காலம், சதாசர்வ காலமும், ஓய்வு ஒழிச்சலின்றி இயங்கிக்கொண்டே இருக்கிறது. கலைஞன் இன்று தொழில்நுட்ப வளர்ச்சி கண்டு பிரமிப்புடன் இருக்கிறான். புகைப்படக் கருவி வந்த புதிதில் ஓவியருக்கான இடம் இனி எப்போதும் இல்லை எனப் பயந்தார்கள்.

நாட்கள் நகர, நகர காலங்கள் செல்லச் செல்ல விஞ்ஞான வளர்ச்சியைச் செரித்துக்கொண்டு அடுத்த கட்டத்திற்கு தன்னை தயார் செய்துகொண்டு, அதுவரை யதார்த்த பாணி ஓவியங்களை வரைந்து வந்த ஓவியர்கள், அதிலிருந்து சற்றே விலகி மேற்கத்திய பாணியைப் பின்பற்றி, உருவங்களை கலைத்துப்போட்டும், உடைத்துப்போட்டும் நவீன பாணி என்று தனக்குத் தோன்றியதையெல்லாம் வரைந்தார்கள். வரைந்து காட்சிப்படுத்தினார்கள் அதுவும் பார்வையாளர்கள் மிரண்டுபோகும் அளவு, அவனது சிந்தனையைக் குழப்பி வந்தார்கள். இன்றளவும் அது தொடர்கிறது.

அது புரியவில்லை. கேன்வாசில் எதை முன்வைத்து செய்திருக்கிறீர்கள் என்றால், இதுகூடத் தெரியவில்லையா? “நீங்கள் ஆர்ட் ஏரியாவில் நிறைய ட்ராவல் பண்ண வேண்டும்’’, அப்பொழுதுதான் உங்களுக்குப் புரியும் என்பார்கள். கலர்ஸ்க்கு என்று லாங்குவேஜ் இருக்கிறது, அது போகப்போகத்தான் தெரியும், அது பற்றி நீங்கள் கவலை கொள்ளத் தேவையில்லை என்பார்கள்.

பார்வையாளர்களாக வந்தவர்கள், நமக்கும் ஓவியத்துறையில் ஞானம் இருப்பதாகக் காட்டிக்கொண்டு, இந்தக் கேன்வாசில் வண்ணங்களை அருமையாக ஆளுமை செய்திருக்கிறீர்கள், இது உங்கள் படைப்பில் ஒரு மாஸ்டர் பீஸ் என்பார்கள். அடுத்த படைப்பைப் பற்றி நகர்ந்துவிடுவார்கள்.

இன்றைய காலத்தில், சமகால சமூகத்தில் நிகழும் போக்குகள் குறித்து ஓவியத் துறையில் மிக மிகக் குறைவாகவே பதிவாகியிருக்கிறது.

கடந்த 2005ஆம் ஆண்டு நெல்லையில், காஞ்சனை திரைப்பட இயக்கமும், பச்சையம் அமைப்பும் இணைந்து ஏற்பாடு செய்திருந்த, தமிழகத்தின் பிரபல ஓவியரும் சிற்பியுமானவரும் இன்றைய சென்னை அரசு கவின் கலைக் கல்லூரியின் முதல்வராக இருக்கின்ற “சந்ரு’’ அவர்களின் “சித்திரமும் கைப்பழக்கம்’’ என்ற தலைப்பில், இருபத்துநான்கு (24) ஓவியங்கள் அடங்கிய கண்காட்சி, இரண்டு நாட்கள் நடைபெற்றது.

நான் மிகுந்த ஆர்வத்தோடு, சங்கரன்கோவிலிலிருந்து சென்று, இரண்டாம் நாளின் இறுதி நேரத்தில் பார்த்திடும் வாய்ப்புக் கிடைத்தது. அதன் நிறைவு விழாவில் சந்ரு அவர்கள் பேசினார்கள் அதன்பின் பார்வையாளர்களுக்கும், அவருக்கும் கலந்துரையாடல் நடைபெற்றது. அதில் கலையின் இன்றைய போக்கு பற்றியும், அவற்றின் இடம் எதுவாக இருக்கிறது எனத் தெளிவாகவும், விளக்கமாகவும் கூறினார்.

நவீனம் என்ன என்று கேட்டதற்கு, பளிச்சென பதில் வந்தது அவரிடமிருந்து.

இருத்தலில் மாற்று புதுமை என்று சூழ-லுக்கும் ஏற்ப அர்த்தம் கொள்ளப்படும் ஒரு வார்த்தை நவீனம்.
தற்போதைய காலச்சூழலை, விஞ்ஞான யுகம், கலியுகம் என்று கூறுகிறோம். கவின்கலைத் துறையோடு நவீனம் என்ற சொல்லைப் பொருத்துகிறபோது மனித உரிமை, தனி மனித சுதந்திரம் என்று பொருள் கொள்ளப்படுகிறது. அதேவேளை நவீன கலை என்பது ஐரோப்பியக் கண்டுபிடிப்பாகக் கருதப்படுகிறது. இனம், மொழி, நாடு, மதம் என்பவற்றைத் தவிர்த்து கவின்கலை என்பது படைப்பு நிலையில் படைப்பாளி பெற்ற சுக அனுபவமும், அறிவு விசாலமும் பிறரோடு பகிர்ந்துகொள்ளும் அடையாளமாக அமைகிறது என்று பொருள் கொள்ளும்போது இது காலம் தொட்டு மனித இனம் முழுமைக்கும் பொதுவானதாக இருக்க, ‘நவீன கலை’ என்ற சொல்லின் அடிநாதம் ஐரோப்பியர்களுக்கு மட்டுமே சொந்தமானது என்றும் அதை இந்தியா போன்ற நாடுகள் இரவில் வாங்கிக்கொண்டது என்று கருத நேர்வதும் மிக வேடிக்கையான சூழல் என்றார்.

மேலும் இன்றைய காலகட்டத்தில் மிகவும் பிரபலமானவர்களை மட்டும் கொண்டாடும் ஊடக மனோபாவத்தையும் சுட்டிக்காட்டினர்.

கடந்த ஆண்டில் எம்.எப். உசேன் கேன்வாஸ் பெயிண்டிங்கை நூறு கோடிக்கு ஏலத்தில் எடுத்திருக்கும் ஏஜெண்ட் ஒருவரிடம் ஆங்கிலப் பத்திரிகையாளர், இவ்வளவு அதிகமான தொகைக்கு ஏலம் எடுத்திருக்கிறார்களே எனக் கேட்டதற்கு அவர் கூறிய பதில், இன்னும் சில வருஷங்கள் கழித்து இதில் உள்ள ஒவ்வொரு சதுர அடியும் பல லட்சங்கள் பெற்றுத்தரும் எனக் கூறியிருக்கிறார். அப்படியானால் அவரின் கலையைப் பற்றிய மதிப்பீடு என்னவாக இருக்கிறது. இங்கே அதிக விலைக்கு விற்கப்படும் பெயிண்டிங்குகளை செய்பவர்களைத்தான் பெரிய படைப்பாளியென முன்வைக்கப்படுகிறார்கள். ஊடகங்களும் அவர்கள் பின்புதான் செல்கிறது என்று கவலையோடு குறிப்பிட்டார்.

இன்றைய தமிழ்ச் சூழலில் இடம் எதுவாக இருக்கிறதென்றால் அவன் லௌகீக வாழ்வில் அவனிடம் இருக்கும் நிலம், பங்களா போன்ற அல்லது அரண்மனை கட்டி அதில் சகல நவீன வசதிகளோடு வசித்து அதில் அமைதியான சூழலில் பெரிய பெரிய கித்தான்களில் வண்ணங்களை இட்டு நிரப்பி, இது அரூபவகையில் செய்தது என பம்மாத்து செய்து சர்வதேசச் சந்தைக்குப் போகும் சூட்சுமத்தை லாவகமாகக் காய் நகர்த்தி வருகிறார்கள்.

இன்றைய காலத்தில் விளம்பரப் பணியில் ஈடுபடும் கலைஞனின் நிலை கனவுக்கும், யதார்த்தத்திற்குமான இடைவெளியில் இயங்கி வருகிறது. இப்பொழுது நவீனமாக வந்திருக்கும் எண் இலக்க அச்சு முறை (டிஜிட்டல் பிரிண்ட்) தமிழகத்தில் லட்சக்கணக்கான விளம்பர ஓவியர்களின் வாழ்க்கையைப் புரட்டிப் போட்டுவிட்டது.
இதைப்பற்றி ஊடகங்கள் இதுவரை கவனித்ததாக தெரியவில்லை.

ஆனால் அரசும் இதைப்பற்றி சிறிதும் பொருட்படுத்தவில்லை. நான் மிகுந்த கவலையுடன் நவீன தொழில்நுட்பத்தின் வளர்ச்சி அனேக விளம்பரக் கலைஞர்களின் வாழ்வை ஸ்தம்பிக்கத் செய்துவிட்டதே என ஓவியர் சந்ரு அவர்களிடம் கேட்டபோது, என்ன பெரிய பாதிப்பு வந்துவிடப் போகிறது. இவ்வளவு நாளும் தூரிகையிலும், வண்ணங்களிலும் செய்ததை மவுஸை வைத்து செய்யப் போகிறோம். வேறு ஒன்றும் ஆகிவிடாது, பயம் கொள்ளத் தேவையில்லை என்றார். நாம் வேலை செய்யும் மெட்டீரியல்தான் மாறியிருக்கிறது. வேறொன்றும் இல்லை. எந்தத் தொழில்நுட்பம் வந்தாலும், படைப்பாளியின் படைப்பாக்க வெளிப்பாட்டைத் தடுக்கமுடியாது என்று ஆணித்தரமாக வெளிப்படுத்தியபோது பெரிதும் நம்பிக்கை வந்தது.

நான் ஓவியர் சந்ருவிடம் சால்வடர் டாலியின் கம்பீரத்தையும், பிரைடோ காலோவின் நம்பிக்கையையும் பார்க்கிறேன். எந்த பாசாங்குமில்லாமல் எளிமையாகப் புரிய வைப்பதில் அவருக்கு நிகர் அவரே.
இன்றைய கலை ஆசிரியர்கள் கத்தரிக்காய் வரைவதற்குகூட ஒரு மாத காலம் வரை மாணவர்களுக்கு பயிற்சியளிக்கிறார்கள். இந்தச் சூழ்நிலை தொடர்ந்தால் இளைய தலைமுறை எப்படி கலைத்துறையில் செழிப்பான வளர்ச்சி அடைய முடியும். கற்றுக்கொடுப்பவர்கள் பணிக்கு வந்தவுடன் கற்பதை நிறுத்திவிடுகிறார்கள். இதைச் சொல்வதில் எந்த அச்சமும் இல்லை. எங்கள் ஊரில் ட்ராயிங் மாஸ்டராக இருந்த ஒருவர் அருவாமனை வரைவதற்கு ஒரு வார காலம் சொல்லிக் கொடுத்தார் என பதினைந்து வருடத்திற்கு முன் அவரிடம் பயின்ற நண்பர்கள் சொல்வதுண்டு.

அப்படிப்பட்டவர்களுக்கு மத்தியில் உயர்நிலைப் பள்ளியோ, மேல்நிலைப் பள்ளி இறுதிவரை படிக்காதவர்களை விளம்பரத் துறையில் இயங்கிவரும் ஓவியர்களை அழைத்து காட்சித் தொடர்பியல் துறையின் உதவியுடன் கணிப்பொறிப் பயிற்சி கொடுத்து ஒரு முன்மாதிரியாகச் செயல்பட்டு வருகிறார் சந்ரு அவர்கள். சென்னை அருகே சோழமண்டலம் ஓவியக் கிராமத்தை கே.சி. பணிக்கர் அவர்கள் நிறுவினார்.

அதில் கலைஞர்கள் தங்கள் படைப்பாற்றலை வளர்த்துக்கொள்ளவும், காட்சிப்படுத்தவும் ஒரு இடம் வேண்டுமென்றுதான் அதை உருவாக்கினார். ஆனால் இன்று அங்கே வளரும் இளம் தலைமுறைக் கலைஞர்கள் யாரும் அங்கு போய் இணைய முடிவதில்லை. எதற்காக ஆரம்பிக்கப்பட்டதோ அதற்கு எதிராக இருக்கிறது.
தன்னலம் ஒன்றுதான் குறிக்கோள் என கலைஞர்கள் தயாராகும்போது வளரும் தலைமுறைகள் எப்படி கலையில் தழைத்தோங்க முடியும்?

கடந்த மாதத்தில் ஸ்ரீரங்கத்தில் பகுத்தறிவைப் பரப்பி வந்த தந்தை பெரியாரின் சிலையைத் தாக்கினார்கள். தங்களை மிதவாதிகள் என்றும் அகிம்சைவாதிகள் எனவும் பறைசாற்றிவரும் இவர்கள் இப்படி தீவிரவாதிகள் போல் செயல்பட்டதைக் கண்டித்து ஒரு தட்டி போர்டு வைத்தோம். அதை ஒரு மணி நேரத்தில் ஆன்மீகக் காவலர்களாகச் செயல்பட்டு வரும் காவல்துறை, போர்டை காவல்நிலையத்திற்கு எடுத்துச் சென்றுவிட்டார்கள்.
போர்டை எழுதிய என் மேல் கேஸ் போடுவோம் எனவும், தேசியப் பாதுகாப்புச் சட்டத்தின்படி உள்ளே வைத்துவிடுவோம் என்றும் மிரட்டுகிறார்கள்.

பெரியாரின் கொள்கைகளை முன்வைத்து ஆட்சி அதிகாரத்தைப் பிடித்தவர்கள், இன்று மஞ்சள் சால்வைக்குள் போய்விட்டதால் போர்டு எழுதியவனைக் காவல் துறை அலைக்கழித்துக் கொண்டு இருக்கிறது. கருத்தை முன்வைக்கும் கலைஞனின் நிலை இதுதான். தொடரட்டும் தந்தை பெரியார் வழியில் வந்தவர்களின் கொள்கைப்பற்று. இது கேலி அல்ல வேதனை.

Pin It