள் கோவிலுக்குள் நுழைந்தாலே கோவில் தீட்டாகிவிடும் என்றும் அடுத்து வந்த நூற்றாண்டுகளில் ஆகமங்களின் வழியாக சட்டமாக்கிக் கொண்டனர். இது உயர் வர்ணத்தினர், உயர் சாதியினர், நிலவுடைமையாளர்கள், ஆட்சியாளர்கள் போன்றவர்கள் தங்களுடைய ஆதிக்கமும், அனுபவ உரிமையும் தமிழர்கள் அனைவருக்கும் போய்விடக்கூடாது என்பதற்காக ஏற்படுத்திக் கொண்ட இழிவிதிகள் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆகமங்கள் என்பன நிறுவனங்களாக மாறிவிட்ட கோவில்களின் நடைமுறையை ஒழுங்குபடுத்தும் சட்டங்கள்தான் என்பது தெள்ளத்தெளிவான உண்மைகளாக இருக்கையில், அத்தகைய நிலைமைகள் தோற்றமே கொள்ளாத காலத்தில் தமிழில் ஆகமங்கள் இருந்ததாகவும், அவற்றை சமணர்கள் அழித்ததாகவும் கூறுவது "ஆகாயத்தாமரை”, "மலடியின் மகன்” என்பதைப் போன்றதுதான். இத்தகைய நிலைமை இன்னும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது என்பதைக் குறிப்பதுதான் "திருமந்திரம் தமிழரின் தத்துவம்” என்பது போன்ற மூர்க்கக் கூற்றுகள்.

1887இல் முதன்முதலாக அச்சு வடிவம் பெற்ற திருமந்திரம், தொடர்ந்து சுமார் 17 பதிப்புகள் வந்துள்ளது. ஒரு பதிப்புக்கும் மற்றொரு பதிப்புக்கும் இடையே பாடல்களில் பல இடங்களில் வேறுபாடுகள் உள்ளன. திருமந்திரம் 3000 பாடல்கள் கொண்டது என்பதுகூட எல்லாப் பதிப்புகளிலும் ஒரேமாதிரி நிறுவப்படவில்லை. சில பதிப்புகளில் 3083, 3047, 3048 என அதிமான பாடல்கள் உள்ளன. ஆனால் நூலின் உள் பேசப்படுகின்ற "வேதச் சிறப்பு5, ஆகமச்சிறப்பு6 அந்தணர் ஒழுக்கம்7 போன்ற பகுதிகள் எல்லாப் பதிப்புகளிலும் ஒன்றாகவே உள்ளன. அதேபோன்று அந்தணர் யார் என்று விளக்கும் பகுதி, அவர்கள் சிண்டும், பூணூலும் அணிந்தவர்கள் என்ற பகுதிகள் மாற்றமில்லாமல் உள்ளன.

திருமூலர் கயிலைமலையில் நந்தியெம்பெருமானிடம் உபதேசம் பெறுகையில் தன்னுடன் இருந்து உபதேசம் பெற்றவர்களாக சிவயோக சித்தர், பதஞ்சக, வியாக்கிரபாதர் போன்றவர்களைக் குறிப்பிடுகின்றார். 1997இல் திருமந்திர நூலை நன்கு ஆராய்ந்து மூலபாடப் பதிப்பாக வெளியிட்டவர் டாக்டர் சுப. அண்ணாமலை. இவர், நூகன் பெயரை வெறுமனே திருமந்திரம் என்பது சரியல்ல என்றும், பல சுவடிகளில் "திருமந்திரம் என வழங்கும் சதாசிவ ஆகமம்” என்றுதான் உள்ளது என்றும் கூறுகிறார். தன் பதிப்புக்குக்கூட இந்தப் பெயரைத்தான் கொடுத்துள்ளார். பழமையான சுவடிகளில் எல்லாம் இந்தப் பெயர்தான் உள்ளதாகக் குறிப்பிடுகின்றார். (முன்னுரை XLII)

திருமந்திரத்தில் "சைவசித்தாந்தம்” மட்டும் பேசப்படவில்லை. வைதிக சைவத்தின் அனைத்துப் பிரிவுகளும் அதனுள் பேசப்படுகின்றன. ஆகவே சைவ சித்தாந்தக் கொள்கைகளை மட்டும் விளக்கும் நூலாக இதனைக் கொள்ள இயலாது என்று எல்லா ஆய்வாளர்களும், சைவ மடங்களைச் சேர்ந்தவர்களும் எழுதுகின்றனர். இதனால்தான் திருமந்திர நூலுக்குப் பல நூற்றாண்டுகள் பிந்தி எழுதப்பட்ட "சிவஞானபோதம்” சைவ சித்தாந்தத்தின் அடிப்படைகளைக் கூறும் நூலாக தலைமை இடம் பெற்றுவிட்டது. சுருக்கமாகக் கூறினால் பல்லவர் காலத்திற்கும், சோழர் காலத்திற்கும் இடைப்பட்ட தமிழகத்தில் நிலை கொண்டுவிட்ட வைதிக சைவம் தொடர்பான பல்வேறு கோட்பாடுகளைத் தொகுத்துக் கூறுவதும், நிறுவனங்களாக மாறிவிட்ட கோவில்களின் நடைமுறைகளை முறைப்படுத்திய ஆகம நெறிமுறைகளைத் தொகுத்துக் கூறுவதும்தான் திருமந்திர நூலின் அமைப்பு முறையாக உள்ளது என்று சொல்லலாம்.

4

இறுதியாக இன்னும் சில விசயங்களைக் கூறுவதும் தவிர்க்க முடியாததாகின்றது. தமிழ்மொழியும், வடமொழியான சமஸ்கிருதமும் ஒத்த தன்மையிலான இலக்கண, இலக்கிய அமைப்பு முறைகளைக் கொண்டதுதான் என்ற கருத்து 20ஆம் நூற்றாண்டின் தொடக்க காலம் வரையில் தமிழ்நாட்டின் கல்வியாளர்களிடமும், புலவர்களிடமும் நிலைபெற்றிருந்தது. கால்டுவெல் அவர்களின் "திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம்” வெளிவந்த பின்புதான் தமிழ்மொழி என்பதும், திராவிட மொழிகளும் தமக்கே உரிய தனித்துவமான மொழிக்கூறுகளைக் கொண்டவை என்ற கருத்து பரவ ஆரம்பித்தது. ஆயினும் இத்தகைய கருத்துகள் வகமையாக நிலைபெறுவதற்கு மேலும் நீண்ட காலம் பிடித்தது. கால்டுவெல்லின் இந்த நூலைப் பயின்ற உயர்சாதிகளைச் சேர்ந்த சூத்திர தமிழர்கள் திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணத்தில் குறிப்பிடப்பட்ட தமிழின் தனித்துவப் பண்புகள் என்ற பகுதியை மட்டுமே எடுத்துக்கொண்டனர். அவர்களுக்கு ஒவ்வாத பல பகுதிகளை நீக்கிவிட்டே கால்டுவெல் மறைவுக்குப்பின்னர் பதிப்பித்துக் கொண்டனர். இதற்குக் காரணம் தங்களுடைய அதிகாரமும் மரியாதையும் கேள்விக்குள்ளாகும் என்ற பதற்றமே என்று நம்மை எண்ணத் தூண்டுகின்றது.

இத்தகையவர்களைப் புரிந்துகொள்வதற்கு வேறு சில விசயங்களும் நமக்கு உதவியாக இருக்கும். எடுத்துக்காட்டாக வைதிக மொழியான வடமொழி என்பது இரண்டு வகைப்பட்டது. ஒன்று, வேதங்களும் சில உபநிடதங்களும் போன்றவைகளைப் பேசும் மொழி. இதனையே வைதிக மொழி என்பார்கள். இந்த மொழியில் வழங்கும் சொற்களுக்கான பொருள் வரையறுக்கப்பட்டதல்ல. ஆகவே வேதத்தின் ஒரு பகுதியை ஒருவர் விளக்கும் முறையில் இன்னொருவர் விளக்க வேண்டும் என நாம் எதிர்பார்க்க முடியாது. ஒரு சொல்லுக்கே சுமார் பத்திலிருந்து இருபத்தைந்து வகையான அர்த்தங்கள் இருக்கும். ஆகவே இன்று வரையில் இந்த மொழியிலுள்ள நூல்களுக்கு வரையறுக்கப்பட்ட அர்த்தத்தை எவராலும் வழங்க முடியவில்லை. மற்றொன்று இதிகாசங்கள்,

காவியங்கள், நாடகங்கள் போன்றவைகள் எழுதப்பட்ட மொழி. இதனைத்தான் சமஸ்கிருதம் என்பார்கள். இந்த சமஸ்கிருத மொழிதான் இன்றைய நிலையிலும் புரிந்துகொள்ளும் நிலையிலுள்ள வடமொழி என்பதாகும். இந்த சமஸ்கிருத மொழியில் எழுதப்பட்ட முதல் இலக்கியங்களாக காளிதாசரின் நாடகங்களைக் கூறுவார்கள். இந்நாடக நூல்கள் தோன்றுவதற்குச் சில நுற்றாண்டுகளுக்கு முன்பே நம்முடைய சங்க இலக்கியங்கள் தோன்றிவிட்டன. தமிழ் இலக்கண நூலாகிய தொல்காப்பியம் சுட்டும் இலக்கண நுட்பங்களில் பல சமஸ்கிருத மொழி அறியாதது ஆகும். ஐம்பெரும் காப்பியங்கள், பல்வேறு விதமான சிற்றிலக்கண நூல்கள் என்பன தென்னிந்திய மொழிகளான கன்னடம்,

தெலுங்கு, மலையாளம் போன்ற மொழியில் நூல்கள் தோன்றுவதற்கு பல காலத்திற்கு முன்பே தோன்றி பயிலப்பெற்றவை. பாக, பிராகிருதம் போன்ற மொழி சார்ந்த நூல்கள் பல மிகப் பழங்காலத்திலேயே தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு வந்துள்ளன. இது போன்ற தமிழ்மொழியின் தனித்துவமான பல பண்புநலன்களை கால்டுவெல் ஆராய்ந்தது போல நாமும் ஆராய வேண்டும். அப்பொழுதுதான் "தமிழ் செம்மொழி” என்பதை மற்ற மொழி சார்ந்தவர்களுக்கு ஐயத்திற்கிடமின்றிப் புரியவைக்க முடியும். இன்று வரையில் ஆங்கிலத்திலோ, பிற இந்திய மொழிகளிலோ எல்லோரும் ஏற்றுக்கொள்ளும்படியான பழந்தமிழ் நூல் மொழிபெயர்ப்புகளை நம்மால் வெளியிட முடியவில்லை என்பது கவனிக்கத்தக்கது. இப்பொழுதுகூட அத்தகைய செயல்களைச் செய்யும் தகுதியான அறிஞர்கள் மிகமிகக் குறைவாகத்தான் உள்ளனர் என்பதும் தமிழ்மொழியின் வளர்ச்சியில் அக்கறை கொண்டவர்கள் கவலைப்படும் செய்தியாகும்.

இப்படி நம்முடைய இனிய தமிழ்மொழி பெருமை கொள்வதற்கு ஏராளமான செய்திகள் இருக்கின்றன. நம்முடைய உழைப்பைச் செலவிட்டு உலக சமுதாயத்திடமிருந்தும், இந்திய மக்களிடமிருந்தும் தனித்து நின்று பெருமை கொள்வதற்குப் பல விசயங்கள் நம்முடைய மொழியில் இருந்தும், அவற்றையெல்லாம் விட்டுவிட்டு, நம்மிடம் இல்லாத ஒன்றை இருப்பதாகக்கூறி விதண்டாவாதம் செய்பவர்களை நாம் எப்படி புரிந்துகொள்வது? தமிழ் மொழியின் உண்மையான வளர்ச்சியைவிட அவர்களுடைய அரசியல் ஆதாயம் தேடும் வெறிதான் அவர்களை இப்படியெல்லாம் பேச வைக்கிறது என்று நாம் எண்ணுவதில் தவறு இருக்க முடியுமா?

சைவ சித்தாந்தம் போன்றவை தமிழர்கள் அனைவருக்குமான சொத்து என்று அவர்கள் கருதுவது உண்மையாக இருக்குமானால் அவர்களுக்கு ஒரு சிறு வேண்டுகோளை வைக்கின்றேன். இந்த இருபத்தியோராம் நூற்றாண்டிலும் திருவாவடுதுறை, தருமபுரம், திருப்பனந்தாள், குன்றக்குடி போன்ற மடங்களின் தலைவர்களாக ஒரு குறிப்பிட்ட சாதியைச் சேர்ந்தவர்களால் மட்டும்தான் வரமுடிகின்றது. இத்தகைய சமய நிறுவனங்களில் தமிழனாகப் பிறந்த எவராயினும், அத்தலைமைக்கான தகுதி பெற்றிருந்தால் தலைவராகலாம் என்ற நிலைமையை உண்டு பண்ண முயற்சி மேற்கொள்ள வேண்டும்.

அடிக்குறிப்புகள்

1. இச்சமயங்கள் எல்லாம் புறப்புறச்சமயம், புறச்சமயம், அகப்புறச்சமயம், அகச்சமயம் என நான்கு வகைப்படும். அவற்றுள் புறப்புறச்சமயம் உலகாயதம், நால்வகை பௌத்தம், அருகதம் என அறுவகைப்படும். புறச்சமயம் தருக்கம், மீமாம்சை, ஏகான்மவாதம், சாங்கியம், யோகம், பாஞ்சிராத்திரம் என அறுவகைப்படும். அகப்புறச் சமயமாவது பாசுபதம், மாவிரதம், காபாலம், வாமம், வைரவம், ஐக்கியவாத சைவம் என அறுவகைப்படும். அகச்சமயமாவது பாடாண்வாதசைவம், பேதவாத சைவம், சிவசமவாதசைவம், சிவ அங்கிராந்தவாத சைவம் ஈசுவர அவிகாரவாத சைவம், சிவாத்துவிதன சைவம் என அறுவகைப்படும். இவையெல்லாம் அகம் புறம் என்று இரண்டாய் அடங்குமாறும் ஓர்ந்துணர்க.

- சிவஞான மாபாடியம் - பக்கம் 99, விளக்கம் சி.சு. மணி

அருள் நந்திசிவம் அருட்பணிமன்றம், திருநெல்வேக.1994

2. உலகாயதம், நால்வகைபௌத்தம், சமணம் ஆகிய ஆறுமே புறப்புறச் சமயங்களாகப் பேசப்படுவன. கொள்கையில் அவ்வளவு எட்டத்தில் வைக்கத்தக்கதாக இவைகளுக்கும் சைவ சித்தாந்தத்திற்கும் இடையே உள்ள பெரிய வேற்றுமை என்ன என்ற வினா எழலாம். சைவசித்தாந்திகள் வேதம், ஆகமம் ஆகிய இரண்டையும் ஒப்புக் கொள்ளுகிறவர்கள். ஒப்புக்கொள்ளுவது மட்டுமன்றி அவற்றுக்கு ஏனைய எல்லாவற்றையும் விட மிக மேலான இடத்தைக் கொடுக்கின்றவர்கள். நாம் கண்ணால் நேரே காண்பதுகூடப் பொய்யாயிருக்கலாம். நமது அறிவால் யூகிப்பதுகூடப் பிழையாயிருக்கலாம். ஆனால் வேதங்களிலும், ஆகமங்களிலும் கூறப்பட்டிருப்பவை ஒரு போதும் பொய்யாகா என்ற திடமான நம்பிக்கை உடையவர்கள்.

'ஒரு பொருள் நமது புலன்களுக்கு வெளிப்படையாகத் தோன்றாவிட்டால்கூட பாதகமில்லை. அது வேதாகமங்களிலே கூறப்பட்டிருந்தாலே போதும். அதனை உண்மை என நம்பலாம். அதைப் போலவே, நமது அறிவுக்கு எட்டாதவைகூட வேதாகமங்களிலே சொல்லப்பட்டிருந்தால் அவை ஏற்றுக்கொள்ளத்தக்கவை’ என இவ்வாறு யுக்தியையும் அனுபவத்தையும் விட வேதவாக்கே வலிமை உடையது என வற்புறுத்துகின்றவர்கள் சைவசித்தாந்திகள். எந்த வேதாகமங்களைப் பிரத்தியட்சம், அனுமானம் ஆகிய இரண்டு பிரமாணங்களையும் விட அதிக வலிமையுடையவை எனச் சைவசித்தாந்திகள் கருதுகின்றனரோ, அந்த வேதாகமங்களைச் சிறிதும் ஏற்றுக்கொள்ளத்தக்கவை அல்ல என மேலே குறிப்பிட்ட அறுவரும் (உலகாயதர், நால்வகை பௌத்தம், சமணம்) ஒதுக்கித் தள்ளி விட்டனர். இதனாலேதான் இந்த அறுவரும் சைவசித்தாந்தத்துக்கு வெகு தூரத்தவர் ஆகிவிட்டனர்.

- இந்திய தத்துவ ஞானம் - ஐந்தாம்பதிப்பு, கி.லட்சுமணன் 1977,
பக்கம் - 423, 424, பழனியப்பா பிரதர்ஸ்

3. ''இனி, வேதமும் சிவாகமமும் ஒன்றேயாயினும் இரு பகுதிப்பட்டது. வேதம் மூன்று வருணத்தாருக்கும், சிவாகமம் நான்கு வருணத்தாருக்கும் பொதுவாதல் பற்றி ஆதலால் சிவாகமங்கள் பிரமாணம் என்பது தெற்றென உணர்க”. சிவஞான மாபாடியம் - முதல் பதிப்பு, பக்கம் 51.

வேதமும் சிவாகமமும் ஒன்றே என்பது மேற்காட்டினாம் ஆககன் வேதவழக்கோடு முரணுதல் இன்மையானும், அது வேதவழக்கோடும் சிவாகம வழக்கோடும் மாறுகொள்வார் கூற்றேயாம் என மறுக்க - அதே நூல் - பக்கம் 73.

4. இச்சமய முதகய தீக்கைப்பேறு மறையோர் (பார்ப்பனர்) முதகய மூன்று வருணத்தார்க்கும், சற்சூத்திரருக்கும், அனுலோமருக்குமாம் என உணர்க. (முதல் மூன்று வருணத்தைச் சேர்ந்த ஆண்களுக்கு சூத்திரர் முதலிய தாழ்ந்த வருணத்து வைப்பாட்டிகளிடம் பிறந்தவர்களை அனுலோமர் என்று குறிப்பிடுவார்கள். கீழ் வருணத்தைச் சார்ந்த ஆண்களை மேல் வருணத்துப் பெண்கள் புணர்ந்து பெற்ற பிள்ளைகளை பிரதிலோமர் என்பார்கள். பிரதிலோமர்கள் சமூகப் படிநிலையில் மிகவும் தாழ்வாக வைக்கபட்டிருந்தனர்.

-மேற்குறிப்பிட்ட நூல் - பக்கம் 79

5. வேதத்தை விட்ட அறமில்லை; வேதத்தின்
ஓதத்தகும் அறம் எல்லாம் உள; தர்க்க
வாதத்தைவிட்டு, மதிஞர் வளமுற்ற
வேதத்தை ஓதியே வீடு பெற்றார்களே.

இதன் பொருள்: வேதத்தை விடச் சிறந்த அறநூல் இல்லை. மக்கட்கு உரைக்க வேண்டிய அனைத்து அறங்களும் அவற்றில் உள. மதியுடையோர் தருக்க வாதத்தை விட்டு, வேதம் ஓதி வீடு எய்தினர். திருமந்திரம் - வேதச்சிறப்பு - பாடல் 85, டாக்டர் சுப. அண்ணாமலை பதிப்பாசிரியர் - 1997, முதல் பதிப்பு, இந்திய பண்பாட்டு ஆராய்ச்சி நிறுவனம்,84, கலாசேத்ரா சாலை, திருவான்மியூர், சென்னை - 600 041.

6. அண்ணல் அருளால் அருளும் சிவாகமம்
எண்ணில் இருபத்தென் கோடி நூறாயிரம்
விண்ணவர் ஈசன் விழுப்பம் உரைத்தனர்
நண்ணிநின்று அப்பொருள் ஏத்துவன் நானே - பாடல் 92

இதன் பொருள்:- இருபத்தெட்டு சிவாகமங்களும் இருபத்தெட்டுக் கோடி, அல்லது இருபத்தெட்டு இலட்சம் நூல்களுக்கு இணை. அவற்றின் வழி நின்று, தேவர்கள் சிவபிரானது மேன்மையை உரைத்தனர். அந்தப் பரம்பொருளையே யானும் புகழ்ந்து கூறலுற்றேன். முன் குறிப்பிட்ட நூல் - பக்கம் 50

7. வசையில் விழுப்பொருள் வானும் நிலனும்
திசையும் திசைபெறு தேவர் குழாமும்
விசையம் பெருகிய வேதம் முதலாம்
அசைவிலா அந்தணர் ஆகுதி வேட்கிலே - பாடல் 369

இதன் பொருள்: அந்தணர் யாகம் செய்தால் மண்ணிலும் விண்ணிலும் வாழ்வோர் வெற்றி பெறுவர். அதே நூல் - பக்கம் 210.

Pin It