கொல்லைப்புறக் கதவு சாத்தப்பட்டிருக்கிறதா என்று பார்த்துக் கொண்டேன். இப்படிப் பார்த்துக் கொள்வது இதுதான் கடைசி முறை என்று சொல்லிக் கொண்டேன். எத்தனையாவது முறையாக இப்படிச் சொல்லிக் கொள்கிறேன் என்று நினைத்துப் பார்த்துக் கொண்டேன். எல்லாமே பழகிவிட்டதால் எதுவுமே வினோதமாகத் தோன்றவில்லை.

 தீர்மானங்கள் பலவீனங்களின் புதை சேற்றில் சிக்கி உயிரைவிடுவது இயல்பாகிவிட்டது. கொல்லைப்புறக் கதவுகளும் மோட்டார் வண்டியின் பூட்டுகளும் சகல விதமான சாவிகளும் ஆயுள் காப்பீட்டுத் தவணைகளும் தொலைபேசி கட்டணங்களும் இந்த அளவுக்கு என்னை அலைக்கழிப்பது என் நினைவுத் திறனை மட்டுமின்றி விழிப்புணர்வு பற்றியும் தீவிரமான ஐயங்களை எழுப்புகிறது. உளவியல் மருத்துவரின் உதவியை நாட வேண்டிய அளவுக்கு நிலைமை மோசமாகவில்லை என்ற தெளிவு அழுத்தமாக இருந்ததால் பிரச்சினைக்கான தீர்வு என் கையில்தான் உள்ளது என்ற நம்பிக்கையை இறுக்கமாகப் பற்றிக் கொண்டிருந்தேன். பூட்டு,சாவி,தாழ்ப்பாள் ஆகியவற்றைத் தாண்டி வாழ்வின் இதர அம்சங்கள் மீதும் எனது மறதியின் நிழல் படர்ந்து வருவதை உணரத் தொடங்கிய பிறகே விழித்துக் கொண்டேன்.

தெளிந்த மனத்துடனும் மிகுந்த நம்பிக்கையுடனும் முன் அறைக்கு வந்து நாற்காலியில் அமர்ந்தேன். சோபாவில் காலை நீட்டிக் கொண்டு உடலை ஆசுவாசமாகத் தளர்த்தியபடி தொலைக் காட்சியைப் போட்டேன். திரை உயிர் பெற்ற போது யுவராஜ் சிங்கும் முகம்மது கைஃபும் ஓடிக் கொண்டிருந்தார்கள். இன்னும் ஒரு மணி நேர ஆட்டம் பாக்கி இருக்கிறது. டெண்டுல்கர் வெளியேறியதும் தொலைக்காட்சியை அணைத்துவிட்டுப் படுக்கப்போன லட்சக்கணக்கான இந்தியர்களின் நானும் ஒருவன்.

ஷேவாக், சச்சின், கங்கூலி ஆகிய மூவரும் வெளியேறிய பிறகு இந்திய அணி ஒரு ஓவருக்கு சுமார் எட்டு ரன் எடுத்து வெற்றி பெறும் என்று நப்பாசை கொள்வது மூடநம்பிக்கை என்று நினைத்த எனக்கு அதிர்ச்சி வைத்தியம் தந்தது காலைச் செய்தித்தாள். பெரிதாக ரன் ஏதும் அடிக்காவிட்டாலும் சட்டையைக் கழற்றிச் சுழற்றியபடி கங்கூலி ஆடிய வெற்றிக் கூத்தின் தடயங்களைச் செய்தித்தாளில் பார்த்து நம்ப முடியாமல் மறு ஒளிபரப்பைப் பார்க்கத் தொலைக் காட்சியைப் போட்டேன். இங்கிலாந்து அணி ஆடிக் கொண்டிருந்தது. இருபது ஓவர்கள் கூட இன்னும் முடியவில்லை அணைத்தேன். கடிகாரத்தைப் பார்த்தேன் 6.30. கிட்டத்தட்ட 9 மணிக்குப் போட்டால் இந்திய அணியின் மட்டை ஆட்டத்தைப் பார்க்கலாம் என்று கணக்குப் போட்டபடி செய்திதாளைப் படிக்க ஆரம்பித்தேன்.

இவர்கள் இருவரும் ஆடுவதை அதிகம் பார்த்ததில்லை அவர்கள் காட்டிய ஆவேசம் விக்கெட்டுகளுக்கு நடுவில் ஓடும் வேகம் சகல உறுப்புகளிலும் தெரியும் பொறுப்புணர்வு என எல்லாமே ஆச்சரியமாக இருந்தன. நேரமாகிவிட்டது என்றாலும் இன்னும் அரை மணிநேரம் பார்க்கலாம். இதுபோன்ற அதிசயங்கள் அடிக்கடி பார்க்கக் கிடைக்காது தொலைபேசி மணி அடித்தது. தொலைக்காட்சியின் ஓசையைக் குறைத்து விட்டு ஒலிவாங்கியை எடுத்து முகமன் கூறினேன். “ராஜசேகரைக் கூப்பிடுங்க” என்றது நட்புணர்வற்ற மறுமுனைக் குரல். “உங்களுக்கு எந்த நம்பர் வேணும்?” என்று கேட்டேன். தொனி மாறாமல் எண்களை ஒப்பித்தது மறுமுனை. “உங்களுக்கு வேண்டிய நம்பர் இது இல்ல” என்று சொன்னேன். “அப்படியா? அந்த நம்பர்தானே போட்டேன்” என்று சொன்ன குரலில் எரிச்சல் ஏறியிருந்தது. “அது இல்லங்க இது 2456 2564 இல்ல” என்றேன். அழுத்தமாக “இது 2564 இல்லியா?” என்றது எரிச்சல் குறையாத குரல். “இல்லேன்று சொல்றேன்ல?”

ஒலிவாங்கியை வைக்கும் போது படபடப்பு ஏற்பட ஆரம்பித்திருந்தது. கோபமும் எரிச்சலும் திரள ஆரம்பித்தன. ‘அறிவுகெட்ட முட்டாள்’ என்ற முணுமுணுப்பு வெளிப்பட்டது. மனம் சமநிலைக்கு வரச் சற்றுநேரம் ஆயிற்று எழுந்து போய்த் தண்ணீர் குடித்துவிட்டு வந்தேன். மேலும் இரண்டு ஓவர்கள் முடிந்து விட்டிருந்தன. இந்த அரை மணி நேரத்தில் ஒழுங்காகப் பார்க்க முடியவில்லையே என்ற எரிச்சல் ஏற்பட்டது. ‘ராஜாசேகரைக் கூப்பிடுங்க’ என்ற குரலைக் கேட்டதுமே ‘ஸாரி, ராங் நம்பர்’ என்று சொல்லி இணைப்பைத் துண்டிக்க ஏன் தோன்றவில்லை என்ற கேள்வி எழுந்தது. தவறான அழைப்புகளை எதிர்கொள்வது குறித்து எடுத்த முடிவை ஏன் அமல்படுத்த முடியவில்லை என்று கேட்டுக்கொண்டேன். மனத்தில் ஆற்றாமை சூழ ஆரம்பித்தது.

பிரச்சினை மறதியா அல்லது கவனமின்மையா என்ற கேள்வி கடந்த சில நாட்களாக என்னை அலைக் கழித்துக் கொண்டிருந்தது. எல்லா விஷயங்களும் மறப்பதில்லை. குறிப்பாகச் சில விஷயங்கள் மட்டும் மறக்கின்றன என்றால் அவற்றை மறக்க நாம் உள்ளூர விரும்புகிறோம் என்றுதான் பொருள் என்று உளவியல் கூறுவதாகப் படித்திருக்கிறேன். அந்த விஷயங்களில் உள்ள ஆர்வமின்மை அல்லது சலிப்புக் கூடக் காரணமாக இருக்கலாம். கதவைப் பூட்டுவதில் என்ன சலிப்பு என்ன இருக்க முடியும்? கதவைப் பூட்டுவதையொட்டி உள்ள பலவிதப் பொறுப்புகளைச் செய்வதில் உள்ள சோம்பலும் எரிச்சலும் காரணமாக இருக்கலாம்.

இதெல்லாம் என் வேலை இல்லை என்ற எண்ணம் மனத்தில் ஆழமாக ஊறியிருக்கலாம். கொல்லைக் கதவைப் பூட்டிவிட்டு, எல்லா அறைகளிலும் மின்விசிறிகளும் விளக்குகளும் அணைக்கப் பட்டிருக்கின்றனவா என்று பார்த்துவிட்டு, தொலைக்காட்சியின் மெயின் ஸ்விட்சை அணைத்துவிட்டு வீட்டைப் பூட்டிப் பக்கத்து வீட்டில் சாவியைக் கொடுத்துவிட்டுக் கிளம்பும் போது எல்லாவற்றையும் சரியாகத்தான் செய்தோமா என்ற சந்தேகம் வருகிறது. மனத்திரையில் ஒவ்வொரு செயல்பாடாக ஓட்டிப் பார்த்து ஒவ்வொன்றாக டிக் செய்துகொண்டே வந்தாலும் ஏதோ ஒரு காட்சி தெளிவற்றதாகி விடுகிறது.

உடை மாற்றும் போது படுக்கயறையில் போட்ட மின்விசிறி தொடர்பான சந்தேகம். அல்லது பீரோவைப் பூட்டி சாவியைப் புத்தக அடுக்கில் போட்டோமா என்ற சந்தேகம். அல்லது மீதியுள்ள பாலை எடுத்துக் குளிர்பதனப் பெட்டியில் வைத்தோமா என்ற சந்தேகம் இதைத் தெளிவுபடுத்திக் கொள்ள மறுபடியும் கதவைத் திறந்து பரிசோதிப்பது. ஒன்றைப் பரிசோதிக்கும் போது கூடவே மற்ற அம்சங்களையும் பரிசோதிப்பது நல்லது என்று தோன்றுவது. இதில் நேரம் வீணாவது. கதவைப் பூட்டிவிட்டுச் செல்லும் பொறுப்பு தன் தலையில் விழுந்ததை எண்ணி நொந்துகொள்வது. எரிச்சலுடன் கிளம்பிச் செல்வது.

மேட்சைப் பார்க்க உட்கார்ந்துவிட்டு மேட்சைப் பார்க்காமல் ஏதேதோ யோசித்துக் கொண்டிருப்பது கவனத்திற்கு வந்தது. சிங்கும் கைஃபும் இன்னும் ஆடிக்கொண்டிந்தார்கள். மேட்ச் கையை விட்டுப் போய்க் கொண்டிருப்பது குறித்த பிரக்ஞை வெள்ளையர்களின் முகங்களின் தெளிவாகத் தெரிந்தது. இன்னும் பத்து ஓவருக்குமேல் இருந்தது. மேட்ச் முடிய இன்னும் குறைந்தது அரை மணிநேரம் ஆகும். அதுவரை உட்கார்ந்திருக்க முடியாது. கங்கூலியின் ஆனந்தத் தாண்டவத்தைப் பார்க்க முடியாமல் போய்விட்ட சிற ஏமாற்றத்துடன் தொலைக்காட்சியை அணைத்து விட்டு மெயின் ஸ்விட்சையும் அணைத்துவிட்டு வீட்டைப் பூட்டியபோதுதான் கொல்லைப்புறக் கதவு சாத்தப்பட்டதா என்ற சந்தேகம் வழக்கம் போல் எழுந்தது.

எல்லாவற்றுக்கும் ஒரு முடிவு கட்ட வேண்டும் என்று நினைத்துச் சில தீர்மானங்களை மேற்கண்டு ஒரு வாரம் ஆகிறது. இந்தப் பிரச்சினை பின்னாளில் ஒரே விஷயத்தைத் திரும்பத் திரும்பச் செய்யத் தூண்டும் உளவியல் கோளாறாக உருவெடுக்கலாம் என்பதை எண்ணிக் கவனமாகவே காரியத்தில் இறங்கினேன். சின்னச் சின்ன மறதிகளைப் போக்குவது குறித்துப் படித்த பல்வேறு வரிகளை மனத்தில் கொண்டு திட்டம் வகுத்தேன். மேலும் சில புத்தகங்களைப் புரட்டிக் கூடுதலான தகவல்களைத் திரட்டிக் கொண்டேன்.

ஒரு சில உத்திகளை வகுத்துக் கொண்டேன். இதுபோன்ற காரியங்களைச் செய்யும் போது ஒரே சமயத்தில் இரண்டு காரியங்களைச் செய்யக் கூடாது. செய்யும் காரியத்தைப் பிரக்ஞை பூர்வமாகச் செய்ய வேண்டும் அனிச்சைச் செயலாக எதுவுமே இருக்கக்கூடாது. செய்தவற்றை நினைவுகூரச் சில தடயங்களை உருவாக்கிக் கொள்ள வேண்டும். உதாரணமாக கொல்லைக் கதவைச் சாத்திய உடன் கடிகாரத்தைப் பார்க்க வேண்டும். மின்விசிறியை அணைத்ததும் சட்டென்று ஓசை மறையும் தருணத்தைக் கவனமாகப் பதிவு செய்து கொள்ள வேண்டும். பாலை எடுத்து உள்ளே வைக்கும் போது ஊறுகாய் பாட்டிலைத் திருப்பி வைக்க வேண்டும்.

சற்றுமுன் கொல்லைக் கதவை மூடிய போது தாள்ப்பாளைப் போடும் போது எழுந்த ஓசையில் கதவுக்கு மேலிருந்த பல்லி அசைந்ததைப் பார்த்த நினைவு வந்தது. இதையே இன்று கொல்லைக் கதவை மூடியதற்கான அடையாளமாகக் கொள்ளலாமென்று நினைத்தது நினைவுக்கு வந்தது. பிரச்சனையை சமாளிப்பதற்கான திட்டம் ஒழுங்காக அமலாகிக் கொண்டிருக்கிறது என்ற திருப்தியுடன் பக்கத்து வீட்டில் சாவியைக் கொடுத்துவிட்டுக் கிளம்பினேன்.

வண்டிக்கு அருகில் சென்று பின் பாக்கெட்டில் கை நுழைத்தபோது திருப்தி சட்டென்று வடிந்து போனது. பக்கவாட்டில் தொட்டுப் பார்த்தேன். பர்ஸ் இருந்தது வழக்கமாகப் பர்ஸை எடுக்கும்போது கை தானாகவே வண்டி சாவியையும் எடுத்துவிடும். இன்று என்ன ஆயிற்றென்று தெரியவில்லை. பக்கத்து வீட்டு வாசலுக்குப் போய் “லதா” என்று அழைத்தேன். பதிலுக்கு உள்ளிருந்தே குரல் கொடுத்தவளிடம் “சாவி வேணும்” என்றேன். சிறிது நேரம் கழித்து வந்தவளின் முகத்தைப் பார்க்கச் சற்றுக் குற்ற உணர்ச்சி ஏற்பட்டது. முகத்தில் தடவப்பட்டிருந்த எண்ணெயும் முடியைக் கட்டியிருந்த விதமும் அவள் குளிக்கச் செல்வதைக் காட்டின “வண்டி சாவிய மறந்துவிட்டேன்” என்று சொல்லிச் சிரிக்க முயன்றேன்.

“இட்ஸ் ஓகே” என்பது போலப் புன்னகையைச் சிந்திவிட்டு வீட்டுச் சாவியைக் கொடுத்தாள் முகம் முழுவதும் எண்ணெய் தடவியிருந்தாலும் பார்க்க அழகாகத்தான் இருக்கிறாள்.

வண்டிச் சாவியை எடுக்கும்போது ஞாபகமாக எடுத்துச் செல்ல வேண்டும் என்று நினைத்திருந்த குறுந்தட்டு கண்ணில்பட்டது. நல்ல வேளை என்று முணுமுணுத்தபடி அதைக் கையில் எடுத்துக் கொண்டேன். கண்ணாடியைக் கடந்தபோது ஒரு நிமிடம் நின்று முகத்தை அழுத்தித் துடைத்துக் கொண்டேன். தலை வாரிக் கொண்டேன். “இட்ஸ் ஓகே” என்ற பாவனையுடன் புன்னகைக்க முயன்றேன். செயற்கையாக இருந்தது.

வீட்டை விட்டுக் கிளம்பும் முன் வழக்கம் போல் எல்லாவற்றையும் சரிப்பார்க்கும் எண்ணம் தோன்றியது. இந்த வலையில் விழுந்துவிடக் கூடாது என்ற எச்சரிக்கை உணர்வு உடனே எழுந்தது. இப்போதுதான் எல்லவற்றையும் சரிபார்த்தேன். அதன் பிறகு யாரும் வரவில்லை. நானும் வாசல் கதவைத் திறந்து உள்ளே வந்ததோடு சரி. சாவி, சிடி ஆகியவற்றைத் தவிர எதையும் தொடவில்லை. கொல்லைப்புறம், பால், மின்விசிறி எல்லாம் அப்படியே இருக்கின்றன. இன்று நான் தெளிவாகவே இருக்கிறேன். ஒவ்வொரு காரியத்தையும் செய்தது பின்னால் நினைவு கூர்வதற்காக உருவாக்கிக் கொண்ட சமிக்ஞைகள் ஆகிய எல்லாமே நினைவுக்கு வந்தன. எல்லாமே மன அரங்கில் காட்சி ரூபமாய் துல்லியமாகப் பதிவாகியிருந்ததால் எந்தக் குழப்பமும் இல்லை.

வண்டியில் செல்லும் போது மனம் லேசாகி இருந்தது. கங்கூலியின் கூத்தைப் பார்க்கவில்லையே என்ற குறை மட்டும் அழுத்தமாக இருந்தது. கங்கூலி மட்டையைச் கழற்றுவதைவிடச் சட்டையைச் சிறப்பாகச் சுழற்றுவதாகத் தோன்றியபோது சிரிப்பு வந்தது. கங்கூலி சட்டையைக் கழற்றிச் சுழற்றியது இந்திய மசாலாப் படங்களின் காட்சிகளில் ஒன்றை நினைவுப்படுத்தியது. செய்திகளின் போது காட்டிய காட்சித் துணுக்குளில் கங்கூலியின் முகத்தில் தெரிந்த வெற்றிக் களிப்பும் பழவாங்கும் வெறியும் நினைவுக்கு வந்தன. இந்தியாவிற்கு இங்கிலாந்து அணி வந்தபோது ஒருநாள் போட்டித் தொடரை இங்கிலாந்து வென்ற தருணத்தில் அவ்வணியின் ஃப்லின்டாஃப் சட்டையைக் கழற்றிக் கூத்தாடியிருந்தார்.

மசாலாப்படத்தின் ஆக்ஷன் ஹீரோவைப் போல் கங்கூலி இங்கிலாந்துக்குப் பதிலடி கொடுத்துவிட்டார் களத்திலும் களத்திற்கு வெளியிலும். ஆனால் தமிழ்க் கதாநாயகர்கள் துணைக்கு ஒரு ஊரே திரண்டு வந்தாலும் ஆயிரம் எதிராளிகளை ஒற்றையாய் நின்று வெல்வார்கள். கங்கூலியோ சிங், கைஃப் தயவில் துள்ளிக் குதிக்கிறார். இந்தக் காட்சி ஃப்லிண்டாஃப் மனத்தில் பதியும். பதிலுக்கு பதில் கொடுக்கும் தருணத்தை எதிர்பார்த்து அவரும் தன் கடைவாயை நக்கிக் கொண்டிருப்பார். ஊடகங்கள் கொண்டாட இன்னொரு காட்சி. இன்னொரு கூத்து.

இதுபோன்ற கூத்துகளை ஊடகங்கள் கொண்டாடுகின்றனவா அல்லது ஊடகங்களுக்காகவே கூத்துகள் உருவாக்கப்படுகின்றனவா என்பது ஒரு கேள்வி. கிரிக்கெட் போட்டிகளை வைத்து ஊடகங்கள் கொழிப்பதையும் ஊடகங்களில் வரும் விளம்பரங்களில் நடித்து ஆட்டக்கார்கள் கொழிப்பதையும் பார்க்கும்போது எதையுமே இயல்பாக எடுத்துக்கொள்ள முடியவில்லை. கங்கூலியின் கூத்து நாளை ஒரு விளம்பரத்திற்கான படிமமாக மாற்றப்படலாம். இந்திய கிரிக்கெட்டின் அடுத்த கட்ட அடையாளமாக மாற்றப்படலாம். வணிகமயமாகிவிட்ட உலகில் எல்லாவற்றையும் இப்படித்தான் பார்க்க வேண்டியிருக்கிறது. கடைசியில் சுரண்டப்படுவது சராசரி நுகர்வோர்தான். மனம் உற்சாகத்தில் துள்ளியது. ஒரு காட்சியைக் குறித்த சிந்தனை இப்படி வளர்ந்து கொண்டேபோவது குறித்துத் தன்னிச்சையாக உற்சாகம் ஏற்பட்டது. மறதிப் பிரச்சினைக்கு அறிவுபூர்வமாக ஒரு தீர்வுகண்டு அதை வெற்றிகரமாக அமல்படுத்தியிருப்பது குறித்த உற்சாகத்துடன் இதுவும் சோந்து கொண்டுது.

அலுவலகத்தில் எங்கு திரும்பினாலும் நேற்றைய மேட்சைப் பற்றியே பேச்சு அடிபடும். தாங்களே ஆடி வெற்றிபெற்றது போல் ஆனந்த வெள்ளத்தில் எல்லோரும் மிதப்பார்கள். எனக்கும் கிரிக்கெட்டைப் பற்றிப் பேசப் பிடிக்கும். ஆனால் இந்தப் புதிய அலுவலகத்தில் யாரோடும் இன்னும் ஒட்டுதல் ஏற்படவில்லை. அலுவலகத்தின் மனிதர்களிடம் மட்டுமின்றி அசையும், அசையாப் பொருள்களிடத்திலும் வெளிப்படும் அதிநவீன பாவனையைப் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. பீட்சா சாப்பிட்டுக் கோக் குடித்துப் பசியாறும் ஜாதியினர். தமிழைத் தவறிப்போய் கூடக் கேட்க முடியாது. தமிழ் தெரிந்தவர்களிடம் பிடிவாதமாகத் தமிழில் பேசி அவர்களை நெளிய வைப்பது இங்கே எனக்குப் பொழுதுபோக்காகி விட்டது.

இந்தப் புதிய அலுவலகம் சேர்ந்ததிலிருந்து தினசரி காலையில் அலுவலகம் செல்லும்போது கூடவே வரும் இனம் புரியாத எரிச்சல் இன்று இல்லை என்பது திடீரென்று உறைத்தது. தொடர்ந்து துரத்திவரும் மறதிப் பிரச்சினை இன்று ஓரளவுக்கு வெற்றிகரமாகச் சமாளித்திருப்பதால் இந்த உற்சாகம் வந்திருக்கலாம். அதிலும் திட்டமிட்டு வகுத்த திட்டத்தின்படி இது நடந்திருப்பதால் உற்சாகம் கூடியிருக்கலாம். இந்த பிரச்சினை ஒரே காரியத்தைத் திரும்பத் திரும்பச் செய்யத் தூண்டும் உளவியல் கோளாறாக இருக்கவோ பின்னாளில் அப்படி மாறவோ வாய்ப்பில்லை என்பது உறுதியாகிவிட்டது. சில காரியங்களை அதுவும் மனசுக்கு அவ்வளவாகப் பிடிக்காத, பழக்கமாகாத சிலவற்றை – செய்யும் போது உடல் மட்டுமே அக்காரியத்தைச் செய்கிறது. மனம் எங்கோ அலைந்து கொண்டிருக்கிறது. வேறு யோசனைகளில் முனைப்புடன் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறது. இது மறதி அல்ல. அக்கறையின்மை. ஈடுபாடின்மை பிடிக்காத, பழகாத செயல்களில் ஈடு படுவதற்கான நிர்ப்பந்தத்திற்கு எதிராக என் சுயம் மேற்க்கொள்ளும் கலகச் செயல்பாடு.

தவிர்க்க இயலாததாகவும் அவசியமானதாகவும் இருக்கும்போது அவற்றின் மீது விருப்பு வெறுப்பு இன்றிச் செய்து முடித்துவிட வேண்டியதன் கட்டாயத்தை உணர்ந்து விழிப்புணர்வுடன் செயல்பட்டால் எளிதாகத் தாண்டிவிடக் கூடிய பிரச்சினை இது. இன்று நடந்த விஷயங்களே அதற்குச் சான்று. கொல்லைப்புறக் கதவைப் பூட்டினேனா என்ற சந்தேகம் வழக்கம்போல எழுந்தது. ஆனால் இன்று அதை எதிர்கொண்ட விதமே வேறு நான் உருவாக்கி வைத்திருந்த தடயங்கள் எனக்குக் கைகொடுத்தன. நாளை மேலும் விழிப்புணர்வுடன் செயல்படுவேன். இந்தச் சந்தேகம் கூட எழாது. இதில் எனக்கு எந்த இழப்பும் இல்லை. இது போன்ற செயல்களில் மனதைச் செலுத்தி ஈடுபடுவதில் அவமானம் எதுவும் இல்லை. பார்க்கப்போனால் உடல் - மனம் - அறிவு ஆகியவற்றின் இசைவு அரியதொரு பக்குவ நிலை. அந்தந்தத் தருணங்களில் விழிப்புடன் வாழ்வது ஒருவித ஆன்மீக நிலை.

பெருகிவரும் வன்முறை பற்றியோ தெருவில் அதிகரித்து வரும் விபத்துக்கள் பற்றியோ காற்றுக் கிடைக்காதது பற்றியோ டிஷர்ட்டில் பாக்கெட் இல்லாதது பற்றியோ கவலைப்பட வேண்டிய நேரத்தில் கவலைப்படலாம். கழுத்தைச் சொரியும் போதோ கால் கழுவும் போதோ கதவைப் பூட்டும் போதோ இதைப் பற்றியெல்லாம் கவலைப்பட வேண்டாம். எண்ணங்கள் சொற்களாகப் பெருகப் பெருக மனத்தில் உற்சாகம் அதிகரித்தது. துடைத்து விட்ட கண்ணாடிபோல மனம் தெளிவாக இருந்தது. இதே அணுகுமுறையை மற்ற பிரச்சினைகளிலும் கையாளலாம். நண்பர்களிடமும் மனைவியிடமும் ஏற்படும் உரசல்களைப் பெருமளவில் குறைக்கலாம். செய்ய நினைக்கும் காரியங்களை ஒழுங்காகச் செய்யலாம். அவசரப்பட்டு எதையாவது வாங்கிவிட்டுப் பிறகு வருந்த வேண்டாம். கண்டவர்களுக்கும் உத்தரவாதக் கையெழுத்துப் போட்டுவிட்டுத் தவிக்க வேண்டாம். பல்தேய்க்கும் போது எங்கெங்கோ மனதை அலையவிட்டு, குறிப்பிட்ட இடத்தில் தேய்த்தேனா என்ற ஐயத்துடன் திரும்பத் திரும்பத் தேய்த்துக் கொண்டிருக்க வேண்டாம். நிகழ்காலத்தில் வாழவேண்டும். பிரக்ஞைபூர்வமாக வாழ வேண்டும். விழிப்புணர்வு கூட வேண்டும்.

வண்டியை நிறுத்திப் பூட்டிச் சாவியைப் பத்திரமாக பாக்கெட்டில் வைத்தேன். ஒழுங்காகப் பூட்டப்பட்டிருக்கிறதா என்று சரிப்பார்த்தேன். சி.டியை எடுத்துக் கொண்டேன். பெட்ரோல், குழாயை மூடினேன். எல்லாமே இயல்பாக, விழிப்புணர்வுடன் நடந்தன. வழக்கமாகப் பத்தடி தூரம் நடந்ததும் வண்டியைப் பூட்டியது தொடர்பாக எழும் ஐயம் இன்று எழவில்லை. எதையும் மறந்திருக்க வாய்ப்பில்லை எல்லாவற்றையும் சுய விழிப்புணர்வுடன் செய்திருக்கிறேன் என்று சொல்லிக்கொண்டேன். மனதுக்கு நிறைவாக இருந்தது.

வரவேற்பறைப் பெண்ணின் “குட்மானிங்” குரலிலும் புன்னகையிலும் பணியின் தொடக்க கட்டப் புத்துணர்வு வெளிப்பட்டது. இன்று அவள் கொஞ்சம் அழகாகக் கூடத் தெரிந்தாள். புன்னகையையும் காலை வணக்கத்தையும் பதிலுக்குத் தந்துவிட்டு இருக்கையில் சென்று அமர்ந்தேன். தண்ணீர் குடித்து விட்டுக் கணிப்பொறியைத் திறந்தபோது மேஜைமீது இருந்த தொலைபேசியின் மணி அடித்தது.

“சர், கால் ஃபா யூ”

“ஹெள ஈஸ் ஆன் த லைன்?”

“மிஸஸ் லக்ஷமி யுவர் நெய்பர்” குழப்பமாக இருந்ததது லக்ஷமி மாமி ஏன் எனக்குப் போன் செய்கிறார்கள்? “ஓ.கே.”

“மகேஷ் நாந்தான் லக்ஷமி மாமி பேசறேன் உங்க ஃப்ரெண்ட் சரவணன் வந்து சாவியக் கேட்டார். தேடிப் பாத்தேன் இங்க இல்ல சாவிய யாருகிட்ட குடுத்தேள்”

மனம் சட்டேன்று இருண்டது. “லதா கிட்டதான் குடுத்தேன் கேட்டுப்பாருங்க”

“கேட்டுட்டேனே. அவ குடுக்கலங்கறா, என்கிட்ட மொதல்ல குடுத்துவிட்டு அப்பறம் அவகிட்ட வாங்கிண்டீங்களாம். திரும்பக் குடுக்கலைங்கறா அவோ”

“அப்டியா நல்லா தேடிப் பாத்தீங்களா?”

“நா பாத்துட்டேன். ஒங்க கிட்ட இருக்கான்னு பாருங்கோ சாவியாச்சே சட்டுனு சொன்னாத்தானே ஒங்களால தேட முடியும்னுதான் கூப்ட்டேன் ஏற்கனவே ஒரு சாவியத் தொலச்சிட்டேள்.”

“ நா பாக்கறேன் மாமி என் கிட்டதான் இருக்கும் தேடிப் பாக்கறேன்.”

“நன்னாத் தேடுங்கோ ஞாபகமாக் குடுத்துட்டுப் போயிருக்கப்படாதா? தேவையில்லாத ப்ரச்ன பாருங்கோ...”

“தேடிப் பாக்கறேன் மாமி...”

ஒலிவாங்கியை வைத்துவிட்டு இருக்கையை விட்டு எழுந்து கொண்டேன். எல்லாப் பாக்கெட்களிலும் பார்த்தேன். பை கொண்டுவரவில்லை. மறுபடியும் மறுபடியும் பாக்கெட்களைத் துழாவினேன். விரைவாக வெளியே வந்து லிஃப்ட் இருக்குமிடத்துக்கு வந்தேன். லிஃப்ட் முதல் மாடியில் நின்று கொண்டிருந்தது. பொத்தானை அமுக்கினேன். லிஃப்ட் கிளம்பவில்லை. வழக்கத்திற்கு மாறாக இன்னொரு முறை அழுத்தினேன். மேல்நோக்கி வந்த லிஃப்ட் நான்காவது மாடியில் நிற்காமல் ஐந்தாவது மாடிக்குச் சென்றுவிட்டது. படிகள் வழியே இறங்க ஆரம்பித்தேன். கிட்டத்தட்டப் படிகளில் ஓடினேன். வண்டியில் முன்புறம் உள்ள தோல் பையில் பார்த்தேன். சில துண்டுச் சீட்டுகள், சிக்னலில் கிடைக்கும் விளம்பரப் பிரசுரங்கள், பெட்ரோல் பில் ஆகியவை இருந்தன. உள் அறையில் மூன்று ரூபாய் சில்லறை இருந்தது சாவி இல்லை. வண்டியில் பெட்டி கிடையாது இனிமேல் தேடுவதானால் வீட்டுக்குப் போய், கதவருகில் அல்லது வண்டி நிறுத்தும் இடத்தில் இருக்கிறதா எனப் பார்க்க வேண்டும் பக்கத்து வீட்டுக்குப் போன் செய்து லதா இருந்தால் வீட்டைச் சுற்றித் தேடிப் பார்க்கச் சொல்லிவிட்டுக் கிளம்ப வேண்டும்.

மேலதிகாரியிடம் விஷயத்தைச் சொல்லிவிட்டு விரைந்தேன். வண்டியை வேகமாக ஓட்டுவது எனக்குப் பழக்கமில்லாதது என்றாலும் புதிதல்ல. வண்டியை விரட்டினேன். ஒவ்வொரு சிக்னலும் நெடுநேரம் என்னைக் காக்க வைத்தது. ஒவ்வொரு திருப்பமும் சிக்கலான வாகன வியூகத்துடன் எதிர்கொண்டது. அன்றாடம் இயல்பாய்க் கடந்து செல்லும் ஒவ்வொரு இடர்பாடும் சகிக்க முடியாததாகத் தோன்றியது. நினைவுத் திறனுடன் நிகழ்த்தி வந்த போராட்டம் முடிவுக்கு வந்துவிட்டது என்ற ஆசுவாசத்துடன் இதே பாதையின் எதிர்ப்பக்கம் சற்றுமுன் வண்டி ஓட்டிச் சென்ற காட்சி பாதையில் எதிர்ப்பட்டபடி இருந்தது. ஆசுவாசமும் நிம்மதியும் கொண்ட அரைமணி நேரத்திற்கு முந்தைய அந்த நானின் மீது எந்தக் கணத்திலும் மோதி என் வண்டியும் மண்டையும் சிதறக்கூடும் என்று நினைக்க ஆரம்பித்திருந்தேன்.

முழுத் தோல்வியை ஒப்புக்கொள்ள மறுத்தது மனம். ஒரு தவறு நேர்ந்திருக்க வேண்டும் வண்டி ஓட்டும்போது பாக்கொட்டிலிருந்து சாவி நழுவி விழுந்திருக்கலாம். பாக்கெட்டினுள் போடும்போதோகூட அஜாக்கிரதையாக நழுவ விட்டிருக்கலாம். ஆனால் வீட்டைப் பூட்டியதும் சாவியை மீண்டும் லதாவிடம் கொடுத்திருந்தால் பாக்கெட்டைப் பற்றி ஏன் கவலைப்பட வேண்டும்? அப்படிக் கொடுக்காமல் இருக்கவைத்த சக்தி எது? கொடுக்கவிட்டாலும் பத்திரமாய்ப் பைக்குள் வைக்கவிடாமல் தடுத்த சக்தி எது? கேள்வியே முட்டாள்தனமாக இருக்கிறது. சக்தி தடுத்தது என்றால் உனக்கு அதில் பங்கில்லையா? பேய், பிசாசின் வேலையாக இருக்கும் என்று சொல்லவருகிறாயா? அப்படியானால் சாமியைக் கும்பிட்டுப் பரிகாரம் தேட வேண்டியது தானே? மடத்தனம் சுத்தமடத்தனம். என்ன செய்கிறோம் என்பதைக் கவனித்துச் செய்யும் பழக்கம் இல்லை. அந்தப் பழக்கம் இல்லாதவரை விமோசனம் இல்லை.

தொடங்கிய புள்ளிக்கே வந்து சேர்ந்திருப்பதை உணர்ந்தேன். செய்வதைக் கவனமாகச் செய்தல், செயல்களை நினைவுகூரப் புறத் தடயங்களை உருவாக்கிக் கொள்ளுதல், அந்தந்தத் தருணங்களில் விழிப்புணர்வுடன் வாழும் ஆன்மீக நிலை....... மயிறு ஒரு இழவும் கைகூடவில்லை. டாக்டரைத்தான் பார்க்க வேண்டும் போலிருக்கிறது. டாக்டர் என்ற எண்ணம் வந்ததும் மனம் மறுபடிம் சிலிர்த்துக் கொள்வதை உணரமுடிந்தது. டாக்டர் இதற்கெல்லாம் என்ன சொல்வார் என்று எனக்குத் தெரியாதா என்ற எண்ணம் எழுந்தது. எடுத்த முடிவில் தவறு இல்லை. செயல்படுத்துவதில் ஏதோ கோளாறு. உத்தியில் பிரச்சினை இல்லை. பிரயோகத்தில் தான் தடங்கல், சிக்கலும் அடர்த்தியும் கொண்ட எண்ணங்கள் ஓடிக் கொண்டிருக்கும் மூளைகளுக்கு இது போன்ற சிக்கல்களை ஏற்படுவது இயல்புதான்.

மிக அவசரமாக வண்டியை நிறுத்திப் பூட்டி சாவியை எடுத்துப் பாக்கெட்டினுள் போட்டுக் கொண்ட பிறகு பரபரப்பாகச் சுற்றும் முற்றும் தேடினேன். வண்டி வைக்கும் இடத்தினூடே பார்வையை வேகமாகவும் கவனமாகவும் ஓட்டியபடி வீட்டு வாசலை நோக்கி நகர்ந்தேன். நல்லவேளை அடுக்குமாடிக் குடியிருப்பில் வசிக்கவில்லை. அப்படி இருந்திருந்தால் வண்டி நிறுத்துமிடத்தில் தேடுவது மிகவும் சிக்கலானதாக ஆகியிருக்கும். ஆனால் அப்படியும் சொல்வதற்கில்லை. அடுக்குமாடிக் குடியிருப்பில் வாயிற்காவலர் கண்ணில் பட்டிருக்க வாய்ப்பிருக்கிறது. அக்கம்பக்கத்து வீட்டுக்காரர்கள், அவர்கள் வீட்டு வேலைக்காரர்கள் என்று நடமாட்டம் அதிகம் இருக்கும் அவர்களில் யார் கண்ணிலாவது படக்கூடும் இதெல்லாம் இப்போது தேவையில்லாத ஆராய்ச்சி. இருப்பது தனி வீடு. அங்கே நிற்பது இரண்டே இரண்டு வண்டிகள். இடம் துப்புரவாக இருக்கிறது. துப்புக் கெட்டத்தனமாய்ச் சாவியைத் தொலைத்தாயிற்று. அவ்வளவுதான்.

பூட்டிலேயே தொங்கியபடி இருந்த சாவியைப் பார்த்ததும் பெரும் ஆசுவாசம் ஏற்பட்டது. பூட்டிலேயே சாவியை வைத்துவிட்டு வந்திருக்கும் அஜாக்கிரதையை எண்ணிக் கவலையாகவும் இருந்தது. பதற்றம் தணிந்த மனத்தில் பெரும் சோர்வு சூழ்ந்தது. சாவியை எடுத்து மாமியிடம் கொடுத்துவிட்டு உடனே அலுவலகத்திற்குப் போவற்குப் பதில் உள்ளே போய் உட்கார வேண்டும் போலத் தோன்றியது. மாமி எப்படியும் வித்யாவுக்குச் செய்தியைச் சொல்லியிருப்பார்கள். அவள் மிகுந்த கவலையோடு இருப்பாள். போன் செய்து அவளிடம் விஷயத்தைச் சொல்லி ஆசுவாசப்படுத்த வேண்டும். எல்லாவற்றிற்கும் மேல் கொல்லைக் கதவு சாத்தப் பட்டிருக்கிறதா என்று ஒரு முறை பார்த்துவிட வேண்டும் என்ற அரிப்பைக் கட்டுப்படுத்த முடியவில்லை.

கதவைத் திறந்து உள்ளே நுழையும்போது குப்பென்று ஒரு நெடி தாக்கியது. ஏதோ பொசுங்கிய நெடியும் சமையல் எரிவாயு கசிந்த நெடியும் வீசியது. உடம்பு உதற ஆரம்பித்தது. என்ன செய்வதென்று தெரியாமல் தடதட வென்று உள்ளே ஓடினேன். சிறிய அறையையும் கூடத்தையும் கடந்து இடதுபுறம் திரும்பிச் சமையலறை வாசலில் கால் வைத்தும் பாதங்கள் உறைந்தன. அடுப்பில் வைக்கப்பட்டிருந்த பாத்திரத்திலிருந்த பால் பொங்கி வழிந்து அடுப்பை அணைத்து விட்டிருந்ததில் அறையெங்கும் எரிவாயு பரவியிருந்தது. அடுப்பைத் தாண்டி சமையல் மேடையைத் தாண்டித் தரை முழுவதும் வழிந்தோடியிருந்த பால் மெல்ல மெல்லப் பொங்கியபடி நுரையை பெருக்கிவாறே அறையை நிறைக்க ஆரம்பித்திருந்தது. பொங்கும் பாலின் சூடு பொறுக்க முடியாமல் பாதங்கள் பின்வாங்கின.

Pin It