பூப்புனித நன்னீராட்டு விழா


சுற்றுலா சிறுவர் சிறுமியர்
மியூசிய சிறையிலிருந்து கண்ணகியை
அழைத்துவந்தனர் கடற்கரை
முன்பைவிட சற்று இளைத்தும் வெளிறி
இருந்த இருவரும்
வருகையில்
அழிவின் சக்திஉருவம் மணல் சாம்பல்
பீதியுறும்
செம்படச்சியின் கண்ணில் நிலைபெற்ற
கனவு - குழந்தைகள்
கண்ணகிக்கு சான்ட்விச்சும் பெப்ஸியும் தந்தனர்
அகாலப் பசி - யாருக்குத்தான் இல்லை
அலைகள் தொட்டு உள்ளங்காலில் நழுவும் ஆவல்
குளிர்ச்சியாக இருக்கிறது
சூரியன் மறையும் அந்தி அலைகள் ‘கானல்
வரிகளாய்’ இசைக்கப்படுகின்றன
2000: மாண்டு இளம் விதவைகளின் காலடியில்
கடற்காகங்களின் நிழல் கடல் மடிப்பில்
திரியவும் - மனம் அந்நாந்து பார்க்கையில்
அந்தி உருகி கண்ணை மறைக்க
சரியும் கண்ணகியைத் தாங்கின
கடல் - குழந்தைகள்
ரைம்ஸ் சொல்லின
விரல் நீட்டி மிரட்டின
ஜேபியில் நிரப்பின
பூப்பெய்தா இளமையோடு அவள் தன்னெஞ்சறிய
பழைய நினைவு பழையது
பெண்ணிலிருந்து விடுபட்டு பெண்ணலியாய்
மலட்டு முலையைத் திருகி எறிய
பற்றி எரிந்தது மதுரம்
புதிய நினைவு புதியது
பற்பல கை பட்டு அவள் பெண்ணாகும் தருவாயில்
மறுமுலையைக் கொய்திருந்தார்கள்
கடற்கரையில்
முலையற்ற பெண்ணாக
பூப்புனித நன்னீராடுகிறாள்


மெய்யான - சமர்ப்பணம்


வேறென்ன செய்ய முடியுமோ வேறென்ன
செய்ய வேண்டும் இந்த இடத்திற்கு
வரும்போத என்னவாக இருந்தேனோ
அந்த இடத்தைவிட்டு அகலும்போது
மலைச்சரிவில் ஓடை
கரையில் பூத்த மலர்க்கொத்து
நண்பகல் பிரகாசம் மெல்ல
மங்குகிறது ரூபங்கள் ஒழுகும் ஒலிகள்
யார்தான் நான்
போதும்
புலன்கள்
மூச்சை மரத்திற்கும்
காதுகளை ஆற்றுக்கும்
நாவை பாறைக்கும்
உணர்ச்சியை மண்புழுவிற்கும்
கண்களைப் பூக்களுக்கும்

ஒவ்வொன்றாக வழங்கி
தலையில் எவ்வளவு துவாரங்கள்
அவை நிறைய மண்ணை
வாரி அடைத்த போதுதான் தெரிந்தது
கபாலத்தின் அடியாழத்தில் சூம்பிப்போய்
முனகும் உயிர்த்தாது
விழுந்த மண்ணிலிருந்து
தான்தோன்றிக் கொடியொன்று முளைத்து
எல்லையற்ற பச்சையத்தின் ஒரு துண்டை
அது தனதென்று காட்டுகிறது.
Pin It