தமிழ் நூல் பதிப்புக்களைப்பற்றி ஆராய்வதும் விவாதிப்பதுமான ஒரு நல்ல சூழல் இக்காலத்தில் உருவாகி உள்ளது. இது வரவேற்கத்தக்கது. ஆனால் ஆய்வாளர்கள் சங்க இலக்கியத்தையும் தொல்காப்பியத்தையும் பற்றித் தான் கவனம் செலுத்துகின்றார்கள். பிற தமிழ் நூல்களைப் பற்றி எழுதுவது மிகவும் குறைவாகவே உள்ளது. ஆனால் நாம் கவனம் செலுத்த வேண்டிய தமிழ் நூல்கள் ஏராளமாக உள்ளன. அத்தகைய இலக்கிய, இலக்கண நூல்கள்தான் தமிழ் மொழிக்கு ஒரு நீண்ட வரலாற்றை உருவாக்கித் தந்து, மற்ற இந்திய மொழிகளிலிருந்து தமிழின் தனித்தன்மையை நிறுவிக் காட்டுபவையாக அமைந்துள்ளன. அத்தகைய நூல்களுள் ஒன்று ‘யசோதர காவியம்’. அந்த நூலின் பதிப்பு வரலாறு சுவாரசியமானது.

yasothara_kaviyam_400சூளாமணி, நீலகேசி, யசோதர காவியம், உதயண குமார காவியம், நாககுமார காவியம் ஆகிய இந்நூல்கள் ஐஞ்சிறுகாப்பியங்கள் என்று தமிழ் மரபில் கூறப்பட்டுள்ளன. இவற்றில் சூளாமணி, நீலகேசி, யசோதர காவியம் ஆகிய மூன்றும் முழுமையாக நமக்குக் கிடைத்துள்ளன. நீலகேசி நூலுக்கு ‘சமய திவாகர முனிவர்’ என்பவர் எழுதிய பழமையான உரையும் கிடைத்துள்ளது. இந்த உரை இந்தியத் தத்துவங்கள் என்று சொல்லப்படுகின்ற பல பொருள் களைப் பற்றி மிகவும் முற்பட்ட காலத்திலேயே விமர் சனத்துடன் விவாதித்துத் தமிழ் மொழியில் எழுதப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. சூளாமணியின் கவிதைச் சுவை சிலப்பதிகாரம், சீவகசிந்தாமணி போன்றவற்றிற்கு ஈடானது என்றும், சில பகுதிகள் அவற்றைவிட மேலாகவும் உள்ளது என்றும் தெ.பொ.மீ. போன்றவர்கள் குறிப்பிடுகின்றனர்; இருப்பினும் சூளாமணி தமிழ்ச் சூழலில் பெரிதும் பேசப் படாமல் போனது ஏன் என்று ஆச்சரியமும் அடைந் துள்ளனர். இந்த அளவுக்கு மெச்சத்தகுந்த நூல் என்று கூறமுடியாவிட்டாலும் தமிழ் மரபு என்று பேசப்படும் ‘கற்பு’ போன்ற கருத்துக்களைக் கேள்விக்குள்ளாக்கியதும், இந்தியப் பண்பு என்று பேசப்படுகின்ற சில கருத்துக் களுக்கு முற்றிலும் மாறாக அதிர்ச்சி அளிக்கும் செய்தி களையும் தன் பாடுபொருளாகக் கொண்டதுமான இந்நூல் மு.அருணாசலம் போன்ற சனாதனி மனோபாவம் உள்ளவர்களால் வெறுத்து ஒதுக்கப்பட்டதும் வரலாறாகப் பதிவாகியுள்ளது.

யசோதர காவியம் காஞ்சிபுரம் பாகுபலி நயினார் என்பவரால் முதன்முதலாக அச்சிடப்பட்டு வெளிவந்தது. அச்சிடப்பட்ட ஆண்டு 1887 என்று ஒளவை துரைசாமிப் பிள்ளையின் உரையுடன் சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம் 1944-ஆம் ஆண்டில் வெளியிட்ட முதல் பதிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் அதே நிறுவனம் ஐந்தாவது முறையாக வெளியிட்ட 1982ஆம் பதிப்பில் 1881 என்று குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் வீடுர், பூரணச் சந்திர நயினார் பதிப்பில் முதல் பதிப்பு பாகுபலி நயினாரால் 1869-இல் வெளியிடப்பட்டதாகக் குறிப்பு உள்ளது. 1908இல் இந்நூலை இரண்டாவது முறையாகப் பதிப்பித்த தில்லையம்பூர் வேங்கடராம ஐயங்கார் பதிப்பில் முதல் பதிப்பைப் பற்றிய எவ்விதக் குறிப்பும் இல்லை.

பவானி, இராதாபுரம், வீடூர் ஆகிய மூன்று ஊர் களிலிருந்து கிடைத்த ஓலைச்சுவடிகளைக் கொண்டு ஆராய்ந்து இந்நூலை வெளியிட்டார் வேங்கட ராம ஐயங்கார். எந்தச் சுவடியிலும் பாடல்களுக்கான உரைகள் இல்லாததால் மூலபாடத்தை மட்டும் அச்சிடுகின்றார். ஆனால் இந்நூலில் உள்ள சமண சமயக் கோட்பாடுகளை விளக்கி ஆங்கிலத்திலும் தமிழிலும் விரிவான விளக்கங்கள் தந்துள்ளார். இது தவிர ஜைன சமய பரிபாஷை என்ற தலைப்பில் ‘தொகை விளக்க அகராதி’ என்ற பகுதி, சமண சமய மரபுச் சொற்களுக்கு விளக்கம் தருகின்றது. உதாரணமாக, ‘இரத்தினக் கிரயம்’ என்ற சொல்லுக்கு

1. நற்காட்சி, 2. நன்ஞானம் 3. நல்லொழுக்கம் என்று விளக்கு கின்றது. இந்நூல் கூறுகின்ற கதையை சுமார் 50 பக்கங் களில் தெளிவாக எழுதி உள்ளார். செய்யுள் முதற்குறிப்பு அகராதி, பாடபேதம், அபிதான விளக்கம் என்ற பெயரில் நூலுள் வருகின்ற ஊர்ப் பெயர்கள், மக்கள் பெயர்கள், இடப்பெயர்கள் போன்றவற்றிற்கு விளக்கம் கொடுக் கின்றார். அரும்பதவுரை என்ற பகுதியில் பாடல்களில் பயின்று வந்துள்ள அரிய சொற்களுக்கு விளக்கம் தருகின்றார். இந்த நூலுக்கு ஒரு அழகான சிறு முன்னுரையை ஆங்கிலத்தில் எழுதியுள்ளவர் ஆர்தர் மாத்யூ (ஹசவாரச ஆயவாநற க்ஷ.ஹ.,) என்ற ஆங்கிலேயர். இவர் தமிழ் மொழியின் மீது ஆழ்ந்த பற்றுக் கொண்டிருந்தவர் என்றும், எனவே அவருக்கு இந்நூல் சமர்ப்பணம் செய்யப்பட்டுள்ளது என்றும், குறிப்பிடப்பட்டுள்ளது.

நூலில் உள்ள பதிப்புரை மிகவும் வித்தியாசமான தாகவும், வியப்பூட்டுவதாகவும், இக்காலத்தில் பார்ப்பன அறிஞர்களைப்பற்றிக் கட்டமைக்கப்பட்டுள்ள கருத்துக் களைத் தகர்ப்பனவாகவும் அமைந்துள்ளது. வேங்கடராம ஐயங்கார் பதிப்புரையில் சில பகுதிகள் :

1. தமிழ் மொழிக்கு மேன்மையும் அழகும் சேர்க்கும் நூல்கள் சமண சமயம் சார்ந்தவைதான்.

2. தமிழர்களின் கருத்தியலை வெளிப்படுத்தும் நூல்கள் திருக்குறள், நாலடியார், பழமொழி நானூறு போன்றவைதான்.

3. சமணர்களைக் கழுவேற்றியும், செக்கிலிட்டும் கொன்றவர்கள் திருஞானசம்பந்தரும், இராமானுசரும் தான். இத்தகைய பாதகச் செயல்களால் சமண சமயத் தமிழ் நூல்களில் பல அழிந்தொழிந்தன.

4. தாய்மொழிக் கல்விதான் ஒரு மனிதனை மேம் படுத்தும். ஒரு தேசத்திற்குப் பெருமை சேர்க்கும். அத்தகைய பணியின் ஓர் அங்கமே இத்தகைய நூல்களை வெளியிடுதலாகும்.

அடுத்த பதிப்பு 1944இல் சைவ சித்தாந்த நூற் பதிப்புக் கழகத்தால் வெளியிடப்படுகின்றது. ஒளவை துரைசாமிப் பிள்ளை உரை எழுதி உள்ளார். முன்னுரையில் இந்நூலில் வருகின்ற இசைக் குறிப்பில் “மாளவபஞ்சமம்” என்ற பண் பற்றிய விளக்கங்கள் சிறப்பாக அமைந்துள்ளன. இசைத் தமிழ் வரலாற்றில் விடுபட்ட ஒரு பகுதியை விளக்கும் பகுதி யாகவும் இப்பகுதி அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. ஆனால் இந்நூலில் வந்துள்ள சமண சமயக் குறிப்புக்கள் பலவற்றை ஒளவை துரைசாமிப் பிள்ளை சரியாக விளக்கவில்லை என்றும், பல பகுதிகள் பிழையாக உள்ளதென்றும் 1951இல் இந்நூலுக்கு உரையெழுதிப் பதிப்பித்த வீடூர் - பூரணச் சந்திரன் குறிப்பிடுகின்றார்.

இந்தத் தகவல்களை சமணரான வீடூர் - பூரணச் சந்திரன் ஒளவை துரைசாமிப் பிள்ளையிடம் எடுத்துக் கூறுகின்றார். துரைசாமிப்பிள்ளையோ தவறுகளை அடுத்த பதிப்பில் திருத்தி வெளியிடலாம் என்று கூறாமல் ‘ஒரு நூலுக்குப் பலர் உரை எழுதலாம். நீங்களே இதற்கு ஓர் உரை எழுதி வெளியிடுங்கள்’ என்று சொல்லிவிடுகின்றார். எனவே பூரணச்சந்திரன் புதிதாக ஏழு ஏட்டுச் சுவடிகளைத் தேடிப் பிடித்து அச்சான மூன்று புத்தகங்களுடன் ஒப்பிட்டு, பல திருத்தங்களைச் செய்து சமண சமய மரபில் சொல்லப்படுகின்ற தத்துவ விளக்கங்களை முறையாக விளக்கி வெளியிடுகின்றார். இதில் துரைசாமிப் பிள்ளை உரைப் பகுதிகளில் தவறாக உரை எழுதப்பட்டுள்ள 23 இடங்களைச் சுட்டிக்காட்டுகின்றார்; பாடபேதங்கள் சிலவற்றையும் குறிப்பிடுகின்றார். இத்துடன் தான் பார்த்த எந்த ஏட்டுச் சுவடியிலும் இல்லாத, அச்சிட்ட புத்தகங்களிலும் இல்லாத பத்துப்பாடல்களை துரைசாமிப் பிள்ளை இணைத்துள்ளதைச் சுட்டிக்காட்டி, அவை நூற்போக்கிற்கு இயைபாக இல்லை என்றும் கூறுகின்றார். இதனால் மற்றவர்களின் பதிப்புக்களில் 320 பாடல்கள் உள்ள நூல் துரைசாமிப் பிள்ளையின் பதிப்பில் 330 ஆக மாறி விடுவதையும் நாம் புரிந்துகொள்ள முடிகின்றது. 219, 275, 315 ஆம் பாடல்களில் சில பகுதிகள் விளங்கவில்லை என்கிறார்.

கன்னட மொழியில் கவி ‘ஜன்ன’ என்பவர் ஒரு யசோதர காவியம் எழுதியுள்ளதாகவும், அதனைப் படித்தாலும் மேற்படி இடங்கள் விளங்கவில்லை என்கிறார். இப்படி ஒரு சிறிய தமிழ் நூல் பதிப்பில் இத்தனை வகையான சிக்கல்களைக் காணும் நாம், இன்னும் பல நூல் களைக் கவனத்துடன் பரிசீலிக்கவேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்படுகின்றோம். இத்தகைய தொடர் செயல்பாடுகள் தான் ஆராய்ச்சி என்று பெயர் பெறும். பெரும் நூல் பரப்பைப் பெற்றுள்ள நம்முடைய தமிழ் மொழிக்கு இத்தகைய பணிகளைச் செய்யப் பலர் முன்வர வேண்டும். அப்பொழுது தான் நம் மொழி உயரும், நாமும் உயர்வடைவோம்.

Pin It