கால்டுவெல் நூல்பதிப்பை முன்வைத்து...

கவிதாசரண். ஜன - பிப்ரவரி 2006 இதழட்டையில் "தமிழகம் கண்டறியாத கால்டுவெல்லின் பின்னிணைப்புகள்” என்றொரு வாசகம் இடம் பெற்றிருந்தது, இதழுக்குள் கால்டுவெல் பற்றி இரண்டு கட்டுரைகள் வெளிவந்திருந்தன, பொ,வேல்சாமியும் வேதசகாயகுமாரும் எழுதியவை, வேல்சாமியின் கட்டுரை கால்டுவெல் நூலின் பதிப்புக் குளறுபடிகள் பற்றிய தகவல்களை ஏறக்குறைய முழுமையாகத் திரட்டித் தந்திருந்தது, வேதசகாய குமாரின் கட்டுரை அக்குளறுபடிகளுக்கூடான சாதி அரசியலை வெகு நுட்பமாகத் துலாம்பரப்படுத்தியிருந்தது, என்னிடம் ஒரு தேடலைத் தோற்றுவித்த அரிய கட்டுரை அது,

(இந்தக் கட்டுரையில் வேதசகாயகுமாரின் கருத்துகளை நான் முழுக்கமுழுக்க வழிமொழிந்து மேற்செல்கிறேன், ஐயத்திற்கிடமின்றி நிறுவப்படும் எந்த உண்மையும் வெறும் காப்புரிமை கோரும் கருத்தியல் பதிவாக மட்டுமே முடக்கப்பட்டுவிடாமல். பலரும் பல சந்தர்ப்பங்களிலும் பேசுபொருளாக்குவது சமூக அளவுகோலைப் புதிப்பிக்கும் காலத்தின் கட்டாயமாகிறது,)

வேதசகாயகுமார் தன் கட்டுரைக்கு "கால்டுவெல்லின் மற்றொரு முகம்” என்று பெயரிட்டிருந்தார், அந்தத் தலைப்புக்கான நிறைவுக் கட்டுரை இன்னும் எழுதப்படவே இல்லை, அவர் எழுதியது அதற்கான முன்னோட்டத்தைத்தான், அதுவே பல திறப்புகளை வெளிச்சப்படுத்துவதாயிருந்தது,

இக்கட்டுரைகளைத் தமிழகப் பல்கலைக் கழகங்களின் முன்னாள் துணைவேந்தர்கள் சிலரும் மேலும் சில பொறுப்புள்ள தமிழ்ப் பேராசிரியர்களும் படித்து அதிர்ந்து போனதாகவும். "கால்டுவெல் காலத்திற்குப் பிறகு அவருடைய நூல் முழுமையாக அச்சிடப்படவில்லை” என்பதையே அவர்கள் நம்ப மறுத்ததாகவும் கேள்வி, (எனக்கு இதில் நம்பிக்கையில்லை, அவர்களாவது அதிர்வதாவது, ஆகவே இது ஒரு கனவுநேரக் கற்பனையாக இருக்கவும் வாய்ப்புண்டு,) அப்படி நேர்ந்திருந்தால் அது ஒரு கணப்பொழுதுக்குத்தான், அதன்பிறகு எந்தத் தேடலோ எதிர்வினையோ இல்லாமல் ஆழ்ந்த அமைதி சூழ்ந்துகொண்டது,

கால்டுவெல்லின் மறைவுக்குப் பின் வெளிவந்த மூன்றாவது பதிப்பின் முன்னுரையிலேயே "சில பகுதிகள் நீக்கப்பட்டன” என்னும் குறிப்பு இடம் பெற்றிருப்பது அந்தப் பெரியவர்களுக்குச் சுட்டிக் காட்டப்பட்டதாம், ஆகவே. அவர்கள் அமைதி அடைந்திருப்பார்கள், "நமது முன்னோர்கள் செய்திருந்தால் அது நியாயமாகத்தான் இருக்கும், அதைக் கிண்டிப் பார்க்கிற கிறுக்குப் புத்தி நமக்கு வேண்டாம்” என்று முடிவெடுத்திருப்பார்கள், மேலும். தமிழையும் தமிழினத்தையும் காப்பதற்கென்று காப்பு கட்டிக் கொண்டிருக்கும் தங்களையன்றித் தமிழைப்பற்றிப் பேச இவர்கள் யார் என்று நம்மேல் அவர்களுக்கு ஒவ்வாமை இருக்கலாம், தமிழை ஒரு துறைசார் பொருளாக்கித் தூங்கப் பண்ணும் அவர்களது மயிர்க்கால்களில் உலகெங்கிலும் ஒரு புதிய அலையடிப்பாய்க் கிளர்ந்திருக்கும் தீவிர மறுவாசிப்பு எழுச்சி எவ்விதக் குறுகுறுப்பையும் ஏற்படுத்தியிருக்காது, அதனாலேயே அவர்கள் "நல்ல தமிழர்கள்” ஆகிறார்கள், "நல்ல பாம்புகள்” இல்லையா? நறுவிசான சாதியாள்களாகிப் போன வெகு நல்ல சூத்திரர்கள் அவர்கள்,

கால்டுவெல்லே சொல்கிறார்: தென்னிந்தியாவில் சூத்திரர் என்றால் அது வடஇந்தியாவில் போல் இழிபெயர் அல்லவாம், ஒருவேளை இனப்பெயராகப் பாவித்துக் கொண்டிருப்பார்கள், ஆனால் இந்தியத் துணைக்கண்டம் முழுவதிலுமே சமஸ்கிருதக் கலாச்சாரம் அரசதிகாரப் பொதுச் செலாவணியாகி நிலைத்த பின்னர் அந்த இனப்பெயரே இழிபெயராகிப் போனதென்பது தெரியாமலா தங்களைச் சற்சூத்திரர்கள் என்று அழைத்து மகிழ்ந்திருப்பார்கள் நமது சட்டாம்பிள்ளைத் தமிழ்ச் சாதியாள்கள்?

மனோன்மணியம் சுந்தரம் பிள்ளை அந்தப் பெயரை அவமதிப்புச் சின்னமாகக் கழித்துக் கட்டினபோதே அது இன்னொரு வகை சூத்திரப் பார்ப்பனியத்தின் வக்கிர வெளிப்பாடாகிப் போனதென்பதும் மறுக்க முடியாத உண்மை,*

வேதசகாயகுமாரின் கட்டுரையால் வந்த நல்லறமாய் கால்டுவெல் வெளியிட்ட இரண்டாம் பதிப்பின் மூலப்படியை எப்படியேனும் பார்த்துவிட வேண்டும் என்னும் என் விருப்பத்தை நண்பர்கள் சிலரிடம் சொல்கவைத்தேன் குறிப்பாக வேல்சாமியிடம் கொஞ்சம் அழுத்தமாக, காரணம். பழைய நூல்களைத் தேடிப் பிடிப்பதிலும் வாங்கிப் படிப்பதிலும்தான் அவர் கருத்தும் சமர்த்துமே அடக்கம்,

தேடலின் முதல் வரவாக ஏஷியன் எஜுகேஷனல் சர்வீசஸ் நிறுவனம் (Asial Educational Services- AES) 1998இல் மறு அச்சாக வெளியிட்ட ஒரு படியை நண்பர் கிடாம்பி எனக்களித்தார், (அதை நான் திருப்பித் தர வேண்டியிருக்கும் என்று நினைக்கிறேன்,) அது 1913இல் வெளியிடப்பட்ட மூன்றாம் பதிப்பின் மறுஅச்சு, நூல் நல்ல வெள்ளைத் தாளில், தெளிவான அச்சில், கெட்டிக் கட்டமைப்பில், அழுத்தமான தையலில், எளிதாகத் திறந்து பார்க்கும்படி அழகாக தயாரிக்கப்பட்டிருந்தது, ஆனால் அதன் சந்தைப்படுத்தலில் திணிக்கப்பட்டுள்ள பித்தலாட்டத்தை இங்கு சொல்லியே ஆக வேண்டும். 680 பக்கங்கள் உள்ள நூலின் அச்சிட்ட விலை ரூ.695/-, ஆங்கில நூல்களுக்கு வைக்கப்படும் நியாயமான விலை. ஆனால் அவ்விலையின் மேலேயே ஒரு மஞ்சள் வில்லைத்தாள் ஒட்டப்பட்டு அதில் ரூ.995/- என்று புதிய விலை குறித்து அந்த நிறுவனமே விற்றிருக்கிறது, நாம் ஒரு புதிய அகராதி எழுத வேண்டும். அதில் கறைபட்ட சொற்களைப் புதிதாக அர்த்தப்படுத்துவதன் ஓர் அடிப்படை அலகாக "இதுதான்-இந்த விற்பனைதான் புலைத்தொழில்” என்று சுட்ட வேண்டும், ஆனால் இதைச் செய்யாத நிறுவனங்களை விரல்விட்டு எண்ணிவிடலாம்தான்.

தொடர்ந்து, சென்னைப் பல்கலைக் கழக வெளியீட்டையும் வாங்கினேன். இது பற்றியும் எனக்குச் சொல்லிக்கொள்ள செய்திகள் உண்டு. உலகப் புகழ் பெற்ற பல்கலைக் கழகமல்லவா. ஆனால் எப்போது, எதற்காக என்பவை இப்போதைய கேள்விகள். அதன் நூல் விற்பனைத் துறை அவ்வளவு தூய்மையாகவும். சுறுசுறுப்பாகவும், நவீனத்தன்மையுடனும் இல்லை என்பதைப் பார்த்த மாத்திரத்திலேயே தெரிந்துகொள்ளலாம். அவர்களுடைய நூலாக்கங்களும் கிழடு தட்டிப்போனவையாகவே நீள்கின்றன. விற்பனைப்பிரிவு ஊழியருக்கு கால்டுவெல் நூல் பற்றி ஒன்றும் தெரியவில்லை. ஒரு நல்ல ஊழியர் குறைந்தபட்சம் கையிருப்பில் உள்ள நூல்கள் என்ன என்னும் தகவலறிவாவது பெற்றிருந்தால் நலமாயிருக்கும். நான் கேட்டதும் என்னையே தேடிப்பார்த்து, இருந்தால் எடுத்துக்கொள்ளச் சொன்னார். நானும் ஒவ்வொரு அலமாரியாய்த் தேடி, ஒன்றின் அடித்தட்டில் கட்டு பிரிக்கப்படாமல் இரண்டு பொதிகள் திணித்து வைக்கப்பட்டிருந்ததைக் கண்டுபிடித்தேன்.

அவற்றில் ஒரு கட்டை நெகிழ்த்தி ஒரு படியை எடுத்துப் பிரிக்கும்போதே மடிகள்(Forms) தையல் பிரிந்து வெளிப் பிதுங்கின. நான் ஒவ்வொன்றாய்ப் பிரித்துச் சோதித்து அவற்றுள் "தேவலை” என்று தோன்றிய ஒரு படியை எடுத்துப்போய் அவரிடம் கொடுத்தேன். அவர் ரசீது போடுவதற்காக அதைப் பிரித்தபோது அதுவும் நெக்கு விட்டுக் குலைவுற்றது. மீண்டும் நானே அதைக் கொண்டு சென்று திரும்ப வைத்துவிட்டு வேறொரு படியைத் தேடி எடுத்து வந்து கொடுத்தேன். அதையும் வீட்டில் கொண்டுவந்து பிரித்தபோது தையல் அறுந்து மடிகளும் தனித்தனித் தாள்களுமாகப் பிதுங்கின. அவற்றைக் கவனமாக உள்தள்ளி பசைத்தாள் போட்டு ஒட்டி வைத்திருக்கிறேன். 2000இல் வெளிவந்த நூல். அது வாசிப்பதற்காகத் தைக்கப்படவில்லை. தனித்தனிப் படிகளாகக் கணக்கு காட்டுவதற்காக ஒப்பேற்றப்பட்டிருந்தது. ராயல் வடிவில் தயாரிக்கப்பட்ட 676 பக்கங்களுள்ள நூல். விலை ஆக மலிவு. வெறும் ரூ.160/-தான். ஆனால் இதிலும் அதே தில்லுமுல்லுதான். (Deluxe Binding. Rs.200/-) என்று தனி முத்திரை குத்தி, 15% கழிவு நீக்கி ரூ.170க்கு எனக்கு விற்கப்பட்டது. "உலகமே நாடக மேடை. நாம் அதன் நாடகப் பாத்திரங்கள்” என்பது போல "எங்கும் மாமாக்கள் ராஜ்யம். நாம் அதன் ஏமாளிகள்” என்பதாகத்தான் இருக்கிறது நாட்டு நடப்புகள்.

நூலின் உள்ளடக்கத்தில் AES பதிப்பிலுள்ள பின்னிணைப்பில் 5 பக்கங்களும், 5 பக்கச் சொல்லடைவும் வெட்டியெறியப் பட்டிருந்தன. 1956இல் இருந்த பதிவாளர் எழுதிய 8 வரிக் குறிப்பும் 2000இல் துணைவேந்தராய் இருந்த பொன்.கோதண்டராமன் எழுதிய ஒரு பக்க முகப்புரையும் முன்பகுதியில் சேர்க்கப்பட்டிருந்தன. "பல்கலைப் பதிப்புக்”கான முத்திரை அது. அன்றைய துணைவேந்தரான பொற்கோ அவர்கள் மொழியியல் அறிஞரும் இலக்கியத் துறைஞருமான தமிழ்ப் படிப்பாளி. அவராவது முயன்று கால்டுவெல்லை முழுமையாகக் கண்டுபிடித்து வெளிக்கொண்டு வந்திருக்கலாம்.

ஆண்டுக்கொருமுறை ஊதிய உயர்வு பெறும் பணிப் பாதுகாப்புள்ள அரசூழியப் பொறுப்பில் அமர்த்தப்படும் கசுமாலங்களாயினும் அறிவாளிகளாயினும் எல்லாருமே ஒன்றுபோலத்தான் கலங்கிய குட்டையில் எருமைகளோடு குளித்துக் கரையேறும் மேய்ப்பர்களாகக் கோவணம் கசக்கிக் கொண்டிருக்கிறார்கள். ஒரு புகழ்பெற்ற பல்கலைக்கழகம் இவ்வளவு பொறுப்பற்ற முறையில் முதல் வாசிப்புக்குக்கூடத் தாங்காத நைந்த தையலோடு நூல் வெளியிடும் எனில் அதன் புகழ் எதன் பொருட்டு? நூலின் விலை ஆகக் குறைவாக மட்டுப் படுத்தப்பட்டிருப்பது எல்லா மக்களையும் சென்றடைய வேண்டும் என்னும் நோக்கத்தில்தான். விலை மட்டுப் படுத்தப்பட்டதில் பல்கலையோ, அச்சகமோ, தைக்கிறவரோ இழப்பது ஒன்றுமில்லை. சம்பந்தப்பட்ட துறையின் மாதச் சம்பளக் கூலிகள் இடைத்தரகர்களாகக் காசு பார்க்காதிருந்தாலொழிய இந்த அவலம் கண்டுகொள்ளாமல் விடப்பட்டிருக்காது. கையூட்டு கொடுக்க மறுத்தால் ஆகச் சிறந்ததும் தட்டிக் கழிக்கப்படலாம். கொடுத்துவிட்டாலோ குப்பையையும் காசாக்கிவிடலாம். பொறுக்கித்தனங்களாலேயே புனையப்பட்ட ஒரு சீரழிவுச் சமுதாயத்தில் சவடால் பேச்சைத் தவிர வேறென்ன சாதனை நிகழ்ந்துவிடப் போகிறது?

எனக்கு வேண்டியது கால்டுவெல் பதிப்போடு வைத்து ஒப்பிடக்கூடிய ஆங்கிலப் பதிப்புகள்தாம் என்பதால் தமிழ் மொழிபெயர்ப்புகளைக் கணக்கில் எடுத்துக் கெர்ளளவில்லை. கால்டுவெல்லே விரும்பியபடி, அவரைக் கடந்து சென்று பேசப்படக்கூடிய அளவுக்கு செழுமை செய்யப்பட்ட இன்னொரு ஒப்பிலக்கணம் இன்னும் எழுதப்படவில்லை. அதை விட, கால்டுவெல்லே இன்னும் முழுமையாகப் பதிப்பிக்கப் படவில்லை, அறிவு நாணயத்துடன் மதிப்பிடப்படவில்லை என்பதுடன், முறையாகவும் சரியாகவும் மொழிபெயர்க்கப்படவில்லை என்பது, முழக்கங்களாலேயே தமிழை உன்னதப்படுத்திவிட முனைகிறவர்களின் அதிகாரச் சுரணைக்குக் கொண்டு செல்லப்பட வேண்டிய புள்ளிகள்.

கடைசியில் எதிர்பார்த்ததை விடவும் எதிர்பாராத விதமாக என் விருப்பம் ஒரு வழியாக நிறைவுக்கு வந்தது, கால்டுவெல்லின் மூலப்பதிப்பு, ஒரு நூல் வடிவில் அல்லாமல், தலைப்பும் சில பதிப்புரைப் பக்கங்களுமின்றி. ஒளியச்சு செய்யப்பட்ட தாள்திரட்சியாக என் கைக்கு வந்து சேர்ந்தது. சேர்ப்பித்தவர் நண்பர் பொ.வேல்சாமி. அதற்குத் துணையிருந்தவர் நண்பர் பெருமாள்முருகன். நூலை ஒளியச்சு செய்துகொள்ளக் கொடுத்து உதவியவர் அரிய நூல்கள் பலவற்றைத் தேடிச் சேமித்துக் காத்து வரும் நாமக்கல் வணிகப் பெருந்தகை நா.ப. இராமசாமி அவர்கள். இந்த மூலநூல் தமிழ்நாட்டில் மிஞ்சிமிஞ்சிப் போனால் ஐந்து அல்லது ஆறு படிகள் இருக்கக்கூடும் என்று தோன்றுகிறது. அவை இருக்கின்றன என்பதைவிட ஒளித்து வைக்கப்பட்டுள்ளன என்பதே பொருந்தும். அவற்றுள் ஒன்றைக் கண்டுபிடித்துத்தான் வேதசகாயகுமார் பயன்படுத்துகிறார் என்று நினைக்கிறேன். அதனை அவர் தந்துதவ மாட்டார். அல்லது தந்துதவும் நிலையில் இருக்க மாட்டார் என்பது என் அனுமானம். ஆகவே, நா.ப.இராமசாமி அவர்கள் கொடுத்துதவியது இலண்டனுக்கே சென்று கண்டெடுத்ததற்குச் சமமானது. இவரைப் போலும் அறிவுச் சேகரம் பண்ணும் "கிறுக்குக் கனவான்கள்” சிலரேனும் இருப்பதால்தான் தமிழ் வரலாறு தன் புதையடுக்குகளிகருந்து மெல்லமெல்ல மீண்டெழுந்து கரையேறித் தெளிந்து வருகிறது.

இவருக்கொப்பாக, நூல்களைத் தேடுவதிலும் அவற்றை நுகர்ந்தளைவதிலும் வேல்சாமிக்குள்ள தேர்ச்சியை ஒப்பிட வேண்டுமானால், பட்டுத் துகிலைத் தன் கண்ணாலேயே தொட்டுப் பார்த்து அதன் தரம் கணிக்கிறவனின் தேர்ச்சியைத்தான் சொல்ல வேண்டும். இதில் இன்னொரு புள்ளியும் உண்டு. இந்தத் தேர்ச்சியை ஒரு வித்தைக்காரனின் சாகசம்போலக் காட்சிப்படுத்திக் கைதட்டலைக் கோருகிறவர்கள் அரசியலற்றுப் போகிற தொழில்நுட்ப வல்லுநர்களாகத் தங்களை அவதாரப்படுத்திக் கொள்கிறார்கள். அவதாரம் வியப்பூட்டும்தான். ஆனால் தனக்கான அரசியல் நிலைப்பாடுள்ள ஒரு எளிய மனிதன் அவதாரங்களைவிட அதிக நம்பகத் தன்மையுள்ளவனாகிறான். பிரயாசை இல்லாமல் நம்மோடு கை கோர்த்துக்கொள்கிறான்.

மாணவப் பருவத்தில் கால்டுவெல் பற்றி என் மனத் திரையில் ஒரு சித்திரம் வரையப்பட்டது. சீரும் சிறப்பும் செல்வச் செழிப்பும் மிக்க ஓர் இல்லம். சூதுக்கு இரையாகி, பார்வையும் ஊடுருவ முடியாத மையிருட்டில் மௌனப்பட்டுக் கிடந்தது. எங்கிருந்தோ வந்து பார்வையாளராய் வீட்டுக்குள் நுழைந்த பயணி ஒருவர் கருணை மிக்கவராய் நடுவீட்டில் ஒரு மெழுகுவர்த்தியைப் பொருத்தி வைத்தார். பொல்லென்று பூத்த ஒளியில் இல்லம் தன் பழம்பெருமையை மீட்டெடுத்துக்கொண்டு, வெளிச்சத்துக்கு வராத தன் பழஞ்சொத்துகளையெல்லாம் தேடி எடுத்துப் புத்தெழுச்சி பெற்றது.

இச்சித்திரத்தில் கால்டுவெல்தான் அந்தப் பயணி. அவரது நூல்தான் அவர் பொருத்தி வைத்த ஒளிவிளக்கு. சித்திரம் இன்றும் எவ்விதச் சேதாரமும் இல்லாமல் என் மனத்தில் புத்தம் புதிதாய்ச் சிரித்துக்கொண்டிருக்கிறது. கால்டுவெல் பல பரிமாணங்களிலும் தொடர்ந்து பேசப்பட்டிருக்க வேண்டியவர். அது நாம் அவருக்குச் செய்யும் சிறப்பு என்பதைவிட நம்மை நாமே மறுசீரமைப்புச் செய்துகொள்ளும் சமூக அறத்தின்பாற்பட்ட முன்னெடுப்பாய் இருந்திருக்கும்.

ஆனால் என்ன நடந்ததெனில், அவரது நூலின் தலைப்பைக்கொண்டே ஒற்றைப் பரிமாணம் கொண்ட மொழியியலாளராகவே அவரை அங்கிங்கசையாதபடி கட்டிப் போட்டுவிடும் முயற்சியில் அவரது நூலையே தங்களுக்கிசைந்தாற்போல் புடைத்தெடுத்துக்கொண்டார்கள்.

எனக்குக் கிடைத்த நூலை நான் இன்னும் முழுமையான வாசிப்புக்கு உட்படுத்தவில்லை. அதற்குச் சில காலம் பிடிக்கலாம். ஆனால் ஒரு மேலோட்டமான பார்வையிலேயே அவரது சமூக அரசியல் பேசும் அழுத்தமான நிலைப்பாட்டினை உள்வாங்கிக்கொள்ள முடிகிறது. இன வரைவியல் அடிப்படையிலான ஒரு சமூகப் போராளியின் கண்ணோட்டத்தைப் பிரதிபகக்கும் நிலைப்பாடு. நூலின் விரிவாக்கத்தில் விளைந்த அதன் சுயேச்சையான போக்கால் இந்த நிலைப்பாடு அவரை வந்தடைந்ததா, அல்லது நூலுக்கு வெளியேயும் அதைக் கொண்டிருந்தாரா, கொண்டிருந்தாரெனில் புறத்தே வேறெங்கேனும் அதைப் பதிவு செய்தாரா என்பவையெல்லாம் ஆய்வுக்குரியவை. நூலுக்கு அவர் எதிர்கொண்டிருக்கக்கூடிய கடும் விமர்சனங்கள் நடைமுறையில் அவரை சர்ச்சைக்கு அப்பாற்பட்ட இறையியலாளராக, அதிலும் ஆளும் வர்க்கச் சார்போடு இயங்குபவராகக் குவியப்படுத்தியிருக்கும் பட்சத்தில் அவருடைய புறப்பதிவுகளில் அந்த நிலைப்பாடு தவிர்க்கப்பட்டிருக்கலாம். ஒப்பிலக்கணம் அவரது ஆய்வறிவின் வெளிப்பாடு. பிற எழுத்துகள் ஒரு சராசரி பாதிரியின் அன்றாட முறைப்பாடு. இதை நான் இங்கே சொல்லக் காரணம், பறையர்கள் பற்றியோ அவர்களது அவலங்கள் பற்றியோ அவர் வேறெங்கும் பேச முனையவில்லை என்பதாக ஒரு பேச்சு நிலவுகிறது. (இது வெண்மணிப் படுகொலை பற்றி பெரியார் ஒன்றும் பேசவில்லை என்பதற்கொப்பானது.) ஆனால் அது எந்த விதத்திலும் நூலின் அரசியல் காத்திரத்தை எளிமைப்படுத்திவிடாது என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்.

கால்டுவெல் 1856இல் "திராவிட அல்லது தென்னிந்தியக் குடும்ப மொழிகளின் ஒப்பிலக்கணம்” (A Comparative Grammar of the Dravadian or South Indian family of Languages) என்னும் தலைப்பில் தன் நூலை வெளியிடுகிறார். உள்ளடக்கமும் தலைப்பும் ஒன்றுக்கொன்று இணக்கமாய்ப் பொருந்தியிருந்த முதல் பதிப்பு அது. தலைப்பில் உள்ள "திராவிடம்” என்னும் சொல்லும், "திராவிட மொழிகள்” என்னும் கருத்தாக்கமும் கால்டுவெல்லின் கண்டுபிடிப்புகளல்ல. ஏற்கனவே புழக்கத்திற்கு வந்துவிட்ட சொற்கள் அவை. 1801க்கு முன்பே "திராவிட மொழிகள்” சிலவும் அவற்றைக் குறிக்கும் அப்பெயரும் அடையாளப்படுத்தப்பட்டுவிட்டன. ஆயினும் "அப்படியொன்றும் இல்லை. சமஸ்கிருதத்திகருந்து தனித்து அடையாளப்படும் மொழிகள் ஏதுமில்லை. அப்படிச் சொல்லப்படுபவையும் சமஸ்கிருதத்திலிருந்து வந்தவையே” என்றே கூக்குரலிடப்பட்டது. அதாவது, இந்திய மொழிகள் அனைத்துக்கும் சமஸ்கிருதமே மூலம் என்பது ஐயத்திற்கப்பாற்பட்ட நம்பிக்கையாய்த் திணிக்கப்பட்டிருந்தது.

கால்டுவெல் செய்ததெல்லாம் அந்த நம்பிக்கையைக் குழி தோண்டிப் புதைத்ததுதான். ஏற்கனவே கண்டறியப்பட்ட மொழிகளையும் சேர்த்து முதற்பதிப்பின்போது 12 திராவிட மொழிகளை அடையாளப்படுத்தி "இவை சமஸ்கிருதத்துக்கு நேர் எதிர்த்தன்மை கொண்டவை. தனித்தன்மை பேணுபவை. தனித்தியங்குபவை” என்று ஆய்வு ரீதியாக நிலைப்படுத்தினார். மேலும், "திராவிட மொழிகளுள் தமிழ் மிகவும் பழமையானது; செழுமையானது; இலக்கிய வளப்பம் மிக்கது; தனித்துவமான மூலச் சிறப்புள்ளது” என்று சான்றாதாரங்களோடு மெய்ப்பித்தவரும் அவரே. அதாவது, தமிழின் செம்மொழித் தகுதியை முதன்முதலாக உலகின் பார்வைக்குக் கொண்டு வந்தவர் என்று சொல்லலாம்.

இங்கே நாம் ஓர் உண்மையைத் தெளிவாக நினைவில் கொள்ள வேண்டும். கால்டுவெல்தான் தன் ஆய்வின் மூலம் முதன்முதலில் திராவிட மொழிகளின் தனித்தன்மையை நிலைநாட்டியவர்; தமிழின் தொல்பழஞ் சிறப்பை விதந்து கூறியவர். அதற்கும் மேலாக, "பிற திராவிட மொழிகளின் பெருவாரியான சிறப்புச் சொற்கூறுகளை யெல்லாம் தன்னகத்தே கொண்டிருக்கும் தனிச்சிறப்பு தமிழுக்கு மட்டுமே உண்டு” என்று கண்டறிந்து நம்மைப் பெருமிதப்படுத்தியவர். ஆனால் நம்மில் பெரும்பாலோர் முழங்கிக்கொண்டிருப்பது இதற்கு முற்றிலும் மாறுபட்ட ஒன்றை- அதாவது, தமிழிகருந்துதான் பிற திராவிட மொழிகள் தோன்றின என்பதாக. இதைக் கால்டுவெல் சொல்லவில்லை. நம்மில் எந்த மொழி அறிஞரும்கூட உலகம் ஒப்பும்படி மெய்ப்பிக்கவில்லை. பிறகு நமக்கெதற்கு இந்த வில்லங்கமான ஆசை? தமிழர்களின் இந்த "அடாவடித்தனமான உரிமை கோரல்” பங்காளி மொழிக்காரர்களைப் பதற்றத்தில் ஆழ்த்துகிறது. குதர்க்கத்தை வளர்க்கிறது.

ஏற்கனவே பிற திராவிடச் செவ்வியல் மொழிகள் விடுபட முடியாதபடி சமஸ்கிருதக் கூறுகளை உள்வாங்கிக்கொண்டு, உளவியல் ரீதியாகத் தமிழ்-தமிழர்க்கொதிரான பகை முகத்தை எழுதிக்கொண்டுவிட்டன. கடைசியில் சமஸ்கிருதத்திகருந்து தன்னந்தனித்ததாக எஞ்சி நிற்பது தமிழ் மட்டுமே என்றாகிவிட்டது. இது ஒருவகை அரிய சிறப்புதான் எனினும் முற்றும் சமஸ்கிருத மயமான இந்தியப் பின்புலத்தில் ஒற்றையாய் நின்று உட்பகையையும் வெளிப்பகையையும் வென்றெடுப்பதென்பது உயிர்வாதையாய் மாறி வருகிறது. சூரியக் குடும்பம் ஒரு காலத்தில் பரந்து விரிந்த நீர்மமாய் சுற்றிக்கொண்டிருந்தது என நம்பப்படுகிறது. (இங்கே வேறொரு கட்டுரையிலும் இது சொல்லப்படுகிறது.) கோடிக்கணக்கான ஆண்டுகளுக்குப் பின் ஒரு கட்டத்தில் அது மெல்லமெல்ல உறைந்து, விரிசலுற்று, பல துண்டுகளாகச் சிதறித் திரண்டு, இன்றுள்ளதைப்போல தனித்தனிக் கோள்களாகத் திடப்பட்டன என்பார்கள், ஒவ்வொன்றும் வெவ்வேறு காலகட்டத்தில் வெவ்வேறு நிறையீர்ப்பில் திடப்பட்டு, ஒருபோக்கான வெவ்வேறு ஓடுபாதையில் நிலைப்பட்டது என்பது கவனத்தில் கொள்ள வேண்டிய அம்சம். அவற்றுக்குள்ள ஒற்றுமை அவை ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவை. ஒரே மூலத்திகருந்து பிரிந்தவை என்பதே.

திராவிட மொழிகளுக்கும் இதுதான் சூத்திரம். எல்லா மொழிகளும் திராவிட மூலத்திகருந்து வெவ்வேறு காலகட்டத்தில் திரண்டு பிரிந்தவை. ஆகவே அவற்றின் மாதிரிகளும் இயங்கு திசைகளும் பொதுத்தன்மை உள்ளவையாகின்றன. முதகல் பிரிந்த தமிழானது திராவிட மூலத்தின் குவிமையத்திகருந்து வெளித்திரண்டிருக்கலாம். அதனால்தான் திராவிட மூலக் கூறுகள் அனைத்தையும் தன்னுள் சேமித்துக்கொண்டதாய் இருக்கலாம். ஒவ்வொரு மொழியும் எப்போது ஒழுங்கமைதி பெறுகிறதோ, அப்போதிருந்துதான் அதன் வரலாற்றடையாளம் தொடங்குகிறது. ஆனால் அதன் தனித்திரட்சிக்கான வளர்சிதைமாற்றங்கள் பல நூற்றாண்டுகளுக்கு முன்பிருந்தே நடந்துகொண்டிருக்கும். திராவிடச் செவ்வியல் மொழிகளில் மலையாளத்தின் தோற்றம்-அதாவது வரலாற்றடையாளம்- மிக இளமையானது. ஆனால் அதன் தனித்திரட்சிக்கான முன்னெடுப்புகள் வெகுகாலத்துக்கு முற்பட்டிருக்க வேண்டும். 8ஆம் நூற்றாண்டில் மலையாளம் "இல்லை”. ஆனாலும், அப்போது பிறந்த ஆதிசங்கரன் சிலப்பதிகாரத் தமிழையோ பாண்டித் தமிழையோ பேசியிருக்க மாட்டான். பேசியிருந்தால் சம்பந்தனை "திராவிட சிசு”-அதாவது "தமிழ்க் குழந்தை” என்று பிறனாய் அடையாளப்படுத்தியிருக்க மாட்டான். ஆகவே அவன் பேசிய மொழி தமிழ் அன்று. அவனும் தமிழனல்லன். (அவன் ஒரு நம்பூதிரியாதலால் தமிழனல்லன் என்பதாக இடைவெட்டும் இனப்பகையை இங்கு பொருட்படுத்தவில்லை.) அவனை மலையாளக் கூறுகளுள்ள ஆனால் "மலையாள”மாகாத ஒரு மொழிக்குரியவன் என்று அடையாளப்படுத்தலாம். (அரசதிகார வரலாறு அவனைக் "கேரளீயன்” என்று சுட்டும். இந்தப் பெயர் நிலம் சார்ந்த சிறப்புச் சுட்டலாக மாமன்னன் அசோகன் கால முதலே தொடர்ந்து வந்திருக்கிறது.) அதை விடுத்து, அப்போது மலையாளம் இல்லையாதலால் அவன் தமிழ் பேசிய தமிழனே என்று வரையறை செய்வது குதர்க்கமே தவிர வேறில்லை.

2ஆம் நூற்றாண்டுக்குப் பின்னர் தமிழ்நாட்டைக் களப்பிரர்கள் ஆண்டார்கள். அவர்கள் இன்றைய கன்னட நிலப்பகுதியிகருந்து வந்தவர்கள். அப்போது கன்னடம் அடையாளப்பட்டிருக்கவில்லை. அவர்களும்கூட தமிழ் வளர்ச்சியிலும், பொதுக்கல்வியைப் பரப்புவதிலும், பார்ப்பன வரலாற்றுச் சொல்ககள் அவர்களது ஆட்சிக் காலத்தை "இருண்ட காலம்” என்று சபிக்கும்படியாக பார்ப்பனர்களையும் பார்ப்பன தர்மங்களையும் ஒடுக்குவதிலும். பௌத்த- ஜைன மதங்களை ஆதரிப்பதிலும் தமிழிலும் தமிழ்நாட்டிலும் மறுமலர்ச்சியைத் தோற்றுவித்தவர்கள். ஆயினும் அவர்கள் தமிழர்களா என்றால், இல்லை. (இல்லை என்று எல்லாரும் எளிதாய் நம்புகிறார்கள். காரணம் பார்ப்பனர்கள் அந்தக் காரியத்தை ஏற்கனவே செய்துவிட்டார்கள்.) திராவிட மொழிகளின் சகோதரத்துவம் பற்றிய இவ்வகைப் புரிதலே திராவிடர்களை சமப் பங்காளிகளாய் ஒருங்கிணைக்கும் அர்த்தமுள்ள காரணிகளாய் இருக்கும்.

கால்டுவெல்லின் ஒப்பிலக்கணமே அப்படியோர் திராவிட ஒருங்கிணைவை- சமஸ்கிருதத்துக் கெதிரானதும் அதன் மேன்மை-தாழ்மைக் கோட்பாடுகளைக் கடும் பகடிக்குட்படுத்துவதுமான திராவிட ஐக்கியத்தை ஓர் இயங்குவிதியாய் வரையறுக்கும் கலகப் படைப்புதான். கலகம் ஒப்புக்கொள்ளப்படும்போது அதுவே புரட்சியாகப் போற்றப்படுகிறது. புரட்சி தோற்கும்போது கலகமாக ஒடுக்கப்படுகிறது. கால்டுவெல் நூலுக்கு இரண்டுமே நேரவில்லை. அப்படி நேராமல் பார்த்துக்கொண்டதில் ஆதிக்கத் தமிழ்ச்சாதிகளுக்கு எந்தவிதக் குற்றவுணர்வும் இல்லை. அதன் வெளிப்பாடுதான் கால்டுவெல் வெறும் ஒப்பிலக்கணவாதியாய் இருட்டடிப்புச் செய்யப்பட்டது.

இந்தியாவுக்கு வந்த எல்லா பாதிரிகளையும் போலவே கால்டுவெல்லும் சமஸ்கிருதம் கற்றவர்தாம்; நேசித்தவர்தாம்; வியந்தவர்தாம், தமிழைவிட சமஸ்கிருதம் அதிகப் பழமையும் இலக்கியச் செழுமையும் கொண்ட மொழி என்னும் தகவலறிவில் நம்பிக்கை கொண்டவர்தாம். ஆயினும் தமிழைப் பற்றித் தாம் கண்ட உண்மைகளைத் தயங்காமல் எடுத்துவைப்பதில் நேர்மை காத்தவர். எனவேதான். தென்னிந்திய மொழிகளின் அகராதிகளில் மகந்து கிடக்கும் சமஸ்கிருதச் சொற்களைக் கருத்தில் கொண்டு. "சமஸ்கிருதத்திகருந்தே அவை உருவாயின” என்று பலரும் முடிவு செய்த குருட்டுத்தனத்தை அவர் மேற்கொள்ளவில்லை.

திராவிட மொழிகள் சமஸ்கிருதத்துக்கு நேர் எதிர்த்தன்மை கொண்டவை என்பதை வலுப்படுத்தும் விதமாக. அவை சித்தியன் மொழிக் குடும்பத்துக்கு நெருக்கமானவை என்பதையும் அவரே நிறுவுகிறார். இது அவரது ஆய்வினை ஓர் எதிர்ப் புரட்சியின் வலிய போர்க்கருவியாக- சமஸ்கிருத மேன்மைக் கோட்பாட்டைக் கேள்விக்குள்ளாக்கும் கலகக் குரலாகத் தன்னடையாளம் கொள்ள வைக்கிறது.

முதல் பதிப்பின்போது அவருக்கு இது ஒரு புதிய கண்டுபிடிப்பு மட்டுமே. ஆனால் இரண்டாவது பதிப்பின்போது இதுவே அவரை வழி நடத்தும் காரணியாகிவிடுகிறது. சமூக மதிப்பீட்டில் இதன் பாரதூரமான தாக்கம் சரியாகவே உணரப்பட்டிருந்தது.

சமஸ்கிருதம். யுரேஷியராகத் தோற்றம் பெற்று, இந்தோ - ஆரியராக நிலைப்பட்ட வெண்ணிறத்தவரின் மொழி. ஐரோப்பிய வெள்ளையர்க்குச் சகோதர மொழி. வெண்மை, மேன்மையின் சின்னம்; உயர்வின் அடையாளம். ஐரோப்பியர் இன்னும் வெள்ளையாகவே இருந்து அந்த உயர்வின் உளவியலை அடை காக்கிறார்கள். இந்தோ -ஆரியர்களின் வெண்மையோ வரைமுறையற்ற இனக்கலப்பால் கலங்கிக் கறுத்துக் குழம்பிப் போய்விட்டது. ஆயினும் சமஸ்கிருதத்துக்குச் சொந்தம் கொண்டாடுகிறவர்கள் தங்கள் வைதிகக் கோட்பாடுகளாலும் கலாச்சார வீச்சின் வலிய மனோபாவத்தாலும் தங்களை இன்னும் "மேலானவர்கள்” என்பதாகவே கற்பிதஞ் செய்துகொண்டு நடைமுறைப்படுத்தி வருகிறார்கள். சித்தியன் (துரானியன்) மொழிக்குடும்பம் கறுப்பு நிறம் சார்ந்தது. மனிதகுலத்தில் ஆகத்தாழ்வின் அடையாளம். வெள்ளையை மேன்மையின் சின்னமாகக் கொள்பவர்களுக்கு கறுப்பு கீழ்மையின் வெளிப்பாடு. தமிழை சமஸ்கிருதத்தோடு தொடர்பு படுத்தும்போது அதற்கொரு ஒளியும் மேன்மையும் வந்துவிடுமாம்.

அப்படிப்பட்டதொரு மேன்மையின் ஆசீர்வதிப்பில் தன்னை ஒரு "தாழ்மையுள்ள தமிழ் மாணவன்” என்று ஜி.யு.போப் ஐயர் தன் கல்லறையில் எழுதிவைக்கச் சொல்லும்போது அவரது வெள்ளை நிறம் கண்ணியம் காத்துக்கொள்கிறது. அல்லாமல் சித்தியன் மொழிக் குடும்பத்தோடு சம்பந்தப்படும் தமிழுக்குத் தன்னை மாணவனாக்கிக் கொள்வதெனில் அது வெள்ளை ஐயருக்கு வெட்கக்கேடான வீழ்ச்சியாகிவிடுகிறது. கால்டுவெல்லின் ஆய்வு முடிவுகளுக்கு ஜி.யு.போப் கடும் கண்டனம் தெரிவித்தார் எனில் அதன் வேர் மூலம் இப்படியாகத்தான் நீள்கிறது. இது இன்னொரு உள்ளோட்டத்துக்கும் இட்டுச் செல்கிறது: தமிழ் அதன் உள்ளார்ந்த செழுமைக்காகப் போற்றப்பட்டதைவிட அதை சமஸ்கிருதச் சார்பின் கிளைச்செழுமையாகக் கருதித்தான் ஜி.யு.போப் போன்றவர்கள் போற்றியிருக்கிறார்கள் என்றாகிறது. இதைத்தான் நீரைவிடக் குருதி நெருக்கமானது என்பது. கால்டுவெல்லுக்கு கறுப்பைப் பற்றிய ஒவ்வாமை இல்லை என்பதோடு சமஸ்கிருதக் கலாச்சாரத்தின் மேன்மைக் கோட்பாட்டிலும் உடன்பாடில்லை என்பது தமிழுக்கு அவர் வழங்கிய நேர்மையான கொடை.

150 ஆண்டுகளுக்கு முன் இந்திய மொழியியலில் நிகழ்த்தப்பட்ட முதல் முயற்சியாக கால்டுவெல் தன் ஒப்பிலக்கணத்தை உருவாக்கினார். தமிழுக்கு மக்களாய்ப் பிறந்த இன்றைய நம் தமிழறிஞர்கள் பலரை விடவும் அதிகம் தமிழறிந்தவர் கால்டுவெல் என்று சொன்னால் அது தவறாய் இருக்காது. அவர் ஒன்றும் வரலாறு படைக்க ஆசைப்பட்டுத் தன் நூலை எழுத முனையவில்லை. தமிழை அதன் கடைசிக் கணு வரை கண்டு சுவைக்கும் ஆசையோடே எழுதினார். உண்மையில் திராவிட மொழிகளின் சிறப்பையும் உயிர்ப்பையும் வெளிச்சப் படுத்துவதெனில் அவற்றை ஒப்பாய்ந்து கற்பதொன்றே சரியான வழி என்பது அவரது அறிவியல்பூர்வமான நம்பிக்கையாய் இருந்தது. தனக்குப் பின் தென்மொழிகளின் சொந்தக்காரர்களே இன்னும் தீவிரமாக, ஆழமாக, விரிவாக ஒப்பாய்வு செய்து தங்கள் மொழிகளின் சீர்மையை வெளிச்சப்படுத்த வேண்டும், அதற்குத் தனது நூல் ஒரு முன்மாதிரியாய் இருக்க வேண்டும் என்பது அவருடைய பெருவிருப்பாய் இருந்தது. ஆனால் அதை நிறைவேற்றும் அருகதையை நாம் இன்னும் பெறவில்லை.

திராவிட மொழியியலில் இன்றைக்கும் அவருடைய நூல்தான் முதலும் கடைசியுமாகப் பெயர் சொல்லிக் கொண்டிருக்கிறது எனில், அதுவே அவரது சிறப்பையும் நமது பொறுப்பின்மையையும் ஒருசேரச் சுட்டும் சாட்சியமாகிறது.

கால்டுவெல்லின் ஒப்பிலக்கணம் அவரது முப்பத்தேழாண்டு காலத் தமிழுறவிலிருந்து காதல் மிக்க கரிசனத்தோடு வடித்திறக்கப்பட்ட இனிய சாரம். அதன் முதல் பதிப்புக்கு அவர் எதிர்பார்த்ததை விடவும் மிகுந்த வரவேற்பு கிடைத்ததென்கிறார். ஆயினும் அதன் இரண்டாம் பதிப்பு அடுத்து 19 ஆண்டுகள் கழித்து 1875இல்தான் கொண்டுவர முடிந்திருக்கிறது. அதில் மேலும் ஒரு திராவிட மொழி அடையாளப் படுத்தப்பட்டது. இந்த நீண்ட இடைவெளியில் அவர் சேமித்த பட்டறிவும் ஆய்வுமுறையின் புதுப்போக்குகளும் அவரது முதல் பதிப்பின் குறைபாடுகளையும் போதாமைகளையும் கவனம் கொள்ள உதவுகின்றன. ஆகவே, தன் நூலைத் திருத்தியும், விரித்தும், புதுக்கியும், எதிர்வரும் ஐயங்களைச் சோதித்தும்,

சரிபார்த்தும், காலப்பரிமாணத்தை முன்னடைவு செய்தும் ஏறக்குறைய ஒரு புது நூலாகவே செழுமைப்படுத்தி இரண்டாம் பதிப்பாகக் கொண்டுவருகிறார். இப்போது அவரது முதல் பதிப்பு கிடைக்குமெனில், இரு பதிப்புகளையும் ஒப்பிட்டு அவரது ஆய்வுச்சிந்தனையின் போக்கையும் புதிய வெளிச்சங்களையும் வெகு துல்லியமாகக் கண்டறிந்து வகைப்படுத்தலாம். முதல் பதிப்பில், நூலின் குவியத்தைக் கருத்தில் கொண்டுதான் அதற்கான தலைப்பைத் தெரிவு செய்திருப்பார். ஆனால் இரண்டாம் பதிப்பில் உள்ளடக்கம் தலைப்புக்குள் ஒன்றுக்கு ஒன்று என்னும் விகிதத்தில் அடங்க மறுத்து, உடன்பாடான திசையில் தன்னிச்சையாய்ப் பரவி விரிகிறது. ஒளியின் குவிமையம் எரியும் திரிதான் என்றாலும், அதன் வெளிச்சம் வெகுதூரம் வரை பரவித் தாவுவதைப்போன்றதொரு அளாவுதலில் விசாலிக்கிறது. எனில், எப்போது புதிய பேசுபொருள்கள் நூலின் உள்ளடக்கமாகச் சேர்க்கப்பட்டனவோ அப்போதே அதன் தலைப்பிலும் அதைப் பிரதிபலிக்கும் வகையில் தகுந்த இணைப்பைச் செய்திருக்கலாமே என்று தோன்றுகிறது.

அதாவது, ஓர் உதாரணத்துக்குச் சொல்வதெனில் ஏற்கனவே இருக்கும் தலைப்போடு “and A critical Review of the social evolution of the Dravidians of South Indians” என்பது போல ஏதேனும் பொருத்தமான ஒன்றை இணைத்து, புதிய சேர்க்கையை நூலின் பிரிக்க முடியாத அங்கமாக்கிப் பெயரடைவு செய்திருக்கலாமே என்று படுகிறது. இது ஒருவகையில் கொடுத்த தலைப்புக்குள் கட்டுரை எழுதப் பயிற்றுவிக்கும் பள்ளிச் சிறுவர் விவகாரம்தான். அதனால்தானோ என்னவோ கால்டுவெல்லுக்கு அது தோன்றவில்லை. அதற்கு மாறாக, அந்தச் சாதனையாளர் இரண்டாம் பதிப்பைத் தயாரித்ததில் தான் செலுத்திய அக்கறையும் உழைப்பும் கொஞ்சநஞ்சமல்ல என்று தன்னைத்தானே தட்டிக்கொடுத்துத் தேற்றிக்கொள்கிறார். அதற்கு மேலும் சென்று, "தான் மிகுந்த ஈடுபாட்டோடு உழைத்துத் திரட்டித் தந்துள்ள பல குறிப்புகளும், திராவிட மொழிகளைச் சிறப்புப் பாடமாகப் பயில்கிறவர்களுக்கு வேண்டுமானால் மட்டு மீறிய ஈடுபாட்டைத் தருவதாயிருப்பினும், மற்றவர்களுக்குக் கொஞ்சமும் ஈர்ப்பற்றதாகவும் தேவையற்றதாகவும் இருக்கவும் வாய்ப்புண்டு” என்று ஓர் எதிர் சாட்சியம்போல் வீண் எக்களிப்பைத் தவிர்க்கும் நல்லடக்கத்தோடு சொல்லி வைக்கிறார்.

இந்த வாசகங்களில் தெரியும் நம்ப முடியாத அளவு பாசாங்கற்ற கால்டுவெல்லைத் தாங்கவும் கொண்டாடவும் தவறுவீர்களெனில், சந்தேகமே இல்லை- நீங்கள் தார்க்குச்சியால் வழிநடத்தப்படும் வ(ச)ண்டி மாடுகள்தாம். ஆனால் அதுதான் நடந்தது. கால்டுவெல்லின் இந்த அறிவிப்பையே சாக்காகக் கொண்டு அவர் காலத்திற்குப் பிறகு 1913இல் மூன்றாம் பதிப்பை வெளியிட்டவர்கள் "கால்டுவெல்லே ஒத்துக் கொள்வதைப்போல, நூலின் மைய நீரோட்டத்துக்குப் பொருந்தாத பகுதிகளை நாங்கள் நீக்கிவிட்டோம்,” என்று வெகு அலட்சியமாக அறிவிப்பதுடன், "முழுதும் சர்ச்சைக்குரிய பிரச்சினைகள் பலவும் பேசியுள்ளார். பல பக்கங்கள் நீளும் அவற்றையும் நீக்கிவிட்டோம்,” என்று நூலாசிரியரையே குறை கூறித் தங்கள் அத்துமீறலை நியாயப்படுத்தியுள்ளனர். இதில் அவர்கள் சொற்களின் தொனிப்பொருள் அவர்களுடைய செயலை விடவும் அருவருப்பாய் உள்ளது.

மனித விழுமியங்களின் இனிய சித்திரமாய்த் தன்னை ஒப்புக்கொடுக்கிற தோழன் ஒருவனின் தொண்டைக் குழியைக் கவ்விக்குதறி இரத்தம் குடிக்கிற செயலோடு இதை ஒப்பிடலாம். இரண்டாம் பதிப்பின் ஒளியச்சுத் தாள்கட்டு என் கைக்கு வந்தபோது அடைந்த முதல் பரவசத்திலிருந்து மீண்டு இயல்பு நிலையை எட்டியதும் நான் செய்த முதல் வேலை, என்னிடமுள்ள மூன்றாம் பதிப்பை வைத்துக்கொண்டு எவையெல்லாம் நீக்கப்பட்டுள்ளன என்று கணக்கெடுத்ததுதான்.

நீக்கப்பட்ட பகுதிகள்:

1. The relative antiquity of Dravidan Literature என்னும் தலைப்பின் கீழ் வரும் 34 பக்கங்களுள்ள முழுப்பகுதியும்

2. பின்னிணைப்புகளில்,

II Remarks on the Philological portion of Mr,Gover’s “Folk songs of Southern India”
III, Sundara Pandya
IV, Are the Pariars (Pareiyas) of Sourthern India Dravidans?
V, Are the Neilghery (Nilagiri) Tudas Dravidans?
VI, Dravidian physical Type
VII. Ancient Religion of the Dravidians

இந்த 6 தலைப்புகளில் மொத்தம் 76 பக்கங்கள். பொருளடக்கத்தில் இவை நீக்கப்பட்ட 3 பக்கங்கள்.

3. அடிக்குறிப்புகளாகக் கொடுக்கப்பட்ட 507 வரிகள்.

4. நூலின் உட்பகுதிகளிலிருந்து அங்கங்கே பத்திகளாகவும் பக்கங்களாகவும் (குறிப்பாக Introduction பகுதியிலிருந்து).

மொத்தம் நீக்கப்பட்ட பகுதிகள் மூன்றாம் பதிப்பின் அச்சு வடிவத்தில் 160 பக்கங்கள் வரக்கூடியவை. இதில் வெறும் 48 பக்கங்கள் உள்ள இரண்டு பகுதிகளை நீக்கியதற்கான காரணங்களை மட்டும் தருகின்றனர். 1. "திராவிட இலக்கியங்களின் பழமை”ப் பகுதியை நீக்கக் காரணம்: "அது நூலின் மையக்கருத்துக்குத் தேவையில்லாதது. பழங்கால நூல்களுக்கு கால்டுவெல் கணித்த காலங்கள் பலவும் காலாவதியாகிவிட்டன (இது உண்மை).” 2. பின்னிணைப்பில் கோவருக்கு கால்டுவெல் தரும் பதிலை மட்டும் குறிப்பிட்டு அதை நீக்கியதற்கான காரணம்: "கணக்கில் எடுத்துக்கொள்ளத் தேவையற்ற அல்லது காணாமல் போய்விட்ட எழுத்தாளர்களின் கருத்துக்கு கால்டுவெல் பெரும் சிரமம் எடுத்துக் கொண்டு பல பக்கங்களில் கூறும் அவை வீண் சர்ச்சைக்குரிய விஷயங்கள்.”

மீதமுள்ள 70 சதவீதப் பக்கங்களை நீக்கியதற்கு அவர்கள் வெளிப்படையாக ஒரு காரணமும் சொல்லவில்லை என்பது மட்டுமல்ல, அப்பகுதிகளைப் பெயர் சொல்லிக் குறிப்பிடுவதைக் கூட வெகு சாமர்த்தியமாகத் தவிர்த்துவிடுகின்றனர். அப்பகுதிகள் ஆதிக்கத் தமிழ்ச் சாதிகளின் உள்ளாவிக்கு விடப்பட்ட அறைகூவல்கள். இந்த உள்ளாவியின் பரந்த பின்புறத்தில் பார்ப்பனர்களின் பதுங்கு குழிகள் எப்போதும் நிரம்பியிருக்கும். அவர்களைக் காரணம் சொல்லித்தானாக வேண்டும் என வற்புறுத்தியிருந்தால் "அவை நூலின் மைய நீரோட்டத்துக்குப் பொருத்தமில்லாதவை” என்றுதான் சொல்லியிருப்பார்கள். அதை வெகு சாடைமாடையாகத் தங்கள் முன்னுரையின் கடைசிப் பகுதியில் சொல்லவே செய்கின்றனர். "கீழை தேயத்து மொழிகளை மாணவர்கள் கற்பதற்கான தொடர்புப் பாலமாய் கால்டுவெல் நூலை இணக்கப்படுத்துவதே எங்களது முக்கியப் பணி,” என்பது அவர்களது வாக்குமூலம்.1

Our sole object has been to enable students to obtain access to so much of the author’s work as retain a permanent value in view of the increased attention paid to the study of oriental languages in general,- Editor’s Preface for the third edition

ஒரு நூல், அது எழுதப்பட்ட காலத்தின் இருப்பையும், கருத்தையும், தகவல்களையும், தடயங்களையும் அடிப்படையாகக் கொண்டே எழுதப்படுகிறது. அதைப் படிக்கிறவன் அல்லது பதிப்பிக்கிறவனின் விருப்பத்தையும் தேவையையும் கருதி எழுதப்படுவதில்லை. இந்த மலைமுழுங்கிப் பதிப்புச் செம்மல்களைப்போல ஒவ்வொருவரும் செய்யத் துணிந்தால் உலகத்தில் நூல்கள் வெறும் சோரக்குவியல்களாகவே மிஞ்சும். அவற்றை மானுடக் கசாப்புக் கடைகளில் கூறு கட்டி விற்கலாம்.

"தென்னிந்தியாவின் நாட்டுப் பாடல்கள்” எழுதிய கோவர் முக்கியமானவரா முகவரியற்றவரா என்பதுகூட கால்டுவெல்லின் பிரச்சினையில்லை. மொழியியல் பற்றிய அவரது கூற்றுகளை விவாதித்துத் தன் நிலைப்பாட்டினை நியாயப்படுத்த வேண்டியது அவரின் கடமை. அதைத்தான் அவர் செய்துள்ளார். இந்தப் பதிப்பாளர்கள் கோவரை வெற்றாள் என்று கட்டம் கட்டுவதன் மூலம் கால்டுவெல்லின் கடமையையே கொச்சைப் படுத்துகின்றனர். ஒருவர் வெற்றாளா வெற்றியாளரா என்பது அவரை எதிர்கொள்கிறவர்கள் தீர்மானிக்க வேண்டிய கருதுபொருள். இராமாயணத்தையோ மகாபாரதத்தையோ குழி தோண்டிப் புதைத்துவிட முடியும் எனில் வால்மீகியும் வியாசனும்கூட வெற்றாள்கள்தாம்.

இவ்வொப்பிலக்கண நூலின் அடிக்குறிப்புகள் அனைத்தையும் ஏன் நீக்கினார்கள் என்பதற்குக் காரணம் சொல்லப்படவில்லை. அடிக்குறிப்புகள் நூலுக்கு இணையான முக்கியத்துவமுள்ளவை. எழுதியவரின் கடின உழைப்பைக் கோருபவை. அவரது அரசியலையும் மதிப்பீடுகளையும் பேசுபவை. மேலதிகத் தகவல்களை அடைகாப்பவை. உதாரணத்துக்கு ஓர் அடிக்குறிப்பைப் பார்க்கலாம். நூலின் 3ஆம் பக்கத்திலேயே வரும் அடிக்குறிப்பு இப்படிப் பேசுகிறது: "ஆங்கிலத்தைப் பயன்படுத்தும் அரசுப் பணியாளர்கள், பல்கலைக் கழகத் தொடர்பாளர்கள் தவிர ஆங்கிலம் ஒருபோதும் பொதுமக்கள் மொழியாக முடியாது. அப்படி ஆகவேண்டுமெனில் நாட்டு மக்கள் தொகைக்குப் பொருத்தமாக ஆங்கிலேயக் குடிகளும் கூடுதலாய் இருக்க வேண்டும். ஆனால் இப்போதைய தொகை சொல்லிக் கொள்ளும்படியாய் இல்லை. திருநெல்வேலி, மதுரை ஆகிய இரு மாவட்டங்களின் மொத்த மக்கள்தொகை 40 இலட்சம். ஆனால் இங்குள்ள ஆங்கிலேயர்களின் எண்ணிக்கையோ வெறும் 150 மட்டுமே. நீதிபதிகள், காவல்துறை அதிகாரிகள், எஸ்டேட் சொந்தக்காரர்கள் என்போரைச் சேர்த்துத்தான் இந்தத் தொகை. பெண்களையும் குழந்தைகளையும் சேர்த்துக் கொண்டாலும் 200க்குக் குறைவுதான். 40 இலட்சத்திற்கெதிராக விரல் விட்டு எண்ணக்கூடியவர்களாய் ஆங்கிலேயர்கள்!” என்று சொல்லிச் செல்கின்றார். இப்படி ஒவ்வொரு அடிக்குறிப்பும் தன்னளவில் முக்கியத்துவம் வாய்ந்ததே. ஆனால் எல்லாவற்றையும் நறுவிசாகத் துடைத்து விட்டார்கள். இதற்குப் பெயர்தான் பதிப்புப் பணி என்றால் இதைச் செய்த மண்டைக்குள் என்ன வஞ்சகம் பிறாண்டிக் கொண்டிருந்திருக்கும்?

"திராவிட இலக்கியத்தின் பழைமை” பற்றிய பகுதியில் பழம் நூல்களுக்குக் கால்டுவெல் கணிக்கும் காலங்கள் இன்றைக்கு அபத்தமானவைதான். ஆனால் அவர் காலத்தில், பல தமிழ்நூல்கள் அறியப்படாத நிலையில், அவருக்குக் கிடைத்த தகவல்களைக் கொண்டு, நடுநிலை நிற்க விரும்பும் ஓர் அந்நிய அறிவியல் மனத்துக்கு அவ்வளவுதான் கண்டடைய முடிóதிருக்கிறது. "கான மயிலாட கண்டிருந்த வான்கோழி,,,” என்னும் பாடலில் வரும் "வான்கோழி”யை வைத்துக்கொண்டு ஒளவையார் காலத்தை 18ஆம் நூற்றாண்டு வரை தள்ளிக்கொண்டு வந்து பார்க்கலாமா என்று மலைத்துப் போகிறார்.

வான்கோழி, 18ஆம் நூற்றாண்டில்தான் இந்தியாவுக்கு அறிமுகமாகிறது என்று அவர் சொல்ல, "இல்லை. அதற்கு முன்பே இங்கு இருந்தது” என்று அக்காலத் தமிழ்ப் புலமைகள் கச்சை கட்ட, இரு சாராருக்குமே ஒளவை என்னும் பெயரில் வெவ்வேறு காலகட்டத்தில் புலவர்கள் இருந்திருக்கக் கூடும் என்று தோன்றாமல் போயிற்றோ தென்தமிழகத்தில் நாசரேத் என்னும் ஊர் இருப்பதால், ஏசுநாதர் இங்குதான் பிறந்தார் என்று இன்னும் சிலபல நூற்றாண்டுகளுக்குப் பின் ஓர் ஆய்வாளன் தீர்மானித்தால் எப்படியிருக்கும்! நல்ல வேளை, கால்டுவெல் அறுதியிட்டுக் கூறத்துணியாமல் ஐயத்தின் பலன் கருதி நிறுத்திக் கொள்கிறார். அறிவியல் ரீதியான ஆய்வுக்கும் ஓர் எல்லையுண்டு என்பதற்கு இது ஒரு நல்ல உதாரணம்.

இவற்றையெல்லாம் இன்றைய கிடா மீசைத் தமிழர்கள் அனுமதிக்க மாட்டார்கள் எனில், நியாயமாக என்ன செய்திருக்க வேண்டும்? கால்டுவெல்லுக்கு ஒரு நன்றி சொல்லிவிட்டு, "அன்று இருண்டிருந்த காலம் இன்று சிறிது விடிந்தொளிரும் நிலையிலேயே அவரது காலக் கணிப்புகள் முற்றாகப் பிழைகளாகிவிட்டன” என்று வெகு நிதானமாக ஒரு விளக்கக் கட்டுரை எழுதி நூலின் முகப்பிலேயே இணைத்திருக்க வேண்டும். அதை விடுத்து கட்டுரையையே நீக்கி விடுவதென்பது, பின்னொரு நாளில் "திருட்டுக் காலங்களைச் சுவைத்துக் கொண்டிருப்பவனின் பதற்றம் மிக்க அழிவேலை இது” என்று பிரிதொருவன் குற்றம் சுமத்த ஏதுவாகாதா? காலப் பிழையை ஒருபுறம் ஒதுக்கிவைத்துவிட்டால்,

அந்தக் கட்டுரை இன்றைக்கும் நமக்குப் பல பயன் தரத்தக்க ஆய்வம்சங்களை வழங்குகிறது. தமிழ் இலக்கியத்தைப் பற்றிச் சொல்லும்போது 1. ஜைனர் காலம், 2. தமிழ் இராமாயண காலம், 3. சைவ மறுமலர்ச்சி காலம், 4. வைணவ காலம், 5. இலக்கி மறுமலர்ச்சி காலம், 6. பிராமண எதிர்ப்பு காலம், 7. தற்கால எழுத்தாளர்கள் என்று வகைப்படுத்திப் பேசுகிறார்.

கட்டுரையின் பிற்பகுதியில் அச்சுப்பொறி அறிமுகமான பிறகு 1865இல் வங்க மொழியிலும் தமிழிலும் 12 வகைப்பாடுகளில் வெளிவந்துள்ள நூல்களின் எண்ணிக்கையைத் தருகிறார்.* தண்டச் சோற்றுத் தடியன்களைப் பெற்ற அன்னையொருத்தி தன் சாமர்த்தியத்தால் அவர்களை செக்குமாடாகவேனும் உழைக்க வைத்து, தன்னையும் தன் குடிப்பழமையையும் காத்துக் கொண்டாற்போல, தமிழே தன்னைத் தற்காத்துக் கொள்கிறதோ என்று மலைக்கத் தோன்றுகிறது. தமிழ் நூல்கள் எண்ணிக்கையில் விஞ்சியிருப்பினும் வங்கத்தின் அறிவுச் செயல்பாடு போலத் தமிழில் இல்லை; மாறாக, பழையதை மறுபதிப்புச் செய்துகொள்வதே அதிகமாயிருந்தது என்பது அவர் கண்டறியும் உண்மை. இதில் உற்றறிந்து தேற்றிக் கொள்வதற்கும் ஓர் உண்மை இருக்கிறது: மறுபதிப்புச் செய்துகொள்ளுமளவு தமிழில் பழையவை பல்கிப் பெருகியிருந்தன என்னும் உண்மை!

இந்தக் கட்டுரையின் கடைசி வாக்கியம் இது:

I have added an excurses on ‘Sundara Pandia’. and I have endeavoured to answer the question. “Are the Paraiyas and Tudas Dravidians?” and have adjoined some remarks “on the Dravidian Physical Type”. and “on the Religion of the ancient Dravidian Tribes,”

மூன்றாம் பதிப்புச் செய்தவர்களுக்கு இந்த வாக்கியம்தான் பிரச்சினையே. கோவருக்கான பதிலைத் தவிர்த்தது ஒரு போக்குக்குத்தானே தவிர அவர்களுக்கு அது முக்கியமில்லை. மாறாக, இந்த வாக்கியத்தைக் கொண்டுள்ள கட்டுரையையும் இவ்வாக்கியத்தில் குறிக்கப்படும் பின்னிணைப்புகளையும் முற்றாக மௌனப்படுத்துவதே இவர்கள் பதிப்புப் பணியின் தலையாய நோக்கமாயிருந்திருக்கிறது.

ஆக, கால்டுவெல் ஒப்பிலக்கணத்தின் மீதான என் கவனங்களை இரண்டே புள்ளிகளில் தொகுத்துவிடலாம் என்று தோன்றுகிறது. இவ்விரு புள்ளிகள் மீதான கருத்தியல் தாக்கங்களின் எதிர்வினைகளாகத்தான் நடைமுறைச் செயல்பாட்டுப் பரிமாணங்கள் தமிழ்ச் சமூகத்தை ஊடும் பாவுமாக நெய்து கொண்டிருக்கின்றன.

முதல் புள்ளி: சமஸ்கிருதப் பசுமாட்டை அதன் புனித ஊர்வலங்களிகருந்து ஓட்டிவந்து அதற்கான முளைக்குச்சியில் கட்டிப்போட்டதும், திராவிட மொழிகள் தனித்துவமுள்ளவை என்பது மட்டுமல்லாமல் இந்தியாவுக்கு வெளியில் யுரேஷிய மொழி என்ற அளவிலேயே சமஸ்கிருதம் திராவிட மொழிக்கூறுகளை உள்வாங்கிக் கொண்டுள்ளது என்று நிரூபித்ததும் அதன் "தேவ பாஷை” படிமத்தை அடியோடு தகர்த்துவிடப் போதுமானதாயிருந்தன. நூல் வந்த காலத்தில் வெள்ளையரும் இதை விரும்பவில்லை. இந்திய சமூகத்தை இரண்டாகப் பிளந்துவிடும், சமூக அமைதியைக் குலைத்துவிடும் என்னும் வருத்தம் அவர்களுக்கு. ஆயினும் அவர்களது அறிவு நாணயம் அதை ஏற்கவே செய்தது.

வேதப் பார்ப்பனர்களுக்கோ இது ஆங்கிலேயர்களின் பிரித்தாளும் சூழ்ச்சி என்னும் கோபம். அவர்களால் செய்ய முடிந்ததெல்லாம் மலையே குலைந்தாலும் நிலை குலையாது தங்கள் "மேட்டிமைக் கலாச்சாரத்தை”த் தக்க வைத்துக்கொள்ளும் முயற்சியைக் கைவிடாதிருப்பதுதான். முடிந்தால் இந்த நூலையே அமுக்கியிருப்பார்கள். ஆனால் கால்டுவெல் ஆளும் வர்க்கத்தைச் சேர்ந்தவர், ஆக்கிரமிப்பு இனத்தில் பிறந்தவர் என்பதால் நூல் வெளியீட்டைத் தடுக்க முடியவில்லை. சூத்திரச் சாதிகளுக்கு நூல் ஒரு வரம்போல. பார்ப்பனர்களோடு அதிகாரப் பங்கீட்டுப் பேரம் பேசுவதில் சமநிலை கோரக் கிடைத்த ஒரு நல்வரவு. என்னதான் அறுத்துப் போட்டாலும் "பார்ப்பனர்கள் மேன்மக்களே. பார்ப்பன வேதம் புனிதமானதே” என்னும் இரத்தத்தில் ஊறிப்போன அடிமை மனோபாவத்திலிருந்து தங்களை மீட்டுக்கொள்ளாமலேயே பார்ப்பனரோடு அதிகாரப் பகிர்வு செய்துகொள்ளும் சூத்திரக் கில்லாடிகள் அவர்கள்.

இரண்டாவது புள்ளி: பறையர்கள் உடல்ரீதியாகத் திராவிடர்கள்தாம் என்று ஐயத்திற்கிடமின்றி நிரூபித்ததோடு, வாழ்வியல் ரீதியாகவும் அவர்கள் சூத்திரர்களைப் போலவே பார்ப்பனக் கலாச்சாரவாதிகள்தாம் என்று உறுதிப்படுத்தியதாகும்.

பார்ப்பனக் கலாச்சாரத்தின் அடிநாதம், குவிமையம், மணிமகுடம் எல்லாம் ஒன்றே ஒன்றுதான்: அது "பிறவி ஏற்றத்தாழ்வை’ப் பேணிக் காப்பது. அதன் உறுதிப்பாட்டுக்கான துணைக்கருவிகள்தாம் வேதங்கள், ஆகமங்கள், ஸ்மிருதிகள், மதங்கள், கடவுள்கள் யாவும். கால்டுவெல் தன் பின்னிணைப்பில் பேசும் திராவிடக் கோட்பாடுகள் என்னதான் உண்மையாயிருப்பினும் ஆதிக்க சாதிகள் ஒருபோதும் அவற்றை உள்வாங்கிக் கொள்ளத் தயாராயில்லை. அதன் நடைமுறை வெளிப்பாடுதான் கால்டுவெல் மரணத்திற்குப் பிறகு அவரது பின்னிணைப்பை-அதிலுள்ள தலைப்புகளைச் சொல்லி அவற்றின் தடயங்களைக் கூடப் பதிவு செய்துவிடக் கூடாது என்னும் வைராக்கியத்தோடு- வெட்டியெறிந்துவிட்டு, மூன்றாம் பதிப்பைக் கொண்டுவந்து, கடந்த 95 ஆண்டுகளாக அதையே திருப்பித் திருப்பி மறுஅச்சு செய்து, தங்கள் திருகுதாளம் பற்றி மூச்சு காட்டாமல் அமைதி காப்பது. இந்தக் கீழறுப்பு வேலையில் பார்ப்பனர்களுக்கும் உடன்பாடுதான் என்பதால் அதை மறைத்துவிடுவது அவர்களுக்கு எளிதாகிவிட்டது.

காலமெல்லாம் வர்ணாசிரம தர்மத்தைப் போற்றி வந்த "மகாத்மா”வை வர்ணாசிரமவாதி ஒருவனே கொன்றாற்போல, வாழ்வு முழுதையும் தமிழுக்காகவே செலவிட்ட கால்டுவெல்லை வஞ்சகத் தமிழர்களே மூடி மறைத்தார்கள்.

இன்றைய காலகட்டத்தில் இந்திய சமூகம் தலித்துகளை விடுவித்து விடவில்லையென்றாலும், அவர்களைப் பற்றி கால்டுவெல்லை விடவும் தீவிரமாகப் பேசவும் விவாதிக்கவும் உருவாகியுள்ள வாய்ப்புகளைக் குலைத்துவிட முடியாமல் பல்லைக் கடித்தபடி சகித்துக்கொண்டு வருகிறது. ஆனால் இந்த விழிப்பை எழுப்பிய கால்டுவெல்லை மறைத்ததன் மூலம் அந்த வாய்ப்பை ஒரு நூற்றாண்டுக் காலம் பின்னுக்குத் தள்ளிவிட்டார்கள்! இது ஒரு வரலாற்று இருட்டடிப்பு. தலித்துகளுக்கு இழைக்கப்பட்ட நூற்றாண்டுகால வன்கொடுமை.

இப்போது என்னிடம் பளிச்செனத் தோன்றிய கேள்வி: நான் ஏன் இந்த நூலை வெளியிடக் கூடாது?- கால்டுவெல்லின் இரண்டாம் பதிப்பை அச்சு அசலாக அப்படியே கொண்டு வருவதோடு, நூல் பற்றிய இவ்விவாதங்களையும் மேலும் சில ஆய்வுகளையும் சேர்த்து? தமிழோடும் உலகோடும் நான் வாழ்ந்திருப்பதன் ஓர் அங்கமாக நான் ஏன் இந்த முயற்சியை மேற்கொள்ளக் கூடாது?

அதற்கொரு தகுதி வேண்டும். அது எனக்கில்லையெனில் வேறு யாருக்கு இருந்துவிடக் கூடும்? எனக்குத் தமிழ் வெறும் ஊடக மொழியன்று. அது என் ஆளுமையின் வரிவடிவம். எனக்கென மொழி உண்டு; தமிழுக்குள் உயிர்க்கும் மொழி; சிலந்திக்கு வலை போல. வலையில் மிதக்கும் போதுதான் சிலந்தி அதன் உச்சத்தில். வலைக்கு வெளியே அது வெறும் பூச்சி; பசிக்குண்ணும் பூச்சி. என் கதியும் அதுதான். இந்த ஒரு தகுதியைக் கொண்டே நான் இவ்வெளியீட்டுப் பணியை மேற்கொள்கிறேன்.

இது ஆங்கிலத்தில் எழுதப்பட்ட நூல். அதனால் என்ன? எனக்கு அந்த மொழியில் முதிர்ந்த பட்டமும் பயிற்சியும் உண்டு.

மறைக்கப்பட்ட பக்கங்களை அச்சுக்குத் தகுதிப் படுத்தியபோதுதான் முழு நூலையும் பதிப்பிப்பதே சரியென்னும் உறுதிப்பாட்டுக்கு வர நேர்ந்தது. ஆகவே, நூல் அச்சுக்கான பணிகள் நடைபெறுகின்றன.

நூல் முன்வெளியீட்டுத் திட்டத்தில் கொண்டு வரப்படுகிறது. அப்படித்தான் என்னால் கொண்டுவர முடியும். இந்த முயற்சியை கால்டுவெல்லை மறைப்பதில் கண்ணும் கருத்துமாய்ச் செயல்பட்ட சோழியக் கூட்டம்போல இன்றைய மறுவாசிப்புக் காலத்தில் வாழும் சமூகமும் குலைத்துவிடாது என்று திட்டமாய் நம்புகிறேன். வாசக நண்பர்கள் தங்கள் தேவையை உடனடியாக அஞ்சலட்டை மூலம் உறுதி செய்வதில்தான் அந்த நம்பிக்கை உயிர் பிழைக்கும்.

1. ஆதிக்கத் தமிழ்ச் சாதிகளின்...

வெள்ளைக்காரர்களின் காலடி படாத ஒரு சிற்றூர். ஆப்பிரிக்கக் கண்டத்தில் கறுப்பர்கள் வாழும் சிற்றூர். இன்னும்கூட அப்படிப்பட்ட இருப்பிடங்கள் அக்கண்டத்தின் மூலை முடுக்குகளில் இருக்கும். கண்டம் முழுவதும் காடுகளாலும் கறுப்பர்களின் காலடித் தடங்களாலும் சூழப்பட்டதுதான். ஆயினும் அந்நியர்கள், அதிலும் வெள்ளையர்கள் காலடி படாத மண் என்பதன் குறியீடாகத்தான் அது இருண்ட கண்டம் என்று அழைக்கப்பட்டது. அதாவது கறுப்பர்களின் மனித அடையாளத்தையே மறுக்கும் பெயர் அது.

அந்தச் சிற்றூரில் ஒரு சின்னஞ்சிறுமியிடம் இரண்டு படங்கள் கொடுக்கப்பட்டன. ஒன்று வெள்ளைக் குழந்தையின் படம். மற்றொன்று அவளைப் போன்ற ஒரு கறுப்புக் குழந்தையின் படம். சிறுமி உடனே வெள்ளைக் குழந்தையின் படத்தை வீசியெறிந்துவிட்டு, கறுப்புக் குழந்தையின் படத்தை வாங்கி முத்தமிட்டு மார்போடணைத்துக் கொண்டு சிரித்தாள். இதே சோதனை மற்றொரு சிற்றூரிலும் நடத்தப்பட்டது. இந்த ஊரில் வெள்ளையர்கள் ஊடுருவியிருந்தனர். மக்களிடம் ஒரு விதத் தாக்கத்தையும் ஏற்படுத்தியிருந்தனர். இவ்வூர்ச் சிறுமிக்குக் கறுப்புக் குழந்தையே கண்ணில் படவில்லை. முழுக்கமுழுக்க வெள்ளைக் குழந்தையே அவளைக் கொள்ளை கொண்டிருந்தாள்.

உலகமெங்கிலும் இதுதான் வரலாறாகியிருக்கிறது. வெள்ளையர்கள் கறுப்பர்களைப் பகையாடி முறியடித்தாலும் சரி, உறவாடி வசப்படுத்தினாலும் சரி, வெள்ளைத் தாக்கத்துக்கு முன்னால் கறுப்பு தாழ்ந்தே போயிருக்கிறது. தன்னைத்தானே தாழ்த்திக் கொண்டுமிருக்கிறது. இன்று அதன் வரலாற்றுத் தொடர்ச்சி என்பது இந்தத் தாழ்ச்சியிலிருந்து மீட்டுக்கொள்ளும் உள்ளுறை தணலை ஊதிப் பெருக்கிக் கொண்டிருப்பதாக மாறியிருக்கிறது. தமிழ்ச் சமூகத்தைப் பொறுத்தவரை இந்தத் தாழ்ச்சி அடிநாள் தொடங்கியே மெல்லமெல்ல இறுக்கம் பெற்று, நாளடைவில் எழுதப்படாத உடன்பாடாகவே ஏற்கப்பட்டு விட்டது.

ஏற்பு, கேள்விக்கப்பாற்பட்ட ஒன்றாக முற்றுப் பெற்றபோது தமிழ் ஆளுமையின் தன்மானம் மீட்டுக்கொள்ள முடியாதபடி விற்றொழிக்கப்பட்டுவிட்டது. ஆயினும் அது காலங்காலமாக ஆதிக்கம் செலுத்திவந்த ஆளுமை என்பதால், தன் அதிகாரத்தைத் தக்கவைத்துக் கொள்ளும் முயற்சியில், வெள்ளை நலன்களையும் மேன்மையையும் கோரும் விதிமுறைகளைப் பேணிக்காக்கும் அறங்காவலர் பணியைத் தன் தலைமேல் தூக்கிப் போட்டுக்கொண்டு தன்னைத் தற்காத்துக் கொண்டது. காலப்போக்கில் இந்நிலைபாட்டின் மேல் தொடர்ந்து ஏவப்பட்ட நிர்பந்தங்களுக்கு இரையாகி, முடிவில் வெள்ளை நலன்களின் ஏவல் நாயாக இருப்பதே தன் ஆட்சி அதிகாரத்தின் முதன்மைப்பணி என்பதாக - வேறு மொழியில் செல்வதானால் ஒருவகை அடியாள் அதிகார மையமாகத் தன்னைத் தக்கவைத்துக் கொண்டுவிட்டது. இன்று வரை பார்ப்பனியத்திற்கும் தமிழ் ஆளுமைக்கும் இடையே நிலவிவரும் சமன்பாடு இதுதான்.

ஆதிகாலத்தில் மனிதகுலத்துக்குத் தலைமையேற்றுவந்த பெண்குலம் எப்போது, எப்படி தன் அதிகாரத்தைக் கைமாற்றிக் கொடுத்துவிட்டு அடிமைப்பட்டுப் போனது என்பது இன்றும் புதிர்த்தன்மை கொண்டதாகவே இருக்கிறது. அவ்வளவு கடும் புதிராக இல்லாவிடினும் பார்ப்பனியத்திற்குத் தமிழ் ஆளுமை முற்றாகப் பணிந்துபோனது உளவியல் ரீதியாகவேனும் அதனோடு ஒப்பிடும்படியான சில புதிர்க்கூறுகளைக் கொண்டவைதாம்.

பார்ப்பனர்கள் இங்கே வந்தபோது வெள்ளையாக இருந்தார்கள். இன்று இந்தியச் சமூகம் முழுவதுமே பல்வேறு நிறச் சாயை கொண்டதாக மாறிவிட்டது. கறுப்பில் உறைத்துக்கொண்ட நிறச்சாயைகள் அவை. அன்று வெள்ளை வெகு இயல்பாக முன்வைத்த மேன்மைக் கற்பிதத்தைவிட, இன்று அதன் மாற்றாகக் கட்டமைக்கப்பட்ட பார்ப்பனிய மேன்மைத் தத்துவம் சிந்துபாத்தின் தோள்விட்டு இறங்காத கடற்கிழவனின் கொடூரத்தைவிடக் கடும் குரோதமுள்ளதாய் சமூகத்தைப் பிடித்தாட்டுகிறது.

அன்று பார்ப்பனர்கள் தெற்கு நோக்கிக் கலாச்சாரத் தூதுவர்களாகவே வந்தார்கள். வடஇந்தியா முழுவதும் போரும், படையெடுப்பும், ஆக்கிரமிப்பும், அலைக்கழிப்பும் எனக் கொந்தளிப்பாகக் கிடந்த சூழலில், அவற்றின் காரணமாகவே இடம் பெயர்ந்து வந்த பார்ப்பனர்களுக்கு தமிழ்நாடு அமைதிப் பூங்காவாகத் திகழ்ந்தது மட்டுமல்லாமல் தமிழ் அதிகார ஆளுமைகள் அவர்களின் காவல் தெய்வங்களாகவே காட்சியளித்தார்கள். உண்மையில் பார்ப்பன மதமும், கலாச்சாரமும் அதன் படிநிலைப் பாய்ச்சல்களும் தம் ஆக்டொபஸ் கொடுங்கைகளுடன் முழுமையடைந்ததும் வலிமை பெற்றதும் தெற்கேதான் என்பதும், அதற்குத் துணைபுரிந்தவர்களும் தங்கள் சமூகத்தையே சோதனைக் களமாகத் தத்தம் செய்தவர்களும் தமிழர்கள்தாம் என்றால் அதுதான் பேருண்மை.

கறுப்பர்களின் நிறம் அவர்களுக்குத் தானாக வந்துவிடவில்லை. காலங்காலமாக மேற்கொண்ட கடும் உழைப்பு அவர்களுக்குத் தந்த பரிசு. உலகைச் சுற்றியும் நிலநடுக்கோட்டை ஒட்டிய மக்கள் வெய்யிலை உள்வாங்கிக் கறுத்தே வாழ்ந்திருக்கிறார்கள். இவ்வாறு உழைத்துண்ணும் மக்களுக்குப் பகிர்ந்துண்ணும் பழக்கம் இரத்தத்தோடு கலந்து பண்பாட்டுச் சாரமாகியிருக்கிறது. பகிர்ந்துண்ணலின் இன்னொடு பெயர்தான் விருந்தோம்பல். சாவா மருந்தென்றாலும் விருந்தோடு பகிர்ந்துகொள்ளச்சொல்கிறார் வள்ளுவர். இப்படிப் பகிர்ந்துகொள்ள வந்த விருந்தினன் சுயநலக்காரனாகவும், பிறர் உழைப்பைத் திருடுகிறவனாகவும், தின்று கொழுக்கிறவனாகவும் இருந்துவிட்டால், நாளடைவில் உழைப்பை இழி தொழிலாகவும், உழைப்பவனை ஊழியக்காரனாகவும் பாவிக்கும் அதிகாரப் பிச்சைக்காரனாகிவிடுவான்.

உண்மையில் அறிவை மட்டுமே உயர்வென்று நம்பியிருப்பவன் சந்தேகத்திற்கிடமில்லாமல் அதிகாரப் பிச்சைக்காரன்தான். உழைக்கிறவன் திமிர்ந்தெழும்போது வயிறு வளர்க்க மண்டியிடுவதைத் தவிர அவனுக்கு வேறு வழி இருக்கப் போவதில்லை.

தொல்காப்பியர் காலத்திலேயே பார்ப்பன வாழ்வியல் தத்துவங்களும் கலாச்சாரப் போக்குகளும் தமிழ் வாழ்வின் கடைமடை வரை பாய்ந்து நனைத்திருந்தன என்பதற்கு தொல்காப்பியமே சான்றாக விளங்குகிறது. கூடவே தமிழ் வாழ்வின் மேன்மை அம்சங்களும் பல்கியிருந்தன. பார்ப்பன அறங்கள் முதலில் பார்ப்பனர்களைக் காக்கும் கலசங்களாக மட்டுமே பயன்படுத்தப்பட்டன. உதாரணமாக, பார்ப்பான் கொலை செய்துவிட்டால் அவனுக்கான தண்டனை அவனைக் கொல்வதாக இருக்கக்கூடாது. இதைப் பின்பற்றியே தன் சகோதரனைக் கொன்ற பார்ப்பானையும் அவனது வம்சத்தாரையும் எல்லா வசதிகளோடும் நாட்டைவிட்டு அப்புறப்படுத்துகிறான் ஒரு சோழ மன்னன். பார்ப்பன தர்மம் சூத்திரர்களைக் கல்வி கற்க அனுமதிப்பதில்லை. ஆனால் தமிழ் வாழ்வில் கீழ்நிலையிலுள்ள ஒருவன் கல்வி பெற்றால் அவன் மேன்மகனாகக் கருதப்படுவான் என்று தமிழ் மன்னனே சொல்கிறான். பிச்சை புகினும் கற்கை நன்றே என்பது தமிழின் வாழ்வறமாகவே தொடர்கிறது.

நால்வருணம் தமிழ்ச் சமூகத்துக்கில்லை. அதற்கீடாக அந்தணன், அரசன், வணிகன், வெள்ளாளன் என்று மாற்றீடு செய்து மகிழ்கின்றன தமிழ் ஆளுமைகள். சூத்திரன் ஆளும் நாட்டில் பார்ப்பான் வாழக்கூடாது என்றொரு விதி உள்ளது. ஆனால் தமிழ்நாட்டில் அது கடைபிடிக்கப்படவில்லை என்பது மட்டுமல்ல, சூத்திரர்களே இங்கு இல்லை என்பதே உண்மை. இங்கே ஆள்கிறவன்தான் கோத்திரங்களற்ற சூத்திரனாகக் கருதப்பட்டான். ஆனால் இந்தச் சூத்திரப்பட்டம் பார்ப்பன ஆளுமை சொல்லும் கீழ்மைப் பொருளில் அல்ல. ஆனால் காலப்போக்கில் பார்ப்பனனைப் போல் வாழும் தமிழ்ச் சூத்திரர்களின் மோகம் தமிழ் வாழ்வியலை வருணக் கீழ்மை பேசும் நச்சுக்காடாகவே மாற்றிவிட்டது.

பார்ப்பன அறத்தைக் கேள்விக்குட்படுத்துவதாகவே புத்தர் தன் இயக்கத்தைக் கட்டமைத்தார். அந்தச் சங்கத்தை ஆதிமுதலே தழுவி நின்ற சமூகப் பிரிவினர் அடிநாளிலிருந்தே பார்ப்பனர்களையும் பார்ப்பன மேன்மையையும் மறுத்தவர்களாகவே வாழ்ந்துவந்தனர். அவர்கள்தாம் இன்றைய தலித்துகள். ஒட்டுமொத்த சமூகத்தையும் பாதித்த ஓர் உளவியலைப் பொய்யாக்கிய பௌத்தர்களைப் பார்ப்பனர்களும் சூத்திரர்களும் சமூகத்தின் கடைகோடிக்குத் தள்ளுவதில் இன்று வரை பிடிவாதமாயிருக்கின்றனர். வாழ்வியல் போக்குகளில் பார்ப்பனர்களுக்கும் தமிழ்ச் சூத்திரர்களுக்கும் (பிறருக்கும்கூட) நம்பிக்கைகளிலும் கடைபிடிப்புகளிலும் எந்த வேறுபாடும் இல்லை. ஒருவனை ஆதிக்கப் பார்ப்பான் என்றால் மற்றவனை அடியாள் பார்ப்பான் என்றே அழைக்கலாம். அவர்களுக்கிடையே அதிகாரப் பகிர்வில் வில்லங்கம் வந்தால் ஒருவரையொருவர் எதிரிகளாக்கி மல்லுக்கு நிற்பர்.

ஆங்கிலேயன் காலத்தில் பார்ப்பனர்கள் கை ஓங்கியபோது பார்ப்பன எதிர்ப்பியக்கமாக நீதிக்கட்சி தோன்றியது. அதை எதிர்ப்பியக்கமாக அயோதிதாசர் ஏற்கவில்லை. காரணம், பார்ப்பன மதம், வேதம், கலாச்சாரம், கடவுள் என யாவற்றையும் பின்பற்றும் ஒருவன் பார்ப்பானை எதிர்க்கிறேன் என்பது பித்தலாட்டமான செயல் என்கிறார்.

இந்த வகையில் பார்ப்பானுக்கு எதிரானவர்கள் தலித்துகள் மட்டுமே என்று தன்ஒட்டுமொத்த எதிர்ப்பையும் ஒரு பௌத்தனாக இருந்து வெளிப்படுத்தியவர் அயோத்திதாசர். அவருக்குப் பின்னால் பார்ப்பன அம்சங்கள்அனைத்தையும் எதிர்க்கிறவராய் வாழ்ந்துகாட்டியவர் உண்மையான பார்ப்பன எதிர்ப்பாளராய் வாழ்ந்து காட்டியவர் பெரியார். அவருக்குச் சாதி வேண்டியிருக்கவில்லை. ஆனால் பெரியார் பெயரைச் சொல்லிக்கொண்டு நீதிக்கட்சியின் சாரத்தை வாழ்வியலாகப் பேணும் திராவிடக் கட்சிகளுக்குச் சாதி இன்னமும் தேவையாகத்தான் இருக்கிறது. கால்டுவெல்லின் காணாமற்போன பக்கங்கள் மீட்கப்படாமலே போனமையின் காரணம் வேறு என்னவாக இருக்க முடியும்?

*இடையில் கட்டுரை சார்ந்த இன்னொரு கிளைக்கதையையும் இங்கு சொல்லிவிடத் தோன்றுகிறது. வேதசகாயகுமார் இதை ரசித்துச் சிரித்து மகிழ வேண்டும் என்பதை ஒரு முன்நிபந்தனையாகச் சேர்த்துக் கொள்ளலாம். கவிதாசரணுக்காக அவரிடம் கட்டுரை கேட்டவர் நண்பர் பொ.வேல்சாமி. அவரும் கட்டுரை தரச் சம்மதித்துவிட்டார். நானும் அவரைத் தொடர்பில் வைத்துக்கொண்டேன். இடையில் வேதசகாயகுமாரைத் தெரிந்த பிற நண்பர்கள் பந்தயம் கட்டாத குறையாக, “அவரிடம் கட்டுரை வாங்கிவிடுவீர்களா? பார்த்துவிடலாமா?” என்று ஏகத்துக்கும் கடுப்பேற்றியிருக்கிறார்கள். வேல்சாமி அதை ஓர் அறைகூவலாக ஏற்று, விடாப்பிடியாக முயன்று கட்டுரையை வாங்கிவிட்டார். இதில் என்னுடைய பங்கு தள்ளுபடி செய்துவிடக்கூடிய அளவே. ஆனால் கட்டுரை கிடைத்தபோது காலம்தான் காயசண்டிகை போல ஒரு பத்துப்பதினோரு வாரங்களை விழுங்கிவிட்டிருந்தது.

இதழ் தாமதப்பட்டாலும் கட்டுரைக்காகக் காத்திருந்ததில் எனக்கு எவ்வித வருத்தமும் இல்லை. மாறாக, கட்டுரையில் அவர் திறந்துவைத்த சாளரங்கள் வழியே கால்டுவெல்லைச் சரியான வெளிச்சத்தில் உள்வாங்கிக்கொண்ட நிறைவும், கூடுதலாக கால்டுவெல்லின் மூலப்பதிப்பைப் பார்த்துவிட வேண்டும் என்னும் புதிய ஆசையுமே என்னை ஆட்கொண்டன. இடையிடையே தொலைபேசியில் வேதசகாய குமார் கசியவிட்ட பல கருத்துச் சித்திரங்கள் அந்த ஆசையை ஊதிப் பெருக்கிவிட்டது.

வேதசகாயகுமார் தன் கட்டுரையை, “ஆனால் கால்டுவெல்லின் மற்றொரு முகம் காலத்தின் முன் மறைக்கப்பட்டது,” என்னும் கடைசி வாக்கியத்தோடு முடித்திருந்தார். நான் அதற்குக் கீழே, “அது எவ்வாறு என்பதைத் தொடர்ந்து அம்பலப்படுத்துவார் என எதிர்பார்க்கிறோம். அது தலித் எழுச்சிக்கு உந்துசக்தியாகத் திகழும்,” என்றொரு குறிப்பெழுதி முடித்திருந்தேன். அடுத்த இதழுக்கான அவரது இரண்டாவது கட்டுரைக்கு நான் கொடுத்த அழுத்தம் அது. அவரிடம் தொலைபேசியிலும் வேண்டினேன். வேல்சாமியிடமும் சொல்லிவைத்தேன். கட்டுரையைப் பத்து நாட்களுக்குள் கட்டாயம் அனுப்பிவிடுவதாக உறுதி சொன்னார். இந்தா அந்தா என்று மூன்று மாதங்கள் ஓடிவிட்டன. ஒரு கட்டத்தில் வேல்சாமி, “இது கல்லில் நார் உரிக்கிற கதை,” என்று ஓய்ந்துபோனார்.

ஆனால் நான் ஓயவில்லை. "இன்று மாலை, நாளைக் காலைஃ என்று தொடர்ந்து நம்பிக்கையூட்டப்பட்டுக் காத்திருந்தேன். நம் இதழின் அரசியலுக்கு அவர் கட்டுரை வலிய துணையாயிருக்கும் என்பதால் அதனோடுதான் இதழ் வரவேண்டும் என்பதில் உறுதியாய் இருந்தேன். அப்போது ஒரு வாசக நண்பர், “இதை, நீங்கள் வெளிப்படையாக அறிவிக்காமலேயே இதழை நிறுத்திவிட மேற்கொள்ளும் உத்தியாக நாங்கள் புரிந்துகொள்ளலாமா ஐயா?” என்று வெகு நாசுக்காகத் தன் ஆத்திரத்தை ஆற்றிக்கொண்டார். வேறு வழியின்றி சென்ற இதழை அவருடைய கட்டுரை இல்லாமலே அடுத்த ஒரு வாரத்தில் வெளிக்கொணர்ந்தேன்.

இதில் நான் வேதசகாயகுமாரைக் குறை சொல்லும் பேச்சுக்கே இடமில்லை. ஒவ்வொருவரும் ஒரு தகவமைப்பில் இறுகிப்போயிருப்பார்கள். வேதசகாயகுமாரும் அதற்கு விதிவிலக்கல்ல. அவரைக் குறை சொல்வதெனில் முக்கியமாக நானும்கூட அதற்கு விதி விலக்கல்ல. இப்பொழுதும் அவருடைய கட்டுரை- அதுவும் கால்டுவெல் பற்றிய கட்டுரை- கிடைக்குமெனில் அதற்காக மகிழ்ச்சியோடு காத்திருப்பேன்; வெளியிடுவேன்.

சிற்றிதழ்கள் தாமதப்பட எத்தனையோ காரணங்கள் இருக்கும். ஆனால் கவிதாசரண், பல சந்தர்ப்பங்களிலும் தெறிப்பான அரசியல் பார்வைகளை முன்னெடுக்கவே இடைவெளிகளைத் தாமதங்களால் நிரப்பியுள்ளது. குறித்தபடி எழுதி நிரப்புவதற்கென்று ஒவ்வொரு பத்திரிகைக்கும் நண்பர்கள் குழு தெரிவு செய்யப்பட்டிருக்கும். அவ்வகைப் பத்திரிகைகள் காலக் கணக்குப் பிசகாமல் மையெழுத்து நிரப்பல்களோடு வந்து கொண்டிருக்கும். எல்லாமே நியதிக்குட்படுத்தப்படும்போது இயல்பாகவே ஒரு மரத்தனம் வந்துவிடுகிறது. சிற்றிதழ்த் தன்மை செத்துப்போவதை நியதிமாரடிப்புகளால் நிரப்பி, ஒழுங்குமுறையோடு அடங்கி வாழ்வது உகந்ததுதான். அதற்கு ஒரு கொடுப்பினை வேண்டும். கவிதாசரண் அப்படி நடத்தப்படுகிற இதழன்று என்பது நீங்கள் அறியாததல்ல. கவிதாசரணை நிரப்ப எத்தனையோ பேர் வந்தார்கள்; சென்றார்கள்.

சிலரின் செல்கைக்கு நானேகூட காரணமாயிருக்கலாம். புற நட்பைத் தாங்கிப் பிடித்துக்கொள்ளத் தெரியாத என் நடத்தையும், திரும்பத் திரும்பத் தொடர்பு கொள்ள முயலாத என் தேவையற்ற மெத்தனமும், எல்லாரையும் ஒரே நிறையில் வைக்கும் சமரசமற்ற என் விமர்சனமும் அவ்வப்போது வில்லங்கங்களை அவர்களுக்கு உற்பத்தி செய்திருக்கலாம்.

கவிதாசரண் இவ்வகை பாதிப்புகளைக் கணக்கில் எடுத்துக்கொள்ளக் கரிசனப்பட்டதில்லை. யோசித்தால் இதழில் தொடர்ந்து எழுதிக்கொண்டிருப்பது நான் மட்டும்தான் என்றாகிறது. இன்னும் கொஞ்சம் ஆழமாக யோசித்தால் இன்னொன்றும் தட்டுப்படுகிறது. என்னைத் தின்னும் தாமதங்களை வெல்ல முடியாமல்தான் இன்னொருவர் துணை கிடைக்காதா என்று சாக்குபோக்கு சொல்லிக் கொண்டலைகிறேனோ என்றும் தோன்றுகிறது. இருக்கலாம்.

அதுவும் ஒருவகையில் இலாபம்தான். இடையே ஒரு இதழ்ப்படியைத் தவிர்ப்பதால் எங்களுக்கான குறைந்தபட்சத் தேவைகளை அவ்வப்போது ஈடுகட்டிக்கொள்ளலாம்தானே. எல்லா ஆறுகளும் பள்ளத்தை நோக்கித்தான் பாய்கின்றன. பாய்வதைப்பற்றிய கவலை நீரில்லாத ஆறுகளுக்கில்லை.

Pin It