எனது தாயார் இறந்தபோது நான் ஒன்பது நாள் குழந்தை. அன்றிலிருந்து தந்தையும், தாயுமாய் இருந்து வளர்த்து படிக்க வைத்தது தாத்தா பெரிய ஈஸ்வரன் - பாட்டி பார்வதியம்மாள். தனது நாயனக்கலை மூலம் இரண்டு ஆசிரியர்களைப் படிக்க வைத்தார். அதன் மூலம் இரண்டு மருமகள்களை ஆசிரியராக வரவழைத்தார். எண்பத்திமூன்று வயதைத் தாண்டிய அவர் தனது நையாண்டி மேளக் கச்சேரிகளில் நடந்த சுவையான சம்பவங்களை நகைச்சுவையோடு கூறுவார். சில நேரங்களில் பல கதைகள் கூறுவார். அவை சிரிக்கக்கூடிய அளவில் சுவையாக இருக்கும். இதோ அவர் கூறிய கோடாங்கி கதை.

ஒரு ஊர்ல பெரிய குடும்பம் நாலு அண்ணன்மார். ஒண்ணே ஒண்ணு கண்ணே கண்ணு என்று ஒரு பெண். செல்லமா வளர்ந்து வருகிறார். தாங்குவார் கோடி, தடுப்பார் கோடி என்று வளர்கிறாள். இந்த குடும்பம் புதியதாக எஸ்டேட் பகுதியில் இருந்து வந்தவர்கள். அதனால் ஊர் நெளிவு, சுழிவுகள், நல்லது கெட்டதுகளில் சில முறைமைகள் தெரியாது. வெள்ளந்தியான குடும்பம், எஸ்டேட்டில் இருந்து வந்த புதிதில் ஆடம்பரமான உடை, உணவு என்று சிறப்பாக இருந்தது. இதற்கிடையில் வடிவழகி பெரியவளாகி குச்சிலுக்குள் அமர்ந்துவிட்டாள்.

உறவுமுறைக்காரர்கள் உளுந்தங்கழி, பணியாரம், வடை, இட்லி, பலகாரம் என்று அவுக அவுக சக்திக்கு ஏற்ப கொண்டுவந்தார்கள். இருப்புச் சாப்பாடு இல்லையா ஆளு நல்ல அழகு சிலையா மினுமினுத்தாள். அப்புறம் சடங்கு முடிந்து வெளிப்பழக்கத்துக்கு வந்து மனத்தேறி கண்மாய்க்கு வேலைக்கு அனுப்பி வைத்தார்கள்.
கிராமத்தில் வசதி என்று வந்தாலும் சொந்த வேலை முடிந்தால் அயல் வேலைக்கும் செல்வது உண்டு. போன மகளுக்கு என்ன ஆச்சோ தெரியலை மூச்சுப் பேச்சு இல்லாம விழுந்துகிடந்தா. கூட இருந்த பொம்பளைக அடித்துக்கொண்டு அழுதார்கள்.

தண்ணீர் கொண்டு தெளித்தவுடன் கண்விழித்தாள் வடிவழகி. மெதுவா மாட்டு வண்டியிலேற்றி வீடு வந்து சேர்ந்தார்கள். அன்னையிலிருந்து அவள் ஒரு மாதிரியாக இருந்தாள். சரியா சாப்பிடுவது இல்லை. உறக்கம் இல்லை. எதையோ பறிகொடுத்த மாதிரி வெறித்துப் பார்த்துக்கொண்டிருந்தாள் வடிவழகி.

‘‘சே நம்ம பிள்ளை செல்லமா வளர்ந்தது. இப்படி போயிட்டாளே” என்று பெற்றோரும், அண்ணன்மாரும் துடித்தார்கள். கோயிலுக்குப் போனார்கள், திருநீறு போட்டார்கள். ஒன்றும் கேட்கவில்லை. அந்த நேரம் பார்த்து அங்கமுத்து பாட்டி வந்தார்கள். ‘‘ஏ பொசலுகட்ட கழுதைகளா போய் நம்ம கோடாங்கி கோவிந்தசாமியைக் கூட்டிட்டு வந்து குறிபாருங்க. முனி கினி பிடிச்சிருக்கும்” என்று சொன்னார்.

ஆமா அதையும் பார்த்துவிடுவோம் என்று கோடாங்கியைக் கூட்டி வந்தார்கள். கோடாங்கி ஆளு வாட்டசாட்டமான ஆளு, திருக்கு மீசை, பகட்டுப் பார்வை. ஆளுக்கேத்த கதை அதுக்கு தொடுப்பா கணக்கப்பிள்ளை. நாள் குறிக்கப்பட்டது. முட்டைக்கோழி, முருங்கைக்காய், ஐந்து முட்டை, பிராந்தி, கள்ளு, சுருட்டு என்று பெரிய படையல் மாடனுக்கு. அவனை வழிபட்டால்தான் கோடாங்கி பேசும். எல்லாம் தயாராகி சன்னை ஆரம்பித்தது.

பாடல் என்ன தாளமென்ன, அலைப்பு என்ன அடேயப்பா கோடாங்கி வர்ணனைக்கே கொஞ்ச நேரம் ஆடிட்டுப் போவோம் என்று குமரிப் பிள்ளைகள் ஏங்கிப்போவார்கள். வடிவழகி அம்மா கோடாங்கி சத்ததுக்கு தலை அசைத்தாள். பிறகு ஆட்டம் சூடு பிடித்தது. வாய் திறந்து பாட நாலு நாள் ஆகும். கோடாங்கி பாட்டுப்பாடி பேசி அப்படி இப்படி என்று வடிவழகியிடம் மயங்கிப் பேசினான்.

கோடாங்கி பார்க்க வந்தவுக குட்டி குருமானம் என்று பதினொரு மணி வரை வாயில ஈ போறது தெரியாம பார்த்துக்கொண்டிருப்பார்கள். அப்புறம் செவனேன்னு தூங்கிடுவாக. படிப்படியாக விளையாட்டை ஆரம்பித்துவிட்டார் கோடாங்கி. அவன் வலையில் பேயாடி வடிவழகி சொக்கிப் போனாள். காதல் சிக்சாட்டம் போட்டார்கள்.

பேய் போய் இவர்கள் காதலர்களாக ஆடிக்கொண்டிருந்தார்கள். ஆனால் ஊரார் முன் பேயாட்டம் மட்டும் தெளிவாக நடந்தது. பேய் எத்தனை நாள் ஆடினாலும் ஊரை விட்டுப் போகும் நாள் சொல்ல வேண்டும். அதன்படி போய் சேரும் நாளைக் கூறியது. அதுமட்டுமல்ல. சேலை, துணிமணி, பவுடர், பொட்டு, பாத்திரம் என்று இல்லாத புது சாமான்களைக் கேட்டது.

நம் தங்கையை விட்டு இந்த முனி போனாப் போதும் என்று அண்ணன்கள் எல்லாம் வாங்கிக் குறிப்பிட்ட நாளில் எல்லாம் எடுத்துக்கொண்டு வேட்டி வரிந்து கட்டி பூச்சூடி ஆண் வேடம் போட்டு தலையில் கல் தூக்கி முனி புறப்பட்டது. இரவு பன்னிரண்டு மணிக்கு. கூடவே நான்கு அண்ணன்மாரும் கூடவே சென்றார்கள்.

எல்லை கழிந்து மயானக் கரை அருகில் நான்கு அண்ணன்மார்களையும் ஏழு கோடு கிழித்து அதற்குள் நிற்க வைத்து நெற்றி நிறைய திருநீறு பூசி நாலு நாட்டு வாழைப்பழத்தை தோலை உரித்து நாலு பேர் வாயிலேயும் வைத்தார் கோடாங்கி. நானும் உன் தங்கையும் முனியை விரட்டிவிட்டு திரும்பி வரும்வரை வாயில் இருக்கும் வாழைப்பழத்தையும் எடுக்கக் கூடாது. கோட்டையும் தாண்டக் கூடாது என்று சொல்லி வா மகளே வா என்று முன்னே விட்டு கூட்டிக்கொண்டு சென்றார். போனவர்கள் வரவேயில்லை. நாலு பேரும் மெயின் ரோடு பாலத்துக்கு அடியில் நிற்கிறார்கள்.

பாதையில் செல்பவர்கள் பார்த்தால் நன்றாகத் தெரியும். காலை ஐந்து மணியாச்சு. அப்பவும் இந்த பைத்தியார அண்ணன்களுக்குப் புரியவில்லை. தங்கச்சி திரும்பி வரட்டும் என்று பயபக்தியா வாயில் இருந்த பழத்தை எடுக்காமல் நின்றுகொண்டிருந்தார்கள். ஊரிலிருந்து ஆட்கள் காடு கரைக்குப் புறப்பட்டு வந்துகொண்டிருந்தார்கள். இவர்கள் நின்ன கோலத்தைப் பார்த்ததும் கெக்கெக்க என்று சிரித்தார்கள். என்னப்பா விசயம்? என்று ஒரு விவசாயி விபரம் கேட்கவும் நாலு பேரும் ஒன்றுபோல் கையசைத்தார்கள் ‘‘எதுவும் பேசாதீர்கள்” என்று. அவர் கூட வந்தவர்களிடம் ஏம்பா இவங்க வாயில் உள்ள வாழைப்பழத்தைப் பிடுங்குங்கப்பா என்றதும் வெடுக்கென்று பழத்தைப் பிடுங்கிவிட்டனர். அதன்பின் விபரம் கேட்டார்கள். நடந்த விபரத்தை வரிவிடாமல் கூறினார்கள் அந்த பைத்தியக்கார அண்ணன்கள்.

‘‘போடா பொசலுகட்ட பயலுகளா. கோடாங்கி உன் தங்கச்சியும் கவுத்துட்டு கூட்டிட்டு போய்ட்டான், உங்க வாயிலையும் பழத்தை வச்சுட்டுப் போய்ட்டான். போங்க போங்க வீட்டுல போய் மற்ற வேலையைப் பாருங்க” என்றதும், நம்மை ஏமாத்திட்டாளே உடன்பிறப்பு என்று அழுது புரண்டார்கள். வீடு வந்து சேருமுன்னே எப்படி தெரிஞ்சுச்சோ மக்க விழுந்து விழுந்து கேலி பேசி சிரிச்சாக. சொல்லணுமா ஊர் பொரளி பேசுவதற்கு. அன்னைக்கு போன கோடாங்கிதான். வடிவழகியும் அவனும் சந்தோசமாக வாழ்ந்தார்கள். ஊரு பக்கம்தான் தலை காட்ட முடியவில்லை. என்று வாழைப்பழக் கதையை சிரிக்க சிரிக்க சொல்லி முடித்தார் தாத்தா.

Pin It